பிள்ளைகளின் இயல்பு

அந்த மனிதருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். இரண்டு பிள்ளைகளும் நன்றாகப் படித்து வேலைக்குப் போய் விட்டார்கள். அவருக்கும் வயசு ஆகிவிட்டதால் வேலையி லிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். ஒரு பிள்ளை எம்.ஏ. படித்து விட்டுத் திருநெல்வேலியில் பெரிய அதிகாரியாக இருந்தான். மற்றொருவன் கலெக்டராகக் கோயம்புத்தூரில் இருந்தான். அவருடைய மனைவி இறந்து போனாள். அப்போது அவர், ‘இரண்டு பையன்களும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் ஆறு ஆறு மாதம் இருந்து காலத்தை ஓட்டிவிடலாம். எதற்காகத் தனியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?” என்று நினைத்தார். உடனே தம்முடைய சொத்துக்களை எல்லாம் அவர்கள் இரண்டு பேருக்கும் சமமாக எழுதி வைத்துவிட்டு மூத்த பிள்ளையின் வீட்டுக்குத் திருநெல்வேலிக்குப் போய்விட்டார்.

அங்கே கொஞ்ச நாள் சிறப்பாக உபசாரம் நடந்தது. அவருடைய மூத்த மருமகள் மிகவும் பிரியமாகத்தான் அவரிடம் இருந்தாள். ஒரு நாளைக்குத் தன் கணவனிடம் அவள் பேசிக்கொண்டிருந்தது மாமனார் காதில் விழுந்தது. “அப்பா இங்கேயே இருக்கலாம். அவர் இங்கே இருப்பது நமக்கு எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் ஒருவர் மாத்திரம் அவருடைய பிள்ளை அல்லவே! உங்கள் தம்பி தம்மிடம் வந்து இருக்கவில்லையே என்று வருத்தப்படமாட்டாரா? அவருக்கும் தம்மிடம் தம் அப்பாவை வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இராதா? இவருக்கு அங்கே போக மனம் இல்லாவிட்டாலும் பேருக்காவது பத்து நாள் போய் இருந்து வரச் சொல் லுங்கள். இல்லாவிட்டால் நன்றாய் இராது” என்று மிகவும் நயமாகப் பேசினாள்.

அதைக் கேட்டவுடனே, ‘ஒகோ! நான் இங்கே இருப்பது அதற்குள் கைத்துவிட்டதோ? சரி, கோயம்புத்தூருக்கு இன்றைக்கே போய்விடுகிறேன்’ என்று மனத்திற்குள் எண்ணிக்கொண்டு இரண்டாவது பிள்ளையிடம் சென்றார்.

இரண்டாவது பிள்ளையிடம் போய் ஒரு மாதம் இருந்திருப்பார்’. அவனுடைய மனைவி மூத்தவளையும் விடக் கெட்டிக்காரி. அவள் தன் கணவனிடம், “என்ன, உங்கள் அப்பா இங்கேயே தங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டு விட்டாரா? திருநெல்வேலியில் நான்கு மாதம் இருப்பதற்குள் போதும் போதும் என்று அவர்களே விரட்டி விட்டார்கள் போலிருக்கிறது. அங்கே அவமானப்பட்டுத் தான் இங்கே வந்து தங்கிவிட்டாரோ? எதற்காக இப்படி நகரங்களில் இருந்து அல்லற்படவேண்டும்? சிவனே என்று காவேரிக்கரையில் போய்ச் சுகமாக வாழலாமே. வேண்டுமானால் மாதம் இருபது ரூபாய் அனுப்பி விடுகிறது;’ என்றாள்,

இதைக் கேட்டவுடன் கிழவருக்கு அழுகை அழுகையாக வந்தது. ‘சொந்தப் பிள்ளைகள்; இவர்களைப் படிக்க வைத்தவன் நான். இவர்களுக்கே என்னுடைய சொத்துக்களை எல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். என்னை வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டிய இவர்கள் என்னைக் கிராமத் திற்குத் தனியாக அனுப்பி விட்டுப் பணமாக உதவி செய்யப் போகிறார்களாம்! இவர்கள் பணமும் வேண்டாம்; இவர்கள் என்னைக் காப்பாற்றவும் வேண்டாம். இவர்கள் கண்ணி லேயே படாமல் எங்காவறு போய்ப் பிழைத்துக் கொள் கிறேன்’ என்று காசியை நோக்கி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டார்.

