மூன்றும் நான்கும்
நமக்கு மூன்று நிலை தெரியும். சம்பாதிப்பது, சாப்பிடுவது, சாப்பிட்டுவிட்டு, “ஐயோ செலவாகிவிட்டதே! நாளைக்கு என்ன செய்வது?” என்று பின்பு கவலைப்பட்டு உழல்வது ஆக இருக்கிறோம். நம்மைப் பார்த்து அருணகிரியார் நான்கு நிலைகளை விளக்குகிறார். “சம்பாதியுங்கள்; பிறருக்குக் கொடுங்கள்; நீங்களும் சாப்பிடுங்கள்; அமைதியாக இருங்கள்; இந்த நான்கு காரியங்களையும் இறைவனை நினைத்தே செய்து கொண்டிருங்கள்” என்று வயிறு படைத்தவர்களுக்கு வழி காட்டுகிறார்.
கையில் பணம் இல்லாதபோது நமக்கு அமைதி வருவது இல்லை. இறைவனைப் பற்றிய நினைப்பும் வருவது இல்லை. பிறரிடம் கோபந்தான் விளைகிறது. “இறைவன் அருளாலே சம்பாதித்தோம்; பிறருக்கும் கொடுத்தோம்; நாமும் சாப்பிட்டோம்; இப்போது ஒன்றும் இல்லாவிட்டால் என்ன? மறுபடியும் சம்பாதிக்கலாம். முன்பு பொருளைக் கொடுத்த இறைவனே பின்பும் பொருளைக் கொடுக்காமல் போய்விடுவானா?” என்கிற நம்பிக்கை உண்டானால் கோபம் விளையாது.
சம்பாதித்துப் பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்டுவிட்ட பிறகு ஒன்றும் இல்லாத நிலையில் அமைதியாக இறைவனை நினைந்தால் அப்போதுதான் இன்பம் உண்டாகும். அமைதியான வாழ்வு இந்த நான்கு நிலைகளில் அடங்கி விடுகிறது. அதற்கு இறைவன் நினைவு துணையாக இருக்கிறது. எந்த இறைவனுடைய நினைவு வேண்டும்? அருணகிரியார் தம்முடைய சொந்த அநுபவத்தைச் சொல்கிறார்.
நாம் ஓரிடத்திற்குப் போகிறோம்; அங்கு உள்ளவர்கள் நம்மைக் கோயிலுக்கு அழைத்துப் போனால் எந்தக் கோயிலுக்கு அழைத்துப்போவார்கள்? அவர்களுடைய பேட்டையில் உள்ள கோயிலுக்கு, அவர்கள் அடிக்கடி போய்வருகிற கோயி லுக்கு நம்மை அழைத்துப் போவார்கள். அதனால் மற்ற இடங்களில் கோயில் இல்லை என்பது அன்று. அருணகிரிநாதர் முருகப்பெருமானின் திருவருளினால் எல்லா விதமான இன்பங்களையும் பெற்று, பிரபஞ்சச் சேற்றைக் கழித்து உய்வு பெற்றவர். ஆதலால் இங்கே முருகப் பெருமானை நினைக்கச் சொல்கிறார். அதனால் மற்றத் தெய்வங்களை நினைக்கக் கூடாது என்பது பொருள் அல்ல. தெய்வத்தை நம்பி வாழ வேண்டும் என்ற அடிப்படையான கருத்தை முருகன்மேல் சார்த்திச் சொல்கிறார்.
காட்டு நிகழ்ச்சி
முருகனை நினைக்கச் சொல்லும்போது அவனை வள்ளி நாயகனாகவும், ஆறுமுகப் பெருமானாகவும் நமக்குக் காட்டுகிறார். வள்ளி கல்யாணத்தைக் காட்டிலே நிகழ்ந்த காட்சியாகச் சித்திரிக்கிறார்.
பொரு பிடியும் களிறும் விளையாடும்
புனச்சிறுமான்
தருபிடி காவல!
