புள்ளின் வாய்க் கீண்டான்
கன்றோடு தோழமை கொண்ட நாரை ஒன்று கொல்லுவது யாரை என்று நோக்கிக்கொண்டு இருந்தது. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்கு என்பர். அதனால், அதன் பார்வை எல்லாம் கண்ணன் மீதே படிந்து இருந்தன; யமுனை நதிக்கரையில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்துகொண்டிருந்தது; வைகுந்தம் செல்வார்க்கு வாசல் திறந்து வைத்ததுபோலத் தன் வாயலகுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தது.
“அரக்கன் அது, என்று தெரிந்தும் இரக்கம் சிறிதும் காட்டாமல் திறந்த கதவை மூடாதபடி பிளந்து விட்டான்; புள்ளின் (பறவை) வாயைக் கீண்டியவன் என்ற புகழ் மொழிக்கு உரியவன் ஆயினான், விசாரித்ததில் அந்த அரக்கன் பகன் என்று தெரிந்தது.
அகாசுரன் மரணம்
தேர்தலில் நிற்பதற்கு ஆளே கிடைக்கவில்லை; நின்றவர்கள் எல்லாரும் ‘டெபாசிட்டும் இழந்துவிட்டனர்; இனி யாரை நிறுத்துவது. முதல் நாட்போரில் தந்தை மடிந்தான்; அடுத்த நாட்போரில் கணவன் இறந்தான்; மூன்றாம் நாள் குடிக்கு ஒரே மகன் அவனைப் புற நானூற்றுத் தாய். தலையை வாரிப் புதிய ஆடை உடுத்திக் கையில் வேல் கொடுத்துப் “போய் வா மகனே” என்று அனுப்பி வைத்தாள். இது புறநானூறு தரும் இலக்கிய வினா விடை.
முதல் நாட்போரில் பூதனை உயிர் இழந்தாள். அடுத்து ஒரு நாள் பகன் நாரை வடிவில் கோரைப் புல் ஆயினான்; இனி யாரை அனுப்புவது? பேரைச் சொன்னார்கள். ‘அகாசுரன்’ என்று. அவன் அசகாய சூரன் என்று எடுத்த பெயர் சுருங்கி ‘அகா’ என்று வெட்டுப் பெயராய் அமைந்து விட்டது. இவனையே கம்சன் வெளிது உடுத்திக் கையில் வேல் கொடுத்துப் போருக்கு அனுப்பி வைத்தான். இது உருவகம். நடந்தது என்ன? அகாசூரன் மலை அரவு வடிவு எடுத்தான். அளந்து பார்த்தவர்கள் அது பன்னிரண்டு மைல் நீளம் கொண்டது என்று கூறிச் சென்றனர். இவ்வளவு பெரிய மலைப் பாம்பை எப்படி எதிர்ப்பது? ஏன் எதிர்க்க வேண்டும்? உயிரோடு வந்தால் அவனை வீரன் என்று மறவாது வழிபடுவர். அது மலைப்பாம்பு அன்று நாகப்பாம்பு என்றனர் சிலர். நாகத்தைத்தான் நங்கையர், பால் ஊற்றிப் புற்றுக்குச் சென்று வழிபடுவர். இது மலைப் பாம்பு என்று அறிந்தனர்; மலை என்றால் அதில் குகைகளும் இருக்கும். இது வாய் திறந்த போது வழிவிட்டது போல் இருந்தது; குகைக்குள் சென்றால் புதையல் கிடைக்கும் என்று பேசினர்; உதைதான் கிடைக்கும் என்று உளறினர் சிலர். அதை என்ன செய்வது என்று எட்டி நின்று யோசித்தனர்.
