தெற்கும் வடக்கும்

நம்முடைய பாரத நாட்டில் கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் இருக்கின்றன. வடக்கே போகப்போக நிலப்பரப்பு விரிந்துகொண்டே போகிறது. ஆனால் தெற்கே வரவரக் குறுகிக் கொண்டே வருகிறது. கடைசியில் ஆழமான கடல் வருகிறது. வடக்கே போகப் போக மனிதன் உயர்ந்து கொண்டே போகிறான்; மலையின் உச்சிக்கே போய் விடுகிறான். தெற்கே போகப் போகக் கடலில் தான் போய் வீழ்ந்து மூழ்க வேண்டும். இதைப் பூகோளமே சொல்கிறது. வாழ்வு வளம் பெற்று உயர்வு பெற்று உய்வு பெற அருள் வழங்கும் பரமேசுவரனை வடக்கே உள்ள இமாசலத்தின் உச்சியிலே வைத்தார்கள். மரணம் என்பது தெற்கே இருந்து வருவதாகச் சம்பிரதாயமாக வைத்தார்கள். மரணத்தைத் தருகிறவனும் அதை நீக்குகிறவனும் எதிரிகள். ஒருவன் தெற்கே இருக்கிறான்; மற்றவன் வடக்கே இருக்கிறான். ஒருவன் பள்ளத்தில் இருக்கிறான்; மற்றவன் மேட்டில் இருக்கிறான்.

மனிதர்களுக்குப் பகைவனாக இருக்கிறவன் தென்னவன்; அல்லது காலன், நம்முடைய பகைவனைத் தன்னுடைய பகைவனாக நினைந்து அவனை அடக்குவதற்கு ஆயத்தமாக இருப்பவனைப் போலத் தெற்கு நோக்கித் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கிறான். கையில் அம்பு முதலிய கருவிகளை வைத்துக் கொண்டு செய்யும் போர் அல்ல இது. அஞ்ஞானத்தை ஞானத்தினாலே ஒழிக்கும் போர். மரணத்திற்குக் காரணமாக உள்ள காலனை, அஞ்ஞான உருவத்தை, ஒழிப்பதற்காக ஞானாசிரியனாகிய தட்சிணாமூர்த்தி சின்முத்திரையோடு, ஞான அடையாளத்தோடு, தெற்கு நோக்கி வீற்றிருக்கிறான்.

தேவர்களின் கவலை

எல்லா உயிருக்கும் உயிராய் இருக்கிற இறைவன் தென் முகம் நோக்கிச் சின்முத்திரையோடு யோகத்தில் அமர்ந்து விட்டான் என்றால் உலகம் எல்லாம் செயல்படுமா? அவன் யோகத்தில் அமர்ந்தான். உலகமே யோகத்தில் அமர்ந்து விட்டது. யாரும் சிந்திக்கவில்லை: தொழில் செய்யவில்லை. ஆடவர்கள் பெண்களை நாடிப் போகாமல் அப்படியே தவத்தில் அமர்ந்து விட்டார்கள். பெண்களும் அப்படியே. இப்படி இருந்தால் உலகம் என்ன ஆவது? நல்லவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்றால் தேவர்களுக்கு வாழ்வு எங்கே? சூரபன்மன் முதலிய அசுரர்கள் தேவர்களை வருத்தத் தொடங்கி விட்டார்கள். தேவர்களுடைய அரசை, அடித்துப் பிடுங்கிக் கொண்டு அவர்களை விரட்டி விட்டார் கள். நல்லவர்கள் செயல்படாது ஒடுங்கி விட்டால் கெட்ட வர்களுடைய செயல்கள் தாமே ஓங்கி நிற்கும்?

அப்போது தேவர்கள் ஒன்று கூடி யோசித்தார்கள். இதற்கு என்ன செய்வது? தூங்கு மூஞ்சிச் சாமியை எழுப்பியாக வேண்டுமே! யோகத் தூக்கத்திலிருந்து விழிப்புறச் செய்ய வேண்டுமே! அவர் விழித்தால் அல்லவா உலகம் உய்வு பெறும்? அவரை எப்படி விழிப்படையச் செய்வது?’ என்று கூடி ஆலோசித்தார்கள். “மன்மதனை அனுப்ப வேண்டியது தான்; உலகத்தைக் காப்பாற்றும் பிள்ளை நமக்கு வேண்டுமானால் இப்போது மன்மதன்தான் வேலை செய்தாக வேண்டும்” என்று முடிவு செய்து அவனை அனுப்பித் தட்சிணாமூர்த்தியின் தியானத்தைக் கலைக்கச் சொன்னார்கள். அந்த ஞானமூர்த்தியின் முன்னால் அவன் உடம்பெல்லாம் நடுங்கப் போய் நின்றான்.