காசியில் நிகழ்ந்தது

வடக்கே போனவருக்குப் பல விதமான துன்பங்கள் உண்டாயின. உடம்புக்கு நோய் வேறு வந்துவிட்டது. கங்கைக்கரையில் ஒரு நாள் மிகவும் சலிப்பு அடைந்த மனத்தோடு, “ஆண்டவனே, என்னை இன்னும் ஏன் உயிரோடு வைத்துத் துன்பத்துக்கு உள்ளாக்குகிறாய்?” என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு உட்கார்ந்தார். சட்டென்று அந்தப் பக்கம் போன ஒருவன் அவரைக் கூர்ந்து பார்த்தான். “யார் சுவாமி நீங்கள்? எந்த ஊர்?” என்று கேட்டான். வடக்கே இந்தி மொழியே வழங்கக் கூடிய இடத்தில் அவர் தமிழில் பேசியதைக் கேட்டு, அவனும் தமிழன் ஆதலால் அவ்வளவு அன்போடு கேட் டான்.

“நானா? தமிழ் நாட்டைச் சேர்ந்தவன்” என்றார் அவர்.

“நானும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன்தான். தமிழ் நாட்டில் எந்த ஊர்”’ என்றான் அவன் மிக்க ஆவலோடு.

அவருக்குத் தம் ஊரைச் சொல்லிக்கொள்ள முதலில் மனம் இல்லை; ஊர், பிள்ளைக்குட்டி எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று ஓடிவந்தவர் அல்லவா? இருந்தாலும் அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே அவருக்குப் பொய் சொல்ல மனம் வரவில்லை. உண்மையைச் சொல்லாமல் இருக்க நாக்கு இடம் கொடுக்கவில்லை. “கள்ளக் குறிச்சி அப்பா,கள்ளக்குறிச்சி” என்றார் சற்று உற்சாகம் இழந்தவராகவே.

“கள்ளக்குறிச்சியா? நானும் கள்ளக்குறிச்சிதான். கள்ளக்குறிச்சியில் யார்? உங்கள் பெயர் என்ன?” என்று அவன் முன்னையும்விட மிக்க ஆவலோடு கேட்டான்.

“கள்ளக்குறிச்சியில் சுப்பிரமணிய தீட்சிதர் என்பார்கள் என்னை” என்று அவர் சொன்னாரோ இல்லையோ, அவன் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக அவருடைய காலில் விழுந்தான். “சுவாமி, என்னைத் தெரிகிறதா? உங்களால் தான் நான் இன்றைக்கு ஓர் ஆளாக இங்கே உத்தியோகம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களே என்னுடைய தந்தை. என்னுடைய வீட்டுக்கு வாருங்கள்” என்று அவருடைய கால்களை இறுகப் பிடித்துக்கொண்டான்.

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘இவனை நாம் ஆளாக்கி விட்டோமா? நம்மால் ஆளாக்கி விடப்பட்ட பிள்ளைகள் எவ்லாம் நம்மையே விரட்டிவிட்டுச் சுகமாக இருக்கிறார்கள். இவனை நாம் முன்பின்கூடப் பார்த்தது இல்லையே! இவன் நமக்கு உதவி செய்ய வருகிறானே!’ என்று வியப்பில் மூழ்கிவிட்டார்,

“என்னை உங்களுக்குத் தெரியவில்லையா சுவாமி! வீட்டுக்கு வீடு கம்பக்காலைப் பிடித்துக்கொண்டு பிச்சை எடுத்து வந்தவன் நான். ஒரு நாளைக்கு ஒரு பெரிய சமாராதனையில் என்னை உள்ளே விடமாட்டோம் என்று எல்லோரும் அடித்து விரட்டினார்கள். நீங்கள் ஒரு பெரிய லாடுவை எடுத்து வந்து எனக்குக் கொடுத்தீர்களே! அந்த லாடு எனக்கு எவ்வளவு இனிமையாக இருந்தது. தெரியுமா அதைச் சாப்பிட்டவுடனேயே எனக்கு, ‘இனி இது மாதிரி வாங்கிச் சாப்பிடக் கூடாது. உழைத்துச் சாப்பிடவேண்டும்’ என்கிற எண்ணம் உதித்தது. அப்புறம் ஆண்டவன் அருளால் சிலருடைய உதவியின் மேல் படித்து, இங்கே வேலை செய்து கொண்டிருக்கிறேன். அன்றைக்கு நீங்கள் லாடு கொடுத்தீர்களே, எங்கள் தகப்பனார் மாதிரி. நீங்கள் தாம் என் தந்தை” என்று அவன் விழிகளில் கண்ணீர் வாரப் பேசினான்.

