முருகன் காட்சி

1. முருகும் உலகும்

அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழி முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்ப் பொலிந்து நிற்பதாகும். தொன்மைச் சிறப்புடன் தனிப் போக்கினையும் தகைசால் இலக்கியங்களையும் தன்னகத்தே கொண்டிலங்குவது குன்றாத வாழ்வுடைய நம் தமிழ் மொழியேயாம். “அளவிலும் சுவையிலும் தமிழிலுள்ள திருப்பாடல்கள் போல், பிற இலக்கியங்களில் இல்லை” என்பது அறிஞர் கூற்றாகும். ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலியன் காதலின் மொழி என்றும் கூறப்படுவது பொருந்துவது போன்று தமிழ் இரக்கத்தின் மொழி எனக் கூறுவது பொருந்தும் எனவும் உரைப்பர். எனவே தமிழ் மொழியினைப் பக்தியின் மொழி எனப் பாராட்டுவர் பெரியோர். தெய்வப் புலமைச் சேக்கிழாரும், ‘ஞால மளந்த மேன்மை தெய்வத் தமிழ்’ எனத் தமிழைத் ‘தெய்வத் தமிழ்’ என்பர். தமிழைத் தெய்வத்தோடு தொடர்புபடுத்திக் கூறும் தனிச் சிறப்பு தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்பான தொன்றாம். எனவே ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே; அதைத் தொழுது படித்திடடி பாப்பா’ என்று பாரதியாரும் தமிழைத் தொழுது படித்திடல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகு பழமையும் பெருமையும் தெய்வத் தொடர்பும் கொண்ட தமிழின் தொன்மை இலக்கியங்களாகத் துலங்குவன பாட்டும் தொகையும் கீழ்க் கணக்குமாகும். அவற் றிலும் பாட்டு எனக் குறிக்கப்பெறும் பத்துப் பாட்டே அருமையும் பெருமையும் வாய்ந்ததாகும். எனவே உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்,

ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து
சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்
ஒருபது பாட்டும்

என்று பாராட்டுவராயினர்.

மேலும் பேராசிரியரும் ‘பாட்டினுந் தொகையினும் வருமாறு கண்டுகொள்க’ என்று பாட்டையே முதலிற் குறிப்பிட்டுள்ளார். ‘தமிழ் விடு தூது’ ஆசிரியரும்,

மூத்தோர்கள்.
பாடி யருள்பத்துப் பாட்டுமெட்டுத் தொகையுங்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்

-தமிழ்விடு தூது : 55, 56

என்று பாட்டையே முதற்கண் கிளத்தியிருக்கின்றார்.

மேலும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் பத்துப் பாட்டில் இல்லது புனைதலில்லாத அளவான கற்பனையைக் காணலாம் என்கிறார்:

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும்
இலக்கணமில் கற்பனையே.

-மனோன்மணீயம்: பாயிரம்

பத்துப்பாட்டு நூல்கள் இவையிவை என்பதைக் கீழ்க் காணும் பழைய வெண்பா குறிப்பிடுகின்றது:

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சிமருவினிய
கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி
பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து.

சங்கத் தமிழ் நூல்களில் சிறந்தது பத்துப்பாட்டு என மேலே கண்டோம். அப்பத்துப் பாட்டினுள்ளும் சிறந்தது- தலையாயது – முதலாவதாக வைத்து எண்ணப் பெறுவது- திருமுருகாற்றுப்படையாகும். பத்துப்பாட்டினுள் முதலில் காப்பாக அமைந்தது திருமுருகாற்றுப்படையாகும். எட்டுத் தொகை நூல்கள் பலவற்றிற்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துச் செய்யுள் பாடியுள்ளார். ஆனால் அது போலப் பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் என்று ஒன்று தனியாகக் காணப் பெறவில்லை. திருமுருகாற்றுப்படையே பத்துப்பாட்டின் கடவுள் வாழ்த்தாக – காப்புச் செய்யுளாக அமைந்துள்ளது. மேலும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராந் திருமுறையில் சேர்க்கப் பெற்றிருக்கும் பெருமையையும் இந்நூல் கொண்டுள்ளது.

