சகடன் சரிவு
“கண்ணன் பிறந்து வருஷம் நான்கு ஆயிற்று” என்று பேசினர்; பிறந்த நாள் விழாவைச் சிறந்த முறையில் கொண்டாடினர்; ஏழை எளியவர்கள் தம் ஏழ்மை மறக்கும்படி ஏராளமாய் வாரி வழங்கினர்.
அவனுக்குப் புதிய ஆடை உடுத்தி அழகு சேர்த்தனர். அவன் மல்லாக்காகப் படுத்து இருந்தான். அசுரன் ஒருவனுக்குப் பொல்லாத காலம் அடுத்தது; அடுத்து இருந்த வண்டியை அவன் உருட்டிவிட்டான்; உருண்ட வண்டியைக் கண்ணன் காலால் உதைத்துத் தள்ளினான்; அசுரன் ஒருவன் அதிலிருந்து வெளிவந்து துள்ளினான்; துடித்தான்; மடிந்தான்; குடை கவிழ்ந்தது; அக்குவேறு ஆணி வேறாய்ச் சிதைந்தது; வண்டியின் மீது வைத்திருந்த குடங்கள் உருண்டு அவை பாலைத் தரையில் பாழ்படுத்தின; பாற்குடங்களை அதில் ஏற்றி வைத்திருந்தனர்; தட்டு முட்டுச் சாமான்களும் கெட்டுத் தடுமாறி வீழ்ந்தன. ஓசை கேட்டுப் பூசை செய்து கொண்டிருந்த நந்தன் கோபியர் யசோதை அனைவரும் அங்கு வந்து இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சி உற்றனர்.
“கண்ட இடத்தில் குழந்தையைக் கிடத்தாதே என்று சொன்னேனே கேட்டாயா” என்ற குரல் கணவன்பால் வெளிப்பட்டது.
அவனை வைத்துக்கொள்வது எளிய காரியமாய்ப் படவில்லை.
“கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்;
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்;
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்;
மிடுக்கி லாமையால் நான்மெலிந்தேன் நங்காய்.”
என்று யசோதை அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தாள்.
திருநாவர்தன் வீழ்ச்சி
கண்ணனை முற்றத்தில் விட்டுவிட்டுக் கோபியர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்; சுற்றி வந்த காற்றுச் சூறாவளியாய் வீசியது. யசோதை கண்களில் தூசு பட்டு மாசு ஆக்கியது. கண்களைக் கசக்கும்போது கடுங்காற்றுக் கண்ணனை நெடு விசும்பிற்கு எடுத்துச்சென்றது.
சுழற் காற்றில் அழல் போன்ற அசுரனோடு கண்ணன் போராடிக் கொண்டிருந்தான். அசுரன் அவனை மேலே இழுக்கக் கண்ணன் அவனைத் தரைக்குள் அழுத்தினான். அசுரன் விழிகள் வெளிவந்தன; அவன் அலறிக்கொண்டு தரையில் விழுந்தான். “மலைச் சிகரம் ஒன்று நிலை குலைந்து விழுந்தது” என அசுரன் தன் உடலைக் கீழே போட்டான். அவன் பெயர் ‘திருநாவர்தன்’ என்று தெரிந்தது. சகடனை அடுத்து வந்த அசுரன் இவன்.
மண்ணுண்ட மாயன்
குழந்தைகள் இருவரும் தவழ்ந்து தாயாருக்கு மகிழ்ச்சியைத் தந்தனர். கால்களில் கட்டிய சதங்கையும் கிண்கிணியும் கலகலத்த ஓசையை உண்டாக்கின. “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பது அவர்களைப் பொறுத்தவரை ஓரளவு உண்மையாகியது. செவிகளில் கண்ணனது ஒவ்வோர் அசையும் நாத ஒலியாய்க் கீதம் எழுப்பியது.
