3. நக்கீரர் காட்டும் முருகன்

நூலின் அமைப்பு

திருமுருகு என்ற சொற்றொடர் திருமுருகப் பெருமானை உணர்த்தும். அழகு, இளமை, மணம் இப்பண்பு களுக்கெல்லாம் உறைவிடமாகத் திகழ்பவன் முருகன் ஆவன். ஆற்றுப் படை என்ற சொற்றொடர் வழிப்படுத்துவது அல்லது வழி காட்டுவது என்ற பொருளைப் பயக்கும். (ஆறு = வழி; படை=படுத்துவது). முருகப் பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று, அப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றான் ஒருவன். அப்பெருமான் தன் அருள் வேண்டி நின்றான் ஒருவனுக்கு அவ்விடங்களைக் கூறி, அருள் முருகனின் பேரருட் பெருக்கினையும், திருமேனிப் பொலிவினையும் பொருந்தக் கூறி, ஆற்றுப்படுத்தி அனுப்புவதாக வழிகாட்டி அனுப்புவதாக, அமைந்த நூலே திருமுருகாற்றுப் படையாகும்.

இது தொல்காப்பியம் புறத்திணையியலுள், “தாவினல்லசை’ என்னும் சூத்திரத்துள்,

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்

-தொல்காப்பியம் : புறத்திணை இயல்: 35

என்ற பகுதி உளது. அதுவே ஆற்றுப்படையின் அடிப் படையாகின்றது. ஆனால் மற்ற ஆற்றுப் படைகள் போலல்லாமல் திருமுருகாற்றுப்படை ஆற்றுப் படுக்கப் பட்டாராற் பெயர் பெறாமல், நூலின் பாட்டுடைத் தலைவனான தெய்வ மாம் முருகன் பெயரைச் சார்ந்து வழங்கப்படுகின்றது.

இதனை நச்சினார்க்கினியர் தம் உரையில் “கந்தழியைப் பெற்றானொருவன் அதனைப் பெறாதானொருவனுக்குப் பெறு மாறு கூறி அவனை வழிப்படுத்துக் கூறுவானென்பது பற்றிச் செய்யுள் செய்தாராயிற்று” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள்” என்று கூறிப் பின்னும் கந்தழியை விளக்கப் புகுவான் எடுத்துக்கொண்டு அது,

சார்பினாற் றோன்றாது தானருவாயெப்பொருட்கும்,
சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ
வாய்மொழியாள் மெய்யான் மனத்தா னறிவிறந்த
தூய்மையதா மைதீர் சுடர்

என்றும்,

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்
போல் பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்

-திருவாசகம்: அதிசயப்பத்து,9

என்றும் கூறுகின்றார். இறுதியாக “முருகாற்றுப்படை யென்றதற்கு வீடுபெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற் றுப்படுத்ததென்று பொருள் கூறுக” என்று கூறித் தம் உரையை முடிக்கின்றார் நச்சினார்க்கினியர்.

கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு

உலகுக்கு உயிரூட்டி நிற்கும் இயற்கைச் சக்திகள் பல. உலகின் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையும்படி அவ் வுயிரினங்களுக்கு வலிவும் பொலிவுந் தந்து உலகெங்கும் ஒளியூட்டி நிற்கின்றான் ‘பலர்புகழ் ஞாயிறு’. இந்த ஞாயிற்றைப் பாடாத கவிஞர் இலர்; போற்றாத அறிஞர் பெரு மக்கள் இலர். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளும், காப்பியத்தின் முதற் காதையாம் மங்கல வாழ்த்துக் காதையில் ‘ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற் கோட்டு மேருவலந் திரிதலான்’ என்று பாராட்டினார். தண்டியலங்கார மேற்கோள் செய்யுளொன்றும் புற விருளைப் போக்கும் ஞாயிற்றையும் அகவிருள் பரப்பப் பாடுபடும் தமிழையும்,

ஓங்க லிடைவந் துயர்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்

என்று ஒப்பப் போற்றுகின்றது.

மகாகவி பாரதியாரும் ‘இளையபாரதத்தினாய்’ என்ற பாடலில் ‘உதய ஞாயிறொப்பவே வாவாவா!’ என்று பாடி யுள்ளார்.எங்கிருந்தாலும் நெருஞ்சிமுள் சூரியனையே நோக்கியிருக்கும். இதனைத் தலைவி ஓர் உவமையாக எண்ணி,

எழுதரு மதியங் கடற்கண் டாஅங் கொழுகுவெள்
ளருவி யோங்குமலை நாடன் ஞாயி றனையன்
தோழி நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே

– குறுந்தொகை: 315

என்று பாடுகின்றாள்.

இவ்வாறு உலகுக்கு ஒளியும் உயிரும் ஊட்டும். கதிரவனை முதற்கண் புகழ்கின்றார் நக்கீரர். எங்கணும் விரிந்து ஒளியுமிழும் ஞாயிறு நீல நிறக் கடலின் மேல் கிளர்ந்தெழுதல் போன்று திருமுருகனும் அவிரும் ஒளியை உடையவனாய் நீலமயில் மீது கோலங்கொண்ட மேனியனாய் தூரத்தே தோன்றி ஒளிர்கின்றான்.

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு
ஓவற விமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி.

– திருமுருகு: 1-3.

தன்னை அடைக்கலம் என்று அண்டி அருள் வேண்டி வந்த அடியார்களின் மனமாசுகளைப் போக்கி, என்றும் அழியாத வீட்டின்பத்தினை நல்கித் தாங்கும், அழகும் அருளும் வலிமையும் போன்ற திருவடிகளையுடையவன் முருகப் பெருமான். இவ்வாறு காத்தற்குரியாரைக் காக்கும் தொழிலைச் செய்பவன் அழித்தற்குரியாரை அழிக்கும் செயலையும் இடையறாது உலகம் உய்யும் பொருட்டுச் செய்து கொண்டுள்ளான். திருவருளுக்குப் பகைவர்களாகி அறமல்லாத தகாதன செய்யும் கொடியவர் தம் அறியாமை இருள் மண்டிக் கிடக்கும் ஆணவத்தை அழித்து, பெய்ய வேண்டிய காலத்தே பெய்து வளஞ் கரக்கும் மழையே போலத் திருவருள் மழை பொழிந்து அவர்களை அவ் வழியினின்று நீக்கி நல்வழி சேர்த்துக் காப்பாற்றுகின்ற கருணை சான்ற பெரிய கைகளையுடையவன் அவன். குற்றமற்ற கற்பினைக் கொண்டொளிரும் தெய்வ யானை அம்மையார்க்குக் கணவன் திருமுருகன்:

உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்.

-திருமுருகு: 4-6

பின்னர், புலவர் பெருமான் நக்கீரனார் இயற்கையின் இனிய திருக்கோலத்தை இனிமையுற எடுத்து மொழிகின்றார். கடல் நீரைக் குடித்து அதனால் கருக்கொண்ட பெரிய மேகம் மின்னல் ஒளி வீசிக் கண்ணைப் பறிக்கும் விண்ணிலே நிரம்பிய மழைநீர்த் துளிகளை எங்கணும் பரப்பியது; அது கார்கால மழையை, முதல் மழையைப் பொழிந்தது. கார்கால மழையின் தலையளியால் காடு குளிர்ந்து அதனால் காட்டு மரங்கள் தழைத்துத் தளிர்த்துப் பூத்து மணம் பரப்பின. அக் காட்டின் இடையே இருள் மண்டிக் கிளை தழைத்துப் பரந்திருந்த பெரிய அடி மரத்தை யுடைய செங்கடப்ப மரம் தேருருளை போன்ற பூக்களைப் பூத்து நின்றது. அப் பூக்களாற் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவன் திரு முருகன் ஆவன்:

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ்
விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலைஇய
தண்ணறும் கானத்து- இருள்படப் பொதுளிய பராரை
மராஅத்து உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்.

-திருமுருகு : 7-1

பெரிய வளவிய மூங்கில்கள் வானளாவி வளர்ந்திருக்கின்றன. மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும் மலையிடத்தே சிறு சதங்கை அணிந்த ஒளி நிழற்றும் அடியினை யும், திரண்ட காலினையும், வளைந்த இடையினையும், மூங்கிலைப் போன்ற தோள்களையும் உடையராய்ச் சூரர மகளிர் வாழ்கின்றனர். அவர்கள் இந்திர கோபம் பூச்சிகளைப் போன்று சாயம் ஏற்றமலே இயல்பாகவே செந்நிறம் வாய்ந்த அழகிய ஆடைகளை அணிந்துள்ளனர். பல பொற்காசுகளை வரிசையாகக் கோத்த ஏழு வடமான மேகலை என்னும் அணியினை அணிந்த இடையினை உடையராய் உள்ளனர். ஒருவர் கையால் ஒப்பனை செய்து தோற்றுவிக்கப் பெறாது இயல்பாகவே பெற்ற அழகினையும், நாவல் (சம்பூநதம்) என்ற நற் சொல்லாற் பெயர் பெற்ற பொன்னினாலே செய்யப்பெற்று விளங்குகின்ற அணிகலன்களையும் கட்குப் புலனாகும் எல்லையினையும் கடந்து சென்று ஒளிவீசும் குற்றமற்ற நிறத்தினராயும். உள்ளனர் சூரர மகளிர்:

மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத் தன்ன தோயாப் பூந்துகில்

பல்காசு நிரைத்த சில்கா ழல்குல்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனி.

-திருமுருகு : 12.19

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

மகளிர்க்கு ஆடவரைக் காட்டிலும் அழகில் நாட்டமுண்டு. தங்களைப் புனைந்து கொள்வதில் வேட்கை மிகுதி, கருங்கூந்தல் நிறைய மணம் பரப்பும் மலர் சூடித் தங்களை ஒப்பனை செய்துகொள்வதில் மாறா விருப்பம் அவர்கட்கு உண்டு. எழிலும் மென்மையும் வனப்பும் வாய்ந்த வண்ண மலர்கள் தங்கள் கூந்தலை அழகு செய்யவேண்டும் என்ற அழகுணர்ச்சி அவர்கள்பால் இயற்கையாகவே உண்டு.

சூரரமகளிர் மூங்கில்கள் வானோங்கி வளரும் உயர்ந்த மலையில் ஒன்று கூடுகின்றனர். அவர்களின் ‘கைபுனைக் தியற்றாக் கவின்பெறு வனப்பு’க் காண்போர் தம் கண்களுக்கு விருந்தாகிக் கருத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. அவர்கள் தம்மில் ஒத்த தன்மையராய் ஒன்றுகூடி ஆடிப்பாடி மகிழ்கின்றனர். தங்களுக்குத் தாங்களே சிக்கெடுத்து விரித்து, கடை இணையொத்து இழுத்து அழுத்திப் பின்னிய கூந்தலை உடையராய்த் தோற்றமளிக்கின்றனர். செக்கச் சிவந்த காம்பினையுடைய வெட்சி மலரின் சிறிய பூக்களைத் தங்களின் கூந்தலின் இடை யிடையே விடுபூவாக இட்டுள்ளனர். மேலும் அவ்வெட்சி மலர்களின் இடையிலே பசிய தண்டினையுடைய குவளைப் பூவின் தூய்மையான இதழ்களைச் செறித்துள்ளனர். தெய்வத் தன்மை பொருந்திய சீதேவி என்னும் தலைக் கோலத்துடனே வலம்புரிச் சங்கின் வடிவிற்றாகச் செய்யப் பெற்றதொரு தலைக் கோலத்தினையும் ஒரு சேரத் தொகுத் துத் தங்கள் தலையினை ஒப்பனை செய்துள்ளனர். பொட்டிடப் பெற்று நறுமணங் கமழும் அழகிய நெற்றியிலே சுறாமீன் வடிவில் செய்யப் பெற்றுள்ள நகையின் பிளந்த வாய் தாழ்ந்து படும்படி அமைத்து அழகு மேலும் விளக்கம் பெறச் செய்துள்ளார்கள். இத் தெய்வவுத்தி என்னும் தலைக்கோலத்திற்கு விளக்கமாகச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுவன வருமாறு: “சீதேவியார் என்னும் பணியுடனே வலம்புரிச் சங்கும், பூரப்பாளையும், தென் பல்லி வடபல்லியென்னும் இவையும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலம்” என்பதாகும்.

நன்கு முற்றமுடித்த குற்றமற்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகி உள்ளனர். செண்பகப் பூவின் மேலே கரிய புறவிதழினையும் அகத்தே துய்யினையும் உடைய பூக்களை மிகுதியாகக் கொண்ட மருதப் பூங்கொத்துகளை இட்டுள்ளனர். இவற்றிற்கும் மேலே கிளையிடத்து அழகுபெற வளர்கின்றனவும், சாய்ந்து நீரின் கீழிடத்து இருப்பனவும் ஆகிய செந்நிற அரும்புகளால் இணைத்து ஒப்பக் கட்டிய மாலையைக் கொண்டையிலே சூழச் சுற்றியுள்ளனர்.

துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச்
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்துத்
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ.

-திருமுருகு 20-30

தளிரையும் மலரையும் காதிலே செருகிக் கொள்வது பண்டைய மரபு. தளிருக்குக் குழை என்ற பெயரும் உண்டு. தளிர்சூடிய வழக்கம் அற்றுப்போய் பொன்னணி வந்த இப்பொழுதும் காதணி ‘குழை’ என்றே வழங்கப் பெறுவது தளிரின் சிறப்புணர்த்தும். தளிர் மிக மென்மையானது, குழைவு மிகவுடைத்து. எனவேதான் ‘தளிர்வு மிகவுடைய தழைந்த செயலைக் குழைந்தான்’ என்று இப்பொழுதும் கூறுகின்றோம்.

சூரர மகளிர் சிவந்த அரோகந் தளிரினைத் தங்கள் காதுகளிலே செறித்துள்ளனர். நுண்ணிய வேலைப்பாடு அமைந்த அணிகலன்கள் அவர்கள் மார்பில் அழகுற அசைகின்றன. திட்பமும் வைரத்தன்மையும் நறுமண நாற்றமும் பொருந்திய சந்தனக் கட்டையை உரைத்து, அதனால் உண்டாகிய வண்ணமும் வனப்பும் உடைய சந்தனக் குழம்பை நன்மணம் கமழும் மருதப் பூங்கொத்தை வாரி அப்பினாற் போல, கோங்கினது குவிந்த அரும்பு போன்ற தம் இளமையான மார்பின் மேலே கொட்டியிருக்கிறார்கள். அந்தச் சந்தனத்தின் ஈரம் புலவர்தன் முன்னே விரிந்த வேங்கை மலரில் உள்ள நுண்ணிய மகரந்தப் பொடியை அதன்மேலே அப்பியதனோடு அமையாது, மேலும் அழகு செய்ய வேண்டி விளாமரத்தின் சிறிய கொழுந்துகளைக் கிள்ளி அதன் மேலே சிதறிக்கொண்டார்கள்.

இவ் வண்ணம் தங்களைப் பல்லாற்றானும் ஒப்பனை செய்து கொண்ட அவர்கள் “கோழியின் உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு உயர்ந்து, வஞ்சியாது எதிர்நின்று வென்று கொள்கின்ற வெற்றியையுடைய கொடி நீண்ட காலம் வாழ்வதாக” என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரித்து வாழ்த்தி, சீர்மை விளங்கும் மலையிடமெல்லாம் எதிரொலி செய்யுமாறு ஏற்றிப் போற்றிப் பாடி வண்ணச் சோலையில் விளையாடி மகிழ்கின்றனர்.

மரமேறுதல் தொழிலில் வல்ல மந்தியும் ஏறமுடியாத உயர்ச்சியினையுடைய மரங்கள் நெருங்கி நிறைந்த பக்க மலையில், வண்டுகளும் மொய்த்தலில்லாத தெய்வத் தன்மை வாய்ந்த நெருப்புப் போலும் பூவினையுடைய செங்காந்தள் மலரின் பெரிய குளிர்ந்த கண்ணியை விரும்பிச் சூடிய திருமுடியினை யுடையவன் திருமுருகன் ஆவன்.

இவ்வாறு இப்பகுதியில் சூரரமகளிர் தம் செயல்களும் விளையாட்டும் முருகன் விரும்பி அணியும் அடையாளப் பூமாலையாம் காந்தளங் கண்ணியும் சிறப்புற வருணிக்கப் பட்டுள்ளன.

………….துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி.
வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூரர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
.

– திருமுருகு : 30-44

சேவடி படரும் செம்மல் உள்ளம்

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி’ என்று தமிழ்க்குடியின் பழமையினைப் பாராட்டிப் பேசுகிறது புறப்பொருள் வெண்பா மாலை. சூரியனிடமிருந்து தெறித்து விழுந்த ஓர் பிழம்புத் துண்டம் பின்னர் மெல்ல மெல்ல இறுகிக் குளிர்ந்து மலை ஆயிற்று என்பர் நிலவியல் வல்லுநர். மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றியது கடல் என்பர்.

எனவே மண்ணாகிய பூதத்தினும் நீராகிய உயிர்ப்பொருள் காலத்தால் முந்தியது என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு பாறை நிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் தன்நிலை குலையும்படி உட்சென்று குரபன்மனை ஒளிவிடுந் தன் சுடர் வேலாலே கொன்றவன் முருகன். இதனைப் பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு’ என்று பரிபாடலும் ‘பாயிரும் பனிக்கடல் உள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே’ என்று சிலப்பதிகாரமும் பேசுகின்றன.மேலும், ‘வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேய்’ என்று பெரும்பாணாற்றுப் படையும், ‘சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்’ என்று அகநானூறும் பிற்காலத்தே நாம் கந்த புராணத்தில் காணும் புராணச் செய்தியினைக் கிளத்திக் கூறியுள்ளன.

இனி நக்கிரர் பெருமான் பேய்மகள் துணங்கைக் கூத்து ஆடிய செய்தியினை இழிப்புச் சுவைதோன்ற வருணித்துச் செல்கின்றார். பேய்மகள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் காய்ந்துபோன மயிரினையும், ஒன்றுக்கொன்று வரிசையில் பொருந்தாத பிறழ்ந்த பற்களையும், சுழலுகின்ற கருவிழியினையுடைய பசிய கண்களையும், கண்டாரை அச்சத்தாற் கொல்லும் கொடிய பார்வையினையும் உடையளாயிருக்கின்றாள். அவளின் செவித்துளை வங்கு போன்றிருத்தலினால் கூகைகள் ஆண்டு வந்து தங்கி உறைகின்றன. கொடிய பாம்புகள் அவளின் காதணிகளாகத் தொங்கி அவள் தன் பெரிய கொங்கைகளைத் தாக்கி வருத்துகின்றன. அவள் வயிற்றிடம் சருச்சரையையுடை யகாயுள்ளது. அவளின் விரைந்த கொடிய கடை அச்சத் தைத் தோற்றுவிக்கின்றது. அவள் குருதி தோய்ந்த கூர்மையான நகத்தையுடைய கொடிய விரல்களால், போர்க்களத்திலே தான் கண்களைத் தோண்டி விழுங்கிய புலால் நாற்றம் மிகுந்து வீசும் பெரிய தலையைத் தன்னுடைய ஒளி சுடர்விடும் வளையலை அணிந்துள்ள பெரியகையிலே தாங்கி, திருமுருகன் அடியார் துயர் அகல அவர்க்குப் பரிந்து பகைவர் மேற் சென்று, அவர்களைக் கொன்று குவித்த அடுகள வெற்றியைப் புகழ்ந்து பாடிக் கொண்டு தோள்களைப் பெயர்த்துப் புலாலை உண்ணும் வேட்கை மிகுந்து அங்காந்த வாயளாய்த் துணங்கை என்றும் கூத்தினை ஆடா நின்றாள். இவ்வாறு அஞ்சுவரு பேய்மகளின் அடுகளத் துணங்கைக் கூத்தை நக்கீரர் பெருமான் நவின்றுள்ளார்:

பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேள்
உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்க
பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்டு
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வல மடங்க

– திருமுருகு : 45-59

இந்தத் துணங்கைக் கூத்தினை மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் பின்வருமாறு கூறியுள்ளார். ஒப்புமைப் பகுதி உற்று நோக்குதற்குரியது.

கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி
இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ

பல்லோ முத்தோ என்னா திரங்காது
கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத்
தண்டாக் களிப்பின் ஆடுங் கூத்து.

-மணி:6: 120–162

இதன் பின்னர், செவ்வேற் சேயாம் முருகனின் நல்ல வெற்றியினைப் புகழ்ந்து பேசுகின்றார் புலவர். மக்கள் வடிவுடனும் விலங்கு வடிவுடனும் ஆக இரண்டு பெரிய வடிவினையுடைய சூரபதுமனின் உடலம் வேறு வேறாக அற்று விழும்படி முருகன் தன்னுடைய கூரிய இலைக் தொழிலமைந்த நெடுவேலாலே பிளந்தான். அசுரனோ கீழ்நோக்கித் தொங்கும் பூங்கொத்துக்களையுடைய மாமரமாக மாறினான். அவன் நல்ல வெற்றி அடங்க மாவினை வேரோடு சாய்த்துப் பிளந்தான் முருகன். ஒரு கூறு சேவலாகவும், மறு கூறு மயிலாகவும் ஆயிற்று. இத்தகு வெற்றியினைப் புகழ்ந்து பாடிப் பேய்மகள் துணங்கைக் கூத்து ஆடுகின்றாள்.

நக்கீரர் பெருமான் திருமுருகனிடம் நம்மை ஆற்றுப் படுத்துகின்றார். ”முருகப் பெருமானின் சிவந்த திருவடிகளைத் தேடிச்செல்லும் தலைமை சான்ற உள்ளத்துடனே நன்மையையே நாடிச் செல்லும் குறிக்கோளுடனே முருகன் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடத்திற்குச் செல்லுதலை நீ விரும்பினாயே யானால் முன்னர் எடுத்த பல பிறவிகளி லும் தேடிய நல்ல மனத்திலுள்ள விருப்பமானது இனிதே நிறைவேறும்படி நீ எண்ணிய செயலின் பயனை இப் பொழுதே பெறுவாய்” என்று சேவடி படரும் செம்மல் உள்ளம்’ முன்னிய வினையினை இன்னே பெறுதலைக் கூறுகின்றார் நக்கீரர்.

……………..கவிழிணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு

நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்
செலவுநீ நயந்தனை யாயின் பலவுடன் நன்னர்
நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே
பெறுதிநீ முன்னிய வினையே.

-திருமுருகு 59-66

எல்லாம் வல்ல இறைவன் ‘அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவன்’. ‘இவ் வண்ணத்தன், இவ் வடிவினன்’ என்று எழுதிக்காட்ட இயலாதவன். அறிவு கொண்டு ஆராய்வார்க்கு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட நிலையிலே இருப்பவன். அவனை ஆராய்ந்து கொண்டு இருக்கலாமே தவிர ஆராய்ந்து ஒரு முடிவு கட்ட முடியாது. சொல்லும் பொருளுமாய்த் துலங்குபவன் அவன். மறைகளுக்கும் எட்டாத நிறைநிலையிலே மாண்புடையார் நெஞ்சத்து அமர்ந்து விளங்குபவன் அவன். ‘பாலிற் படுநெய் போல் மறைய நின்றுளன்’. ‘பத்திவலையிற் படுபவன்’. இறைவன் எல்லாமாய் எங்குமாய் இன்மையாய் உண்மையாய் உருவமாய் அருவமாய் விளக்கமுறும் இறைவனின் பேரருட் பெருங்கருணைத் திறத்தினை என்னென்பது!

‘சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல்’ எய்து கின்றது இவ்வுலகு. அவன் நிறம் செய்யன்; சிவந்த ஆடையன். ‘குன்றி ஏய்க்கும் உடுக்கையினன்’. ‘பவளத் தன்ன மேனியினன் ! அனைத்திற்கும் மேலாகத் தாமரை புரையும் காமர் சேவடியினன்’. எனவே அடியவர்கள் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு’ முன்னிய வினை கைவரப்பெறு முருகன் திருவருளைக் கேட்கின்றனர்.

அடியவர்கள் முருகன் சேவடியினைத் தேடிச் செல்கின்றனர். இறைவன் திருவடி நிழல் வேண்டுமென்றே அடியவர் அனைவரும் விரும்புகின்றனர். சான்றாகத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தில் பின்வரும் குறட்பாக்களில் இறைவன் அடியிணை மலரினையே குறிப்பிட்டுள்ளார்.

கற்றதனா லாய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மானக்கவலை மாற்றல் அரிது

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இவ்வாறு பத்துக் குறட்பாக்களில் ஏழு குறட்பாக்கள் இறைவன் அடியினை அடைய வேண்டுவதன் இன்றியமை யாமை குறித்துப் பேசுகின்றன. திருமுருகாற்றுப் படையின் இந்த வரிக்கு (62) நச்சினார்க்கினியர் உரையெழுதுகின்ற பொழுது, ‘திருவடியிற் செல்லுவதற்குக் காரணமான நல்வினைகளைப் பல பிறப்புக்களிலும் விரும்பி நிகழ்த்தின கோட்பாட்டானே தலைமையினை யுடைத்தாகிய உள்ளத் தோடே’ என்று எழுதி, மேலும் ‘திருவடியே வீடாயிருக்கு மென்றார்; அது தென்னன் பெருந்துறையான், காட்டாதன வெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன்காட்டி (திருவா. திருவம்மானை,6) என்பதனாலும் பிறரும் திருவடியைக் கூறுமாற்றானுமுணர்க என்று எழுதிப் போந்தார்.

