10. இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் காட்டும் முருகன்
பாரதியார்
பாரதியார் ‘தோத்திரப் பாடல்கள்’ என்ற பகுதியுள் கண்டுள்ள “முருகா! முருகா!” என்ற பாடலில் சில அடிகள் நம் நெஞ்சை அள்ளும் நீர்மையனவாய் உள்ளன. அவை வருமாறு:
வருவாய் மயில்மீ தினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
சுருதிப் பொருளே, வருக
துணிவே கனலே,வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
அறிவா கியகோ யிலிலே
அருளாகிய தாய் மடி மேல்
பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
அடுத்து ‘வேலன் பாட்டு’ என்ற பாடலில்,
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்–கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
என்று பாடியதோடு அமையாது பாட்டின் இறுதியில்,
ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
மாகுதே – கையில்
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும்–இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
என்று முருகப் பெருமான் அடியவர்க்கு அஞ்சல் என்று அருளி, பிணி பசி பாவங்களைக் களைந்து காத்து அருள் புரிவான் என்பதனைச் சிறப்புறக் கூறியுள்ளார்.
அடுத்து, ‘முருகன் பாட்டு’ என்ற பகுதியில்,
வீரத் திருவிழிப் பார்வையும்–வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே–எந்த
நேரத் திலும் என்னைக் காக்குமே
என்று வேலும் மயிலும் துணை’ என்பதனைச் சொல்லி நமக்கு நல்வழி காட்டுகின்றார்.
ஆறுமுகமும் பன்னிருகையும் வீர விழிகளும் வெற்றி வேலும் மயிலும் கொண்ட ஞானத் திருவுருவமே பாரதியார் நமக்குக் காட்டும் முருகன் அருளுருவமாகும்.
கவிமணி
திருச்செந்தூர் முருகனிடத்திலே மாறாத பக்தி கொண்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஆவர். அமரவிளைப் புலவர் சுடலைமுத்துப் பிள்ளை என்பவர் திருச்செந்தூருக்குச் சென்று முருகனைத் தரிகிக்கப் போகும் வழியில் கவிமணியைக் கண்டு முருகன் மேல் ஒரு பாடல் பாடியருளுமாறு கேட்டார். அதுபோது கவிமணி பாடிய பாடலில் கழிவிரக்கம் மிகுதியும் காணப்படுகின்றது.
ஒரு செய்யுள் வருமாறு:
உன்னிடத்தி லன்றி உலகில் எவரிடம்போய்
என்னுடைய சங்கடத்தை யானுரைப்பேன்—பன்னி
ருகை
ஏந்துமெழில் செந்தில் இறைவா! உனையன்றி
ஆந்துணை வேறுண்டோ ஐயா?
மேலும் கவிமணி அவர்கள் கவிவாணர்கள் வாழ வரந்தர வேண்டும் என்று குறையிரந்து குகனாம் முருகனைப் பரவி வந்திக்கின்றார்!
செந்தில் முருகா! திருமால் மருகா! என்
சிந்தை குடிகொண்ட தேசிகா! – வந்தினிய
பைந்தமிழ்ச் சோலையிலே பாடும் கவிக்குயில்கள்
சந்ததம் வாழவரம் தா.
அடுத்து ‘மாயன் முருகள்’ என்ற கீர்த்தனைப் பாடலில் கல்லும் கனிந்துருகும் வண்ணம் கந்தவேளை அருளுமாறு வணங்குகின்றார் கவிமணி அவர்கள்.
பல்லவி
ஐயா! நீ அருள் செய்யவேண்டும்– உன்றன் அடியிணை யன்றிவே றொருதுணை அறியேன்
அநுபல்லவி
ஓய்யார மாமயிலில்
உல்லாச மாகவரும்
வையா புரிமருகா
மாயன் திருமருகா! (ஐயா)
சரணம்
வஞ்ச வினைமலியும் உலகில்-வாழும்
வழியறி யாதுநிதம் வருந்திடு மெளியேன்’
அஞ்சிவந் துன்னையே
அடைக்கல மாய்ப்புகுந்தேன்
அமரரைச் சிறைதவிர்த்
தாண்ட குமரா! என் (ஐயா)
இறுதியாக, கவிமணி முருகப் பெருமானை வேண்டி நிற்கும் வரம் இதுவே:
பல்லவி
சித்தம் இரங்கி அருளையா!–சற்றே
சித்தம் இரங்கி அருளையா!
அநுபல்லவி
நித்தமுன் திருக்கோவில்
நினைந்து தொழுது நின்றேன்;
முத்தையனே! செந்தில்
முருகனே! சண்முகனே! (சித்தம்)
சரணம்
மன்னராய்ப் பிறக்கவும் வேண்டாம்-அந்த
வானக வாழ்வும் பெறவேண்டாம்;
உன்னடி நிழலிலே
ஒதுங்கிடச் சிறிதிடம்
என்னுயிருக் குதவ
எம்பெரு மானே நீ (சித்தம்)
நாமக்கல் கவிஞர்
காந்தீயக் கொள்கைகளைக் கவிதை வழி நாட்டிற் பரப்பிவரும் நாமக்கல் கவிஞர் திரு. வே. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் கடவுள் மேலும் – தமிழ்க் கடவுளாம் முருகன் மேலும் மனம் நெகிழ்ந்து பாடியுள்ளார். முருகன் மொழிந்த சொல்லால் பற்றுக்கள் அற்ற நிலை வந்தெய்தியது என்கிறார் கவிஞர்.
