11. தமிழ்த் தெய்வம்
பழந் தமிழ் நிலம் நானிலம் என வழங்கப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனத் தமிழ்மண் வகுக்கப் பெற்றுப் பெயரிடப் பட்டிருந்தது. இந்நால்வகை நிலத்திலும் வாழ்ந்த தமிழ்ப் பெருமக்கள் அவ்வந்நிலத்தில் ஒவ்வோர் தெய்வத்தை வணங்கினர். இதனைத் தொல் காப்பியனார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென்று
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
-தொல்காப்பியம் : அகத்திணை இயல் : 5
என்று முல்லை நிலத்திற்குத் தெய்வம் திருமால் என்றும், குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் முருகன் என்றும், மருத நிலத்திற்குத் தெய்வம் இந்திரன் என்றும், நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பழந்தமிழர் சமய நம்பிக்கை மிகுந்தவர்கள். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவர்கள்; அழகுணர்ச்சி மிக்கவர்கள். எனவே எங்கெங்கெல்லாம் அழகினைக் கண்டார்களோ அங்கெல்லாம் கோலக் குமரன் கொலு வீற்றிருப்பதாக எண்ணி வழிபாடாற்றினார்கள். குறிஞ்சி நிலம் இயற்கையழகு இணையற்றுக் குடிகொண்டிருக்கும் இடமாகும். குன்றுகளும் குன்றுகளைச் சூழ்ந்த காடுகளும் மக்கள் கண்ணினையும் கருத்தினையும் கவர வல்லன. எனவே திருமுருகப் பெருமானைத் திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பெருமான் ‘விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ’ என்று குறிப்பிடுகின்றார்.
முருகனுடைய திருவவதாரம் உலகு உய்யும் பொருட்டாக நிகழ்ந்ததாகக் கந்தபுராணம் பாடிய சிவாச்சாரியர் நயம்பட நவின்றுள்ளார்.
அருவமு முருவு மாகி
அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங்
கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்
குதித்தனன் உலக முய்ய.
-கந்த புராணம்: திருவவதாரப் படலம்: 92
முருகு என்ற சொல்லிற்கு மணம், இளமை, கடவுட் தன்மை, அழகு என்ற பொருள்கள் உண்டு. “இயற்கை மணமும்,மாறா இளமையும், எல்லாப் பொருளையுங் கடந் தொளிருந் தன்மையும், அழியா அழகும் இறைவனிடத்தில் இலங்குவது கண்டு, அப்பொருள்கள் முறையே உறைதற் கிடம் பெற்றுள்ள முருகன் என்னுஞ் சொல்லை, அவ்விறைவனுக்குப் பழந்தமிழ் மக்கள் சூட்டியதன் திறமையை நோக்குழி அவர்களது கூர்த்தமதி புலனாகிறது” என்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் முருகக் கடவுளை முழுமுதற் பொருளாகப் பழந்தமிழர் கொண்டதன் சிறப்பினைப் பொருத்தமுறப் புகன்றுள்ளார்.
மக்கள் வாழ்வு முதன் முதல் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது ஆன்ற அறிஞர்தம் கருத்துரையாகும். இத்தகு பழைய நிலத்தின் கடவுளினை முருகன் என்று முன்னோர் கூறினர். முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. முருகனை அழகன் என்று புலவர் போற்றினர். ‘அழகான மேனி தாங்கிய வேளே’ என்றும், முதுமலை அழக குரு நாதா என்றும், ‘மணிமுதிராடக வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே’ என்றும், ‘அயிலு மயிலு மறமு நிறமு மழகு முடைய பெருமாளே’ என்றும் திருப்புகழில் அருணகிரியார் பலவாறு முருகனை அழகன் என்று போற்றிப் பரவுகின்றார். குன்று தோறும் உறைவதால் முருகனைக் குன்று தோறும் ஆடிவரும் குமரவடிவேலன் குன்றுதோ டூடல்மேவு பெருமாளே’ என்று திருப்புகழ் முருகனைக் குறிப்பிடுகின்றது. கார்த்திகைப் பெண்டிர் அறுவரும் எடுத்து வளர்த்தமையால் ஆறு குழந்தையாக விளங்கிய முருகன் உமை ஒன்றாகச் சேர்த்துத் தழுவ ஆறு முகமும் பன்னிருகையும் கொண்ட ஒரு திருவுருவானான்.
