கம்சன் மனநிலை


வாண வேடிக்கை கண்டதுபோல் இருந்தது கம்சனுக்கு. மின்னுக்கொடிபோல் பெண்ணொருத்தி தோன்றியதும், கண்ணெதிரே நின்று அவனை மருட்டியதும், அவன் கொல்லப்படுவது உறுதி என்று கழறியதும் அவன் கவலையை மிகுவித்தன. அவள் விண்ணில் மறைந்தாள்.

வியப்பும் திகைப்பும் அடைந்த அவன், தன் வாழ்க்கை நகைப்பிற்கு இடம் ஆகிவிட்டதே என்று நைந்தான். பறவை பறந்துவிட்டது என்பது தெரிந்தது. மாயை தன்னை வெருட்டியது கண்டு வியந்தான். கண்ணன் தன் சிறையில் பிறந்தான் என்பதும், அவன் இடம் பெயர்ந்தான் என்பதும் அவன் அறியான்; ஆனால், தன்னைக் கொல்ல வந்தவன் களம் வேறு அமைத்துக் கொண்டான் என்பது மட்டும் சொல்ல முடிந்தது.

முளையிலே களையாவிட்டால் அது முற்றிய மரம் ஆகிவிடும். அதனால் வளையிலே இருந்தாலும் அவனை வளைத்துப் பிடிப்பதே இனி விளைவிக்கும் செயல் என்பதைக் கருத்திற் கொண்டான்.

அமைச்சர் அவை என்று அவன் அமைத்துக் கொண்டது இல்லை; நமைச்சலுக்குக் கீறிவிடும் நச்சரிப்பினர் சிலர் அவனுக்கு நண்பர்களாய் இருந்தனர்; எதற்கெடுத்தாலும் சரி எனப் பாடும் சங்கீத வித்துவான் களாக இருந்தனர்; மூளை குறைந்தவர்கள்; உடலை வளர்த்து வைத்திருந்தார்கள்.

“நீ சொல்வது சரி; அவன் எங்கிருந்தாலும் கண்டு பிடித்து விடலாம்” என்றனர் சிலர்.

“ஒரு குழந்தை என்ன? ஓராயிரமும் கொன்று முடிக்கலாம்” என்று சிலர் குரல் கொடுத்தனர்.

“பிறந்து பத்து நாள் ஆகி இருந்தால் அது பத்தாவது நாளைக் கடக்கக் கூடாது; முடித்துவிடுங்கள்” என்றான் கம்சன்; அதற்கு முன் பிறந்தவை அதிருஷ்டசாலிகள்; அவற்றை விட்டு விடுங்கள்” என்று திருத்தம் கூறினான்.

“விளம்பரம் இல்லாமல் இந்த வியாபாரத்தைத் தொடருங்கள்” என்று சொல்லி அனுப்பினான். அடியாட்களுக்கு அவனுக்குப் பஞ்சம் இல்லை. கச்சிதமாக முடித்துவிட்டு நிச்சயமாகத் தன்னிடம் வந்து சொல்வார்கள் என்று எதிர்பார்த்தான்.

“பூதனை என்ற ஒரு பேய்க்குணம் படைத்த அசுர மகள் ஒருத்தி சாதனை செய்து காட்டுவாள்” என்று பேசிக் கொண்டிருந்தனர். அவளையே அவன் முதற்கண் தேர்ந்து அனுப்பி வைத்தான்.

சந்தையில் சாதிக்காரர் சந்திப்பு


எட்டாவதனை எட்டிப்பிடித்த சாதனைக்காரன் ஆன வசுதேவன், முதலாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நந்தகோபனைச் சந்திக்க விரும்பினான்; கண்ணனை விட்டுவந்த பின் சிட்டுக் குருவிபோல அவன் மனம் கண்ணனையே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. ஊரில் பேசிக் கொண்டார்கள் கம்சன் சிறிய முளைகளைக் கிள்ளி எறிகிறான் என்று; குழந்தை அங்கு இருக்கிறான் என்ற செய்தி எட்டாமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான் வசுதேவன்.

