உருக்குமணி திருமணம்


கண்ணன் புகழ் காற்றில் செல்லும் கீதமாக நாற்றிசையிலும் பரவியது. நகரத்து அரசர்களின் மகளிர் அவன் மீது விருப்புற்று அவனை மணப்பதற்கு விழைந்தனர். அவர்களுள் ஒருத்தி உருக்குமணி ஆவாள்; அவள் மகளிருள் மாமணி; உண்மையைச் சொல்லப் போனால் கண்ணனை மகாவிஷ்ணு என்றால், அவள் தாமரைச் செல்வியாகிய திருமகளே ஆவாள்; இவனை மணப்பதற்காகவே மன்னன் மகளாகத் திருமகள் பிறந்து வளர்ந்தாள் என்று கூறலாம்.

விதர்ப்ப தேசத்தில் குண்டினபுரி என்னும் நகரில் பீஷ்மகன் என்பவன் அரசனாய் இருந்தான். அவனுக்கு உருக்குமி என்ற மகன் ஒருவனும், உருக்குமணி என்ற மகள் ஒருத்தியும் இருந்தனர். உருக்குமிக்குத் தம்பியர் சிலரும் இருந்தனர். அவர்கள் மிகவும் அடக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். உருக்குமியே மூத்தவன்; அவன் இட்டதுதான் சட்டமாய் இருந்தது.

உருக்குமணியின் பேரழகைச் சாதுக்கள் பலர் வந்து கண்ணனுக்கு உரைத்தனர். அவ்வாறே அவளிடம் சென்று இவன் பெருமையை உரைத்தனர். உருக்குமணியின் பெயரைக் கேட்டதும் கண்ணனுக்குப் பழகிய பெயராக இருந்தது; ஒரே கதைக் கருவைப் புதுப்புது வடிவில் காண்பதாய் அவனுக்குத் தெரிந்தது.

பழைய கள்ளே போதை தருவதாகும் என்பது அவனது அனுபவமாய் இருந்தது. வேலை வெட்டி இல்லாமல் வேட்டியை மாற்றி மாற்றிக் கட்டிக்கொண்டு வீட்டில் காலம் தள்ளிய நேரம் அது. சராசந்தனோ அவனைச் சார்ந்த நண்பர்களோ அவன் கதவைத் தட்ட வில்லை. அதனால், அவள் நினைவுகள் அவனைத் தட்டி எழுப்பிக் கொண்டு இருந்தன.

சிசுபாலன் சராசந்தனின் நண்பன்; கண்ணன் அவளை மணக்கக் கூடாது என்பதற்காக அவன் ஒருபடி இறங்கிக் கீழே வந்தான். அவனுக்கு அவள் ஏற்ற மனைவி ஆக முடியாது; அவள் பத்தாம்பசலி என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அவள்மீது கண்ணனின் கை படக் கூடாது என்பதில் கருத்தைச் செலுத்தினான் அவன். தான் ஓர் அரசன் மகன் என்பதில் அகம்பாவம் காட்டினான். அரசர் குடியில் பிறந்த உருக்குமணி இடையன் ஒருவனை மணந்தால் மன்னர் குலமே மாசுபட்டுவிடும் என்பது அவன் போக்காய் இருந்தது.

கண்ணனின் சாதனைகள் பலவும் அவன் லீலைகள் என்று பாரினில் எங்கும் பேசத் தொடங்கினர்; கலைஞர் நாட்டியங்களிலும் நாடகங்களிலும் அவன் சாதனைகளை நடித்துக் காட்டினர்; பாடல்களும் அவன் பெருமையைச் சொல்வனவாய் எழுந்தன.

குழந்தைகளைக் குளிப்பாட்டிச் சீராய் உடை உடுத்தும் போதெல்லாம் கண்ணனைப் போலக் கொண்டையும் பீலியும் போட்டு அழகு பார்த்தனர். கண்ணன் புகழ் பேசும் இயக்கம் ஒன்று எங்கும் பரவிக் கிடந்தது. கோபியர் கண்ணனொடு ஆடும் கோலாகல ஆடல்களை மற்ற இளைஞர்களும் ஆடத் தொடங்கினர். குடிப்பிறப்பில் தாழ்ந்த ஒருவன் உயர்பதவிகள் வகிக்கக் கூடாது. அதற்கு இந்த மண உறவு உதவி செய்யும் என்பதால் தடை செய்ய முற்பட்டான். அதற்காகவே அவன் அவளை மணக்க முன் வந்தான்.

