பிடி சாம்பலும் இல்லை
பல காலமாகப் பல பல சுவையுள்ள பண்டங்களைப் போட்டு வளர்த்த உடம்பு கடைசியில் எப்படி ஆகிறது? வறட்டிச் சாம்பல், விறகுச் சாம்பலோடு கூடச் சாம்பலாகி விடுகிறது. இந்த உடம்புச் சாம்பல் நிறைய மலைபோல் இருக்குமா? அஸ்தி கரைக்கும் தினத்தன்று மயானம் சென்று சிதையை விலக்கினால் உடம்புச் சாம்பல் பிடியளவு கிடைப்பதுகூடக் கஷ்டமாக இருக்கிறது. ஒரு பிடி சாம்பலும் காணாத மாய உடம்பு இது.
வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாப்பான இடத்தில் இருக்க வீடு கட்டுகிறோம். கட்டின வீட்டைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளக் வேண்டியதுதான். அந்த வீடு சாசுவதமாகவே இருக்குமா? நிலநடுக்கம் வந்தால் எல்லா வீடுகளும் அப்படியே பொடிப் பொடியாக விழுந்து விடுகின்றன. அந்த வீட்டையே நம்பி வாழ்ந்தால் என்ன செய்வது!
இந்த உடம்பு நமக்கு உரியதுதான். உடம்பைக் கொண்டு தான் வாழ வேண்டும். ஆற்றல் உடையவன் அதை நன்றாக வைத்துக் கொள்வான்.ஆனால் இந்த உடம்பையே நம்பி வாழ்கிற நிலை வந்துவிட்டால், நாளைக்குக் காலன் வந்து இதைச் சாய்த்துவிடுவானே! உடம்புக்குள் உயிர் இருக்கிறது. உடம்பை விட்டு எளிதில் உயிர் வெளிப்படுவதற்கு விரும்பவில்லை. ஆயினும் வெளிப்படாமல் இருப்பதற் குரிய ஆற்றல் அதற்குக் கிடையாதே! உயிரை வெளியே விடாது கட்டி வைத்திருக்கும் ஆற்றல் உடம்புக்குத்தான் உண்டா? தன்னைப் பாதுகாத்துக் கொள்கிற தன்மை இல்லாத உயிருக்குப் பாதுகாப்பாக நாம் உடம்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். உயிர் போன பிறகு இந்த உடம்பினால் என்ன பயன்?
பிராணிகளுடைய மாமிசத்தைச் சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் மனித உடம்பின் மாமிசத்தை யாரும் சாப்பிடுவதில்லை.
“புலையனும் விரும்பாதஇப் புன்புலால் யாக்கை” என்று சொல்வர். மனிதனுடைய ஊன் யாருக்கும் ஊணாகிறது இல்லை. அதனால்தான் இறந்துவிட்டால் இந்த உடம்பை எரித்துவிடுகிறார்கள். எரித்துவிட்ட பிறகு ஒரு பிடி சாம்பருங்கூட இந்த உடம்பிலிருந்து கிடைப்பது இல்லை.
ஒரு பிடி சாம்பரும் காணாது
மாய உடம்பிதுவே.
‘நம்முடைய உடம்புதான் ஒரு பிடி சாம்பரும் காணாது; பெரிய அரசர்களுடைய உடம்பானால் அதிக சுகபோக உணவு களை உண்டு வளர்த்த உடம்பாகையால் மலை அளவு சாம்பல் கிடைக்கும்’ என்று நினைக்கலாமா?
பட்டினத்தார் உபதேசம்
“முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னி னம்பலவர் அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றே அறி வாரில்லையே”
என்று பட்டினத்தார் சொல்கிறார்.
பட்டினத்தார் பெரிய மாளிகையில் வாழ்ந்தவர். நிறையச் செல்வத்தைப் பார்த்தவர். நாள்தோறும் பலவகையான பண்டங்களை உண்டு வளர்த்து வரும் இந்த உடம்பு கடைசியில் என்ன ஆகிறது என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டு வார் போல மயானக் கரைக்குச் சென்றார். முதல் நாள் எரிந்த பிணம் மறுநாள் பிடி சாம்பல் கூட இல்லாது போனதைக் கண்டார். ‘சாதாரண மக்களுடைய பிணத்துக் குத்தான் ஒரு பிடி சாம்பல்கூட வராது போலிருக்கிறது’ என்று நினைத்தார். அடுத்த நாள் பெரிய அரசன் ஒருவன் இறந்து போனான். அவன் உடம்பைக் கொண்டுவந்து எரித்து விட்டுப் போனார்கள். அந்த அரசனுடைய உடம்பும் எரிந்து கடைசியில் ஒரு பிடி சாம்பல்கூட இல்லாதுதான் போயிற்று. அதுவும் மயான மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டது. இதைக் கண்டார். பின்புதான்,
“முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும்
முடிவிலொரு
பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு“
என்று அவர் சொல்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
“இதைக் கண்டும் மக்களுக்கு ஞானம் உண்டாகிறதா? மேலும் இவ்வுலக வாழ்க்கையின் சுகத்தை அதிகப்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிரப் பொன்னம்பலத்தில் நட மிடுகிற பெருமானுடைய குஞ்சித பாதத்தைச் சார்ந்து நாமும் உய்வு பெறவேண்டுமென்று நினைக்கிறவர்கள் யாரும் இல்லையே!” என்று வருந்தி ஏங்குகிறார் பட்டினத்துப் பிள்ளையார்.