“இரட்டை இலைகளை அங்குத் தழைக்க விட்டிருக்கிறோமே” என்ற கவலை அவனை அரித்தது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ என்ற நினைப்பு அவனை வாட்டியது. ஒருவன் பலராமன்; மற்றவன் கண்ணன்.

குழந்தை பிறந்த பெருமகிழ்ச்சியில் நாட்டு அரசனுக்குக் கட்ட வேண்டிய வரித் தொகையைக் கட்டத் தாமதித்து விட்டான். “மின்சாரக் கட்டணம் கட்டா விட்டால் அதை வெட்டி விடுவார்கள்” என்ற கவலை நமக்குத் தோன்றுவது போல் “வரித் தொகை கட்டா விட்டால் கம்சனின் அடியாட்கள் வந்து தடி கொண்டு தாக்குவார்களே” என்று அச்சப்பட்டான். அதனால் நந்தகோபன் துரிதமாக நகருக்கு ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

“நந்தகோபன் நகருக்கு வந்திருக்கிறான்” என்ற செய்தி அங்குப் பார்த்தவர்கள் வசுதேவனிடம் வந்து கூறினார்கள். சந்தை கூடும் சந்திப்பில் நந்தகோபனை வசுதேவன் சந்தித்தான். மாடுகள், கன்றுகள் எப்படி இருக்கின்றன என்று விசாரித்தான். சம்பிரதாயப்படி உடம்பு எப்படி இருக்கிறது? என்று உருப்படி இல்லாத கேள்விகளை அவன் கேட்கவில்லை.

“நீண்ட காலம்; ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று இரட்டை யராகவே வாழ்ந்து காலம் கடத்திவிட்டீர்கள்; இப்பொழுது மகன் பிறந்தான் என்று கேள்விப்பட்டேன்; என் வாழ்த்துக்கள்” என்றான். நந்தகோபன் முகத்தில் குமிழ் சிரிப்பு அமிழ்து எனத் தோன்றியது.

அவன் வசுதேவனைத் திருப்பிக் கேட்டான். “இப்பொழுது எத்தனையாவது?” என்று. விடுமுறைக்குப் பின் மாணவனைப் பார்த்து மற்றவர்கள் கேட்பது போல இருந்தது அந்த வினா.

“எட்டாவது எட்டிப் பிடித்து இருக்கிறேன்; ஒன்று கூடத் தேறவே இல்லை; படிப்படியாய் ஆறு பேரை அவன் தீர்த்துவிட்டான்; ஏழாவது! அது முற்றுப் பெறவில்லை; எட்டாவது பெண்; அவள் வான வேடிக்கை காட்டிவிட்டுப் போய்விட்டாள். “பெற்ற குழந்தை தன்னிடத்தில் இல்லையே” என்று தேவகி பேதலிக்கிறாள்.

“ஏற்கெனவே என் ஒரு குழந்தையை உரோகிணி பெற்றிருக்கிறாள்; அவன் திண்ணிய உடம்பும் கண்ணிய தோற்றமும் பெற்றவன். அவனை நான் எண்ணியபடி அங்கு விட்டுவைத்திருக்கிறேன். கம்சன் பார்வை அவன் மீது படக்கூடாது என்பதால்தான் உரோகிணியை நம் ஊரில் விட்டு வைத்திருக்கிறேன். அவன் ஒருவன்தான் என் பெயரைச் சொல்ல ஊரில் வளர்கிறான்” என்று தன் வமிசாவளியைப் படித்துக் காட்டினான்.”அவனை நீ தான் பொறுப்பாய் இருந்து காக்க வேண்டும். அவனைப் பற்றித்தான் என் கவலை.”

