
முருகன் காட்சி
சி.பாலசுப்பிரமணியன்
பழந்தமிழர் இயற்கையோடியைந்த இன்ப அன்பு வாழ்வு வாழ்ந்தவர்கள். இயற்கையின் பின்னணியில் மக்கள் வாழ்க்கையினைக் கிளத்திக் கூறுவனவே சங்க இலக்கியங்களாகும். தொல்காப்பியனார் கூறும் முதற் பொருளும் கருப்பொருளும் இயற்கையின் இனிய பெற் றியினை எடுத்தியம்ப, அவர் கூறும் உரிப்பொருள் மக்கள் வாழ்வினை வகையுறப் புனைந்து நிற்கின்றது. எனவே இயற்கையில் இலங்கும் அழகினைப் போற்றி மகிழ்ந்தனர் பழந்தமிழர் எனலாம். இயற்கையை இனிது போற்றிய தோடு, இயற்கையில் இறைவன் கொலுவீற்றிருப்பதாக எண்ணி, அவ் எண்ணத்தின் அடிப்படையில் இறைவனை வழிபடவும் செய்தனர் நம்மவர்கள். அவ் இறைவனை முருகன் என்றனர். அழகு உறையும் குன்றுகளி லெல்லாம் கோலக் குமரன் கொலுவீற்றிருப்பதாகக் கொண்டு,ஆங்காங்கு அவனை விழாவெடுத்து வழிபட்டனர்.
அழகுக் கடவுளாக உறையும் முருகனைத் தமிழ்க் கடவுளாகவும் கொண்டனர் நந்தமிழர். முத்தமிழால் ‘வைதாரையும் வாழவைப்பான் முருகன்’ என்பர் அருணகிரியார்.
பரங்குன்றில் அமர்ந்த பன்னிருகைக் கோமானைப்பற்றி எழுந்த ‘முருகன் காட்சி’ எனும் இந் நூலில் பன்னிரு கட்டுரைகள் அடங்கியுள்ளன. முதற் கட்டுரை ‘முருகும் உலகும்’ என்பது எங்கும் காணப்படும் இயற்கையில் முருகன் நீக்கமற நிறைந்தொளிர்கின்றான் என்பதனை எடுத்துக் காட்டுவதாகும்.
இரண்டாவது கட்டுரை ‘நக்கீரர் வரலாறு’ என்பதாகும். இக்கட்டுரையில் திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் நக்கீரர் குறித்த பழைய செய்திகள் பரக்கப் பேசப்படுகின்றன. ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் குறுந்தொகையின் இரண்டாவது பாடல், பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்திற் காணப் படும் தருமியின் வரலாறு முதலியன பற்றிய செய்திகள் இக்கட்டுரையில் விளக்கமாக உரைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது கட்டுரை ‘நக்கீரர் காட்டும் முருகன்’ என்பதாகும். முதலாவதாகத் தொல்காப்பியம் புறத் திணையியலிற் கூறப்படும் ஆற்றுப்படையின் இலக்கணம் தெளிவுறுத்தப் பெற்றுள்ளது. அடுத்து, திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படை இலக்கணத்திற்கு எம்முறையில் எந்த அளவில் பொருந்தி வந்துள்ளது என்பது குறிப் பாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திருமுருகாற்றுப்படையில், கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு நக்கீரரால் எவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது என்பதும், பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியனாகத் திருமுருகன் திறம்பட விளங்குவதும் ஆகிய செய்திகள் பேசப்பட்டுள்ளன. முருகப் பெருமானின் சிவந்த திருவடிகளைத் தேடிச் செல்லும் தலைமை சான்ற உள்ளத்துட னும், நன்மையையே நாடிச் செல்லும் குறிக்கோளுடனும் முருகன் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடங்களுக் குச் ‘சேவடி படரும் செம்மல் உள்ளத்தினராய் அடியவர்கள் செல்கிறார்கள்; தாங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறப் பெறுகின்றார்கள்.