வள்ளிநாயகி வாழ்ந்துகொண்டிருந்த இடம் காடு. அங்கே யானைகள் இருந்தன. தனக்கு முன்பே தேவ யானை ஒரு மனையாட்டியாக வாய்த்தும், எம்பெருமான் காட்டிலுள்ள வள்ளி என்னும் பெண் யானையைத் தேடிச் சென்றான். வள்ளிநாயகி திருமால் அம்சமான முனிவருக்கும் திருமகளின் அம்சமான மானுக்கும் பிறந்தவள் என்பதை முன்பே சொல்லி இருக்கிறேன். காட்டில் லட்சுமி அம்சமுடைய மான், குழந்தையை வள்ளிக்கிழங்குக் கொடியருகில் ஈன்றுவிட்டுப் போயிற்று; அதனால் அவளுக்கு வள்ளி என்ற பெயர் அமைந்தது. மான் வயிற்றில் பிறந்த வள்ளி காட்டு யானைகளோடு தானும் ஒரு பெண் யானையாக மிடுக்கோடும் செருக்கோடும் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
பொரு பிடியும் களிறும் விளையாடும்
அந்தக் காட்டில் நடந்த அழகான காட்சியை அருண கிரியார் தம்முடைய கற்பனையால் படம் பிடித்துக் காட்டுகிறார். புனத்தில் திரிந்து வாழ்ந்த சிறு மான் ஒன்று ஈன்ற பெண்மானாகிய வள்ளி அக்காட்டில் ஒரு பிடிபோல், பெண் மானையைப் போலச் சுற்றிக்கொண்டிருந்தாள். ஆண் யானை போல முருகன் வந்தான். பெண் யானையைப்போல் இருந்தவள், ஆண் யானையைப் போல வந்தவனோடு சேர்ந்து வாழ வேண்டாமா? “என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்” என்று முருகன் கேட்டான். அவள் சண்டை போட்டாள்: சீறி விழுந்தாள். முருகன் அதைப் பொருட்படுத்தாமல் குழைந்து குழைந்து கெஞ்சினான். “போடா. மூடா வேடா!” எனச் சினந்து அவள் சண்டை போட்டதை எல்லாம் அவன் விளையாட்டாக எண்ணி மகிழ்ந்தான். ‘அவள் பொருகிறாளே’ என்று அவனும் அவளோடு பொரவில்லை. அதை ஓர் விளையாட்டாக நினைந்து, அவளைக் கெஞ்சிக் கெஞ்சிச் சுற்றி வந்தான்; அப்புறம் வசப்பட்டு விட்டாள். ஆண்டவன் அவளை மணந்து கொண்டான். இது அந்தக் காட்டுக்கே சம்பிரதாயம் போல் இருக்கிறது. எப்படி? அது,
பொரு பிடியும் களிறும் விளையாடும் புனம்.
பிடி என்றால் பெண் யானை. பிடி என்ன செய்கிறது? பொருகிறது; சண்டை போடுகிறது; மோதுகிறது. பெண் யானை தன்னோடு மோதிச் சண்டை போடும்போது களிறு என்ன செய்கிறது? அது சண்டை போட்டால் இதுவும் சண்டை போடத்தானே வேண்டும்? ஆனால் ஆண் யானை அதை விளையாட்டாக நினைத்துத் திரும்பப் பொராமல் இருக்கிறது.
குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ளுகிறோம். அது உதைக்கிறது; உடனே நாமும் அதை உதைக்கிறோமா? அது நம் முகத்தில் ‘தூ, தூ’ என்று துப்புகிறது. திருப்பி நாமும் அதன் முகத்தில் துப்புகிறோமா? இல்லையே! அது நமக்கு விளையாட்டாக இருக்கிறது. உதைக்கும் காலை முத்தமிடு கிறோம். அது துப்பிய எச்சிலைத் துடைத்துக் கொண்டே சிரித்து அதனை முத்தமிடுகிறோம்.
இப்படி அந்தக் காட்டில் ஒரு பக்கத்தில் மான் வயிற்றில் பிறந்த வள்ளியாகிய பிடி. முருகப்பெருமானாகிய களிற்றோடு பொருகிறது. சினத்தால் சொற்களை அள்ளி வீசிச் சண்டை போடுகிறது. அதை அவன் இன்பமாக எண்ணி, அவளைக் கோபித்துக் கொள்ளாமல், “உன்னுடைய கோபச் சொற்களே இனிமையாக இருக் கின்றனவே! இன்னும் கொஞ்சம் வையமாட்டாயா?” என்று விளையாடுகிறான்.
மற்றொரு பக்கத்தில் பெண் யானை ஒன்று ஆண் யானையை மோதுகிறது; பொருகிறது. அந்த ஆண் யானை அதை இன்பமாக எண்ணி விளையாடுகிறது: “சீ, சீ! ஆண் யானைக்கு வீரம் இல்லை போலிருக்கிறது? ஆண் யானையைப் போல வந்தவனுக்குங் கூடப் பெண் யானையைப்போலப் பொருகிற வேடிச்சியிடம் பயமா? இவனுக்கு வீரம் இல்லை” என்று சொல்லலாமா? இப்படிப் பொருவது. சண்டை போடுவது, விளையாட்டு வகையைச் சார்ந்தது. பார்ப்பதற்கு என்னவோ பிடி பொருவதாகத் தோன்றினாலும் அது ஊடலின் விளைவு.