தனி ஒருவன் முதலாளியை எதிர்க்க முடியாது; ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்தால் முதலாளி திக்குமுக்கு ஆட வேண்டியதுதான். அனைவரும் உள்ளே புகுவது என்று தீர்மானித்தனர். புகை வண்டிப் பெட்டிகள் மலைப் பிளவுக்குள் நுழைவதைப் போலக் கன்றுகளும், ஆயர் சிறுவர்களும் உள் நுழைந்தனர். இடமில்லை என்ற அட்டையை இன்னும் அரவோன் மாட்டவில்லை;
கண்ணன் வரும்வரை கதவு திறந்திருந்தது. சங்கத் தலைவர் மட்டும் வெளியே இருந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் அவரை அகப்படுத்துவது என்று காத்து இருந்தது. கையில் மந்திரக் கோல் வைத்திருப்பது போலக் கண்ணன் ஊது குழலை வைத்திருந்தான்.
இவன் என்ன மந்திரம் செய்யப் போகிறான் என்று பார்ப்பதற்காக ஏராளமான தேவர்கள் மேலிடத்தில் (விண்ணில்) கூடிவிட்டனர். நான்கு தலைகளையுடைய பிரமனும் தனக்கு ஒரு இடம் பதிவு செய்து கொண்டு ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தான். வெற்றி யாருக்கு? தொழிலாளருக்கா? முதலாளிக்கா?
கண்ணன் உள் நுழைந்தான்; கதவு மூடப்பட்டது: வாயை மூடியது அந்த மலைப்பாம்பு; வெளியே அவர்கள் வரமுடியாது. போபால் விஷ வாயுவால் தாக்கப்பட்டுச் செத்தவர்கள் போல உள்ளே காற்று இல்லாமல் சாக வேண்டுவதுதான்.
ஒரு வெடி வெடித்தது: அந்தப் பாம்பின் தலையில் ஒரு வழி வகுத்தான்; புதிய பாதையைக் கண்ணன் அமைத்துக் கொடுத்தான்; கண்ணன் முதலில் வெளியே வந்தான்.மற்றவர்கள் தொடர் கதை ஆயினர். அந்த வெடி விபத்தில் மலைப்பாம்பு தலை சிதறி நிலைகெட்டு உயிர் விட்டது. “ஆகா! அகாசூரன் அழிந்தான்” என்று தேவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
பிரமன் பார்த்தான்; அவனுக்கே ஒரு பொறாமை உண்டாகிவிட்டது. “மூலையில் உட்கார்ந்து கொண்டு வேதம் படித்துக் கொண்டிருக்கிறோம்; நம் நாதம் இந்த உலகத்துக்கு எட்டவில்லை; கண்ணனுக்கு ஓர் ஏதம் உண்டாக்கிப் பார்ப்போம்; அவன் என்ன செய்கிறான் தெரிந்து கொள்ளலாம்” என்று எண்ணத் தொடங்கினான்.
“கலியாணச் சந்தடியில் முகம் பார்க்கும் கண்ணாடியும் சீப்பும் ஒளித்து வைத்துவிட்டால் கலியாணம் நின்று போய்விடும்; திண்டாட வேண்டியது தான்” என்ற மனப்போக்குக்கேற்ப இந்தக் கன்றுகளையும் இடைச் சிறுவர்களையும் கடத்திச் சென்று விட்டால், இவன் எப்படி அவர்களை நடத்திச் செல்ல முடியும்? பார்க்கலாம் ஒரு கை என்று கடத்தல் தொழிலுக்கு அவன் முதல் வழிகாட்டியாகச் செயல்பட்டான்.
மலைச்சாரலுக்கு அப்பால் கன்றுகளை ஆயர்கள் தொடர்ந்து துணிந்து மேயவிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை அப்படியே திசை திருப்பித் தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டான். கண்ணனின் கண்களுக்குப் புலப்படாமல் செய்து விட்டான்.
கதிரவன் கால் சாய்ந்தான்; மங்கிய அந்தி நேரம்; கண்ணனும், பலராமனும் தம் தோழர்கள் வருவார்கள் என்று எதிர் நோக்கினர். அதிர்ச்சியை அடைந்தனர் அவர்கள் இறங்கி வராமையால்.
