தனக்கு மிஞ்சித் தான தர்மம்

“நீ சம்பாதிப்பதைப் பிறருக்குக் கொடுத்துவிடு. நீ சாப்பிடாதே” என்று சொன்னால் உலகம் அந்த உபதேசத்தை ஏற்காது. “தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்று வழங்குகிற பழமொழியைச் சொல்லி எத்தனை பேர், “எனக்குக் கண்டு மிஞ்சினால் அல்லவா ஐயா உனக்குக் கொடுக்க?” என்று சொல்லிப் பிச்சைக்காரர்களை விரட்டுகிறார்கள்? “எனக்கு மிஞ்சிப் போய்விட்டான்’” என்றால் “என்னைக் காட்டிலும் அவன் உயர்ந்துவிட்டான்” என்று பொருள். தனக்கு மிஞ்சித் தான தர்மம் என்றால் தன்னைக் காட்டிலும் உயர்வாக இருப்பது தான தர்மம் என்று கொள்ள வேண்டும். ஒரு பிடிதான் இருக்கிறது. நமக்குப் பசிக்கிறது. அப்போது வேறு ஒருவன் வந்து கேட்கிறான் என்றால் அவனுக்கு அதைக் கொடுத்துவிட வேண்டும். தன்னையும் மிஞ்சியது தர்மம். மதுரை மாநகரின் பெருமையைப் பற்றிச் சொல்ல வருகிற பரஞ்சோதி முனிவர்,

தம்மை மாறியும் புரிவது தருமம்அந் நாடு

என்று பேசுகிறார். மாறுதல் – விற்றல். தம்மை விலைக்கு. விற்றாவது தர்மத்தைக் காப்பாற்றுகிறது அந்நாடு என்கிறார். தர்மபுத்திரர் அதைச் செய்தார். அரிச்சந்திரன் அதைச் செய்தான்.

நமக்கு இல்லாவிட்டாலும் அவனுக்கு இட வேண்டும் என்கிற நினைப்பு உடையாருக்கு மனம் தீய வழியில் செல்லாது. அந்த நிலைக்கு ஏற்ற மனப் பக்குவம் அடையாத நம்மைப் பார்த்து அருணகிரியார், “சாப்பிட வேண்டாம், சம்பாதிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இறைவனை நினைந்து இரண்டு மடங்கு சம்பாதியுங்கள். ஒரு மடங்கு இடுங்கள். ஒரு மடங்கு சாப்பிடுங்கள். பிறகு செய்ய வேண்டியவற்றைச் செய்துவிட்டோம் என்று அமைதியாக இருங்கள்” என்று உபதேசம் செய்கிறார்.

தருபிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி நித்தம்
இருபிடி சோறு கொண்டு, இட்டு உண்டு இரும்.

உண்ணும்போது இறைவன் நினைவு

நாம் எல்லோரும் சம்பாதிக்கிறோம்: சாப்பிடுகிறோம். “நான் சம்பாதிக்கிறேன்: நான் சாப்பிடுகிறேன்” என்கிற நினைவோடு இவற்றைச் செய்கிறோம். நம்முடைய பெரியவர் கள் உண்ணும்போது, “கோவிந்தா, மகாதேவா, முருகா” என்று ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடுவார்கள். உண்ண வாயும், எடுத்துப் போடக் கையும், இலையில் அன்னமும் கொடுத்தவன் இறைவன் என்கிற நினைவோடு அப்படிச் செய்வார்கள் என்பது மட்டும் அன்று: மற்றொரு பயனும் உண்டு. உண்ணும்போது எந்த உணர்ச்சியோடு உண்ணுகிறோமோ அந்த உணர்ச்சி உண்ட சோற்றினால் மிகுதியாக விளைகிறது என்பர்.

