சியாமந்தகமணியின் கதை


துவாரகைக்கு அருகே கடற்கரையைச் சார்ந்த ஒரு சிற்றூரில் சத்திரஜித்து என்பவன் இருந்தான். அவன் கடற்கரையில் இருந்து கொண்டு மிக்க பத்தியோடு சூரியனை வழிபட்டுத் துதித்தான். அவனுடைய புகழ்ச்சிக்குச் சூரியன் மெச்சி அவனுக்கு எதிரே வந்து காட்சி அளித்தான். ஒளிவடிவமாக வந்த அந்தத் தெய்வ மகளை வணங்கினான். ‘என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய்? என்ன வேண்டும்?” என்று அத்தெய்வ மகனாகிய சூரியன் கேட்டான்.

சூரியன் கழுத்தில் அணிந்து கொண்டிருந்த ஒளிமிக்க சியாமந்தகமணியைத் தனக்குத் தரும்படி கேட்டான். அச் சூரியனும் அந்த மணியை அவனிடம் தந்துவிட்டுத் தன் இடத்துக்குச் சென்றான்.

அந்த ஒளிமிக்க மணியைத் தன் மார்பில் பதக்கமாகத் தொங்கவிட்டுக் கொண்டான். கண்ணன் இருக்கும் துவாரகைக்குச் சென்று அவனைச் சந்தித்துத் தன் பெருமையைக் காட்டிக் கொள்ள விரும்பினான்.

அவனைக் கண்ட சாமானியர்கள் ‘சூரியனே அவன்’ எனத் தவறாகக் கருதிக்கொண்டு கண்ணனிடம் சென்று, “தங்களைக் காணச் சூரிய பகவான் வருகிறார்” என்று உரைத்தார்கள்.

வந்தவன் தமக்குப் பழக்கமான சத்திரஜித்து என்பதையும், அந்த மணியைச் சூரியன் அவனுக்குக் கொடுத்தான் என்பதையும் விளக்கினான் கண்ணன்; அவனைப் பார்த்து விட்டுத் திரும்பிச் சென்ற சந்திரஜித்து, அதைத் தன் மாளிகையில் வைத்துக் கொண்டான்.

அந்த மணி நாள் ஒன்றுக்கு எட்டுப்பாரம் அளவு பொன்னை உண்டாக்கித் தந்தது. மேலும், அந்த மணி இருக்கும் சுற்று வட்டாரத்தில் மக்களுக்கு நோய், மழையின்மை, பாம்பு, நெருப்பு முதலியவற்றால் தீமைகள் அணுகவில்லை. அதன் பெருமையைக் கண்ணன் சத்திரஜித்துக்கு உரைத்தான்.

“இது புதையல் போல் உமக்குக் கிடைத்துள்ளது; இது தனி மனிதனுக்கு உரியது அன்று; அரசனிடத்தில் சேர்த்து விடு; அதுதான் குடிமக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையும் தர்மமும் ஆகும்” என்று கண்ணனைச் சந்தித்த போது விளக்கினான். அவனுக்கு அதை அரசனிடம் ஒப்புவிக்க மனம் வரவில்லை; அதைத் தானே வைத்துக் கொள்ள விரும்பினான்.

அதே சமயத்தில் அதைக் கண்ணன் பார்த்துவிட்ட தால் அதைத் தனக்கு என்று கவர்ந்து கொள்வானோ என்ற அச்சம் உண்டாகியது. அதைப் பத்திரப்படுத்துவதற்காக வீட்டுள் கொண்டு போய்ப் பத்திரப்படுத்தினான். அவனுக்குத் தம்பி ஒருவன் இருந்தான். அவன் பெயர் பிரசேனன் என்பது, அவனுக்கு அந்த மணியைத் தன் கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஓர் ஆசை தோன்றியது. அது தக்கவர் அல்லாதவர் போட்டுக் கொண்டால் அஃது அவரைத் துக்கத்தில் ஆழ்த்தி விடும்.