உருக்குமணியின் தந்தை பீஷ்மகனுக்குத் தன் மகளை சிசுபாலனுக்குக் கொடுக்க மனம் இல்லை. அவன் வசதி மிக்கவன்; அரசன் மகன்; பராக்கிரம் உள்ளவன்; தன் நண்பன் என்றெல்லாம் உருக்குமி அவனிடம் சொல்லி வற்புறுத்தினான். குடும்பத்துக்கு மூத்த பிள்ளை; முரடனும் கூட; அவன் பேச்சைத் தள்ள முடியவில்லை. உருக்குமணி அறிவு நிரம்பியவள்; பாரம்பரியம் உடையவள்; அதனால், அவசரப்படவில்லை; காதல் நெறியை மகளிர் பள்ளியில் பயின்றவள்; உடன் போக்கு என்னும் துறையைப்பற்றி அறிந்தவள்; பெற்றோர் எதிர்ப்பு வரும் என்று தெரிந்ததால் மற்று ஒரு வார்த்தையும் பேசாமல் கருதிய காதலனோடு கடிமனை கடந்து செல்லுதல் காதலர் நெறி என்பதனை அறிந்தவள்.

படித்தவள்; அதனால், ஓலை எடுத்து அதனை எழுத்தால் நிரப்பினாள்; அதில் தன் காதல் முத்திரையைப் பதித்தாள்.

அவள் என்ன எழுதினாள் என்று முழுதும் படிக்க வில்லை. “அன்பே!” என்று தொடங்கிய சொல்லையும் “வரவும்” என்ற முடிவையும் மட்டும் படித்தான்; கண்ணன் உடனே சாரதியைக் கூப்பிட்டான்; “பூட்டுக தேர்” என்றான்.”ஓட்டுக விதர்ப்ப நாட்டுக்கு” என்றான்.

மணநாளுக்கு முந்திய தினம்; அவள் துர்க்கை கோயிலுக்கு வழிபடச் செல்வதாகக் கூறி மணக்கோலத்தில் மஞ்சள் பூசி, மலர்மாலை எடுத்துக்கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள்.

மாப்பிள்ளை சிசுபாலன், தன் நண்பர்களோடு அடுத்த நாள் எப்பொழுது வருவான் என்று காத்துக் கிடந்தனர். சராசந்தன் முதலிய நண்பர்களும் மாமன்னர் களும் முன்கூட்டி வந்திருந்தனர். சுயம்வரச் செய்தி வரும் என்று ஏனைய மன்னர்களும் காத்திருந்தனர்; அவள் அதை முன்கூட்டியே செய்து முடித்து விட்டாள் என்ற செய்தி எட்டியது. கண்ணன் தேரில் வந்து அழைத்துச் சென்று விட்டதாகச் செய்தி வந்தது. உடனே சிசுபாலனும், சராசந்தனும், அவன் நண்பர்களும் தத்தம் சேனைகளோடு பின் தொடர்ந்தனர்.

வெள்ளம் வரும் என்று தக்க அணை போட்டிருந்தான் கண்ணன்; பலராமனைச் சேனைகளோடு நிறுத்தி வைத்திருந்தான்; அவன் அவர்களைத் தடுத்து நிறுத்தி முறியடித்துத் திரும்பச் செய்தான். வண்டி புறப்பட்டு விட்டது. இனிப் பிடிக்க முடியாது என்று தயங்கி நின்று விடுவது போல அவர்கள் பின் தங்கி விட்டனர். ஆனால், உருக்குமி, அவள் அண்ணன் விடுவதாய் இல்லை; எப்படியும் எல்லை வரை தொடர்வது; துவாரகை வரையும் செல்வது; தன், தங்கையை அழைத்து வந்துவிடுவது என்று பின் தொடர்ந்தான். அஃது அவனுக்கு மானப் பிரச்சனையாய் இருந்தது.