இளமையந்த முருகன் வந்து
என்னொடொன்று சொல்லவே
என்னுளத் திருந்த பந்தம்
ஏதுமற்றுப் போனதே
என்று முருகன் செயல் கூறும் கவிஞர், முருகன் ‘அஞ்சேல்’ என்று தமக்கு அளித்த அபயத்தால் துன்பம் நீங்கிச் சுகம் வந்ததாகக் குறிப்பிடுகின்றார்:
அன்பனந்த முருகன் வந் தழைத்திருத்தி என்னையே
அஞ்சல்அஞ்சல் அஞ்சலென் றகங்குழைந்து சொன்னதால்
துன்பரிக்க அடிமைவாழ்வில் தோய்ந்திருந்த என்மனம்
சோகம்விட்டு விடுதலைக்கு மோகமுற்றி விட்டதே.
-தமிழன் இதயம்: முருகன் பாட்டு.
‘முருகன்மேற்காதல்’ என்ற இசைப்பாடலில், முருகன் என்ற பெயர் சொன்னால் உள்ளம் உருகுவதாகவும், கந்த னென்று பெயர் சொன்னால் சிந்தை துள்ளுவதாகவும். வேலனென்று பெயர் சொன்னால் வேர்வை கொட்டுவதாகவும், குமரனென்ற சத்தத்தால் சித்தம் குளிர்வதாகவும், குகன் என்று சொல்வதற்குள் அகம் மறந்ததாகவும் கவிஞர் குறிப்பிடுகின்றார்.
ஆடும் மயிலில் வரக்கண்டேன்–சொல்ல
அழகு அதைவிட ஒன்றுண்டோ
வீடு வாசல் பொருள் எல்லாம் – துச்சம்
விட்டு மறந்த னடி நல்லாள்
என்று முருகன் மயில் மீதமர்ந்து உலா வரும் உவப்பான காட்சியினைக் கண்ட கவிஞர் வீடு வாசல் பொருள் எல்லாம் துச்சம் எனத் துறந்து முருகன் காட்சியில் ஒன்றுபட்ட நிலையினைக் கவினுறக் காட்டியுள்ளார்.
உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
முருகனைப் பற்றிய பாடல்களைப் பாமணக்க நாமணக்கப் பாடும் இளங்கவிஞர் இவர். ‘தென்பழநித் தெய்வமே என் சிந்தை நிறை செல்வமே’ எனப் பாடும் இவர் ‘இறைமை’ குறித்து இனிய பல கவிதைகளை இசை இனிமை பொருந்த இயற்றியுள்ளார். ‘மலைபோல் துன்பமும் பனிபோல் நீங்கிடும் மால்முருகன் மனம் வைத்தால்’ என்றும், ‘அலைவாய் அழகன் அன்பருக் கன்பன், அவனே என்துயர் அகற்றிடும் நண்பன்’ என்றும் பக்திச் சுவை நனி சொட்டப்பரங்குன்றமர்ந்த பெருமானைப் பரவி நிற்கின்றார்.
நீயல்லால் தெய்வம் இல்லை–எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை—முருகா
என்றும்,
வாயாரத் துதித்து மனமார நினைந்து வணங்கிடலே
என்தன் வாழ்நாளில் இன்பம் தூயா முருகா மாயோன்
மருகா தொழுவ தொன்றேஇங்கு நான்பெற்ற இன்பம் (உனைத்
தொழுவ தொன்றே இங்கு நான்பெற்ற இன்பம்
என்றும் நெஞ்சுருகப் பாடுகின்றார். தண்டாத தமிழ்ப் பற்றோடு இறவாத இறைமையுணர்வோடு, இவ் இளங்கவிஞர் உள்ளமெனும் கோயினில் உறைகின்ற குமரனை அகங் குழைந்து-உளங்கனிந்து உவந்து உவந்து பாடியுள்ளார். ஏற்றம் மிகுந்த அவ் இனிய பாடல் வருமாறு:
உள்ளமே கோயில்
பண் – கானடா தாளம் : ஆதி
எடுப்பு
உள்ளமெனும் கோயிலிலே உறைகின்றாய் குமரா வள்ளியம்மை கணவா வடிவேலா முருகா [உள்ள மெனும்
உடனெடுப்பு
தெள்ளமுதே தேனே தெவிட்டாத தீந்தமிழே
சொல்லற்கரிய இன்பச் சுவையே கனிரசமே (உள்ளமெனும்)
அமைதி
வல்ல குறிஞ்சி நிலம் வாழ்பவனே கந்தா
வளர்இமை யோன்தந்த உமையவள் மைந்தா
அல்லும் பகலும்உனை எண்ணிடும் வரந்தா
அடியனுக்கு உனது ஞானப் பதந்தா
அடியார் தொழும்படியாய் — இளம்
வடிவத் தோடெழுந்து
வடியாக் கடலலைவாய்—தனில்
துடியாய் நிற்பவனே
அமைவாய் மிகுகனிவாய்–முதிர்
பழமாய்ப் பழநியிலே
அருளாய்ப் பெரும்பொருளாய்–மன
இருள் நீக் கிடும்முருகா
அறுமுகனே குருபரனே
சரவணனே சண்முகனே
அனுதினமும் உனைத்தொழவே
ஆலயமும் வேண்டிலனே
அகத்தினிலே மிகத்தெளிவாய்
அமர்ந்துறையும் அன்பரசே
இகத்தினிலே இன்பமெல்லாம்
என்னுயிரே நீயன்றோ!
என்னுயிரே நீயன்றோ!!
என்னுயிரே நீயன்றோ!!
இவ்வாறாக இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் முருகன் மாட்சியினை மாண்புற உணர்ந்து, ஞாலம் உய்ய ஞானப் பழமாய் இலங்கும் கோலத் திருமுருகனின் காட்சியினைச் செவ்வனே நமக்குத் தெளிவு பெறத் தம் பாடல்கள் வழியே காட்டியுள்ளனர்.