6. கச்சியப்பர் காட்டும் முருகன்
உலகின் பழம்பெரும் சமயம் சைவ சமயமாகும். மொகஞ்சதாரோ அரப்பா இடிபாடுகளுக்கிடையில் ஒரு சிவலிங்கம் கிடைத்தது. எனவே கிறித்து பிறப்பதற்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே வட இந்தியாவில் சிந்து கங்கைச் சமவெளிகளில் சிவபெருமான் வழிபாடும் வணக்கமும் இருந்திருக்க வேண்டும் என்று அறிய வருகிறோம்.
எனவேதான் ‘சைவ சமயமே சமயம்’ என்றும், சைவத்தின் மேற் சமயம் வேறிலை’ என்றும் இச்சமயம் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு பழமையும் பெருமையும் கொண்ட இச் சமய உண்மைகளை உலகிற்கு உணர்த்துவான் வேண்டித் திருமுறைகளும் புராணங்களும் எழுந்தன. சைவத் திருமுறைகள் எனப்படும் பன்னிரு திருமுறைகளாம் சைவ புராணங்களுள் சொல்லழகு, பொருளழகு, நடையழகு கனி சிறந்து கவிதைச் சிறப்புத் துலங்கும் புராணங்கள் மூன்றாகும். அவையாவன; திருத்தொண்டர் புராணம் என வழங்கும் பெரிய புராணம், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் குறிக்கும் திருவிளையாடற் புராணம், கந்தவேளின் கதையினை எடுத்து மொழியும் கந்த புராணம் என்ற மூன்றுமாம்.
வேத சிவாகமங்களின் பிழிவாய் வடமொழியில் நின்றிலங்கும் நூல் ஸ்காந்தமாகும். அதனுள் ஒரு பிரிவு சங்கர சங்கிதை எனப்படும். அதில் முதன்மையான பகுதி சிவ ரகசிய கண்டமாகும் அஃது உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம், உபதேச காண்டம் என ஏழு காண்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வேழு காண்டங்களில் முதல் ஆறு காண்டங்களைத் தூய ஆற்று நீரோட்டம் போன்று தமிழ் நடை அமையும் வண்ணம் தமிழில் இயற்றியருளியவர் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் ஆவர்.
கச்சியப்பர் காஞ்சிபுரத்தினர்; சிவனெறி மறவாத சிந்தையர்; தம் வழிபடு கடவுளாக முருகப் பெருமானைக் கொண்டவர். இதனை இவர் ‘என் உளத்தின் உலவும் சிவன் உமைக்கினிய மைந்தன்’ எனத் தம் நூலில் குறிப் பிட்டுள்ளமை கொண்டு அறியலாம். இவருடைய தந்தையார் பெயர் காளத்தியப்ப சிவாசாரியர் என்பது. மேலும் இவர் வேதம், ஆகமம், அங்கம் ஆகிய அனைத்து நூல்களையும் பழுதறக் கற்ற புலமையாளர் ஆவர். இவர் காஞ்சிக் குமர கோட்டத்தில் கந்த புராண நூலினை அரங்கேற்றினார். கந்த புராணம் என்ற பெயர் ஆசிரியராலேயே நூலிற்கு வழங்கப்பட்டது என்பதனை, “காதைக் கெவன் பெயர் என்றிடில். போற்று கந்த புராணம தென்பதே” என்ற இவர்தம் அவையடக்கச் செய்யுள் கொண்டு அறியலாம்.
பெரிய புராணத்தினை இயற்றச் சேக்கிழாருக்குச் சிவ பெருமான் ‘உலகெலாம்’ என அடி எடுத்துக் கொடுத்தது போன்று, கச்சியப்ப சிவாசாரியரின் கனவில் கந்தவேள் தோன்றி “அன்ப! நமது புராணத்தைத் தமிழில் தருக” எனக் கட்டளையிட்டதோடு “திகட சக்கர” என முதலும் எடுத்துத் தந்து மறைந்தனர் எனவும் கர்ண பரம்பரைச் செய்தியொன்று உலவுகின்றது.
இத்தகு தெய்வத் தொடர்பு கொண்ட நூலின்கண் கச்சியப்ப சிவாசாரியர் கந்தவேளின் பிறப்பு வளர்ப்பு வரலாற்றினையும்,சூரனை ஒழித்துத் தேவர் துயர் களைந்து, இந்திரன் வளர்த்த தேவானையைக் கற்பில் கொண்டு, வள்ளி மலையில் நம்பிராசன் மகளாய் வளர்ந்த வள்ளியைக் களவிற் கொண்டு அடியவர்க்கு அருளிய வரலாற்றினையும் சிறப்பாகக் குறித்துள்ளார். இனிக் கச்சியப்பர் காட்டும் முருகனைக் காண்போம்.
