தாய் தந்தையரை வணங்குதல்
கண்ணன் இயன்றவரை கம்சனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் தன் தாய் தந்தையரைக் காணச் சென்றான்; அவர்கள் உடனே விடுதலை செய்யப்பட்டனர். உக்கிரசேனனும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான்; தன் பாட்டனை அரசனாக்கிவிட்டுத் தம் பெற்றோரைச் சந்தித்து அவர்களை வணங்கி ஆறுதல் கூறினான்; கண்ணன் தமக்கு மகனாயினும் தம்முடைய மகன் என்ற உரிமை கொள்ளவில்லை. அவன் தெய்வத்தன்மை நிறைந்தவன் என்பதால் அவனிடம் பக்தியும் மதிப்பும் வைத்துச் சற்று ஒதுங்கியே பழகினர்.
குருவுக்கு அவன் மகனை மீட்டுத் தருதல்
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் நாள்கள் ஆறுபத்து நான்கில் கண்ணனும், பலராமனும் கற்றுத் தேர்ந்தனர். கண்ணன் சகலகலாவல்லவன் என்று பாராட்டப்பட்டான்.
சாந்தீபன் என்ற அந்தண ஆசிரியர் ஒருவரிடம் வேதங்களைப் பயின்றான்; சாத்திரங்கள் பல கற்றான்; அவர் முன்னிலையில் உபநயனமும் நடந்து முடிந்தது. அவ்வாசிரியருக்குக் கண்ணனின் அதீதநிலை தெரிந்தது; கண்ணன் இறைவனின் பிறவி என்பதை அறிந்தார்; இறந்த தம் மகனை உயிரோடு மீட்டுத் தருமாறு குரு காணிக்கையாகக் கேட்டார்.
கண்ணன் மறுப்புச் சொல்லவில்லை. அவனைக் கடலில் இழுத்துச் சென்றவன் பாஞ்சசநன் என்ற அசுரன்; அவன் கடலைத் தன் இருப்பிடமாகக் கொண்டிருந்தான்; சங்கின் வடிவம் தாங்கி இருந்தான். கடலுள் மூழ்கி அவ்வகரனை விசாரித்தான்; செத்தவன் யம பட்டணத்தில் இருப்பது தெரிந்து; அங்குச் சென்று யமனை இறந்தவனைப் பழைய வடிவில் தரும்படி கேட்க, அவனும் அவன் உடலையும், உயிரையும் இணைத்து உயிர் தந்து உருவாக்கிக் கண்ணனிடம் ஒப்புவித்தான். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் காணாமற்போன அவனை மீட்டுத் தந்து தன் குருவிடம் சேர்ப்பித்தான்.
அந்த அசுரனாகிய சங்கினைத் தான் ஏற்றுக் கொண்டு அதைத் தான் முழங்கு கருவியாகப் பயன்படுத்தினான். அதற்குப் ‘பாஞ்சசன்யம்’ என்னும் பெயர் வழங்கியது. அதை முழங்கினால் எதிரிகள் நடுநடுங்கி ஓடுவர். அத்தகைய முழக்கம் அவன் கைக்கு வந்து சேர்ந்தது.
துவாரகை சேர்தல்
மகத தேசத்து அரசனாகிய சராசந்தன் கம்சனின் நெருங்கிய நண்பன். அவனைக் கொன்ற கண்ணனைப் பழிவாங்குவது என்று படை திரட்டி வந்தான். உக்கிர சேனனிடம் அவனை எதிர்க்கத் தக்க சேனைகள் இல்லாமல் போய்விட்டன. கண்ணனுடன் வந்த யாதவ வீரர்களும் மிகச் சிலரே. அந்தப் படைகளின் தாக்குதலுக்குக் கண்ணன் வசம் இருக்கும் படைகள் முன் நிற்க இயலவில்லை. கண்ணனும் பலராமனுமாக இருவருமே நின்று எதிர்க்க வேண்டி இருந்தது. தன் தெய்வசத்தியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஆகாசத்திலிருந்து கண்ணனின் திருக்கரங்களுக்குச் சாரங்கம் என்னும் வில்லும், அக்ஷய துணீரமாகிய அம்பறாத்தூணியும், கவுமோதகி என்கிற கதாயுதமும் வந்து சேர்ந்தன. அவ்வாறே பலராமனுக்கும் கலப்பையும் உலக்கையும் வந்து சேர்ந்தன.