அடுத்து மதுரையின் சிறப்புக் குறிக்கப் பெறுகின்றது. மதுரை மாநகர் ‘பொருநர்த் தேய்த்த போரரு வாயிலாக’ விளங்குவதும், அம்மதுரையின் மேற்றிசையில் முருகன் விரும்பியுறையும் திருப்பரங்குன்று திகழ்வதும் கூறப்படு கின்றன. பின்னர் ஆறுமுகமும் பன்னிரு கைகளும் எவ்வாறு விளங்குகின்றன என்பதும் அவை எச்செயல்களை ஆற்றுகின்றன என்பதும் விளங்கக் கூறப்படுகின்றன இது திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரிலே திரு முருகன் கொண்டுள்ள தோற்றப் பொலிவாகும்.
அடுத்துத் திருவாவினன்குடியில் முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர் நியமங்களோடு ஆறுமுகப் பெருமானைப் பரவிப் போற்றுவது கூறப்படுகின்றது. குன்றுதோறும் விரும்பிக் கோயில் கொண்டுள்ள குமரக் கடவுளின் அருட்பொலிவும், குன்றுவாழ் குறக்குடியினர் மைந்தரும் மகளிருமாகச் சேர்ந்து நிகழ்த்தும் குரவைக் கூத்தும் கவினுறக் கிளத்தப்படுகின்றது.
திருமுருகாற்றுப்படையின் இறுதிப் பகுதியில் பழமுதிர் சோலையில் பாங்குடன் ஞாலம் உய்யக் கொலு வீற்றிருக்கும் ஞானச் செல்வனின் சிறப்பு நன்கு பேசப்படுகின்றது. ‘ஊரூர்கொண்ட சீர் கெழு விழவும்’, ‘முருகாற்றுப் படுத்த உருகெழு வியன் நகரும்’ அப்பகுதியில் விளங்க எடுத்துரைக்கப்படுகின்றன. ‘காடும் காவும் கவின் பெறு துருத்தியும், யாறும் குளனும் வேறுபல் வைப்பும், சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும் அன்றியும், நினைவார் நினையுமிடங்களிலும் கோலக் குமரன் கொலு வீற்றிருந்து, தன்னை நாடித் தேடிவரும் அடியார்களைத் தாங்கி, ‘அஞ்சல் ஓம்புமதி; அறிவன் நின்வரவு’ என நல்ல ஆறுதல் அன்பு மொழிகளைக் கூறி அருள் பாலிக்கின்றான் என்பது நயமுறக் கிளத்தப்படுகின்றது. அடுத்து, ‘அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருகனின்’ பெருமையும், அவன் அருள்கூர்ந்து அடியவர்களைப் புரக்கும் மாண்பும் மனங்கொளப் பேசப்படுகின்றன. இறுதியில் பழமுதிர் சோலையில் ‘இழுமென இழிதரும் அருவி’ துகில்களைப் போல் அசைந்து, அகிலைச் சுமந்து, சந்தன மரத்தைத் தள்ளி அழகுற ஓடிவரும் அழகு கவினுறக் கிளத்தப்படுகின்றது. முடிவுரையில் திருமுருகாற்றுப் படையின் பெருமை பேசப்படுகின்றது.
இவ்வாறு இந் நெடிய கட்டுரை திருமுருகாற்றுப் படையின் முழு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணலாம். நக்கீரர் வழியில் நின்று இக் கட்டுரையினை யான் உருவாக்கியுள்ளேன் என்பதனை இம் முன்னுரையில் குறிப்பிட விரும்புகின்றேன்.
நான்காவது கட்டுரை ‘பரிபாடற் புலவர்கள் காட்டும் முருகன்’ என்பதாகும். இருபத்திரண்டு பாடல்களைக் கொண்ட பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்கள் எட்டாகும். இவ் எட்டுப் பாடல்களும் பழைய பாடல்களாகும். இப் பாடல்கள் வழி முருகனைப் பற்றிய செய்திகளாக. நாம் அறிவன யாவை? என்னும் வினாவிற்கு விடை கூறும் வண்ணம் அமைந்துள்ளது இக் கட்டுரையாகும்.
‘இளங்கோவடிகள் காட்டும் முருகன்’ என்னும் கட்டுரை, சமயக் காழ்ப்பின்றிச் சமய ஒருமைப்பாடு கண்ட நல்லார் இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப் பதிகாரத்தின் மூன்றாவது காண்டமான வஞ்சிக் காண்டத்தின் முதற் காதையான ‘குன்றக் குரவை’யில் குமரப் பெருமானின் சிறப்புக்களாகக் குறித்திருக்கும் செய்திகளைக் குறைவறக் கொண்டிலங்குவதாகும்.
