8. குமரகுருபரர் காட்டும் முருகன்
திக்கெலாம் புகழும் திருநெல்வேலியிலே தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஸ்ரீ வைகுண்டம் என்ற அழகுத் திரு நகரின் வடபால் ஸ்ரீ கைலாசம் என்றொரு பகுதியில் சைவ வேளாளர் குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. முருகனின் பழவடியாராய் விளங்கியது அக் குடும்பம். முருகன் திருவடியார் என்பதற்கேற்பத் தண்டாத தமிழ்ப்புலமையும். அக் குடும்பத்திற்கு மிக்கிருந்தது. இக்குடும்பத்தில் வந்த சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் அவர்தம் அருமை மனையாட்டி சிவகாமசுந்தரி அம்மைக்கும் பிறந்தது ஓர் ஆண் குழந்தை. அக்குழந்தையே நம் குமரகுருபரர்.
ஐந்து வயது வரையிலே பிறந்த குழந்தை ஒன்றும் பேசாமல் ஊமையாக இருந்தால் பெற்றோர்க்கு எப்படி இருக்கும்? அவர்கள் மனம் அலையிடைத் துரும்பெனக் கலங்கியது. பெற்றோர்கள் குழந்தையைத் திருச்செந் தூருக்கு எடுத்துச்சென்று, செந்திலாண்டவன் சந்நிதியில் கிடத்திப் பாடுகிடந்தனர். கந்தவேளின் கருணை மழையால் பேசாத குழந்தை பேசிற்று; பேசமட்டுமா செய்தது? கல்வி கேள்வியிற் சிறந்து கவி பாடவும் தொடங்கிற்று.
செந்திற்பதிவாழ் கந்தவேளின் கருணைப் பெருக்கால் பேசும் திறம் பெற்றதால் முதன் முதலாகக் குமரகுருபரர் அப்பெருமான் மீது கந்தர்கலிவெண்பா பாடினார். முருகப் பெருமானும் சிவபெருமானும் வேறல்லர் என்றும், இருவரும் ஒருவரே என்றும் கொள்கையுடையவர் குருபரர். எனவே இவர் கந்தர் கலிவெண்பாவில் சிவனுக்குரிய இயல்புகளை முருகன் மீது ஏற்றிப் பாடியுள்ளார். திரு முருகனின் வடிவழகினைச் சிறப்புறக் கந்தர்கலி வெண்பாவில் இருபத்தொரு கண்ணிகளில் இவர் வடித்துள்ளார். (37-57)
இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தருதெய் வீக வடிவும்
என்று அக் ‘கைபுனைந் தியற்றாக் கவின்பெறு’ வனப்பினைப் புகழ்கின்றார்.
முருகன் சூரனை அழித்த செய்தியினைக் கூறி “மறை முடிவாம் சைவக் கொழுந்தே! தவக்கடலே! வானுதவும் தெய்வக் களிற்றை மணஞ் செய்தோனே” என்று புகழ்ந்து துதிக்கின்றார். இத்தகு சீர் மிகுந்த முருகவேளிடம் குமர குருபரர் இரந்து வேண்டுவன இவையாகும்.
பல்கோடி சன்மப் பகையு மவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும்-பல்கோடி
பாதகமுஞ் செய்வினையும் பாம்பும் பசாசுமடற்
பூதமுந்தீ நீரும் பொருபடையும்-தீதகலா
வெவ்விடமுந் துட்ட மிருகமுத லாமெவையும்
எவ்விடம்வந் தெம்மை யெதிர்ந்தாலும்–அவ் [விடத்தின்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்டோளும்
அச்ச மகற்று மயில்வேலும்–கச்சைத்
திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையு மீரா
றருள்விழியு மாமுகங்க ளாறும் – விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிக ளோராறும்
எந்தத் திசையு மெதிர்தோன்ற–வந்திடுக்கன்
எல்லாம் பொடிபடுத்தி யெவ்வரமுந் தந்துபுகுந்
துல்லாச மாக வுளத்திருந்து………….
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டியாட்கொண்
டடியேற்கு முன்னின் றருள்.
-கந்தர் கலிவெண்பா : 111-122
குமரகுருபரர் முருகன் மீது இயற்றிய மற்றொரு சிறந்த நூல் முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகும். இக் காலத்து வைத்தீசுவரன் கோயில் அந்நாளில் ‘புள்ளிருக்கும் வேளூர்’ என வழங்கியது. மேலும் ஆதிவைத்தியநாதபுரி, கந்தபுரி, குருகூர், சடாயுபுரி, தினகரபுரி, பருதிபுரி, புள்ளூர், வேதபுரி, வேளுர் எனப் பல திருப்பெயர்களும் இத் தலத்திற்கு வழங்கும் என்பது இவர் பாடலால் பெறப்படும். இத் தலத்துறை முருகக் கடவுள் தீராத வினை தீர்த்தருளும் தம்பிரானாக விளங்குகிறார். கடவுள் முத்துக் குமரர் என்றும் சேனாபதி என்றும் வழங்கப்படுகின்றார். இம் முருகப் பெருமான் மீது குமரகுருபரர் பாடிய பிள்ளைத் தமிழே முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழாகும்.
இப் பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவத்தில் முருகன் வள்ளியம்மையிடம் கொண்ட காதலைக் குமர குருபரர் நயம்படர் பின்வருமாறு கிளத்துகின்றார்:
கூனேறு மதிநுதற் றெய்வக் குறப்பெண்
குறிப்பறிந் தருகணைந்துன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்
குறையிரந் தவடொண்டைவாய்த்
தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்
செங்கீரை யாடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள
செங்கீரை யாடியருளே.
-முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் : 2:5
பிறிதோரிடத்தில் முருகனைக் கூறும்பொழுது ‘அழகு கனிந்து முதிர்ந்த விளங்கனி’ எனப் புகழ்கின்றார். மேலும் ‘அருள்பொழி திருமுக மசைய வசைந்தினி தாடுக செங் கீரை’ என்று முருகனின் கருணைப் பெருக்கினைக் குறிப்பிடுகின்றார்.
தாலப் பருவத்தில் “மலையாள் வயிறு வாய்த்த முழு மணியே தாலோ தாலேலோ” என்று முருகன் பிறந்த உமையம்மையின் திருவயிற்றினைப் புகழ்ந்துரைக்கின்றார். “தோலாத முத்தமிழ் நாவா” என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் முருகக் கடவுள் அசுரரொடு போரிடுகையில் இறந்த அவுணர்கள் சூரிய மண்டலத்தை ஊடுருவிச் சென்று வீர சுவர்க்கம் புகுந்து தேவராகித் தேவலோக இன்பத்தைத் தாமும் தவறாது துய்ப்பர் என்றும் குறிப்பிடு கின்றார்.
முத்தப் பருவப் பாடலில், கள்ளைக் குடித்த மகளிர் மயக்கத்தால் வானூர் மதியைத் தேனிறால் என்று கருதி அதனை விரும்ப, மங்கையர்பால் மாறா மையலும் மயக்கமும் கொண்ட ஆடவர் அச் சந்திரனைப் பிடித்துப் பிழியத் தொடங்கும் எல்லையில், சந்திரன் தனக்குரிய தண்டனை இது போதும் என்று கருதி “நான் மகளிர் முகத்திற்கு ஒப்பென்று ஒருபோதும் கூறினே னில்லையே” எனக் குறை யிரந்து விடுபட்டு மகிழ்வான் என்று கற்பனை மிகுந்த பாடலொன்றினைப் புகழ்ந்துள்ளார். அப்பாடலின் ஒரு பகுதி வருமாறு:
துளிதூங்கு மழைமுகிற் படலங் கிழிக்கும்
துகிற்கொடிகள் சோலைசெய்யத்
தோரண முகப்பிற் றவழ்ந்தேறு கலைமதித்
தோற்றத்தை யறுகான்மடுத்
தளிதுங்கு தேனிறா லிதுதம்மின் வம்மினென்
றழிநறா வார்ந்து நிற்கும்
அந்நலார் கைகூப்ப வாடவர் பிழிந்தூற்று
மளவிலப ராதமிதெனா
ஒளிதூங்கு முகமதிக் கொப்பென்கி லேன்விடுதிர்
உயிரொன்று மெனவிடலும்.
-முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்: 5:7
வருகைப் பருவத்தில் ஓசைநயம் மிகுந்த பாடல்களில் முருகனை வாவெனப் புலவர் விளிக்கின்றார்.
இழுமெ னருவி சொரியு மிமய முதல்வி
புதல்வன் வருகவே
இயலு நடையும் வடிவு மழகு மெழுத
வரியன் வருகவே.
– முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்:6:1
அம்புலிப் பருவத்தில் முருகனே கண்கண்ட கடவுள் என்று சாதித்துப் பேசுகின்றார் புலவர்:
விழியாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள்
வேண்டிய வரங் கொடுப்பான்
மெய்கண்ட தெய்வமித் தெய்வமல்லாற் புவியில்
வேறில்லை யென்றுணர்தி.
-முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்:7:6
குமரகுருபரர் சிற்றில் பருவப் பாடலில் சிறுசோறு வேண்டி விளையாடும் இடத்தில் சிற்றில் சிதையாமலிருக்கக் கோருகின்றார்;
பிள்ளை மதிச்செஞ் சடைச்செருகும்
பெருமா னார்க்கு மூலகேழும்
பெற்ற தாய்க்கு நீயருமைப்
பிள்ளை யெனினெம் பேராய
வெள்ள மமைத்த சிறுசோறு
வேண்டி னிடுகே மலதெளியேம்
விளையாடிடத்துச் சிறுகுறும்பு
விளைத்தாற் பொறுக்க விதியுண்டோ
– முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்:8:7
சிறுபறைப் பருவத்திலே முருகனை ‘முத்தமிழ் பயில்பரு திப்பதி’ முருகனாகக் காண்கின்றார் குமரகுருபரர்.
இறுதிப் பருவமான சிறுதேர்ப் பருவத்தில் திரு முருகனைத் தீராத வினை தீர்த்த திருமுருகன் என்று கூறிப் பரவி வணங்குகின்றார், முருகன் அருள் பெற்ற அடியவராம் குமரகுருபரர்.
முருகப் பெருமானின் எழுதற்கரிய இயற்கை எழிலினை முருகனடியார்கள் விழிகளிலும் மனத்திலும் எழுதி எழுதி இன்புறுவார்கள் என்பதனை,
வடிவி னழகு மெழுத வரிய
புயமு நறிய செச்சையும்
மருமம் விரவு குரவு மரையின்
மணியு மணிகொள் கச்சையும்
கடவு மயிலு மயிலு மொழுகு
கருணை வதன பத்மமும்
கமல விழியும் விழியு மனமு
மெழுதி யெழுதி நித்தலும்
அடிகளெனவு னடிகள் பணியு மடியர்
– முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்: 5-10
என்ற பாடலில் புலப்படுத்தியுள்ளார்.
இப் பாடலைப் படிக்கும்பொழுது முருகளின் அழகுத் திருக்கோலம் நம் கண்முன்னால் வருகின்ற தன்றோ? இதுவே குமரகுருபரர் காட்டும் முருகனின் மாறாத இளைய அழகிய திருக்கோலமாகும்.