அவன் அறுபத்துமூன்று அக்குரோணி அளவுள்ள சேனைகளோடு வந்து எதிர்த்தான். அத்தனை படைகளையும் கண்ணனும், பலராமனும் தம் தெய்வ சக்தியால் கொன்று குவித்து அவனை விரட்டி அடித்தனர். அப்பொழுதும் அவன் அடங்கவில்லை; மீண்டும் மீண்டும் சேனைகளைத் திரட்டிக் கொண்டு வந்து மோதிக் கொண்டே இருந்தான். இவ்வாறு அவன் பதினேழு முறை படை எடுத்தான். ஊர் மக்கள் இந்தப் போர்களினால் உயிர் இழப்பும், அழிவும் எய்தி அமைதியற்ற வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியது ஆயிற்று. எப்பொழுது சராசந்தன் படைகளோடு வருவானோ என்று அஞ்சி வாழ வேண்டியது ஆயிற்று.
அதே சமயத்தில் தெற்கே இருந்து மற்றோர் பகைமை உண்டாயிற்று. காலயவனன் என்னும் யவன தேசத்து அரசன், கண்ணனின் வீரத்தையும் தோள் வலிமையையும் மதுரா நகரின் செல்வ வளத்தையும் கேள்விப்பட்டுப் படையெடுக்க முயன்றான்.
இதற்கு ஒரு பின்னணி காரணம் ஆகியது.
யாதவ புரோகிதனான கார்க்கியர் என்னும் பிராமணரை அவருடைய மைத்துனன் ஒருவன் பலபேர் கூடியிருந்த சபையில் மனம் புண்படும்படி பேசிவிட்டான். அவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டி அவர் ஒரு நபும்சகர் (பேடி) என்று இகழ்ந்து பேசி விட்டான். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. விந்திய பருவத்தின் தெற்கே இருந்து வந்த யாதவ குலத்தினரை எதிர்த்துப் பகைமை கொள்ளக்கூடிய வீரன் ஒருவன் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று மகாதேவனாகிய சிவனிடம் வேண்டினார்; அதற்காக இரும்பைப் பொடி செய்து அதைத் தின்று கொண்டு வலுப்பெற்று வந்தார். சிவனிடம் தனக்கு மகன் வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார்.
அதே சமயத்தில் யவன தேசத்து அரசனான ஒருவன், தனக்கு மகன் இல்லையே என்று வருந்தியவனாய் இவரைத் தன் தேசத்துக்கு அழைத்து வந்து, தன் மனைவியோடு அவரைக் கூடியிருக்கும்படி செய்து ஒருமகனைப் பெற்றுக் கொண்டான், பிறந்தவன் வண்டு போன்ற நிறத்தினை உடையவனாய் இருந்தான்; மலை போன்ற தோள்களும், அகன்ற மார்பும், திண்ணிய உடலும், நெஞ்சு உரமும் பெற்றுப் பகைவர் அஞ்சும் தோற்றத்தைக் கொண்டிருந்தான். அவனுக்குக் காலயவனன் என்று பெயர் வழங்கினர். அந்நாட்டு அரசன் முதியவன். தவம் செய்யக் காட்டுக்குச் சென்றுவிட்டான். மகன் தக்க வயது வந்ததும் பட்டம் சூட்டிக்கொண்டு பாரினை ஆளத் தொடங்கினான். தினவு மிக்க அவன் தோள்களுக்கு மோதும் பகைவர்கள் தேவைப்பட்டனர். அற்ப வலிவு கொண்டவர்களோடு சொற்பமான சிறிய போர் விளைவிக்க அவன் விரும்பவில்லை. கண்ணன் சராசந்தனைப் பதினேழு முறை முறியடித்தான் என்று கேள்விப்பட்டதும் இவனே மகாவீரன்; இவனைத் தாக்குவதே தன் வீரத்திற்கு அழகு என்று மதுராவைத் தெற்கில் இருந்து வந்து தாக்க முற்பட்டான்.
