இனிய பிரான்
எப்போதும் அருணகிரிநாதர் ஒரு பாட்டில் இரண்டு கருத்துக்களைச் சொன்னாரானால் பெரும்பாலும் அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாக இருக்கும். இரண்டு கருத்துக்களை அடுத்தடுத்து வைப்பதே, ஒரு கருத்தை மற்றொரு கருத்தால் வளப்படுத்து வதற்காகத்தான் இப்போது பார்க்கப் போகிற பாட்டிலும் இரண்டு கருத்துக்களைச் சொல்கிறார்.
இரண்டு நிகழ்ச்சிகள்
கந்தபுராணத்தில் வரும் இரண்டு நிகழ்ச்சிகள் பெரும் பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கந்தப் பெருமானின் அவதாரக் கதையும், வள்ளிநாயகியின் திருமணக் கதையும் கந்தபுராணத்தில் முன்னும் பின்னும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. கந்தப் பெருமானின் அவதாரக் கதை தட்சிணாமூர்த்தியின் கதையில் தொடங்குகிறது. இந்தப் பாட்டில் அருணகிரிநாத சுவாமிகள் எடுத்த உடனேயே வள்ளியெம்பெருமாட்டியின் திருமணத்தைச் சொல்லி, பின்னே முருகனின் அவதாரத்திற்கே காரணமான தட்சிணாமூர்த்தியின் கதையைச் சொல்கிறார்.
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல்
காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற்கு இனிய
பிரான், இக்கு முல்லையுடன் பற்றாக்
கையும்வெந்து சங்க்ராம
வேளும் படவிழியால்
செற்றார்க் கினியவன், தேவேந்த்ர
லோக சிகாமணியே.
முதல் இரண்டடியில், “நீலவள்ளி முற்றாத் தனத்திற்கு இனிய பிரான்” என்றும், அடுத்த அடிகளில் “சங்க்ராம வேளும் பட விழியால் செற்றார்க்கு இனியவன்” என்றும் சொல்கிறார். “காம சங்காரம் பண்ணின ஞான மூர்த்திக்கு இனியவன். அவனுக்குப் பிரியமான குழந்தை” என்று அவர் பின்னே நினைப்பூட்டுகிற போது, “இவனா? காட்டில் தினைப்புனத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்த குறத்தியிடம் காதல் கொண்டவன். நீலவள்ளி முற்றாத் தனத்திற்கு இனிய பிரானாகத் திரிந்தவன் அல்லவா இவன்? தகப்பனார் மிக நல்லவர். காமனைத் தகனம் பண்ணின அந்தத் தகப்பனாருக்குப் பிள்ளையாகப் பிறந்து, இவன் காமுகனாகத் திரிந்திருக்கிறான். அவர் ஒழுக்கம் உடையவர். இவன் ஒழுக்கம் இல்லாதவன் போலிருக் கிறது!” என்று சொல்லலாம் போலத் தோன்றுகிறது. அப்படி நினைக்கும்படி அருணகிரியார் சொல்வாரா? நல்ல அறிவும் அநுபவமும் மரபும் தெரிந்தவர் சரியானபடி உணர்ந்து கொள்வார்கள் என்கிற நினைப்பில்தான் இந்த இரண்டையும் ஒரு சேர வைக்கிறார். முதலில் வள்ளி கல்யாணத்தைச் சொல்லி, பின்பு தட்சிணாமூர்த்தியின் கதையைச் சொல்கிறார்.
முன்னுக்குப் பின் முரணா?
“முருகன் பெருமாட்டியிடம் காதல் கொண்டது காமம். தட்சிணாமூர்த்தியின் தன்மை ஞானம்” என்று இரண்டையும் வேறு பிரித்துப் பார்க்கலாமா? இவை இரண்டும் ஒரு கதையின் இரு வேறு பிரிவுகள். ஒன்று மூலம்; ஒன்று முடிவு. முடிவை முதலில் சொல்லி, மூலத் தைப் பின்னே சொன்னார். கதையின் முதல் அத்தியாயத்திற்கும், கடைசி அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கும். அல்லவா?