அவர் அப்படியே சிலையாகச் சமைந்துபோய் உட்கார்ந்திருந்தார். அவர் மனம் என்ன என்னவோ நினைத்தது. ‘ஆண்டவனே, எனக்கு நீ இரண்டு பிள்ளைகளைக் கொடுத்தாய்; நல்ல வருமானத்தையும் அளித்தாய். என்னுடைய பொருளை எல்லாம் செலவழித்து அந்தப் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். உன் அருளால் அவர்களுக்கு நல்ல வேலையும் கிடைத்தது. கல்யாணமும் ஆயிற்று. இனி எனக்கு என்று எதற்காகப் பணம் என்று என்னிடம் இருந்த எல்லாவற்றை யும் அவர்கள் இரண்டு பேர்களுக்குமே கொடுத்தேன். வேறு யாருக்கும் இம்மி அளவும் கொடுக்கவில்லை. ஆனால் இவனிடம் நான்கு மாதம், அவனிடம் ஒரு மாதம் இருப்பதற்குள் பெற்ற தகப்பனாரையே வைத்துக் காப்பாற்ற அவர்கள் மேலும் கீழும் பார்த்தார்கள். அவர்கள் என்னிடம் அன்புடன் நடக்கவில்லை. நான் எப்போதோ, ஏதோ ஒரு நாளைக்கு இந்தப் பிள்ளைக்கு வேறு ஓர் இடத்தில் எனக்குக் கிடைத்த லாடு ஒன்றைக் கொடுத்தேன்; ஒரு வேளைச் சாப்பாடுகூட இல்லை கிடைத்ததிலே ஒரு பகுதியைக் கொடுத்தேன். அதுவா இத்தனை பெரிய அன்பாக இவன் உள்ளத்தில் விளைந்திருக்கிறது? இன்றைக்கு இவ்விடத்திலே என்னைக் காப்பாற்ற வந்து உதவுகிறது?’ என்று நினைந்து உள்ளம் உருகினார்.

இட்டது வரும்

பொங்கார வேலையில் வேலை விட்டோன்
அருள்போல் உதவ
எங்காயினும் வரும், ஏற்பவர்க்கு இட்டது.

ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்; பசிக்கு ஏதாவது கிடைக்காதா என்று ஏங்குகிறவர்களை வலிய அழைத்து. “இந்தா அப்பா; இதைச் சாப்பிடு” என்று செய்கிற தர்மம் எங்காயினும் வரும். எந்த இடத்தில் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. நானூறு ரூபாயைப் பாங்கில் போட்டால் அது முதலும் வட்டியுமாக நமக்குப் பின்னே சேர்ந்து வருவதுபோல, நாம் என்றைக்கோ செய்த தர்மம் எங்காயினும் வட்டியும் முதலுமாக வந்து சேரும்.

எங்காயினும்

எங்காயினும் என்றால் இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல. மறு பிறவியிலும் வரும். சிவஞானிக்கு ஒரு கவளம் அன்னம் போட்டால் எடுக்கிற பிறவியில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லாமல் வாழலாம். ‘நீ அறம் செய்தால் உனக்கு அது பின்பு வந்து விளையும். பொருள் கொடுத்தால் அது பிறனால் உனக்குக் கொடுக்கப்படுகிற பொருளாக வந்து சாரும்’ என்று ஒளவையார் போன்றவர்கள் சொன்னார்கள். அருணகிரிநாத சுவாமிகள் அதையே சொன்னாலும் தமக்கு ஏற்ற முறையில் சொல்கிறார். அப்படிச் சொல்வதில் அவர் முத்திரை இருக்கிறது. அதற்கு ஓர் உவமை சொல்லுகிறார்.

