பிரலம்பாசுரனைப் பிணமாக்கியது
தேனுகாசூரன் இறந்த பின்பு அப்பனங்காடு அவ் ஆயர் சிறுவர் ஆடும் இடமாக மாறியது. இருவரும் பாண்டீரகம் என்கிற ஆலமரத்து அருகே மற்றவர்களோடு பல் வகை விளையாட்டுகளை ஆடிக் கொண்டிருந்தனர். கண்ணன் பொன்னிற ஆடையும் பலராமன் அவனுக்குப் பிடித்த நீல நிற ஆடையும் உடுத்தி இருந்தனர்.
பிரலம்பன் என்பவன் இடையர் சிறுவனாகி அவர்கள் நடுவில் புகுந்து அனைவரிடமும் சிரித்துப் பேசி நட்புச் செய்து கொண்டான். கண்ணனும் அவன் ஓர் அசுரன் என்பதனை அறிந்திருந்தான்; ஒன்றும் தெரியாதது போல் அவனைத் தெரிந்தவன் போல் அவனோடு பழகினான்.
அவர்கள் மான்போல் துள்ளி விளையாடும் ஓர் ஆட்டத்தைத் தொடங்கினர். ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டு வெற்றி பெற வேண்டியதாய் இருந்தது; இரட்டையராய்த் தனித்தனியே பிரிந்து விளையாடினர்.
ஆடுவது என்றால் இருவருக்குள்ளேயே இதில் போட்டி நடந்தது. யார் முந்திக் கொள்கிறாரோ அவரே வென்றவர் ஆவர். இவ்வாறு ஆடியதில் கண்ணனுக்கு எதிரி தாமன்; பலராமனுக்கு எதிரி இந்தப் புதியவன் பிரலம்பாசுரன். தோற்றவர் வென்றவனைச் சுமந்து செல்ல வேண்டும் என்பது விதியாய் இருந்தது. பிரலம்பாசுரன் கண்ணனைக் கொல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பலராமனையாவது முடித்துவிடலாம் என்று உறுதி கொண்டான்.
அவனை மற்றவர் காணாதபடி நெடுந்தூரம் தூக்கிச் சென்று விட்டான். பலராமனுக்குத் தெரிந்துவிட்டது அவன் ஒரு அசுரன் என்று. அவனைக் கீழே கவிழ்த்துப் போட்டு மோதி அவனைக் கொன்று முடித்தான். கண்ணன் அதில் ஈடுபடாமல் பலராமனின் திறமையை நம்பி விட்டு விட்டான்.
கோபியர் சேலைகளைக் கவர்தல்
ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர்; முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் வழக்கப்படி சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர். கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மரத்தின்மேல் ஏறிக்கொண்டான்; சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான், பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, அவ்வாடைகளைத் திருப்பித் தந்தான்.
பந்தவிலோசனத்து அடிசில் உண்டது
கண்ணனும் பலராமனும் கன்றுகளுடனும் இடையர் களோடும் யமுனைக் கரையில் நெடுநேரம் தங்கிவிட்டனர். கண்ணன் திரிந்து களைத்து ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். அப்போது இடையச் சிறுவர் தமக்குப் பசிப்பதாகவும், உணவு அருள் வேண்டும் என்றும் கேட்டனர். அவர்களை நோக்கி அடுத்துப் பந்தவிலோசனம் என்ற ஊரில் பிராமணர் வேள்வி நடத்துவதாகவும், அங்கே போய்த் தம் பெயரைக் கூறினால் பசிக்குச் சோறு தருவார்கள் என்றும் கூறி அனுப்பினான். அவர்கள் வேள்வி முடியும் முன் யாருக்கும் சோறு போடுவதில்லை என்று கூறி மறுத்துவிட்டனர். மீண்டும் கண்ணனிடம் சென்று, இதை உரைத்தனர்; அவர்கள் இல்லங்களுக்குச் சென்று அவர் மனைவியரைக் கேளுங்கள் என்று கூறினான்; அவர்களும் அவ்வாறே போய் அவர்களைக் கேட்கக் கண்ணன் திருநாமத்தையும், பலராமன் பெயரையும் கேட்ட அளவில் அவர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி கொண்டு ஆனந்த பரவசராகிச் சுவைமிக்க உணவினையும், காய்கறிகளையும், இனிப்புகளையும், சோறு குழம்பு முதலியவற்றையும் நல்ல நல்ல பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று பரிமாறினர்.
