நரகாசூர வதம்


இந்திரன் துவாரகைக்கு வந்து கண்ணனை வணங்கிக் கண்ணன் இதுவரை ஒழித்த அசுரர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களோடு ஒத்த கொடுமை உடையவன் ஒருவன் இருக்கிறான். அவன் மற்றவர்களைவிடத் தேவர்களுக்கு மிகுதியாகத் தொல்லைகள் தருகிறான் என்று விண்ணப்பம் செய்தான்.

பிரக்குசோதிஷம் என்னும் நகரில் பூமாதேவியின் மகனான் நரகாசூரன் என்பவன் இருக்கிறான் என்றும், சகல உயிர்களுக்கும் அவன் ஊறு செய்கின்றான் என்றும், தேவர், கந்தருவர், சித்தர் முதலானவர்களின் கன்னியரை யும், மன்னர்களின் மகளிரான கன்னியரையும் கவர்ந்து கொண்டு தன் மாளிகையில் சிறை வைத்திருக்கிறான் என்றும், எப்பொழுதும் தண்ணீர் தரும் இயல்பினை உடைய வருணனின் குடையையும், மந்திர பருவதத்தின் சிகரமான ரத்தின பர்வதத்தையும் கொண்டு போய்விட்டான் என்றும், தன் தாயான அதிதியின் அமுத கிரணங்கள் ஒளிவிடும் குண்டலங்களையும் கவர்ந்து சென்று விட்டான் என்றும் முறையிட்டான்.

ஆரம்பத்தில் பூமியைப் பாதாளத்தில் இருந்து தூக்கி வந்தபோது வராக அவதாரமாக வந்த திருமால் ஸ்பரிசம் பட்டுப் பூமிதேவி கரு உயிர்த்துப் பெற்ற மகன் நரகாசூரன் ஆவான். அதனால், அவன் திருமாலின் மகன் என்றும் கூறப்படுகிறது.

இந்திரனுக்குத் தக்க விடைதந்து அனுப்பிவிட்டுக் கருடனைக் கண்ணன் அழைப்பித்து அதன் மீது அமர்ந்து கொண்டு நரகன் இருக்கும் இடம் தேடி அணைந்தான்.

நரகனின் அமைச்சன் முரன் படைகளைத் திரட்டிக் கொண்டு கண்ணனை எதிர்த்தான். கண்ணன் தன் சக்கரத்தை ஏவி அவனையும் அவன் படைகளையும் அழித்தான். அரண்கள் மிகுதியாக இருந்தன. அவற்றை எல்லாம் அழித்து ஒழித்தான். முரனை அழித்ததால் கண்ணனுக்கு முராரி என்ற பெயர் வழங்குகிறது. மேலும் அயக்கீரிவன், பஞ்சசேனன் முதலிய மந்திரிகளையும் அழித்துவிட்டுச் சோதிடபுரத்துக் கோட்டைக்குள் புகுந்தான்.

உள்ளே புகுந்ததும் நரகாசூரனுக்கும் கண்ணனுக்கும் பெரும்போர் உண்டாயிற்று. கையில் இருந்த சக்கராயுதத்தில் அவன் சிரசைக் கொய்தான். அவனுடைய தாய் ஆகிய பூமாதேவி கண்ணனை வந்து வணங்கினாள். இந்திரனின் தாய் அதிதியின் குண்டலங்களையும் கையில் எடுத்துக்கொண்டு அவனிடம் சேர்ப்பித்து, ‘இறைவனே! நீ வராக அவதாரம் எடுத்தபோது என்னை உன் கோட்டில் தாங்கி எடுத்து வந்தாய். அப்போது உன் ஸ்பரிசத்தினால் இந்த மகன் எனக்குப் பிறந்தான். நீயே அவனை எனக்குத் தந்தாய்; நீயே அவன் தீமைகளைக் கண்டு அழித்தாய். அவனுடைய சந்ததியர் நன்மக்கள் ஆவர். அவர்களைக் கொல்லாமல் விட்டுவிடுக. தீமைகளை ஒழித்து நன்மைகளை நிலைநாட்ட என் பொருட்டு நீ அவதரித்தாய். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களும் வல்லவன் நீ; உன்னை வணங்குகிறேன்;” என்று கூறித் தன் பாதுகாப்பில் வைத்து இருந்த இந்திரனின் தாய்க்கு உரிய காதணிகளைச் சேர்ப்பித்தாள்.