எனவே முருகனுக்குக் கந்தன் என்ற பெயரும் உண்டு. நெருப்புக் கடவுள் தன் கையில் முருகனை ஏந்தியதால் ‘அக்கினி பூ’ என்ற பெயரும், கங்கையில் வளர்ந்த காரணத்தால் ‘காங்கேயன் என்ற பெயரும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் ‘சரவணன்’ என்ற பெயரும், கார்த்திகைப் பெண்கள் ஓராறு பேரும் கண்டுகளித்திட வளர்ந்தவன் ஆனதால் ‘கார்த்திகேயன்’ என்ற பெயரும், கடப்ப மரநிழலில் துயின்றதால் ‘கடம்பன்’ என்ற பெயரும், ஆறுமுகம் கொண்டமையின் ‘ஆறுமுகன்’ என்ற பெயரும், அழகும் இளமையும் கொண்டு திகழ்வதால் ‘அழகன்’, ‘குமரன்’ என்ற பெயர்களும், அடியார்களின் உள்ளமெனும் கோயிலில் உறைகின்ற காரணத்தால் ‘குகன்’ என்ற பெயரும், விசாக நாளுக்கு உரியவனாகத் தோன்றியவால் ‘விசாகன்’ என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. பிரணவத்தின் பொருளை உணர்த்த வேண்டிச் சிவனுக்கு உபதேசித்ததால் ‘தகப்பன் சாமி”, ‘குருமூர்த்தி’, ‘சாமிநாதன்’ என்ற பெயர்களும் இவருக்கு உண்டு.
“முருகப் பெருமான் செந்நிறத்தவர்; செவ்வடியினர்; செம்பவளம் போல் செக்கச் சிவந்த மேனியர்; குன்றி மணியினைப் போலச் சிவந்த ஆடை உடையவர்; கிரௌஞ்ச மலையைத் தம் வேலினால் பிளந்து, அஞ்ஞான இருளாம் குரனை மாய்த்து இவ்வுலகை அவர் புரக்கின்றமையின் இவ்வுலக மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்வோடும் வாழ்கின்றார்கள்.” இவ்வாறு எல்லா வகைக் குற்றமும் நீங்கிய செய்யுள்” என்று தமிழ் இலக்கணத்தில் எடுத்துக் காட்டப் படுகின்ற பாரதம் பாடிய பெருந்தேவனாரின் அழகிய பாடல் கூறுகின்றது. அப்பாடல் வருமாறு:
தாமரை புரையுங் காமர் சேவடி
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக வெறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலன் கொடியோன் காப்ப
ஏம வைகல்எய் தின்றால் உலகே.
– குறுந்தொகை: கடவுள் வாழ்த்து.
ஊர்தோறும் ஊர்தோறும் எடுத்துக் கொண்ட தலைமை பொருந்தின விழாவின் கண்ணும், அன்புடையார் ஏத்த அகமகிழ்ந்து அவன் அருள் சுரக்கின்ற இடத்தினும், வேலன் என்னும் முருக கோயில் பூசாரி வழிபாடு ஆற்றுவதற்கு இழைத்த வெறியாடு களத்தினும், காடு, சோலை, ஆற்றிடைக்குறை, யாறு, குளம், பல ஊர்கள், நாற்சந்தி முச் சந்தி ஐஞ்சந்தி, கடம்ப மரம், ஊர்க்குப் பொதுமன்றமாய மரத்தடி, அம்பலம், ஆதிண்டு குற்றி முதலிய இடங்களிலும் முருகன் உறைவதாக நக்கீரர் பெருமான் திருமுருகாற்றுப் படையில் குறித்துள்ளார்:
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனுங்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ்
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
-திருமுருகு : 220-226
என்று முருகன் உறைவதாக அவர் குறிப்பிடும் இடங்கள் அழகு உறையும் இயற்கை நிலையங்களாகும்.