பழந்தமிழர் இயற்கையோடியைந்த இன்ப வாழ்வு வாழ்ந்தனர். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற இயற்கையில் இறைவனைக் கண்டனர். எங்கெங்கெல்லாம் எழில் களிநடம் புரிகின்றதோ அங்கங்கெல்லாம் இறைவனின் அருட்பொலிவைக் கண்டனர், காலையிளம் பரிதியிலும், கடற்பரப்பிலும், ஒளிப்புனலிலும் அழகைக் கண்டனர். இயற்கையையும் தங்கள் உறவாக எண்ணி மகிழ்ந்தது அக்காலக் கவிஞர்தம் நெஞ்சம் புன்னை மரத்தைத் தமக்கையாக எண்ணி அதனெதிரில் தன் தலைவனோடு பேசுவதற்கு நாணிப் பிணங்கிய தலைவியை நாம் நற்றிணையில் காண் கின்றோம்.

‘நமக்கு ஒன்று உரையாது போயினும் படப்பை வேங்கைக்கு மறந்தனர்கொல் புள்வாய்த் தூதே’ என்று கவல்கின்ற தலைவியை நாம் குறுந்தொகையில் சந்திக்கின்றோம். அரும்புகளையும் அன்னங்களையும் தன்னோடொத்த நிலையிலே எண்ணி அவற்றை நோக்கி விளித்துத் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தும் மாதவியினை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திலே சித்திரித்திருக்கின்றார்;

தம்முடைய தண்ணளியுந் தாமுந்தம் மான்றேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்.

-சிலப்பதிகாரம்: கானல்வரி : 32

இத்தகைய சங்கத் தமிழ்ப் புலவர் நெறியினையும் அருளார்ந்த நெஞ்சத்தினையும் நன்குணர்ந்தவர் பாரதியார். அதனாலே தான் காக்கை, குருவி, கடல், மலை-ஏன்? நோக்குமிடமெல்லாமே அவர்க்கு ஒரே சமுதாயமாகத் தோன்றுகின்றது.

காக்கை, குருவி எங்கள் ஜாதி நின்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக்களி யாட்டம்

-பாரதியார் : ஜெயபேரிகை.

என்று நீக்கமற நிலைத்திருக்கின்ற பொருள்களிலெல்லாம் உறவு கொண்டாடினார் பாரதியார். இதனையே ‘நந்த லாலா’ பாட்டில் இன்னும் சிறப்பாக இறைநிலையோடு ஒட்டிக் காணுகின்றார்:

காக்கைச் சிறகினிலே நந்தலாலா!- நின்றன் கரியநிறந் தோன்று தையே நந்தலாலா?
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்தலாலா !
நின்றன் பச்சை நிறந் தோன்று தையே நந்தலாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்தலாலா!-நின்றன் கீத மிசைக்குதடா நந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா!
நின்னைத் தீண்டு மின்பந் தோன்றுதடா நந்தலாலா!


-பாரதியார்: நந்தலாலா.

காக்கைச் சிறகின் கருமையிலும், பார்க்கும் மரங்களின் பசுமையிலும், கேட்குமொலியின் இனிமையிலும், தீக்குள் விரலின் தெறலினிலும், இறைவனின் திருவோலக்கப் பொலிவையும் சிறப்பையுமே கண்டார் பாரதியார்.