காமன் செயல்

உலகத்தையே மயக்குகிறவன் மன்மதன். அவன் அழகு மிக்கவன்; மென்மை மிக்கவன்; மதுரமானவன். அவனுடைய அரசு, படைகள் எல்லாம் அழகியவை. அழகுதான் மன்மதனுடைய ராஜ்யம். அவன் கையில் இருக்கிற வில் கரும்பு; அது இனியது. அந்தக் கரும்பு வில்லுக்கு வண்டு களின் கூட்டமே நாண். வண்டின் ரீங்காரமே நாணொலி என்றால் எவ்வளவு இனிமையாக இருக்கும்! நாணில் வைத்துப் பூட்டுகின்ற அம்புகளோ ஐந்து மலர்கள். மலர்கள் அழகுக் குவியல்கள். அவனுக்குமுன் ஊதும் திருச்சின்னம் குயில், அவன் கூடவே இருக்கிற துணைவன் வசந்தன். அவனுக்கு யானை இரவு. குதிரை கிளி. தேர் தென்றல். முரசு கடல். அவனுடைய படை பெண்கள். இப்படிக் காமத்தைத் தூண்டும் பொருள்களை எல்லாம் வைத்திருக்கிறவன் காமன்; எவ்வளவு அழகான கற்பனை பாருங்கள்!

ஞானமூர்த்தி கல்லால மரத்தடியில் ஞானமுத்திரையோடு யோகத்தில் ஆழ்ந்திருந்தான். அவனுடைய யோகத்திற்கு இடையூறு விளைவிக்கக் காமன் வந்தான். அவன் வரும் போதே தென்றல் மெல்ல மீதூர்ந்து வந்து தென்முகக் கடவுளின் உடலைத் தழுவிற்று. இராத்திரியாகிய யானை மதம் பொழிய நின்றது. அவனுடைய காகளமாகிய குயில்கள் கூவ ஆரம்பித்துவிட்டன. இவை எல்லாம் எம்பெருமானுடைய தியானத்தைக் குலைத்துவிடுமா?

சாதாரண மனிதர்களாக இருந்தால் இதற்குள்ளேயே ஆடிப் போயிருப்பார்கள். மன்மதன் தன் கையிலுள்ள கரும்பு வில்லில் மலர் அம்பைப் பூட்டிக்கொண்டு விடலாமா, வேண்டாமா என்று தயங்கித் தயங்கி நின்றான். அவன் உடம்பெல்லாம் நடுங்கியது. அவன் உயிர் தப்ப வேண்டுமென்றால் அந்தக் காரியத்தை அவன் செய்யக் கூடாது. ஆனால் உலகம் எல்லாம் உய்வு பெற வேண்டுமென்றால் அதைச் செய்து தானே ஆகவேண்டும்? வேறு வழி என்ன? உலகம் வாழ வேண்டும் என்று நினைத்தான், மன்மதன். தன்னுடைய வில்லிலிருந்து மலர் அம்புகளை எம்பெருமானின் திருவடியில் அர்ச்சனை செய்வது போலத் தொடுத்தான்.

காம சங்காரம்

ஞானமூர்த்தி மெல்ல நெற்றிக்கண்ணைத் திறந்தான். திறந்த மாத்திரத்தில் மன்மதன் எரிந்து சாம்பலாகி விட்டான்.

“அன்புடையார் உலகத்தில் வாழ்வார்கள்; அன்பு இல் லாதவர்கள் அறக் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்” என்பர். ”கடவுளுக்கு இவ்வளவு பட்சபாதமா?” என்று கேட்கலாமா?

கதிரவன் தோன்றுகிறான். சுடர்விடும் அவன் பொற் கிரணங்களைக் கண்டு தாமரைகள் மலர்கின்றன. சூரியன் தாமரையை மலரச் செய்கிறான் என்று சொல்கிறோம். அவனுடைய கிரணம் பட்டு எலும்பு இல்லாத புழுக்கள் செத்துப் போகின்றன. சூரியன் புழுக்களைக் கொல்கிறான் என்று சொல்கிறோம். அப்படிச் சொன்னாலும், தாமரை மலர்வதும் இறப்பதும் தாமே நிகழ்கின்றன. அவன் இந்த இரண்டு காரியங்களையும் விரும்பிச் செய்யவில்லை. அவன் எல்லாவற்றுக்கும் நடுநிலையில் நின்று தனக்கு இயல்பாக உள்ள கதிர்களோடு தோன்றுகிறான்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

என்றார் வள்ளுவர். சூரியனுடைய சுடரைக் கண்டு தாமரை மலர்கிறதற்குக் காரணம் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அதற்கு இருப்பதுதான். எலும்பு இல்லாத புழுக்கள் செத்துப் போகின்றன என்றால் அவற்றிற்குத் தாங்கும் சக்தி இல்லை. எப்படி வெயில் எலும்பு இல்லாத புழுக்களைக் கொன்று விடுமோ அப்படி அன்பு இல்லாதவர்களை அறக் கடவுள் கொன்றுவிடும் என்று சொன்னார். கொல்லப்படுவதற்குக் காரணம் கதிரவன் அல்ல. அவற்றின் வலியின்மையே இறந்துபடுவதற்குக் காரணமாகிறது. சூரியனுடைய ஒளி பொது. தாமரை அதைத் தாங்கும் ஆற்றல் உடையது; அதை ஏற்று மலரும் தன்மை உடையது. எலும்பு இல்லாத புழுவோ அதைத் தாங்கும் சக்தியற்றதாகையால் இறந்து போகிறது.