எப்படி வீட்டுக்குத் திரும்புவது என்ற வினாவுக்கு விடை தேடினர். குமுதப் போட்டிக்கு விடை காண்பது போல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். “கவலைப்படாதே வீடு வந்து சேர்வர்” என்றான் கண்ணன். வீடு போய்ச் சேர்வதற்குள் தம் தோழர்களும் கன்றுகளும் முன்னே செல்வதைப் பலராமன் பார்த்தான்.
“எப்படிப் போனார்கள்?” என்று கேட்டான்.
“வழி தெரியும்” என்றான் கண்ணன். நேரம் சிறிது கழித்து வந்தமையால், இவர்கள் வருகையை ஊரவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஏன் இவ்வளவு நேரம்?’ என்று கேட்டனர்.
“மேய்ச்சலுக்குச் சற்று உள்ளே சென்று விட்டோம்” என்று கூறினார். இந்தப் பதில் அவர்கள் உளைச்சலைத் தீர்த்து வைத்தது.
கண்ணன் உடனே கன்றுகளாகவும் இடைச் சிறுவர்களாகவும் தன்னைப் பெருக்கிக் கொண்டான். பலராமனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. வீட்டுக்குச் சென்ற போதும் அவர்களும் வேற்றுமையைத் தெரிந்து கொள்ளவில்லை.
ஒரு நாள் மாலைப் பொழுதில் ஒரு புதுமை நிகழ்ந்தது. கன்றுகளைச் சிறுவர்கள் மேய்ப்பது வழக்கம். பசுக்களைப் பெரியவர்கள் மேய்த்து வந்தனர். அவை அன்று குன்றின் உச்சியில் மேய்ந்து கொண்டிருந்தன். திடீர் என்று இந்த தெய்வீகக் கன்றுகளைப் பார்த்ததும் அதை மேய்ப்பவர்களை மீறிக் கொண்டு கீழே வந்து அக் கன்றுகள் பால் குடிக்க அவற்றைத் தாவி நின்றன; மடிகளில் பால் சுரந்து பெருகியது: இடையர்கள் தடுத்து நிறுத்த இயலவில்லை.
இதற்கு முன்னால் இதுபோன்ற நிகழ்ச்சி நடந்தது இல்லை. பசுக்கள் ஆர்வமுடன் வந்ததில்லை. அதன் தாய்மை முடங்கிக் கிடந்தது. இப்பொழுது மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம்! இந்த அன்பின் பிணைப்புக்குக் காரணம் என்ன என்று பலராமனுக்கு விளங்கவில்லை.
இந்தக் கன்றுகளுக்கு இந்தத் தெய்வ சக்தி எப்படி உண்டாகியது? கண்ணனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விழைந்தான். இதன் ரகசியம் யாது என்று வினாவினான். இவை போலிகள் என்று கண்ணன் உண்மையைச் சொன்னான். இதற்குள் ஒரு வருஷம் ஓடிப் போய்விட்டது. இனிமேல் நீட்டித்தால் கண்ணனின் சினத்துக்கு ஆளாக வேண்டும் என்று அஞ்சி மறைத்து வைத்த கன்றுகளையும் இடையர்களையும் பிரமன் விடுவித்தான்; தன் மாற்று வடிவமான உண்மைக் கன்றுகளும் ஆயர் சிறுவர்களும் எந்தப் புதிய நினைவுகளும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இவர்களோடு கலந்து வீடு வந்து சேர்ந்தனர்.
பிரமன் இறைவனைச் சோதித்ததற்காக வருத்தம் தெரிவித்தான். கண்ணனின் பேராற்றலைத் தான் அறிந்து கொள்வதற்காகச் செய்த செயல் என்று கூறினான்.
கழுதை வடிவில் வந்த அசுரன் (தேனுகன்)
பனங்காடு ஒன்று இருந்தது; அங்கு எவரும் போவதில்லை; அங்கு ஒரு பொல்லாத அசுரக் கழுதை இருந்தது. பனம் பழம் பறிக்கச் சென்றால் மரத்தின் அருகில் போக முடியாதபடி உதைத்துத் தள்ளியது. ஆயர் சிறுவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பனம் பழத்தின் வாசனை மிகவும் கவர்ந்தது. அவற்றைப் பறித்து உண்ண விரும்பினர்.