இத்தகையவர்களோடு எல்லாம் மோதிக் கொண்டு தேவையில்லாமல் போர்கள் செய்து, கண்ணன் அலுத்து விட்டான். மதுரா நகரம் தக்க மதில்களும், அகழிகளும் பெறாமல் அரண்கள் இல்லாமல் இருந்தன. நாடு என்றால் அதற்குத் தக்க அரண் இருக்கவேண்டும் என்ற தேவையை உணர்ந்தான். அதற்குத் தக்க இடத்தைத் தானே தேடிக் கொண்டான். கடலை அடுத்துக் கடல் வேந்தனிடம் இடம் கேட்டுப் பன்னிரண்டு யோசனை சதுர மைல்கள் கொண்ட பகுதியினை வளைத்துக் கொண்டான். அதன் மூன்று பகுதியும் கடலால் சூழப்பட்டிருந்தன. ஒரு பக்கம் மட்டும் கற்களும், மலைகளும் பொருந்திய நிலப்பரப்பு இருந்தது.
கடல்நீர் உள்ளே புகாதபடி தக்க மதில்கள் எழுப்பி அந்நகரத்தைப் பாதுகாப்பு மிக்கதாய் ஆக்கிக் கொண்டான்; நிலப்பகுதி நோக்கிய இடத்தில் கோட்டைகளும், மதில்களும், தக்க வாயில்களும் அமைத்தான்.
மதுரா நகரத்துக் குடிமக்களையும், தம் பெற்றோர்களையும், உக்கிரசேன மகாராசனையும்,மற்றும் உள்ள படைகளையும் துவாரகையில் கொண்டு சேர்த்துவிட்டு, மதுரா நகருக்கு மறுபடியும் ஒருமுறை சென்று மற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கச் சென்றான்.
கண்ணன் வந்திருப்பதை அறிந்து காலயவனன் கடுக அவனைப் பின் தொடர்ந்தான். கண்ணன் அவனுக்கு அகப்படாமல் ஓடி ஒரு மலைக்குகைக்குள் ஒளிவது போலப் புகுந்து கொண்டான். இருட்டில் கண்ணன் இருப்பதை அவனால் அறிய முடியவில்லை.
அங்கே முசுகுந்தன் என்ற இளைஞன் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான். அவன்தான் கண்ணன் என்று நினைத்து அவனை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்ப, அவன் சினந்து இவனைப் பார்த்தான். இவன் உடனே எரிந்து சாம்பலாகி விட்டான்.
இந்த முசுகுந்தன் என்பவன் தேவ அசுரர் யுத்தத்தில் பலமுறை தேவர்களுக்கு உதவியாய் இருந்து உதவி செய்ததால், தேவர்கள் அவனைப் பாராட்டி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டனர்.
“பிறவி நீங்கி மோட்சம் அடைய வேண்டும்” என்று கூறினான்.
“அதற்கு இறைவன்தான் வந்து உதவ வேண்டும்; எங்களால் இயலாது” என்று கூறினார்கள்.
“நான் நிம்மதியாக உறங்க வேண்டும்; யாரும் என்னை எழுப்பக் கூடாது; எழுப்பினால், எழுப்பியவர் எரிந்து சாம்பலாக வேண்டும்” என்று தான் அலுத்து விட்ட நிலையில் தன் சோர்வு முழுவதும் நீக்குதற்காகக் கேட்டான்.
“அவ்வாறே ஆகுக”! என்று வரம் தந்தனர்.
காலயவனன் இறந்த பின்பு கண்ணன் முசுகுந்தன் முன்பு தோன்றினான்; தான் யார் என்பதை அவனிடம் கூறினான். முசுகுந்தன் கண்ணன் திருமால் என்பதை அறிந்து அவனிடம் அடைக்கலம் அடைந்தான். துறக்க வாழ்வை அடைய வழி தேடினான். “நீ இப்பொழுது தவம் செய்து. நீ செய்துள்ள பல கொலைகளின் பாவங்களைப் போக்கிக் கொள்வாய்; அடுத்த பிறவியில் உத்தமனாக வாழ்வாய்; பாவம் எதுவும் அணுகாது. அதனால் நீ அந்தப் பிறப்பில் மோட்சத்தை அடைவாய்” என்று கூறினான்.
கண்ணன் கூறிய வார்த்தையைக் கேட்டுக் குகையை விட்டு வெளியே வந்து நாராயணன் எழுந்தருளியுள்ள கந்தமாதன பருவதத்துக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான்.