அவர் அமைத்த சொற்களைக் கவனியுங்கள். “நீல வள்ளி முற்றாத் தனத்திற்கு இனிய பிரான்” என்கிறார். பிறகு, “சங்க்ராம வேளும் பட, விழியால் செற்றார்க்கு இனியவன்” என்கிறார். இனிய பிரான் என்றாலும், இனியவன் என்றாலும் பொருள் ஒன்றுதான். ‘வள்ளியெம்பெரு மாட்டியின் முற்றாத, இளமையையுடைய தனத்துக்கு இனிய பிரானாக இருந்து கொண்டே காமனைச் சங்காரம் பண்ணின சாமிக்கும் இனியவனாக நடிக்கும் பொல்லாத பிள்ளை போலிருக்கிறது!’ எனத் தோன்றுகிறது அல்லவா?
பெரும் கவிகள் ஒன்றோடொன்று பொருத்தம் இல்லாதவை போல இப்படித்தான் சில கருத்துக்களை இணைத்து, அறிவுடையவர்கள் கண்டுகொள்ளட்டும் என்று வைப்பார்கள். அப்படியே முன்னால் முருகப் பெருமானைக் காமுகனாகத் தோற்ற வைத்து, ”அப்படி” எண்ணிவிடுவது தவறு; இதன் உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள், பார்ப்போம்” என்று சொல்வாரைப் போலப் பின்னாலே அக்கருத்துக்கு முரண் பாடுள்ளது போன்ற ஒரு கதையை அருணகிரியார் சொல் கிறார்.
தட்சிணா மூர்த்தி
சிவபெருமான் ஞானசொரூபியாக, தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தடியில் தெற்குமுகமாக வீற்றிருந்தான். கல்லால மரம் என்றால் கல்லினாலே பண்ணின ஆலமரம் அல்ல. இது கல்லுக்கு நடுவில், மலைப் பாறை களுக்கு இடையில் முளைத்த சிறிய ஆலமரம். ஆதலாலே கல்லால மரம் என்று பெயர்; கல் இச்சி என்று இதைச் சொல்வார்கள். அந்த மரத்தின் அடியில் தட்சிணாமூர்த்தி யோக சமாதியில் அமர்ந்திருந்தான்.
சனகர், சனந்தனர், சனத் சுஜாதர், சனத்குமாரர் ஆகிய நான்கு பேர்களுக்கும் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அவர்களோ நான்மறையும் ஆறங்கமும் கற்றுக் கேள்வியிலும் வல்லவர்கள். அவர்களுக்கு வேதத்திலே சந்தேகம் வர நியாயம் இல்லை; வேதத்தை நன்கு படித்தவர்கள்; அதைக்கொண்டே போக்கிக் கொள்ள முடியும். சாஸ்திரத்திலும் சந்தேகம் இல்லை; அவர்கள் வேதசாஸ்திர அறிவின் தலைநிலத்திலே இருப்பவர்கள். அவர்களுடைய சந்தேகத்தைப் பேசித் தீர்க்கலாம் என்றால் அவர்கள் பேச்சிலும் வல்லவர்கள். அவர்கள் கேட்டறியாத பொருளும் இல்லை. அவர்களுக்கு ஐயம் உண்டாயிற்று என்றால் அந்த ஐயத்தை எவ்வாறு நீக்குவது? வேதத்திற்கு அப்பாற்பட்டதாய், சாஸ்திரத்திற்கு அப்பாற்பட்டதாய், கல்விக்கும் கேள்விக்கும் அப்பாற்பட்டதாய் எழுந்த அவர்களுடைய சந்தேகத்தை, பேசாத பேச்சினாலே, தன்னுடைய திருக்கரத்தினால் சின்முத்திரையைக் காட்டிச் சொல்லாமல் சொல்லி, அவர்களுடைய சந்தேகத்தை நீக்கிவிட்டான் தட்சிணாமூர்த்தி.