“ஒளிபடைத்த மணியினாய் வாவா” என்று தன்னை வரவேற்பர் என்று கருதித் தன் தமையனுக்குத் தெரியாமல் அதனைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டு பெருமையோடு திரிந்தான். அதற்கு வேண்டிய நற்குணங்கள் அவனிடம் இல்லை. தீயவன் அணிந்து கொண்டதால் அவனை உயர்த்துவதற்கு மாறாய் அது தாழ்த்தியது; அழிவைத் தந்தது.

அவன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றிருந்தான். குதிரைமீது ஏறிக்கொண்டு போனான்; கழுத்தில் அந்த மணியை அணிந்து கொண்டிருந்தான்; அந்த மணி அவனுக்கு உதவவில்லை: அழிவைத் தந்தது; ஒரு சிங்கம் அவனையும் அவன் ஏறிவந்த குதிரையையும் அடித்துக் கொன்று விட்டது.

அந்தச் சிங்கம் அந்த ஒளிவீசிய மணியைத் தன் வாயினால் கவ்விக்கொண்டு தன் குகையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழியில் கரடி வேந்தனாகிய ஜாம்பவான் அச்சிங்கத்தைக் கொன்று அம்மணியைத் தன் குகைக்கு எடுத்துச் சென்றான். தன்மகன் சுகுமாரன் வைத்துக்கொண்டு விளையாட அவனிடம் கொடுத்தான்.

மணியைக் கொண்டு சென்ற தம்பி பிரசேனன் வீடு திரும்பி வரவில்லை. அதனால், கண்ணன்தான் இந்த இரத்தினத்துக்கு ஆசைப்பட்டு அவனைக் கொன்று விட்டான் என்று காதோடு காது வைத்தாற்போல் நகரத்து யாதவர் பேசிக் கொண்டனர். தனக்கு இந்த வீண்பழி நேர்ந்ததை அறிந்த கண்ணன், சகல யாதவ சேனைகளோடு யாதவக் குடிமக்கள் பலரையும் அழைத்துக்கொண்டு குதிரை சென்ற வழியைத் தொடர்ந்து சென்றான். அங்கே சிங்கத்தால் கொல்லப்பட்ட குதிரையும் பிரசேனனும் தரையில் விழுந்து கிடப்பதை அனைவரும் கண்டனர். அதைத் தொடர்ந்து சிங்கத்தின் காலடிகளையும், அதன் நகக்குறி முதலியவைகளையும் பார்த்தவுடன் நகரத்தவர் உண்மை அறிந்தனர்; கண்ணன்மீது கொண்டிருந்த ஐயம் நீங்கியது.

பின்பு அந்தச் சிங்கத்தின் காலடிகள் ஏற்படுத்திய பதிவுகளைக் கொண்டு பின் தொடர்ந்தனர்; அந்த மதிப்பு மிக்க மணியைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து சென்றனர். அங்கே சிறிது தூரத்திலேயே அந்த மிருக அரசனைக் கரடி ஒன்று கொன்றதாகத் தெரிந்தது; அந்தக் கரடி அம்மணியைக் கொண்டு சென்று இருக்கலாம் எனக் கருதிச் சேனைகள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டுத் தான் ஒருவனாகவேத் தனியே தொடர்ந்து சென்றான் கண்ணன்

கரடியின் குகைக்குள் நுழைந்தான். அங்கே அந்தக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த செவிலித்தாய் “சிங்கம் மனிதனைக் கொன்றது; அச்சிங்கத்தை உன் தந்தை கொன்றார்; அது உன்கையில் விளையாடக் கிடைத்தது” என்று அதன் பெருமையைச் சொல்லி “இதை வைத்துக் கொண்டு விளையாடு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்திருந்த கண்ணனைக் கண்ட செவிலித்தாய் அச்சத்தால் கூச்சல் போட்டு ஜாம்பவானை அழைத்தாள்.