அவர்கள் அங்குச் செல்லும்போது அவர்கள் உறவினர், தந்தை, கணவன், உடன்பிறந்தவர்கள் எவ்வளவு தடுத்தும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு மீறிச் சென்றனர்; கண்ணன் முன் அவற்றை வைத்துச் சேவித்து வணங்கிவிட்டுப் பரமானந்தம் மிக்கவர்களாய் மீண்டு சென்றனர். அவ்வுணவுகளைக் கண்ணன் அனைவர்க்கும் பரிமாறிவிட்டுத் தானும் தன் தமையனோடு அமுது செய்தான். இதே வழக்கமாக நாள்தோறும் உணவு குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் கொன்டு வந்து தந்து கொண்டிருந்தனர்.
தமக்கும் அவர்களால் கண்ணன் தரிசனம் கிடைத்தல் குறித்து ஆடவர்கள் மகிழ்ந்தனர்; அவர்கள் தாமும் கண்ணனிடம் செல்ல நெருங்கினர். ஆனால், கம்சனின் பகை வருமே என்று அஞ்சி ஒதுங்கி நின்றனர். கண்ணனைக் கண்டு அவனோடு ஒன்றிவிட்ட இறை உணர்வு அவர்கள் பத்தினிகளுக்குக் கிடைத்தது. வேள்வி ஆசான்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் சாத்திரங்களையும் சடங்குகளையும் நம்பி அவற்றையே உய்தற்கு வழி என்று தவறான பாதையில் சென்றனர். முழுமுதற்பொருள் நேரில் வந்தும் அவர்களால் தாமே அமைத்துக்கொண்ட எல்லைகளைக் கடக்க முடியாமல் நின்றுவிட்டனர்.
கோவர்த்தன கிரிதாரி
கோவர்த்தன கிரி அவர்களுக்கு மேய்ச்சல் நிலமாகப் பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர். அங்கே ஆயர்கள் கூட்டம் கூட்டமாய்த் திரண்டு சென்று கொண்டிருந்தனர்.
“எங்கே போகிறீர்கள்?” என்று கேட்கப் “பொங்கல் இட; இந்திரனுக்கு வழிபாடு செய்யச் செல்கிறோம்” என்றனர்.
“ஞாயிறு, திங்கள், மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம்; இவற்றை விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறது” என்றான் கண்ணன்.
“மழைக்கு வருணன் தலைவன்; அவனுக்கு இந்திரன் தலைவன்; அதனால் அவனை வழிபடுகிறோம்” என்றனர் ஆயர்கள்.
“பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம்; செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா” என்று கேட்டனன் கண்ணன்.
அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக் கொண்டனர் எந்தத் தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத் தம் பசுக்களை மதித்து வழிபட்டனர்.
இந்திரன் இதனை அறிந்து சினம் மிகக் கொண்டான்; அவர்களை அடக்குவதற்காகக் கடுமையான மழை தொடர்ந்து பெயச் செய்தான். இடியும் மின்னலும் உடன் சேர்ந்தன. எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாடி வீட்டுக்கு ஓடிவிட முடியாது; அதனால், மழையால் நனைந்தனர்.
கண்ணன் ‘இஃது இந்திரன் செயல்’ என்று அறிந்து கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்தான். அதன் நிழலில் கன்றுகளும், பசுக்களும், இடையர் சிறுவர்களும், பெரியோர்களும் புகல் அடைந்தனர்.
கண்ணனின் பேராற்றலைக் கண்டு வியந்த இந்திரன் தரைக்கு வந்து கண்ணனை வணங்கித் தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். கண்ணனை அவன் தன் தம்பியாக ஏற்றுக்கொண்டான். அதனால், கண்ணனுக்கு உப இந்திரன் என்ற பெயர் வழங்கலாயிற்று, பசுக்களைக் காத்தமையின் கோவிந்தன் என்னும் பெயரும் நிலைத்துவிட்டது. துன்பம் வரும்போது அனைவரும் கோவிந்தன் பெயரைச் சொல்லி அழைப்பதும் வழக்கமாகி விட்டது.