அன்னை மடி மற்றவர் கடியும்போது அவன் தங்கும் படியாய் அமைந்தது. யாராவது கடிந்து பேசினால் உடனே படிந்து உள்ளே வந்து அம்மாவின் முதுகுபுறம் புல்குவான். கோபியர் கண்ணன் செய்யும் குறும்புகளை விரும்பி ஏற்றனர். அரும்பிய முல்லை என அவற்றை ஏற்றுக் கொண்டு இங்கு வந்து யசோதைக்கு மணம் பரப்பினர். ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டிச் சொல்லியே அவர்கள் கூட்டல் கணக்குக் கற்றுக் கொண்டனர்.
“கண்ணனும் அவன் அண்ணனும் விடியற்காலையில் எழுந்து விடுகிறார்கள். கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விட்டு அவற்றின் தாயோடு முட்ட விடுகிறார்கள். அவைபால் குடித்துவிட்டபின் கறப்போர் வந்தால் பால் கொடுக்க மறுத்துவிடுகின்றன.”
“யாரும் இல்லாத வேளைகளில் புகுந்து இருவரும் வெண்ணெய் திருடித் தாம் மட்டும் உண்ணாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கிறார்கள்; குரங்குகள் அவர்கள் பங்காளிகள் ஆகின்றன.”
“உறிகளில் உயரமான இடத்தில் வைத்தாலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி அவற்றை உருட்டி விட்டுத் தின்னும் அளவு தின்றுவிட்டு அங்கேயே கொட்டி வைத்துக் கட்டித் தயிரால் மெழுகி வைக்கின்றனர்.”
“கட்டெறும்பு ஒன்று இரண்டைக் கன்றின் காதில் விட்டு அதனை விரட்டி வைத்து வேடிக்கை பார்க்கின்றனர்.” – இவற்றைக் கண்டு வந்து மங்கையர் சிலர் யசோதையிடம் சங்கு ஊதினர்.
சர்க்கரைப் பொங்கல் என்று தெருப்புழுதியைச் சைவ பக்தர்கள் போலக் கண்ணன் வாயில் போட்டுக் கொண்டு வித்தை காட்டினான்.
அண்ணன் பலராமன், “என்னடா இது! மண்ணைத் தின்கின்றாய்; வயிற்றில் மரம் விளைந்து விடும்” என்றான்.
“பொய் சொல்கிறாய்” என்றான். குற்றவாளியைப் பிடித்துக் கூண்டில் நிறுத்துவது போல் இவனை யசோதையின்முன் கொண்டு வந்து நிறுத்தினான்.
“என்னடா இது?” என்றாள் தாய். “மண் உண்ணி மாப்பிள்ளை” என்றான் பலராமன் அவனைப் பற்றி, “என்னடா கன்னா பின்னா என்று சொல்கிறாய்” என்று கேட்டாள் யசோதை.
“தென்னரங்கப் பெருமானா என்ன இவன் புளியோதரை தின்ன! மண் தின்றான்” என்றான்.
“கண்ணா நீ தின்றது மண்ணா” என்று கேட்டாள். “பாரு பாரு பட்டணம் பாரு; தேவ நகரம் பாரு; பாவ நாசம் பாரு; கம்ச நாசம் பாரு” என்று சொல்லிக்கொண்டே வாய் திறந்தான்.
“அண்ட பகிரண்டங்கள் அனைத்தும் இறைவனுள் அடக்கம்” என்ற பேருண்மையை அறிந்தாள். மனோ நிபுணர்கள் செய்யும் மாய வித்தை போல அவளுக்குத் தோன்றியது. “மண்ணுண்ட மாதவன்” என்று மற்றவர்கள் அவனைப் பாராட்டிப் பேசினார்கள்; சிறுவர்கள் அவனை எள்ளல் சுவையோடு சொல்லி அவனை ஏத்திப் புகழ்ந்தனர். அவள் மனமயக்கம் தீரும்படி அவள் மடியில் மீண்டும் தவழ்ந்து சிரித்து விளையாடிச் சின்னக் குழந்தையாய் அவன் நடந்து கொண்டான்.