கண்ணன் நரகன் சிறைப்படுத்தியிருந்த கன்னியர் பதினாறாயிரத்து நூறுபேரையும் விடுவித்தான். அவர்கள் கண்ணனையே கணவனாக அடையவேண்டும் என்று விரும்பிக் காதலித்தனர். அவர்கள் வேண்டுகோளைப் புறக்கணிக்காமல் அவர்களையும் தன் துணைவியராக ஏற்றுக் கொண்டான். நரகவசம் இருந்து யானைகளையும், குதிரைகளையும் துவாரகையில் சேர்ப்பித்தான். வருணனின் குடையையும், ரத்தினமணி பர்வதத்தையும் கண்டு, அவற்றைக் கருடன் மேல் ஏற்றிக்கொண்டு அவற்றை உரிய இடத்தில் சேர்க்கப் புறப்பட்டான். தன்னோடு சத்தியபாமையும் தேவேந்திர உலகத்திற்கு உடன் வந்தாள்.

பாரிஜாதமலர் கொண்டுவருதல்


கருடன் வருணனின் குடையையும் மணிபர்வதத்தின் சிகரத்தையும் அலகில் பற்றிக்கொண்டு கண்ணனையும் சத்தியபாமையையும் ஏற்றிக்கொண்டு விண்ணவர் உலகம் சேர்ந்தனன். அங்கே கண்ணன் தன் திருச்சங்கை ஊத அது கேட்ட அமரர் வந்து திரண்டனர்; கண்ணனைப் பூசை செய்து வரவேற்றனர்; அவன் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.

பின்பு கண்ணன் இந்திரன் தாய் அதிதியைச் சந்தித்து அவளுக்கு உரிமையான குண்டலங்களை அவளிடம் சேர்ப்பித்து அவளை மகிழச் செய்தான்; அதிதி அவனைப் பலவாறு சொல்லித் துதித்தாள். அதிதி மேலும் சத்தியபாமையை வாழ்த்தினாள். இந்திரனும் தன் தாயின் கட்டளைப்படி கண்ணனைத் தக்கவகையில் வழிபட்டு உபசரித்தான். அவன் மனைவி சசிதேவியும் சத்திய பாமையைப் பலபடி உபசரித்துப் போற்றினாள். எனினும் பாரிஜாத மலரைத் தான் சூட்டிக்கொண்டாளே தவிரச் சத்தியபாமைக்குத் தரவில்லை. அவள் மானுடப்பெண் என்பதனால் அவளுக்கு அதைச் சூடிக்கொள்ளத் தகுதி இல்லை என்று புறக்கணித்தாள்.

கண்ணனோடு தேவலோகத்தைச் சத்தியபாமை சுற்றிப் பார்த்தாள். அங்கே நந்தவனத்தில் பாரிஜாத மலர்கள் பூத்துக் குலுங்கி இருப்பதைப் பார்த்தாள். கண்ணனைப் பார்த்து, “என் ஆருயிர்த் தலைவனே! நீ என்னைப் பார்த்து நீ தான் எனக்குப் பிரியமானவள் என்று கூறி இருக்கிறாய்; ஜாம்பவதி யானாலும், ருக்குமணியானாலும் அவர்கள் உன்னைப்போல் எனக்கு இனியவர்கள் அல்லர் என்று கூறியது உண்மையானால் இந்த மலர்ச்செடி என் மாளிகையின் புழைக்கடைத் தோட்டத்தில் கொண்டு போய் வைக்கப்பட வேண்டும். இப்பூங் கொத்துகளை என் கூந்தலில் வைத்து அலங்கரித்துக் கொண்டு என் சக்களத்திமார் நடுவில் மிகவும் பொலிவோடு காணப்பட வேண்டும்” என்று கூறினாள்.

