இரு பிடி சோறு

வயிறுடையவர்களுக்கு

“காதுடையவர்கள் எல்லாம் இறைவனுடைய புகழைக் கேட்டு உருகவேண்டும். மற்றக் கவிகளைக் கேளாமல் இருக்க வேண்டும். அதனால் உள்ளமானது பண்பட்டு யமனையும் வெல்லுகிற ஆற்றலைப் பெறுவார்கள்” என்கிற உபதேசத்தைப் போன பாட்டிலே அருணை முனிவர் சொல்லக் கேட்டோம். இந்தப் பாட்டில் வயிறுடைய மக்களுக்கு ஓர் உபதேசம் செய்கிறார். காது இல்லாத செவிடர்கள் இருக்கலாம்; கண் இல்லாத குருடர்கள் இருக்கலாம்; பேச வாய் இல்லாத ஊமைகள் இருக்கலாம். பிற உறுப்புகள் குறைபாடு உடையவராக இருந்தாலும் வயிறு இல்லாத மனிதனைக் காண்பது அரிது. எல்லோருக்கும் வயிறு உண்டு. வேறு தொழில் செய்வதில்லை என்று சோம்பியிருந்தாலும் வயிறு சும்மா இராது. அதற்கு ஏதாவது கொடுக்கத்தான் வேண்டும்.

வயிறுடைய மக்களைப் பபர்த்து, “உங்களுக்குக் காது இருந்தாலும் இறைவன் புகழைச் சொல்லும் கவியைக் கேட்பதற்கு முடியவில்லை என்று நீங்கள் சொல்லலாம். வயிறு இருக்கிறது அல்லவா? வயிற்றுக்கு வேளை வேளைக்குச் சோறு போடுகிறீர்கள் அல்லவா? உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன் கேளுங்கள்” என்பாரைப் போல இந்தப் பாட்டில் பேசுகிறார்.

உணவின் இன்றியமையாமை

மனித சமுதாயத்தில் எல்லாரும் செல்வராக இருக்க முடியாது; எல்லாரும் படித்து ஞானிகளாக இருக்க முடியாது. ஆனால், வயிறு எல்லோருக்கும் இருப்பதால் எல்லோரும் சாப்பிடுகிறவர்களாக இருக்கிறார்கள். உலகத்தில் பிறந்தவர்கள் வயிற்றை நிரப்புவதில் சோம்பல்படுவது கிடையாது. பிச்சை எடுத்தாவது உண்கிறார்கள். பெரிய தவமுனிவர்களும் சிலகாலம் உண்ணாமல் இருந்து விரதம் இருக்கலாமேயொழியப் பின்பு, “எங்கே சோறு கிடைக்கும்?” எனத் தேடவேண்டியிருக்கும்.

துறவியர் நிலை

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி
மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்”

என்று வள்ளுவர் சொல்கிறார். இல்லறத்தான் இல்லறத்தை மேற்கொள்வது தன்னுடைய சுகத்திற்காக மட்டும் அல்ல. வயிறு என்பது துறவிகளுக்கும் இருப்பதால் அவர்களுக்கு வேண்டிய உணவைக் கொடுத்து அவர்களையும் காப்பாற்ற வேண்டும்; “எல்லோரும் துறந்து தவம் செய்யப் புறப்பட்டு விட்டால் துறவிகளுக்கு யார் உணவு தருவார்கள்? அவர்களுக்குச் சோறு கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தால் தான் மற்றவர்களாகிய இல்லறத்தார் தாம் தவம் செய்யாமல் இருக்கிறார்களோ?” என்று வள்ளுவர் கேட்கிறார்

சம்பாதிப்பதற்கு ஆற்றல் இல்லாத குழந்தைகளையும், ஏழை உறவினர்களையும் எப்படி இல்லறத்தான் உணவு கொடுத்துக் காப்பாற்றுகிறானோ அப்படியே கவலை இல்லாத துறவிகளை பற்றை விட்டுப் பரமனின் தியானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கும் ஞானிகளை, அவன் காப்பாற்றக் கடமைப் பட்டிருக்கிறான். தன்னுடைய வயிற்றைப் போலவே துறவிகளுடைய வயிற்றையும் நிரப்பும் காரியத்தை அவன் செய்து வரவேண்டும். அப்போதுதான் துறவியின் துறவறம் ஒழுங்காக நடக்கும்.

