சிசுபாலன் மறைவு


அடுத்த பகைவன் கண்ணனுக்குச் சிசுபாலனாக அமைந்தான். கண்ணனைப் போல அழகும் வசீகரமும் உடைய அவன் பிறக்கும் போது நான்கு கரங்களோடு பிறந்தான். கடவுள் பிறப்பு என்று யாரும் அவனை அதற்காக வணங்கிப் போற்றவில்லை. அவன் மிகைப்பட்ட கைகள் அவன் தகைமைக்கு ஏற்றவையாய் இல்லை. அவன் தாய்க்கு அதே கவலையாய் இருந்தது.

யார் அவனை மடியில் வைத்துக் கொள்கிறார்களோ, அவன் மிகைப்பட்ட கைகள் அப்பொழுது மறைந்து விடுகின்றனவோ அவர் கையாலேயே அவனுக்கு மரணம் நேரிடும் என்று தெய்வ வாக்குச் சொல்லி இருந்தது. அசரீரி கூறிய அந்தச் சொற்கள் அவன் தாய்க்குக் கேட்டன.

சிசுபாலன் கண்ணனின் அத்தை மகன்; அதனால், அவனைத் தூக்கி எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான். அவன் அதிகமான கைகள் மறைந்து விட்டன. அவள் அன்னை அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்; கண்ணனால் அவனுக்கு மரணம் நேருமே என்பதை அவளால் நம்ப முடியவில்லை, எனினும்,அவன் பிழைகள் நூறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டினாள்.

கண்ணனுக்கு அவன் தாயின் சொற்கள் நினைவுக்கு வந்தன. அதனால்தான் அவனை இதுவரை நேருக்கு நேர் எதிர்க்காமல் தள்ளி வந்தான். ருக்குமணியைக் கடத்திச் சென்றபோது ஒருமுறை அவன் எதிர்த்துப் பின்னடைந்து இருக்கிறான்.

பாண்டவர்கள் நடத்திய இராசசூய யாக வேள்விக்குச் சிசுபாலனும் அழைக்கப்பட்டிருந்தான். கண்ணன், துரியோதனன், வீடுமன், கிருபன், விதுரன், மற்றும் உள்ள பெரியவர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். முதற்பூசை ஏற்பதற்குத் தகுதி யாருக்கு என்ற வினா எழுப்பப்பட்டது. தருமன் கண்ணனையே முதற்பூசை ஏற்குமாறு வேண்டினான். யாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. “அவன்தான் தலைவன்; முதன்மையன்; மதிப்பில் உயர்ந்தவன்” என்று ஒப்புக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது; துரியனும் வாய் திறக்கவில்லை.

சிசுபாலன் எழுந்தான். குருகுலத்துக்கு இடையர் குலத்தவன் தலைவன் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “செங்கோல் ஏந்தும் அரசர்க்கு வெறுங்கோல் ஏந்திப் பசுக்களை மேய்க்கும் இடையனா தலைவன்? கோபியருடன் கோலாகல வாழ்க்கை நடத்திய கோவிந்தனா அரசர்க்குத் தலைவன்? சிறையில் பிறந்தவன் ஒரு குற்றவாளி அல்லவா? அவனுக்கு எப்படி உயர்வு தரலாம்? கோபியரை அவன் மயக்கிவிடலாம்; கோவேந்தரை ஏமாற்ற முடியாது” என்று அவன் பிறப்பையும், குடியையும், ஒழுக்கத்தையும் தொடர்ந்து இழித்துப் பேசினான்.

நூறு பிழை செய்யும்வரை கண்ணன் பொறுமை காட்டினான். இப்படியே அவன் அடுக்கிக் கொண்டு போனால் மற்றவர்கள் எதிர்க்க நேரும்; அரசர்களுக்குள் வீண்மோதல்கள் நிகழும்; கட்சிகள் ஏற்படும்; குழப்பங்கள் நேரும். அதனால், தானே எழுந்து அவனை இழுத்து வந்து தன் சக்கரத்தை ஏவி அவன் சிரசைத் தனிப்படுத்தினான். கண்ணன் முன் பச்சைக் குழந்தையாய் அவன் நடந்து கொண்டான். சாது மருண்டால் காடு கொள்ளாது என்ற நிலைமை அங்கு உருவாயிற்று; கண்ணனுக்கு எதிர்ப்பாய் யாரும் தொடர்ந்து முணுமுணுக்கவும் இல்லை. கண்ணன் முதற்பூசை பெற வேள்வியும் இனிது நடைபெற்றது.

அந்த வேள்வியில் அவர்கள் கட்டிய மண்டபம் கண்டு அரசர் மகிழ்ந்தனர். துரியன் கல்லுக்கும், நீருக்கும் வேறுபாடு அறியாமல் தடுக்கி விழுந்தான். அதனைக் கண்டு திரெளபதி நகைத்தாள். அஃது அவனுக்குப் பகையை உண்டாக்கியது. அவர்கள் செல்வத்தையும், செழிப்பையும் கண்டு பொறாமை கொண்டான்.