பாயிரத்தில் வரும் காப்புச் செய்யுளில் ‘சுப்பிரமணியர் காப்பு’ என்று காணும் பாடலிலேயே கச்சியப்பர் காட்டும் முருகனின் தோற்றப் பொலிவு தூய்மையுடன் துலங்குகின்றது. மூவிரு முகங்களிலும் கருணை பொங்குகின்றது; ஈராறு தோள்களை யாவரும் ஏத்திப் புகழ்கின்றனர். செவ்வேளின் மலரடியினையும், திருக்கையில் விளங்கும் சேவற் கொடியினையும், ஏறி அமர்ந்திருக்கும் ஊர்தியாகிய மயிலினையும்,திருக்கையில் சுடர் விட்டிலங்கும் வேலினையும் போற்றிப் பரவுகின்றார் கச்சியப்பர். அவ் அழகிய துதிப்பாடல் வருமாறு:
மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற
வீராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள்
மலரடி போற்றி யன்னான்
சேவடி மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி.
இப்பாடலில் கந்தவேளையே நம் மனக் கண்முன் கொண்டுவந்து காட்டுகின்றார் கச்சியப்பர்.
திருக்கைலாயத்தில் உமையை மணந்து சிவனைத் தேவர்கள் கண்டு வணங்கி, தாங்கள் அசுரர்களால் படும் தொல்லைகளை விரித்தெடுத்துரைத்து ஒருவரம் வேண்டினர். தங்கள் துயர் தீர்க்க, சூரனை மாய்க்க ஓர் குமரன் தன்னைத் தரவேண்டும் என்றார்கள். கறைமிடற்று அண்ணலும் அமரர்தம் வேண்டுகோளுக்கு மனமிரங்கினான். சரவணப் பொய்கையில் சண்முகன் தோற்றம் கொள்கிறான். முருகப் பெருமானின் திருவவதாரத்தினைக் குறிப்பிடும் கச்சியப்பரின் திருப்பாடல் கவிதை வளம் செறிந்துள்ளது; பக்திப் பெருக்கு நிறைந்துள்ளது. அப்பாடல் வருமாறு:
அருவமும் உருவும் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய.
-கந்த புராணம் : உற்பத்தி காண்டம்: 92
மறைகளாலும், அவற்றின் முடிவாலும் வாக்காலும் மனத்தாலும் அளக்க முடியாமல் யாண்டுமாய், எங்குமாய், எல்லாமாய் நிறைந்திலங்கும் நிமல மூர்த்தி ‘அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தின் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளி னான்’ என்று கச்சியப்பர் காட்டுவர். இவ்வாறு பிறந்த குழந்தைக்குக் ‘கந்தன்’ என்று பெயர் இடப்பட்டது. ஓமெனப்படும் ஓரெழுத் துண்மையை உணராத பிரமனைக் குட்டிச் சிறையிட்டுப் படைப்புத் தொழிலைத் தானே மேற்கொண்டான் முருகன். விதி முதல் உரைக்குஞ் செயலினுக் கெல்லாம் ஆதியாய் அவதரித்த செவ்வேளுக்கு அயன் தொழில் ஒன்றும் அற்புதம் இல்லை எனும்படி, ‘பல்லுயிர்த் தொகை படைப் பதனைப் பரிவால்’ நினைந்தனன். தந்தைக்குப் பிரணவத் தின் பொருளை உபதேசித்துச் ‘சாமிநாதன்’, ‘குருசாமி”, என்ற பெயர் பெற்றான் முருகன்.
தேவர்களுக்கு இன்னல் இழைத்த சூரபன்மனைத் தொலைக்கப் போர் வேடந் தாங்கித் துணைவருடன் அமர்க்களம் நண்ணிய அண்ணலைத் தன்னிரு விழியாற் கண்டான் தானவர்க் கிறைவன். சூரனெனும் அவுணர் கோமான் தொல்லை நாள் நோற்றிருத்தல் வேண்டும். ஏன்? அவள் கண்ட காட்சியின் மாட்சியினைக் கச்சியப்பர் வாக்காலேயே காண்போம்:
முண்டக மலர்ந்த தன்ன மூவிரு முகமுங் கண்ணும்
குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங் கோல மார்பும்
எண்டரு கரமீ ராறும் இலங்கெழிற் படைகள் யாவுந்
தண்டையுஞ் சிலம்பும் ஆர்க்குஞ் சரணமுந் தெரியக் கண்டான்.
-கந்த புராணம்: இரண்டாநாட்: 235
இவ்வடிவு தெரியக் கண்ட சூரனின் தவத்தின் பேற்றினை யாரால் அறிந்து உரைக்க முடியும்? போருக்குப் பொருக்கென வந்த சூரனுக்கு எளிகாய்த்தன் வடிவம் காட்டியருள் செய்த ஆதியங் குமரனின் மாயத் திருவிளையாடல் இதுவாகும்.