“என்ன? ஏது?” என்று விசாரிக்காமல் மணியைக் கவர வந்த கள்வன் என்று தவறாகக் கருதி கண்ணனோடு முட்டிக் கொண்டு போர் செய்தான். மும்முரமாய் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருபத்து எட்டு நாள்கள் இப்போர் தொடர்ந்தது. வெளியில் இருந்த யாதவர் பன்னிரண்டு நாள் ஆகியும் கண்ணன் குகையிலிருந்து வெளியே வாராததால் அவன் மரித்துவிட்டு இருப்பான் என்று ஊருக்குத் திரும்பி வந்துவிட்டனர். அது கேட்டு அவன் உறவினர் எல்லாரும் இறுதி வழிபாடுகளும் செய்துவிட்டனர். இச் செய்தி கேட்டுக் கண்ணன் பின்னால் சிரித்துக்கொண்டான்.

இராமனைத் தவிரத் தன்னை எதிர்க்கும் ஆற்றல் மற்றவர்களுக்கு இருக்க முடியாது என்று சிந்தித்தவனாகிக் கண்ணன் காலடிகளில் விழுந்து, “தாங்கள் யார் என்பதை அறிந்து கொண்டேன். இராமனே கண்ணனாக அவதரித்துள்ளீர்; என்னை மன்னிக்கவேண்டும்” என்று சாம்பவான் கேட்டுக் கொண்டான்.

கண்ணன் தான் அவதரித்து வந்திருப்பது உண்மை தான் என்ற செய்தியைச் சொல்லி இராம அவதாரத்தில் அவன் போர் செய்ததனால் ஏற்பட்ட வடுக்களும், புண்களும், காயங்களும் நீங்கும்படி தன் கைகளால் தடவிக் கொடுத்தான். அவன் கண்ணனோடு மோதிக் கொண்ட புதிய நோயும், பழைய வடுக்களும் எல்லாம் நீங்கிச் சுகம் பெற்றான்.

பின் அக்கரடி அரசன் கண்ணனை வணங்கித் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான். விருந்தினனாக அவனை நன்கு உபசரித்துத் தன் மகள் சாம்பவதியை மணந்து கொள்ளுமாறு வேண்டினான். அவனது பக்திக்கும் வேண்டுதலுக்கும் இசைந்து ஜாம்பவதியை மணந்து கொண்டு, அம் மணியை ஏற்றுக்கொண்டு அதைச் சத்திரஜித்திடம் கொடுத்து ஊர் வந்து சேர்ந்தான்.

இப்படி இருக்க சத்திரஜித்து தன்னால் கண்ணனுக்கு வீண்பழி ஏற்பட்டதே என்பதற்காக மிகவும் வருந்தினான். தன்

மகளை யாருக்குக் கொடுப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அவளை மணக்க மூன்று பேர் விருப்பப் பட்டனர். அக்குருவர்; கிருதவர்மன், சத்தனுவன் ஆகியவர்கள் தமக்கு மணம் முடிக்கக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கண்ணனே மாவீரன் என்பதை அறிந்து அவனுக்குத் தன் மகள் சத்தியபாமையை மணம் செய்து கொடுத்தான். மணியையும் கண்ணனுக்கே சீதனமாகக் கொடுத்தான். கண்ணன் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. மணிக்காகவே அந்தப் பெண்மணியை மணந்தான் என்று உலகம் பேசும்; அந்த நிந்தனைக்கு அவன் ஆளாக விரும்பவில்லை. “நீயே வைத்துக்கொள்: உனக்கு நன்மை உண்டாகட்டும். அதை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்க” என்று சொல்லித் திருப்பித் தந்து விட்டான்.

இம் மூவரில் கிருதவர்மன் சத்தியபாமையைப் பெறாமையால் மனம் வெதும்பினான்; மணியைப் பெறாமையால் மற்றைய இருவருக்கும் சத்திரஜித்துவின் பேரில் கடுங்கோபம் எழுந்தது. மூவரும் ஒருங்கு கூடிப் பேசினர்.

அக்குருவரும், கிருதவர்மனும் மற்றவனைப் பார்த்து இவ்வாறு கூறினர்: “பாமையை நாம் பெற முடியவில்லை. மணியையாவது நீ பெற்றுக் கொள்; நம்மை ஏமாற்றி இழுக்கடித்து மகளை வேற்று ஆளுக்குத் தந்த சத்திரஜித்துவைக் கொன்றுவிடு; அந்த மணியை நீயே எடுத்துக்கொள்; நம் மூவரில் யாராவது ஒருவர் அதை அடைவதுதான் தகுதி” என்று கூறினர்.