கண்ணனும் அந்த மலர்ச் செடியைப் பெயர்த்துக் கருடன் மீது வைத்தான். அப்போது அந்த நந்தவனத்துக் காவல்காரன் “இஃது இந்திரனின் மனைவி சசிதேவிக்கு உரியது. அமுதம் கடைந்தபோது கிடைத்த இம் மலர்ச்செடி தேவராசனுக்குத் தரப்பட்டது. இதை அவன் தன் துணைவியான சசிதேவிக்குத் தந்துவிட்டான். இது அவளுக்கே உரியது; இதை எடுத்துச் சென்றால் வீண் பகைமை உண்டாகும்; இந்திரனின் சினத்துக்கு ஆளாவாய்” அதனால் அவனோடு போர் செய்ய நேரிடும்;” என்று உரைத்தான்.

சத்தியபாமை இதைக் கேட்டு வெகுண்டாள். அவனைப் பார்த்து “காவல் காப்பவனே! இது எந்தத் தனி மனிதருக்கும் உரியது அன்று; பாற்கடலில் பிறந்த அமுதம், சந்திரன், காமதேனு முதலியவை எப்படி யாவர்க்கும் பொதுவானதோ அப்படியே இந்தப் பாரிஜாதமும் பொதுவாகுமேயன்றிச் சசிதேவிக்கு மட்டும் உரிமை கொண்டாடுவது பொருந்தாது. ஒரு மானுடப் பெண் எடுத்துக்கொண்டேன் என்று சொல்லிவிடு; இந்திரன் உங்களுக்கு அதிபதியாக இருக்கலாம்; அவளுக்குப் பிராணநாயகனாக இருக்கலாம்” என்று மிடுக்காகக் கூறி அனுப்பினாள்.

அவன் அப்படியே சசிதேவியிடம் எடுத்துச் சொல்ல அவள் இந்திரனின் ஆணவத்தைக் கிளர, அவன் அவசரப்பட்டுப் படைகளுடன் வந்து மோதினான்; மனைவியின் தூண்டுதலால் தன் அறிவை இழந்தான்; யாருடன் மோதுகிறோம் என்பதைப் பற்றிக்கூட எண்ணிப் பார்க்கவில்லை. எவனைச் சரண் அடைந்து நரகனை எதிர்க்கச் சொன்னானோ அவனை எதிர்க்க முற்பட்டான். கண்ணன் தன் தேவபலத்துக்கு அஞ்சி விட்டுக் கொடுத்து விடுவான் என்று எதிர்பார்த்தான். போர் தொடங்கியது. இந்திரனின் படைகள் தோற்று ஓடின ; வச்சிராயுதத்தைக் கண்ணன் மீது வீசினான்; கண்ணன் அதை மிக எளிதில் தன் கைகளில் பற்றிக்கொண்டு அடுத்து அவன் செய்வதை எதிர் நோக்கினான் படை இழந்து தன் கைக் கருவி இழந்து தனித்து நின்றான். கண்ணனின் கையில் இருந்த சக்கராயுதத்தைக் கண்டு அஞ்சிப் புறமுதுகிட்டு ஓடத் தொடங்கினான்.

கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தி, “நில் ஓடாதே; உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்று அபயம் அளித்தான். சத்தியபாமை அவனை நோக்கி “நீ தேவர்களுக்குத் தலைவன்; சசிதேவி மதிக்கும் கணவன்; நீ தோற்று ஓடி எவ்வாறு அவள் முன் தலைகாட்ட முடியும்? பாரிஜாதம் இல்லாமல் திரும்பினால் அவள் உன்னை மதிக்கமாட்டாள். அதற்குப் பிறகு உனக்கு இந்திரப் பதவி எதற்கு? நான் இந்தப் பாரிஜாத மலருக்காக இந்தச் சண்டையை உண்டாக்கவில்லை; மானுடப்பெண் என்று என்னை அவமதித்த உன் மனைவிக்கு ஒரு பாடம் கற்பிக்கவே இந்தச் சண்டையை மூட்டினேன். உன்னைக் கொண்டு அவள் கர்வம் படைத்திருந்தாள்; எனக்கும் என் கணவனால் ஒருபெருமை உண்டு; அவன் எத்தகையவன் என்பதை உனக்கும் அவளுக்கும் காட்டவே இந்தப் பூசலைக் கிளப்பினேன். இந்தப் பாரிஜாதம் இல்லாமலே என் கணவனின் மதிப்பை நான் பெற முடியும்; அவளுக்கு இந்த மலர் இல்லாவிட்டால் பெருமைப்பட முடியாது. அதை வைத்துக்கொண்டு அவள்தான் அழகி என்று கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறாள்; அதை மற்றவர்களும் அடைய முடியும் என்று காட்டவே இதைத் தூண்டினேன். நீயே இந்த மரத்தை எடுத்துக்கொள்; எங்களுக்குத் தேவை இல்லை” என்று திருப்பிக் கொடுத்தாள்.

