குன்று எறிந்த குமரன்

“ஆறுமுகப் பெருமானே, உன் பெருமை எனக்குத் தெரியாதா? உன்னுடைய திருக்கரத்தில் இருக்கும் வேலைக் கிரௌஞ்ச மலை மேலே செலுத்தி அதைப் பொடிப் பொடி யாக்கினாயே! முன்பு மலையை உடைத்தது இருக்கட்டும்; இப்போது என்னுடைய மனமாகிய மலையை உடைக்க வேண்டும் அப்பா. முன்பு வேல் ஒரு மலையில் பாய்ந்து கிழித்த வரலாற்றை நான் அறிவேன். இப்போது என் மனத்தைக் கிழிப்பாய்” என்று உருகிக் கேட்கவேண்டும். கிரௌஞ்ச கிரியாகிய மலையைக் கிழித்தவன் நம்முடைய மனமாகிய பாறையைக் கிழிக்கமாட்டானா? கிழித்தல் என்றால் அழித்தல், சங்கரித்தல் என்றுதான் பொருள்.

ஒருவன் நல்ல கூர்மையான கத்தியினால் தூங்கிக் கொண்டிருந்த ஒருவனுடைய கழுத்தை அறுத்து விட்டானாம். அறுத்த பின்னரும் சுவாசம் போய்க்கொண்டிருந்தது. கொஞ்சம் தலையை அப்பால் திருப்பியவுடன்தான் தலை விண்டு உயிர் போயிற்றாம். குண்டு போட்டால் சத்தம் கேட்கும். இப்படிக் கத்தியினால் கிழித்தால் சத்தமா உண்டாகும்? சத்தம் இல்லாமல், ஆடம்பர ஆரவாரம் இல்லாமல் கணப்பொழுதில் ஆண்டவன் கிரௌஞ்ச கிரியைச் சங்காரம் செய்ததை நினைந்து, “கிழியும்படி அடற்குன்று எறிந்தோன்” என்று சொல்கிறார். அருணகிரிநாதர் அவ்வப் போது தம் கற்பனைக் கண்ணால் காணும் காட்சிகளில் இது ஒன்று.

கிழியும்படி அடல் குன்று எறிந்தோன்
கவிகேட்டு உருகி
இருப்பீர்.

அடல்-வலிமை, “வலிமை பொருந்திய கிரௌஞ்ச மலை கிழியும்படியாக வேலை எறிந்த வேறாயுதனுடைய கவியை அவன் புகழ்பாடும் கவிகளை, கேட்டு உருகுங்கள்” என்கிறார்.

கருத்து இணைதல்

நமக்குக் கருத்து இருக்கிறது; முருகப் பெருமானைப் பற்றிப் பாடியுள்ள அநுபூதிமான்களின் பாடல்களில் பொருள் உண்டு. நம் கருத்தையும் அந்தப் பொருளையும் ஒன்றாகச் சேர்த்தோமானால் உருக்கம் உண்டாகும். சொற்பாவும் பொருள் தெரிந்து கற்றால் உள்ளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கிளர்ச்சி உண்டாகும். வெறும் ஒலிக்கே எத்தனையோ பெருமை உண்டே!

தன் வீட்டு வாசலில் ஒரு தாய் நின்றுகொண்டிருக் கிறாள். தெருவோடு போகிறவன் ஒருவன், “அந்தக் கார்ப்பரேஷன் பள்ளிக்கு எதிரில், ஒரு குழந்தையின் மேல் கார் ஏறிவிட்டது” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டு போகிறான். அவளிடம் அவன் சொல்லவில்லை. அவன் பேச்சு அவள் காதில் விழுகிறது. உடனே அந்தப் பள்ளி வாசலை நோக்கி ஓடுகிறாள். காரணம் : அவளுடைய பிள்ளை அந்தப் பள்ளியில்தான் படிக்கிறான். “நம்முடைய குழந்தை வீதிக்கு வந்திருப்பானோ? நம் குழந்தையின் மேல் கார் ஏறியிருக்குமோ?” என்று பல பல சிந்தனையுடன் கூடிய பதற்றத்தோடு பள்ளிக்குப் கிளர்ச்சியுடையவளாக, போகிறாள். அந்தக் கிளர்ச்சிக்குக் காரணம் என்ன? அவள் பிள்ளை இறக்கவில்லை. அவன் வகுப்புக்குள் தான் இருக்கிறான். பாடம் நன்றாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இருந்தாலும் தெருவோடு போகிறவன் சொன்னதைக் கேட்டவுடன் அவள் உள்ளத்தில் ஒரு சித்திரம் தன் மகன் ஓடி வருவது போலவும், கார் அவன்மேல் ஏறிவிட்டது போலவும், குழந்தை இறந்துவிட்டது போலவும் தோன்றிவிட்டது. உடனே உணர்ச்சிகொந்தளிக்க ஓடுகிறாள்.