‘என்கடன் பணிசெய்து கிடப்பதே’ எனப் பெருந் தொண்டு வாழ்வு நடாத்திய சைவப் பெருந்தகையாம் திருநாவுக்கரசர் பெருமானும்,

புண்ணியனே நின்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே

என்றும்,

இறுமாந்திருப்பன் கொலோ
ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமானேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு
இறுமாந்திருப்பன் கொலோ

என்றும் இறைவன் சேவடியினைப் பரவி வணங்குகின்றார்.

அடியிற் காட்டப்பெறும் இலக்கியப் பகுதிகள் ‘சேவடி படரும் செம்மல்’ உள்ளத்தினையே நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

அறவியங் கிழவோன் அடியிணையாகிய
பிறவி யென்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குள தாதலின்

– மணிமேகலை : 11, 23-25

ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த்தாள்

– திருவாசகம் : 43

கற்றாங்கு அவன் கழல் பேணினர்

– திருவாசகம் : 508

நவைசெய் பிறவிக் கடலகத்துள்
பாதகமலந் தொழுவேங்கள்
பசையாப்பவிழப் பணியாயே

-சீவக சிந்தாமணி: 1242

அணைவுற வந்தெழும் அறிவு
தொடங்கின அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள்
இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர்.

-பெரிய புராணம்: திருஞான : 83

செய்யுள் நிகழ் சொற்றெளிவும்
செவ்விய நூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயன் இதுவே
எனத்துணிந்து விளங்கி ஒளிர்
மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார்.

-பெரிய புராணம் : பொய்யடிமை. 1

உள்ள நிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன் கழலிற் செறிலென்றே
கொள்ளும் உணர் வினின்
முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாய் என்றும்
பயின்றுவரும் பண்புடையார்.

-பெரிய புராணம் : சிறுத்தொண்டர்:4.

பாதமலர் எழுபிறவிக் கடல் நீந்தும்
புணையென்பர் பற்றிலாதோர்.

-திருவிளையாடற் புராணம்: திருவாலவா 2

மேற்கூறிய எடுத்துக்காட்டுகளால் சேவடியின் சிறப்பு நலமே எடுத்து இனிது மொழியப்படுகின்றது. அச்சேவடியினை வணங்குவோர்க்குக் கிடைக்கும் நற்பேறுகளைக் கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியர் பின்வருமாறு மகிழ்ந்து கூறுகின்றார்.

ஆதலின் நமது சத்தி யறுமுகன் அவனும் யாமும்
பேதக மன்றால் நம்போற்
பிரிவிலன் யாண்டும் நின்றான்

ஏதமில் குழவி போல்வான்
யாவையு முணர்ந்தான் சீரும்
போதமும் அழிவில் வீடும்
போற்றினர்க் கருள வல்லான்.

-கந்தபுராணம்: திருவிளை : 19

எனவே திருமுருகன் சேவடி படரும் செம்மல் உள்ள மொடு செலவு நயந்தால் முன்னிய வினையை இன்னே பெறலாம் என்கின்றார் நக்கீரர் பெருமாள்.

பொருநர்த் தேய்த்த போரரு வாயில்

திருமுருகன் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இடங்களை ஒவ்வொன்றாகக் கூறப்புகுந்த நக்கீரர் பெருமான் முதற்கண் திருப்பரங்குன்றத்தினைப் புகழ்ந்து கூறுகின்றார். ஏதேனும் ஓர் ஊருக்கு வழிகாட்ட வேண்டுமானால் அந்த ஊருக்கு அண்மையிலுள்ள பெரிய ஊரினைச் சுட்டிக்காட்டி, அதற்கு அருகில் இந்தத் திசையில் இவ்வளவு தூரத்தில் அவ்வூர் இருக்கிறது என்று கூறுதல் உலக வழக்காகும். அவ்வாறே நக்கீரர் பெருமானும் தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்களை மறுகின் மதுரையின் பெருமையினை முதற்கண் பலபடப் பாராட்டிப் பேசுகின்றார்.

போரை விரும்பி – தம்மொடு பொருவதற்குப் பகைவரை விரும்பி – சேணிலத்தும் சென்றுயர்ந்து நிற்கும் நீண்ட கொடிக்கு அருகில் நூலால் வரிந்து கட்டப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையான் தொங்கிக்கொண்டிருந்தன. போர் தொடுக்கும் பகைவர் யாவரையும் இல்லை யென்று தேய்த்து அடியோடு அழித்து விட்டமையின், தலைவாயிலில் பகைவர் புகுவதும் போரிடுவதும் அற்று வறிதாகப் போய்விட்டது.

செருப்புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்.

-திருமுருகு: 67-69

பண்டைக் காலத்தே மன்னர்கள் தம் வீரம் புலப்படும் வழியாகப் பகைவரைப் பெறுதற் பொருட்டுத் தம் அரண்மனையின் தலைவாயிலிலே கொடியினை உயர்த்தி, அதன் அருகே பந்தையும் பாவையையும் தொங்க விட்டிருப்பர். அப்பந்தும் பாவையும் தொங்கவிடுதலின் கருத்து ‘எம்மை எதிர்நின்று போரிட்டு வெல்லும் ஆண்மையாளர் உளரோ? எம் பகைவர்கள் யாரேனும் இருப்பின் அவரை யாம் பெண்டிர் போலக் கருதுகின்றோம். அவ்வாறு ஆண்மையாளர் எவரேனும் இருப்பின் அவர்கள் இப் பந்தினையும் பாவையினையும் அறுக்கலாம் – அதனால் போரைத் தொடங்கலாம்’ என்பதாகும்.

இதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின வென்றவாறு” என்று உரையெழுதுகின்றார். இந்தப் பழம்பெரும் வழக்கத்தினை,

பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும்
என்றிவை பலவுஞ் சென்றுசென் றறியும்
முந்தை மகளிரை யியற்றி

-தொல்: புறத்திணை இயல். சூ.12.ந.மேற்

என்றும்,

பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும்
பலவுஞ்சென் றெறிகிற்கும்
முந்தை மாதரை யியற்றுபு பின்றைமொய்ப்
பகழி வாயிலிற் றூக்கி

– தணிகை : சீபரி பூரண : 58

என்றும்,

பகைவரைப் பாவை மாரெனத் தெரிப்பப்
பந்தொடு பாவைக டூங்கித்
தகைசிறி தறியா வாயில்சா னாஞ்சிற்
றடப்பெரு நொச்சியும்

-திருநாகைக் – திருநகரம்: 90

என்றும் வரும் இலக்கியச் சான்றுகளால் தெளியலாம்.

இதுபோன்றே,

செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
கோள்வல் முதலைய குண்டுகண் அகழி
வான் உற ஓங்கிய வளைந்துசெய் புரிசை

– பதிற்றுப்பத்து : 53 : 6-9.

என்ற பதிற்றுப்பத்து அடிகளுக்கு, ‘சிலம்பும் தரையும் புரிசைக்கண் தங்கின வென்றது, ஈண்டுப் பொருவீரு ளீரேல் நும்காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும் தழையினையும் அணியினென் அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாரென்க” என்று பதிற்றுப் பத்தின் பழைய உரைகாரர் எழுதிய விசேடவுரை இங்கு ஒப்புநோக்கி உண்மை உணர்தற்குரியதாகும்.

குன்றமர்ந்து உறைதலும் உரியன்

மதுரை மாநகரம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முச்சங்கம் வைத்து மொழி வளர்த்த பாண்டியர் பரம்பரையால் ஆளப்பெற்றது. பழைய தமிழ்ப் புலவர்கள் மதுரையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதெல்லாம் அதனைத் தமிழோடு தொடர்புபடுத்தியே பேசுகின்றனர். புலத்தினும் போரிலும் வெல்ல முடியாக கூடல் என்று மதுரை சிறப்பித்துப் பேசப்படுகின்றது.

தண்தமிழ் வேவித் தமிழ் நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை

என்னும் பரிபாடலின் மிகைப் பாடலும்,

நிலனாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்
புலனாவிற் பிறந்தசொற்புதிதுண்ணும் பொழுதன்றோ

பலனாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்தக்கால்
சுடரிழாய் நமக்கவர் வருதும் என்று உரைத்ததை

பாலைக் கலி : 35: 17-20

எனவும்,

சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி இருநிலம்
தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்
நீர்முற்றி மதில்பொருஉம் பகையல்லால் நேராதார்

போர்முற்று ஒன்றறியாத புரிசைதும் புனலூரன்

-மருதக் கலி : 2:2-5

எனவும்,

பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளும் செல்வர்க்கு
மதிமொழி இடல்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவிசெறு வாக
முதுமொழி நீராப் புலனா வுழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர

-மருதக் கலி: 3 : 1-5

எனவும் வருகின்ற கலித்தொகைத் தொடர்களும் மதுரை தமிழோடு நெருங்கிய தொடர்புடையது என்பதை நுவலா நிற்கின்றன.

மேலும்,

இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே

-புறநானூறு:58:12-13

என்னும் புறப்பாடல் அடிகளும்,

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை

-சிறுபாணாற்றுப்படை: 66-76

என்னும் சிறுபாணாற்றுப்படை அடிகளும்,

தென்தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரை

-சிலப்பதிகாரம் : 10:58

என்னும் சிலப்பதிகாரத் தொடரும்,

தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்

– மணிமேகலை: 25: 139.

என்னும் மணிமேகலைத் தொடரும் மேற்கூறிய கருத்தினையே அரண் செய்கின்றன.

மதுரையில் வாழ்வோர் ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று வாழ்வோர் ; வணிகரும் அறக்கூறுபாட்டின் திறத்திலேயே பொருளிட்டுகின்றனர். அங்காடிகள் அனைத்திலும் திரு வீற்றிருக்கின்றது. எங்கும் செல்வம் நிரம்பிய மாட மாளிகைகள் நிறைந்து தோன்றுகின்றன :

திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகிற் கூடல்.

-திருமுருகு: 70-71

அங்காடித் தெருக்களில் தீது தீர்ந்து கிடக்கின்றமையானது வாணிபத்தில் வஞ்சகச் செயல் ஏதும் நுழைந்து அதனைப் பாழ்படுத்தி விடாமையாகும். இதனை,

தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூம். [குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்

-பட்டினப்பாலை: 209-211

என்னும் பட்டினப்பாலை அடிகளால் அறியலாம்.

அடுத்து, மதுரையைப் பற்றிப் பிறிதொரு தொடர்பும் இலக்கியத்தில் குறிக்கப் பெறுகின்றது. அது ‘நான்மாடக் கூடல்’ என்பதாகும்.

மாட மதுரையும் பீடார் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்

என்று மதுரை ‘மாட மதுரை’ என வழங்கப்படுகின்றது. மேலும் கீழ்க்காணும் பல இலக்கிய மேற்கோள்கள் இக்கருத்தினை நன்கு வலியுறுத்தும்.

மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்

-மதுரைக்காஞ்சி : 249

மாடமலி மறுகிற் கூட லாங்கண்

-அகநானூறு : 346:20

மாட மறுகின் மருலி மறுகுறக்
கூடல் விழையுந் தகைத்து……
நான்மாடக் கூடனகர்

-பரிபாடல்:20:25-5

மதிமலி புரிசை மாடக் கூடற்பதி

-திருமுகப்பாசுரம்

கொடிமாடக் கூடல்

-சிலப்: குன்றக்குறனை : பாட்டுமடை: 24

இவ்வாறு புகழ்வாய்ந்த மதுரைக்கு மேற்றிசையில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. அகநானூற்றிலும் இச் செய்தி பேசப்பெறுகின்றது:

கொடி நுடங்கு மறுகிற் கூடற் குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய
ஓடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டு சுனைநீலத்து.

-அகநானூறு : 149: 14-17

மலையின் அடிவாரத்தே வளம் பொருந்திய வயல்கள் உள்ளன. நீர்வளமும் நிலவளமும் செறிந்து அரியசேறு ஆழ்ந்து காணப்படுகின்றது. சேற்றிடையே முள்ளையுடைய தாமரை மலர்களில் வண்டுக் கூட்டங்கள் இரவு முழுவதும் இனிமையுடன் தங்கி நின்று, வைகறையில் மலர்ந்து காணும் நெய்தல் மலர்களில் தேனை உறிஞ்சிக் குடித்து அவற்றின் ரீங்காரம் இடையறாது கேட்டுக்கொண்டிருக்கும் குன்று திருமுருகன் விரும்பி உறையும் திருப்பரங் குன்றாகும்;

இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைத்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த கரமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன்.

