நாரதர் வருகை
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாரதர் கம்சனின் சாவினைத் துரிதப்படுத்துவதற்காக அவனிடம் சென்றார். அவனுக்குக் கண்ணன்தான் தேவகியின் எட்டாவது மகன் என்பதைத் தெளிவுபடுத்தினார். குழந்தை மாற்றப்பட்ட செய்தியையும் உடன் சொல்லினார். உடனே அவனுக்குத் தன்னை ஏமாற்றிய தேவகி வசுதேவர்கள் மேல் கோபம் உண்டாகியது. வாள் கொண்டு அவரை வெட்ட முற்பட்டான்.
நாரதர் தடுத்து நிறுத்தினார். “பலராமனையும் கண்ணனையும் கொல்வதை விட்டு விட்டுத் தேவை இல்லாமல் இந்த முதியவர்களைக் கொல்வதால் பயன் இல்லை; விட்டுவிடு” என்றார். அவர்கள் இருவரையும் தாளில் விலங்கிட்டுச் சிறையில் தள்ளினான். கேசிகன் என்ற அசுரனை அழைப்பித்து அவனை உடனே ஆயர்பாடிக்குச் சென்று கண்ணனைக் கொன்று வரும்படி ஆணையிட்டான். மற்றும் யானைப் பாகனைக் கூப்பிட்டு அனுப்பினான். “கண்ணனும் பலராமனும் வருவார்கள். அவர்களை வரச் சொல்லி அனுப்புவேன்; அவர்கள் அரண்மனை வாயிலில் நுழையும்போது குவலயானந்தம் என்னும் யானையை ஏவி அவர்களைத் தீர்த்துவிடு” என்று கட்டளையிட்டான். அடுத்துச் சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசலன் முதலிய மல்வீரர்களை அழைத்தான். “கண்ணனும் பலராமனும் யானைக்குத் தப்பித்து வந்தால் அவர்களை மற்போருக்கு அழைத்து அவர்கள் இருவரையும் கொன்றுவிடுங்கள்” என்று கூறினான்; அவர்களுக்குப் பரிசுகள் தருவதாகச் சாற்றினான். மேலும் தம் நண்பர்களை அழைத்துச் சிவன் கோயிலில் ‘வில் வேள்வி’ ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினான்.
யது வமிசம் கண்ணன் பிறந்த குலம்; அதனால் அந்த வமிசத்தில் மிகவும் கண்ணியமானவராக மதிக்கப்பட்ட அக்குருவர் என்பவரை அழைப்பித்தான். அவர் வசுதேவருக்கு நெருங்கிய உறவினர், அவரிடம் தன் வேண்டுகோளைக் கூறினான்.
“நீர் யது குலத்தினருக்கும் போஜர்களுக்கும் வேண்டியவர். அதனால் எனக்கு நீர் ஓர் உதவியை மறுக்காமல் செய்ய வேண்டும்,” என்றான். கம்சன் போஜர் பிரிவைச் சார்ந்தவன்.
“நீர் பிருந்தாவனம் சென்று பலராமனையும் கிருஷ்ணனையும் இங்கு அழைத்து வரவேண்டியது. சிவனுக்கு நடத்தும் ‘வில் வேள்வி’ விழாவுக்கு நான் அழைத்தாகச் சொல்லுக, நீர் வரச் சொன்னால் அவர்கள் மறுக்க மாட்டார்கள்” என்று கூறினான்.
“என் நோக்கம் அவர்களை அழைப்பித்து வஞ்சமாகக் கொல்வது; கண்ணனால் எனக்கு மரணம் நேரும் என்று அசரீரி கூறி இருக்கிறது. நான் உயிர் வாழ வேண்டுமானால் அவர்களைக் கொன்று ஆக வேண்டியுள்ளது; என் மீது இரக்கம் கொண்டு நீர் இந்த உதவியைச் செய்ய வேண்டும்” என்று கூறினான்.
அதற்கு அவர் மறுக்கவில்லை. “விதி வலிமையானது; இஃது எப்படி முடியும்? என்று கூற முடியாது. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்; நம் செயலால் ஆவது ஒன்றும் இல்லை; என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும். என் நண்பன் என்பதால் நீ சொல்லுகிறபடி அவர்களை இங்கு அழைத்து வருகிறேன்” என்று கூறினார்.
அவர்களை அழைத்து வர அழகான தேர் ஒன்று சிங்காரித்து அனுப்பினான். அவரும் அத்தேரில் ஏறிக்கொண்டு பிருந்தாவனம் சென்றார்.
