பின்னிணைப்பு
“முருகன் எவன்? முருகையுடையவன் முருகன். முருகு என்றால் என்னை ? முருகன் என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை மணம், இளமை, கடவுட் டன்மை, அழகு என்பன. இந்நான்கு பொருளடங்கிய ஒரு சொல்லால் பண்டைத் தமிழ் மக்கள் முழுமுதற் பொருளை அழைத்தது வியக்கத்தக்கது. இயற்கை மணமும், மாறா இளமையும், எல்லாப் பொருளையுங் கடந் தொளிருந் தன்மையும், அழியா அழகும் இறைவனிடத்தில் இலங்குவது கண்டு, அப்பொருள்கள் முறையே உறைதற் கிடம் பெற்றுள்ள முருகன் என்னுஞ் சொல்லை, அவ்விறைவனுக்குப் பழந் தமிழ்மக்கள் சூட்டியதன் திறமையை நோக்குழி அவர்களது கூர்த்தமதி புலனாகிறது”.
“மலைக்கண் வாழ்ந்து, மலை நிலக் கடவுளென்று சொல்லப்படும் இயற்கை முருகனை வழிபடுதல், இயற்கை யோடியைந்து வாழ்வு நடாத்துவதாகும். மலையில் முறைப் படி வாழ்வு நடாத்துவோன் முருகைக் காணும் பேறுபெறுவன் என்பது உறுதி.
மலையில் ஓடும் அருவி நீராடி, காலையில் செங்கதிர் பரப்பி எழும் இள ஞாயிற்றொளியில் மூழ்கி, தூநறுங் காற்றில் படிந்து, உதிர் சருகு களிகளுண்டு, மயில் குயில் மான் ஆன் இனங்களைக் கண்டு மகிழ்ந்து, ஒருத்தியொடு வாழ்ந்து, முருகனை வழிபட்டுவரும் ஒருவன் மாட்டு, எம்பெருமானது இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுட்டன்மையும், அழியா அழகும் மலர்ந்து, அவனுக்குப் பெருவாழ்வு நல்கும்”.
“முருகனை வழிபடுவோர்க்கு முருகனிடத்து இடையறாத உறுதியிருத்தல் வேண்டும். உறுதியின்றிச் செய்யப் படும் வழிபாடுகள் போலியாகவே முடியும். கடல் பொங்கி வரினும், மலைகுலைந்து சாயினும், வானிடிந்து வீழினும் “முருகன் காப்பான்” என்னும் உறுதி முருகன் வழிபாட்டிற்கு அடிப்படையானது. இவ்வுறுதியுடையார் விரும்பும் எல்லா நலங்களையும் பெறுவர். இன்றியமையாத அருட் செல்வம் முதலிய எல்லாச் செல்வங்களையும் முருகன் அவர்க்கு அளிப்பன். முருகப்பெருமான் தன்னை வழிபடும் அன்பர்க்குத் தோன்றாத் துணையாய் நின்று செய்துவரும் பேருதவி, அவள் அடியவர்க்குத் தெரியும். உறுதியால் முருகனிடத்து எல்லாம் பெறலாம்.”
“தமிழ் மக்களே ! முருகன் எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நின்று, அவைகளை அழகு செய்வதை உங்கள் முன்னோர்கள் கண்டு இன்ப நுகர்ந்தார்கள். அவ்வின்பத்தை இப்பொழுது நீங்கள் நுகர்கிறீர்களா? இயற்கை, முருகன் வடிவாயிருப்பது உங்கட்குப் புலனாகிறதா? முருகனைக் காண முயல்கிறீர்களா? அவன் செந்நெறியை ஓம்பினால் அவனைக் காணலாமன்றோ?
முருகனுக்கு ஏராளமான கோயில்களிருக்கின்றன. அவனுக்கு இனிப் புதிய கோயில்கள் கட்டுதல் வேண்டா; எங்கும் நிறைந்துள்ள அவனுக்கு எக்கோயிலும் வேண்டா. அவன் செந்நெறியை வளர்க்கக் கழகங்கள் காணுங்கள் ; கல்லூரி அமையுங்கள்; அறநிலையம் நிறுவுங்கள்; திருப்புகழைப் பொருளுணர்ந்து ஓதுங்கள்; இயற்கையிலுள்ள அவனழகை நூல்களாக எழுதுங்கள்; பாட்டாகப் பாடுங்கள்; போலி ஞானம் பேசி முருகனிடத்துள்ள அன்பை – நம்பிக்கையை – மன உறுதியைக் கெடுத்துக் கொள்ளாதேயுங்கள்:
முருகன் பெயரால் பிணியை ஓட்ட முயலுங்கள்; உறுதிக் கொள்கையை வளருங்கள்; நோன்பிருங்கள்; பெண்ணைப் போற்றி இல்லற நடத்துங்கள்;
முருகன் திருவருளால் பிணி மூப்பு சாக்காடெனுங் கட்டுகளை அறுத்துக்கொள் ளுங்கள்; கொள்ளின் இயற்கை மணமும், மாறா இளமையும், அழியா அழகும், கடவுட்டன்மையும் உங்கள்பால் பொலியும்; பொலியும்.”
தமிழ்ப் பெரியார் திரு.வி.க.
துய்யதாம் மறைக ளாலுந் துதித்திடற் கரிய செவ்வேள்
செய்யபே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில்சீ ரடியார் வாழ்க வாழ்கஇப் புவன மெல்லாம்.
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடிய ரெல்லாம்.
புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா
நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி
என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி யாண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள்போற்றி.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் தூனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து
[தோன்றிடினே.
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி
யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி
நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக
மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
முற்றும்.
★ ★ ★