சிந்திக் கிலேன்! நின்று சேவிக்கி
லேன்! தண்டைச் சிற்றடியை
வந்திக் கிலேன்! ஒன்றும் வாழ்த்து
கிலேன்; மயில் வாகனனைச்
சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கி
லேன் உண்மை சாதிக்கிலேன்!
புந்திக் கிலேசமும் காயக்
கிலேசமும் போக்குதற்கே

என்னும் அருணகிரியாரின் பாடலை ஒருவன் பாடுகிறான். அதைக் கேட்கும்போது நம்முடைய கருத்து அந்தப் பாட்டின் பொருளோடு கவந்துவிட்டால் உள்ளம் துடி துடிக்காதா? “ஐயோ! நாம் இப்படியெல்லாம் செய்யாமல் இருக்கிறோமே!” என நினைந்து, நம்முடைய சிறுமையை எண்ணி நொந்து, உருகி உருகி விம்மாதா?

சாத்திரம் படித்தால் அறிவு வளரும். தோத்திரம் படித்தால் உள்ளம் வளரும். தோத்திரத்தைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் நம்முடைய சிறுமையை நினைந்தும் உருகலாம்: இறைவனுடைய பெருமையை அறிந்தும் உருகலாம். இப்படி இரண்டு வகையிலும் அநுகூலம் ஏற்படுகிறது. “காது படைத்து விட்டால் போதாது. உருகும் கவி கேட்டு இருப்பீர்'” என்று சொல்லித் தருகிறார் அருணகிரியார்.

வேலி

தோட்டம் போடுவதானால் ஆடுமாடுகள் செடி கொடிகளை மேய்ந்து விடாமல் இருக்க வேலி போட வேண்டும். நாலு சால் ஓட்டி உழுது நாற்று நட்டு விட்டால் போதாது, பாதுகாப்புடைய வேலியிட்டுக் களையும் எடுக்காவிட்டால் பயிர் நாசமாகிவிடும். ஓர் ஊரில் ஒரு கோயில் இருக்கிறது. அங்கே போனால் நல்ல தேவாரம், திருப்புகழ் முதலியவை களைக் கேட்கலாம். அந்த ஊரிலேயே ஒரு டீக்கடையும் இருக்குமே! அங்கே சினிமாப் பாடல்கள் இரவு பகலாக ஒலித்துக் கொண்டிருக்கும். அவற்றையும் கேட்கலாமா? கிளெஞ்ச மலையைக் கிழித்த வேலாயுதனுடைய கவியைக் கேட்டு உருகி இருங்கள்” என்று சொன்ன அருணை முனிவர். அடுத்த அடியில்,

இழியும் கவி கற்றிடாது இருப்பீர்

என்றும் சொல்லித் தருகிறார். இது இரண்டாம் பயிற்சி.