கண்ணனிடம் தம் விருப்பத்தைத் தெரிவித்தனர். அவன் துணிந்து தன் தோழர்களை அழைத்துக் கொண்டு பனங்காட்டுக்குச் சென்றான். கழுதை வடிவில் இருந்த தேனுகாசுரன் என்பவன் வேகமாக உதைக்க வந்தான். அவன் பதைத்துத் துடிக்கும்படி தூக்கி எறிந்தான். கழுதை கத்திக்கொண்டே செத்தது. அவனைத் தொடர்ந்து பல கழுதை அசுரர்கள் வந்தனர். அவர்களையும் அடித்துக் கொன்றான். அதற்குப் பிறகு அங்கு ஒரு கழுதையும் இல்லை.
பனங்காட்டுக்குச் சென்று பலரும் பழம் பறித்துத் தின்றனர். கண்ணனின் பேருதவியை அனைவரும் பேசிப் பாராட்டினர்.
காளிங்கனை அடக்குதல்
இதனைக் காளிங்க மர்த்தனம் என்றும், காளிங்க நர்த்தனம் என்றும் சொல்வார்கள். கண்ணன் பலராமன் இல்லாமலேயே யமுனை நதிக் கரைக்குச் சென்றான்.அங்கு ஒரு நீர் மடு இருந்தது; அதன் அருகில் செல்லவே ஆயர் சிறுவர் அஞ்சினர். கேட்டால் அதன் வாடையே தீய்த்து விடும் என்று உரைத்தனர். அந்தத் தண்ணீரில் யாரும் குளிப்பதும் கிடையாது; நீரைப் பருகுவதும் இல்லை; கன்றுகளும் போவது இல்லை என்று தெரிவித்தனர்.
காரணம் என்ன என்று கேட்டதற்குக் காளிங்கன் என்ற பாம்பு அங்கு இருக்கிறது என்றும், அது கக்கிய விஷத்தால் கரையில் உள்ள மரங்களும், செடி கொடிகளும் பட்டு விட்டன என்றும் கூறினர்.
“இந்த மடுவில் நான் குதித்து நீந்தப் போகிறேன்” என்றான்.
“வேண்டாம்” என்று சொல்லிப் பார்த்தனர். இது விஷப் பரீட்சை என்றும் தெரிவித்தனர்.
“தீமையைக் கண்டு அஞ்சக் கூடாது; எதிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் தீமைகளை அகற்ற முடியும்.” என்றான் கண்ணன்.
பக்கத்தில் ஒரு கடப்பமரம் இருந்தது. அங்கு எப்பொழுதாவது கருடன் வந்து உட்காரும்; அது அமுதத்தை அங்குச் சொரிந்ததால் அது மட்டும் உலராமல் இருந்தது. அதன் கிளை ஒன்று அந்த மடுவில் சாய்ந்து அதைத் தொட்டுக்கொண்டு இருந்தது.
மரக்கிளையில் ஏறித் ‘துடும்’ என்று நீரில் பாய்ந்து நீந்தினான். கரையில் இருந்தவர்கள் இன்னது செய்வது என்று தெரியாமல் செயலற்று நின்றனர். சிலர் வீட்டுக்குச் சென்று கண்ணனின் தாயிடமும் தந்தையிடமும் கூறினர். பலராமனுக்கும் செய்தி தெரிந்தது. ஊரே திரண்டு அங்கு வந்து கரையில் நின்று கொண்டார்கள்.
என்ன நடக்குமோ என்று அஞ்சி நின்றனர். நீரில் இருந்து பல தலைகளுடைய பாம்பு ஒன்று வெளியே வந்தது. கண்ணன் அதனை எதிர்க்கவில்லை. என்ன செய்கிறது பார்க்கலாம் என்று எதுவும் செய்யாமல் நீரில் தன் போக்கில் விளையாடிக் கொண்டு இருந்தான். பாம்பு வேகமாகச் சென்று தன் வாலைக் கொண்டு அவனை நன்கு பிணித்து விட்டது. இனி அதன் இறுகிய பிடியில் இருந்து தப்ப முடியாது என்று கரையில் இருந்தவர்கள் கதறினர். சில மணி நேரமாக அதன் பிடியில் கண்ணன் இருந்தான்.
