பதினாறாயிரத்து நூறு கன்னிகள்
நரகாசூரனிடமிருந்து கொண்டு வந்த யானைகளையும், குதிரைகளையும், மற்றுமுள்ள விலையுயர்ந்த பொருள் களையும் பலருக்கும் பகிர்ந்து அளித்தான். அவர்களோடு வந்த சேர்ந்த கன்னியர் பதினாறாயிரத்து நூறு பேருக்கும் தனித்தனி மாளிகை தந்தான். ஒவ்வொருவர் விரும்பியபடி அவர்களோடு உறைதற்குத் தனித்தனி உருவங்கள் எடுத்து அவர்களோடு தங்கி அவர்களை மகிழ்வித்தான்.
உஷையின் கனவு
உஷை வாணாசுரனின் மகள் ஆவாள்; அவள் சிவனும் பார்வதியும் இணைந்திருக்கும் இழைவைக் கண்டு தானும் தக்க இளைஞனோடு இணையும் வாழ்வை விழைந்தாள். பார்வதியை நோக்கித் தன் கருத்தை வெளியிட்டாள்.
அவளுடைய பருவலிழைவை அறிந்து அவளைப் பார்த்து “உன் விருப்பம் நிறைவேறும். வைகாசி மாதம் சுக்கில பக்ஷத் துவாதசியில் கனவில் எவன் உன்னோடு கலந்து மகிழ்வானோ அவனே உனக்குக் கணவன் ஆவான்” என்று பார்வதி தேவி கூறி அருளினாள்.
அவ்வாறே அவள் அந்த நாளில் தன் கனவில் ஒரு இளைஞனோடு காதற்கலவி அடைந்தாள். அக்கனவினைக் கண்டது முதல் அதே நினைவில் வாழ்ந்து கொண்டிருந் தாள். நிஜ வாழ்வில் ஏற்பட்ட அனுபவமாகவே அவளுக்கு இருந்தது. அவனை எப்படிக் காண்போம்? எப்பொழுது காண்போம்? என்ற அதே ஏக்கத்தில் இளைத்துக் கொண்டே வந்தாள்.
சித்திரலேகை என்ற தோழி அவள் உறக்கத்திலும் நினைவிலும் யாரையோ நினைத்துக்கொண்டு அவதிப்படுகிறாள் என்பதை அறிந்து அவளை விசாரித்தாள். அவள் பார்வதி தேவி தனக்கு உரைத்ததையும் தன் கனவினையும் சொல்லி, அவனை எப்படி அடைவது? எப்பொழுது அடைவது? என்று கேட்டு, வழி யாது? என்ன? என்று அவளைத் துருவினாள்.
அநிருத்தனை அவள் சுட்டிக் காட்டினாள்.
அவன் கண்ணனின் பெயரன்; பிரத்தியும்னன் மகன் என்பதைத் தெரிவித்து அவனைத் தேடிக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றாள்.
பிறகு சித்திரலேகை தன்னுடைய மோக வித்தையின் மகிமையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைக் கட்டிலோடு கடத்திக்கொண்டு வந்து உஷையின் படுக்கையில் கிடத்தினாள்.
வாணாசூரனோடு போர்
அவள் தான் விரும்பியவகையில் எல்லாம் அவனோடு இன்பம் துய்த்தாள்; நாள்கள் சில சென்றன. காவலர், அவர்கள் கள்ள உறவினை அறிந்து நாட்டின் தலைவனாகிய வாணாசூரனிடம் தெரிவித்தனர். அவள் தந்தையால் அந்நியன் ஒருவன் அந்தப்புரத்தில் நுழைந்து கன்னியுடன் காதல் செய்வதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனைக் கட்டிப்பிடித்து வர ஆள்களை ஏவினான்.
அநிருத்தன் அங்கிருந்த உருண்டையான கட்டை ஒன்றனை எடுத்துக்கொண்டு வந்த வீரர்களைத் தாக்கினான்; வாணாசூரனால் இவன்முன் நிற்க இயலவில்லை. பின்பு தன் மாயவித்தையால் அவனைக் கட்டு வித்துச் சிறையில் இட்டான்.
அநிருத்தன் இருக்கும் இடம் தெரியாமல் கண்ணனும், மற்றவர்களும் கவலை அடைந்தனர். மாதங்கள் நான்கு கடந்துவிட்டன. நாரதர் வந்து நடந்த கதையைச் சொல்லி, அவன் வாணாசூரனால் சிறைப் பட்டதை விவரித்தார்.
துவாரகையிலிருந்து படைகளும், கண்ணனும். பலராமனும், பிரத்தியும்னனும், மற்றுமுள்ள வீரர்களும், வாணாசூரனின் நகரமான சோணிதபுரத்தை முற்றுகை யிட்டனர். சிவன் தந்த வரங்களும் அவன் பாதுகாப்பும் வாணாசூரனுக்குப் புகலிடம் தந்தன; எனினும், கண்ணன் முன் சிவனும் அவன் கணத்தவரும் நின்று தாக்குதலை மெல்ல நெகிழ்த்துக் கொண்டனர். சிவனின் வேண்டு கோளின்படி அவன் நான்கு கரங்களை மட்டும் விட்டு விட்டுக் கண்ணன் அவனை உயிரோடு தப்ப இசைவு தந்தான்.
