வள்ளியின் பக்குவம்
நெற்றாப் பகங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற
நீலவள்ளி
முற்றத் தனத்திற்கு இனிய பிரான்.
முற்றாத செவ்வி அவளுடைய கனிந்த பக்குவத்தைக் காட்டுகிறது. தனம் பருவத்தைக் காட்டுகின்ற அடை யாளம் ; நாயகனைப் பெறுவதற்குரிய பருவத்தை அடைந்து விட்டாள் என்பதற்குரிய அடையாளம். மற்றப் பெண்களுக்கு ஏற்படும் பருவம் போன்றது அன்று இது. பேமரசுவரனுடைய ஞானக் கண்களிலிருந்து தோன்றிய ஞான பாஸ்கரனை அடைவதற்குரிய பக்குவம் ஆன்மாவாகிய வள்ளிக்கு உண்டாயிற்று.ஆன்மா முதிர்ச்சியை அடைந்தது. அவளிடத்திலே தோன்றிய பருவதத்தின் அடையாளத்தைக் கண்டு முருகன் தானே வலிய வந்து அவளை ஆட்கொண்டான்.
அன்று வந்தவன் யார்? காமம் தன்னுடைய எல்லையிலே கூட வராதவாறு காம சங்காரத்திற்குப் பிறகு தோன்றிய குமாரநாதன். ஞானமயமாகத் தோன்றிய பெருமான் உள்ள இடத்தில் அஞ்ஞானமயமான காமம் இருக்க முடியுமா?அவன் அருளைப் புணையாகக் கொண்டு அல்லவா கலங்காத சித்த உறுதியுடன் வெங்காம சமுத்திரத்தைக் கடந்தார் அருணகிரிநாதப் பெருமான்?
அந்த ஞானக் கதிரவனையே நினைந்து வாழ்பவர்களுக்குக் காம மயமான அஞ்ஞானம் அருகில் கூட வராது. அவனை நினைப்பவர்களுக்கு ஞானம் தோன்றுகிறது. ஞானம் தோன் றியவுடன் மனப் பக்குவம் முதிர்கிறது. பக்குவம் முதிர்ந்த ஆன்மா இறைவனோடு ஒன்றுபடுகிறது.
வள்ளியெம்பெருமாட்டி ஓரளவு முருகனை நினைந்து காட்டில் வாழ்ந்தாள். அவளை அறியாமலே அவளுடைய பக்குவம் முதிர்ந்து கொண்டிருந்தது. வேடிச்சியாக வாழ்ந்த அவளுடைய வாழ்வில் வேடன் ஒருவன் வந்தால் தன்னைப் பற்றிய நினைப்பை மறந்து அஞ்ஞானமயமான காம வாழ்வில் இறங்கி விடுவாளோ என்று சோதிக்க வேடனாக வந்தான் முருகன். ஒருவரைத்தான் அடையவேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பாள் காதலி. இந்த எண்ணம் உறுதிப்பாடுடையதானால் அவள் வேறு யார் வந்தாலும் திரும்பிக்கூடப் பாராமல் வெறுத்து ஒதுக்குவாள். யார் மாட்டுக் காதல் உண்டானதோ அவனை அடைய முயலுதல், அதற்குத் தடையாக இருப்பவர்களை வெறுத்தல் என்று இரண்டு வகையான இயல்புகள் அவள்பால் தோன்றும்.
முருகன் செய்த சோதனை
முருகனை அடையவேண்டும் என்கிற நினைபோடு இருந்தவள் வள்ளி. அதற்குரிய பக்குவத்தை அடைந்த அவளிடம் முருகனாக வராமல் வேடனாக அவன் வந்தான். அவனைக் கண்டு வெறுத்து ஓடினாள்; ஏசினாள். அவளது உள்ளத்தில் கொண்டுள்ள உண்மைக் காதலைச் சோதிக்க முருகன் பல விளையாடல்களை நிகழ்த்தினான். அவனுடைய பரீட்சைகளில் வெற்றி பெற்றாள் வள்ளி. நன்றாகப் படிக்காதவர்கள் பரிட்சைக்குப் பயப்படுவார்கள். வள்ளி யெம்பெருமாட்டி நன்றாகப் படித்தவள்; முருகப் பெருமானைத் தவிர வேறு யாருக்கும் உரியோம் அல்லோம் என்று படித்தவள். அவளுடைய பக்குவம் உயர்ந்து நிற்பதைக் கண்டு அவளை முருகன் ஆட்கொண்டான். அவளுடைய முற்றாத் தனத்திற்கு இனிய பிரான் ஆனான்.