கடுமையான போர்க்குப் பிறகு கண்ணன் அவனைத் தேர் இழுக்கச் செய்தான்; நிராயுத பாணியாக ஆக்கினான். அவனைக் கொல்ல வேண்டாமென்று அவன் தங்கை கேட்டுக் கொண்டாள். அவன் படைக்கருவிகள் இழந்து விட்டான். அவனைத் தொடுவது வீரத்துக்கு இழுக்கு என்பதைக் கண்ணனும் உணர்ந்தான். உருக்குமியும் செயலிழந்து தலைகுனிந்து நின்றுவிட்டான், இவன் தான் எடுத்த முயற்சியில் அவமானப்பட்டு விட்டான். அதை மற்றவர் அறியவேண்டும் என்பதற்காகத் தலையை மொட்டை அடித்து, மீசையை எடுத்துவிட்டு அவனைத் திருப்பி ஆளைமட்டும் அடையாளம் கெட அனுப்பி வைத்தான்.

துவாரகைக்குச் சென்ற பிறகு நாளும் நேரமும் சோதிடரைக் கொண்டு குறித்து மணவிழா நடத்தினான். இதுவே கண்ணனின் முதல் திருமணமாய் இருந்தது. பலராமன் அழைப்புத் தர அவள் தந்தை பீஷ்மகன் மட்டும் திருமணத்துக்கு வந்திருந்தான். கண்ணனின் பெற்றோர்களும், நந்தரும், யசோதையும் மற்றும் உள்ள சுற்றத்தினரும் வந்திருந்தனர். உக்கிரசேனன் முன்னிலையில் இத் திருமணத்தை நடத்தி முடித்தான்.

உருக்குமணிக்கும் கண்ணனுக்கும் மகன் பிறந்தான். பிரத்தியும்னன் என்று பெயர் வைத்தனர். அவன் கண்ணனை உரித்து வைத்தது போலப் பேரழகையுடையவனாய் இருந்தான்.

சம்பராசுரன் வதம்


பிரத்தியும்னன் பிறந்த ஆறாம் நாளிலேயே சம்பரன் என்னும் அசுரன் “இவன் நம்மைக் கொல்லப் பிறந்தவன்” என்று நினைத்து அவனைக் கரு உயிர்த்த அறையில் இருந்து பிறந்த ஆறாம் நாளே தூக்கிக் கொண்டு போய்விட்டான். அவனைத் தன் கையால் கொல்ல மனம் இன்றி ‘லவண சமுத்திரம்’ என்ற கடற்பகுதியில் எறிந்துவிட்டான். அக்குழந்தையைக் கடலில் இருந்த ஒரு மீன் விழுங்கியது.

கண்ணனின் வீரியத்தினால் பிறந்ததால் அது மீன் வயிற்றில் செரிக்கப்படவில்லை. உயிரோடு இருந்தது. மீனவர் பல மீன்களோடு அந்த மீனையும் பிடித்துச் சென்று அதனைத் தம் அசரனான சம்பரனுக்குக் கொடுத்தனர்.

அந்த அசுரனுக்குப் பெயரளவில் பத்தினியாக மாயாவதி என்ற பேரழகி இருந்தாள். அவள் சமையற்காரருக்கெல்லாம் அதிபதியாக இருந்தாள். சம்பரன் அவளை மணம் செய்துகொண்டு இன்பம் அடைய விரும்பினான். அவள் தன் சாகசத்தால் அவனை மயக்கி வந்தாள். அவனுக்கு இசைபவளைப் போல நடித்து அவனை ஏமாற்றி வந்தாள்.

வீட்டுவேலை செய்துவரும் பணி அவளிடம் தரப் பட்டது. அந்த மீனை அறுக்கும்போது வயிற்றில் அழகான குழந்தை உயிரோடு இருந்தது. அது மன்மதனை நிகர்த்தது. “இந்த அழகிய குழந்தை எப்படி இங்கே இந்த மீன் வயிற்றுக்கு வந்தது?” என்று சிந்தித்துக்கொண்டு இருந்தாள். நாரத முனிவர் வந்து, “இந்தக் குழந்தை கண்ணனின் திருக்குழந்தை; சம்பரன் எடுத்துவந்து கடலில் போட்டு விட்டான்; இவன் சென்ற பிறவியில் மன்மதனாக இருந்தான். நீ அந்தப் பிறவியில் ரதியாக இருந்தாய்; நீ இவனை வளர்த்து உன் காதல் மணாளனாய் ஆக்கிக் கொள்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவனை எடுத்து அவள் அன்புடன் வளர்த்து வந்தாள்; அவன் பேரழகில் தன் மனத்தைப் பறி கொடுத்தாள். அவனுக்குத் தான் கற்றிருந்த மாய வித்தைகளை எல்லாம் கற்றுத் தந்தாள்.

