கண்ணனின் திருக்கதை

இறை வாக்கு


“உலகில் அறமும் நீதியும் நிலை குலையும்போது இறைவன் அவதரித்துத் தீயவர்களை ஒறுப்பான்; தூயவர்களை வாழ்விப்பான்” என்று தெய்வ நூல்கள் கூறுகின்றன. யுகங்கள் மாறுகின்றன; மாந்தர் அகங்களும் மாறுகின்றன; கிரேதா யுகம் வந்தது; அசுரர்களின் அழிவுகள் அதிகம் ஆயின; அறநெறிகள் அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டன; அவர்களை நல்வழியில் நிறுத்திய பாதைகளும் விலகிவிட்டன.

பூமித்தாய் பூச்சுமை பொறுக்க முடியாமல் படைத்தவனை அடைந்து, தன் துயரத்தைத் துடைத்து அருளுமாறு வேண்டினாள். படைப்புக் கடவுளாகிய பிரமனும் இந்திரனையும், சந்திரனை முடியில் தாங்கிய சிவனையும் அழைத்துக்கொண்டு முத்தொழிலிலும் வல்ல வித்தகன் ஆகிய திருமாலிடம் சென்றான்; தம் குறைகளை நவின்றான்.

தேவர்களின் குறைகளைக் கேட்ட மாதவன் ஆகிய திருமால் அவர்களுக்குக் காப்பு அளித்தான்; மீனமாய். ஏனமாய், ஆமையாய், வாமனனாய், இராமனாய் வந்து உதித்தவன் கண்ணனாய் உருத்தரிக்கக் கருத்துக் கொண்டான்.

கடந்த அவதாரமாகிய இராமவதாரத்தில் திருமால் இராமனாய்ப் பிறந்தார்; ஆதிசேடன் இலக்குவனாய்த் துணைவன் ஆனான்; அவனுக்குக் கீழ்ப்படிந்து அடியவனாய் இருந்து இராமனது மிடிமையைத் தீர்த்து வைத்தான். அதனால் திருமால் கடன்பட்டார்; எனவே அவனுக்குத் தம்பியாகப் பிறத்தற்கு உடன்பட்டார்; அரவு அணையாசிய ஆதிசேடனைத் தனக்குத் துணையாகப் பிறக்க ஆணையிட்டார்; திருமால் கண்ணன் ஆனார். ஆதிசேடன் இவன் அண்ணன் பலராமனாய்ப் பிறந்தான்.

நித்திரை வடிவில் தன்னோடு நீள்துயிலில் துணையாக இருந்த யோக மாயை என்ற நன்மகளைக் கோகுலத்தில் திருமகளாகப் பிறக்கக் கருத்து வைத்தார். தேவகி மைந்தன் கண்ணன்; உரோகிணி மகன் பலராமன் ஆயினான்.

விந்திய மலைக்கு வடக்கே நந்திய நகரமாக மதுரா நகர் இருந்தது. உக்கிரசேனன் என்பவன் அக்கிரமம் அழித்து நன்னகராக்கி, அதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். தருமத்தின் தலைவன் என்று அவன் கருமத்தை வைத்து அவனைப் பாராட்டினர். நத்தையில் முத்தாய்ச் சேற்றில் செந்தாமரையாய்த் திகழ்ந்த அவ்வரசனுக்குத் தீமையில் வல்லோன் ஆகிய கம்சன் பிறந்தான்; எந்த நேரத்தில் மனம் மாறுவான் என்று சொல்ல முடியாது; உயிரைக் காத்துக் கொள்ள எந்தச் செயலையும் செய்யத் தயங்கியது இல்லை. கொடியோன் என்பதற்கு வடிவோன் என்று சொல்லும்படி எடுத்துக்காட்டாய் விளங்கினான்.