அவ் வண்ணமே, தட்சணாமூர்த்தி காமனை எரிக்க வேண்டுமென்று நெற்றிக் கண்ணைத் திறக்கவில்லை. ஞான மூர்த்தி, யோக சமாதியில் அமர்ந்திருந்த தவப் பெருமான் க தன் ஞானக் கண்ணைத் திறந்தான், ஞானத்திற்கு முன்னால் காமம் நிற்குமா? ஞானத்தின் வலிமையைத் தாங்கும். வல்லமை இல்லாத மன்மதன், தன்னுடைய பலவீனத்தால் எரிந்து போனான். காமன் இறந்துவிட்டானே என்று அவன் துணைவி ரதி வருந்த, “யாக்கை இல்லாதவனாகவே அவன் இனியும் இயங்குவான். ஆனால் உனக்கு மட்டும் யாக்கை உடையவனாசுத் தோன்றுவான்” என்று சிவபெருமான் வரம் அளித்தான்.

முருகன் அவதாரம்

அப் பெருமானுடைய யோகம் கலைந்துவிட்ட மகிழ்ச்சி யினால் திரும்பவும் அவன் யோகத்தில் அமர்ந்து விடுவதற்குள் அவனிடம் ஓடிச் சென்று காலில் விழுந்த தேவர்கள் தங்களுடைய துயரத்தைச் சொல்லி, “நாங்கள் உய்வுபெற ஒரு குமாரனை வழங்கவேண்டும்; உலகம் ஒரு குமாரனை விரும்புகிறது” என்று வேண்டி இறைஞ்சினார்கள். சிவ பெருமானுடைய அருள் பின்னும் விரிவுபட வேண்டும். என்பது அவர்களுடைய அவர். ஆதலின்,

ஆயவெஞ் சூரன தாவி நீக்கவோர்
சேயினை அருளவான் சிமைய மாகிய
மீயுயர் வரையிடை மேவி நோற்றிடும்
மாயையின் மனைவியை மணத்தல் வேண்டும்நீ”

என்று வேண்டிக் கொண்டார்கள். பிறகு இறைவன் பார்வதியை மணந்து கொண்டான். அப்பால் எம்பெருமான் கண்களிலிருந்து ஆறு பொறிகள் எழுந்தன. அவற்றிலிருந்து குமாரன் தோன்றினான் இந்த வரலாறு நமக்குத் தெரியும்.

மாரனுடைய சமாதியின் மேலே குமாரன் பிறந்தான். மன்மதனை எரித்ததும் குமாரனைத் தோற்றுவித்ததும் நெற்றிக்கண்ணே. ஒரு காரியம் செய்வதற்கு முன் அதற்கு ஏற்ற மனநிலையில் (Mood) இருக்க வேண்டும் என்பார்கள்.. உலகத்துக் குமார ஜனனம் போன்றதன்று முருகன் திரு அவதாரம். அது காம சம்பந்தமே இல்லாதது.ஞானமாக விளைவது. ஆதலின் அந்த நிகழ்ச்சி தோன்றுவதற்கு முன் காமன் யார் கண்ணிலும் படாதபடி ஒழிந்தான்.

வேளைச் செற்றார்க்கு இனியவன்

தென்முகக் கடவுளாகிய ஞானமூர்த்திக்கு இனியவனாக ஞானபண்டித சாமியாகத் தோற்றியவன் முருகன் என்பதை அருணகிரியார் கூறுகிறார்.

இக்கு முல்லையுடன்
பற்று ஆக்கையும் வெந்து, சங்க்ராம
வேளும் பட விழியால்
செற்றார்க்கு இனியவன்.

இக்கு என்பது இக்ஷு என்ற வடசொல்லின் திரிபு. இக்கு – கரும்பு. அது மன்மதனுக்கு வில். அவனுடைய வில்லாகிய கரும்பு இனிப்புடைய பொருள். அதிலே அவன் தன்னுடைய அம்பாகிய ஐந்து மலர்களை வைத்துத் தொடுக்கிறான். தாமரைப்பூ, மாம்பூ. அசோகம்பூ, முல்லைப் பூ, நீலோற்பல மலர் என்னும் ஐந்தும்அவனுடைய அம்புகள். பரமேசுவரன் தவநிலையில் இருக்கும்போது இந்த மன்மதன் முதலில் தாமரைப் பூவாகிய பாணத்தை விடுத்தான். அது தன்னுடைய மென்மையையும் தண்மையும் மணத்தையும் பரப்பிக்கொண்டு போய் எம்பெருமானின் திருவடியில் வீழ்ந்தது.