அவனைத் தன் காதலனாகவே பார்த்து வந்தாள். பிரத்தியும்நனுக்கு ஐயம் தோன்றியது; “நீ தாய்போல் என்னை வளர்த்து வந்தாய்; நான் உனக்குச் சேய் ஆவேன்; என்னை நீ காமவேட்கை கொண்டு அணுகுகிறாயே! ஏன்?” என்று வினவினான்.

“நீ கண்ணனின் திருமகன்; ஆறாம் நாளிலேயே உன்னைச் சம்பரன் கொண்டுவந்து கடலில் போட்டு விட்டான்; மீன் ஒன்று உன்னை விழுங்கி விட்டது, அஃது இங்கே சேர்க்கப்பட்டது. நீ சென்ற பிறவியில் மன்மதன். நான் ரதி. இந்தச் செய்தியை நாரதர் சொல்ல நான் தெரிந்து கொண்டேன். நீயும் நானும் காதலர்கள். இந்தச் சம்பரன் வற்புறுத்தி என்னை அடைய இங்கே கொண்டு வந்துவிட்டான்; அவனை மயக்கிக் கொண்டு ஏமாற்றித் தப்பித்து வருகிறேன். நீ அவனை நான் கற்றுத் தந்த மாய வித்தைகளின் துணையால் போர் செய்து கொன்றுவிடு; நாம் இருவரும் இங்கிருந்து வெளியேறி விடலாம்” என்று கூறினாள்.

பிரத்தியும்னன் சம்பரனைப் போருக்கு அழைத்து, அவன் சேனைகளையும், அவனையும் தன் பேராற்றலாலும் மாய வித்தைகளாலும்; கொன்றான். பிறகு அவனை அழைத்துக்கொண்டு துவாரகை வந்து சேர்ந்தான்.

நேரே கண்ணனின் அரண்மனையில் வந்து இறங்கினான். கண்ணனே மற்றோர் வடிவில் வந்ததுபோல் அவன் அங்கிருந்தவர்க்குக் காணப்பட்டான். ருக்குமணி அவனைப் பார்த்ததும் “இவன் தன் மகனாகத்தான் இருக்க வேண்டு மென்று சாயலாலும், தன் உள்ளுணர்வாலும் தெரிந்து கொண்டாள்; அவனை வரவேற்றுச் சேர்த்துக் கொண்டாள். மருமகளையும் வரவேற்று ஏற்றுக் கொண்டாள்; இழந்த தனம் மீண்டும் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று.

உருக்குமியின் வதம்


உருக்குமணிப் பிராட்டிக்குப் பிரத்தியும்னனைத் தொடர்ந்து சாருதேஷ்ணன். சுரேஷ்ணன், சாருதேகன், சுதேணன், சாருகுப்தன், பத்திரசாரு, சாருவித்தன், சுசாரு, சாரு என்னும் ஒன்பது மகன்களும் சாருமதி என்னும் மகளும் உதித்தனர்.

காதலித்துக் கைப்பிடித்த மாயாவதியல்லாமல் தன் மாமன் உருக்குமியின் மகளையும் நேசித்தான்; அவளைச் சுயம் வரத்தில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். அதனால் இந்த இரண்டு குடும்பங்களுக்கும் நல்லுறவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரத்தியும்னன் மகன் அநிருத்தன் என்பவனுக்கு உருக்குமியின் மகன் வயிற்றுப் பெயர்த்தியை மணம் முடித்தனர். அம்மணவிழாவுக்குப் பல தேசத்து மன்னர்களும், நெருங்கிய உறவினரும் போஜகம் என்னும் உருக்குமியின் நகருக்கு வந்திருந்தனர்.

பலராமனும் கண்ணனோடு வந்திருந்தான். உருக்குமியின் நெருங்கிய நண்பனான கலிங்க தேசத்து அரசன் தந்தவக்கிரனும் வந்திருந்தான்.

விழாவிற்கு வந்தவர்கள் விவாகம் முடிந்ததும் ஓய்வு எடுத்துக்கொண்டு கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். கலிங்க அரசனான தந்தவக்கிரன் என்பவன் சும்மா இராமல் உருக்குமியைத் தூண்டிவிட்டான்.

