முரண்பாடு இல்லை
மனிதன் உய்வுபெற வேண்டுமென்றால் நல்ல உணர்ச்சி அதிகம் உடையவனாக இருக்கவேண்டும்; அல்லாத உணர்ச்சி கொஞ்சங்கூட இருக்கக்கூடாது. மனம் நல்ல உணர்ச்சியினால் கிளர்ந்து உருகினால் இறைவன் திருவருளால் தியான சமாதி நிலை கூடிவிடும். யமவாதனை இராது; காலனை வென்றுவிடலாம்.
காலஜயம் பண்ணுவதற்கு மனோநாசம் ஏற்பட வேண்டும். மனோநாசம் ஏற்படுவதற்கு முதல் நிலை மன உருக்கம்.
மனம் உருகினால்தான் ஒருமைப்பாடு உண்டாகித் தியானம் செய்ய முடியும். மனோலயம் உண்டாகும். இதற்கு ஆரம்பம்; இழிந்த கவியைக் கற்றிடாது ஒதுக்கி, உயர்ந்த கவியை, மனத்தை உருக்கும் வேலாயுதன் கவியைக் கேட்டு உருகவேண்டும். இந்த அரிச்சுவடி படித்தால் போதும்; எம். ஏ. பட்டம் பெறும் கல்லூரி நிலையாகிய ஆங்காரம் அடங்கி, ஒடுங்கிப் பரமானந்தததே தேங்கி, நினைப்பும் மறப்பும் அற்று, ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே சதா காலமும் முருகன் திருவுருவம் கண்டு தூங்கலாம்; இந்த இரண்டுக்கும் முரண்பாடு இல்லை.
செவி படைத்த பயன்
செவி படைத்த பயனே இறைவனுடைய புகழைக் கேட்டுக் கேட்டு உருகுவதுதான். இறைவன் புகழைக் கேளாத செவி ஓயாது இழவுச் செய்தியைக் கேட்கும் செவி என்று வள்ளலார் பாடுகிறார்.
“கடவுள்நிள் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்துஇழவு கேட்கும் செவி.”
இறைவனுடைய புகழைத் தெரிந்துகொண்டு நாமாகக் கவி பாடுவது எளிதன்று; பிறர் பாடியதைக் கேட்டு இன்புறலாம் அல்லவா?
கிழியும் படி அடல் குன்று எறிந்
தோன்கவி கேட்டுஉருகி,
இழியும் கவி கற்றிடாது இருப்
பீர்; எரி வாய் நரகக்
குழியும் துயரும் விடாய்ப்படக்
கூற்றுவன் ஊர்க்குச்செல்லும்
வழியும் துயரும் பகரீர்
பகரீர், மறந்தவர்க்கே.
[வலிமையையுடைய கிரௌஞ்சமலை கிழியும்படி அதன்மேல் வேலை எறிந்தவனாகிய முருகப் பெருமானைப்பற்றிய பாடல்களைக் கேட்டு உருகி, இழிவான நிலையை உண்டாக்குவனவாகிய தாழ்ந்த பாடல்களைக் கற்றிடாமல் வாழுங்கள்; இவற்றால் இன்ன பயன் உண்டு என்பதை மறந்தவர்களுக்கு, நெருப்பைத் தன்னிடத்தே கொண்ட நரகமென்னும் பன்னற்தையும் அதனால் விளையும் துயரங்களையும், இறந்தபின் தாகம் உண்டாக யமனுடைய ஊருக்குப் போகும் வழியை யும் அங்கே உண்டாகும் துயரங்களையும் சொல்லுங்கள், சொல்லுங்கள்; மக்களைப் பார்த்து உபதேசம் செய்கிற முறையில் அமைந்திருக்கிறது பாட்டு.
கிழிதல் – பிளத்தல். அடல் – வலிமை. குன்று – கிரௌஞ்சமலை. எறிந்தோன் – தாக்கினவன். இழியும் – இழிவான போக்கிலே – செல்லும்; தாழ்வான உணர்ச்சிகளை உண்டாக்கும். விடாய் – தாகம்.]
இது கந்தர் அலங்காரத்தில் ஐம்பத்தாறாவது பாடல்..