சின்முத்திரை
சித் என்பது ஞானம், சின்முத்திரை என்பது ஞானத்தின் அடையாளம். முன்பு ஒரு முறை இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஆன்மா எப்போதும் மூன்று மலங் களோடு சேர்ந்திருக்கிறது. ஒரு கையில் ஐந்து விரல்கள் இருந்தாலும் நான்கு விரல்கள் ஒரு வரிசையிலும், ஐந்தாவதாகிய கட்டை விரல் அவற்றோடு சேராமல் தனித்தும் இருக்கின்றன. கட்டை விரல் தனித்து இருந்தாலும் அது மற்ற நான்கு விரல்களோடு சேராத காலத்து எந்த வேலையும் செய்ய முடியாது. பல காரியங்களைச் செய்யும் போது மற்ற விரல்களோடு கட்டைவிரலும் சேர்த்து உதவி புரிகிறது; வேலை செய்யாதபோது அவற்றோடு சேராமல் தனித்தே நிற்கிறது.
ஆன்மாக்கள் செய்கிற காரியங்களில் எல்லாம் இறைவன் உறுதுணையாக இருந்தாலும் அவன் இந்த உலகத் துக்கு அப்பாற்பட்டவனாக, மலங்களுடைய சம்பந்தம் இல்லாதவனாகவே இருக்கிறான்.
கட்டைவிரலுக்கு அடுத்தபடி சுட்டுவிரல் இருக்கிறது. அதை ஆள்காட்டி விரல் என்றும் சொல்வார்கள். ”அதோ போகிறான் பார்” எனத் தெருவில் போகிற ஆளைக் காட்டுவதனால் அதற்கு ஆள்காட்டி விரல் என்று பெயர் வந்ததாகக் கூறுவர். அதையும் விடச் சிறப்பான பொருள் வேறு ஒன்று சொல்லலாம். ஆள் என்றால் அடிமை, ஏவலன் என்று பொருள். ”ஆளான அடியவர்கட் கன்பன் தன்னை” என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். எல்லா ஆத்மாக்களும் இறைவனை நாடிச் செல்ல வேண்டிய ஆட்கள். ஆள் என்பது ஆன்மா. ஆளாகிய ஆன்மாவைக் குறிக்கிற விரல் ஆதலின் ஆள்காட்டி விரல் என்று பேர் வந்தது. ஆள்காட்டி விரல் ஆன்மாவைச் சுட்ட, கட்டை விரல் ஆண்டவனைச் சுட்டுகிறது.
ஆன்மா எப்போதும் மலங்களோடு சேர்ந்து நிற்கிறது. சுட்டுவிரல் கட்டைவிரலோடு சம்பந்தப்படாமல் மற்ற மூன்று விரல்களோடு சம்பந்தப்பட்டே இருக்கிறது. மலத்தோடு சம்பந்தப்பட்டு ஆன்மா தொழில்படும் போதும் அந்தத் தொழில்களுக்கு இறைவன் உதவியாக இருப்பது போலவே, கட்டை விரலானது மற்ற மூன்று விரல்களோடு சேர்ந்து ஆள்காட்டி விரல் தொழில்படும்போது கூட நின்று உதவுகிறது. இறைவன் மலத்திற்கு அப்பாற்பட்டவனாக இருப்பது போல் கட்டை விரல் தனியே இருக்கிறது.
இறைவன் பதி, ஆன்மா பசு, மலங்கள் பாசம். ஆன்மா பாசத்தோடு சம்பந்தம் உடையதாக இருக்க வேண்டும்; அல்லது பதியோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். பாசத்தோடு சம்பந்தமுடையதாக இருக்கும் போது பல விதச் செயல்களைப் புரிந்து இன்ப துன்ப நுகர்ச்சிகளை அடைகிறது. பதியோடு சேர்ந்துவிட்டால் பாசம் கழன்றுவிடும். பதிக்கு மல சம்பந்தம் இல்லை. பதியோடு ஒன்றாக இணைந்து விட்ட பசுவுக்கும் மல சம்பந்தம் இல்லாமற் போகிறது.
தட்சிணாமூர்த்தி என்ன செய்தான்? ஆள்காட்டி விரலையும், கட்டைவிரலையும் சேர்த்து, பிற மூன்று விரல்களும் தனித்து நிற்கும்படி சின் முத்திரையைக் காட்டினான்.
