9. வள்ளலார் காட்டும் முருகன்
அன்னம் பாலிக்கும் தில்லைப்பதிக்கு வடமேற்கே மருவூர் என்றோர் ஊர் உண்டு. தென்னார்க்காடு மாவட் டத்தில் உள்ள இவ்வூரில் சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் 21-ஆம் நாள் (5-10-1823) ஞாயிற்றுக்கிழமையன்று இராமையா பிள்ளைக்கும் சின்னம்மாளுக்கும் பிறந்த பிள்ளையே நம் அருட்சோதி இராமலிங்க வள்ளலாவர். அவர் பிறந்த வேளையில் ஓர் ஒளி தோன்றியது என்றும், தேவர்கள் பூமாரி பொழிய, அடியவர்களாம் அன்பர்கள் அகமகிழ்ந்தனர் என்றும் கூறுவர்.
பள்ளிப் படிப்பில் இராமலிங்கம் பிள்ளையின் மனம் செல்லவில்லை. ஓதாது உணர்ந்த பெரியவர்கள் ஓர் எல்லைக் குட்பட்ட கல்வியில் கட்டுண்டிருப்பரோ? இளமையில் இராமலிங்கர் தன் அண்ணன் சபாபதிப் பிள்ளையோடு தங்கியிருந்தார். அண்ணன் வாழ்ந்தது தருமமிகு சென்னை யாகும். அவர் குடியிருந்த சென்னை ஏழுகிணறு வட்டத்து வீராசாமிப்பிள்ளைத் தெரு 39ஆம் எண் இல்லத்து மாடியில் அண்ணியாரின் தூண்டுதலால் தாமே கல்வி பயிலத் தொடங்கினார் இராமலிங்கர்.
இராமலிங்கரின் சற்குரு சுவாமிநாதன் என்றும் தகப்பன்சாமி என்றும் குருநாதன் என்றும் குருசாமி என்றும் கூறப்படும் முருகப் பெருமாளே ஆவர். யாவற்றுக்கும் மூலமதாய் விளங்கும் பிரணவப் பொருளினைத் தந்தைக்கே உபதேசித்த பெருமான் அன்றோ அவர்? ‘திருவருட்பாப் பெருநூல்’ நம் இராமலிங்கர் முருகப்பெருமானைக் கண்ணாடியில் கண்டு அவர் அருளால் ஓதாது ஓதியுணர்ந்தார் என்று குறிப்பிடுகின்றது. அப்பகுதி மட்டும் ஈண்டு அகழ்ந் தெடுத்துத் தரப்படுகின்றது.
“அறையினை அடைந்த நம் பிள்ளைப் பெருமானார் தெய்வ ஆராதனைக்கு வேண்டிய திருவிளக்கு, பழம், திருமலர், சாம்பிராணி, வத்தி,கற்பூரம், கற்கண்டு முதலியவற்றைச் சேகரித்துக்கொண்டு அவ்வறையிலேயே திருவிளக்கை ஏற்றி, ஒரு கண்ணாடியைச் சுவரில் மாட்டி, அக் கண்ணாடிக்கு மாலைசூட்டி, பழம் படைத்து, கற்பூரம் காட்டி கண் இமை கொட்டாது அதனையே உற்று நோக்கினார். அக்கண்ணாடியில் சிறிது நேரத்திற்கெல்லாம் திருத்தணிகைக் கந்தப்பெருமான் திருவுருவம் தெரியலாயிற்று.”
தணிகை மலைமீதுறையும் அணிகொள் சேவற்கொடி யோனாம் முருகப்பெருமானைத் தம் முன்னே கண்டவுடன் இராமலிங்கரின் உள்ளம் பொங்கியது ; களிநடமிட்டது; கவிதை மழையும் பொழிந்தது:
சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத்
தாள்களும் ஓர் கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக்
கொடியும் அருள் கார்கொண்ட வண்மைத்
தணிகா சலமும் என் கண்ணுற்றதே.
அவர் உள்ளத்தின் உவகை ஊற்றில் ஊறிப்பொங்கிய கவிதையில் ஒன்றே மேலே கண்டது. திருத்தணிகை வேலன்பால் அன்றிலிருந்து ஆராத காதல் கொண்ட அடியவராய் இராமலிங்கர் ஆனார். எனவே தான்
நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை
மலையதனை நண்ணி என்றன் கண்ணேநீ
அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ
என்று பின்னாளில் மனங்கசிந்து பாடினார்.
