எங்காயினும் வரும்

நீண்ட பயன்

எந்த அறிவாளியும் தான் செய்கிற காரியம் ஒவ்வொன்றும் தனக்குப் பல காலத்திற்குப் பயன்படும்படி செய்ய வேண்டும் என்றுதான் விரும்புவான். ஒரு நாளைக்கு மட்டும் சோறு சமைத்துச் சாப்பிடுகிறவன் அன்றாடம் காய்ச்சி. பல காலத்துக்கும் பொருள் சேகரித்து வைத்துக்கொண்டு சுகமாகச் சாப்பிடுகிறவன் செல்வன். “இது என்ன, அன்றாடம் காய்ச்சி வாழ்வு!” என்று பழிப்புச் செய்கிறது உலகம். ஆனால் பல காலத்திறகுப் பலவகையில் பயன்படுகிற காரியத்தைச் செய்கிறவனை அறிவாளி என்று பாராட்டுகிறது.

அடுத்த ஆண்டுக்கு ஆடை வாங்கி வைத்துக்கொள்ளு கிறோம். பெண் பிறந்துவிட்டால், கல்யாணம் பண்ண வேண்டுமே என்று முன்கூட்டியே பணம் சேமிக்கிறோம். இவற்றை யெல்லாம் நெடுங்காலத்திற்குப் பின்னே பயன்பட வேண்டும் என்பதற்காக இப்போதே செய்கிறோம். இவை அறிவுடையவர் செயல்கள்.

நம்முடைய உடம்பு நிலையானது அல்ல என்று நமக்குத் தெரியும். உயிருக்கு இறுதி கிடைாது. என்றைக்கு இறைவனோடு ஒன்றுபடுகிறதோ அன்றைக்குத் தான் அதன் பயணம் முடிவடைகிறது. அந்த உயிருக்குப் பயன்படுகிற பொருளைச் சேமித்து வைக்க வேண்டாமா? நம்முடைய கைப்பொருளை யாசிப்பவர்களுக்கு இட்டு வைத்திருந்தால் அது நமக்குப் பின்னால் உயிருக்குப் பயன் அளிக்கும் என்று இந்தப் பாட்டில் சொல்ல வருகிறார் அருணகிரியார்.

பொங்கார வே யில் வேலை விட்டோன்
அருள்போல் உதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது.

நாம் செய்த காரியத்தின் பயன் உடனே கிடைக்குமா என்று எதிர்பார்க்கக் கூடாது. தேசீயச் சேமிப்புப் பத்திரம் வாங்கினால் மறுநாளே காசு கொடுத்து விடுவார் களா? பல காலத்திற்குப் பிறகுதான் மொத்தமாக வரும்

ஒளவையின் பாடல்

இதைப்பற்றி ஒளவைப்பாட்டி சொல்கிறாள்.

“அப்பா, உன்னுடைய வீட்டில் தென்னமரம் இருக்கிறதா? இருந்தால் நீ அதை எப்போது வைத்தாய்?’

“தென்ன மரம் இருக்கிறது. நன்றாகக் காய்க்கிறது. அதை நான் வைத்தேனா? எப்போதோ எங்கள் தந்தை காலத்தில் அவர் வைத்தது.”

”அப்படியா? அவர் காலத்தில் வைத்த தென்ன மரம் இப்போது உனக்கு நல்ல தேங்காய், இளநீர் எல்லாவற் றையும் கொடுக்கிறது அல்லவா? தந்தையார் வைத்த போது அதற்கு வெறும் தண்ணீர்தான் விட்டார். அது இப்போது நல்ல இளநீராகத் தருகிறது அல்லவா? அப்படியே நீ இப்போது தர்மம் செய்தால் அந்தத் தருமம். விளைந்து பின்னால் உனக்கு நன்றாகப் பயன் தரும். தென்ன மரம் தனக்கு இட்ட தண்ணீரை, பலகாலம் கழித்துத் தன் தலையாலே சுமந்து வெறும் நீருக்குப் பதிலாகச் சுவையுள்ள இளநீராகத் தருகிறதே!”

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டாநின்று
தளரா வளர்தெங்கு தாள்உண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.”

“ஒருவனுக்கு உபகாரம் செய்தால் அதன் பயன் மறு படியும் நமக்கு எப்படிக் கிடைக்கும் என்று நீ யோசிக்காதே. நிச்சயமாக நீ செய்ததைவிடக் குறைவாகக் கிடைக்காது; அதிகமாகவே கிடைக்கும். தென்ன மரத்திலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்” என்கிறாள் பாட்டி.

அறமும் அருளும்

இதைப்போலவே இந்தப் பாட்டில் அருணகிரியார் நமக்கு உபதேசம் செய்கிறார். “நீ உன்பால் வந்து இரப்பவர்களுக்கு உன்னுடைய பொருளை இட்டால், அதனால் என்ன பயன் என்று நினைக்காதே. நீ அளிக்கிற கொடை உனக்கு எங்காயினும் வந்து உதவி பண்ணும். நீ செய்த தர்மம் ஒன்று, இறைவன் அருள் ஒன்று. இரண்டும் உனக்கு உதவி செய்ய எப்படி வரும் என்று உனக்கே தெரியாது. ஆனால் நீயே ஆச்சரியம் அடையும்படியாக எங்காயினும் அந்த இரண்டும் வந்து உதவும்” என்கிறார்.

பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள்போல் உதவ,எங்காயினும் வரும், ஏற்பவர்க்கு இட்டது.

அவர் விரதம்

உத்தியோகத்தில் இருந்த ஒருவருடைய அன்னை மிக்க தர்ம நினைவு உடையவள். அவள் இறக்கும்போது தன் புதல்வரிடம் ஒன்றைச் சொல்லிப் போனாள். “அப்பா, குழந்தைகளுடைய மனம் மிகவும் மேன்மையானது. குழந் தைகளைத் திருப்தி செய்தால் ஆண்டவன் திருப்தி அடை கிறான். உன் கையில் எது கிடைத்தாலும் உடனே அங்கே எந்தக் குழந்தை இருந்தாலும் அதனிடத்தில் ”ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு எஞ்சியதைச் சாப்பிடு” என்று உபதேசம் செய்து போனாள். அதிலிருந்து அவர் எப்போது எங்கே எதை உண்டாலும் குழந்தைகளுக்குக் கொடுக்காமல் சாப்பிடுவது இல்லை.

ஒரு நாள் ஒரு சமாராதனைக்கு உண்ணச் சென்றிருந் தார். உள்ளே நுழையும்போது ஓர் ஏழைக் குழந்தை வீதியில் நின்று கொண்டிருந்தது. அதை உள்ளே போய்ச் சாப்பிடவிடாமல் அங்கே இருந்தவர்கள் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் உள்ளே போய்ச் சாப்பிட உட்கார்ந்தபோது அவருக்கு அந்தக் குழந்தையின் நினைவு இருந்தது. உடனே அன்னை சொன்ன உரையும் அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்தச் சமயம் இலையில் லாடு போட்டுக் கொண்டு வந்தார்கள். அவர் தம்முடைய லாடுவைக் கையில் வாங்கிப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். வெளியே வந்தவுடன் அந்த ஏழைப் பிள்ளையிடம் அதைக் கொடுத்தார். அதைத் தின்று அந்தப் பிள்ளை மிகவும் மகிழ்ச்சியோடு ஓடுவதைக் கண்ட பிறகு தான் அவருக்கு மனத்தில் அமைதி உண்டாயிற்று.