“பலராமனுக்குச் சூது ஆடத் தெரியாது; நீ அவனை எளிதில் வென்று விடலாம்’ என்று ஏளனமாய்ப் பேசினான்.

உருக்குமியும் அவனைச் சூதாடத் தெரியாது என்று கூறினான்; நெஞ்சில் உறுதி இருந்தால் தன்னுடன் தாயம் உருட்டி விளையாடலாம் என்று கூறினான். அவனும் அழைப்பை மானப் பிரச்சினையாய் எடுத்துக் கொண்டான் உருக்குமி பலராமன் இருவரும் தாயப் பலகையை வைத்துக் காயை உருட்டினர்.

முதல் ஆட்டத்தில் பலராமன் பந்தயமாய் வைத்த ஆயிரம் வராகனையும் உருக்குமி வெற்றி கொண்டான். அடுத்து மற்றோர் ஆயிரம் வராகனையும் பலராமன் இழந்தான்; தொடர்ந்து ஆடிய ஆட்டத்திலும் வராகனை அவன் வெற்றி கொண்டான். மும்முறையும் தோற்ற பிறகு அவன் அமைதியாய் இருந்து விட்டான். தோல்வியைக் கம்பீரமாக எடுத்துக் கொண்டான். அவனுக்கு அந்தப் பணம் பெரிதாகப்படவில்லை. அவனை வம்புக்கு இழுத்து அவமானப்பட வைக்க வேண்டும் என்ற நோக்கமே அவர்களுக்குப் பெரிதாய் இருந்தது. ‘கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே” என்பதற்கு ஏற்ப அவன் நடந்து கொண்டான். பலராமன் பந்தயம் வைக்க அஞ்சுவதாய்க் குத்திக் காட்டினான்.

ஒருகோடி வராகன் பந்தயம் என்று சொல்லி ஆட்டத்திற்கு உருக்குமியை அழைத்தான். அவன் ஒன்றும் பேசாமல் ஆட்டத்தில் அமர்ந்தான்; காய் பலராமனுக்குப் பழத்தைத் தந்தது; வெற்றி அவன் பக்கம் சாய்ந்தது. எதிரி தோல்வியை ஒப்புக்கொண்டு அந்தத் தொகையைக் கொடுத்திருக்க வேண்டும்.

வாக்கினால் வென்று விடலாம் என்று நினைத்துச் சட்டம் பேசினான். “ஆட உட்கார்ந்தது உண்மைதான்; ஆனால் ஒட்டிய தொகைக்கு யான் இசைவு தரவில்லை; அதனால், அந்தத் தொகை தரமுடியாது” என்று சாதித்தான்.

பலராமன் விடுவதாக இல்லை. பெரியவர்கள் சிலரை வைத்துப் பஞ்சாயத்துப் பேசிப் பார்த்தான். பலராமனே வெற்றி கொண்டதாயும், தொகைக்கு இசைந்து வாயால் சொல்லாவிட்டாலும் ஆட உட்கார்ந்து விட்டதால் ஒப்புக் கொண்டதாகவே முடியும் என்று அபிப்பிராயம் தெரிவித்தனர். அதுவே அசரீரியாய் அங்கே ஒலித்தது.

அதற்கு மேலும் ஒப்புக்கொள்ளாமல் எள்ளல் போக்கொடு சிரித்து அவனை ஏய்க்கத் தொடங்கினான்; மேலும், அவன் சினத்தைத் தூண்டிவிட்டான். பக்கத்தில் இருந்த தாயப்பலகை கொண்டே பலராமன் அவன் தலையில் தட்டி அவனைக் கொன்றுவிட்டான்; அவனைத் தூண்டி விட்டுச் சிரித்துக் கொண்டிருந்த தந்தவக்கிரனைப் பற்கள் உதிரும்படி தாக்கி, அவன் கர்வத்தை அழித்தான். உருக்குமியின் சார்பில் வந்து எதிர்த்த நண்பர்களை எல்லாம் பக்கத்தில் இருந்த தூண் ஒன்றனைக்கொண்டு அடித்து நொறுக்கினான்.

தம் மைத்துனனைப் பலராமன் கொன்றுவிட்டது குறித்துக் கண்ணன் ஏதும் பேசவில்லை; பாராட்டினாலும் ருக்குமணியின் முகம் கோணும் என்பதால் எதுவும் பேசாமல் கண்ணன் அடங்கிவிட்டான்.