– திருமுருகு: 72-70

ஆறுமுகமும் பன்னிருகையும்

அஞ்சிறை வண்டுக் கூட்டங்கள் ஒலிக்கும் திருப்பரங் குன்றி லன்றியும் பல்வேறு இடங்களிலும் திருமுருகன் கோயில் கொண்டுள்ளான். கூரிய நுனியுடைய தோட்டி வெட்டி வெட்டி வெட்டுத் தழும்பு ஆழ்ந்திருக்கின்ற செம்புள்ளி கரும்புள்ளிகளையுடைய யானையின் நெற்றியில் பொன்னரி மாலை பட்டத்தோடு கிடந்து அசைகின்றது. யானையின் மேல் இரண்டு பக்கங்களிலும் தொங்கவிடப்பட்டிருக்கின்ற மணிகள் மாறி மாறி ஒலிக்கின்றன. வேகமான நடையினையும், இயமனைப் போல வலியினையும், காற்றுப் போல விரைந்த செலவினையும் உடைய யானையின் மேல் முருகப்பெருமான் வீற்றிருக்கின்றான்.

தாமம், முகுடம், பதுமம், கிம்புரி, கோடகம் என்ற ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய, முடிக்குச் செய்யும் தொழிலெல்லாம் செய்து முற்றுப் பெற்ற முடியோடு கூடி விளங்கிய மின்னல் ஒளிக்கு இயைந்த மாணிக்கக் கற்கள் முடியில் தங்கி ஒளிவீச, பல வகைத் தொழிற் கூறுபாடுகள் அமைந்த பொன்னாலான மகரக் குழைகள் ஒளியுமிழும் சந்திரனைச் சூழ்ந்து விளங்கும் விண்மீன்கள் போல ஒளிவீசித் திகழா நிற்ப, குற்றமற்ற தவத்தொழிலில் தலைப்பட்டு அதனைச் செவ்வனே முடித்தோருடைய தூய உள்ளத்தே பொருந்தித் தோன்றும் ஒளியும் நிறமும் உடைய திருமுகங்கள் முருகனின் அறுமுகங்களாகும்.

‘அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின்’ என் “மலர்மிசை ஏகினான்” என்னும் குறட்பாவினுக்குப் பொருள் விரித்தார் பரிமேலழகர். நக்கீரனாரும் அன்பருடைய உள்ளத்தே அறுமுருகன் ஒளிப்பொருளாகவே தோன்றுவான் என்பதனை விளக்கவே ‘மனன் நேர்பு எழுதரு வாள்நிற முகனே’ என்றார். இதனையே சிவஞான சித்தியாரும்,

இறைஞானந் தந்து தாளிதல் சுடரிழந்த
துங்களிழிச் சோதியும் உட்சோதியும் பெற்றாற்போல்

சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே

என்று குறிப்பிடுகின்றது.

இனி, ஆறுமுகங்களின் செயல்களை முறையே குறிப்பிடுகின்றார் நக்கீரர்,

பேரிருளாலே போர்த்து மறைக்கப்பட்ட உலகம் அவ்விருட் குற்றம் சிறிதளவும் இல்லாமல் விளங்கும் பொருட்டுப் பலவாகிய ஒளிக்கதிர்களையும் விரித்துத் தோற்றுவித்தது ஒரு முகம். பிறிதொரு முகம் அன்பு நிறைந்த அடியவர்கள் நாளும் தன்னைப் போற்ற,அவர்கள் அன்புள்ளத்திற்கு நெகிழ்ந்து, அவர்க்கு இனிமையாகப் பொருந்தி ஒழுகி, அவர்பால் வைத்த அன்புப் பெருக்காலே அவர்களுக்கு வேண்டும் வரங்களைக் கொடுத்தது. மற்றொரு முகம், மந்திரத்தை ஓதுதலோடு அமையாது மெய்ந்நூல் கூறிய முறைமையிற் பிறழாத அந்தணர்களுடைய வேள்விகள் அசுரர் தம் செயலால் தீங்கு நேராதபடி நினைத்து நிறைவேற்றி வைக்கின்றது. நான்காவது திருமுகம் நூல் களாற் காட்டமுடியாது எஞ்சியுள்ள மறைப் பொருள்களைத் தம் அன்பர்கள் இன்பமும் காவலும் உறும்படி ஆராய்ந்துணர்த்தித் திங்கள் போலத் திசை விளக்குகின்றது. ஐந்தாவது திருமுகமோ வென்னில், தேவர் களுக்குப் பகைவர்களான அசுரர்களை அழித்து, தேவர் களிடத்திலும் அசுரர்களிடத்திலும் ஒத்துச் சென்று அருள்பாலிக்கும் தன் நடுவுநிலைமையைக் கைவிட்டு அசுரர்கள் பால் கறுவு கொள் நெஞ்சங் கொண்டு, அவர்களைக் கொன்று களவேள்வி செய்தது. ஆறாம் முகம் குறவர் குடியில் தோன்றிய இளமைத் தன்மையும் பூங்கொடி போன்ற இடையினையும் உடைய வள்ளியம்மையோடு கலந்து மகிழும் மகிழ்ச்சியையும் பொருந்திற்று.

இவ்வாறு, முருகப்பெருமாளின் ஆறு திருமுகங்களையும் அழகுற விரித்துரைத்த கவிஞர் பெருமான் நக்கீரர், பின்னர் அப்பெருமானின் பன்னிரு திருக்கைகளின் செயல்களை அத்திருமுகங்களின் செயல்களுக்கேற்பப் பொருத்திக் காட்டுகின்றார்.

பொன்னாலும் முத்தாலும் ஆன மாலைகள் தாங்கிய அழகும் திறனும் உடைய மார்பு உத்தம இலக்கணம் அமைந்தது; வலியும், ஒளியும், வளமும் நிறைந்தது. வேற் படையை எறிந்து பகைவருடலைப் பிளந்து மீண்டும் அதனை வாங்கிக் கொண்ட புகழ்பெற்ற தோள்கள் திருமுருகனின் தோள்களாகும். வீட்டுப் பேறு அடையும் தகுதி சான்ற துறவிகள் தடையின்றி அவ்வீட்டுலகத்தை அடையுமாறு அவர்கட்குப் பாதுகாவலாக ஏந்தியது ஒருகை. அதற்கிணையாகிய மற்றொரு கை இடையிலே வைக்கப் பட்டது. இவை முதலாம் இணைத் திருக்கைகளின் செயல்களாகும். இரண்டாம் இணைத் திருக்கைகள், சிவந்த நிறமுடைய ஆடையை உடுத்தா நின்ற துடையின் மேலே கிடப்பவும், தோட்டியைச் செலுத்தா நிற்பவுமாயுள்ளன. மூன்றாம் இணைத் திருக்கைகள் அழகிய பெரிய பரிசையும் வேற்படையையும் வலமாகச் சுழற்றி நிற்கின்றன. நான்காம் இணைத் திருக்கைகள் முனிவர்களுக்கு எஞ்சிய பொருளை ஏமுற நாடி உணர்த்துவான் வேண்டி மார்போடே விளங்கியும் மார்பில் தொங்கும் மாலையோடு சேர்ந்து அழகுற்றும் பொலிகின்றன. ஐந்தாம் இணைத் திருக்கையில் ஒன்று தொடி நழுவும்படி மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை அளிக்கிறது; பிறிதொன்றான அதன் இணைக்கை இன்னோசை தரும் மணியை ஒலிப்பிக்கிறது. ஆறாம் இணைத் திருக்கைகளின் ஒரு கை உலகியல் நடைபெற நீலநிற மேகத்தாலே மழையை மிகுதியாகப் பெய்வித்து நிற்கவும் அதற்கு இணையான கை இல்வாழ்க்கை இனிது தொடங்கத் தேவ மகளிர்க்கு மணமாலையைச் சூட்டுகின்றது.

இவ்வாறு பன்னிரு கைகளும் முறையே ஆறு திருமுகங்களுக்கும் ஏற்ற முறையில் பொருந்தும்படி தொழிலாற்றுகின்றன.

பல வாத்தியங்கள் முழங்க, கொம்பு வாத்தியம் மிக்கொலிப்ப, வெண்சங்கு முழங்க, இடி போன்ற முரசம் ஒலி செய்யா நிற்ப, வெல்கொடியிலிருந்து மயில் அகவ, சான்றோர்களாலே புகழப்பட்ட மிக்க சிறப்பினையுடைய நாமனூரலை வாய் என்னும் திருச்செந்தூரிற் சென்று கோயில்கொண்டு எழுந்தருளியிருத்தலும் அம்முருகப் பெருமானுக்கு நிலை பெற்ற பண்பாகும். இவ்வாறு நக்கீரர் திருச்சிரலைவாய் என்னும் திருப்பதியில் திருமுருகன், ஆறுமுகமும் பன்னிரு கையுமாகக் கோலங்கொண்டு கொலுவீற்றிருக்கும். தன்மையை அழகுறப் பாடுகின்றார்.

விசும்பா றாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே.

-திருமுருகு 123 – 125

ஆவினன்குடி அசைதலும் உரியன்

உயர்ந்தோராற் புகழப்பட்ட மிக வுயர்ந்த விழுமிய பெருமையினைக் கொண்ட திருச்சீரலைவாய் எனும் திருச் செந்தூரிலே அறுமுகப் பெருமான் ஓராறு முகமும் ஈராறு கையுமாய் நிலைபெற்று வாழும் பண்பினையுடையவன்; திருச்சீரலைவாயினைச் சொன்ன பிறகு நக்கீரர் திருவாவினன் குடியினைக் கூறப் புகுகின்றார். முதற்கண், குற்றமற்ற முனிவர் தம் தவவொழுக்கத்தினை விளக்குகின்றார்.

மரவுரி தைத்த உடையினராய், அழகுடன் கூடிய வெண்சங்கு நிறத்தினை யொத்த நரை முடியினை உடையராய், குற்றமற விளங்கும் நிறத்தினராய், மான்தோல் பொருந்தின, விரதத்தால் உடல் வாடி இளைத்த எலும்பு தெரியும் மார்பினராய், மாறுபாட்டினையும் சினத்தினையும் மனத்தினின்று நீக்கியவராய், எவ்வகைப்பட்ட பொருள்களையும் கற்றுவல்லாரும் அறியப்படாத அறிவின் மிக்காராய், பல கலை ஞானங்களையும் கற்றுத் துறைபோகிய அறிஞர்க்கு எல்லையாம் தலைமையினை உடையராய், காமம் வெகுளி முதலியவற்றையெல்லாம் தவிர்த்த தோற்றத் தினையுடையராய், தவத்தால் ஏற்படும் மெய்வருத்தம் இருப்பவும், மனத்தால் புலப்படும் துன்பம் சிறிதள வேனும் அறியப்படாத இயல்பினையுடையராய், எவரிடமும் வெறுப்பில்லாத நல்லறிவினை யுடையராய் விளங்கும் துனியில் காட்சி முனிவர் முன்னே செல்கின்றனர். பின்னர்க் குறிப்பிடப்பெறும் தேவர்களினும் முருகப் பெருமானால் விரும்பப்படுவோர் முனிவரே யாதலின் முனிவர்கள் முற் கூறப்பெற்றனர்.

தவவொழுக்கத்திலே தலைசிறந்த முனிவர்தம் ஒழுக லாறுகளைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் வாகைப் படலத்தின் கீழ், பின்வருமாறு குறிக்கின்றார்.

நீர்பலகான் முழ்கி நிலத்தசை இத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடரோம்பிஊரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி.

-புறப்பொருள் வெண்பா மாலை: வாகை: 14

முனிவர் தம் உடலைப் போற்றி வளர்க்க விரும்பார். தவவொழுக்கம் பேணுவதற்கு உடல் ஓர் கருவியாக நிற்கின்றது என்ற அளவிலே அவர்கள் அமைதி பெறுகின்றனர். அம்மட்டே அவர்கள் உடலை ஓம்புவது.

மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல் பிறப்புறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

-திருக்குறள் : 345

என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழியும் இங்கே உன்னுதற்குரித்து.

முனிவர்க்கு அடுத்த நிலையில் யாழ் இயக்கும் கந்தருவர் மாண்பினை எடுத்து மொழிகின்றார் நக்கீரர்.

புகையைக் கையினாலே முகந்தாற் போல மென்மையா யிருக்கும் குற்றமற்ற நுண்ணிய ஆடையினையும், மொட்டு அற மலர்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும், தம் எஃகுச் செவிக்குப் பொருந்த வைத்த இசையை அளந்து பண்ணுறுத்திய நரம்புக் கருவியினையுடைய நல்ல யாழின் இசையிலே பயின்று நன்மை நிறைந்த நெஞ்சுடைமையாலே எக்காலத்திலும் இனிய மென்மொழியே பேசும் இயல்பினை யுடையோராயும் விளங்கும் யாழ் இசையில் வல்ல கந்தருவர் இனிய யாழ் நரம்பினை இயக்குகின்றனர்.