பாசத்திலிருந்து ஆன்மா விடுதலை பெற வேண்டுமானால் பதியோடு சேர்ந்திருக்க வேண்டும் என்கிற பொருளை அந்த ஞான முத்திரையினால் அவன் உணர்த்தினான். இறைவனுடைய தொடர்பு இல்லாமல் யாருக்கும் இருக்க முடியாது. எப்பொழுதும் இறைவனுடைய தொடர்பு இருக்கிறது. சுட்டு விரல் மற்ற மூன்று விரலோடு சேர்ந்து தொழில் படும் போது கட்டைவிரல் தானே போய்ச் சேர்ந்துகொண்டு அதற்கு உறுதுணையாக இருக்கிறது. அப்படிச் சேர்வது போதாது; மூன்றையும் விட்டுப் பெருவிரலோடு இணைய வேண்டும்.
நாம் மூச்சு விடுகிறோம். உண்ணுகிறோம். உறங்குகிறோம். பலவிதமான தொழில் செய்கிறோம். அப்போது எல்லாம் இறைவனுடைய தொடர்பு இருக்கிறது என்றாலும், ஆத்மா மலங்களோடு சேர்ந்தே தொழில்படுகிறது. அதனால் இறப்பு, பிறப்பு என்னும் பிணிக்கு உள்ளாகிறது. அது என்றைக்கு இறைவனோடு ஒன்றிவிடுகிறதோ அப்போது முத்தியின்பம் பெறுகிறது. அந்த முத்தியை அடைவதற்குரிய உபதேசத்தைச் சின்முத்திரையினாலே குறிப்பித்தான் தென்முகக் கடவுள்.
தென் முகம் ஏன்?
அவன் ஏன் தெற்கு முகம் நோக்கி இருந்து காட்ட வேண்டும்? நாம் எந்தக் காரியத்தையும் தெற்கு முகம் நோக்கிச் செய்வதில்லை. ஆனால் பரமேசுவரனாகிய குருநாதன் அடியார்களுக்கு அருள் செய்வதற்காக, அடியார்களுடைய பகைவனை அழிப்பதற்கு ஆயத்தமாகத் தெற்கு முகம் நோக்கி உட்கார்ந்திருக்கிறான். நடராஜனாகக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்கும்போதும் தென்முகம் நோக்கிநிற்கிறான். பகைவன் முன்னால் இருக்கும்போது அவனுக்கு முதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல. அவனை நேர் நின்று எதிர்க்க வேண்டும். சங்கநூல்களில் “கடந்தடும்” என்று ஒரு தொடர் வரும். அதற்கு உரையாசிரியர்கள், ‘வஞ்சி யாது எதிர் நின்று கொல்லும்’ என்று உரை எழுதுவார்கள். அதுதான் சுத்த வீரம்.
நமக்கு மிகவும் துன்பத்தைத் தருகின்ற மரணத்தை விளைக்கும் காலனைத் தென்னவன் என்றும் “தென்புலக்கோன்” என்றும் கூறுவர்.
“சட்டத்தென்னவன் தன்கடா வேந்தனை
வெட்டி“
என்பது தக்கயாகப் பரணி.
“தென் புலக் கோன் பொறியொற்றி“
என்பது பெரியாழ்வார் திருமொழி. யமன் தென்திசைக்குத் தலைவன்.
நம்முடைய பகைவன் யார்? இறப்பும் பிறப்புந்தான் நமக்குப் பகை. இறப்புத்தான் பெரும் பகை; கொடும் மரணம் இல்லாத வாழ்வு நமக்கு வந்துவிட்டால் பிறகு துன்பம் இல்லை. அந்த இறப்பு என்பதைப் பருப் பொருளாக உருவாகக் காட்டி யமன் என்றார்கள். யமன் நமக்கு மரணத்தை விளைவிக்கிறான் என்றார்கள். மரணம் என்ற நினைவை உண்டாக்குகின்றவனாக அவனை வைத்தார்கள்.
அவனை ஏன் கிழக்கே இருப்பவனாக வைக்கக்கூடாது? மேற்கே கூட வைத்திருக்கலாமே! தெற்கே ஏன் வைத்தார்கள்?