கண்ணனும் கோபியரும் (குழலிசை)
கண்ணன் கன்றுகளை மேயவிட்டுப் பின் அவன் புல்லாங்குழல் ஊதுவது வழக்கம். வேய்ங்குழல் (வேய் மூங்கில்) இசைக்கு உருகாதவர் யாரும் இல்லை; பசுக்களும் கன்றுகளும் மேய்வதை விட்டுச் செவி கொடுத்து மயங்கின. மரங்கள் எல்லாம் அந்த ஓசையால் பசுமையாகத் தழைத்தன. எங்கு இருக்கும் மயில்களும், குயில்களும் அவன் இசை கேட்க வந்து குவிந்தன. கண்ணன் என்றால் அவன் ஊதும் குழல் அவனோடு சேர்த்துப் பேசப் பட்டது.
பொன்னிற ஆடையைக் கண்ணனும், நீலநிற ஆடையைப் பலராமனும் அணிந்துகொண்டு கண்ணன் குழலூதி வர மேய்ச்சல் வனத்தில் புகுவது கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.
“கண்ணனின் குழல் அவன் வாயிதழ்களின் சுவையை அடைதற்கு என்ன தவம் செய்ததோ” என்று கோபியர் வியந்தனர்.
“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ மருப்புஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே“
என்ற ஆண்டாள் திருப்பாசுரம் அவன் வாய்ச்சுவையின் இனிமையைப் பாடுகிறது. இது நம் நெஞ்சைத் தொடுவதாகும்.
இதே போன்று ஆய்ச்சியர் அவன் குழல் இசைக்கு மயங்கி நின்றனர். கண்ணன் மயில் தோகை இறகுகளைத் தலைச் சுட்டியில் செருகி இருந்தான். மஞ்சள் நிற ஆடை அவனுக்குத் தனி அழகைத் தந்தது.
அந்தக் கோவர்த்தன கிரியே அவன் குழல் இசையால் எதிரொலித்தது. அவர்கள் மாடு மேய்க்க வந்தார்களா? இசை நிகழ்ச்சி நடத்துகிறார்களா? என்று தெரியாமல் அவர்கள் இனிமையாக அங்குப் பொழுதுபோக்கினர்.
குரவை நிகழ்ச்சி
கோபியர் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் கண்ணனையே கணவனாய் அடைய விரும்பினர்; அவனையே கனவிலும் நினைத்தவராய் வாழ்ந்தனர்; அந்தக் கனவுகளை நாச்சியார் திருமொழி நன்கு நவில்கிறது.
அவற்றுள் சில பாடல்கள் இவை;
“வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றுஎதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழிநான்“
“நாளை வதுவை மணமென்று நாளிட்டுப்
பாளைக் கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோள்அரி மாதவன் கோவிந்தன் என்பான்ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழிநான்“
“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தகலம் பற்றக் கனாக் கண்டேன் தோழிநான்“
கோபியர் கன்னியர்கள் கண்ணனையே கனவிலும் நனவிலும் நினைத்து அவன் நினைவாக வாழ்ந்தனர். மணமான மங்கையரும் அவன் நினைவில் மயங்கி அவனோடு குரவைக் கூத்து ஆடக் குழுமினர். அவ்வப் பொழுது பால் நிலவில் அவன் ஊதும் குழல் ஓசை கேட்டு எங்கிருந்தாலும் கோபியர்கள் அங்கு வந்து அவனோடு ஆட வந்து கூடினர். அவர்களுள் இராதையே கண்ணனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டாள்.
கோபியர் ஒவ்வொருத்திக்கும் கண்ணன் தனித் தனியாக ஒரு ஒரு கண்ணனாகத் தோற்றம் அளித்து அவர்களோடு சேர்ந்து வட்டமாகக் கைகோத்துக் குரவைக் கூத்து ஆடினான். இதனை ரசக்கிரீடை என்று கூறினர். எல்லையற்ற மகிழ்ச்சியில் அவர்கள் ஆழ்ந்து தம்மை மறந்து பரவசப்பட்ட மீளா நிலையில் ஆனந்தத்தில் மிதந்தனர். இஃது எல்லை மீறும் நிலையில் அவர்களை மெல்ல ஆற்றும் பொருட்டுக் கண்ணன் விலகி விடுவது வழக்கம்; அப்பொழுது கோபியர்களே ஒருத்தி கண்ணனாகவும் மற்றொருத்தி கோபியராகவும் கைகோத்துக் கொண்டு குரவைக் கூத்து ஆடினர்.
காளிங்க மர்த்தனம், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தது, அசுரர்களை அவ்வப்பொழுது கொன்றது இதைப் போன்ற நிகழ்ச்சிகளையும் தம் ஆடல் பாடல்களில் வைத்துச் சித்திரித்து ஆடினர். இந்தக் குரவைக் கூத்து நிகழ்ச்சிகள் கோபியர் உள்ளங்களில் மறக்க முடியாத நினைவுகளாய் நிலைத்து நின்றன. இந்நிகழ்ச்சிகள் இலையுதிர் காலமாகிய சரத் காலத்தில் நடைபெற்றன.
பாம்பு வடிவில் ஒரு வித்தியாதரன்
நந்தகோபனும் அவனோடு சிலரும் அம்பிகாவனம் என்ற ஊரில் சரசுவதி நதிக்கரையில் இருந்த சிவன் கோயிலுக்குச் சிவராத்திரி அன்று வழிபடச் சென்றனர்.