மருந்தும் பத்தியமும்

நாட்டு வைத்தியர்களிடம், எனக்கு நோய் என்று சொல்லிக் கொண்டு சென்றால் அவர்கள் மருந்து கொடுப்பார்கள். கூடவே இன்னவாறு பத்தியமாக இருக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். பத்தியம் என்பது சில உணவுப் பொருளை அகற்றுவது. மருந்து சாப்பிட்டால் பத்தியம் இருக்கத்தான் வேண்டும். நாக்கு ருசிக்காகக் கண்டதைச் சாப்பிடாமல் இருந்திருந்தால் நோய் வந்திருக்காது. நோய் போக வேண்டுமென்றால் மருந்து சாப்பிடத்தான் வேண்டும்; பத்தியமாக இருக்கவும் வேண்டும். மருந்து சாப்பிடும் போதே நாக்கு ருசிக்காகக் கண்டதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நோய் தீருமா? மருந்தும் பத்தியமும் சரிவர இருந்தால் உடம்பு விரைவில் நலம் பெறும்.

எம்பெருமானின் புகழ் அல்லாத பல கவிகளைக் கேட்டு நோயை வருவித்துக் கொண்டுவிட்டோம். பிறவி நோய் போகவேண்டும். பிறவிப் பிணிக்கு மருந்தாக இறைவனு டைய புகழைச் சொல்லும் கவி கேட்டு உருக வேண்டும். மருந்து உண்டால் பத்தியம் வேண்டுமே! இறைவனுடைய புகழைக் கேட்கும்போதே, மட்டமான பாட்டுக்களை மற்றொரு புறம் கற்காமல் இருந்தால்தான் விரைவில் மனம் வளப்படும்; ஒருமைப்படும். இழிந்த பாட்டுக்களைக் கேட்டால் அகந்தை வளரும்; ஆபாசமான உணர்ச்சிகள் ஊற்றுப் போலச் சுரக்கும். அருமையான ஒன்றை வளர்க்கும் போது கூடவே அதை அழிக்கக்கூடிய ஒன்றையும் வளர்க்கலாமா? “வளர்க்காதீர்கள்” என்பதைச் சொல்கிறார் அருணகிரி நாதர்.

இழியும் கவி கற்றிடாது இருப்பீர்.

இழியும் கவி

இழியும் கவி – சுவையிலும் பயனிலும் இழிந்த கவி என்று பொருள் கொள்ளவேண்டும். நம்முடைய பண்பாடு, அறிவு உணர்ச்சி ஆகியவற்றையெல்லாம் வளரும்படியாகச் செய்கிற கவி உயர்ந்த கவி. அவை அழியும்படியாகச் செய்கிற கவி இழிந்த கவி. எந்தப் பாடலைப் படிக்கும்போது நம்முடைய உண்மையான தாழ்ந்த நிலை புலப்படுகிறதோ அந்தப் பாட்டு, நம்முடைய உள்ளத் தடத்தில் திட்பத்தை உண்டாக்கிப் பண்புகளை உயரச் செய்கிறது. எந்தப் பாட்டைப் படிக்கும்போது நாம் ஏதோ உயர்ந்த நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறதோ அந்தப் பாட்டு உண்மையிலேயே நம்முடைய உள்ளத்தில் செருக்கை உண்டாக்கி நம்மைப் பண்பாட்டிலே, குணத்திலே சரிந்து விழச் செய்கிறது.

“குணங்களினால் இழிந்து, உணர்ச்சியினால் இழிந்து, சொல்லினால் இழிந்துள்ள கவிகளைக் கற்றிடாது இருங்கள்” என்று இரண்டாவது பயிற்சியை முடிக்கிறார் அருணகிரி யார்.

கிழியும்படி அடல் குன்று எறிந்தோன் கவி
கேட்டு உருகி
இழியும் கவி கற்றிடாது இருப்பீர்.

“வலிய குன்று கிழியும்படி வேலாயுதத்தை எறிந்த முருகனுடைய புகழைப் பாடும் கவியை, கேட்டால் மனம் உருகும் கவியை, கேட்டு இருப்பீர்” என்பது முதல் பயிற்சி. “இழியும் கவி கற்றிடாது இருப்பீர்” என்பது இரண் டாவது பயிற்சி. இந்த இரண்டு பயிற்சிகளிலும் நன்றாகத் தேறியவர்களுக்கு என்ன பயன்? யம பயம் போய் விடும்! நரகக் குழியில் விழாது தப்பிக்கொள்ளலாம்.