இத்தகைய நெறியில் – இயற்கையில் இறைவனைக் கண்டு தலைப்படும் அருள்நெறியில் முதற்கண் பெரிதும் ஈடுபட்டவர் நக்கீரர். எனவே குறிஞ்சிநிலத் தெய்வமாகிய குமரனை – முருகனை – அழகின் வடிவமாக – முருகியலின் முழுப் பிழம்பாகக் கண்டார். மலையும் மலையைச் சார்ந்த நிலமாகிய குறிஞ்சியிலே தான் உலகில் மக்கள் முதன் முதலாகத் தோன்றி வாழத் தொடங்கியது என்பர் உயிர் நூல் ஆராய்ச்சி அறிஞர். இவ்வுலகின் தோற்றத்தையும் இயக்கத்தையும் கூர்ந்துநோக்கிய நம் முன்னோர்கள் இவ்வாறு இந்த உலகம் இடையறாது நடப்பதற்கு ஏதோ ஒரு பரம் பொருள் – ஒரு முழுமுதற் பொருள் இருத்தல் வேண்டும் என்று துணிந்தனர். அந்த முழுமுதற் பொருளை இவ்வுலகின் கண் காணப்படும் ஒவ்வோர் அணுவிலும் உள்ளீடாய் நீக்கமற நிறைந்திலங்கி மன்பதைக்குத்தானே பற்றுக் கோடாய், தனக்கொரு பற்றுக்கோடுமின்றி, “ஆதியுமந்த முமில்லாத அருட்பெருஞ் சோதியாய்” சொரூப ஞானச் கூடரொளித் தீபமாய் எப்பொருளையும் தன்னுட்டோற்றி யழிப்பதுமாகிய ஓர் ஒப்பற்ற ஆற்றல் சான்ற பொருளைக் ‘கந்தழி’ என்ற பெயரானே வழங்கி மனத்தால் நினைந்து வணங்கி வருவாராயினர். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அக் கந்தழியை யாண்டும் எத்திசையினும் கட்புலனுக்குத் தோன்றும் கவினார் அழகே என்று துணிந்தனர். அழகின் தோற்றமே – முருகியல்பின் வெளிப்பாடே மனமொழி மெய்களைக் கடந்த கந்தழியின் – கடவுளின்- தெய்வத்தின் தோற்றம் ஆதல் வேண்டும் என்று கருதினர். முருகு என்னுஞ் செஞ்சொல் அழகு, இளமை, மணம், கடவுட்டன்மை ஆகிய பொருட்களிற் பொதுளும். அழகு உறைகின்ற இடமெல்லாம் அம் முருகு கொலுவீற்றிருக் கின்றது என் கண்டனர். எனவே கொள்ளையழகு பூத்துக் குலுங்கும் மலைப் பகுதிகளிலெல்லாம் – அம் முருகு – அம்முருகன் வீற்றிருக்கின்றான் என்று கண்டு, குறிஞ்சி நிலத் தெய்வமாக அம் முருகனைக் கண்டனர். ‘முருகு’ எனும் இறைப்பொருள் உணர்த்தும் சொல்லோடு ‘அன்’ எனும் ஆண்பால் விகுதி பெற்று ‘முருகன்’ என்று வழங்கப் பட்டது. நிலவுலகம் நானிலம் என்ற பாகுபாடு பெற்ற காலத்தே முதற்கண் தோன்றிய நிலமாகிய மலைக்கு முதன் முதற் தெய்வமாக முருகு கொள்ளப்பெற்றது. இதனையே ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியனாரும்,

மாயோன் மேய காடுறை யுலகமுஞ்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லென்று
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

-தொல்காப்பியம் : அகத்திணை இயல்:5

என்று கூறிப் போந்தார்.

ஆகவே தமிழின் தொன்னூலும் முன்னூலுமான தொல்காப்பியத்திலேயே பழந் தமிழகத்தின் பழைய நிலமான மலைக்குத் தெய்வமாகச் சேயோன் – முருகன் கூறப்படுகின்றான். இதனாலே முருகன் அழகுக் கடவுள் என்பதும் தமிழ்க் கடவுள் என்பதும் தாமே போதரும்.