”எங்கள் பெருமானுடைய அருள்போல், ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்” என்கிறார்; ”வேலையில் வேலை விட்டோன் அருள் எங்காயினும். வரும் அப்படியே யாசிப்பவர்களுக்கு அறம் செய்தால் அந்த அறப்பயனும் வரும்” என்பது அவர் கருத்து.

திருவருள் எங்காயினும் வரும்

இறைவன் திருவருள் எப்படி வரும் என்று சொல்ல முடியுமா? அவரவர்களுடைய வாழ்க்கையில் நன்றாகக் காணலாம். இறைவன் திகுவருளினாலே நல்லது பொல்லாதது ஆகிய இரண்டுமே வந்து கொண்டிருந்தாலும் தீமை வரும் போதுதான். கடவுள் என்னை இப்படிச் சோதிக்கிறாரே!” என்று பலர் நினைக்கிறார்கள். இறைவனுடைய அருளை உணர்வதற்கு நமக்கு மனம் இருந்தால் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் அவனுடைய திருவருளை அநுபவிக்கலாம்; மகாத்மா காந்தி அநுபவிக்கவில்லையா?

எதிர்பாராத நிகழ்ச்சி

என்னுடைய பக்கத்து வீட்டில் ஒரு பெரிய உத்தியோகஸ்தர் இருந்தார். ஒரு நாள் காரியாலய விஷயமாக டெல்லிக்குப் போக விமானச்சீட்டு முதற்கொண்டு வாங்கி வைத்துவிட்டார். அன்றைக்கு என்று அவருடைய குழந்தைக்குச் சற்று உடம்பு சரியில்லை. மனைவி அவரைப் போகக்கூடாது என்று தடுத்துவிட்டாள். தம்முடைய மனைவியிடம் அவருக்குக் கடுங்கோபம். மறுநாள் பத்திரிகையைப் பார்த்தார்; அவர் கிளம்பிச் செல்ல இருந்த விமானம் நடுவழியில் எரிந்துபோய் விழுந்து விட்டதாகச் செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்தவுடன் தான் ‘இறைவனுடைய திருவருள் அல்லவா நம்மை ஊருக்குப் போகாது தடுத்திருக் கிறது?’ என்று நினைந்து உருகினார்; ‘மனைவியிடத்தில் கோபித்துக் கொண்டோமே!’ என்று வெட்கப்பட்டார்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எதிர்பாராத நன்மைகள் இப்படி எத்தனையோ மேமுடைய சக்திக்கும் அப்பாற் பட்டனவாக நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் இறைவனுடைய திருவருள் என்று நினைக்க நமக்கு மனம் இல்லை.

எதிர்பாராமல் வந்து நிற்கிற லாபத்தைக் காண் கிறோம். அதை நம் அதிருஷ்டம் என்று சொல்கிறோம். ஒருவன் எம்.ஏ. பரீட்சை எழுதுகிறான். கல்யாணம் நடக் கிறது. எம். ஏ. யில் தேர்ச்சி பெற்ற செய்தி வருகிறது. உடனே வேலை கிடைக்கிறது. அவன் அது தன் மனைவியினு டைய அதிருஷ்டம் என்று நினைக்கிறான்; பானை பிடித்தவள் பாக்கியம் என்கிறான். இறைவன் திருவருள் என்கிற நினைப்பு அவனுக்கு வருகிறதா? இல்லை.