குழந்தைக்குத் தாய் பால் கொடுக்கும்போது, வீரக் கதைகளை நினைந்து கொடுத்தால் வீர உணர்ச்சி பாலோடு சேர்ந்து குழந்தையிடத்திலே மிகுதியாக உண்டாகும் என்பார்கள். சாப்பிடும்போது காதில் எது விழுந்தாலும் அது நன்றாக மனத்தில் பதியும். இதை நம்முடைய சொந்த அநுபவத்தில் பார்க்கலாம். நம்மிடமிருந்து ஒன்றை வேண்டிப் பெறுவதற்கு, நம்முடைய மனையாட்டி மற்றச் சமயத்தில் சொல்லிப் பெறுவதைக் காட்டிலும், சாப்பிடும் போது சுவைமிக்க உணவுப் பொருள்களைப் படைத்து விட்டு, இனிமையான சொல்லாலே தனக்கு வேண்டிய வற்றை மெள்ளச் சொல்லுகிறாள். உடனே, “அதெற் கென்ன? அதை வாங்கிக்கொள்” என்று சொல்லி விடுகிறோம். இப்படி உண்ணுகிற போது நினைக்கிற ஒன்று நிச்சயமாக வாழ்வில் பதிவை உண்டாக்கும். ஆகையால் நாம் சாப்பிடும்போது இறைவனை நினைந்து சாப்பிட வேண் டும். அப்படிச் சாப்பிட்டால் அந்தச் சோறு நம் உடம்பில் உறைக்கும் போது நிச்சயமாக உள்ளத்திலும் இறைவனுடைய நினைப்பு உறைக்கும்.

அப்பர் சுவாமிகள் இறைவனைப் பார்த்துச் சொல்கிறார். “அப்பா, உன்னை நான் எவ்வாறு புகழ்வேன்! இவ் வுலகிலே எனக்கு இன்பத்தைத் தருகிறது பொன் என்றால் அந்தப் பொன்னாகவே நீ இருக்கிறாய் : இன்பத்தைக் கொடுப்பது மணி என்றால் அந்த மணியாகவே நீ இருக்கிறாய்; இன்பத்தைத் தருகிற எல்லாப் பொருளாகவும் நீ இருப்பதோடு அவற்றை அநுபவிக்கும் போது போகமாகவும் நீ விளங்குகிறாயே! உன் பெருமையை நான் எவ்வாறு சொல் வேன்!” என்கிறார்.

“பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னின் அல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏந்து கேனே?”

இப்படி அப்பர் சுவாமிகளைப்போல நாமும் சாப்பிடும் போதெல்லாம் இறைவனை நினைக்க வேண்டாமா?

”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்று வள்ளுவர் பேசுகிறார். செய்த நன்றியைக் கொல்லாமல் இருக்க வேண்டுமானால் பொருளை ஈட்டும் போதும் பொருளை ஈட்டுவதற்குரிய கருவி காரணங்களைக் குறை வில்லாமல் கொடுத்த இறைவனை நினைக்கவேண்டும். ஈட்டிய பொருளைப் பிறருக்கு இட்டு உண்ணுகிறபோதும் இறைவனை நினைக்க வேண்டும்.

பூசை பண்ணுகிறார்

பழைய காலத்தில் யாராவது ஒருவர் வீட்டுக்குச் சென்றால் அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அப்போது அவருடைய வீட்டுக்காரி, “ஐயா பூசை பண்ணுகிறார். கொஞ்சம் உட்கார்ந்து இருங்கள்; வருவார்” என்று சொல்லிப் போவாள். ‘சாப்பிடுகிறார்; பூசை பண்ணுவ தாவது?’ என்று நமக்குத் தோன்றலாம். சாப்பிடுவதாவது என்ன? வெளியே இருக்கிற இறைவனுக்கு மலராலும் இலையாலும் பூசை பண்ணிவிட்டு, இறைவன் நாமத்தைச் சொல்லிக்கொண்டே அவர்கள் ஒவ்வொரு பிடியாகச் சாப்பிடுகிறார்கள். வெளியில் இருக்கும் இறைவன் உள்ளேயும் இல்லையா? வெளியில் உள்ள இறைவனுக்கு மலரினால் அர்ச்சனை பண்ணுவது போல, உள்ளே இருக்கிற இறைவனுக்கு அன்னத்தினால் அர்ச்சனை செய்கிற செயலாக அது அமைவதால், சாப்பிடும் போது கூடப் பூசை பண்ணுகிறார் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. இப்படிப் பெரியவர்கள் சாப்பிட்டாலும், மூச்சு விட்டாலும், நடந்தாலும் ஓடினாலும் இறைவனையே நினைத்தார்கள்.

“செப்புவதெல் லாஞ்செபம்நான் சிந்திப்ப தெல்லாம்நின்
ஒப்பில் தியானம்என ஓர்ந்தேன் பராபரமே!”