இவை தவிர, திருமுருகாற்றுப்படையில் ஆறு படை வீடுகள் முருகனுக்குரியனவாகப் பேசப்படுகின்றன. முதலாவதாகப் பேசப்படும் படைவீடு திருப்பரங்குன்றமாகும். சூரனைத் தோற்கடித்து தேவருலகினைக்காத்த முருகனுக்கு, இந்திரன் தான் வளர்த்த தேவசேனை என்னும் நங்கை நல்லாளைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்வித்துக் கொடுத்ததாகக் கந்தபுராணம் கூறும். பழந்தமிழ் நூல்களான பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, மதுரைக் காஞ்சி முதலான நூல்களும் திருப்பரங்குன்றத்தினை முருக வேள் உறையும் தலமாகக் குறிப்பிடுகின்றன :
பரங்குன்று இமயக் குன்ற நிகர்க்கும்
-பரிபாடல் : 8-11
என்று பரிபாடலும்,
“ஒன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற வென்வேலான்
குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்”
-கலித்தொகை : 27
என்று கலித்தொகையும்,
சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற்
சீர்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை
-அகநானூறு : 59 : 10-12
கூடற் கூடாது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய
ஓடியா விழவின் நெடியோன் குன்றத்து
-அகநானூறு : 149 : 15-16
என்று அகநானூற்றிலும்,
வன்கை வினைஞர் அரிபறை யின்குரல் அளிமழை பொழியுந் தண்பரங் குன்றில்
-மதுரைக்காஞ்சி: 262 :263
என்று மதுரைக் காஞ்சியிலும் முருகப்பெருமானின் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் கூறப்பட்டுள்ளது. இது போன்றே இரண்டாவது படைவீடான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் மிகப் பழமையான தலமாகும். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்த விரும்பிய மருதனிளநாகனார் என்னும் புறநானூற்றுப் புலவர் திருச்செந்தூரில் கடலின் அலைகளால் மோதப்படுவதும் முருகவேள் எழுந்தருளியிருப்பதுமாகிய திருக்கோயிலின் முன்னுள்ள கடற்றுறையில் கடுங்காற்றால் திரட்டித் தொகுக்கப்பெற்ற மணலைவிடப் பல்லாண்டு காலம் நீ வாழ்வாயாக என்று வாழ்த்தியிருப்பதனை பின் வரும் புறநானூற்றுப் பாடற்பகுதியினின்று அறியலாம்:
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்றுறைக்
கடுவளி தொகுப்ப வீண்டிய
வடுவாழ் எக்கர் மணலி னும் பலவே.
-புறநானூறு : 55: 17-22
அகநானூறும் திருச்செந்தூரின் பழமையினைப் பின்வருமாறு பேசுகின்றது:
திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேஎயொ டுற்ற துளே.
-அகநானூறு : 266 : 20-217
திருமறைக்காடு தேவாரம்.
நஞ் செந்தின் மேய,
வள்ளி மணாளர்க்குத் தாதை கண்டாய்
என்று திருச்செந்தூரினைக் குறிப்பிடுகின்றது.
மூன்றாவது படைவீடு திருவாவினன் குடி என்றும் சித்தன்வாழ் மூதூர் என்றும் சொல்லப்படும் பழநித் திருத்தலமாகும். இத்தல மகிமையினைக் கந்தரலங்காரம் பின் வருமாறு குறிப்பிடுகின்றது:
படிக்கின் நிலைபழ னித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் நிலைபர மானந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் நிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே
-கந்தரலங்காரம்: 75
இப் பாடல் உள்ளம் உருக்குவதாகும்.