தோற்றவர் வெல்லுதல்
உலகத்தில் வாழ்கிற நம்முடைய குடும்பங்களில் இந்தச் சண்டை நாடகங்கள் எத்தனை நடக்கின்றன! அலுவலகத்திலிருந்து கொஞ்ச நேரம் கழித்து வருகிறார் வீட்டுக்காரர். அவ்வளவுதான்! அம்மா காளியாகக் காட்சி அளிக்கிறாள். உள்ளே நுழையும்போதே குழந்தையிடம் தம்மைப் பற்றிக் காரசாரமாகத் தாக்கிப் பேசுவது கேட்கிறது. “போடா, இந்தக் காபியைக் கொண்டு போய் உன் அப்பாவிடம் கொடு” என்று தான் வராமலேயே பிள்ளையை அனுப்புகிறாள். பிள்ளையாண்டான் என்ன நினைக்கக்கூடும்?” ‘அப்பா பயங்கொள்ளி போலிருக்கிறது! இத்தனை பேசுகிறாள் அம்மா; இவருக்கு ரோசம் இருந்தால் இதைப் பொறுத்துக்கொண்டு சும்மா இருப்பாரா?’ என்று நினைக்கலாம்.
எவனொருவன் அந்தக் கோபத்தையும் சண்டையையும் உண்மையாக நினைத்துத் தன் மனையாட்டியிடம் தானும் கோபித்துச் சண்டைக்குப் போய்விடுகிறானோ அவன் காதலின்பத்தை இழந்துவிடுகிறான். வள்ளுவர் சொல்கிறார்:
“ஊடலில் தோற்றவர் வென்றார்: அதுமன்னும்
கூடலில் காணப் படும்.”
உண்மைக் காதல் உடைய பெண்கள் கோபமாக எதிர்த்து ஊடும்போது அவர்களை எதிர்த்துத் தாமும் சண்டைக்குப் போகாமல் அவர்களை எதிர்க்க ஆற்றாதவரைப் போலத் தாழ்ந்து போகிறவர்கள். அந்தச் சமயத்தில் தோற்றவர்களைப் போல இருந்தாலும் அவர்களே வெற்றியை அடைவார்கள்’ என்கிறார் வள்ளுவர். வெற்றி எப்போது தெரிகிறது?
“அது மன்னும் கூடலில் காணப் படும்“
என்று சொல்லுகிறார்.
முருகப் பெருமான் எல்லோருக்குமே எல்லாவற்றையும் சொல்லித் தருகிறவன். களவு கற்பு என்பனவற்றைத் தன் வாழ்விலேயே காட்டி நாடகம் ஆடினவன். வைதாரையும் வாழ வைக்கின்ற பெருமானுக்கு இந்த ரகசியம் சொல்லித் தரவா வேண்டும்? அவன் வள்ளிநாயகி பொருவதை விளையாட்டாக எண்ணி மகிழ்ந்தான். காட்டிலே உள்ள யானைகளுக்குங் கூட இது தெரியுமே! பிடி பொருகிறது; களிறு திரும்ப அதோடு மோதாமல் விளையாடுகிறது. பொருகிற பிடியோடு களிறு விளையாடும் புனம் அது.
இந்தக் காட்டில் மான் வயிற்றிலே பிறந்த வள்ளி ஒரு பெண் யானையைப் போல உலாவிக்கொண்டிருந்தாள். ஆண்- யானை போல வந்த முருகன், சண்டையிலே தோற்று, அதனாலேயே வென்று அவளுடைய காதலன் ஆனான்.. முதலிலே சண்டைபோல ஆரம்பித்துப் பின்னர் விளையாட்டாக, இன்பமாக முடிகிறது அந்தக் கதை.
போராட்டத்தில் இன்பம் காணுதல்
மனிதர்களுடைய வாழ்க்கையே ஒரு போராட்டந் தானே? உத்தியோகம் தேடுவது ஒரு போராட்டம். சம்பாதிப்பது ஒரு போராட்டம். குடும்பம் நடத்துவது ஒரு போராட்டம். அன்றாடம் சாப்பிடுவதே ஒரு போராட்டம். இந்தப் போராட்டங்களை எல்லாம் எவனொருவன் விளையாட்டாகக் கருதுகிறானோ அவனுக்கு அவைகளே இன்பமாக இருக்கும், இதை அந்தப் புனத்தில் இருக்கும் களிறு சொல்லித் தருகிறது.
சண்முகன்
வள்ளி நாயகனைக் கண்டுகொள்ள ஏதாவது அடையாளம் உண்டா? அவன் ஆறுமுகப் பெருமான்; சண்முகன். நமக்கு ஆறுதல் அளிக்கும் அவனுடைய ஆறு முகங்களைக் கொண்டே அவனை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
சண்முகவா!
என்று சொல்லுங்கள் என்கிறார்.
பொரு பிடியும் களிறும் விளையாடும்
புனச்சிறுமான்
தருபிடி காவல! சண்முகவா! எனச்
சாற்றிநித்தம்
இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரும்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் கழியுமானால் வாழ்வு முழுவதும் இன்பமயமாகி விடும். நாள் பல சேர்ந்து மாதம் ஆகின்றன; மாதங்கள் ஆண்டு ஆகின்றன; ஆண்டுகள் வாழ்வு ஆகின்றன.