உபதேசம்
இறைவன் நினைப்போடு ஒவ்வொரு பிடி சோறும் உள்ளே போகும்போது உள்ளம் வளர்கிறது. உள்ளம் வளர்ந்தால் அன்பு விளைகிறது. அன்பு இல்லாவிட்டால், தானே சம்பாதித்து, தானே உண்டு, இறைவனுடைய நினைப்பு இல்லாமல் இருப்பான். அவன் உள்ளம் வளராது. உடம்பு தான் வளரும். வெறும் ஊன் வளரும். இந்த வளர்ச்சி கடைசியில் எப்படி ஆகிறது?
வினையோம் இறந்தால்
ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே.
இது மாயாத உடம்பு அல்ல; மாய உடம்பு; நிலை யில்லாத வஞ்சனையான உடம்பு. எந்தச் சமயத்தில் உயிரை இது வெளியே போகவிடும் என்று சொல்ல முடியாது. “நிலையில்லாத இந்த மாய உடம்பை வளர்ப்பதற்காகப் பொழுதை எல்லாம் செலவிடுகிறீர்களே! இறந்தால் இந்த உடம்பு என்ன ஆகும்? புண்ணியம் பாவம் ஆகிய இருவினைக்கு உட்பட்டிருக்கிற நாம் இறந்தால் இந்த உடம்பு ஒரு பிடி சாம்பரும் காணாது. இது நிலை என்ற நம்பிக்கையோடு இதை வளமுடையதாக்கச் சம்பாதிப்பதும் சாப்பிடுவதுமாக இருக்கிறீர்களே! இதில் பயன் இல்லை. உள்ளத்தை வளமுடையது ஆக்க, அன்புடையது ஆக்க, முயற்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் சம்பாதியுங்கள்; சாப்பிடுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் இறைவனை நினைந்து சம்பாதியுங்கள். இறைவனை நினைந்து சாப்பிடுங்கள். இரண்டுக்கும் நடுவில் இறைவனை நினைந்து சம்பாதிப்பதில் பாதியைக் கொடுத்துவிடுங்கள். பின்பு இறைவனை நினைந்து அமைதியாக இருங்கள். ஒவ்வொரு நாளும் இதுவே. செயலாக இருங்கள்” என்று வயிற்றைப் படைத்துவிட்டு, வயிற்றுக்காகவே வாழ்நாளைச் செலவிட்டுக் கொண்டிருக் கிற நமக்கு உபதேசிக்கிறார். இறைவன் திருவருளும் அதனால் பேரின்பமும் கிடைப்பதற்குரிய எளிய வழியைச் சொல்லித் தருகிறார் அருணகிரியார்.
பொருபிடி யும்களி றும்விளை
யாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல! சண்முக
வா! எனச் சாற்றிநித்தம
இருபிடி சோறுகொண் டிட்டுண்
டிரும்;வினை யோம்இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது
மாய உடம்பிதுவே.
[‘மோதுகின்ற பெண் யானையும்ஆண் யானையும் விளையாடுகின்ற காட்டையுடைய தினைப்புனத்தில் இருந்த சிறிய மான் ஈன்ற பெண் யானையைப் போன்ற வள்ளிநாயகியின் தலைவனே! ஆறுமுகனே!’ என்று சொல்லி நாள்தோறும் இரண்டு பிடி சோறு ஈட்டி, ஒரு பிடி பசித்தவர்களுக்கு அளித்து, எஞ்சிய ஒரு பிடியை நீங்கள் உண்டு அமைதியாக இருங்கள். இரு வினைகளையும் உடைய நாம் இறந்து போனால் மாயமாக மறைந்து போகும் உடம்பாகிய இது ஒரு பிடி சாம்பரேனும் காணாது. ஆதலின் இதனைப் போற்றுவதோடு நில்லாமல் இது உள்ள போதே அறம் செய்யத் தலைப்படுங்கள்.
பொரு-மோதும். புனம்-தினைக் கொல்லை. காவலன்-தலைவன் இட்டு-பிறருக்குக் கொடுத்து. இரும்-கவலையற்று இருங்கள். இருவினை. யோம்’ என்பது ஒரு பாடம். வினையோம்-இருவினைகளையுடைய நாம் தமக்கும் அதுவே கதி என்பாரைப் போல இப்படிச் சொல்கிறார். வினை யோம்: உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. காணாது – எஞ்சாது. மாயம்- நிலையாமை.]
இது கந்தர் அலங்காரத்தில் ஐம்பத்தேழாவது திருப் பாடல்.