பலதேவன் கோகுலம் போதல்
போர் எதுவும் தொடரவில்லை; பலதேவனுக்குப் பழைய உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கண்ணனிடம் சொல்லிவிட்டு அவன் மட்டும் பிருந்தாவனமாகிய ஆயர்பாடியை அடைந்தான்.
சிறுவர்கள் எல்லாம் தக்க வயது உடைய வாலிபர் களாகிவிட்டனர். சிறுமியர் பெருமை உடையவர் ஆயினர்.
அவர்களிடம் மிகவும் மரியாதை காட்டி நன்மை வரவுகளை விசாரித்து அவர்கள் மனம் குளிரச் செய்தான்; பெரியவர்களையும், தன் இனத்து இளயவர்களையும் தழுவிக் கொண்டு அன்பு காட்டினான். சிறியவர்களோடு சிரித்துப் பேசினான்; கோபியர்களும் மிக அன்புடன் அவனிடம் நெருங்கிப் பழகினர்.
கோபியர் மட்டும் சற்றுக் கோபம் உடையவர் போல் நடந்து கொண்டனர். “நகரத்து நாரிமணிகளைக் கண்டு பழகியபின் ஆயர்சேரியர் அலுத்துவிட்டு இருக்கும்” என்று உரையாடினர் சிலர்.
“சிரித்துப் பேசி எங்கள் நலனைக் கொள்ளை கொண்ட கண்ணன் சுகமா?” என்று கேட்டனர் சிலர்.
சில பெண்கள் கையில் வளையல்கள் இல்லை; “எங்கே வளையல்கள்?” என்று கேட்டதற்கு “அவனைப் பிரிந்து மெலிந்து விட்டோம்; அதனால் வளையல்கள் நெகிழ்ந்தன” என்றார்கள்.
நிறம் வெளுத்து ஒருத்தி காணப்பட்டாள். காரணம் என்ன? என்று கேட்டதற்குப் “பசலை பாய்ந்து விளர்த்து விட்டது” என்று விளக்கம் தந்தனர் சிலர்.
“இராதை எங்கே?” என்று கேட்டான். “கண்ணனை நினைத்துக்கொண்டு சித்தம் கலங்கிப் பித்தம் பிடித்து அவள் வேதனைப்படுகிறாள்” என்றனர் சிலர்.
“பட்டிக்காட்டுப் பெண்கள் என்று சொல்லி எங்களை நகரத்துப் பெண்களிடம் நகையாடிச் சிரிக்கின்றானா கண்ணன்?” என்று கேட்டனர் சிலர். மேலும் பலர் பலவிதமாகக் கேட்கத் தொடங்கினர்.
“எங்களோடு அவன் சேர்ந்து பாடிய அந்த இனிய நாட்களை என்றைக்காவது நினைத்துப் பார்த்துக் கொள்கிறானா”.
“நாங்கள் இல்லாமல் அவனுக்கு எப்படிப் பொழுது போகிறதோ தெரியவில்லை; அங்கேயும் அவனுக்கு அழகிகள் சிலர் கிடைக்காமலா போவார்கள்?”
“நாம் படும் துன்பம் அவனுக்கு எப்படித் தெரியப் போகிறது? அவனில்லாமல் இங்கே பொழுதே போகவில்லை என்பதை யார் எடுத்துச் சொல்லப் போகிறார்கள்?”.
“அப்பா, அம்மா, கூடப்பிறந்த சுற்றம், பந்துக்கள், நண்பர்கள் இவர்களை எல்லாம் விட்டுப் பிரிந்தவனின் நெஞ்சு கல்லாகத்தான் இருக்க வேண்டும். அவன் எங்களைப் பற்றி ஏன் நினைக்கப் போகிறான்?”
“கடல் அலைகளில் அவன் காற்று வாங்கிக் கொண்டு இருக்கலாம்; அது அவன் பிறவிக்குணம்”.
“இந்தக் கோவர்த்தன மலையும், யமுனை நதியும் அவன் எங்குப் போனாலும் பார்க்க முடியாது; இதைப் போய் அவனிடம் சொல்”.
“தயிர் கடையும் மத்தொலியும் கன்றின் கனைப்பும், பசுவின் குரலும், அதன் கழுத்தில் கட்டிய மணியொலியும் அவன் காசிக்குப் போனாலும் கேட்க முடியாது”.