நோயில்லாமல் நன்கமைந்த உடம்பினையும், மாந்தளிர் போலும் நிறத்தினையுடைய திருமேனியினையும், விளங்குந் தோறும் பொன்னை உரைத்தாலொத்த அழகிய தேமலினையும் இனிய முறுவலினையும் மேகலையணியப்பட்ட பணிந் தேந்தும் அல்குலினையும் உடையராய்க் குற்றமில்லாத கந்தருவ மகளிர் குற்றமின்றி விளங்கா நிற்கின்றனர்.

இனி மேலே “புள்ளணி நீள்கொடிச் செல்வனாம்” திருமாலை வருணிக்கப் புகுகின்றார் புலவர். நஞ்சோடும். வெண்பல்லோடும் தீக்கால்வது போன்ற நெட்டுயிர்ப் போடும், கண்டார்க்கு அச்சத்தைத் தோற்றுவிக்கும்.

கொடிய வலியோடும் விளங்கும் பாம்புகள் மாளும்படி அடிக்கும் பல வரிகளையும் வளைந்த சிறகுகளையும் உடைய கருடனைத் தம் நெடிய கொடியாகக் கொண்ட திருமால், முருகக் கடவுளைக் காண வருகின்றார்.

புள்ளணி நீள்கொடிப் புணர்நிலை தோன்றும்

– சிலப்பதிகாரம்: 11: 136

என்ற சிலப்பதிகார அடியும்.

மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்

-புறநானூறு : 56 : 5-6

என்ற புறப்பாடல் அடிகளும் இங்கே ஒப்பு நோக்கி மகிழ்தற்குரியன.

வெள்ளிய ஆனேற்றை வெற்றிக் கொடியாக உயர்த்தியவனும் பலராலும் புகழப்படும் திண்தோளினையுடையவனும், உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டு விளங்கும் திருமேனியினையுடையவனும், இமைத்தலில்லாத முக்கண்களையுடையவனும், முப்புரங்களை எரித்தவனும், மாறுபாடு மிக்கவனும் ஆகிய சிவன் ஆங்கே எழுந்தருளு கின்றான்.

அடுத்து, ஆயிரங் கண்களையும், நூறு வேள்விகளை இயற்றிப் பெற்ற பெரிய வெற்றியினையும், நான்கு ஏந்திய கொம்புகளையும் நெடிய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின் பிடரியிலே ஏறிய செல்வ வளம் மிக்க இந்திரனும் ஆகிய பிரமன் ஒழிந்த பிற கடவுளர் எல்லாம் தத்தம் தொழிலைப் பண்டுபோற் செய்து தலைவராகக் கருதியும், திருமாலின் திருவுந்திக் கமலத்தில் பிறந்தவனும் அளவில்லாத ஊழியை உடையனும் நான்கு திருமுகங்களை உடைய வனும் ஆகிய அயனாம் பிரமனை விடுவிக்கக் கருதியும் திருவாவினன்குடிக்கு முருகப் பெருமானைத் தரிசிக்க எழுந்தருளுகின்றனர்.

நான்முகனாம் பிரமனை முருகப் பெருமான் சிறையிட்ட செய்தியினைக் கந்தர் கலிவெண்பா பின்வருமாறு நுவலும்:

..படைப்போன்
அகந்தை யுரைப்பமறை யாதி யெழுத்தென்று
உகந்த பிரணவத்தி னுண்மைபுகன்றிலையால்

சிட்டித் தொழிலதனைச் செய்வ தெங்ங னென்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே.

-கந்தர் கலி வெண்பா: 90-92

ஆதவனைப் போலத் தோன்றுகின்ற வெறுப்பற்ற அறிவினை யுடையவராம் நான்கு வேறுபட்ட இயல்பினையுடைய பன்னிரு ஆதித்தியரும், பதினொரு உருத்திரரும், அட்டவசுக்களும் அயசூரி (மருத்துவர்) களாகிய இருவரும் ஆகிய முப்பத்து மூவருடனே பதினெட்டு வகையினாலும் உயர்ந்த நிலையைப் பெற்றவர்களும் ஆகிய பதினெண் கணங்களும், விண்மீன் போல் பொலிவு பெற்றாலொத்த தோற்றத்தினையுடையராய், காற்றுப் போன்று விரைந்த செலவினையுடையராய், காற்றிடைத் தீத்தோன்றினாற் போன்ற வலியினையுடையராய், இடி இடித்தாற் போன்ற குரலினை யுடையராய், தம் இடும்பையாகிய குறையை முருகப் பெருமான்பாற் கூறிக் குறையிரந்து தத்தம் தலைமையினைப் பெறும் முறைமையினை முற்ற முடித்துக் கோடற்கு வானத்தின் வழியே வந்து முருகப் பெருமானைக் காண ஒருங்கே நிற்கின்றனர்.

குற்றமற்ற கொள்கையினையுடைய அறக்கற்பினையுடைய தெய்வயானையாருடனே சிலநாள் திருவாவினன்குடி என்னும் ஊரிலே எழுந்தருளியிருத்தலும் உரியன் முருகன் என்று கூறி முடிக்கின்றார் நக்கீரர்:

தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்.

– திருமுருகு: 175-176

பண்டைக் காலத்தே இத்திருவாவினன்குடி எனப்படும் இக்காலப் பழனிமலை பொதினி என்னும் பெயருடைத் தாய் ஆவி என்னும் வேளிர்குலத் தலைவனுக்குரியதா யிருந்தது என்பதைச் சங்க இலக்கியங் கொண்டு தெளியலாம். நச்சினார்க்கினியர் உரையால் இப்பழம்பதி ‘சித்தன் வாழ்வு’ எனவும் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்துநல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்

என்னும் ஔவையார் கூற்றால் இவ்வுண்மை புலப்படுகின்றது.

நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னரே திருவாவினன்குடி பழனி என் வழங்கப்பெற்றிருக்க வேண்டும் என்பதனை இது தெளிவிக்கின்றது.

முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர்

குற்றமற்ற அறக் கற்பினையுடைய தெய்வயானையோடு ஆவினன் குடியில் வீற்றிருக்கும் அருட்டிரு முருகனைக் கண்டோம். ஈண்டு திருவேரகத்தில் கொலு வீற்றிருக்கும் கந்தவேளைக் காண்போம். அறன் நவில் கொள்கை அந்தணர் திருவேரகத்தில் தத்தம் கடமையினைச் செய்யும் கோட்பாட்டினை நக்கீரர் பெருமான் கவினுறக் கிளத்துகின்றார். ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பாக்கமும்’ என்ற தொல்காப்பியத் தொடர் வேள்வி இயற்றும் அந்தணர் தம்மைச் சுட்டிக் காட்டுகின்றது. ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமற் கடனாற்றி, தாயும் தந்தையும் என்னும் இருவர் குவமும் உலகத்தார் நன்றென்று மதித்துப் பாராட்ட, பல்வகை மாட்சியும் நிறைந்த பழைய குடியிலே பிறந்த அந்தணர்களை முதற்கண் நக்கீரர் குறிப்பிடுகின்றார்.

ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றலென்று ஆறுபுரிந்து ஒழுகும்
அறம்புரி அந்தணர்

-பதிற்றுப்பத்து: 24: 6-8

என்று பதிற்றுப்பத்து, அந்தணர்தம் கடப்பாட்டினை நுவலுகின்றது. நாற்பத்தெட்டு ஆண்டுகள் நல்ல பிரமசரிய விரதம் காத்தவர்கள்; இளமை இன்பத்தைத் துய்க்காமல் பிரமசரிய நோன்பு இயற்றிய பேராண்மையாளராய், அறங்கூறும் கோட்பாடுடையவராய் முத்தீ வேட்கின்றனர். புறநானூற்றின் இரண்டாவது பாடலிலேயே அந்தண அருங்கடன் இறுக்கும் முத்தீ பேசப்படுகின்றது. ‘ஒன்று புரிந்து அடங்கிய ‘இருபிறப்பாளர் முத்தி’ என்று மேலும் புறப்பாடல் கூறுகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் அந்தணர்தம் செயல்களைப் பின்வருமாறு கூறுகின்றார் :

ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழில் அந்தணர்.

– சிலப்பதிகாரம்: 23:67-70.

பிரமசரிய விரதம் காப்பது மிகவும் அரிது. ‘சிந்தையை அடக்கிச் சும்மாயிருக்கும் நிலை’ அரிது என்பர். மனம் எனும் மாயக் குரங்கினை அடக்குவது அரிது என்பர் தத்துவ ஞானிகள். இன்பம் முற்றிலும் நுகரவேண்டிய துய்க்க வேண்டிய இளமைப் பருவத்திலே மனத்தை அடக்கிப் பிரமசரிய விரதம் காப்பதென்பது அரிதினும் அரிய செயலாகும். இதனை உள்ளத்தில் கொண்டே இளங்கோவடிகளும்,

மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படா அது
ஒல்கா உள்ளத்து ஓடும்

-சிலப்பதிகாரம்: 23: 36-39

என்று கூறியுள்ளார்.

முத்தி எனப்படுவது ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருக பத்தியம் முதலியனவாகும். நாற்சதுரமும் முச்சதுரம் வில்வடிவுமாகிய மூன்று தீயால் உண்டாகிய செல்வத்தினை யுடையராய் உபநயனத்துக்கு முன் ஒரு பிறப்பும், பின்பு ஒரு பிறப்புமாக இருபிறப்பினையுடைய அந்தணர் என்று நக்கீரர் குறிப்பிடுகின்றார். மூன்றான தீக்களில் ஒன்று வேதத்தை வழங்கவும், ஒன்று தேவர்கட்குத் தட்சிணை கொடுக்கவும், ஒன்று பூலோகத்தை ரட்சை பண்ணவும் என்ற விளக்கம் உரையாசிரியர்களால் கிடைக்கப் பெறுகின்றது.

இந்த அந்தணர்கள் வழிபடுங் காலமறிந்து வாழ்த்துக்கூறி இறைவனை வந்திக்கின்றனர்.

பொழு தறிந்து நுவல” என்பதற்கு, “உதயகாலத்தும் மத்தியான்ன காலத்தும் அத்தமன காலத்தும் தாபனம், அநுட்டானம் பூசையாகிய மூன்று தொழிலையும் முயன்று செய்ய” என்ற உரை வகுப்பர் சிலர். அந்தணர்கள் பூணூலினையும் புலராத ஆடையையும் அணிந்து கொண்டு தலைமேலே குவித்த கையினராய் முருகனைப் பரவிப் புகழ்ந்து ஆறெழுத்தினை அடக்கிய கேட்டற்கரிய மந்திரத்தை நாப்புடை பெயரும் அளவிலே ஓதுகின்றனர். இவர்களை

புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை
முந்நூன் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர்

-சிலப்பதிகாரம்: 25: 126-128

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

‘சரவணபவ’ என்னும் மறைமொழியினை – ‘நமோ குமாராய’ என்னும் மறைமொழியிளைப் பிறர் செவியிற் படாதவாறு நாப்புடை பெயருமளவானே ஓதி, மணம் மிக்க மலர்களைத் தூவி வாழ்த்துக்கூறி நிற்கின்றனர். இவ் அந்தணர் செயல்களுக்குப் பெரிதும் மகிழ்ந்து திருமுருகன் திருவேரகம் என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் என்று கூறி முடிக்கின்றார் நக்கீரர்.

திருவேரகம் என்பதற்கு உரையாசிரியர் நச்சினார்க் கினியர் ‘மலை நாட்டகத்தொரு திருப்பதி’ என்று உரை யெழுதியுள்ளார். சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், ‘குன்றக்குரவை’யில் வரும் ‘வெண்குன்றம்’ என்பதனுக்குச் சுவாமிமலை என்று உரை கண்டுளதால் ‘ஏரகம்’ என்பது மற்றொரு திருப்பதி என்று அவர் கருதினாராதல் வேண்டும். ஆனால் திருப்புகழ் தந்த ‘வாக்கிற்கு அருணகிரியார் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலை’ என்னும் தலமே ஏரகம் என்று கொண்டுள்ளார்.

காவிரி யாற்றுக்கு ளேவரு வளமைச் சோழதன்
னாட்டுக்கு ளேரக நகரிற் சீர்தரு மோட்சத்தை
யேதரு குமரப்பெருமாளே

என்றும்,

யாவுமலை கொண்டுகைத்த காவிரி புறம்பு
சுற்று மேரகம் அமர்ந்த பச்சை மயில்வீரா

என்றும் அருணகிரியார் பாடியிருக்கும் திருப்புகழ்ப் பாக்கள் ஏரகம் என்னும் திருத்தலம் சுவாமிமலை என்னும் தலமே என்பதனை வலியுறுத்தும். சைவத்தைக் கற்றுத் துறைபோகிய இக்கால அறிஞர் சிலரும் இக் கருத்தையே ஒப்புகின்றனர்.

ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்

-திருமுருகு: 186-189

என்று கூறி முடிக்கின்றார் நக்கீரர்.

குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே

ஏரகத்துறையும் சீரியனாம் முருகன் தன் சீர்த்தியினைச் சிறக்கக் கண்டோம். இனிக் ‘குன்று தொறும் ஆடிவரும் ‘குமர வடிவேலனைக்’ காண்போம். குன்று தொறும் குமரன் உறைகின்றான் என்பது பழந்தமிழர் கொண்ட நம்பிக்கை. இது குறித்தே தொல்காப்பியனார் ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்றார். குறிஞ்சி நிலக் கோமானாகக் குமரனைக் கோலங்கண்ட நாடு இது. குன்றுகளில் எல்லாம் அவன் அருட்டிருப்பா தங்கள் பதிகின்றன என்பது பெரியோர் முடிபு. பதினெட்டாம் நூற்றாண் டின் மிகப் பெரும் புலவரும் கற்பனைக்களஞ்சியம் என்று போற்றப்படுபவரும் ஆகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் இளவல் கருணைப் பிரகாச சுவாமிகள் அருமையானதொரு கருத்தினைத் தம் சீகாளத்திப் புராணத்தில் வெளியீடுகின்றார். ‘கல்’ என்பதற்கு ‘மலை’ என்ற பொருள் தமிழில் உள்ளதனை நாம் அறிவோம். இதனை வைத்துக் கொண்டு ஓர் விழுமிய நயந்தோன்றும் வியத்தகு கருத்தினை வெளியிடுகின்றார் அவர். “முருகப் பெருமான் என் மனத்தை விட்டு நீங்காமல் எஞ்ஞான்றும் நீக்கமற நிறைந்திருக்கும் காரணத்தை யான் கண்டு கொண்டேன். அது என்ன வெனில், முருகன் தன்மனமுவந்து வாழும் கற்களில் (மலைகளில்) என் நெஞ்சும் ஒரு கல்லே என்று மயங்கித் துணிந்து என் நெஞ்சக் கன கல்லில் கொலு வீற்றிருக்கின்றான் போலும்!” என்று பாடிப் பரவசப்படுகின்றார். இதோ அவ் அழகிய திருப்பாடல்:

வளர்செழுங் குருதிச் சூட்டு வாரணம் வலனுயர்த்த
ஒளிகெழு பரிதி வைவேல் ஒருபெருங் கருணை
மூர்த்தி களிகெழு சிறந்து தான்வாழ் கற்களில்
ஒருகல் என்றோ அளியஎன் மனத்தி லுள்ளும்
அகன்றிலன் இருக்கும் [மன்னோ!

இச் சீரிய கருத்தினையே தமிழ்ப் பெரியார் திரு.வி. கலியாண சுந்தரனார் அவர்களும் “முருகன் அல்லது அழகு” என்னும் தம் அரிய நூலில் விளக்கமுறப் புலப்படுத்திக் காட்டியுள்ளார். எங்கெங்கெல்லாம் அழகு கொலு வீற்றிருக்கின்றதோ – களிநடம் புரிகின்றதோ, அங்கங்கெல்லாம் அழகுக் கடவுளாம் அணி முருகன் நெஞ்சமர்ந்து உறைகின்றான். கண்ணைக் கொள்ளை கொள்ளும் கவிஞார் அழகு துலங்கும் இடம் மலையிடங்களே. தமிழ் நாட்டின் மலைகளி லெல்லாம் குன்றுகளிலெல்லாம் கொலு வீற்றிருக்கின்றான் வேலாயுதம் தரித்த கோலாகலனாம் குன்றெறிந்த குமரப் பெருமான்.

இனி நக்கீரர் பெருமாள் கண்ட ஞாலப் புகழ் வெல்லும் கோலக் குமரனின் சீலத் திருமுகப் பொலிவு காண்போம். கந்தவேள் கோட்டத்தின் பூசாரியான படிமத்தான் வேலன், பச்சிலைக் கொடியாலே, நறு நாற்றத்தையுடைய காயாம் சாதிக்காயுடன், அழிகினையுடைய தக்கோலமென்னும் காயுடனே கலந்து, காட்டு மல்லியுடன் வெண்டாளியையும் சேர்த்துக் கட்டின கண்ணியை யுடையவனாகக் கோலம் புனைந்துள்ளான். வாசனை வீசும் நல்ல செஞ்சாந்தினை மார்பு முழுவதும் பூசியுள்ளான். அடுத்து மலைவாழும் குறவரோ வெனில் கொடிய தொழிலையுடைய வன்மை பொருந்திய வில்லால் குறிஇலக்குத் தப்பாமற் கொல்லும் அரிய திறல் பெற்றுள்ளனர். நீண்ட மூங்கிலிலே யிருந்து நன்கு முற்றின தேனாற் செய்த கள் தெளிவினைத் தாம் மட்டும் உண்ணாராய், மலையிடத்துச் சிறிய ஊரிலே வசிக் கும் சுற்றத்தவருடன் கூடி உண்டு மகிழ்கின்றார்கள். பின்னர் அம்மகிழ்ச்சிக் களிப்பில் அக்குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகமாகிய சிறுபறையினது தாளத்திற்கு ஒப்பக் குரவையாடி மகிழ்கின்றார்கள்.

இவ்வாறு கள்ளுண்டு களித்துக் குறவர் குரவைக் கூத்து நிகழ்த்தும் செய்தியினைப் பிற சங்க நூல்களும் நுவலா நிற்கின்றன. மலைபடு கடாத்துள்,

அருங்குறும்பு எறிந்த கானவர் உவகை
திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென
நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை அயருங் குரவை

-மலைபடுகடாம் : 318-322.

என்று இக்குறவர்தம் குரவைக் கூத்துப் பேசப்படுகின்றது.

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கமைப் பழுகிய தேறன் மகிழ்ந்து
வேங்கை முன்றிற் குரவை யயரும்

-புறநானூறு: 129 : 1-3

என்று இதனையே புறநானூறு குறிப்பிடுகின்றது.

பின்னர்ப் பெண்கள் புனைந்துள்ள கோலத்தினைக் குறிப்பிடுகின்றார் நக்கீரர். தாமே மலராமல் விரல் அலைப்பாலே செயற்கையான முறையில் அலர்விக்கப்பெற்ற பூவாகலின் வேறுபடுகின்ற நறிய மணம் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் தலையிற் சூடும் குவளை மாலையினையும், இதழ் பறித்துக் காட்டின மாலையினையும், சேர்த்த கூந்தலினையும்,இலையைத் தலையிலே சூடிய கஞ்சங் குல்லையினையும்,இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும் செவ்விய அடிமரத்தினைக் கொண்ட மராமரத்தின் வெள்ளிய கொத்துக்களின் நடுவே வைத்து, வண்டுகள் வந்து தங்கி ரீங்காரமிட்டுத் தேனையுண்ணும்படி கொடுக்கப் பெற்ற பெரிய குளிர்ந்த அழகு நிறைந்த தழையினையும் வடங்களையும் அணிந்து கொண்டே, இளமையும் சாயலும் ஒழுக்கமும் சான்ற மயில் போன்ற மகளிர் முருகப் பெருமானை முன்னுறச் சென்று வணங்குகின்றனர்.

சிவந்த நிறமுடைய முருகன் சிவந்த ஆடையை அணிந்தவனாய்ச் சிவந்த அரையினையுடைய அசோகந் தளிரில் அசையுங் காது பொருந்தி, கச்சை கட்டிக் கழலை யணிந்து வெட்சி மாலையைச் சூடி, குழலையூதிக் கொம்பைக் குறித்துச் சிறிய பல வாத்தியங்களிலிருந்து இசையை எழுப்பி, ஆட்டுக் கிடாயைப் பின்னிட்டு, மயில் மீது விரும்பி யேறி, குற்ற மற்ற கோழிக் கொடியினைக் கொடியாக உயர்த்தி, தான் வேண்டிய வடிவு கொள்ளுதலினால் குழ வியாயிராமல் நெடியனாய் வளர்ந்து, தோளிலே தொடியை அணிந்து, நரம்பு போல் இசை மிழற்றும் பாடுமகளிருடன் இடையிலே இறுகக் கட்டிய ஆடையுடன் நிலத்தைப் பொருந்தி நின்ற நறுமணமும் மென்மையும் நிறைந்த ஆடையினை உடுத்து மெல்லிய தோளினையுடைய பெண் மான் போலும் மகளிர் குரவைக் கூத்தினை விரும்பி ஆடா நிற்க, தன்னுடைய முழவு போன்ற பெருமையையுடைய கையினாலே அவர்களின் மென்கரங்களைத் தழுவி எடுத்துக் கொண்டு, முதற்கை கொடுத்து மலைகள் தொறுஞ் சென்று மகிழ்ந்து விளையாடுதல் என்பது முருகனிடம் நீங்காது நிலை பெற்றிருக்கின்ற பண்பாகும்.

இக்குரவைக் கூத்தினைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பின்வருமாறு கூறுவர்.

குரவை என்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் வென்றியும்
எய்தக் கூறும் இயல்பிற் கும்

என்றும்,

குரவை என்பது எழுவர் மங்கையா
செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்து
அந்நிலைக் கொட்ப நின்றாட லாகும்

என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குன்று தோறாடும் குமரக்கடவுளின் கோலப்புனைவைத் திருமுருகாற்றுப்படையில் பின்வருமாறு நக்கீரர் புலப் படுத்தியுள்ளார்;

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடியன் நெடியன்………..

-திருமுருகு: 206-211

முருகாற்றுப் படுத்த உருகெழு வியன்நகர்

குன்று தோறாடும் குமரனின் கோலத்தினைச் சென்ற பகுதியில் கண்டோம். பழமுதிர் சோலையில் பாங்குடன் கொலு வீற்றிருக்கும் ஞானச் செல்வனை இனிக் காண்போம். ‘ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினனாக’ விளங்குகின்றான் முருகன். சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப் பரிசியாக வைத்து, ஆட்டின் மறியை அறுத்து, கோழிக் கொடியினை உயர்த்தி, ஆங்கு முருகன் நிற்பதாக நினைத்து நிறுத்தி, ஊர் தோறும் ஊர் தோறும் மேற்கொண்ட தலைமை பொருந்திய விழாவிலும், பூவும் கொடியும் பிறவும் இன்றி, அன்பு நிறைந்தவர் தம் அன்புடைமையால் துதி செய்ய, விருப்பம் மிகுந்த தன் மனம் பொருந்துதல் வந்த இடத்திலும், வெறியாட்டாளனாகிய – முருகன் கோயில் பூசாரியாகிய வேலன் தன் முன்னோர் இழைத்தவாறு இழைத்த வெறியாட்டுக் களத்திலும், காட்டினும், சோலையினும் அழகு பெற்ற ஆற்றிடைக் குறையினும், ஆற்றங்கரையின் கண்ணும், குளக்கரையின் கண்ணும், முற்கூறப்பட்ட ஊர்கள் அன்றி, வேறாகிய பற்பல ஊர்களிலும், நாற்சந்தியினும், முச்சந்தியினும், ஐஞ்சந்தியினும் புதிய பூக்களோடு மலர்ந்துள்ள கடப்ப மரத்தின்கண்ணும், ஊர் நடுவே ஊரார் அனைவரும் கூடும் இடமாகிய மன்றத்தின் கண்ணும் பல ஊர்களுக்குப் பொதுவாகிய ஊரம்பலங்களினும், அருட் குறியாக நடப்பட்ட தறிநிற்கும் இடத்தின் கண்ணும் முருகப் பெருமான் நீக்கமற நிறைந்திருக்கின்றான். மாட்சிமையுடைய தலைமை சான்ற கோழிக் கொடியோடு பொருந்துமாறு இயற்றி, நெய்யையும் வெண்சிறு கடுகையும் அரைத்து அப்பி, ஓதும் மந்திரத்தை மறையாக ஓதி, கொழுவிய மலர்களைத் தூவி, தலைகுனிந்து, கை கூப்பி வணங்கி வழிபட்டுக் கலியுக வரதனும் கந்தனின் அருளினை வேண்டி நிற்கின்றனர் அடியார்கள். தொல்காப்பியம் புறத்திணை இயலில்,

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும்

-தொல்: புறத்திணை இயல்: 5

என்ற குறிப்பு வருகின்றது. அகப் பொருள் துறைகளுக்கும் வேலனின் வெறியாட்டுப்பொருந்தி வருகின்றது. சான்றாக,

நெடுவேள் பேணத் தணிகுவள் இவளென
முதுவாய்ப் பெண்டிர் அது வாய்கூறக்
களன்நன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து
உருவச் செந்தினை குருதியோடு தூஉய் மு
ருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்

-அகநானூறு : 22: 6-11

என்ற அகநானூற்றுப் பாடற் பகுதியினைக் காண்க.