நான்காவது படைவீடு திருவேரகமாகும். திருவேரகத்தை மலைநாட்டிலுள்ளதொரு திருப்பதி என்று கூறுவர் நச்சினார்க்கினியர். ஆனால் அருணகிரிநாதர் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலையே இப்பதி என்று கருதியமை,
காவிரி யாற்றுக்குளேவரு,
வளமைச் சோழநன் னாட்டுக்குள் ஏரசு நகரிற்
சீர்பெறு மோட்சத்தை யேதரு பெருமாளே
எனவும்,
யாவு மலைகொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும்
ஏரகமமர்ந்த பச்சை மயில்வீரா
எனவும் வரும் திருப்புகழ்ப் பாடற்பகுதிகளை நோக்கின் அவர் கருத்துப் புலனாகும்.
குன்று தோறாடல் எனும் சொல் ஒரு தலத்தைக் குறிக்காமல் குன்றுகள் அனைத்திலும் கோலக்குமரன் கொலுவீற்றிருக்கிறான் என்பதனை உணர்த்தும். அருணகிரியாரும் ‘வடிவ தாமலை யாவையு மேவிய தம்பிரானே’ என்றும், ‘பலகுன்றிலு மமர்ந்த பெருமாளே’ என்றும், ‘பலமலை யுடைய பெருமாளே’ என்றும், ‘குன்றுதோறாடல்மேவு பெருமாளே’ என்றும் தம் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு நோக்கற்குரியது.
ஆறாவது படைவீடு பழமுதிர் சோலையாகும். மதுரைக்கு அண்மையிலுள்ள அழகர்மலை பழமுதிர்சோலை என்பர். இவ் ஆறு படைவீடுகளையும் திருமுருகாற்றுப் படையின் வரிசை முறையிலேயே கந்தபுராணக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களும், கந்தரந்தாதியின் முதற்செய்யுளும் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம் குன்றக்குரவையில் இளங்கோவடிகள்,
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும்
பௌவத்தின் உள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே
– சிலம்பு; குன்றக் குறவை : 8
என்று படைவீடுகளில் சிலவற்றினைக் குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கியத்தில் குறிஞ்சிநிலத் தலைவி ஒருத்தி தலைவன் மீது கொண்ட காதலால் நலிவுற்று உடல்மெலிந்தால் அத்தலைவியின் தாய் முருகன் கோயில் பூசாரியாகிய வேலன் எனப்படும் படிமத்தானை அழைத்து, தலைவியின் நோய்க்குரிய காரணத்தினை உசாவுவாள். அவ் வேலன் வெறியாட்டு எடுப்பான். வெறியாடும்பொழுது கழற் காயினை மெய்யில் அணிந்து, படிமக்கலத்தைத் தூக்கிக் கொண்டு முருகணங்கின் குறையென வேலன் கூறுவான் ;
பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி
முருகென மொழியும்.
– ஐங்குறுநூறு : 245: 1-3
இவ் முருக வழிபாடு ஆரவாரத்தோடு நிகழும். குழல் அகவும்; யாழ் முரலும்; முழவு ஆகிரும்; முரசு இயம்பும் என்று பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் குறிப்பிட்டுள்ளார் :
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து.
-பட்டினப்பாலை : 154-158
இம்முறையில் பழந்தமிழர் பண்பாட்டோடு-நம்பிக்கையோடு முருகனுக்கு விழாவெடுத்தனர்.