அவர்களைத் தம் அரண்மனைக்கு அழைத்துச் சூதாட வைத்து அவர்களின் நாட்டைக் கவர்ந்து கொண்டு காட்டில் வாழச் செய்தான். தொடர்ந்து அவர்களுக்குத் துன்பம் விளைவித்தான்.

அருச்சுனன் சுபத்திரை திருமணம்


இராச சூய யாக வேள்வி நடத்துதற்குமுன் அருச்சுனன் தீர்த்த யாத்திரை செல்ல நேரிட்டது. தருமனும் திரௌபதியும் சோலையில் இனிது அமர்ந்து உரையாடச் சென்றிருந்தபோது வில்லும் அம்பும் எடுப்பதற்காக அருச்சுனன் வீட்டுக்குள் நுழைந்தான்; இருவரும் தனிமையில் இருந்தபோது அவன் அவர்களைப் பார்த்ததால் அந்தப் பாவம் தீர அவன் தீர்த்த யாத்திரை சென்றான்.

அப்பொழுது அவன் தலயாத்திரையில் தெய்வக் கோயில்களை வணங்கியதோடு நங்கையர் சிலரைக் காதலித்து மணம் செய்துகொண்டான். உலூபி என்ற நாகக் கன்னியையும், மதுரையில் பாண்டியன் மகள் சித்திராங் கதையையும் மணந்து பின் வீடு திரும்புகையில் சுபத்திரையை மணந்து கொண்டான்.

சுபத்திரை தேவகியின் மகள்; கண்ணனின் தங்கை; அவள் இருந்த துவாரகைக்குத் துறவி கோலத்தில் யோகீசுவரன் போல் அருச்சுனன் வந்தான்.

மடத்தை இடமாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். ஒரு சக்தி வாய்ந்த யோகி என்று பலரும் வந்து வணங்கிச் சென்றனர். விபூதியும் குங்குமமும் பெற்றுச் சென்றனர். பலராமனும் அவனை ஒரு சந்தியாசி என்று நம்பி அவனை வழிபட்டுக் குங்குமமும் விபூதியும் வாங்கிச் சென்றான்.

கண்ணன், வந்தவன் யார் என்பதை அறிந்தவன். அதனால், தன் தங்கையிடம் “இங்கே இவரைக் கவனித்துக் கொள்ளவும்; இவருக்கு வேலை செய்யவும்” என்று விட்டு வைத்தான்.

அர்ச்சுனனை யார் என்று இவள் அறிந்து கொண்டாள். இருவரும் காதலை வளர்த்துக் கொண்டனர். பலராமன் சிவனை வழிபட வெளியே சென்றிருந்த சமயம் சுபத்திரையே தேர் ஓட்டிக்கொண்டு அர்ச்சுனனோடு உடன் போக்கு மேற்கொண்டாள்.

பலராமன் எதிர்க்க வந்தான். கண்ணன் கேட்டுக் கொண்டான்; அவள் அவனைக் காதலித்து மணம் செய்து கொள்கிறாள் என்று விளக்கம் சொன்னான். கண்ணன் தங்கைக்குத் தன் வாழ்த்தினையும், சீர்களையும் அனுப்பினான்.

துவாரகையில் கண்ணனுக்கு எதிர்ப்புகள்


பாண்டவர்களுக்குத் தூது செல்லக் கண்ணன் அத்தினாபுரம் சென்றிருந்தான். இதுதான் சமயம் என்று சிசு பாலனின் நண்பனான சாலுவன் சிவனை நோக்கித் தவம் செய்து வரங்கள் பெற்று வலிமை பெற்றவனாய் விளங்கினான். மயன் என்னும் அசுரத் தச்சனைக் கொண்டு போர் விமானம் ஒன்றனைப் படைத்துக் கொண்டான்; அஃது எங்கு இறக்கினாலும் அப்பகுதி நாசமாயிற்று; அதனைத் துணையாய்க் கொண்டு படைகளையும் அனுப்பி மதுரா நகருக்கு நாசம் விளைவித்தான். அவனை எதிர்த்து யாதவ வீரர்களான பிரதியும்னன் சாம்பன் முதலியவர்கள் தம் வலிமை கொண்டு போராடினர்;

சிசுபாலனைக் கொன்றதால் அவன் நண்பனான சாலுவன் வந்து முற்றுகை இடுவான் என்று சந்தேகப்பட்டுக் கண்ணன் துவாரகைக்கு விரைந்தான். பலராமனும் உடன் வந்தான். பலராமனைத் துவாரகையைக் காக்கும்படி அனுப்பிவிட்டுச் சாலுவனைத் தேடிக் கண்ணன் சென்ற போது அவனை வளைத்துக் கொண்டான். இருவருக்கும் விற்போர் நிகழ்ந்தது. அவன் ஒருசூழ்ச்சி செய்தான். இராவணன் மாயாசனகனைக் கொண்டு சீதையை மருட்டியது போலக் கண்ணனின் தந்தையாகிய வசுதேவரின் தோற்றத்தை ஒருவன் முன் நிறுத்திக் காட்டி அவனை வெட்டச் செய்தான். கண்ணன் சற்று அயர்ந்து விட்டான்; என்றாலும், இது மாயையாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாய் இருந்தான். பலராமன் அங்கு இருக்கும் வரை இவன் ஆள்கள் உள்நுழைய முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை இருந்தது. பின் தொடர்ந்த போரில் தன் சக்கராயுதம் கொண்டு அவன் சிரத்தைக் கொய்து கொன்றான்.

