தாமோதரன்


யானை புகுந்த வீடாக அது இருந்தது. பானைகள் உருட்டிப் பாலும் தயிரும் ஓடவைத்தான். அவனைக் கட்டிப் பிடிக்கக் கைகள் போதவில்லை. தட்டிக் கேட்கச் சொற்கள் போதவில்லை. எட்டிப்பிடிக்க ஆளே கிடைக்கவில்லை. எங்கே அவன் என்று தேடிச் சென்றாள். உருட்டி வைத்த உரலை நிமிர்த்துப் போட்டுச் சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு,

பாரு பாரு பட்டணம் பாரு; தேவநகரம்
பாரு; பாவ நாசம் பாரு; கம்ச நாசம் பாரு

என்றான். செக்குமாடு போல வந்த இடத்துக்கே வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் தள்ளிப் போகப் பார்த்தான். செல்லும் இடம் எல்லாம் தம் கருமவினையே ஒருவனைத் தொடர்வதைப் போல் அவ் உரலும் உருண்டு கொண்டே வந்தது. திரண்ட இரண்டு மருத மரங்கள் அவன் செல்வதைத் தடுத்தன. வரவை மட்டும் ஏற்றுக் கொண்டன.

இரண்டு மரங்களுக்கும் இடையே இடைவெளி இருந்தது. அதன் மத்தியில் அவன் நடைபயில் உரல் சிக்கிக் கொண்டது. தேர் இழுப்பது போல வடங்கொண்டு வலித்தான். நெடுமரங்கள் படுமரங்கள் ஆயின ; வேரோடு முறித்துக் கொண்டு பாரோடு விழுந்தன. மரத்தின் முறிவும் அவற்றின் சரிவும் பேரிரைச்சலை உண்டு பண்ணின.

காற்று இல்லை; கடிய மழை இல்லை; நேற்று வரை நின்றிருந்த மரங்கள் இன்று இல்லை என்னும் பெருமையை உலகுக்குக் காட்டின; அடையாறு ஆலமரத்தின் அவல நிலை இதற்கு ஏற்பட்டது. அதைத் தூக்கி நிறுத்தி விட்டனர். இதை எடுத்து நிறுத்த முயலவில்லை.

நாரதர் இட்ட சாபம்


நளகூவரன் மணிக்கிரீவன் இருவரும் அளகை நகர்க் காவலனின் அருமை மைந்தர்கள்; செல்வம் அவர்களைச் செருக்கில் ஆழ்த்தியது. கிறுக்குப் பிடித்தவர்கள்; மதுவின் மயக்கிற்கு உள்ளாயினர்; மாதர்களின் மதர்ப்புக்கு அகப்பட்டவராகி நீரில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

நாரதர் அவ்வழிப் போக்கர்; பார்த்தும் பாராமலும் போய் இருக்கலாம்; பெண்கள் குளிப்பதால் இவர் கண்கள் அந்தப் பக்கம் திரும்பின. கரை ஏறிய பெண்கள் அவரைக் கண்டதும் தம் பெண்மையை மறைத்துக் கொண்டனர்; இவர்கள் மட்டும் அவர் தந்தை பிரமன் இப்படித் தான் தம்மைப் படைத்து இருக்கிறார் என்பதை நெடுமரமாய் நின்று காட்டிக் கொண்டனர்.

அது அவர்கள் தன்னை அவமதித்ததாக எடுத்துக் கொண்டார். அந்தக் காலத்திலே முனிவர்களுக்குக் கோபம் வந்தாலே சாபம் இடுவது வழக்கமாய் இருந்தது. இவரும் அவர்களைக் “கோகுலத்தில் மருத மரங்கள் ஆவீராக” என்று சாபமிட்டார். கதை என்றால் அதற்கு ஒரு முடிவு தேவை; சாபம் என்றால் அதற்கு ஒரு விமோசனமும் தர வேண்டும்; அதுதான் இது; கண்ணன் நிழல் பட்டதும், நாரதன் இட்ட சாபம் தீர்ந்து மரங்களாக நின்றவர்கள் தேவர்களாக மாறித் தம் சொந்த நகருக்குத் திரும்பினர்.