“எங்கள் வளையல் ஒலிகள் அவன் குழலிசைக்கு ஈடுகொடுத்தன. அந்தச் சின்ன ஒலிகளை அக்கன்னல் மொழியான் எங்கே கேட்கப் போகிறான்”.
“மயில் இறகும், பூவும் இங்கே சூட்டிக்கொள்ள அவனுக்குக் கிடைத்தன. இன்று தலையில் பொன் முடி அணியலாம் அல்லது பாகை அணியலாம். அவை எல்லாம் இந்த மயிற்பீலிக்கு நிகர் ஆகுமோ”.
“நாங்கள் இப்பொழுது பால் நிலவில் குரவைக் கூத்து ஆடுவதைவிட்டு விட்டோம்; யாரோடு நாங்கள் ஆட முடியும்; அவன் குழலோசை எங்கள் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அந்த நாதம் மீண்டும் நாங்கள் எங்கே கேட்கப் போகிறோம்”
“தேவ கன்னியர் எல்லாரும் கோகுலத்தில் பிறக்கத் தவம் செய்துகொண்டார்கள். பாவம்; அவர்கள் எல்லாம் கண்ணன் இந்த இடம் விட்டுப் போனதும் தவத்தைக் கைவிட்டு விட்டார்கள்.”
“கன்றுகளை அவன் மேய்த்துக் காடுகளில் திரிந்தது குன்றில் இட்ட விளக்கைப் போல எம் நினைவுகளை விட்டு அகலவில்லை.”
“பாம்பின்மீது அவன் ஆடிய நடம் எங்களை வியக்கச் செய்து விட்டது; அவன் அதன் பிடியில் அகப்பட்ட போது துடித்துவிட்டோம். இவையெல்லாம் அவனுக்கு எங்கே தெரியப்போகின்றன.”
“மழை பொழிந்தபோது மாமலையையே அவன் குடையாகப் பிடித்தான் என்றால் எங்களுக்கு வரும் துயரைக் காப்பவன் அவன் அல்லாமல் வேறு யார் இருக்கிறார்கள்?” என்றெல்லாம் புகழ்ந்தும், வருந்தியும் பல படியாகப் பேசினார்கள். பலராமன் அவர்களைச் சமாதானப்படுத்தினான்.
“கண்ணன் கடமையின் காரணமாக அங்குப் போய் இருக்கிறான்; அவனுக்கு நிறைய கடமைகள் காத்துக் கிடக்கின்றன; காலத்துக்கும் அவன் இங்கே சங்கீதம் பாடிக் கொண்டிருக்கவா முடியும்? அசுரர்கள் எங்கும் அநியாயங்களை அடுக்கடுக்காகச் செய்து வருகிறார்கள். தட்டிக்கேட்க ஆள் இல்லாமையால் இந்நிலத்தையே நடுங்க வைக்கிறார்கள். வீரன் ஒருவனுக்கு நாட்டைக் காப்பதும், நன்மை செய்வதும் கடமை அல்லவா? அதனால்தான் அவன் அங்கு இருக்கிறான்.”
“உங்களைப்பற்றிப் பேசாத நாளே இல்லை; உறக்கத்தில் கூட “இராதை” என்ற பெயரைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான்; பக்தர்கள் இறைவன் திருநாமங்களைச் சொல்வது போல அவன் உங்கள் பெயர்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான். நொண்டிக் கன்றுக்குட்டி ஒன்று இருந்ததே அது எப்படி இருக்கிறது; என்று விசாரித்துவரச் சொன்னான்” என்று கண்ணன் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த அக்கரையை எடுத்துக் கூறினான்.
இராதை கோகுலத்திலேயே தங்கி விட்டாள்; அவள் கனவுகள் மீராபாய்ப் பாடலிலும்; ஆண்டாள் மொழியிலும் இன்றும் நிலைத்துவிட்டன. அவளைப் பற்றி மீண்டும் பேசப்படவே இல்லை; கண்ணன் நினைவிலேயே அவள் வாழ்ந்து முடித்தாள். நகருக்குச் சென்றதும் அவளை முற்றிலும் மறந்து விட்டான்; அவளை மணக்கவே இல்லை.
விசாரணைகள் முடிந்ததும் பிறகு கலகலப்பாகப் பழக ஆரம்பித்தனர். தொடர்ந்து இரண்டு திங்கள் அங்குத் தங்கி அவர்களோடு ஒன்றி வாழ்ந்தான். பிருந்தாவனத்தில் ஆடியும் பாடியும் மகிழ்ச்சியோடு காலம் கடத்தினான்.