உக்கிரன் தன் இளையவன் ஆகிய தேவகனின் மகள் தேவகி; அவளுக்கு வசுதேவனை மணமகன் ஆக்கினன்; மணம் முடிந்ததும் அவளைக் கணவனோடு அனுப்பினன். தேரில் அவர்களை இருத்திக் கம்சனே முன் அமர்ந்து, அதனைச் செலுத்தினான். விண்ணில் அசரீரி மற்றுச் சாரமுள்ள செய்தியைச் செப்பியது. “தேரா மன்னா! செப்புவது உடையேன்; ஓராது அவளைத் தேரில் ஏற்றி அழைத்துச் செல்கிறாய்; அவள் பகைவன் பாசறை; உனக்கு அவள் எட்டாம் மகன் ஒரு கல்லறை; உன் உயிரைக் கவ்வும் எமன்” என்று அறிவித்தது.

அமுதம் பிறந்த ஆழியில் நஞ்சு தலை காட்டியது. அன்பு மிக்க அவன் நெஞ்சினை வன்பு தாக்கியது; பாசம் காட்டிய பரிவில் நாசம் தொடங்கியது: அவன் கண் சிவப்பில் மண் சிவக்கும் நிலை ஏற்பட்டது. கற்றைக்குழல் பிடித்து அவளைக் கல்தரையில் சாய்த்தான். “நீயா எனக்குத் தங்கை? என்னைக் கொல்ல வந்த வேங்கை!” என்று கூறி, வாள் எடுத்து வெட்டக் கை எடுத்தான்; வசுதேவன் செங்கை அதனைத் தடுத்து நிறுத்தியது.

பற்றி எரியும் நெருப்பை அறிவு என்னும் நீரால் குளிர வைத்தான். ஆறுவது சினம்; மாறுவது மனம்; சீற்றம் உன்னைக் கூற்றம் ஆக்குகிறது; வேற்றவரை அழித்தாய்; மாற்றலரை மறுத்தாய்; உற்றாரை உறவினரை மட்டும் இதுவரை செற்றது இல்லை; இத் தங்கை உன் அங்கை அதனை நீயே அழிக்க நினைக்கிறாய்; பெண் கொலை; ஏலாது உன் நிலை; தீய எண்ணத்தைக் கலை. அழிப்பது எளிது; ஆக்குவது அரிது; அழிக்கும் ஓர் உயிரை உன்னால் ஆக்க இயலுமா? சிந்தித்துப் பார்; பழிக்கும் வினை உன்னைப் பாழ்நரகில் சேர்க்கும்.”

”நானோ, என் மனைவியை இழக்கின்றேன்; என்றாலும், மற்றொருத்தி கொண்டு நிரப்பிவிடுவேன். நீயோ, தங்கையை இழக்கின்றாய்; இன்னொருத்தி உன் தங்கை ஆக முடியாது. பானையை உடை; குயவனை நோகாதே; எட்டாம் மகன் உனக்குப் பகை; இவளைக் கொல்வது மிகை; உலகம் காட்டும் நகை; இஃது உன் தகைக்கு ஏற்றது அன்று. பூவைப் பறிப்பவர் வேரை அழிப்பது இல்லை; காயைப்பறி; அதன் மரத்தை வெட்டாதே” என்றான்.

அவன் பேசியது அதிமதுரச் சுவையாய் இருந்தது; அறிவுச் சுமையாகவும் இருந்தது. பொறுத்தவர் பூமி ஆள்வார். அந்தப் பொன்மொழி அவனைத் தடுத்து நிறுத்தியது. அவர்களைக் காவலில் வைத்தால் தன் ஏவலில் அடங்குவர் என்று தீர்மானித்தான்; “குழந்தை பிறந்தால் அதைத் தன்னிடம் பதிவு செய்ய வேண்டும்” என்று ஆணையிட்டான்; ஜனனக் கணக்கை அவர்கள் எழுதினால் மரணக் கணக்கைத் தான் முடிப்பதாய் அறிவித்தான்.

வஞ்சனை இல்லாமல் தேவகி மைந்தரைப் பெற்றுக் கம்சனிடம் தந்தாள். பிறந்தன ஆறு; பெருகியது இரத்த ஆறு; அவை பிறக்கும்போது மூடியிருந்த கண்களைத் திறவாமலேயே செய்துவிட்டான்.