இதை அருணகிரியார் எப்படிக் குறிப்பிக்கிறார்? ‘உருகும் கவி கேளுங்கள். இழியும் கவி கற்றிடாதீர்கள். இது தெரியாமல் இருக்கிறார்களே, தெரிந்தும் மறந்து இருக்கிறார்களே, அவர்களுக்குக் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்கிறார்; அவர்களுக்குச் சொல்லும்படி சொல்லி, நாம் உணர்ந்து கொள்ளும்படி குறிப்பிக்கிறார்.

உருகும் கவி கேட்கவேண்டும், இழியும் கவி கற்கக் கூடாது என்பது தெரியாதவர்களுக்கு, மறந்தவர்களுக்கு, என்ன சொல்ல வேண்டும்?

குழியும் வழியும்
எரிவாய் நரகக்
குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன்
ஊர்க்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர், பகரீர் மறந்தவர்க்கே.

“எரிகின்ற தீ வாயை உடைய நரகக் குழியைப் பற்றிச் சொல்லுங்கள்” என்கிறார். உயிரானது தான் பண்ணிய வினைக்கு ஏற்ப மீட்டும் கருக்குழியில் புகுந்து பலவிதமான உடம்புகளை எடுத்துத் துன்ப வேதனைக்கே ஆளாகும் என்ற நுட்பமான நிலையைச் சொல்ல, அதைப் பருப்பொருளாகக் காட்டி விளக்குவது பெரியவர்கள் மரபு. பிறவியாகிய பெருந்துன்பத்தை அளிக்கிற நிலை எதுவோ, பாதை எதுவோ, அதை விளக்க வேண்டுமென்றால் அதே விதமான துன்பத்தைத் தருகிற பொருளை வைத்துச் சொன்னால்தான் உணர்ந்து கொள்ள முடியும். நெருப்பு என்ற உடனேயே அதனால் ஏற்படுகிற வெம்மையை எண்ணி அஞ்சுகிறோம். பாம்பு என்றவுடனேயே அதன் நஞ்சை எண்ணிப் பயப்படு கிறோம். மீட்டும் பிறவி எடுப்பதற்குரிய நிலையை நரகம் என்று பெயர் வைத்துச் சொல்கிறார்கள். அது எப்படி இருக்கும்? கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குழியாக இருக்கும், கொடிய நஞ்சைக் கக்குகின்ற பாம்புக் குவியலாக இருக்கும் என்று சொன்னால் தீவினைகளால் உண்டான துன்பத்துக்கு அஞ்சுவார்கள்; தீவினை செய்ய அஞ்சுவார்கள்.

ஜியாமெட்ரியில் புள்ளியைக் காட்ட இரண்டு கோடு போட்டு வெட்டுவார்கள்; இரண்டு கோடும் சந்திக்கிற இடத்தான் புள்ளி என்று சொல்வார்கள். புள்ளிக்குத் தனியே பரப்பளவு இல்லை; அதைக்காட்ட முடியாது. ஆகை யாலே அப்படிக் காட்டுவார்கள். இதை முன்பே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். இப்படி நுட்பமான பொருளைச் சொல்ல வேண்டுமானாலும் பருப்பொருளாகச் சொன்னால் தான் மனிதன் புரிந்து கொள்வான். நல்ல வினை செய்பவர் களுக்கு மோட்சம் கிடைக்கும், பாவ வினைகளைச் செய்பவர் களுக்கு நரகம் கிடைக்கும் என்று அந்த அநுபவங்களைக் காட்சிகளாக்கிக் காட்டினார்கள்.

மோட்சமாவது என்ன? மீட்டும் பிறவி உண்டாகாத நிலை. நரகம், மீட்டும் கருக்குழியிலே செல்லும் துன்பத்தை உண்டாக்கும் நிலை. இந்த நிலைக்குப் போகக்கூடாது என்கிற எண்ணம் வளர வேண்டுமானால் இதைப்பற்றிய பயம் உண்டாக வேண்டும். ஆகவே தான், “நரகம் ஒரே தீக்குழியாக இருக்கும்; கொழுந்து விட்டெரியக்கூடிய அந்த எரிவாய் நரகக் குழியில் யமதூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கொண்டு போய்த் தள்ளுவார்கள்” என்று சொல்லிப் பயத்தை உண்டாக்கினார்கள்.