கேசியின் மரணம்
கேசி என்ற அசுரனையும் வியோமாசூரன் என்ற அவன் தோழனையும் இறுதி முயற்சியாகக் கம்சன் அனுப்பி வைத்தான். கேசி அதிகாலையில் பிருந்தாவனம் வந்து சேர்ந்தான்; அவன் குதிரை வடிவில் வந்து ஊரையே அதிர வைத்தான். செய்தி தெரிந்து வந்த கண்ணன் அதன் சேணத்தை இறுகப் பிடித்துக்கொண்டு அதன் வாயில் தனது இடக்கையை விட்டுக் கழுத்தை நெறித்து விட்டான். அது திக்குமுக்கு ஆடிக் கால்களை உதைத்துக் கொண்டு உயிரைக் கக்கி உடலைக் கீழே போட்டது.
கண்ணன் வழக்கம்போல் அன்று காலை தன் தோழர் களுடனும் கன்றுகளுடனும் கோவர்த்தனமலைச் சாரலுக்குச் சென்றான். அங்கு அவர்கள் பல்வகை விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். திருடன் விளையாட்டு விளையாடிக் கொண்டு தாமே ஒளிந்து கொண்டும் கன்றுகளை ஒளித்து வைத்தும் எடுபிடி விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். இந்த விளையாட்டைப் பயன்படுத்திக் கொண்டு வியோமாசூரன் என்பவன் சிறுவர்களையும் கன்றுகளையும் மலைக் குகைகளில் ஒளித்து வைக்கத் தொடங்கினான். கண்ணன் அவன் செயல்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வந்தான் கையும் களவுமாகப் பிடித்து அவனை நன்கு புடைத்து அவன் வாழ்நாளையும் துடைத்தான். பின்பு கன்றுகளையும் தன் தோழர்களையும் விடுவித்துக்கொண்டு அன்று மாலை வீடு வந்து சேர்ந்தான். ஒரே நாளில் இரண்டு விருந்து கண்ணன் கைகளுக்குக் கிடைத்தன.
நாரதர் வருகை
அதன்பின் நாரதர் கண்ணனை வந்து சந்தித்தார். கம்சனுடைய திட்டங்களைக் கண்ணனுக்கு எடுத்துச் சொல்லி அவனுக்காக வில் விழா ஏற்பாடு செய்திருப்பதையும், குவலயானத்தம் என்னும் யானையையும் சாணுரன் முஷ்டிகள் முதலான வீரர்களையும் ஏற்படுத்தி இவர்கள் இருவரையும் மற்போருக்கு அழைக்கப் போவதையும் அவர்களையும் மீறிச் சென்றால் கம்சனே இவர்களைக் கொல்லப் போவதாகவும் அவன் திட்டம் வகுத்திருப்பதை விரித்துக் கூறினார்.
அக்குருவர் பயணம்
அக்குருவர் திருமாலிடம் பக்தியும் வழிபாடும் மிக்கவர்; இந்தப் பணியால் கண்ணனைத் தரிசிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்று பெருமகிழ்வு கொண்டார்.
அக்குருவர் பிருந்தாவனத்தில் வந்தபோது கண்ணனும் பலராமனும் தொழுவத்தில் பசுக்களைப் பால் கறப்பதை நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். மஞ்சள் நிறப் பொன்னாடையில் கண்ணனும் நீல நிற ஆடையில் பலராமனும் காணப்பட்டனர். அவரை இருவரும் அழைத்துச் சென்று தந்தை நந்தகோபரிடம் விட்டனர். அவரை நந்தகோபர் நன்கு வரவேற்று உபசரித்தார். அவர் உண்டு உறங்கி எழுந்ததும் மறுநாள் வந்த செய்தியைக் கேட்டு அறிந்தார்.
வில்விழாவுக்கு வருகை தரும்படி அழைத்துள்ள அந்த வீணனான கம்சன் உள்ளத்தையும், அவன் திட்டங்கள் அனைத்தையும் கூறினார்; மேலும் கம்சன் தேவகி, வசுதேவரை வாட்டிய வரலாற்றையும், அவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருப்பதையும் விவரமாய் உரைத்தார்.
கண்ணனும் பலராமனும் நந்தகோபனிடம் இந்த விழாவிற்கு யாதவ இளைஞர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வரச் சொல்லினர். போர் செய்யக் கூடிய வலிமை மிக்க இளைஞர் சிலர் உடன் வரப் புறப்பட்டனர். நந்தரும் மற்றைய இளைஞர்களும் முன்னதாய் மதுராவை நோக்கிச் சென்றனர். கண்ணனும் பலராமனும் அக்குருவர் கொண்டு வந்த அழகிய தேரில் அமர்ந்து மதுராவை அடைந்தனர். கண்ணனைப் பிரிந்த கோபியர் ஊணும் உறக்கமும் நீங்கி அவன் நினைவால் வாடினர்; அக்குருவரைப் பழித்துக் கூறினர். கண்ணன் இல்லாத கோகுலம் நிலவு இல்லாத வானமாக இருண்டு கிடப்பது போல் இருந்தது. கோபியர் அகம் சோகம் அடர்ந்ததாய் மாறியது.