கச்சியப்பர் ஒரு காவியக் கடல்; கந்த புராணத்தைத் தந்த செல்வர். கந்த புராணத்தில் திருமுருகனின் வரலாறு திறம்படப் பேசப்படுகின்றது. இப் புராணத்தில் கந்தவேளின் பிறப்பு வளர்ப்பு, முருகன் சூரனை அழித்து அமரர் துயர் களைந்த அருட்செயல், அமரர்கோன் வளர்த்த அருஞ்செல்வி தேவானையைக் கற்பில் கொண்டு வள்ளி மலையில் நம்பிராசன் என்னும் வேட்டுவ வேந்தனின் மகளாய் வளர்ந்த வள்ளியைக் களவிற் கொண்டு அடியவர்க்கு அருளிய வரலாறு முதலியன விளங்க உரைக்கப்படுகின்றன.
பாமணக்கும் நாமணக்கும் திருப்புகழ்ப் பாடல்களைத் தந்த செல்வர், நினைக்கவே முத்தி தரும் தலமாம் திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரியார் ஆவர். அவர் தம் திருப்புகழ்ப் பாக்கள் வழிக் காட்டும் முருகன், பக்தியிற் கனிந்த பழமாவன். பல குன்றிலமர்ந்த பெருமாளை நெஞ்சாரத் துதித்து, வாயாரப் பாடிக் கலியுக வரதனாம் கந்தவேளை வந்தித்து வந்தவர் அருணகிரியார் என்பது இக் கட்டுரையால் புலனாகும்.
சிறுபிரபந்த வகைகளில் சிந்தையைக் கவர்கின்ற இலக்கிய வகை, பிள்ளைத் தமிழாகும்! பிள்ளைத் தமிழ் எனும் பெரிய தமிழைப் பதினேழாம் நூற்றாண்டில் சிறக்கப் பாடியவர் குமரகுருபரர் ஆவர். அவர் புள்ளிருக்கு வேளுர் முருகன் மீது பாடிய பிள்ளைத் தமிழ் முத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் ஆகும். இப் பிள்ளைத் தமிழில் காணலாகும் முருகன் காட்சியே எட்டாவது கட்டு ரையாக இலங்கும் ‘குமர குருபரர் காட்டும் முருகன்’ என்னும் கட்டுரையாகும்.
ஒன்பதாவது கட்டுரை ‘வள்ளலார் காட்டும் முருகன்’ என்பதாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து சமரச சுத்த சன்மார்க்கம் கண்டவர் வள்ளலார் ஆவர்.
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களான பாரதி கவிமணி முதலான கவிஞர்களும் முருகன் காட்சியில் கட்டுண்டு திளைத்துக் கவிதை பாடியவர்களே என்பதனைப் பத்தாவது கட்டுரை உணர்த்தும்.
ஈற்றயல் கட்டுரையாக இலங்கும் கட்டுரை ‘தமிழ்த் தெய்வம்’ என்பதாகும். இக் கட்டுரையில் முருகனின் சிறப்புக்கள் அனைத்தும் ஒருங்கே தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளைப் பற்றிய குறிப்புக்களும் அக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
இறுதிக் கட்டுரை ‘பாராயணப் பாடல்கள்’ என்பதாகும். திருமுருகப் பெருமானின் திருவருளை வேண்டும் அடியவர்கள் நாள்தோறும் பாராயணம் செய்யத்தக்க பாடல்கள் இக்கட்டுரையில் தொகுத்தளிக்கப்படுகின்றன. பின்னிணைப்பில் தமிழ்ப் பெரியார் திரு.வி. க. அவர்கள் ‘முருகன் அல்லது அழகு’ எனும் அவர்தம் நூல்வழி அறிவிக்கும் சிறந்த கருத்துக்கள் அகழ்ந்து தரப்பட்டுள்ளன.
தமிழ்க் கடவுளாம் முருகனைப் பற்றி யான் எழுதிய ‘முருகன் காட்சி’ எனும் இந்நூலினைத் தமிழ் கூறு நல்லுலகம் நன்கு வரவேற்கும் என்று நம்புகின்றேன். என் செயல்களுக்குத் தோன்றாத் துணையாக நின்றொளிரும் இறையருளை வந்தித்து வணங்குகின்றேன்.
சி.பாலசுப்பிரமணியன்