எல்லாம் திருவருட் செயல்

எதிர்பாராத வகையில் யாராவது எங்காயினும் உதவி செய்தால் அதை அவன் செய்தான் என்று நினையாமல், அவனைக் கருவியாகக் கொண்டு இறைவன் திருவருள் துணை செய்தது என்று நினைக்கவேண்டும். துன்பம் வந்தால் யாரோ நமக்கு வேண்டுமென்றே செய்ததாக நினைக்கிறோம். அதனால் அவனிடம் கோபப்படுகிறோம், எதிர்பார்த்தது விளைந்தால் நம்மால் விளைந்தது எனச் சொல்லிக் கொள்ளலாம். எதிர்பாராமல் எத்தனை காரியங்கள் நடக்கின்றன! எதிர்பாராமல் நல்லது வந்தாலும் ஆண்டவன் திருவருள் என்று நினைக்க வேண்டும்; தீயது வந்தாலும். அவ்வாறே நினைக்கவேண்டும். உடம்புக்கு நோய் வந்துவிட்டது. நோயைக் குணப்படுத்துபவர் டாக்டர் என்கிற நம்பிக்கை நமக்கு வந்து விட்டதால் அவர் இனிப்பு மருந்து கொடுத் தாலும் குடிக்கிறோம்; கசப்பு மருந்து கொடுத்தாலும் குடிக்கிறோம். டாக்டரிடம் யாராவது, ..

“இனிப்பு மருந்தே கொடுங்கள்; கசப்பு மருந்து வேண்டாம்” என்று சொல்ல முடியுமா? இன்ன நோய்க்கு இன்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தானே தெரியும்?

உயிருக்கு வந்துள்ள நோய் பிறவி. நம்முடைய புண்ணிய பாவ வினைகளைக் கழுவிவிட வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன் இந்தப் பிறவியைக் கொடுத்திருக்கிறான். அவன் அருளால் நம்முடைய ஊழ்வினைக்கு ஏற்ப இன்ப துன்பங்கள் விளைகின்றன. துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் ஆண்டவனுடைய திருவருள் என்று நினைந்து வாழ்பவர் களுக்குத் துன்பத்தினாலே வருத்தம் இராது. ஆண்டவனுடைய சோதனைகளில் தேர்ச்சி பெற்றால்தான் அவனுடைய அருள் பூரணமாகக் கிடைக்கும் என்று அவர்கள் நினைப்பார்கள். இன்ப துன்பம் இரண்டும் அவர்களுக்குச் சமமாகவே இருக்கும்.

ஒரு சின்னக் குழந்தையிடம், “ஒரு மணு இரும்பு கனமா? ஒரு மணு பஞ்சு கனமா?” என்று சிலர் வேடிக்கையாகக் கேள்வி கேட்பது வழக்கம். கொஞ்சம் மந்தமான குழந்தையாக இருந்தால் பஞ்சைவிட இரும்பு கனமாயிற்றே என்று எண்ணி, ‘இரும்புதான் கனம்” என்று சொல்லும். புத்திசாலிக் குழந்தையோ, “ஒரு மணு என்பதே குறிப்பிட்ட கனத்தைச் சொல்வது தானே? பஞ்சாய் இருந்தால் என்ன? இரும்பாய் இருந்தால் என்ன? இரண்டும் சமம்” என்று சொல்லும். அப்படி, ‘இன்பமாக இருந்தால் என்ன? துன்பமாக இருந்தால் என்ன? இரண்டும் ஆண்டவன் அருள் தான்’ என்று நினைப்பவர்களுக்கு இன்பமும் துன்பமும் சமமாகவே இருக்கும். இன்பத்தைக் கண்டு அவர்கள் மனம் புதிய மகிழ்ச்சியை அடையாது. துன்பத்தைக் கண்டும் அவர்கள் மனம் அவலப்படாது.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவன்
அன்றாங்கால்
அல்லற் மடுவ தெவன்”

என்பது திருக்குறள்.

‘நல்லது தான் வேண்டும், தீயது வேண்டாம்’ என்று சொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? இரண்டையும் ஒரே மாதிரியாகப் பார்க்கவேண்டும். ஆண்டவனுடைய அடியார்கள் அப்படித்தான் உணர்கிறார்கள்.

நாம் ஒரு மனிதனைத் தேடிக்கொண்டு போகிறோம். அவன் வெளியூருக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டே போகிறோம். ஒருகால் வந்திருக்க மாட்டானா என்கிற நினைப்பு. அப்போதுதான் அவனும் ‘ஊரிலிருந்து வந்திருப் பான். முதல் நாள் போயிருந்தால் அவனைப் பார்த்திருக்க முடியுமா? சில மணி நேரம் முன்பாகப் போயிருந்தாலும் அவனைப் பார்த்திருக்க முடியாது. ஆண்டவன் அருள் அல்லவா அப்படிக் கூட்டி வைத்தது?’ என்று நினைத்துக் கொள்வதே முறை.