அந்த இடம் கூற்றுவனுடைய ஊர். கூற்றுவனுடைய ஊர் மாத்திரம் அப்படி இராது. ஊருக்குப் போகும் வழியும் துயரம் நிரம்பியது. அந்தப் பக்கம் போகும் உயிர்கள் எல்லாம் வெப்பத்தால் தீய்ந்து, தாகத்தினால் தவிக்கும் என்றார்கள். அதற்காகத்தான் யாராவது இறந்து போனால் அவருடைய உயிர் யமபுரிக்குச் செல்லும் வழியில் விடாய்ப் பட்டுத் துயருறுமே என்று எண்ணி எள்ளும் தண்ணீரும் விடுவார்கள். அவ்வுயிரினுடைய தாகத்தைத் தீர்ப்பதற்காக என்று சொல்வார்கள்.

வெம்மையினால் ஏற்படுவது விடாய்; வெம்மை தீயினால் உண்டாகிறது. தண்மை, குளிர்ச்சி. அது நீரினால் உண்டா கிறது. உள்ளத்திற்குக் குளிர்ச்சியைத் தருவது அன்பு. அன்பு இல்லாத உயிருக்கு அன்பு இல்லாத நிலை தான் வரும். அன்பு இல்லாத சுயநலக்காரர்களுக்குக் கடைசிப் பயணத்தில் கிடைக்கிற வெப்பம் நிறைந்த வழியையும், தீக்குழியையும், அவற்றினால் உண்டாகிற துயரையும் அருணகிரி யார் நினைப்பூட்டுகிறார். “உருகும் கவி கேளாதவர்களுக்கு. இழியும் கவி கற்பவர்களுக்கு, இந்தக் குழியையும், வழி யையும், துயரையும் சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று வேண்டிக் கொள்கிறார்.

எரிவாய் நரகக்
குழியும் துயரும் விடாய்ப்படக்
கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

நல்ல வினைகளைச் செய்யாவிட்டால் மீட்டும் பிறவியாகிய துன்பந்தான் விளையும் என்பது தெரியாமல், உருகும் கவி கேளாது, இழியும் கவி கற்று வருபவர்களுக்கு, “எரி வாய் நரகக்குழி காத்து இருக்கிறது. விடாய்ப்படும் துயரும் காத்து இருக்கிறது. கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியையும் நினைவில் கொள்ளுங்கள்” என்று ஒரு முறை பகர்ந்து நினைப்பூட்டினால் போதும். அவர்கள் இயல்பாகவே தெரியாதவர்கள். அவர்கள் இதைத் தெரிந்து கொண்டு நல்ல நெறியில் நடக்க முயல்லார்கள்.

பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

உருகும் கவி கற்றிடாது. இழியும் கவி கற்றுக் கொண்டிருப்பதனால் நரகந்தான் விளையும். மீட்டும் பிறவியாகிய துன்பம் உண்டாகும் என்பதை உணர்ந்தும் மறந்து விடுகிறார்களே அவர்களுக்கு, “பாவிகளே, எரிவாய் நரகக் குழியும் வழியும் இருக்கின்றன, இருக்கின்றன” என்று அடுத்தடுத்து இடித்துச் சொல்ல வேண்டும் என்கிறார் அருணகிரியார். பகரீர் பகரீர் என்று இரண்டு முறை சொல்கிறார். இரண்டு முறை என்று கணக்காகச் சொல்லவில்லை. தமிழில் ஒன்றுக்குமேல் போனால் எல்லாம் பலவே. ஆதலின் அடுத்தடுத்துச் சொல்லுங்கள் என்பதையே அவ்வாறு கூறினார். உண்மையைத் தெரிந்து கொண்டும் மயங்குகிற வர்களுக்குஅடித்துச் சொல்லத்தானே வேண்டும்?