இளவயதிலேயே முருகப்பெருமான் தன்னை ஆட் கொண்ட அன்பின் பெருக்கினை இராமலிங்களின் பின்வரும் திருவாக்குக் கொண்டு தெளியலாம்:
அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
வெம்மாலைச் சிறுவரோடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
பெம்மான்என் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த
பெருமானே நான்செய்த பெருந்தவ மெய்ப்பயனே.
மேலும் பிறிதொரு பாடலில் இவர்,
ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்து
என்னை ஆட் கொண்டெனை உவந்தே
ஓதும்இன் மொழியால் பாடவே பணித்த
ஒருவனே என்னுயிர்த் துணைவா?
என்றும் பாடியுள்ளமை கொண்டும் அறியலாம். இராமலிங்கர் தாம் எழுதிய உரைநடையின் ஒரு பகுதிகொண்டும் இவ்வுண்மையினை நாம் துணியலாம்.
“தனித் தலைமைக் கடவுளே! குமார பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியர் இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது உள்ளகத்தே இருந்து பயிற்றுவித் தருளினீர்.”
இவ்வாறு தமக்கு அருள்புரிந்த அறுமுகனைக் கொம்மிப் பாடலொன்றில் சிறப்புறக் கூறுகின்றார் இராமலிங்கர் :
மாமயி லேறி வருவாண் டி–அன்பர்
வாழ்த்த வரங்கள் தருவாண் டி
தீமையி லாத புகழாண் டி–அவன்
சீர்த்தியைப் பாடி யடியுங்க டி
– சண்முகர் கொம்மி :2
மேலும் அவர்,
பன்னிரு தோள்க ளுடையாண் டி. கொடும்
பாவிகள் தம்மை யடையாண் டி
என்னிரு கண்க ளனையாண் டி–அவன்
ஏற்றத்தைப் பாடியடியுங்க டி
-சண்முகர் கொம்மி :3
என்றும்,
சைவந் தழைக்கத் தழைத்தாண் டி–ஞான சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண் டி பொய்வந்த வுள்ளத்திற் போகாண் டி – அந்தப் புண்ணியன் பொன்னடி போற்றுங்க டி
-சண்முகர் கொம்மி: 12
என்றும் பாடியுள்ள பாக்களின் சிறப்புச் சொல்லுக் கடங் காதனவாம். திருமுருகனே ஞானசம்பந்தப் பெருமானாகத் தோன்றினார் என்பது பெரியோர் கொள்கை; அருணகிரியார் கொள்கையும் அதுவே. இராமலிங்கர் கொள்கையும் அருணகிரியாரை யொட்டியே அமைந்திருந்தது என்பது மேலே கண்ட பாடல்வழிப் புலனாகும்.
சண்முகர் வருகையினைப் பாடும்பொழுது,
வாரும்வா ருந்தெய்வ வடிவேல் முருகரே
வள்ளிம ணாளரே வாரும்
புள்ளிம யிலோரே வாரும்
– சண்முகர் வருகை :1
என்று மிடுக்காகவும் எடுப்பாகவும் கவிதை யுனைந்துள்ளார். இராமலிங்கர்.
திருத்தணிகைப் பெருமானை நாடோறும் பரவி வழிபட்டு வந்தார் இராமலிங்கர். எனவேதான் தணிகை நாதரின் தண்டைச் சிலம்படி காணத் தவம் கிடந்தார்.
பண்ணேறு மொழியடியர் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினை இப் பாவி பார்க்கில்
கண்ணேறு படுமென்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய் கருணைஈதோ
என்று நெக்குருகிப் பாடித் தணிகைப் பெருமானிடத்துத் தாம் கொண்ட தணியாத காதலைத் தடைபடாத பாட்டோட்டம் அமைந்த பின்வரும் பாடலில் கல்லும் கனிய எடுத்து மொழிந்துள்ளார்:
செய்கொள் தணிகை நாடேனோ
செவ்வேள் புகழைப் பாடேனோ
கைகள் கூப்பி ஆடேனோ
கருணைக் கடலில் நீடேனோ
மெய்கொள் புளகம் மூடேனோ
மெய்அன் பர்கள்பால் கூடேனோ
பொய்கொள் உலகோ டூடேனோ
புவிமீ திருகால் மாடேனோ.
இராமலிங்க வள்ளல் கண்ட கருணை வள்ளலாம் கந்தப்பெருமானின் கண்ணாடித் தரிசனம் அவர்தம் உள்ளத்தில் கவிதை மழையினைப் பெருக்கெடுக்கச் செய்து அருட்பாப் பாடலாகப் பொழிந்து தள்ள அருள் சுரந்தது.