மலரம்புகள்
காமன் தாமரை மலரை எய்தால் அது மற்றவர்களுக்குத் தம் காதலிமார் நினைவை இருதய தாமரையிலே உண்டாக்கிவிடும். காதலன் எங்கோ இருக்கிற தன் காதலியை நினைக்க ஆரம்பிப்பான். மன்மதனுடைய அடுத்த பாணம் மாம்பூ. அது வசந்த காலத்தில் பூக்கிறது. மாம்பூப் பட்டவுடனேயே உடம்பெல்லாம் வெப்பம் உண்டாகிப் பசலை தோன்றும். உடம்புக்குப் பிரிவினாலே உண்டாகின்ற நிறத்தைப் பசலை என்பார்கள். தாமரை எய்தவுடன் நினைப்புண்டாகி, மாம்பூ எய்தவுடன் பசலை பூக்கும். அவனுக்கு உற்சாகம் எல்லாம் போய்யிடும்.
காதலியைக் காணோமே என்று ஏங்கி ஏங்கிச் சோர்ந்து உட்கார்ந்து விடுவான். எந்த வேலையிலும் ஊக்கம் இருக்காது. அடுத்த மூன்றாவது பாணமாகிய அசோகம் பூவை எய்தவுடன் செயலற்றுப் போய்விடுவான். அசோக மலர் வேனிற் காலத்தில் செக்கச்செவேல் என்ற நிறத்துடன் மலரும். அந்த அம்பைக் காமன் விட்டவுடன் காதலன் தன்னுடைய சூழ்நிலையையும், வேலையையும் மறந்து காதலியின் நினைவாகவே சமைந்து போய் உட்கார்ந்துவிடுவான். அன்ன ஆகார நினைப்புகூட இல்லாமல் அமர்ந்து விடுவான். அடுத்தாற்போல மன்மதன் தன்னுடைய நான்காவது அம்பாகிய முல்லையை விடுத்தானோ இல்லையோ, கொஞ்ச நஞ்சம் இருந்த உணர்ச்சியும் போய்ப் பிணம் போலக் கிடப்பான்; காதலி வந்தால் பிழைப்பான்; இல்லையானால் மன்மதனுடைய ஐந்தாவது பாணமாகிய நீலோற் பலத்தை எய்தவுடனே இறந்து படுவான். ஐந்து மலரம்புகளாலும் இன்ன இன்ன விளைவு உண்டாகும் என்பதை ஒரு பாட்டுச் சொல்கிறது.
“நினைக்கும் அரவிந்தம்; நீள்பசலை மாம்பூ;
அனைத்துணர்வும் நீக்கும் அசோகு;-
நுனித்துணரின்
முல்லைகிடை காட்டும்; முழுநீலம் மாதராய் ; கொல்லும்:மதன் அம்பின் குணம்.”
இங்கே பரமேசுவரனுடைய கருணையையும், மன்மதனுடைய குறும்பையும் எடுத்து விளக்குவார் போன்று அருணகிரியார் காமனுடைய நான்காவது அம்பாகிய முல்லையைச் சொல்கிறார்.
இக்கு முல்லையுடன்
பற்று ஆக்கையும் வெந்து.
எப்போதுமே அருணகிரியார் புராணக் கதைகளை அழகு படுத்திச் சொல்வது வழக்கம்.
மன்மதன் தன்னுடைய கரும்பு வில்லில், தாமரை யாகிய முதல் அம்பை வைத்துத் தொடுத்துப் பரமேசுவரனது தியான சமாதிக்குப் பங்கம் விளைவித்த போதே இறைவன் தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை எரித்திருக்கலாம். ‘போனால் போகிறது. தன்னுடைய அறியாத் தனத்தால் செய்கிறான். ஞானமூர்த்தி தன்னுடைய ஞானக் கண்ணை விழித்தால் காமம் எரிந்து விடும் என்பது கூடத் தெரியாமல் விளையாடுகிறான்’ என்று விட்டுவிட்டான்: கண்ணைத் திறக்கவில்லை. மன்மதன் சும்மா போயிருக்கக்கூடாதா? தன்னுடைய இரண்டாவது அம்பாகிய மாம்பூவைத் தொடுத்தான். எம்பெருமானின் திருமேனி காமத் தீயினால் அலைப்புற்றுப் பசலை பூத்தால் தியானம் கலைந்துவிடும் என்பது அவன் நினைவு. மன்மதன் இரண்டாம் முறையாகத் தவறு செய்த போதிலும் இறைவன் தன்னுடைய சிறந்த கருணையினால் பேசாமல் தான் இருந்தான். மூன்றாவது பாணமாகிய அசோகத்தையும் விட்டு விட்டான் மன்மதன். ஒருமுறை தவறு செய்தாலே நாம் பொறுக்கமாட்டோம். மன்மதன் மூன்றாம் முறையாகச் செய்த பிழையையும் பொறுத்துக்கொண்டு எம்பெருமான் சும்மா இருந்தான்.