துறவிகள் நன்றாக வாழ்ந்தால் உலகம் ஒழுங்காக வாழும் என்று பழங்காலத்தில் நினைத்தே துறவிகளைக் காப்பாற்றினார்கள்: “துறவிகள் அன்னக் காவடிகள். இவர்களால்தான் நாடு பிச்சைக்கார நாடாகிறது” என்று அரசியல்வாதிகள் சொல்ல, துறவிகளுக்குச் சோறு போடாமல் துரத்தி அடிக்கிற காலம் இப்போது வந்து விட்டது. இல்லறத்தான் தன் கடமையை மறந்து விட்டான். துறவி களும் நம்மைப்போல் வயிறு படைத்தவர்கள். ஆதலாலே, ‘நாளைக்கு வேண்டிய உணவுக்கு என்ன செய்வது? எந்த இல்லறத்தானும் சோறுபோட மாட்டானே!’ என்று எண்ணிப் பணம் வைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

“துறவிக்கு எதற்கு ஐயா பணம்? இந்தக் காலத்தில் எந்தச் சாமியார் தாம் பத்துப் பதினைந்து எனப் பணம் முடிச்சுப் போட்டு வைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்? இவர்கள் உண்மைத் துறவிகளா?” என்று சிலர் கேட்கிறார்கள். நம்முடைய பணம் சந்நியாசிகளுக்கும் உரியது என்கிற நினைவு நமக்கு இல்லை. அவர்கள் ஏதாவது வைத்துக் கொண்டிருந்தால், “அவர்களுக்குப் எதற்குப் பணம்?” என்று கேட்கிறோம். “சந்நியாசிகளுக்கு எதற்கு உடம்பு” என்று கேட்கிறோமா? நம்மைப்போல அவர்களுக்கு உடம்பு இருப்பதனாலே வயிறும் இருக்கிறது. வயிறு இருப்பதனாலே பசி இருக்கிறது. பசித்தால் உண்ண வேண்டும். உணவுக்குப் பணம் வேண்டாமா? அவர்கள் வயிற்றுக்கு வேண்டிய உணவை அன்றாடம் இல்லறத்தான் கொடுத்துவிட்டானே யானால் அவர்களுக்குப் பணம் வேண்டாம். இல்லறத்தான் சந்நியாசிகளுக்குத் தானும் உணவு படைக்காமல், அவர்களும் பணம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வயிற்றை வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அப்படி எவனாவது சொல்வானா? சொன்னால் முட்டாள் பட்டம் கட்டிக் கொள்வான்.

உண்ணும் நேரம்

இந்தக் காலத்தில் சந்நியாசிகளுடைய வயிற்றுக்குச் சோறு போடாவிட்டாலும், சம்பாதிக்கும் ஆற்றல் இல்லாத குழந்தைகளுக்குச் சோறு போடாது பிச்சை எடுக்க வெளியே விரட்டினாலும், தம்முடைய வயிற்றுக்குச் சோறு போடாமல் இருப்பவர் யாரும் இல்லை. “வயிறு நிரம்ப நான் மூன்று வேளையா சாப்பிடுகிறேன்?” என்று பலர் சொல்லலாம். ஒரு வேளையாவது ஒரு பிடி சோறாவது சாப்பிடுகிறான் அல்லவா? “அந்த ஒரு பிடியைச் சாப்பிடும் போதாவது அதை நமக்குக் கிடைக்கும்படி செய்த இறைவனை நினைக்க வேண்டாமா?” என்று சொல்வாரைப் போல அருணகிரியார் பாடுகிறார்.