அவன் இறப்பினைப் பழிதீர்க்க அவன் நண்பனான தந்தவக்கிரன் என்பவன் படைகள் எதுவும் இன்றித் தனித்துப் போர் செய்ய வந்தான்; கையில் கதாயுதம் வைத்திருந்தான். கண்ணனும் தன் கையில் இருந்த கவுமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தால் அவன் கதையை முடித்தான். அவனைத் தொடர்ந்து அவனுடைய தம்பி விதூரதன் வாள்கொண்டு வர, அவனைத் தன் சுதர்சனம் என்னும் சக்கரத்தால் சிரத்தை அறுத்து முடித்தான்.

குசேலரின் நட்பும் பெட்பும்


துவாரகையில் உள்நாட்டுப் பூசல்களும் எதிரிகளும் தாக்குதல்களும் இன்றி அமைதியாக இருந்த நாள்களில் கண்ணனைத் தேடிக்கொண்டு அவன் ஒருசாலை மாணவராய் இருந்த குசேலர் வருகை தந்தார். சுதாமன் என்ற மற்றொரு பெயர் அவருக்கு உண்டு. பொருள்மீது வேட்கையின்றி இறைவன் அருள்மீது நாட்டம் கொண்டு வாழ்ந்தார். அவருக்கு நிறைய பிள்ளைகள்; மனைவி பொறுமை மிக்கவள்; வறுமையால் வாடினர். இக் குழந்தைகளின் பசிக் கொடுமை தாங்கமாட்டாமல் அவர் மனைவியார் அவரை அவர் நண்பனான கண்ணன் செல்வ நிலையில் இருப்பதால், அவனைப் பார்த்து ஏதாவது கேட்டுப் பெற்றுவரும்படி தூண்டினாள்.

நண்பனைப் பொருள் கேட்பது இழிவு என்பதால் முதலில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும், அவனைப் பார்க்கும் ஒருவாய்ப்புக் கிடைப்பதால் பின்னர் ஒப்புக்கொண்டார்.

வெறுங்கையோடு போவது சரியன்று என்பதால் தம் மனைவி இடித்துத் தந்த அவல் அரிசியை ஒருசிறு துணியில் கட்டிக்கொண்டு போனார். இந்த ஏழை எளிய பிராமண முதியவரைக் கண்டு இரக்கம் காரணமாய் அவரை உள்ளே அனுமதித்தனர். கண்ணன் பக்கத்தில் ருக்குமணி இருந்தாள். கண்ணன் முகமலர்ச்சியைக் கண்டு வியந்தாள். பழைய நட்புபற்றியும் ஆசிரியரோடு அவர்கள் பழகிய செய்திகளைப் பற்றியும் பேசினர்.

தனக்குத் தின்ன என்ன கொண்டு வந்திருக்கிறார். என்று பார்த்தான். அவர் ‘தான் கொண்டு வந்தது ஒன்றும் இல்லை’ என்று கூறினார்; ‘அவல் அரிசி’ என்று சொல்வதற்கு வெட்கப்பட்டார்.

“அந்த முடிச்சு என்ன?” என்றான்.

”அவல்!”

ஒருபிடி வாங்கி வாயில் போட்டுக் கொண்டான்.

“இன்னொரு பிடி” என்றான். அவன் கையை உருக்குமணி தடுத்துப் பிடித்துக் கொண்டாள்.

“வேண்டாம் இது போதும்; உடம்புக்கு ஆகாது” என்றாள்.

அந்த ஒருபிடி அவலுக்கே அவன் வறுமை நீங்கி விட்டது; குவிந்த செல்வம் அடுத்த தலைமுறைக்கும் போதும் என்று கூறும் அளவிற்கு நிறைந்துவிட்டது.

வாய்திறந்து இது வேண்டும் என்று சுதாமன் கேட்கவே இல்லை.

வீடு திரும்பியதும் வறுமை தன் சரித்திரத்தை முடித்துக் கொண்டது. மனைவி பூரித்து விட்டாள்; அடையாளமே தெரியவில்லை; சிறுவர் எல்லாரும் புதிய உடைகள் அணிந்து கொண்டு மகிழ்ச்சியோடு காணப் பட்டனர். எல்லாம் கண்ணன் அருள் என அறிந்து அவன் நினைவில் வாழ்ந்தனர்.