யசோதை என்ன ஆகுமோ என்று கதறினாள். தான் நீரில் குதிக்கத் துடித்தாள். இதே போல நந்தரும் வேதனைப்பட்டார். இளைஞர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் அவனைக் காக்க முன் வந்தனர். இன்னும் சிறிது தாமதித்தால் யசோதை உயிர் விட்டு விடுவாள் என்று அதினின்று விடுபடச் செயல்பட்டான்.
கண்ணன் தன் உருவினைப் பெருக்கத் தொடங்கியவுடன் வலி தாங்க முடியாமல் கட்டு அவிழ்ந்தது; அவனைத் தீண்டிச் சாகடிக்க முடியும் என்று வாலினை நீட்டிப் பார்த்தது; அதன் பல் கடிக்கு அகப்படாமல் தலைக்குத் தலை தாவிக் கால்களைப் பெயர்த்து எடுத்தான். இஃது ஒரு நடனமாகவே அமைந்தது.
அதன் வாலைப் பிடித்துக்கொண்டு தலைகள் ஐந்திலும் காலை மாறிமாறி வைத்து நர்த்தனம் செய்தான்: அதைப் பார்த்து மகிழ்வதா? அவன் உயிர் தப்புவானா என்று கவலை கொள்வதா? என்று தெரியாமல் தவித்தனர்.
பாம்பு அடங்குவதாக இல்லை. அதனால், அவன் தன் கால்களால் மாறிமாறித் தாக்க அது வலி தாளாமல் தளர்ந்தது. அதன் சோக மூச்சைக் கேட்டு அதன் பத்தினிகள் வெளியே வந்து தலைகாட்டினர்.
இனித் தம் கணவன் உயிர் பிழைத்தல் அரிது என்று தெரிந்தது. உடனே நாகபத்தினிகள் கணவனின் உயிர்ப் பிச்சை கேட்டனர்; கண்ணனின் பெருமையை உணர்ந்து பலவாறு ஏத்திப் புகழ்ந்தனர்; தம்முடைய வணக்கத்தைத் தெரிவித்தனர். நாகமும் மிகவும் சோர்ந்து தன்னை விட்டுவிட வேண்டியது; தன் மூர்க்கத்தனத்தைத் தன் பிறவிக்குணம் என்றும், அதனை எளிதில் விட முடியாததால் தான் எதிர்த்தது என்றும் கூறியது.
பிருந்தாவனத்து மாடுகளும், ஆடுகளும், கோபியரும் அங்கு வந்து நீர் குடிக்க வேண்டும் என்றும், மக்கள் மிகுந்து வாழும் இடத்தில் தங்குவது தகாது என்றும், ஊருக்குப் பயன்படும் பொது நீர்த்துறையைப் பாழ்படுத்தக் கூடாது என்றும் அறிவித்தான்.
“காட்டில் வாழும் சிங்கம் புலி அவை இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்கும் காப்பு; மற்றவர்களுக்கும் காப்பு; அதுபோல நீ கடலில் இருப்பதுதான் உனக்கும் நன்மை. மற்றவர்களுக்கும் நன்மை” என்று கூறினான்.
“மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு மனைவி, மக்களை அழைத்துக் கொண்டு உடனே புறப்படு; என் ஊர் மக்கள் இங்கு வந்து புழங்க வேண்டும்” என்று கூறினான்.
நாகமும் அதுவே தனக்கு ஏற்றது என்று நாள் கணக்கில் தங்கி இருந்த இடத்தைவிட்டு அகன்றது.
இது கண்ணன் ஊருக்குச் செய்த பொதுச் சேவையாதலின் அனைவரும் அதனையே பாராட்டிப் பேசினர். பிருந்தாவனமும் குடிக்க நீர் வசதி பெற்று உயர்வு அடைந்தது.