காம மிகுதியினாலே அவளுக்கு இனியவன் ஆனான் என்று நினைக்கலாமா? வெளித் தோற்றத்தையே உண்மை என்று நினைத்தால், அவனுடைய புறத் திருவிளையாடலைக் கண்டு அதுதான் மெய் என்று ஏமாற வேண்டியதுதான்.
ஒரு குழந்தை முற்றத்திலுள்ள நீர்த்தொட்டியைப் பார்க்கிறது. அதிலே முழுமதியின் வடிவம் நன்றாகத் தெரிகிறது. “அம்மா, சந்திரன் சந்திரன்!” என்று அதைப் பிடிக்க நீருக்குள் கையை விடுகிறது. நீர் கலங்கிவிடுவதால் பிரதிபிம்பம் பூர்ணமாக இல்லாமல் உடைந்து விடுகிறது; மங்கிப்போகிறது. குழந்தை, “சந்திரன் உடைந்துவிட் டானே, கலங்கிவிட்டானே!” என்று குழந்தை, அழுதால் அது உண்மையாகுமா? தண்ணீரில் தோற்றும் பிரதிபிம்பம் உடைந்தது உண்மை; ஆனால் அது வெறும் தோற்றம். வானத்தில் முழுமதி நன்றாக ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியே புறத்தோற்றத்தில், எம்பெருமானின் ஞான நாடகத்தின் வெளித்தோற்றம். உலக மாயை யோடு சம்பந்தப்பட்டு மலங்களோடு சேர்ந்து தொழில்படு கிறவர்களுக்கு ஊன நாடகமாகத் தோற்றுகிறது. தன்னுடைய கருணை மிகுதியினாலே, சாதியாலும், சமயத்தாலும், நாகரிகத்தாலும் மிகவும் தாழ்ந்தவள் என்று உலகினோர் நினைக்கும் வள்ளிநாயகியின் பக்குவம் உணர்ந்து, வலியவந்து ஞானநிலை நிறைவுறச் செய்து ஆட்கொண்ட திருவிளையாடல் அல்லவா அது?
இணைத்துப் பார்க்க வேண்டும்
கரும்பு வில்லும் முல்லை மலரம்பும் வெந்து காமவேள் படும்படியாக விழியால் செற்றவனுக்கு இனிய பிரான் என்று பின்னே சொல்வதைக் கொண்டு முருகன் வள்ளியினிடம் கொண்ட காதல் வெறும் காமக்கிளர்ச்சி அன்று என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஞான யோகியாக அமர்ந்திருந்த சிவபெருமான் தன் ஞானவிழியால் கரு வேளைச் சுட்டைரித்து விட்டுச் செவ்வேளைத் தோற்றுவித்தான். அந்த ஞானக் கண்களுக்கு இனியவன் ஞான உருவனாகத் தானே இருக்கவேண்டும்? அவன் செய்த திருவிளையாடல் ஞானாசிரியன் செய்யும் செயலாகக் கொள்வதற்குரியது. பக்குவம் அடைந்த ஆன்மாக்களை ஆட்கொள்ளுவதற்காக ஓடிவரும் இனியபிரான் அவன். ‘முற்றாத் தனத்துக்கு இனிய பிரான்’ என்று சொன்னால் உண்மை விளங்காது என்று, ‘வேள்பட விழியால் செற்றார்க்கினியவன்’ என்றும் கூறினார். அந்த இரண்டையும் இணைத்துச் சொன்னதற்குக் காரணம் நாம் ஏமாந்து போகாமல் உண்மையை உணரவேண்டும் என்பதுதான்.
முருகன் ‘ஞானாசிரியன்’ ஆதலாலே வள்ளிநாயகியின் பக்குவம் உணர்ந்து அவளிடம் தானே சென்று வலிய ஆட் கொண்டான். இது வேறு, அது வேறு என்று நினைக்கக் கூடாது. தனித்தனியாகப் பார்த்தால் வேறாகத் தோன்றும், அவனுடைய வரலாற்றோடு, கருணைத் திருவிளையாடல் களோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். மாரனுடைய அழிவிலே தோன்றிய குமாரன் காம வயப்படுவானா? நமக்கு மயக்கம் உண்டாகிறதா இல்லையா என்று சோதித்துப் பார்ப்பவரைப் போல வள்ளி கல்யாணத்தை முதலில் சொன்னார், அருணகிரியார். நாம் முடிவு கட்டுவதற்குள் அவனுடைய அவதார ரகசியத்தைப் பின்னே சொன்னார்.