‘இறைவனை நினைப்பதற்கு எனக்கு நேரமே இல்லையே! கொஞ்சங்கூட ஓய்வு இல்லாமல் இயந்திரமாக வேலை செய்து கொண்டிருக்கிறேனே!” என்று சொல்பவனுங்கூட வயிற்றுக்குப் போட்டுக்கொள்ள ஒரு நேரம் வைத்திருக்கிறான் அல்லவா? நேரம் இல்லாமல் இருந்தாலும் பசி வந்துவிட் டால் உணவை உண்ண நேரத்தைக் கண்டு பிடிக்கிறான். மனிதன் வாழ்வது அவன் முயற்சிக்குள் அடங்கவில்லை; ஆனால் சாப்பிடுவது அவன் முயற்சியினால் உண்டாகிறது. நியாயமான முறையில் சம்பாதித்துச் சாப்பிடுகிறான்: அல்லது திருடி உண்ணுகிறான்; எப்படியாவது உண்டு விடுகிறான். உண்ணுவது என்பதை விட்டால் உடம்பு இராது.

“அப்படி உண்ணும் போது இறைவனை நினைக்கும் பழக்கத்தைச் செய்துகொள்” என்கிறார். உடம்பு சோற்றால் எடுத்த வீடு; தினந்தோறும் சாப்பிடுவதே இந்த உடம்பை வளர்ப்பதற்காகத்தான்.

உயிர் போன உடம்பு

இப்படி உணவு தின்று தின்று வளர்க்கும் உடம்பு எத்தனை நாளைக்கு இருக்கும்? சாகிற வரைக்கும் இருக்கும்.

செத்த பிறகு இது எங்கும் போவது இல்லை; இதை எரித்து விடுகிறார்கள்; அல்லது புதைத்து விடுகிறார்கள். “எத்தனை எத்தனையோ விதமான உணவுப் பொருள்களினாலே கட்டப் பட்ட உடம்பாயிற்றே! இதை வைத்துக் கொள்ளலாம்” என்று யாராவது வைத்துக் கொள்ளுகிறார்களா? இந்தச் சரீரத்தினால் இன்பம் கண்டவர்கள் கூட, மனைவி மக்கள் கூட, இறந்துவிட்டால் இரவுக்கு இரவாகவே இதை எடுத்துக் கொண்டு போய்க் கொளுத்திவிட வேண்டும் என்கிறார்கள். இந்த உடம்பினால் வருகிற இன்பத்திற்காக மனையாட்டி, ‘நாயகன் என்னுடன் தனித்து இருக்கமாட்டானா? அங்கே யாரும் இல்லாமல் இருக்க மாட்டார்களா?’ என்று ஏங்கித் தவிக்கிறாள். அவளே நாயகன் இறந்துவிட்டால் அவன் சரீரத்தை வைத்துக்கொண்டு தனித்திருக்கப் பயப்படுகிறாள். துணைக்குப் பத்துப் பேர் இருக்க வேண்டுமென்று விரும்புகிறாள். அந்தச் சரீரத்தைக் கட்டித் தழுவித் தனியாக இருக்க முயற்சி பண்ணினவள் இன்றைக்கு அந்தச் சரீரம் தனியாக இருந்தாலும் அதன் அருகில் செல்ல அஞ்சுகிறாள். மற்றவர்களும், நேரமாகிவிட்டது. இனிப் பிணம் கிடக்கக்கூடாது. எடுத்துக் கொண்டு போய் எரிக்கவேண்டும்” என்கிறார்கள். அதைக் கொளுத்துகிற வரைக்கும் யாரும் சாப்பிடுவது இல்லை. கொள்ளி வைத்து விட்டுத்தான் இலையில் உட்காருகிறார்கள். அதைக் கொளுத்தி விட்ட பின்பே சாப்பிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டவர் களைப்போலத் தோன்றுகிறது அவர்கள் செயல்!