மதுராவில் கண்ணன்
காலையில் பிருந்தாவனத்திலிருந்து புறப்பட்ட தேர் பகல் மத்தியான நேரம் மதுராவை அடைந்தது. அக்குருவர் தம் இல்லத்திற்கு வந்து தங்கி இருந்து பின் அவர்கள் விருப்பம் போல் எங்கும் செல்லலாம் என்று கூறினார்.
கண்ணன் தேரில் இருந்து இறங்கினான்; பலராமனும் இறங்கிவிட்டான். “நாங்கள் இந்த நகரைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறோம்; நீங்கள் தேரில் போகலாம்” என்று கூறி அவரை அனுப்பிவிட்டனர்.
கண்ணனும் பலராமனும் வந்திருக்கும் செய்தி நகர் எங்கும் பரவியது. அவனைப்பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த மக்கள் ஆடவரும், பெண்டிரும் திரள்திரளாய் வந்து அவனைப் பார்க்கக் கூடினர். மகளிர் அவன் பேரழகைக் கண்டு தம் மனத்தைப் பறிகொடுத்தனர். ஆடவர்கள் அவன் தோற்றத்தைக் கண்டு வியந்தனர். உடன் வந்த ஆயர் வீரர்களும் அவனோடு உடன் சென்றனர்.
நகரத்துக்குள் நுழைந்து சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகையில் துணி வெளுக்கும் சலவைத் தொழிலாளி ஒருவன் எதிர்ப்பட்டான்.
“எங்கே போகிறாய்? இந்த மூட்டைகள் யாருடையவை?” என்று கேட்டான் கண்ணன்.
“நான் துணிகள் வெளுப்பவன்; இவை கம்சனுடைய துணிகள்” என்றான்.
“எங்களுக்குச் சில உடைகள் தேவைப்படுகின்றன. கம்சனைக் காணப்போகிறோம்; நல்ல உடைகள் தேவைப்படுகின்றன” என்றான் கண்ணன்.
“அரசன் அணியும் ஆடைகள் இவை: ஆயர்குலச் சிறுவர் நீங்கள் அணிவது தகாது; தர முடியாது” என்றுரைத்தான்.
தம்மை இகழ்ந்து பேசியதால் அவன் தலையில் ஒரு தட்டுத் தட்டினான், கண்ணன் அடி தாங்க முடியாமல் அவன் தரையில் சாய்ந்து இறந்தான். கண்ணன் தனக்கு வேண்டிய மஞ்சள் பொன்னாடையையும், பலராமன் தான் விரும்பிய நீல நிற ஆடையையும் எடுத்துக் கொண்டனர்.
நன்கு உடுத்திக் கொண்டு சுதாமன் என்ற பெயருடைய பூக்காரன் ஒருவனைச் சந்தித்தனர்; இவர்களைக் கண்டதும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் மாலைகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கழுத்தில் அணிந்தான்; அவர்களின் அழகிய தோற்றத்தைக் கண்டு வியந்தான். “என் மாலைக்கேற்ற கழுத்து இப்பொழுதுதான் கிடைத்தது” என்று பாராட்டினான்.
அங்கிருந்து அவ்வழியே சென்று கொண்டிருந்த கூனி ஒருத்தியைச் சந்தித்தனர். அவள் அரசனுக்குச் சந்தனம் அரைத்துத் தருபவள்; கண்ணன் அவளிடம் அன்புகலந்த குரலில், “என்ன எடுத்துச் செல்கிறாய்” என்று கேட்டான்.
“சந்தனம்; அரசனுக்கு” என்றாள்.
“வந்தனம் யாம்; சந்தனம் எங்களுக்குத் தர முடியுமா” என்று கேட்டான்.
“நான் கொடுத்து வைத்தவள்; அழகிய உம் மார்பிற்கு என் சந்தனம் பூச ஒரு வாய்ப்புக் கிடைத்தது; அதுவே பெரு மகிழ்ச்சி.”
“சந்தனம் இன்றுதான் பெருமை பெற்றது” என்றாள்.
அவள் தந்த மணங்கமழும் சந்தனத்தை இருவரும் பூசிக்கொண்டனர்.
அவள் கூனை நிமிர்த்துக் காணக் கண்ணன் விரும்பினான்; தன் நடுவிரலும் அடுத்த விரலும் துணையாகக் கொண்டு அவள் முகவாய்க் கட்டையை நிமிர்த்தினான்; கால் பெருவிரலால் அவள் காலை மிதித்தான்; கூன் நீங்க ஊன் உடம்பு பெற்றதன் பயனைக் கண்டாள்; அவள் கவர்ச்சி மிக்க வடிவம் பெற்றாள்.