இந்த உடம்பு முடிவில் அழிந்துபோய் ஒரு பிடி சாம்பரும் இல்லாமல், மண்ணோடு மண்ணாகப் போகும் என்பதை நம்மில் பலர் உணராதவர்கள் அல்ல. “இந்த அறிவு இருப்பதனால் இது வாழும்போதே ஒரு காரியம் செய்யலாம் அல்லவா?” என்று சொல்ல வருகிறார் அருணகிரியார்.
ஈட்டுதலும் இடுதலும்
‘இறைவனை நம்பி வாழ்ந்தால் சாப்பாடு கிடைக்குமா? வையத்தை மறந்து வானத்தைப் பார்த்தால் வாழ முடியுமா?” என்று சில அறிவாளிகள் பேசுவதுண்டு. இறைவன் திருவருளைப் பெற வேண்டுமானால் நீ சாப்பிடாதே; சம்பாதிக்காதே; சாப்பிடாமல் பட்டினி கிட’, என்று யாரும் சொல்வதில்லை.
மிகவும் சாதாரண நிலையில் இருக்கும் நமக்கு உபதேசம் செய்ய வருகிற அருணகிரியார், “நன்றாக இரு மடங்கு சம்பாதி; சாப்பிட்டுச் சுகமாக வாழ்ந்துகொண்டிரு” என்று தான் இந்தப் பாட்டில் உபதேசம் செய்கிறார். ஆனால், சம்பாதிப்பது, சாப்பிடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் ஒன்று இருக்கவேண்டும். ஆண்டவனை மறந்தவர்கள், சம்பாதிப்பதற்கு முயற்சி செய்யும்போது பொருள் ஈட்ட வேண்டும் என்கிற வெறியில் தப்பான வழியில் சென்று ஈட்டுவார்கள். பிறகு, ‘ஈட்டிய பொருளைப் பிறர் கண்டுவிட்டால் என்ன செய்வது? திருடன் கொண்டுபோய் விட்டால், என்ன பண்ணுவது?’ என்ற அச்சத்தினால் எப்போதும் செத்துக் கொண்டிருப்பார்கள். ஆண்டவனுடைய நினைப்பு உடையவர்கள் அப்படிப்பட்ட மறநெறியில், தப்பான வழியில், பொருளை ஈட்டமாட்டார்கள். ஈட்டிய பொருளைப் பாதுகாக்க வேண்டுமே என்று அஞ்சவும் மாட்டார்கள்.
ஆகவே, “நீங்கள் ஒரு பங்குக்கு இரண்டு பங்காக இறைவனை நினைந்து பொருளை ஈட்டுங்கள்; இறைவனை நினைந்து சாப்பிடுங்கள்; இந்த இரண்டுக்கும் இடையில் இறைவனை நினைந்து கொடுக்கவும் கொடுங்கள். நன்றாக இறைவனை நினைந்து ஈட்டி, இறைவனை நினைந்து கொடுத்து இறைவனை நினைந்து சாப்பிட்டு, இறைவனை நினைந்து சுகமாக அமைதியாக இருங்கள்” என்று அருணகிரியார் சொல்கிறார். நாம் சுகமாகவும், அமைதியாகவும் சம்பாதித்துச் சாப்பிட்டு இருக்கத்தானே விரும்புகிறோம்?
இறைவன் நினைவினால் வரும் நலம்
இறைவனை நினைந்து வாழாதவர்களுக்கு வாழ்வில் துக்கம், அவநம்பிக்கை, சோர்வு எல்லாம் உண்டாகின்றன.
ஒரு மூட்டை அரிசி வாங்கிப் போடுகிறோம். ‘உடம்பு நிலையாமையை உணராது வாங்கிப் போட்டேன்’ என்று நினைக்கலாமா? நாம் உயிரோடு இருந்தால் சாப்பிடுகிறோம்; இல்லாவிட்டால் இன்னொருவன் சாப்பிடுகிறான். இந்த நம்பிக்கையாகிய அடிப்படையில்தான் வாழ்வு வளம் பெறுகிறது.
