வியாசர் சந்திப்பு

அங்கிருந்து அவன் அத்தினாபுரம் ஏகினான்; வழியில் ஒருகாட்டில் வேதம் வகுத்த வியாச முனிவரைச் சந்தித்தான்; அவர் திருவடிகளைத் தொழுது தன் துயரத்தை விளம்பினான். தான் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை என்று அலுத்துக் கூறினான்; மானம் இழந்த நிலையில் வாழாமை இனிது எனச் சொன்னான்.

வியாசர் அவனுக்குச் சில உண்மைகளைக் கூறி அறுதல் அளித்தார். “அருச்சுனா! நீ வெட்கப்படாதே; விசனமும் கொள்ளாதே; சகல பூதங்களின் காலகதி இப்படிப்பட்டது தான். நேற்று இருந்தது இன்று மாறும்; உயிர்களும் உலகப் பொருள்களும் காலத்தினால் படைக்கப்படுகின்றன. காலமே அவற்றை அழித்து விடுகின்றது. கொடி கட்டிப் பறந்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாய் மறைந்து விடுவது படைப்பின் இயற்கை. காலத்தின் ஆதீனத்தில்தான் இந்த உலக இயக்கமே அமைந்து இருக்கிறது.”

பூமியில் அநீதிகள் தோன்றும்போது நீதிமான்கள் தோன்றி அவற்றை நீக்கப் பாடுபடுகிறார்கள்; புரட்சிகள் வெடிக்கின்றன; யுகங்கள் மாறுகின்றன. தேவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். சர்வேசுவரனான தேவன் கண்ணனாக அவதரித்தான்; தீயவர்களை ஒழித்தான்; மாபெரும் மன்னர்களை எல்லாம் மடிய வைத்தான். அவனுடைய அவதாரகாரியம் முடிவு அடைந்து விட்டது. அந்த மாபெருந் தலைவன் இனி பூமியில் நிறைவேற்றத் தக்க செயல்கள் காரியங்கள் யாதும் இல்லை. அதனால் இறைவன் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினான்.”

‘படைக்கும் காலத்தில் படைத்தும், காக்கும் காலத்தில் காத்தும் வந்த இறைவன், அழிக்கும் காலத்தில் அதையும் செய்து முடித்தான். நீ இப்பொழுது அவமானப் பட்டு விட்டதாகக் கருதாதே! புகழோடு நீ வாழ்ந்த காலம் ஒரு காலம்; வீடுமன், துரோணன், கன்னன் இத்தகைய மாவீரர்களை நீ ஒரு காலத்தில் சங்கரித்தாய். அப்பொழுது அவர்கள் தோற்றவர் ஆயினர்; அப்பொழுது ஏற்றம் உனக்குக் கிடைத்தது. இப்பொழுது சாமானிய நிலையில் உள்ளவர்கள் வெறும் தடி கொண்டும், தென்னை ஓடுகள் கொண்டும் உன்னை மருட்டிச் செயலற்றவன் ஆக்கினர்; அன்று நீ அடைந்த வெற்றிக்குத் துணை கண்ணன்; இவர்கள் இன்று அடைந்த வெற்றிக்கும் காரணம் அதே இறையருள்தான். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழியை நினைத்துப்பார். இனி நீ பழைய அருச்சுனன் அல்ல. சாதாரணமானவன் ஆகிவிட்டாய்; காலம் உனக்குக் கற்றுத் தந்த படிப்பினை இது; இதுதான் ஞாலத்தின் போக்கு என்பதை அறிந்து தோல்வி கண்டு துவளாமல் இரு” என்றார்.

“துவாரகைப் பெண்டிர் இந்த அவல நிலை அடைந்த தற்குக் காரணம் என்ன?” என்று வினாவினான்.

“முன் ஒரு காலத்தில் அஷ்ட வக்கிரர் என்னும் முனிவர் கழுத்து மட்டும் நீரில் முழுகிக் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். அவ்வழியில் அரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய தெய்வமாதர் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அம்முனிவரைக் கண்டு வணங்கித் துதித்தனர்.”

“அவர் மனம் உவந்து “உங்களுக்கு வேண்டிய வரம் யாது?” என்று கேட்டார்.”

“நாங்கள் புருஷோத்தமனான கண்ணனைக் கணவனாக அடைய வேண்டும்” என்று கேட்டனர். “அவ்வாறே ஆகுக” என்று வரம் அளித்தார்.

”அவர் நீரில் இருந்து கரையேறியபோது அவர் கோணலான வடிவம் கண்டு அவர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவரைத் தரக்குறைவாக மதித்து ஏளனமாகச் சிரித்து விட்டனர். அவரை இகழ்ந்தனர்; சிரித்தவரைப் பார்த்துச் சினந்த முனிவர், “நீங்கள் அடுத்த பிறவியின் இறுதியில் திருடர்களின் பிடியில் அகப்பட்டுத் தவிப்பீர்கள்; அவர்கள் அச்சுறுத்துவார்களேயன்றி அவதிக்கு உள்ளாக்க மாட்டார்கள். பின்பு நீங்கள் விரைவில் சுவர்க்கத்தை அடைவீர்” என்று சபித்தார்; அதனால்தான் இந்தத் தேவதைப் பெண்களுக்கு இக்கேடு நேர்ந்தது” என்று விளக்கினார். பின்பு அருச்சுனன் தன் சகோதரர்கள் இருந்த இடத்துக்குச் சென்று தன் பெயரனாகிய பரீட்சித்துக்குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு மற்றைய சகோதரர்களோடு வனத்துக்குச் சென்றான்.

இறுதியில் வனத்தில் வாழ்ந்த பாண்டவர்கள் ஐவரும், பாஞ்சாலியும், ஒவ்வொருவராக மடிந்து சொர்க்கத்தை அடைந்தனர்.

முற்றும்.

★ ★ ★