பலவாறும் போர் செய்து களைத்த சூரன் இறுதியில் அழிவுற்றான். உடல் இருகூறாகிச் சேவலும் மயிலுமானது மாயையின் மைந்தன் தீயவை புரிந்தவனாயினும் திருமுருகன் திருமுன் உற்றதால் அவனருள் பெற்றுய்ந்தான். இதனைக் கச்சியப்பர்.
தீயவை புரிந்தா ரேனுங் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி யடைவர் என்கை ஆயவும்
வேண்டுங் கொல்லோ அடுசமர் இந்நாட் செய்த மாயையின்
மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற் றுய்ந்தான்
– கந்த புராணம் : சூரபன்மன் வதைப்படலம் : 496
என்று நயம்பட நவிலுகின்றார். பின்னர்ச் சேவல் கொடி யாயிற்று; மயில் ஊர்த்தியாகி முருகனைச் சுமந்தது.
அமரர் சிறை மீட்டுத் துயர் களைந்த குமரேசனுக்கு அமரேசன் தான் வளர்த்த தெய்வ யானையைத் திருப்பரங் குன்றத்திலே சிறப்புடன் மணம் செய்து கொடுத்தான். யாவரும் மகிழ்ந்திட மன்றல் இனிதே நடந்தது.
கற்பால் விண்ணுலக மடந்தை தெய்வ யானையைக் கொண்ட முருகன் களவால் வள்ளிமலைச் சாரலில் பிறந்து வளர்ந்து வரும் வள்ளியைச் சென்று வேலன் வடிவிலே காணுகின்றான்.
தினைப்புனத்தைக் காவல் காக்கும் வள்ளியின் வனப்பில் மனத்தைப் பறிகொடுத்த மால்மருகன் முருகன் வள்ளியிடம் தன் காதல் நிறைவேற எளிவந்து இரக் கின்றான். ‘ஒரு பேச்சுப் பேசு’ என்கின்றான். இன்றேல் ஒரு புன்னகை வேண்டும் என்கின்றான். அதுவும் இன்றேல் சற்றுக் கடைக்கண்ணாவது காட்டவேண்டும் என்று கேட்கின்றான். அதுவும் அருளவில்லை என்றால் அவனுடைய காதல் கனல்விட்டு எரியும் என்றும், எனவே பிழைத்துப் போகும் வழியையாவது மனம் வைத்துக் காட்ட வேண்டும் என்றும், அல்லது மனமாவது சிறிது தன்பால் நெகிழ வேண்டும் என்றும், இவற்றுள் ஒன்றேனும் நிகழாவிடில் பழியை வள்ளிபால் வைத்து இறந்துபடுவேன் என்றும் கூறி, முருகன் வள்ளி பாரா முகமாய்த் தன்பாலிருக்கக் கூடாது என்றும் குறிப்பிடுகின்றான்.
மொழியொன்று புகலா யாயின்
முறுவலும் புரியா யாயின்
விழியொன்று நோக்கா யாயின்
விரகமிக் குழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டா யாயின்
மனமுஞ்சற் றுருகா யாயின்
பழியொன்று நின்பாற் சூழும்
பராமுகந் தவிர்தி யென்றான்.
-கந்தபுராணம் வள்ளியம்மை: 72.
இவ்வாறு கூறிப் பின்னர் வள்ளியை வலிந்து மணம் செய்து தணிகைமலை உறையும் கோலக் குமரனைச் சிறக்கப் பின்வருமாறு வாழ்த்துகின்றார் கச்சியப்பர்:
ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீர் அடியார் எல்லாம்.
கச்சியப்ப சிவாசாரியரின் இந்த வாழ்த்துப் பாடல் இலக்கிய உலகின் இணையற்ற பாடலாகும். இத்தகு ஞாலம் புகழும் கோலக் குமரனின் ‘வன்காதை தன்னைச் சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும், கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல் உற்றாரும்’ வீடு பேறு பெறுவர் என்று கூறிக் கந்த புராணத்தை முடிக்கிறார் கச்சியப்ப முனிவர்.
கச்சியப்பர் காட்டும் முருகன் செறுநரைத் தேய்த்து உறுநரைக் காத்து, வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈயும் கருணை வள்ளலாகக் காட்சியளிக்கிறான் என்பது வெளிப்படை. நூலின் முடிவில் இடம்பெறும் கச்சியப்பரின் வாழ்த்துப்பாடல் விழுமியது; உலகம் வாழவேண்டும். என்னும் உயர் கருத்துடன் ஒளிர்வது.
வான்முகில் வழாது பெய்க!
மலிவளம் சுரக்க; மன்னன்
கோன்முறை அரசு செய்க!
குறைவிலா துயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்கள் ஓங்க!
நற்றவம் வேள்வி மல்க!
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.