தெய்வ உலகத்தில் இவன் ஆதிசேடனாய் இருந்ததால் இவன் நண்பன் வருணன் தன்மகள் வாருணி தேவியை அழைத்து, “நீ சேடனுக்கு மிகவும் பிரியமானவள்; ஆதலால், நீ அவன் இருக்குமிடத்திற்குச் சென்று அவனுக்கு இன்பம் சேர்ப்பாயாக” என்று கூறினான்.
அவள் மதுவடிவில் வந்து அவனுக்குப் பருகத் தன்னைத் தந்தாள். பிருந்தாவனத்தில் ஒரு கடப்ப மரத்தின் பொந்தில் இம் மது அவனுக்குக் குடிக்கக் கிடைத்தது. மதுவின் வாசனை அக்கடம்ப மரத்தில் வருவதைக் கண்டு குடிக்க வேண்டும் என்ற வேட்கை மீதூர்ந்ததால் அங்கே அதனை வேண்டிய அளவு வாரிக் குடித்தான். தன்னோடு இருந்த கோபாலர்களுக்கும், கோபியர்களுக்கும் பகிர்ந்து அளித்தான். குடி மயக்கத்தில் மயங்கிக் கிடந்தான்.
குடித்ததால் மதம்மிக்கு வியர்வை நீர் முத்துமுத்தாய் அரும்ப, அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனை நதியை நோக்கி, “யமுனை நதியே! நீ இங்கே வா; நீராட வேண்டும்” என்று அழைக்க, “இவன் குடி மயக்கத்தில் பிதற்றுகிறான்” என்று கருதி இவன் ஆணையை நதி மதிக்கவில்லை.
பலராமனுக்கு அதனால் கோபம் வந்தது. தன் கலப்பையைக் கொண்டு அதனைத் தன்பக்கம் இழுத்தான். அதன் ஓட்டம் தடைப்பட்டது; அவன் இழுத்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. தன்னை விடுவிக்கும்படி நதி வேண்டிக் கொண்டது. “நினைத்தால் உன்னைச் சுக்கு நூறாகச் சிதைத்து விடுவேன்” என்று அச்சுறுத்தி அதட்டினான். அந்த மகாநதி பிருந்தாவனத்தில் இருந்த நிலமும் வனமும் பாய்ந்து வளப்படுத்தியது. பின் அதனைப் பழைய போக்கில் செல்லப் பலராமன் அனுமதித்தான்.
அந்த யமுனை நீர் தன்னருகில் வந்ததும் அதில் அவன் நீராடினான். அவன் மேனி புத்தொளி பெற்றது. அவனுக்குத் திருமுடியில் அணியத்தக்க ஒரு தாமரைப் பூவும், காதில் அணியத்தக்க குண்டலங்களும் திருமகள் கொண்டுவந்து தந்தாள்; வருணனும் ஒரு தாமரை மாலையும், இரண்டு மேலாடைகளும் கொண்டுவந்து தந்தான். அவற்றை இடையிலும், தோளிலும் அணிந்து கொண்டான். இந்தப் புதிய ஆடைகளிலும், அணிகலன்களிலும் அவன் அழகிய தோற்றத்தோடு விளங்கினான்; கோபியரோடு கூடிக் குரவைக் கூத்து நிகழ்த்தியும் ஆடல் பாடல்கள் நிகழ்த்தியும் இரண்டு மாதம் இன்பமாய்ப் பொழுது கழித்தான்.
பின்பு நிதானமாகத் துவாரகாபுரிக்குத் திரும்பினான்; ரைவதன் என்ற அரசன் புதல்வியாகிய ரேவதி என்பாளை மணந்துகொண்டான். அவனுக்கு நிசிதன் என்றும், உன்முகன் என்றும் இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். கண்ணியமான போக்கும் சான்றாண்மையும் உடையவனாக நடந்து கொண்டதால் அவனை அனைவரும் மதித்தனர். கண்ணனும் அண்ணனை எப்பொழுதும் எதிர்க்காமல் மனம் கோணாமல் இயன்றவரை நடந்து கொண்டான்.பலராமன் கண்ணனுக்கு எல்லாவகையிலும் துணையாக நின்று உதவினான்.