“அது மட்டுமன்று; பிள்ளை பிடிக்கிறவர்கள் நகரத்தில் பெருகி விட்டார்கள்; பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்; இப்போது புதிதாக ஒரு பட்டாளம் கிளம்பி இருக்கிறது; மக்கள் கட்டுப்பாடு இயக்கம் என்று சொல்கிறார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொல்லக் கம்சனின் ஆள்கள் பரவியுள்ளனர்.”

“இவர்கள் கிராமத்தில் பரவமாட்டார்கள் என்று கூறமுடியாது; அந்நியர் என்று தெரிந்தால் அவர்களை அகற்றுவதற்கு வழி தேடுங்கள்; அவர்கள் மாறுவேடம் போட்டுக்கொண்டு தாறுமாறாய் நடந்து கொள்வார்கள்; மாடுகளை எருதுகளைத் தூண்டி முட்டலிடுவார்கள்; மரத்தைச் சாய்ப்பார்கள்; வண்டிகளை உருட்டுவார்கள்; பெண்களை அனுப்பிவைத்து மயக்கிப் பொடி போட்டு ஏமாற்றுவார்கள். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று சொல்லி அனுப்பினான்.

“உரோகிணியை நான் கேட்டதாய்ச் சொல்லவும்; பையனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சொல்லவும்; நான் சொன்னேன் என்று சொல்லவும்; மறக்க வேண்டா; நீங்களும் சின்னவனைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அவன் மறையும் வரை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்க முடியாமல் மற்றவன் விடை பெற்றுச் சென்றான்.

பூதனை வதம்


கொல்லுவதில் வல்லவர் யார்? என்று தேர்வு எடுக்க முதலில் நின்றவள் பூதனை; அவள் பல குழந்தைகளைக் கொன்று, “வைத்தியர்” என்று பட்டப் பெயர் எடுத்திருக்கிறாள்; ‘சூனியக்காரி’ என்று சிலரும் ‘மாயக்காரி’ என்று சிலரும் அவளைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்; யாரும் அவளை முடியக் கண்டவர் இல்லை; மந்திரக்காரி என்று சிலர் சொல்லினர்; தந்திரத்தால் எதையும் சாதிப்பதில் வல்லவளாய் இருந்தாள்; பத்து நாள்களுக்கு முன் பிறந்த குழந்தைகளைக் கண்டுபிடித்துச் சத்தம் செய்யாமல் கொன்றுவிட்டு வருமாறு இட்ட ஏவல் அவள்மீது விழுந்தது.

“எங்கெங்கே புதிய குழந்தைகள் பிறந்து இருக்கின்றன?” என்று கேட்டுக் கொண்டே வந்தால் மக்கள் கணக்கெடுப்புத் துறையைச் சார்ந்தவள் என்று மற்றவர் கருதிக் கொண்டனர்; வண்ண ஆடைகளை உடுத்திக் கொண்டு கண்ணனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்; விசாரித்து அறிந்தாள்; அது ஒரு அதி அற்புதமான குழந்தை என்று அவன் கறுப்பு நிறத்தைப் பற்றிச் சிறப்புறப் பேசிக்கொண்டிருந்தனர். எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன? பத்து நாளைக்கு முன் பிறந்த குழந்தை என்பது உறுதியாகிவிட்டது. எத்தனை உயிர்களை அழிக்கின்றாளோ அத்தனையும் அவளுக்குக் காசு. கோகுலத்தில் இந்த வீடே மிகப் பெரியதாய் இருந்தது; பாலும், தயிரும் பெருகி ஓடிய பண்ணையாய் இருந்தது; செல்வம் கொழித்து இருந்தது; மகளிர் காதிலும், மூக்கிலும் பொன் வளையங்கள் தொங்கிக் கொண்டிருந்தன; எங்குப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் பரபரப்பாயும் சுறுசுறுப்பாயும் இருந்தனர்.