“கண்ணன் உன்னை எதிர்க்கத் துணியான்; அப்படி எதிர்த்தால் நாங்கள் துணைக்கு வருகிறோம்; அஞ்ச வேண்டாம்” என்று அவனை ஊக்குவித்தனர். அவர்கள் பேச்சைக்கேட்டுச் சத்தனுவன் சத்திரஜித்து தூங்கிக் கொண்டிருக்கையில் தன் வாளால் அவனைக் கொன்று விட்டு அம் மணியைக் கவர்ந்து கொண்டான்.

வீரனாக வாழ வேண்டிய சத்தனுவன் மணிக்காகக் கொலையையும் செய்தான்; திருடவும் செய்தான். இவன் செய்கை மிகவும் கொடுமை. தந்தையை இழந்த மகள் சத்தியபாமை அத்தினாபுரத்தில் அச்சமயம் பாண்டவர் அரசியல் காரணமாகத் தங்கியிருந்த கண்ணனுக்குச் செய்தி தெவிவித்தாள். கண்ணனும் பலராமனும் விரைந்து துவாரகைக்குத் திரும்பினர்.

கொன்றவனைப் பழிவாங்க வேண்டும் என்பது ஒன்று; விலைமிக்க அம்மணியைத் திரும்பப் பெற வேண்டும் என்பது மற்றொன்று. சத்தியபாமையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும். அவள் மனம் குளிர அவனை முடிக்க வேண்டும். கண்ணனும் பலராமனும் அவன் இருக்கும் இடம் தேடிப் படையொடு சென்றனர்.

இச் செய்தி அறிந்த சத்தனுவன் தன் நண்பர்களிடம் ஓடினான்; அவர்கள் துணையை நாடினான். அவர்கள் இருவரும் கை விரித்துவிட்டனர். கண்ணனை எதிர்க்கும் ஆற்றல் தமக்கு இல்லை என்று தெரிவித்தனர்.

நம்பிக்கைத் துரோகம் இழைத்த போதிலும், அவன் அவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் தம் இயலாமை யையே தெரிவித்தனர்; தனித்து அவர்கள் இருவரையும் எதிர்க்க முடியாது என்று நினைத்து உயிர் தப்ப ஓடினான். போகுமுன் ஒப்பு உயர்வு அற்ற அந்த மாமணியை அக்குருவரிடம் ஒப்புவித்துவிட்டுச் சென்றான்.”நான் உயிரோடு திரும்பி வருவேன்; அப்பொழுது என்னிடம் திருப்பிக் கொடு” என்று சொல்லிவிட்டுக் குதிரையில் ஏறி வேகமாகச் சென்றான். கண்ணனும் பலராமனும் தேர் ஒன்றில் ஏறி அவனைப் பின்தொடர்ந்தனர். வழியில் அவன் ஏறிவந்த குதிரை இறந்து போயிற்று. ஆனால், சத்தனுவன் கால் நடையாக அப்புறம் ஓடத் தலைப்பட்டான். தானும் கால் நடையாய் ஓடிச் சென்று அவனைக்கண்டு பிடித்துக் கொன்றுவிட்டு அந்தச் சியாமந்தகமணியைக் கொண்டு வருவதாகக் கண்ணன் கூறிச்சென்றான். குதிரைகளையும் தேரையும் பலராமனை அங்கிருந்து பார்த்துக் கொள்ளச் சொல்லிட்டுப் போனான்.

தான் ஒருவனாகவே தொடர்ந்து அவனைக் கண்டு தூரத்தில் இருந்தே தன் சக்கரப்படையை ஏவி அவன் கழுத்தைச் சீவினான்; உதிரம் பாயக் கீழே விழுந்தான். அவன் மூடி வைத்திருந்த கைகளைத் திறந்து பார்த்தான். மணி இல்லை. அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதை உணர்ந்தான்.