அங்கே அந்த நதிக்கரையில் இரவுப்பொழுது கழித்தனர். அப்பொழுது ஒரு கொடிய மலைப்பாம்பு அவர்களை நோக்கி விழுங்குவது போல நெருங்கி வந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் அஞ்சி அகன்றுவிட்டனர். நந்தகோபன் செய்வது தெரியாமல் தன் மகனை நினைத்துக் கொண்டு “கிருஷ்ணா வந்து என்னைக் காப்பாற்று” என்று கத்தினார். எங்கிருந்து வந்தான் என்று சொல்ல முடியாதபடி கண்ணன் அங்கு வந்தான். தடி கொண்டு தாக்கி அதன் உயிரைப் போக்கினான். அதன் வடிவில் இருந்த ஒரு வித்தியாதரன் அழகிய தோற்றத்தோடு காட்சி அளித்தான். கண்ணனுக்கு இது வியப்பாக இருந்தது. “நீ யார்?” என்று கேட்டான். அவன் தன் கதையைக் கூறினான். அவன் கந்தருவ நாட்டில் வாழும் ஒரு வித்தியாதரன். மிகவும் அழகாக இருந்ததால் கர்வம் மிகவும் கொண்டான்.
அவன் தன் வானவூர்தியில் பல தேயங்களுக்குச் செல்வது வழக்கம், வழியில் ஆங்கிரன் என்ற பெயருடைய ஒரு முனிவன் தவம் செய்து கொண்டிருந்தான். அவன் விகாரவடிவம் இவனை ஏளனம் செய்ய வைத்தது. அவன் அழகின்மையை எள்ளி நகையாடினான். அதனால் கோபம் கொண்ட முனிவன் அவனைச் “சர்ப்பம் ஆகுக” என்று சபித்தான்; அந்தச் சாபம் கண்ணனின் திருக்கரம் பட்டுத் தீர்ந்தது என்று கூறி, அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வித்தியாதரன் தன் நாடு போய்ச் சேர்ந்தான்.
சங்காசுரன் மரணம்
நங்கையர் சிலருடன் கண்ணனும் அவன் தமையனும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஓர் இரவு பிருந்தாவனத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவர்கள் பேரழகும் பாட்டும் ஆட்டமும் இவர்களை மிகவும் கவர்ந்திருந்தன. அப்பொழுது அவ்விரவுப் பொழுதில் சங்காசுரன் என்ற அசுரன் ஒருவன் அங்கு வந்தான்; அவன் குபேரனின் நண்பன்; அதனால் அவன் மிக்க செல்வம் உடையவனாய் இருந்தான். அதைக் கண்டு அவன் புழுங்கினான்.
“இந்த இடைச் சிறுவர்களுக்கு, இடை அழகு மிக்க அழகியர் எப்படிக் கிடைத்தார்கள்; இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. செல்வம் மிக்கு உடைய எனக்கே இவர்கள் உரியர்” என்று உரிமை கொண்டாடினான்; விலை பேசிப் பார்த்தான்; அவன் வலையில் அவர்கள் விழுவதாய் இல்லை; அவன் தன் அசுரத் தன்மையால் அவர்களை வலிய இழுத்துக்கொண்டு வடநாடு நோக்கிச் சென்றான். அவர்கள் தம்மைக் காப்பாற்றும்படி குரல் கொடுத்துக் கொண்டே சென்றனர்.
கண்ணனும் பலராமனும் அவர்களைப் பின் தொடர்ந்து அவனை மடக்கிவிட்டனர், அப்பெண்களை மட்டும் பலராமன் வசம் ஒப்புவித்துவிட்டுக் கண்ணன் அவன்பின் தொடர்ந்தான். அவன் எங்குச் சென்றாலும் விடுவதாக இல்லை. இறுதியில் அவன் மீது பாய்ந்து தன் கையாலேயே குத்திக் கொன்றான். அவன் வசம் விலை மதிப்பு மிக்க சங்கு ஒன்று இருந்தது; அந்த ஒளி மிக்க சங்கினைக் கொண்டு வந்து கண்ணன் பலராமனுக்குத் தந்தான். சங்கு அவன் சொத்து; அதனால் அந்த அசுரன் சங்காசுரன் எனப் பெயர் வழங்கப்பட்டான்.
எருது வடிவில் அரிஷ்டாசுரன்
அரிஷ்டாசுரன் என்ற அசுரன் எருது வடிவில் ஆயர் பாடியில் புகுந்தான்; இடிபோன்ற குரல் எழுப்பினான்; அடி எடுத்து வைப்பது பூமியை அதிரச் செய்தது; பசுக்கள் எல்லாம் நடுநடுங்கி ஓடின; மற்றைய எருதுகளும் தாக்குதலுக்கு ஆற்ற முடியாமல் அலறின; மக்கள் உயிருக்கு அஞ்சினர்.
கண்ணனிடம் ஆயர்பாடி மக்கள் முறையிட்டனர். கண்ணன் அதன் கொம்புகளை இறுகப் பிடித்துக் கொண்டு போராடி அடக்கினான். அது களைத்துவிட்டது. அதனை ஓங்கி ஓர் உதைவிட்டான். அது கீழே சாய்ந்து இறந்தது.