இந்திரன் தன் செய்கைக்கு வருந்தினான். எனினும், கண்ணனிடம் தான் அடைந்த தோல்விக்கு அவன் வெட்கப்படவில்லை; அதை அவன் பெருமையாகவே கொண்டான். கண்ணனின் பெருமையையும் ஆற்றலையும் உணரத் தேவர்களுக்கு ஒருவாய்ப்பு உண்டாயிற்று என்று அடக்கமாகப் பேசினான்.

கண்ணனும் அவனை அன்புடன் ஆதரித்து, “நீ இந்த அமரர் உலகத்துக்கு அதிபதி: நாங்கள் மனிதர்கள்; நாங்கள் செய்த சிறுபிழையை மன்னிக்க வேண்டும்” என்று ஏளனமாகப் பேசிச் சிரித்துப் பின் அவனை மன்னித்து அவனுக்குரிய பதவியையும் தலைமையையும் மதித்து அவனை ஊக்கப்படுத்தினான்.

“நீ அமரர் தலைவன்; இந்த வச்சிராயுதப்படை எதிரிகளைச் சங்கரிக்க மிகவும் அவசியம்; நீயே வைத்துக் கொள்; உனக்கு உடைமை என்று கொடுத்துவிட்ட பொருளை நாங்கள் எடுத்துக் கொள்வது தவறுதான்; நீயே இந்தப் பாரிஜாத மரத்தை இங்கேயே வைத்துக்கொள்; எமக்குத் தேவை இல்லை” என்று சொல்லித் திருப்பிக் கொடுத்தான்.

இந்திரன் மிகவும் அடக்கமாகக் கண்ணனிடம் பேசினான்; மானுடன் அல்லன் நீ என்பது எனக்குத் தெரியும்; சர்வேசுவரனான நீ தீமையை அழிக்க மானுடனாக அவதரிக்கிறாய். யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கத் தக்கவர்களே. நான் தவறு இழைத்தவன்தான்; பலருக்குப் பயன்பட வேண்டிய பாரிஜாத மரத்தைத் தனி உடைமையாக்கியது தவறுதான்; என்னை மன்னித்தருளுக.

இந்தப் பாரிஜாத மலரை உன் துணைவியர் விரும்பி இருக்கிறார்கள். அவர்கள் விருப்பத்தை நீ நிறைவேற்றித் தருவது உன் கடமை; இந்த மரத்தை துவாரகைக்கு எடுத்துப் போகலாம். இதோடு சுதர்மை என்ற தேவ சபையையும் உனக்காக அனுப்பி வைக்கிறேன். நீ பூமியை விட்டு நீங்கியபின் அவை அங்கிருக்கும் தகுதியை இழந்து விடுகின்றன. அதற்குப் பிறகு அவை இங்கே வந்து சேர்ந்துவிடும், இதை இப்பொழுது எடுத்துச் செல்க” என்று வேண்டிக் கொண்டான்.

அதன்பின் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு கருடன் மீது அந்த மரத்தை வைத்துக்கொண்டு கண்ணன் சத்தியபாமை யோடு வந்து சேர்ந்தான். அந்தப் பாரிஜாத மரம் சத்தியபாமையின் புழைக்கடையில் வைக்கப்பட்டு விட்டது. அது சத்தியபாமைக்குத் தனிப் பெருமையைத் தேடித்தந்தது.