அடியவர்கள் வேறு முறையாகவும் வணங்கி வழிபடு கிறார்கள். தம்மில் வேறுபட்ட நிறத்தையுடைய இரண்டு ஆடைகளை உள்ளொன்றும் புறமொன்றுமாக உடுத்து, செந்நிற நூலினைக் கையிலே காப்பாகக் கட்டி, வெண்பொரிகளைத் தூவி, வலிமிக்கதும் பெரிய கால்களையுடையதும் ஆகிய கொழுத்த ஆட்டுக் கிடாயினை அறுத்து, அதன் செங் குருதியோடு கலந்த தூய வெண்ணிறமான அரிசியினைச் சிறு பலியாகத் தந்து, பல தானிய வித்துக்களையுடைய கொள்கலங்களையும் வைத்து, அறுத்த சிறு பசு மஞ்சட் குழம்போடு நறுமணமுள்ள சந்தனக் குழம்பைக் கலந்து தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வலரி யிலையையும்,ஏனைய நறுமணம் வீசும் குளிர்ந்த மாலைகளையும் தம்மில் இணை ஒத்து அறும்படியாகப் பொருந்த அறுத்து, அவ்வாறு அறுத்த இருமாலைகளை நான்கு பக்கங்களிலும் தொங்கும் படி கட்டி, செறிந்த மலைப்பக்கத்துள்ள நல்ல ஊர்களை கோயில்களை வாழ்த்தி, நறுமணம் கமழும் தூபங்களைக் கொடுத்து, அந்த மலைநிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடி மலைவாழ் மக்கள் வணங்கி நிற்கின்றனர்.

மலை உச்சியிலிருந்து இழுமெனும் ஓசையை இசையென முழக்கிக் கொண்டு விழுகின்ற அருவி ஓசையோடு இனிய பல இசைக் கருவிகள் ஒலிக்க, சிவந்த நிறத்தினையுடைய பல பூக்களையும் தூவி, அச்சம் தோன்றும்படி, குருதி அளைந்த சிவந்த தினையரிசியையும் பரப்பி, குறத்தி முருகனுக்கு உவப்பினைக் கூட்டும் இசைக் கருவிகளை முழங்கச் செய்து, தெய்வம் என்று மறுத்துக் கூறுபவர் அஞ்சும்படியாக அம் முருகப் பெருமான் அன்பர்களிடம் எழுந்தருளும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்திய அத் திருக்கோயிலின் எதிரே, தெய்வமேறி ஆடும் வெறியாடு களம் ஆரவாரிக்கும்படி, வெறிப் பாடல்களுக்கு இயைந்த பாடல்களைப் பாடி, கொம்பு வாக்கியங்களை வாயில் வைத்து ஊதச் செய்து, ஓசை மிக்க மணியை ஆட்டி ஒலிக்கச் செய்து, என்றும் புறங்கொடுத்து ஓடாத சிறந்த கொள்கையையுடைய அவனது பிணிமுகம் என்னும் பெயரையுடைய யானையை வாழ்த்தி, அன்பராயினார் தாம் நினைத்த வடிவத்தில் கண்டு தாம் விரும்பியவற்றை விரும்பிய வண்ணமே பெற்று நிற்குமாறு அவர் வழியில் வந்து பொருந்த முன்சொன்ன விழாவும், வேலன் வெறியாடு களமும், காடும், காவும், துருத்தியும்,ஆறும், வைப்பும், சதுக்கமும், சந்தியும், கடப்பும்,மன்றமும் பொதியிலும், குறத்தி முருகாற்றுப் படுத்த கோயிலும் (நன்னகர்) ஆகிய அவ்வவ்விடங்களிலே தன் ஊர்தியாகிய-பிணி முகமாகிய- யானையின் மேல் ஏறி வந்து அன்புப் பிடியில் அகப்பட்டு காட்சி கொடுத்து உறைதற்கு உரிமைப் பட்டிருத்தலையும் யான் அறிந்தவரறே உனக்குக் கூறினேன். முற்கூறிய அவ்வவ்விடங்களிலே ஆகட்டும், பிறவிடங்களில் ஆகட்டும், நீ குன்றும் எறிந்த குமரவேளை முற்படக் கண்டபொழுது, முகத்தானே விரும்பி வாயானே புகழ்ந்து வாழ்த்திக் கையைத் தலைமேலே குவித்துத் தொழுது வாழ்த்திப் பின்னர் அவனுடைய திருவடிகள் உன் தலையில் உறும்படி வணங்கி அவனை வாழ்த்துவாயாக என்று வழிப்படுத்துகின்றார் நக்கீரர் பெருமான்.

முருகன் உறையும் இடங்களாக நக்கீரர் காட்டும் இடங்கள் பின்வருவனவாம். அழகொளிரும் இடங்களி லெல்லாம் அவன் உறைகின்றான் என்பது இதனால் நன்கு புலனாகின்றது.

வேலன் தைஇய வெறியயர் களனும் காடும் காவும்
கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல்
வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்.

– திருமுருகு: 222-226

இறுதியில் முருகனை வணங்க வேண்டும் முறையினைக் கூறி முடிக்கின்றார் நக்கீரர்.

முருகாற்றுப் படுத்த உருகெழு வியன்நகர்
ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே.

-திருமுருகு; 244-249

அஞ்சல் ஓம்புமதி அறிவன் நின்வரவு

‘காடும் காவும் கவின்பெறு துருத்தியும், யாறும் குளனும் வேறுபல் வைப்பும், சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும், முருகாற்றுப்படுத்த உருகெழுவியன் நகரினும், முருகன் உறைகின்ற – எழுந்தருளியுள்ள இடங்களிலே யன்றியும், பிற இடங்களிலும் ஒருமுகப்பட்ட மனத்திலே தாமே அமைத்துக் கொண்ட திருக்கோலத்திற்கு ஏற்ப, அப்பெருமானைக் கண்டபொழுது, முகத்தானே விரும்பி நோக்கி வாயானே வாழ்த்தி வணங்கி, கையைத் தலைமேலே குவித்துப் புகழ்ந்து, அப்பெருமான்தன் திருவடிகளில் தலை பொருந்தும்படி வீழ்ந்து கும்பிட்டு வணங்குதல் வேண்டும் என்று குறிப்பிடுகின்றார் நக்கீரர் பெருமான். இவ்வாறு இறைவழிபாடு செய்யும் முறையினைத் தொண்டர் சீர்பரவ வல்ல சேக்கிழார் பெருமான் திருவாக்கானும் அறியலாம்.

கையுந் தலைமிசை புனையஞ் சலியன
கண்ணும் பொழிமழை யொழியாதே
பெய்யுந் தகையன கரணங்களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரும்
மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.

பெரிய புராணம்: திருநாவுக்கரசர்: 167.

அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகன்

இனி, நக்கீரர் பெருமாள் முருகனின் அருளினையும் தெறலினையும் வீரத்தினையும் வெற்றியினையும் பல படப் புகழ்ந்து புகழ்மாலை சார்த்திப் பாராட்டுகின்றார்.”ஓங்கி உயர்ந்த பெரிய இமயமலையின் உச்சியில், சரவணம் என்னும் தருப்பைப்புல் வளர்ந்துள்ளதால் நீலநிறம் கொண்டு காட்சியளிக்கும் சுனையில் சரவணப் பூம்பொய்கையில், ஆகாயம், காற்று, தீ, நீர், நிலன் என்னும் ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நெருப்புக் கடவுள் முக்கண்ணனுடைய நெற்றிக் கண்ணாகிய அனற் கண்ணிலே தோன்றிய ஆறு அனற் பொறியினைத் தன் அகங்கையில் ஏற்றுச் சென்று சேர்க்க, அருந்ததி யொழிந்த ஆறு இருடி (ரிஷி) பத்தினியரும் அந்த ஆறு பொறிகளிலிருந்தும் தோன்றிய ஆறு குழந்தைகளையும் தாமே பெற்ற தாயாராகக் கருதிப் பேணி வளர்க்க, ஆறு வடிவு பொருந்திய செல்வனே! கல்லால மரத்தின் கீழே இருடிகளுக்கு ஞானோபதேசம் செய்த சிவபெருமானின் செல்வனே! மலைகளில் மிக உயர்ந்ததனால் மாண்புபெற்ற மலையரையன் மகள் உமாதேவியின் மகனே! உன் அன்பர்க்கும் அடியார்க்கும் தீங்கிழைக்க நினைக்கும் பகைவர்க்குக் கூற்றுவனே! வெற்றி குறித்து வெல்லும் போரினைச் செய்யும் துர்க்கையின் மைந்தனே! பூண்கள் அணிந்த தலைமையினை யுடைய காடுகிழாளுடைய மகனே! தேவர்கள் வணங்கு கின்ற விற்படைத் தலைவனே! இன்பத்திற்குரிய கடப்ப மாலையை யணிந்த மார்பை யுடையோனே ! எல்லா வகை நூல்களையும் முற்ற உணர்ந்த புலவனே போர்த் தொழிலில் தான் ஒருவனாக நின்று மேம்பட்டுப் பெரிய வெற்றியினைக் கொள்ளுவோனே! அந்தணர்களுக்குப் பொருட் செல்வமாய் இருப்போனே ! அறிவு சான்ற பெரியோர்கள் புகழ்ந்து சொல்லும் சொற்களின் பொருள் தொகுதியாய் இருப்பவனே! தெய்வயானையாரும் வள்ளிநாச்சியாரும் ஆன மகளிர்க்குக் கணவனே! வலிமை மிக்க வீரர்க்கு அரியேறு போன்றவனே! வேல் ஏந்தின பெருமை பொருந்திய கையால் பெற்ற வெற்றியால் அமைந்த பெரும் வீரச் செல்வமுடையவனே! கிரவுஞ்சம் என்னும் மலையைப் பிளந்த, குறைவற்ற வெற்றியையுடைய, வானத்தை அளாவும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்திற்கு உரிமை பூண்டவனே! பலரும் புகழ்ந்து சொல்லும் நல்ல சொற்களையுடைய கவிப்புலவர்க்கு அரியேறு போன்ற வனே! பெறுவதற்கு அரிய முறைமையினையுடைய பெரிய பொருளாகிய வீட்டையுடைய முருகனே! வீட்டுப் பேற்றைப் பெறவேண்டும் என்று விரும்பி வந்தார்க்கு அதனைக் கைகூட்டி நுகர்விக்கும் புகழினையுடைய பேரருளாளனே! பிறரால் துன்பமுற்று வந்தோர்க்கு அருள் புரியும் பொற் பூண்களை அணிந்த மார்பினையுடைய சேயோனே! மிக நெருங்கி வந்து எதிர் நின்று போர் செய்தவருடைய போரை வென்று முடித்த நின் மார்பிடத்தே, இரந்து வந்தோரைத் தழுவித் தாங்கிக்கொள்ளும், கண்டார்க்கு அச்சம் தரும் நெடிய வடிவத்தை யுடையவேளே! வானோரும் அந்தணரும் ஆகிய உயர்ந்தோரால் ஓதி ஏத்தப் பெறுகின்ற பெரிய மறைமொழியாகிய திருப்பெயரையுடைய இறைவனே! சூரபன்மாவின் குலத்தை இல்லை யாகும்படி செய்த தோள் வலிமையுடைமையாலே எப்போரிலும் மிக்கு ஒப்பற்றவனாய் விளங்குபவனே! தலைவனே! என்று இவ்வாறு பலவாக யான் அறிந்து உனக்குக் கூறிய அளவானே புகழ்ந்து அமையாது மேலும் மேலும் புகழ்ந்து, ‘உன்னுடைய தன்மைகளையெல்லாம் அளவிட்டு அறிதல் நிலைபெற்ற உயிர்களுக்கு அருமையாதலின், உன்னுடைய திருவடியைக் காணவேண்டுமென்று நினைத்து வந்தேன். உன்னோடு ஒப்பார் இயலாத மெய்யுணர்வை உடை வல்லனே !’ என்று கூறி, நீ கருதிய வீட்டுப் பேற்றினை விண்ணப்பம் செய்வதற்கு முன்பே, நீ கருதியதை உணர்ந்துகொண்டு, அப்பொழுதே, வேறு வேறாகிய பல வடிவினையுடைய இனிய பலராகிய பணியாளர், விழா வெடுத்த களத்தின்கண் பெருமை பெறத் தோன்றுதல் போல் தோன்றி, ‘இந்த இரவலன் (யாசகன்) இரக்கம் காட்டி அருளுவதற்கு உரியவனே! பெருமானே! அறிவு முதிர்ந்த வாய்மையினையுடைய இந்த இரவலன் உன்னுடைய வளவிய புகழினை விரும்பி வந்துளான். இனியனவும் உறுதி பயப்பனவும் ஆன மிகமிகப் பலவான புகழுரைகளை ஏத்திப் புகழ்ந்துகொண்டே வந்துளான்’ என முருகக் கடவுள் திருமுன் கூறி நிற்கிறார்கள்.