“அவனைக் கொன்றது வீண். அவன் கையில் மணி இல்லை; அவன்தான் சத்திரஜித்தனைக் கொன்றான் என்று உறுதியாகவும் கூற முடியாது. இருவரும் சேர்ந்து ஒரு பாவ காரியத்தைச் செய்துவிட்டோம்” என்று கூறி வருத்தப்பட்டான். பலராமனுக்குத் தம்பி மீது கோபம்; ஏமாந்து மணியைக் கோட்டைவிட்டு விட்டானே என்று சிறிது வருத்தப்பட்டான். அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. தவறுதலாக மணியை எடுத்துக்கொண்டு தன்னிடத்தில் அஃது இல்லை என்று கூறுகின்றானோ என்ற ஐயமும் சிறிது ஏற்பட்டது. தான் துவாரகைக்குத் திரும்புவதில்லை. என்றும், துவாரகைக்கு வந்து தனக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்றும் கூறி அனுப்பினான். அவன் அங்கேயே மிதிலையில் ஜனகன் விருந்தினனாக மூன்று ஆண்டுகள் தங்கிவிட்டான். அந்தச் சமயத்தில் தான் துரியோதனன் அங்கு வந்து உடன் தங்கி அவனுக்குப் பணிவிடை செய்து கதாயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டான். அதுமுதல் துரியோதனனிடம் பலராமனுக்கு வாஞ்சை உண்டாகியது.

கண்ணன் துவாரகையிலும், பலராமன் மிதிலையிலுமாகத் தங்கி வாழ்ந்து வந்தனர். மூன்று ஆண்டுகள் கழிந்தன. கண்ணனின் சார்பில் உக்கிரசேனனும், சில யாதவர்களும், மிதிலைக்குச் சென்று பலராமனைச் சாந்தப்படுத்தினர். கண்ணனிடத்தில் மணி இல்லை என்று தெரிந்தது. பலராமனும் மனம் மாறிச் சினம் ஆறித் துவாரகைக்குச் சென்றான்.

ஈண்டு இவ்வாறு இருக்கத் துவாரகையில் அக்குருவரிடத்தில் இம்மணி இருந்ததால் நாட்டில் நன்கு மழை பெய்தது. மக்கள் நோயின்றி வாழ்ந்தனர். அவரிடம் செல்வம் கொழித்ததால் தான தருமங்களையும், வேள்விகளையும், தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். இதைக் கவனித்த கண்ணன் மணி அக்குருவரிடத்தில்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.

உடனே ஒரு சபை கூட்டி அக்குருவரை அழைப்பித்தான். “உன்னிடத்தில்தான் மணி உள்ளது. உண்மையை ஒப்புக்கொள்; சத்திய விரதன் நீ; பொய் சொல்ல மாட்டாய்” என்று அவரை உயர்த்தி வைத்துப் பேசினான்.

அவர் மணி தன்னிடத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். தாம் அதைச் சத்திய காரியங்களுக்குப் பயன்படுத்துவதாகவே கூறினார். அதைக் கண்ணனிடம் சேர்ப்பிக்கத் தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

கண்ணன் தனக்கு அம் மணி தேவையில்லை என்றும், தன்னைப் பற்றிய ஐயம் பலராமனுக்குத் தீர வேண்டும் என்றும், அதற்காக அவன் முன்னிலையில் வந்து அதனைக் காண்பித்துப் போக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அக்குருவரிடம் அவனுக்குத் தனிமரியாதை இருந்தது.

பலராமனும் அத் திருச் சபையில் இருந்தான். அனைவரும் கேட்கும்படி மேலும் தொடர்ந்தான்.

“இந்த மணி தங்களைப் போன்ற தூய சிந்தையுடைய வரிடத்தே தான் இருக்கவேண்டும். பிரமசரியாக பரிசுத்தனாக இருக்கவேண்டும். உமக்கே அத் தகுதி இருக்கிறது. நான் இந்த மணியின் பொருட்டு வாழ்க்கைச் சுவைகளை இழக்கத் தயாராயில்லை. என் அண்ணன் பலராமனோ சுரபானம் செய்யக்கூடியவர்; அவரும் தம் இன்பங்களையும், சுகங்களையும் இழக்கச் சம்மதிக்க மாட்டார். சத்தியபாமையோ இதை எப்பொழுதும் தாங்கி இருக்க முடியாது. உம்மைப் போன்ற சத்திய சீலர்கள் இதைத் தாங்கி உலக நன்மைக்காகப் பயன் படுத்துவதே தக்கதாகும்” என்று சொல்லி அவரிடமே சேர்த்து விட்டான். அவரும் அதைப் போற்றிக் காத்து உலக நன்மைக்காகப் பயன்படுத்திப் பிற்காலத்தில் சத்திய பாமையின் வாரிசுகளிடம் சேர்த்துவிடுவது என்று முடிவு செய்தார்.