ஆனால் நான்காவது பாணமாகிய முல்லையை எடுத்து வில்லில் பூட்டினான். இனியும் பொறுக்கலாமா? ஏதோ ஒரு முறை தெரியாது செய்து விட்டான் என்று விடலாம். இறைவன் மூன்று முறையும் பொறுத்துக் கொண்டான். மூன்று முறை பொறுப்பது என்பது பெரியவர்கள் வழக்கம். அதற்கு மேல் தண்டிப்பதுதால் முறை. நான்காவது முறையாகக் காமன் தவறு இழைக்கக் கரும்பு வில்லில், வண்டு களென்னும் நாணிலே, முல்லையாகிய அம்பை எடுத்து வைத்தானோ இல்லையோ, ஞானமூர்த்தி தன் கண்ணைத் திறந்து விட்டான். எல்லாம் வெந்துவிட்டன. கரும்பு வில் எரிந்தது:-
அதிலே கட்டிய நாண், பூட்டிய முல்லையம்பு, வில்லைப் பிடித் திருந்த கை, உடம்பு எல்லாமே எரிந்து சாம்பலாகிவிட்டன.
சங்க்ராம வேளும் பட
சங்க்ராம வேள்-போர் செய்த மன்மதன். ஆண்டவன் செய்த தவத்திற்கு உதவியாக மன்மதன் அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துகொண்டு, அவனுடைய திருவடியை மலரால் அர்ச்சித்துக்கொண்டிருந்தானால் ஆண்டவன அவனுக்கு அருள் செய்திருப்பான். இப்போதும் மலர்களை எடுத்து வந்தான்; அர்ச்சிப்பதற்காக அல்ல. அம்பாகத் தொடுத்துத் தவத்திலே வீற்றிருக்கிற பெருமானின் தவத்தைக் குலைக்க வந்தான். சங்க்ராம வேளாக, சண்டை போடும் காமனாக, வந்தான். ஞான மூர்த்தியின் திருக்கண் பட்ட மாத்திரத்திலே பட்டான்; அழிந்தான். அந்த ஞானமூர்த்தியின் கண்களிலே தான் மற்றொரு வேளும் வந்தான். கருவேள் வெந்தான்; செவ்வேள் வந்தான். “செவ்வேளைத் தோற்றுவித்த கண் கருவேளைச் சுட்டெரிக்கலாமா?” என்றால் அவர்களுடைய பலத்திற்கும் பலவீனத்திற்கும் ஏற்றபடி விளைவு நேர்ந்தது.
இக்கு முல்லையுடன்
பற்றாக்கையும் வெந்து சங்க்ராம வேளும்
பட விழியால்
செற்றார்க்கு இனியவன்.
மன்மதனைக் கண்ணாலே அழித்தவனுக்கு இனிய பிரானாகச் செவ்வேள் தோன்றினான். அஞ்ஞானம் அழிந்து ஞானம் தோன்றினால், காமம் அழிந்து காமனுடைய சமாதியிலே ஞானம் உருவெடுத்து நின்றால். அது ஞானப் பெருமானின் கண்ணுக்கு இன்பம் அளிக்காதா’ ஞானமூர்த் திக்கு இனியவனாகிய இவன் யார் தெரியுமா? “இவன்தான் நான் முன்னாலே சொன்னேனே: தினைக்கொல்லையிலே கிளி ஓட்டிக் கொண்டிருந்த வள்ளியை நாடிச் சென்றவன்; வள்ளியின் பக்குவம் தெரிந்து நாடி ஓடியவன்” என்கிறார் அருண கிரியார்.
வள்ளி நாயகியின் நிலை
முருகனை அடைவதற்கு முழு உரிமையை உடைய வள்ளி, தான் யார் என்பதை உணர்ந்து கொள்ளாதவளாய்க் குறச் சிறுமியாய்த் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்தாள். அவள் காவல் புரிந்து கொண்டிருந்த புனம் எப்படி இருந்தது? விளைந்த தினைக் கதிர்கள் எவ்வாறு இருந்தன?
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல்.
