பலராமன் சாம்பனை மீட்டது


அத்தினாபுரியில் துரியனின் மகள் இலட்சுமணை பேரழகும் நற்பண்பும் நிறைந்தவளாய் இருந்தாள்; அவளுக்குத் திருமணம் நிகழ்த்த வேண்டிச் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தனர். பல தேசத்து அரசர்களும் இளைஞர்களும் வந்திருந்தனர்.

சம்பவதியின் மகனான சாம்பன் மிகவும் துடுக்கத் தனம் மிக்கவன்; தாய் வளர்ப்புச் செல்வ மகன்: மிகவும் செல்லம் கொடுத்து அவனை அவன் போக்கிலேயே வளர்த்துவிட்டாள். அவன் எதையும் தன் விருப்பப்படி செய்து வருவான். சுயம்வரம் என்ற செய்தி கேட்டான். முறைப்படி அவள் விருப்பத்துக்கு உரியவனாகிக் கழுத்தை நீட்ட வேண்டியவன்; ஆத்திரத்தில் இந்தப் புறச்சடங்கு களையும், கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் அவளுடைய விருப்பத்தையும் எதிர்பாராமல் அவளை வலிய இழுத்துத் தேர்மேல் ஏற்றிக் கொண்டு துவாரகை நோக்கிச் சென்றான். கன்னனும், துரியனும், வீடுமரும், துரோணரும் அவனை எதிர்த்துத் தடுத்து யுத்தம் செய்தனர்,

அவன் தனி ஒருவனாய் இருந்ததால் அவர்களை எதிர்த்துக் களைத்து விட்டான். அதனால், அவனைச் சிறை பிடித்துக் காவலில் வைத்தனர். அவனை அவர்கள் கொல்ல வில்லை. கைப்பிடித்தவனுக்கே காரிகை உரியவள் என்ற மரபு அவர்களைத் தடுத்து நிறுத்தியது. வேறு எவனும் அவளை மணக்க முன் வரமாட்டான். ஆனால் அவனைச் சிறையிலிட்டு அவன் செய்த தவற்றை நினைத்து வருந்தும் படி செய்தனர். ஆள்கள் அவனிடம் கொடுமையாய் நடந்து கொண்டனர்.

செய்தியை நாரதர் கொண்டுபோய்த் துவாரகையில் பற்ற வைத்தார். யாதவர்கள் கொதித்து எழுந்தனர்; தம் அரசன் உக்கிரசேனனின் தலைமையில் படை எடுக்கத் திரண்டனர். பலராமன் இதை அறிந்தான். கலியுகம் வந்து கொண்டிருப்பதால் மக்கள் எளிதில் இயந்திரங்களாக மாறிவிடுவதை அறிந்தான். சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடுவதும் பிறகு தம்மை விடுவித்துக் கொள்ள வழிதெரியாமல் வேதனைப் படுவதும் இந்தப் புதுயுகத்தின் போக்காக இருப்பதை அறிந்து, அந்தச் சாயல் இவர்கள்மீது படியக் கூடாது என்று, தானே முன்னின்று பேசி மீட்டு வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டான்; தன்னுடன் சில சாதிப் பெரியவர்களையும் அழைத்துச் சென்றான்; மணம் முடிப்பது என்றால் பிராமணர்கள் தேவைப்படுவர் என்பதால் அவர்களுள் சிலரையும் உடன் அழைத்துச் சென்றான்.

பலராமன் வந்ததும் அவன் தன் ஆசிரியர் என்பதால் துரியன் அவரை மரியாதையுடன் வரவேற்றான்; என்றாலும், தன் மானத்தையும் குல உயர்வையும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை; யது குலத்தவரொடு குருகுலத்தினர் சம்பந்தம் செய்துகொண்டால் அவர்கள் உயர்ந்து விடுவார்கள் என்பதால் எதிர்த்தான்; யது குலத்தினரை இழித்துப் பேசினான்.