தேவேந்திரன் தர தேவசேனையைக் கற்பு மணம் புரிந்த முருகன், தினைப்புன மாது வள்ளியைத் தாமே விரும்பிக் களவு மணங்கொண்டு கற்பில் தலைப்படுகின்றார். “யான் எனது அற்ற அடியவரிடம் இறைவன் தானே வந்து நல்குவாள்” என்ற உயரிய தத்துவத்தை வள்ளித் திருமணம் விளக்குகிறது என்பர் பெரியர். எனவே தேவ சேனையைக் ‘கிரியா சக்தி’ என்றும், வள்ளியை ‘இச்சா சக்தி’ என்றும், வேலினை ‘ஞானசக்தி’ என்றும் கூறுவர். இது போன்றே மயிலினை ஆணவம் என்றும், கோழியினைச் சிவஞானம் என்றும்; மயிலாகிய ஆணவத்தினை அடக்கித் தான் அமரும் வாகனமாக்கிக் கோழியாகிய சிவஞானத்தைக் கொடியாக உயர்த்தித் தன் கையில் பிடித்துள்ளார். முருகப்பெருமான் என்பர் அறிஞர். முருகனுக்குச் சிறந்த படையாக விளங்குவது வேலாயுதமாகும். எனவே பெரியோர்விழிக்குத் துணையாக முருகனின் மலர்ப்பாதங்களையும்,மொழிக்குத் துணையாக ‘முருகா’ எனும் திருப்பெயரினையும், பழிக்குத் துணையாக அவன் தன் பன்னிரு தோளினை யும், வழிக்குத் துணையாக வேலினையும் மயிலினையும் துணையாகக் கொள்வர். அருணகிரியார் பாடும் அவ்வழகிய பாடல் வருமாறு:
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள்
மெய்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு
நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன்
பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி
வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
-கந்தரலங்காரம்: 70
மேலும் காதிர்காமத் திருப்புகழில் அருணகிரியார் இதமொழி பகரினும் மதமொழி பகரினும் ஏழைக் கிரங்கும் பெருமாளே (422) என்று ஏழைக்கிரங்கும் ஏந்தலின் இதயத்தினைப் புகழ்ந்துரைத்துள்ளார். மேலும், ‘மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமி ழால் வைதா ரையும்அங்கு வாழவைப் போன்’ (கந்த ரலங்காரம்: 22) என்று முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் என்று தமிழ்பால் முருகன் கொண்ட தணியாத காதலைப் புலப்படுத்துகின்றார்; ஊமையாகப் பிறந்து செந் தில் முருகன் அருளால் பேசும்திறம் பெற்ற குமரகுருபரர், முருகன் வள்ளியின் ‘தேனூறு கிளவிக்கு வாயூறி’ நின்ற தைக் குறிப்பிட்டு,
விழியாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள் வேண்டிய
வரங்கொடுப்பான் மெய்கண்ட தெய்வமித்
தெய்வமல் லாற்புவியில் வேறில்லை
– முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்:7:6
என்று முருகனே முழுமுதற் பொருள் என்று மனமாரப் பாராட்டி வணங்குகின்றார்.
முருகனுக்குரிய விரதங்கள் வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சஷ்டி முதலியனவாகும். கச்சியப்பர், அருணகிரியார், குமரகுருபரர் முதலிய புலவர் பெருமக்களை ஆட் கொண்ட அண்ணல் அவர். ‘குமாராய ஙம’, ‘சரவணபவ’ என்ற ஆறெழுத்து – சடாட்சரம் முருகப் பெருமானுக்கு உரிய மந்திரமாகும். எனவே தமிழ்த் தெய்வமாம் முருகன் திருப்பெயரினை உளம் உருகி ஓதுவோரை நாளும் கோளும் ஒன்றும் செய்யா. அஞ்சுமுகந் தோன்றினால் முருகனின் ஆறுமுகந் தோன்றும். நெஞ்சில் ஒருமுறை எண்ணினால் இருமுறை தோன்றி ‘அஞ்சாதே’ என்றுகூறி, தெய்வ இள நலம் காட்டி அடியவர்க்கு அருள் மழைபொழிவான் திருமுருகன் என்பது திண்ணம்.