சுய உருவில் சென்றால் அவர் நையப்புடைத்து விடுவார்கள். அதனால் அயல் உருவில் தன்னை அலங்கரித்துக் கொண்டு நல்ல பெண்மணியாய்ச் சென்றாள். “லட்சுமி அவள் நாயகனிடமிருந்து சண்டை போட்டுக் கொண்டு இங்கே வந்து விட்டாள்” என்று பேசிக் கொண்டார்கள்.

தேவகியும் உரோகிணியும் தேவ மகள் அவள் உள்ளே செல்வதைப் பார்த்தனர்; அதனால் அவர்கள் பெருமை அடைந்தனர்; பெரிய வீட்டுப் பெண் என்பதனால் அதில் ஒரு பெருமையைக் கண்டனர்; தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை; தோற்றம் அளித்தது அவளுக்கு அந்த ஏற்றம்.

அவள் வருவதைக் கண்ணன் கவனியாதது போலக் கண்களை மூடிக்கொண்டான். இவளைப் பார்ப்பதே பாவம் என்று கருதுவது போல அவன் செய்கை இருந்தது.

நஞ்சுகொண்டு அந்நங்கை தன் முலை முனையைத் தடவிக் கொடுத்தாள்; அவள் நெஞ்சு இத்தகையது என்பதை அப்பூச்சில் காட்டினாள்; குழந்தையைப் பால் பருகத் தன் மார்போடு அணைத்தாள். கண்ணன் கைகளால் முலையைப் பற்றி நரம்பு வைத்தியம் செய்தான். அதனால் வரம்பு மீறிக் கத்தினாள். பாலோடு அவள் உயிரையும் பருகி முடித்தான். பால் பருகியது அவள்பால் தனக்கு ஏற்பட்ட நேசத்தால்; உயிர் பருகியது, தன்பால் அவள் காட்டிய மாயத்தால்; அவள் அலறிய குரல் கேட்டு ஆய்ச்சியர் கூடிவிட்டனர்; பேய்ச்சி முலைப்பால் உண்டு அவளைப் பேசாமல் செய்து விட்டதை அறிந்தனர். சத்தம் இல்லாது சவம் ஆகிவிட்டாள்; அவளை அப்புறப்படுத்தித் தகனமும் செய்தனர்.

அவன் ஒன்றும் தெரியாதவன் போல் அவள் மடியில் கிடந்தது அவர்களுக்கு வியப்பைத் தந்தது. நஞ்சு பூசி வந்ததை அந்த ஊர் வைத்தியர் கண்டு சொல்லினார். கோபியர் வந்து அவனை வாரி எடுத்துக்கொண்டனர். சடங்குகள் செய்து சாந்தி செய்தனர்; தெய்வங்களிடம் அவனைக் காக்கும்படிப் பரவி வேண்டினர்; கோயிலில் பூசையும் வழிபாடும் செய்தனர். வாயில் தேடி வந்தவர்க்குத் தான தருமம் செய்தனர்.

நகரத்தில் இருந்து திரும்பி வீடு வந்த நந்தகோபன் நடந்ததைக் கேட்டு அதிர்ந்தான். ‘வசுதேவன் வாக்கு வான் மறையாயிற்றே” என்று வியந்தான்; ‘உண்மையில் அவர் ஒரு ஞானி’ என்று பட்டம் சூட்டிப் பாராட்டினான்.

குழந்தையைக் கவனிப்பதில் முழு நாட்டம் செலுத்தும்படி யசோதைக்கு எடுத்துக் கூறினான். “அடுப்புக் கிடக்கட்டும் அவனைக் கவனி” என்று திரும்பத் திரும்பச் சொல்வதில் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்; “உண்டானா உறங்கினானா” என்று வினாத்தாள் தந்தான்; “சட்டை போடு; அசட்டையாக இருக்காதே” என்று சொல்லிக் கொண்டே இருந்தான்; “பெற்றால் மட்டும் பிள்ளையாகி விடாது; வளர்ப்பதை ஒட்டித்தான் இருக்கிறது” என்று உரைத்தான்.