பிருந்தாவனம் எழுதல்


“உக்கிரன்தான் ஆட்சியில் இருந்தவரை நாட்டில் அக்கிரமங்கள் நடக்கவில்லை. அவன் மகன் அவன் தந்தையைப் பதவியில் இறக்கிவிட்டுத் தான் உட்கார்ந்து விட்டான். அது முதல்தான் இந்த அவதிகள்” என்று கோகுலத்தில் பேசிக் கொண்டனர்.

உயிருக்குத் தக்க காப்பு இல்லை; அத்தகைய சூழ்நிலைகள் உருவாகிவிட்டன என்பதை இவ்வாறு சுருக்கமாக உரைத்தனர். பூதனை, சகடன், சூறாவளி, மருதமரம் இப்படிக் கதைகள் அவர்கள் கற்பனையில் நிறைந்து விட்டன. அதனால் அவர்கள் கூட்டம் கூடிப் பேசினர். அடுத்துச் செய்வது யாது? அபாயங்கள் வந்தால் உபாயம் யாது? என்று கூடிப் பேசினர். நந்தனும் அவன் தம்பி உபநந்தனும் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.

கோகுலத்தை விட்டு அடுத்து இருந்த பிருந்தாவனத்திற்குக் குடி பெயர்தல் என்று முடிவு செய்யப்பட்டது. கோகுலம் வியாகுலங்களை விளைவித்துக் கொண்டிருந்தது. மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்குப் புதிய இடங்கள் தேவைப்பட்டன. கோவர்த்தனம், அதன் மலைச் சாரல், யமுனை நதி, அவற்றைச் சார்ந்த வனங்கள்; காடுகள், மேடுகள் இவை எல்லாம் தக்க இடங்களாகப் பட்டன. செல்லும் சிறுவர்கள் திரும்பி வருவதற்குள் இரவும் வந்து விடுகிறது. அதனால், தொழில் செய்யும் இடத்துக்கே போய்த் தங்குவது எல்லா வகையிலும் நன்மை என்று நல்லது கெட்டது கலந்து பேசினர்.

“கால்கள் முளைத்து விட்டன; கண்ணனை வீட்டில் முடக்கி வைக்க முடியாது; நானும் போவேன் என்று அடம் பிடித்தால் தடங்கல் ஏதும் கூற முடியாது. அந்தி சாயும் நேரமானால் அவன் வந்து சேரவில்லையே” என்று யசோதை தவிப்பாள். அதனால், அங்கேயே கோகுலத்தின் விரிவாகப் பாடி அமைப்பது என்று முடிவு ஆயிற்று.

கோகுலம் தலைமைச் செயலகம் என்றாலும், பிருந்தாவனம் கோடை வாசத் தலம் ஆயிற்று. இங்கும் அங்குமாகவும் சில சமயம் தங்கி மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டனர். புதியன புகுந்தாலும் பழையன கழிக்கவில்லை. இரண்டு இடங்களும் பயன்பட்டன.

புதியளாய் ஒருத்தியை மணம் செய்து கொள்பவன் என்ன சொல்கிறான்? “பழையவளும் இருந்து போகட்டுமே; பயன்படுவாள்” என்று கூறுவான்; அது போன்ற நிலைதான் கோகுலத்துக்கு ஏற்பட்டது.

பாடியில் புதுவீடுகள் அமைத்துக்கொண்டு பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கொட்டில்களைக் கட்டிக் கொண்டு சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு குடி பெயர்ந்தனர். மூட்டை முடிச்சுகளை வண்டிகளில் போட்டுக்கொண்டு அவர்கள் வழிப்பயணம் செய்தது வாழ்நாளில் மறக்க முடியாத காட்சியாக இருந்தது. குட்டிக் கண்ணன் பிருந்தாவனம் போவதில் மகிழ்ச்சி காட்டினான்.

அங்கே என்ன என்ன பார்க்கலாம் என்று கேட்டான். உயிரியல் காட்சிக்குச் செல்லும் சிறுவர்கள் கேட்பது போல் அந்த வினாக்கள் இருந்தன.

“யமுனை நதிக் கரையில் விளையாடலாம்; மலைச் சாரலில் கன்றுகளை மேய்க்கலாம்; நீ உன் விருப்பப்படி குழல் ஊதி மகிழலாம். இராதையும் உன்னோடு அங்கு வந்து விளையாடுவாள்” என்று கூறினர்.