முருகன் அருள் சுரந்து பரிசில் அளிக்கும் மாண்பு

“அதுபொழுது முருகப் பெருமான் தனது தெய்வத் தன்மை அமைந்த தன் வலிமை விளங்கும்,வடிவினையும், வானைத் தீண்டும் வளர்ச்சியினையும் உடையவனாய் உனக்கு முன்வந்து தோன்றித் தன் தெய்வத் தன்மையை உணர்த்தி, அத் தோற்றத்தைக் கண்டு நீ அஞ்சக் கூடும் ஆதலால், அச்சத்தையும் வருத்தத்தையும் விளைவிக்கக் கூடிய அந்த உயர்ந்தோங்கி நிற்றலாகிய வடிவத்தை உள்ளடக்கிக் கொண்டு, முன்புண்டாகிய தனது மணம் கமழ்கின்ற தெய்வத் தன்மை பொருந்திய, காண்பதற்குக் கவர்ச்சியான இளமைத் தன்மை கூடி நீ அழகிய வடிவத்தைக் காட்டி அஞ்சுதலைத் தவிர்ப்பாயாக! வீடு பெற நினைத்து வந்த வரவினை நான் நன்கு அறிவேன்’ என்று உன்மேல் தன் அன்புடைமையை உணர்த்தும் நல்லமொழிகளைப் பலவாகக் கூறி அருளிச் செய்து, அழிதல் இன்றி இருண்ட நிறத்தையுடைய கடல் சூழ்ந்த உலகில் ஒப்பற்றவன் நீயேயாகத் தோன்றும்படி, எல்லாவற்றினும் சிறந்த, பெறுதற்கரிய பரிசிலாகிய வீடு பேற்றினை நீ அடைய அருளுவான்.”

இவ்வாறு நக்கீரர் பெருமான் நெஞ்சுவந்து நெகிழ்ந்து முருகப் பெருமானைப் போற்றிப் பரவிய புகழ் மொழிகளைக் காண்க. அவற்றை மனத்தில் கொள்ளின் மாறாத வெற்றி என்றும் உறுதி. இது பெரியார் பலர் வாழ்வில் கண்கூடாகக் கண்ட உண்மையாகும்.

நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர்
சொன்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறன் மரபிற் பெரும்பெயர்
முருக நசையுநர்க் கார்த்தும் இசைபே
ராள அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண்
சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றாடு
அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு
நெடுவேள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர்
இயவுள் சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின்
மதவலி போர்மிகு பொருந குரிசில்
எனப்பல யானறி அளவையின் ஏத்தி
ஆனது நின்னறிந் தறிதல் மன்னுயிர்க்
கருமையின் நின்னடி உள்ளி வந்தனன்
நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை
யோயெனக் குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல வேத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப்
பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து
இளநலங் காட்டி அஞ்சல் ஓம்புமதி
அறிவன்நின் வரவென அன்புடை நன்மொழி
அளைஇ விளிவின்று இருள்நிற முந்நீர்
வளைஇய உலகத்து ஒருநீ யாகித் தோன்ற
விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி.

-திருமுருகு:253-295

இழுமென இழிதரும் அருவி

பழந்தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த இன்ப அன்பு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். இயற்கையின் இனிய பெற்றியினை ஆரத் துய்த்தவர்கள். இயற்கை அவர்களுக்கு இணையற்ற தாயாய்த் தந்தையாய் மகவாய் விளங்கி அருள் சுரந்தூட்டியது. இத்தகைய இயற்கையின் இனிய அழகிய திருவோலக்கப் பொலிவிலே தோய்ந்து ஈடுபட்டவர் நம் சங்கத் தமிழ்ப்புலவர் நக்கீரர் பெருமான் ஆவர். எனவே திருமுருகாற்றுப்படையின் இறுதிப் பகுதியிலே நம் மனத்தையெல்லாம் கொள்ளை கொள்ளும் வண்ணம் மலையருவியின் மாண்பினையும் அழகினையும் சிறக்க வடித்துக் காட்டுகின்றார். புலவர் நெஞ்சினை ஈர்த்துத் தன்வயப்படுத்தும் அவ்வினிய அழகிய கற்பனை, பாடலின் தொடக்கத்தில் காணப் பெற்ற “பலர்புகழ் ஞாயிற்றின்” கோல் ஒப்பனையைப்போலவே பொருட் பொருத்தமுற இயைந்து காணப் பெறுகின்றது.

வேறுபட்ட பலவாகிய துகில்களைப் போல அசைந்து, அகிலைச் சுமந்துகொண்டு, பெரிய சந்தனமரத்தைத் தள்ளி, சிறு மூங்கிலினது பூவையுடைய அசைகின்ற கொம்பு தனிப்ப, வேரைப் பிளந்து வேகமாக ஓடிவருகின்றது மலையருவி. தேவருலகத்தைத் திண்டுகின்ற பெரிய மலையிடத்தே சூரியமண்டலத்தைப் போல ஈயால் வைக்கப்பட்ட தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு சிதையும் படியும்,நன்றாகிய பல ஈரப்பலாவினுடைய முற்றியகளை தன்னிடத்தே கலக்கவும்,மலையுச்சியில் உண்டான சுர புன்னையின் நறிய மலர் உதிரவும், கருங்குரங்கோடே கரிய முகத்தையுடைய ஆண் முசுக்களும் நடுங்கவும், புள்ளியுள்ள பெரிய நெற்றியையுடைய பெரிய பெண்யானை குளிரும்படி அலையை வீசியடித்துக் கொண்டு வருகின்றது அழகு சால் அருவி, பெரிய யானையினுடைய முத்தையுடைய வாய் தந்தங்களை உள்ளடக்கி, நல்ல பொன்னும் மணியும் என்பனவற்றின் நிறம் விளங்காநிற்கத் தாவிப் பொன்னைக் கொழித்து, வாழையினது இளநீரையுடைய சிறந்த குலை உதிரவும் அவ்விரண்டினையும் தாக்கி, மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாயவும், புள்ளியையுடைய முதுகினையும் மடப்பத்தையுடைய நடையினையுமுடைய மயில் பல வற்றுடனே கோழியினுடைய வலிவுள்ள பெண்கோழி அஞ்சி நிலை கெடவும், ஆண்பன்றியுடனே, வெளிற்றினை யுடைய கரிய பனையின் புல்லிய செறும்பை யொத்த கரிய நிறத்தையுடைத்தாகிய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையும் உடைய கரடி பெரிய மலையின் பிளவு களிலுள்ள முழைஞ்சுகளிலே கெருங்கிச் சேரவும், கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுக்களின் சிறந்த ஏறுகள் முழங்கும்படியும், மிகவுயர்ந்த மலையுச்சியிலிருந்து ‘இரும்’ என்னும் ஓசையுண்டாம்படி குதிக்கின்ற அருவியையுடைய பழமுற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையுடையவனாகிய முருகக் கடவுள், தெய்வஞ் சான்ற திறல் விளங்கு உருவோடு, வான்தோய் நிவப்பில் தான்வந்து எய்தி, பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்தின் இளநலங்காட்டி அஞ்சல் ஓம்புமதி, அறிவன் நின்வரவு’ என அன்புடை மண்மொழி கூறிப் பெறலரும் பரிசில் மல்குவான்:

……பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி யகில்சுமந்து
ஆர் முழுமுத லுருட்டி வேரல்
பூவுடை யலங்குசினை புலம்ப வேர்கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூறுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீ இத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மட நடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை யிரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாவடி யுளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேண் நின்று
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

-திருமுருகு:295-317

முடிவுரை

இலக்கிய நயமும் பக்தி நயமும் கெழுமியமைந்த பாடல்கள் பத்து, பத்துப்பாட்டும் சேர்ந்துள்ள பழைய ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறாமல், திருமுருகாற்றுப் படை மட்டுமுள்ள புதிய ஏட்டுப் பிரதிகளிலும் அச்சுப் பிரதிகளிலும் காணப்படுகின்றன. இப்பாடல்கள் அனைத் தும் பிற்காலப் புலவர்கள், திருமுருகாற்றுப்படையில் உள்ளந் தோய்ந்து ஈடுபட்டதன் பயனாகப் பிறந்த சுவைப் பாடல்கள் எனலாம். இவற்றில் சில பாடல்கள் இன்று பயின்று வழங்கப் பெறுகின்றன. இவையனைத்தும் நக்கீரரால் இயற்றப் பெற்றவை அல்ல என்பதே பொருந்திய முடிவாகும். முதற்பாடல் வருமாறு:

குன்ற மெறிந்தாய் குறைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப்பொரு படையாய் என்றும்
இளையா யழகியா யேறூர்ந்தா னேறே
உளையா யென்னுள்ளத் துறை.

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண ஆசிரியர் காலத்தில் இந்த வெண்பா வழங்கியிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அந்நூலில்,

உயர்வுற வுலக முவப்பவென் றெடுத்தாங்
கொண்டமிழ்த் தண்டல முவப்ப
வியனுற வுரைப்பக் கேட்டலு மடைந்து
வெற்பகந் திறக்கவேல் விட்டு
நயனொடு மெடுத்து வினைகடீர்த் தருளு
நன்சுனை காட்டிநீ ராட்டி
அயிலுடை நம்மைக் கிழவனென் றனையென்
றாலயத் தடைந்தனன் காண.
இனிதொர்கவி குன்றமெறிந் தாயெனப்பி னென்று
[
மிளை
யாயழகி யாயென் னுங்கான்
மனமகிழ்ந்தீ தியார் பகர்வா ரவர்க்கு வேண்டும்
[
போந்து
கனமலிசங் கத்துரைப்பக் கேட்டி யாருங்
வரங்கொடுப்போ மதுரையிற்போ கென்னப்
களிகூர்ந்தார் தமிழ்முருக னருளை வாழ்த்தி

-திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்: 44:27, 28

என்னும் வரலாற்றை நோக்குங்கால் இக்கருத்து வலியுறுகின்றது.

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்– [பன்னிருகைக்

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ்வே.

அஞ்சு முகந்தோன்றின் ஆறுமுகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் – [நெஞ்சில்

ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்.

முருகனே செந்தி முதல்வனே மாயோன்மருகனே
ஈசன் மகனே-ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய
தண்டைக்கால் எப்பொழு [தும் நம்பியே கைதொழுவேன் நான்.

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா – பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காள் இரங்காய் இனி.

இங்குக் காட்டப்பெற்ற இப்பாடல்கள் நாள்தோறும் திருமுருகாற்றுப்படையினை ஓதுவார் இறுதியில் தவறாது பாடி வணங்கும் பக்திப் பாடல்களாகும்.

திருமுருகாற்றுப்படையினை நாள்தோறும் பாராயணம் செய்வார் பெறும் பயன்களைப் பின்வரும் இருபாடல்களும் குறிக்கும்:

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டுசுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.

நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாடோறுஞ் சாற்றினால்முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தானினைத்த எல்லாந் தரும்.

கற்பனைக் களஞ்சியம்’ எனப் போற்றப் பெறும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சீகாளத்திப் புராணத்தில் திருமுருகாற்றுப்படையைப் பின்வருமாறு பாராட்டுகின்றார்.

இன்னன நினைந்து கீர னிலங்கிலை நெடுவேற்
[
செம்மல்
பன்னிரு செவியு மாரப் பருகமு தாகி யோதின்
உன்னிய வுன்னி யாங்கிங் குதவுவ தாகிப்
பாவுண் முன்னுற வந்து நிற்கு முருகாற்றுப் படைமொ [ழிந்தான்.

-சீகாளத்திப்புராணம்: நக்கீரச் : 115

திருமுருகாற்றுப்படையை நியமமாக ஓதி வரும் பெரியோர்கள் கீழ்க்காணும் இக்கட்டளைக் கலித்துறையினையும் ஓதிவருகின்றனர்.

ஒருமுரு காவென்றன் உள்ளங்குளிர உவந்துடனே
வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங். [ஙனே
தருமுரு காவென்று தான்புலம் பாநிற்பத் தையன் [முன்னே திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே.

“வெளுத்ததெல்லாம் பாலல்ல; ஆனால் நம்பிக்கையின் அடித்தளத்தில்தான் வாழ்க்கையின் உயிர் நாடி உள்ளது.” திருமுருகாற்றுப்படையினை நாள்தோறும் நல்ல நெஞ்சுடனே ஓதிவருவார்க்கு எண்ணிய பொருள் எளிதில் கை கூடும் என்பர் பெரியோர். அம்முறையில் நாமும் நக்கீரர் உரைத்த நல் முருகாற்றுப்படையை நாள்தோறும் ஓதி, செவ்வேளின் அருள் பெற்று நற்பயனை எய்துவோமாக!