கண்ணனின் தொடர் திருமணங்கள்


ருக்குமணியே கண்ணன் மனைவியருள் முதன்மையானவள்; தலைமையானவள்; அதனைத் தொடர்ந்து சம்பாவதியையும் சத்தியபாமையையும் மணந்தான்.

பின்பு அத்தினாபுரத்தில் இருந்தபோது அர்ச்சுனனோடு காட்டில் வேட்டையாடச் சென்றான்; அப்போது யமுனை நதிக்கரையில் கண்ட அழகிய பெண் காளிந்தி, கண்ணனையே மணம்செய்து கொள்ளக் காத்திருந்தாள். அர்ச்சுனன் அவளைக் கண்டு பேசினான். அவன் நீர் பருக யமுனைக்குச் சென்றிருந்த நேரத்தில் ஏற்பட்ட சந்திப்பு இது; அவன் மூலமாகக் காளிந்தி தன் காதலைக் கண்ணனுக்குச் சொல்லி அனுப்பினாள்; மணம் நடத்த அவளைத் துவாரகைக்கு அழைத்துச் சென்று அங்கு அவளை மணந்துகொண்டான்.

அடுத்தது அவந்திபுரத்து அரசனின் புதல்வி விந்தையாவாள். அவள் தமையனின் பெயர் விந்தன் என்பது, அவள் கண்ணனுக்கு அத்தை மகள் என்ற உறவு இருந்தது. கண்ணன் சுயம்வரத்துக்குச் சென்று அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு சென்றான். பின் திருமணம் செய்து கொண்டான்.

அடுத்தது கோசல மன்னன் மகள் சத்தியா. அவள் தந்தையின் பெயர் நக்னஜித் என்பது. ஏழு எருதுகளை அடக்கியவனுக்கே அவள் உரியவள் என்று அறிவித்து இருந்தான். கண்ணன் இவ்வேழு எருதுகளையும் அடக்கி அவளை மணந்து கொண்டான்.

அடுத்தது பத்திரி என்ற பெயரை உடைய சுசீலை என்பவள், இவள் கேகய நாட்டு அரசனின் மகள் ஆவாள். ஒழுக்கத்திற் சிறந்தவள் என்ற சிறப்பு இவளுக்கு உண்டு.

அடுத்தது இலக்குமணை என்பவள். அவள் மத்ர தேசத்து அரசனின் மகள் ஆவாள்; அவள் சிரிப்பழகியாக இருந்தாள். அதனால், அவளுக்குச் சாருஹாசனி என்ற பெயரும் வழங்கியது. நப்பின்னை என்ற ஒருத்தியை அவன் எருதுகளை அடக்கி மணந்ததாகத் திருப்பாவை என்னும் பிரபந்த நூல் கூறுகிறது. அது யார் என்று தெரியச் சான்றுகள் கிடைக்கவில்லை. பாகவதம் இதைக் குறிப்பிடவே இல்லை.

இறுதியில் நரகாசூரனை வென்றபோது அவன் சிறைப்படுத்தியிருந்த பதினாறாயிரத்து நூறு கன்னிகளும் இவனையே தன் கணவனாக வரித்துக் கொண்டனர். அவர்களுள் உரோகிணி என்பவள் கண்ணனின் நெருங்கிய விருப்பத்துக்குரியவளாக இருந்தாள். இவை கண்ணனுடைய திருமணக் காதல் விவகாரங்கள் என்று கூறலாம். மேலும் கோகுலத்தில் இராதை என்பவளைக் காதலித்து அவளோடு ஆடி மகிழ்ந்தான்; அவளை மணக்கவே இல்லை.