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய்பராபரமே

என்று பேசுவார் தாயுமானவர். அவரைப் போல எந்தச் செயலைச் செய்தாலும் இறைவனை நினைந்தே செய்கிற பெரு மக்கள் பலர் இருந்தார்கள் நம் நாட்டில். இப்போது சம்பாதிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் மாத்திரம் தெரிந்து கொண்டிருக்கிற நம்மைப் பார்த்து, “சம்பாதிக்காதே, சாப்பிடாதே” என்று சொல்லாமல், “நன்றாகச் சம்பாதியுங்கள்; இரு மடங்கு சம்பாதியுங்கள்; இறைவனை நினைந்து இரண்டு மடங்கு சம்பாதியுங்கள்; இறைவனை நினைந்து ஒரு மடங்கு கொடுத்து விடுங்கள்; இன்னொரு மடங்கை இறைவனை நினைந்து நீங்கள் உண்ணுங்கள். பின் அவனை நினைந்து சுகமாக இருங்கள்” என்று உபதேசம் செய்கிறார் அருணகிரியார்.

தருபிடி காவல! சண்முகவா/ எனச் சாற்றி
நித்தம்
இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரும்.

சாற்றிச் சோறு கொண்டு, சாற்றி இட்டு, சாற்றி உண்டு சாற்றி இரும் என்று ஒவ்வொன்றோடும் கூட்டவேண்டும்.

“நாம் சம்பாதிக்கிறோம்; நாம் சாப்பிட்டுவிட்டு மீதியைத் தானே யாருக்காவது கொடுக்க வேண்டும்?” என்று நினைக்கக்கூடாது. சம்பாதிக்க வேண்டும். அதில் சரி பாதியைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியதைத்தான் சாப்பிட வேண்டும். ‘இட்டு’ என்று சொல்லிவிட்டுப் பின்பு தான் ‘உண்டு’ என்கிறார். ஒளவைப்பாட்டியும், “ஐயம் இட்டுண்” என்று இடுதலை உண்ணுவதற்கு முன்னேவைத்துச் சொன்னாள்.

கொடுக்கும்போது இறைவன் நினைவு

“சம்பாதிக்கும்போது இறைவனை நினைந்து சம்பாதிக்கிறேன். சாப்பிடும் போதும் இறைவனை நினைந்து சாப்பிடு கிறேன். கொடுக்கும் போதும் கூடவா இறைவனை நினைக்க வேண்டும்?” என்றால் கொடுக்கிற போதும், “தருபிடி காவல, சண்முகவா” என்று நினைந்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் கொடுப்பதாகிய செயலை அடுத்தே நமக்கு ஆணவம் விளைந்துவிடும்; ‘நான் கொடுக்கிறேன்’ என்ற நினைவு இன்றி, ‘அவன் கொடுக்கிறான்; எல்லாம் அவனுடைய பொருள். அவன் என்னிடம் கொடுத்து வைத்தான்; இப்போது வாங்கிப்போக ஆளை அனுப்பியிருக்கிறான். அவனு டைய பொருளை அவன் அனுப்பிய ஆளிடம் கொடுக்கும் கருவி நாம்’ என்று நினைந்து கொடுக்க வேண்டும்.

முன்பு ஓர் இடத்திலேயும்

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி,
வறிஞர்க்குஎன்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்

என்று அலங்காரத்தில வந்ததைப் பார்த்தோம். நான் என்கிற அகங்காரம் மாற, ‘அவன் கொடுக்கிறான்’ என்கிற நினைவும், ‘என்னுடைய பொருளைக் கொடுக்கிறேன்’ என்கிற மமகாரம் சிதைவு பெற, அவனுடைய பொருளைக் கொடுக்கிறேன்’ என்கிற நினைவும் இருக்கவேண்டும். அதற்காகவே “வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்திக் கொடுக்க வேண்டும்” என்று அங்கேயும் சொன்னார்.

சிலர் கோயிலுக்குச் சென்றால் நாமம் நட்சத்திரம் எல்லாம் சொல்லி ஆண்டவனுக்குத் தம் பேரில் அருச்சனை செய்யச் சொல்வார்கள். வேறு சிலர், “ஆண்டவன் பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள்” என்று குருக்களிடம் சொல்வார்கள். இதற்குக் காரணம் என்ன? ‘இறைவனை வழிபடுவதே நாம் நம்மைப் பற்றிய நினைவை மறக்கத்தானே? அப்படியிருக்க ஆலயத்திலும் நம்முடைய நினைவு தானா முந்த வேண்டும்? எல்லாம் இறைவன் செயல்தான்; இறைவன் பெயருக்கே பண்ணட்டும்’ என்கிற நினைப்பே காரணம்.