அவனுக்கு ஆயிரம் தோள்கள் இருந்தன. அதனால், அவன் ஆற்றல் மிக்கவனாய் விளங்கினான். மேலும் சிவன் அவனுக்கு எப்பொழுதும் அரணாய் இருந்து காப்பதாயும் உறுதி தந்திருந்தான். அவன் சிவபக்தனாய் இருந்ததால் இந்தப் பாதுகாப்பு அவனுக்குக் கிடைத்தது. அவன் விட்ட அம்புகளை எல்லாம் கண்ணன் மாற்று அம்புகளால் அடக்கி ஒழித்தான். இனி வேறு வழியின்றித் தன் கையில் உள்ள சக்கரத்தை ஏவத் துணிந்தபோது சிவன் கண்ணன் முன் வந்து, அவனுக்காகப் பரிந்து பேசினார்; அவனுக்குத் தான் அபயம் அளித்ததால் அவன் உயிருக்கு இறுதி தேட வேண்டா என்று கேட்டுக் கொண்டார். அவர் வார்த்தையைக் காக்கும் பொருட்டு அவனைக் கொல்லாமல் விட வேண்டியது ஆயிற்று. அவன் ஆயிரம் தோள்களில் நான்கு தோள்கள் மட்டுமே நிலைத்தன. அவனும் கண்ணனை வணங்கித் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான்.
கருடன் முன் வாணன் ஏவிய நாக அத்திரங்கள் நிற்க முடியாமல் தாமாய் அவிழ்ந்து அநிருத்தனை விட்டு நீங்கின; அநிருத்தன் விடுவிக்கப்பட்டான். கண்ணன் அநிருத்தனையும் உஷையையும் துவாரகைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தான்.
காசி தகனம்
கண்ணனுக்குப் போட்டியாக ஒரு மன்னன் தன்னை “வாசுதேவன்” என்று சொல்லித் திரிந்து கொண்டிருந்தான். அவன் பவுண்டரக தேசத்து அரசன் ; அதனால் அவன் ‘பவுண்டரக வாசுதேவன்’ என்று அழைக்கப்பட்டான். அவன் பெயருக்கு ஏற்ப அவன் உருவமும் கண்ணனை ஒத்திருந்தது. அதனால், அவன் நண்பர்கள்’ “நீ தான் கண்ணனாகிய வாசுதேவன். மற்றவர்கள் எல்லாரும் போலிகள்” என்று பேசி அவனைத் தூண்டிவிட்டனர். அவனும் அப் புகழ்ச்சிக்கு மயங்கி நிமிர்ந்து நடக்கத் தொடங்கினான்; கண்ணனைப் போலவே சங்கு, சக்கரம், மணிமுடி முதலியவை அணிந்துகொண்டு தன்னைக் கண்ணன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தான்.
தன் தூதுவன் ஒருவனை அழைத்து “நீ அங்குப் போய் ஆயர் மகனிடம் சொல்; நீ அல்ல வாசுதேவன்; அங்கே வாசுதேவன் இருக்கிறான்; உன் சங்கு சக்கரத்தை நீக்கி விடு; அதை அவனிடம் ஒப்புவித்துவிடு என்று சொல்” என்றான். தன்னோடு போர்செய்து வென்றபின் அவற்றைத் தரித்துக் கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினான்.
கண்ணன், அந்த அறைகூவலைக் கேட்டு அவனைக் கணத்தில் சந்தித்தான்; “சக்கரம் தானே உனக்கு வேண்டும்; ஏற்றுக் கொள்” என்று சொல்லி அதனை ஏவினான். அதனைக் கையால் தடுக்கச் சென்றவன் தடுக்கத் தெரியாமல் விட்டு விட்டான்; கழுத்துக்கு நேரே வந்தமையால் அவன் சிரத்தைத் துண்டித்துவிட்டது. அவன் வீண் ஆணவத்தாலும் தற்பெருமையாலும் அழிந்தான்.
அவனுக்குத் துணைவனாய் இருந்த காசிராஜன் கண்ணனை எதிர்த்தான். அவன் தலையை அரிந்து அது காசியில் விழச் செய்து, கண்ணன் துவாரகைக்குத் திரும்பி வந்தான். அத் தலையைக் கண்டு இது துவாரகைக் கண்ணன் செயல் என்று அறிந்து அவன் மகன், சிவனை வேண்டி அவர் சொன்ன அறிவுரையின்படி யாகம் ஒன்று இயற்றி, ஒரு பூதத்தைத் தோற்றுவித்தாள்; அதை ஏவிவிட்டுக் கண்ணனை அழித்துவிடும்படி கூறினான். அது வேகமாகத் துவாரகைச் சென்று கண்ணனை அணுகியது. கண்ணன் அப்பொழுது தாயம் ஆடிப் பொழுது போக்கிக் கொண்டு இருந்தான்.
தன்னிடமிருந்த சக்கரத்தை அனுப்பிக் கண்ணன் அதனை அழிக்குமாறு கட்டளையிட்டான். அது அந்தப் பூதத்தைத் துரத்திச் சென்றது. பூதம் புறப்பட்ட இடத்திற்கே சென்று ஏவியவனையே கொன்றுவிட்டது.
காசி நகரத்தையும், அந்தப் பூதத்திற்குத் துணையாய் வந்த கூட்டத்தையும், அந்தப் பூதத்தையும் அந்தச் சக்கரம் எரித்துச் சாம்பலாக்கியது.