இராதையும் அவர்கள் குடும்பமும் அங்கே வருவது அவனுக்கு குதூகலத்தைத் தந்தது. தன் பெண் சிநேகிதி அவள் உடன் வருகின்றாள் என்பதால் அவன் உற்சாகத்தோடு இருந்தான். மற்றும் அவன் பழகிய சிறுமிகள் வீட்டோடு இருந்தனர். அவர்களும் வெளியில் விளையாடுதற்குப் பரந்த இடம் கிடைத்தது. தன் தோழமைச் சிறுவர்களும் இதை வரவேற்று ஆரவாரித்தனர்.

யமுனை நதியின் கரையோரம் கண்ணனின் பூங்குழல் ஓசையைக் கேட்கக் காத்திருந்தது. மலை அவன் வருகைக் காகப் பொறுமையாக நின்று கொண்டிருந்தது. பசுமையான சோலைகள் எல்லாம் அவனுக்கு நிழல் தருதற்காகச் செழித்து வளர்ந்தன. மயில்களும், குயில்களும் இவர்களை வரவேற்கக் காத்து இருந்தன.

வத்சவனும் பகனும்


“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பார்கள் சிலர். அதுபோல இடம் பெயர்ந்தாலும் அசுரர்கள் வருதலைத் தடை செய்ய இயலவில்லை. முன்னிலும் வலிமை மிக்கவர்கள் தொடர்ந்து துயர் விளைவித்தார்கள்.

கண்ணன் கன்றுகளின்பின் காலை புறப்படுகிறவன் மாலை கதிரவன் ஒளி மங்கும் முன் வீடு வந்து சேர்ந்தான். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் சிலர் துள்ளிக்கொண்டு போதலும் உண்டு; சிலர் அழுது கொண்டே திரும்புதலும் உண்டு; இங்கே அவனைக் கல்லும் முள்ளும் நிறைந்த கானகத்திற்கு அனுப்பி வைத்ததற்காக யசோதை கலங்கினாள்.

“இங்கே சிறுமியர் இழைக்கும் சிற்றில் சிதைக்கின்றாய்” என்ற செய்தி செவி கொடுத்துக் கேட்டேன். அதனால் உன்னை வெளியே அனுப்பினேன்; உரிமையோடு நீ வெண்ணெய் அள்ளித் தின்றால் கொள்ளிக் கண் உடைய கள்ளிகள் சிலர், உன்னைக் கள்வன் என்று கருதுகின்றார்களே என்று உன்னை அனுப்பினேன்.”

“இங்கே இந்தத் தொல்லைகள் எல்லாம் இல்லாமல் எல்லை கடந்து இருப்பாய் என்று உன்னைக் கன்றின் பின் போக்கினேன். குடையும் இல்லை. காலுக்குச் செருப்பும் இல்லை. கற்கள் நிறைந்த காட்டிலும் முட்கள் நிறைந்த புதரிலும் உன்னை அனுப்பி விட்டு இங்கு வேதனைப் படுகிறேன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

அங்கே மேயும் கன்றுகளிடையே பேயும் நுழைந்தது என்று அசுரக் கன்று ஒன்று உள்ளே நுழைந்தது. எண்ணிப் பார்த்தால் ஒன்று மிகுதி என்பது அவர்கள் கண்ணில் பட்டது. கள்ள நோட்டுகள் உண்மை நோட்டுகளில் புகுந்து விட்டால் அதைக் கண்டு விலக்குவது அரிய செயல்; அந்தக் கள்ள நோட்டைக் கார்வண்ணனாகிய கண்ணன் கண்டு பிடித்துவிட்டான். மற்றவர்களுக்கு அவர்கள் ஆடிய இடத்தில் கோடிக்கொண்டிருந்த விளமரம்தான் கண்ணில் தெரிந்தது. அதன் பழங்களைப் பறிக்கக் கற்களை வீசிக் கொண்டிருந்தனர், ஒன்று இரண்டு விழுந்ததே யன்றி ஒட்டு மொத்தமாகத் தட்டி வீழ்த்த முடியவில்லை. கன்றின் பின்னங் கால்களைக் கைகளால் சேர்த்துக் காற்றாடி விடுவது போலச் சுழற்றி மேலே பறக்க விட்டான்; அது அந்த மரத்தின் ஒட்டு மொத்தமான கிளைகளோடு கனிகளை உதிர்த்தது.

மேலே சென்றபோது நன்றாகச் சென்ற கன்று கீழே விழும்போது வத்சவன் என்ற அசுரனாக விழுந்து மடிந்தது.