அறம் செய்வதனால் மனிதனுக்கு ஏற்படுவது புகழ்.

ஈவார்மேல் நிற்கும் புகழ்

என்று வள்ளுவர் சொல்கிறார். உலகத்தில் எல்லாப் புகழையும் விடக் கொடுப்பார் மேல் சாருகிற புகழ்தான் சிறந்த புகழ். இந்தப் புகழ் அகங்காரத்தை விளைவிப்பதற்கு வித்தாகப் போய்விட்டால் ஆன்ம இன்பம் கிடையாது.

மாலையைக் கழற்றி வைத்தல்

நம்மைப் பேச அழைக்கிறார்கள். நாம் பேசுகிறோம். நம்மைப் பாராட்டி மாலை இடுவது கூட்டத்தை அமைத்த நிர்வாகிகளுடைய கடமையாக, தங்கள் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளும் செயலாக, இருக்கிறது. ‘ஆகா! நம்மைப் பாராட்டி மாலை சூட்டினார்கள்’ என்று நாம் நினைத்து அந்த மாலையை அப்படியே வைத்துக் கொண்டா இருக்கிறோம்? உடனே கழற்றிப் பக்கத்தில் வைத்து விடுகிறோம். இதைப்பற்றிய ரசமான நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது.

திருப்புகழ் மணி அவர்கள் ஒரு கூட்டத்தில் தலைமை வகித்தார். பேச வந்த ஒருவர் தமக்கு மாலை போட்டவுடன் கழற்றி வைக்கவில்லை: அதோடு அந்த வழக்கத்தைக் கண்டிக்கும் முறையில் பேசினார். “நல்ல மாலையைப் பாராட்டிப் போடுகிறார்கள். அந்த மாலையை உடனே எதற்காகக் கழற்ற வேண்டும்? அது அவமதிப்பு ஆகாதா?” என்று சொன்னார். அதற்குத் திருப்புகழ் மணி பதில் கொடுத்தார். “அவர்கள் தங்களுடைய மரியாதையைக் காட்ட மாலை போட்டார்கள். அவர்கள் மரியாதையை நான் என் தலையை வளைத்து ஏற்றுக் கொண்டேன். அந்த மரியாதைக்கு உண்மையிலேயே தகுதி உடையவன் நான் அல்ல என்கிற நினைவு வந்தது. உடனே கழற்றி வைத்து விட்டேன்’ என்றார்கள்

புகழும் செருக்கும்

தர்மம் செய்யும்போது பெற்றவர்கள் தர்மம் செய்வானைப் புகழ்வார்கள். அது அவர்களுடைய நன்றியுணர்ச்சியைக் காட்டுகிறது.ஆனால் அந்தப் புகழை அப்படியே நாம் ஏற்றுக்கொண்டு செருக்கினால் தலை தருக்கி அலையலாமா? உடனே, “எம்பெருமானே, இந்தப் புகழ் உன்னுடையது அல்லவா? பிறருக்குக் கொடுக்க என்னிடம் பொருளை வைத்தாய்; கொடுத்த பொருளை வாங்கிப் போகத் தக்காரையும் அனுப்பினாய். அவர்கள் என்னைப் புகழ்கிறார்கள். உன் ஆணைக்கு நான் கருவியாகத்தான் இருந்தேன் என்பது எனக்கு அல்லவா தெரியும்? “இந்தப் புகழை நீ ஏற்றுக்கொள் அப்பா’ என்று இறைவனிடம் தள்ளி விட்டால் புகழ் வருவதனாலே அகங்காரம் விளையாது. இவற்றையெல்லாம் தம்முடைய வாழ்க்கை அநுபவத்தில் கண்டிருக்க மாட்டாரா அருணகிரியார்? அதனால் தான் நம்மிடம் செருக்கு வராமல் அருக்க, “இறைவனைச் சம்பாதிக்கிற போதும் நினையுங்கள்; கொடுக்கிற போதும் நினையுங்கள்” என்று உபதேசம் செய்கிறார்.