பலராமன் மதுபானம் அருந்தி இருந்தான்; இந்தச் சொற்கள் சேர்ந்து வெறி ஏற்றியது. தாம் புதிதாய் அரசு அமைத்து உயர்வு அடைந்ததை அவர்கள் இகழ்ந்து கூறியதை வெறுத்தான். “சுதர்மை என்கிற தேவ சபை இந்திரனால் கண்ணனுக்குத் தரப்பட்டது. அதில் இருந்து உக்கிரசேனன் ஆட்சி செய்கிறான்; இந்தக் குரு குலத்தவருக்கு இந்தச் சிறப்பு ஏது? வழிவழியாகத் தேய்ந்து போன சிம்மாதனத்தில் அமர்வதில் அவர்களுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? எம்முடைய அரச மகளிர் பாரிஜாத மலர்களை அணியும் சிறப்பினைப் பெற்றிருக்கிறார்கள். இந்தச் சிறப்புகள் இவர்களுக்கு ஏது? யாதவர் குருகுலத்தினரை விட எந்த அளவில் தாழ்ந்தவர்கள்?” என்று கூறித் தான் ஒருவனே சாம்பனை மீட்டு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு சென்று மணம் முடிப்பதாய்ப் பெருமுழக்கம் செய்தான்.

“இந்த அத்தினாபுரத்தையே அழித்துவிடுகிறேன்” என்று ஆரவாரித்துக் கொண்டு தன் கலப்பையால் தரையைத் தாக்க அந்த நகரமே அதிர்ந்தது. நகரத்துப் பெருந்தூண் ஒன்றைச் சாய்க்க அந்த நகரமே ஒரு பக்கமாகச் சாயத் தொடங்கியது.

தெய்வ சக்தி நிரம்பிய வலிமை மிக்க பலராமனின் சீற்றத்தின்முன் அவர்களால் நிற்க முடியவில்லை. தாம் தனிமனிதன் ஒருவன் செய்த தவற்றுக்காக ஓர் இனத்தையே தாக்கித் தரக் குறைவாகப் பேசியது தவறு என்பதை உணர்ந்தனர். சாம்பனைக் கண்டிக்க போய் வீண் வம்பில் அகப்பட்டுக் கொண்டோமே என்று வேதனைப்பட்டனர்; தம் வருத்தத்தைத் தெரிவித்து மன்னிக்குமாறு வேண்டினர்.

துரியன் தன்மகள் வாழ்க்கையைப் பாழ்படுத்த விரும்பவில்லை, தொட்டவனே அவளை மணக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால் அவர்களும் சினம் ஆறி மனம் மாறி அடங்கி அழகாக அவர்களுக்கு அனைவரும் முன்னிருந்து மணம் முடித்து பலராமனோடு துவாரகைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணனின் பெயரன் என்பதால் அவளும் மனம் இழைந்து அவனோடு வாழ்க்கைத் துணைவி ஆதற்கு இசைந்தாள். முரடனாக இருந்தாலும் அவன் வீரன் என்பதை இந்த எதிர்ப்பில் கண்டனர். மகாவீரன் என்பதால் அவளை மணக்க அவனுக்குத் தகுதி உண்டு என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். அவளும் தன்னை மணப்பவன் ஒரு மாவீரன் என்பதால் மன நிறைவு கொண்டாள்.

துவிதனின் எதிர்ப்பு


நரகாசுரன் மறைந்ததை எண்ணி, அவன் நண்பர்களில் ஒருவனாகிய துவிதன் என்பவன் பலராம கிருஷ்ணரைப் பழிவாங்குவது என உறுதி கொண்டான். இவன் வானர இனத்தைச் சார்ந்தவன். “தேவர்க்கும் மனிதர்க்கும் அழிவு செய்வேன்” என்று தீர்மானித்துத் தொடர்ந்து தீமைகள் செய்தான். அஞ்ஞான வெறியால் வேள்விகளை அழிப்பதும், சாதுக்களை மிரட்டுவதும், விலங்குகளைக் கொல்வதும், ஊர்களைக் கொளுத்துவதும், மலைகளைக் கடலில் போடுவதும், கடலைக் கலக்குவதும், கரையில் உள்ள மீனவர்களை விரட்டுவதும், பயிர்களை அழிப்பதும் செய்துவந்தான். அதனால், உலகம் தன் கடமைகளை ஒழுங்காகச் செய்ய முடியாமல் போயிற்று.