உடம்புக்குள் நாமாகவா உயிரை வைத்துக் கொண்டோம்? உடம்புக்குள் உயிர் தங்கும் படியாகச் செய்தவன் ஆண்டவன். உண்ண வாயும், கேட்கக் காதும், சுவைக்க நாவும் தந்தவன் அவன். தொழில் செய்யக் கை கொடுத்திருக்கிறான். கண்களுக்குள் விழி கொடுத்து அவற்றை இமையாக இருந்து காப்பாற்றுகிறான். மூச்சுக் காற்றாக இருந்து காப்பாற்றுகிறான். தங்குவதற்கு மண்ணாக, பருக நீராக சுவாசிக்கக் காற்றாக இருப்பவன் அவன்தான். தொழில் செய்ய அறிவாக இருப்பவனும் அவனே ‘என்னுடைய முயற்சியால் நான் வாழவில்லை. அவன் அருளால் அல்லவா வாழ்கிறேன்?’ என்கிற நினைப்பு நமக்கு வருமானால் வாழ்வில் தோன்றும் சோர்வும், அவநம்பிக்கையும் போய்விடும். நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். துன்பம் வந்தாலும், இன்பம் வந்தாலும் கலக்கமில்லா உள்ள உறுதியோடு நிலைத்து நிற்கும் ஆற்றல் உண்டாகும். எந்தத் துன்பமானாலும் சரி, இன்பமானாலும் சரி. கவலை இல்லாமல் இருக்கலாம். கிழக்குக்கும் மேற்குக்கும் வித்தியாசம் இராது. கறுப்புக்கும் சிவப்புக்கும் வேறுபாடு இராது. கசப்புக்கும் இனிப்புக்கும் மனம் ஒன்றாகவே இருக்கும். இந்தச் சமநிலை உள்ளம் படைத்து விட்டவனுக்குத் துன்பம் வந்தால் என்ன? துன்பம், அவனிடத்திலே துன்பத்தை விளைவிப்பதற்குப் பதிலாகத் தானே துன்பத்தை விளைவித்துக்கொள்ளும்.
“இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்“
என்று வள்ளுவர் சொல்கிறார். தமக்குத் துன்பம் வந்து விடுமே என்று துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் அத்துன்பத்திற்குத்தான் துன்பம் விளைவிப்பர். இந்தநிலை, ‘இறைவன் அருளால் நாம் வாழ்கிறோம்; தொழில் படுகிறோம்; சம்பாதிக்கிறோம்; கொடுக்கிறோம்; சம்பாதிப்பதைச் சாப்பிடுகிறோம்’ என்று நினைப்பவர்களுக்கு உண்டாகும்.
இது நமக்கு வரவேண்டும் என்பதற்காசு மிக எளிய வழியை நம்முடைய குருநாதர் இப்பாட்டில் உபதேசிக்கிறார்.
பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்
சிறுமான்
தருபிடி காவல! சண்முகவா!” எனச் சாற்றி,
நித்தம்
இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரும்.
எப்படி ஆண்டவனை நினைக்கவேண்டும்? வள்ளி நாயகனாக ஆறுமுகப் பெருமானாக நினைந்து புகழ வேண்டும். சாற்றி என்ன செய்ய வேண்டும்?
இரு பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரும்.
சோறு என்றால் உண்ணுகிற சோற்றையும் கொள்ளலாம். நுகர்ச்சிக்குரிய எந்தப் பொருளாக இருந்தாலும் அதையும் குறிப்பாகக் கொள்ளலாம். “நீங்கள் கொஞ்சமாகச் சம்பாதிக்க வேண்டாம். உங்கள் அறிவை, உங்கள் ஆற்றலை உபயோகித்து இரண்டுபிடி சோறு சம்பாதியுங்கள்; இரண்டு மடங்கு பொருள்களை ஈட்டுங்கள். பொருபிடி காவல சண்முகவா!’ எனச் சாற்றி நித்தம் இரண்டு மடங்கு சம்பாதியுங்கள். அதை என்ன பண்ணவேண்டும் தெரியுமா? பொரு பிடி காவல, சண்முகவா என இறைவனை நினைந்து ஒரு பிடி சோற்றைப் பிறருக்கு இட்டு, அவனை வாழ்த்தி ஒரு பிடி சோற்றை உண்ணுங்கள். சம்பாதித்தது இரண்டு பிடி: ஒரு பிடி இட்டுவிட்டீர்கள்; ஒரு பிடி உண்டுவிட்டீர்கள். இனிக் கவலைப்பட எதுவும் இல்லை. ஆதலால் பொருபிடி காவல, சண்முகவா என்று சாற்றி இருங்கள்; அமைதியாக இருங்கள்” என்று உபதேசம் செய்கிறார்.
சம்பாதிப்பது இரண்டு பிடி. இடுதல் ஒரு பிடி உண்ணுதல் ஒரு பிடி. கடைசியில் ஒன்றும் இல்லாமையினால் அமைதியாக இருக்கும் நிலை விளைகிறது.