முருகன் இளையவன். வள்ளியெம்பெருமாட்டி இளையவள். அப்பெருமாட்டி காவல் புரிந்துகொண்டிருந்த புனத்தில் இருந்த தினைக் கதிர்களும் இளமை நிலையிலேயே இருந்தன. அவை இன்னும் முதிரவில்லை; கதிர்கள் முற்றவில்லை.
கவிஞரின் புதிய படைப்பு
நெற்றா-நெற்று ஆகாத. நெற்று என்பது பெயர்ச் சொல். அதன் அடியாக நெற்றா என்ற எதிர்மறைப் பெய ரெச்சத்தை உண்டாக்கிக் கொண்டார் அருணகிரியார். நெற்றுதல் – நெற்றாதல்; நெற்றாத – நெற்று ஆகாத; அது ஈறு கெட்டு நெற்றா என்று நின்றது.
பெரிய கவிகள் இப்படித்தான் புதுப் புதுச் சொற்களை உண்டாக்குவார்கள். கம்பன் சில புது நடைகளை உண்டாக்கி இருக்கிறான்.
“ஓம் நராயணாய“
என்று ஓர் இடத்திலே அவன் உபயோகப்படுத்துகிறான். ‘கம்பன் போன வழி, என்று ஒரு வழக்கு உண்டு. அவன் இலக்கணம் அறிந்தவன். இலக்கணம் அவனிடம் நிரம்பி வழிந்தது. அவன் பழைய மரபை மாற்றிப் புதிதாக ஒன்று சொன்னால் அதுவே இலக்கணமாகிவிடும். இது பெருங் கவி ஞர்களின் உரிமை.
‘கம்பன் இலக்கண வரம்பை மீறித் தன் விருப்பப்படி சொல் அமைக்கிறானே; நாங்களும் ஏன் அப்படிப் புனையக் கூடாது?’ என்பதுபோலக் காளமேகம் வேடிக்கையாக ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார்.
“நாரயண நராயணனைனென் றேகம்பன்
ஓராமற் சொன்ன உறுதியால்–நேராக
வாரென்றால் வர்என்பேன்; வாளென்றால்
வள் என்பேன்
நாரென்றால் நர்என்பேன் நன்.”
பெரும்புலவர்கள் தாம் எழுதுவதே இலக்கணமாக, சட்டமாக ஆக்கிவிட்டுப் போகிறார்கள்.
அருணகிரிநாதப் பெருமான் இறைவன் அருள்பெற்ற பெரும்புலவர்;
“யாம் ஓதிய கல்வியும்எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்“
என்று முருகனைக் குருவாகக் கொண்டு கலைநலம் பெற்ற அருட்கவிஞர், அவர் சொல்லிலும் பொருளிலும் யாப்பிலும் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார்.
எம்பெருமானின் திருக்கரத்திலுள்ள வேலை ஞான வேல் என்று பெரியவர்கள் சொன்னார்கள். அருணகிரியார் ஞானத் தரும் கருவிகளாகிய வேதமும் ஆகமமும் வேலாயுதமாக இருக்கின்றன என்று புலப்படுத்தி, “வேதாகம சித்ரவேல்” என்று ஒரு புதுக் கருத்தைச் சொன்னார். ‘இப்படி யாரும் சொல்லவில்லையே!’ என்று கேட்க முடியுமா? அவருக்குப் புதிய கருத்தையும் புதிய சொல்லையும் படைக்கும் உரிமை இருக்கிறது.
இங்கே நெற்று என்ற பெயர்ச்சொல்லின் அடியாக வினையை உண்டாக்கி நெற்றா என்ற எதிர்மறைப் பெயரெச்சத்தை அமைக்கிறார். நெற்றாத என்பது நெற்றா என்று விகாரமாய் நின்றது.
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற.
இன்னும் நெற்று ஆகாத, முற்றாத பசுமை நிறத்தை உடைய கதிர்களையுடைய சிவந்த தினைப்புனத்தை வள்ளி காவல் காத்துக் கொண்டிருந்தாள். தினையின் மேல்நிறம் சிவப்பாதலால் செவ்வேனல் என்றார். இளமை மாறாத கதிர்களை உடைய செந்நிறம் பெற்ற தினைக்கொல்லையைக் காவல் புரிகின்ற வள்ளியின் காதலன் முருகன்.
நீல வள்ளி.
நீலம் என்பது கருமையும் பசுமையும் கலந்த ஒரு தோற்றம். உமாதேவியின் திருமேனி அத்தகையது. பச்சைப் பசுங்கொடிபோல நீல நிறத்தையுடைய வள்ளி பச்சைப் பசுங்கதிர் உள்ள தினைப்புனத்தைக் காத்துக் கொண்டிருந்தாள்.