இவ்வாறு தொடர்ந்து அவன் நடந்து கொண்டிருந்தான். பலராமன் ஒருநாள் ரைவதம் என்கிற பருவதத்தில் ரேவதி தேவியோடும் மேலும் சில தேவிமாரோடும் நந்தவனத்தில் மது அருந்திவிட்டு ஆட்டமும் பாட்டுமாய்க் களித்திருக்கும் வேளையில் அவனிடம் சென்று தன் குறும்புகளைக் காட்டினான். அவனை நோக்கிப் பல்லிளித்து எக்களித்தான்; அவன் தேவிமாரிடத்தும் நகைத்தும் குதித்தும் தொல்லைகள் தந்தான்; பலராமன் வைத்திருந்த ஆயுதங்கள் ஆகிய கலப்பையையும் உலக்கையையும் எடுத்துக் கொண்டு அவனை நையாண்டி செய்தான். அவர்கள் வைத்திருந்த பண்டம் பாத்திரங்களைக் கவிழ்த்தும் எறிந்தும் எரிச்சலை ஊட்டினான்.பலராமன் அவனை வெருட்டிப் பார்த்தான். மிரட்டிப் பார்த்தான்; உலக்கையைக் கையில் எடுத்த போது மலைக்கல்லை எடுத்து அவன்மீது வீசினான். அதை உலக்கையால் தடுத்து நொறுக்கித் தூள் ஆக்கினான். அந்த வானரன் உலக்கையை மீறி அவன் மார்பில் ஒரு அறை விட்டான். உடனே அவன் மிகவும் சினந்து தம் கை முஷ்டியினால் அக்குரங்கன் தலையில் அடிக்க, அவன் துடித்து உயிர்நீத்தான்.

சராசந்தன் வதம்


அரக்கு மாளிகையினின்று தப்பிச் சென்று வெளியேறிய பாண்டவர்கள் திரௌபதியை மணந்த போது வெளிப்பட்டனர்; பின்பு நடைபெற்றவை; அக்கினிக் கடவுளிடமிருந்து அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லினைப் பெற்றான்; அதிலிருந்து தப்பித்துச் சென்ற மயன் என்பவனைக் கொண்டு இந்திரப்பிரத்தம் என்னும் நகரை நிர்மாணித்து அங்கே இருந்து அவர்கள் இராச சூயயாகம் நடத்த ஏற்பாடு செய்தனர். அதில் கலந்து கொள்ளக் கண்ணன் இந்திரப்பிரத்த நகர் வந்தான்.

சராசந்தன் இருக்கும்வரை கண்ணனுக்கு எப்பொழுதும் தொல்லைகள் இருந்துகொண்டு வந்தன; பாண்டவர்களும் அமைதியாக வாழ முடியாது; அதனால் அவனைக் கொன்று முடிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அவனைக் கொல்லத் தக்க ஆற்றல் வீமன் ஒருவனிடம்தான் இருந்தது; அதனால், இந்திரப்பிரத்தம் சென்ற பிறகு முதல் வேலையாகச் சராசந்தனைக் கொல்ல முயற்சிகள் எடுத்துக் கொண்டான்.

அவனைச் சந்திப்பது என்றால் பிராமணர்களாய்ச் சென்றால்தான் முடியும் என்று தீர்மானித்தான். மற்றவர்கள் காவல் கடந்து உள்ளே செல்ல இயலாமல் இருந்தது. அதனால், அந்தணர் வடிவு கொண்டு கண்ணனும், வீமனும், (பீமன்) அர்ச்சுனனும் அவன் அவைக்குள் நுழைந்தனர். அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதைச் சராசந்தனால் அறிந்துகொள்ள முடிந்தது; அவர்கள் தோளில் இருந்த தழும்புகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.