நாம் நிச்சயமாக ஒன்றை நம்பிக்கொண்டிருக்கும் போது அது அப்படியே நடந்து விடுகிறது; அப்போது அதிருஷ்டம் என்று நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம், ‘ஆண்டவன் திருவருள் அவ்வாறு வந்து உதவுகிறது’ என்று நினைக்கும்படி இந்தப் பாட்டில் அருணகிரியார் குறிப்பிடுகிறார்

இறைவன் அருள் முன் அறிவிப்பு அனுப்பிவிட்டு வராது. இறைவனிடத்தில் பக்தி செய்ய வேண்டும் நம்மை எப்படிக் காப்பாற்ற வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். நாம் நினைக்கிறபடி எல்லாம் வேலை செய்யும் வேலைக் காரனா அவன்? குழந்தை கேட்கிறபடி எல்லாம் உணவுப் பண்டங்களைக் கொடுத்து விட்டால் குழந்தை உருப்படுமா? பலாப்பழம் வேண்டுமென்று குழந்தை கத்துகிறது. தாய் அதை அதன் கண்ணில் படாமலேயே ஒளித்துவிடுகிறாள். குழந்தை மாந்தம் வந்து துன்பப்பட்டு இறந்துவிடக்கூடாது என்கிற மேலான கருணையால் அப்படிச் செய்கிறாள். நம்முடைய ஆத்மாவுக்கு இன்பம் அளிப்பது எது, துன்பம் அளிப்பது எது என்று நமக்கு எப்படித் தெரியும்? எம்பெரு மான் அல்லவா,நாம் உய்வு பெறவேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு அருள் செய்து கொண்டிருக்கிறான்? ‘டாக்டர் கொடுக்கிற மருந்து கசப்பாக இருக்கிறதே’ என்றால் அது நம் நோயைப் பொறுத்தது. நம்முடைய பாவ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப ஆண்டவனுடைய அருள் துன்பமாகவும் வரலாம்; இன்பமாகவும் வரலாம். டாக்டரிடத்தில் நம்பிக்கை வைத்து கசப்பு மருந்தாய் இருந்தாலும், இனிப்பு மருந்தாய் இருந்தாலும் விருப்புவெறுப்பு இன்றிச் சாப்பிடுவதைப் போல, துன்பமாக இருந்தாலும்,இன்பமாக இருந்தாலும் ஆண்டவனிடத்தில் நம்பிக்கை வைத்து. இரண்டையும் அவன் திருவருளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

துன்பம் இன்பம் கலந்த வாழ்வில் ஆண்டவன் அருள் என்பது தனியாக வருவது இல்லை. அவையே அவனுடைய அருள்தான். இத்தகைய மனப்பாங்கு வந்துவிட்டவர்கள் இடுக்கண் வந்தால், அதைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

நமக்குத் துன்பம் வந்தால் நெஞ்சு நடுங்குகிறது. இன்பம் வந்தால் கிளுகிளுப்பு உண்டாகிறது. துன்பத்தைத் துன்பம் என்று பார்க்காமல் ஆண்டவனின் அருள் என்று நினைப்பார்க்கு, “எந்நாளும் துன்ப மில்லை” என்ற உறுதி வந்துவிடும்.

ஒருத்திக்கு இடுப்புவலி எடுக்கிறது. மிகவும் வேதனைப் பட்டுக் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையின் முகத்தைக் கண்டவுடனே அவளுக்கு அந்த வேதனைகள் மறந்து போகின்றன. எல்லையில்லா மகிழ்ச்சி உண்டாகிறது. அவளுடைய துன்பத்தின் முடிவு இன்பமாக இருப்பதனாலே அந்த வேதனையை அவள் நன்மையாகவே கருதுகிறாள். நாம் அநுபவிக்கிற துன்பங்கள் எல்லாம் நம்முடைய பாவங்களைக் கழுவுகின்றன என்கிற நினைப்புடையாருக்குத் துன்பம் ஒன்றும் செய்வதில்லை. துன்பத்தை அநுபவிக்கும்போது அது ஆண்டவனுடைய திருவருள் என்ற நினைப்பும், அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கையும் உண் டாகும்.