தன் இல்லத்துக்கு வரும்படி கண்ணனை அழைத்தாள். கண்ணன் பலராமனைப் பார்த்துச் சிரித்தான். அந்தப் பாவை தன்மீது காதல் கொண்டதை அறிந்து இந்தச் சிரிப்பு அவனுக்குத் தோன்றியது.
“பிறகு நிதானமாய் வருகிறேன்; அரசனைப் போய்ப் பார்க்க வேண்டும்” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
சிவனுக்கு வழிபாடு நடத்தும் கோயில் தலமும், வில்லும் எங்கே இருக்கின்றன? என்று கேட்டு அறிந்தனர். அந்தப் பெரிய வில்லை எடுத்துக் கண்ணன் நாண் ஏற்றினான். அது முறிந்துவிட்டது. அது எழுப்பிய பேரொலி நகர் எங்கும் கேட்டது. கண்ணன் வந்துவிட்டான் என்பதைக் கம்சன் அறிந்தான்; மற்போர் வீரர்கள் சாணுரன் முட்டிகன் இருவரையும் விளித்துக் கண்ணன் பலராமன் ஆகிய இருவரையும் தவறாமல் கொன்று முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். பரிசு தருவதாய்ப் பகர்ந்தான்.
மற்போரைக் காண ஊர் மக்கள் திரண்டனர். அரசு அவையின் வாயிலில் நுழையும்போது பாகர்கள் மதம் பிடித்த குவலயானந்தம் என்ற யானையை ஏவி விட்டனர். சிங்கம் போல் இருவரும் சீறிப் பாய்ந்தனர். பலராமன் அதன் கொம்புகளில் ஒன்றை முறித்தான். கண்ணன் மற்றொன்றைப் பிடுங்கி அதைக் கொண்டே அதைக் குத்தி ரணகாயம் ஆக்கிக் கதற வைத்துக் கீழே சாய்த்தான். அதன் குருதி அவர்கள் அணிந்த ஆடைகளை நிறம் மாற்றியது.
பின் மற்போர் நடக்கும் மேடைக்கு வந்தனர். சாணுரன் கண்ணனோடு மற்போர் செய்தான். கூடி இருந்தவர் அனைவரும் “இது கொடியது; வயது குறைந்த இளைஞர்களை மோத விட்டது மாபெரும் தவறு” என்று பேசினர்; மன்னனை ஏசினர். முடிவில் சாணுரன் பிணமாய் விழுந்தான். முட்டிகனோடு பலராமன் போர் செய்தான்; அவனைத் தீர்த்துமுடித்தான். மற்றும் வேறு இரு மல்லர்களையும் பலராமனே போர் செய்து உயிர் போக்கினான்.
இயமன் இந்த இளைஞர் வடிவில் தன்னை நோக்கி வருவதைக் கம்சன் பார்த்தான்; வாளை உறையினின்று எடுத்து இச்சிறுவர்களை ஒழித்துவிட்டு வசுதேவனையும், தேவகியையும், தன் தந்தை உக்கிரசேனனையும் ஒரு சேரத் தன் வாளுக்கு இரையாக்கத் தீர்மானித்தான். அவன் செயல்படும் வரை விட்டுவைக்கவில்லை. அவன் மார்பில் பாய்ந்து வயிற்றில் நெருப்பைப் போன்று இருந்த தம் கை முட்டியால் அவனை இருவரும் மாறிமாறிக் குத்திக் குருதி கக்க வைத்து இறுதியைத் தேடித் தந்தனர்.
கம்சனின் உடன்பிறந்த தம்பியர் எட்டுபேர்; அவர்கள் ஆற்றொணாத்துயர் அடைந்து அவலித்தனர். அவனுடைய மனைவியர் இருவர் அழுத அழுகைக்கு ஆறுதல் சொல்லச் சொற்கள் கிடைக்கவில்லை. மற்றவர்களுக்கு அவன் கொடியவனாய் இருந்தபோதிலும் மனைவியர்க்கு அன்புடையவனாகவே இருந்தான். மங்கலக் கோலம் இழப்பதற்கு அவர்கள் மிகவும் உயங்கினர்.
அவர்கள் இருவரும் மகத தேசத்து அரசனான சராசந்தனின் மகளிர்; ஒருத்தியின் பெயர் அஸ்தி, மற்றொருத்தியின் பெயர் பிராப்தி; இருவரும் விதவையாகி வந்த நிலையை அவர்கள் தந்தையால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. கண்ணனையும், மதுராவில் இருக்கும் யதுகுலத்தவர் அனைவரையும் வேரோடு அழித்து விடுவது என்று அவன் உறுதி கொண்டான்.