“நீவிர் யாவிர்?” என்று கேட்டான். கண்ணன், வீமன், அர்ச்சுனன் என்பதை அவர்கள் அறிவித்தனர்.

“எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டான். உன்னோடு மற்போர் செய்ய” என்றனர். “மற்போர் எதற்காக” என்றான்.

“சேனைகள் மடிவதைத் தடுக்க” என்றான் கண்ணன். களம் குறித்துப் போர் செய்ய உள்ளம் கொண்டான்.

“நீ எனக்கு அஞ்சித் துவாரகைக்கு ஓடி ஒளிந்து கொண்டாய்; அருச்சுனன் இளையவன்; வீமன்தான் எனக்கு நிகராவான்” என்று உரைத்தான்.

களம் அமைத்து மற்போர் தொடங்கினர்; வீமன் களம் கண்ட வீரன்; இடும்பனை இடியெனத் தாக்கியவன்; இசகனைப் பிளந்தவன்; பகனைக் கொன்றவன். இப்பொழுது அவனுக்குக் கிடைத்தது சராசந்தன். இருவரும் வலிமையில் நிகரானவராய் இருந்தனர்.

கதாயுதம் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்; அதுவே வீமனுக்குக் கைவந்த கருவி. காலையில் தொடங்கி மாலைவரை பொருதனர்; சத்தம் வந்ததேயன்றி அவன் சரித்திரத்தை முடிக்க இயலவில்லை; இருபத்து ஏழு நாள்கள் சென்றன. அவனை இரு கூறு படுத்தினாலும் அவை ஒன்று சேர்ந்துவிட்டன.

என்ன செய்வது என்று வீமனுக்கு வழி தெரியவில்லை. கண்ணனைப் பார்த்தான். அவன் ஒரு தருப்பைப்புல்லை எடுத்துச் சரிபாதியாய்க் கிழித்து அத் துண்டுகளை இடம் மாற்றித் தலைகீழ் வைத்துக் காட்டினான். கண்ணன் காட்டிய குறிப்பை அறிந்து வீமன் செயல்பட்டான்.

சராசந்தன் உடலை இருபாதியாகக் கிழித்து அக்கூறுகளை இடம்மாற்றி வைத்தான்; அவை கூடவே இல்லை; அதற்கு முன்னால் அவன் எப்படி அழித்தாலும் உயிர் போகவில்லை. அதோடு சராசந்தன் சரித்திரம் முடிந்தது. இதற்குக் காரணம் யாது?

அவன் தந்தை குழந்தை இல்லாமல் ஒரு முனிவரை அணுக, அவர் ஒருகனியைத் தந்து தனக்கு விருப்பமான மனைவியிடம் தருமாறு கூறினார். அவன் தன் மனைவியர் இருவர்பாலும் நிகரான அன்பு செலுத்தியதால் அவர்களுக்குச் சரிபாதி தந்தான்; அவர்களும் சரிபாதி குழந்தைகளாக இருதனிக் கூறுகளைப் பெற்றனர். அவற்றை மதிலுக்கு வெளியே தூக்கி எறிந்து விட்டனர். பிணந்தின்னும் சரை என்ற அரக்கி அவற்றை எடுத்துப் பார்த்தாள்; இரண்டையும் ஒன்று சேர்த்துப் பார்த்தாள்; அவை ஓட்டிக் கொண்டன. முழுக் குழந்தையாகிக் குரல் கொடுத்து அழுதது. இஃது அரசனின் மகனாய் இருக்க வேண்டும் என்று கருதி அதன்பால் மதிப்பும், மரியாதையும் காட்டினாள்; அரசர் இல்லில் விட்டுவிட்டுச் சென்று விட்டாள். சரையால் அவன் சந்து செய்விக்கப் பட்டதால் சராசந்தன் என்ற பெயர் அவனுக்கு உண்டாகியது.

அதனால்தான் கண்ணன் அவனை இருபிளவாக ஆக்குமாறு குறிப்புக் காட்டினான். தலைகீழாகப் போட்டு விட்டதால் அவன் ஒன்று சேர முடியாமல் போய்விட்டது.