அதனால் வள்ளி கல்யாணம் ஞானத் திருமணம் என்று புலனாயிற்று. முருகன் பூவுலகத்து வள்ளியை ஆட்கொண்டான் என்பதைக் கொண்டு அவன் நம்மைப் போன்றவன் மலத் தோடும் சம்பந்தப்பட்டவன் என்று நினைத்துக் கொள்னக் கூடாது. அவன் எத்தகையவன் தெரியுமா?
அமரர் தலைவன்
தேவேந்த்ர லோக சிகாமணியே.
தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இந்திரனுடைய லோகத்திற்குச் சென்று பார்க்கலாம். முருகன் வந்து விட்டான் என்றால் தேவர்கள் அவனைத் தூக்கித் தங்கள் தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள். தேவலோகத்தில் வாழ்கிற அமரர்களுடைய தலைமேலே முடி இருக்கிறது; அந்த முடிக்குமேல் மணியாக அவன் விளங்குவான்.
அவர்களுடைய முடிக்கு அவன் மணியாக இல்லாவிட்டால் அவர்கள் தலையில் மகுடமே இராமற் போயிருக்கும். அவனை அவர்கள் வணங்காமல் இருந்திருந்தால் சூரன் அவர்கள் வாழ்வையே குலைத்திருப்பான்.
தேவர்களின் முடிக்கு மணியாக விளங்குபவன் நெற்றிக்கண்ணால் காமனையே சங்காரம் பண்ணின பெரு மானுக்கு இனியவன்; ‘வள்ளிக்கும் இனியவன்’ என்று அடி யிலிருந்து பார்த்தால், ‘முருகன் தேவர்களுக்கும் உபகாரம் செய்த தலைமையுடையவன். காமத்தின் லேசமும் சார இயலாத ஞானவெளியில் உலவும் ஞானப்பிரான். அவன் தன்னுடைய கருணையினால் பக்குவமுள்ள ஆன்மாக்களை வலிந்து வந்து தடுத்து ஆட்கொள்வான்’ என்ற கருத்துப் புலனாகும்.
நெற்றப் பசுங்கதிர்ச் செவ்வேனல்
காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற்கு இனிய
பிரான், இக்கு முல்லையுடன்
பற்றாக் கையும்வெந்து, சங்க்ராம
வேளும் படவிழியால்
செற்றார்க்கு இனியவன், தேவேந்த்ர
லோக சிகாமணியே.
[முதிர்ந்து நெற்று ஆகாமல் இருக்கும் பசிய கதிரையுடைய சிவந்த தினையைக் காக்கின்ற நீல நிறம் படைத்த வள்ளிநாயகியின் இளம் பருவ அடையாளமாகிய தனங்களுக்கு இனிமை தரும் பெருமான் கரும்பாகிய வில்லுடனும் முல்லையாகிய அம்புடனும் அவற்றைப் பற்றியிருந்த உடம்பும் வெந்து, போர் புரிய வந்த காமனும் அழியத் தம் ஞானவிழியால் தண்டித்தவராகிய தட்சிணாமூர்த்தியின் திருவுள்ளத்துக்கு இனிமை தரும் குமாரன், தேவர்களின் தலைவனாகிய இந்திரனது லோகத்தில் யாருடைய முடியிலும் மணிபோல வணங்குதற்குரியவனாக எழுந்தருளியிருப்பவன்.
இனிய பிரான்,இனியவன், சிகாமணி என்று கூட்டுக. இனிய பிரான் : எழுவாய்; மற்ற இரண்டும் பெயர்ப்பயனிலைகள். ‘வள்ளியைக் காமுற்றவனைக் காமவிளையாடல் உடையவன் என்று எண்ணாதீர்கள், அவன் காமனை எரித்த ஞானவிழியிலே தோன்றியவன், என்று முதலில் குறிப்பித்தார். ஏனலைக் காக்கின்ற வெள்ளிக்கு இனிய பிரான் என்பதனால் இழித்த நிலையில் இருப்பவன் என்று எண்ணாதீர்கள்; அவன் தேவேந்திர லோகத்தில் உள்ளவர்களால் வணங்கப் பெறுபவன்’ என்று பின்னால் புலப்பட வைத்தார்.
நெற்ற-முதிராத. பசும்கதிர்-இனங்கதிர். ஏனல்-தினை.முற்றத்தனம் – தளர்ச்சி பெறாத நகில். :இக்கு – கரும்பு. பற்று -ஆக்கை; ஆக்கை- உடம்பு. சங்க்ராமம் – போரைச் செய்த. வேள்-காமன். பட-அழிய. செற்றார் — சிவபிரான். சிகாமணி-முடிமணி. ஏ : அசைநிலை.]
இது கந்தர் அலங்காரத்திவ் 58-வது திருப்பாடல்