வசுதேவன் சளைக்கவில்லை; “சென்றது இனி மீளாது; சிந்தை செய்வதால் பயனில்லை” என்று தன் பயணத்தை மேலும் தொடர்ந்தான்; எட்டாவதனை எட்டிப் பிடிக்க ஏழு தேவைப்பட்டது. ஏழு திங்கள் தீர்ந்ததும் ஏழாம் கரு தேவகி வயிற்றில் தங்கவில்லை. அது கோகுலத்தில் உரோகிணி வயிற்றுக்கு மாற்றப்பட்டது. விஞ்ஞானம் அதற்கு உதவியது. யோக மாயை இந்த மாற்று அறுவையைச் செய்து தந்தாள்; உரோகிணி முழு நிலை வந்ததும் பூரணனைப் பெற்றுத் தந்தாள்; பலராமன் அவளுக்குத் தனயன் ஆனான். தேவகி கணக்கில் அது, கருச் சிதைவு எனக் கணக்கிடப்பட்டது.

“மணி எட்டு எப்பொழுது அடிக்கும்?” என்று காவலர் காத்திருந்தனர். நாளும் நட்சத்திரமும் கம்சன் குறித்து வைத்திருந்தான். “ஆவணி மாதம் எட்டாம் நாள் அட்டமி திதி மாமனுக்கு ஆகாது” என்பர். அதற்காகவே அந்த நேரத்தைக் கண்ணன் தேர்ந்து எடுத்தான். கம்சன் மனத்தைப் போலவே காரிருள் சூழ்ந்திருந்தது. நள்ளிரவில் ஒள்ளியோன் பிறந்தான்.

சங்கு சக்கரம் ஏந்திய தடக்கையனாய் அங்கு அவன் அவர்களுக்குத் திருமாலாய்க் காட்சி அளித்தான். அடுத்துச் செய்ய வேண்டியதை அவன் தொகுத்துக் கூறினான்; வசுதேவன் கால் தளை நீங்கியது; காவலர் துயில் ஓங்கியது; குறட்டை கூடிற்று.

கூடை ஒன்றில் வசுதேவன் குழந்தையைச் சுமந்தான்; தெய்வம் உரைத்தபடி யமுனையைக் கடந்தான். வெள்ளமாய் ஓடிய யமுனை சிறு பள்ளமாய் அவனுக்கு வழி விட்டது; ஆதிசேடன் ஐந்தலை நாகமாய் வந்து அவனுக்குக் குடை பிடித்தான். கோகுலம் சேர்ந்தான்; வியாகுலம் தீர்ந்தான்.

யசோதைக்கு அடுத்த திதி நவமியில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதை வசுதேவன் மாற்றி எடுத்துக் கண்ணன் சிறைக் கட்டிலில் விட்டுவைத்தான். மறுபடியும் தேவகி முன்னால் புதிய குழந்தை புனர்ஜன்மம் எடுத்தது. தேவகிக்குத் தெரியும் இது சாகப் பிறந்த குழந்தை என்று. அழுகை ஒலியால் தன் வருகையை அது அறிவித்தது. தொழுத கையோடு சென்று காவலர் செய்தி செப்பினர். உருவிய வாளுடன் வெருவிய கம்சன் அங்கு மருவினான்; கருவிய குழந்தையைக் கையில் எடுத்தான்.

பெண் என்பதனைச் சென்றபின் அறிந்தான். ஆண் ஆனால் என்ன? பெண் ஆனால் என்ன? எட்டாவது என்ற முத்திரை தாங்கி இருந்தது. எடுத்தான்; எறிந்தான் ஒரு பாறை மீது அதனை; பெண் கொலை செய்து கைகளைக் கறைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. கல்லில் பட்டுச் சுக்கு நூறாகச் சிதைந்து விண்ணின் மீது நிறைந்து அவன் கண்களுக்குத் துர்க்கையாய்க் காட்சி தந்தது. “துஷ்டனே! உன் இஷ்டமாக எதுவும் நடக்காது; உன்னைக் கொல்ல வந்தவன் வேறு ஓர் களத்தில் கொலுவீற்றிருக்கிறான்; நான் அவன் நிழல்; மாயை; என்னை நீ கொல்ல முடியாது” என்று எழில் வானில் இருந்து மொழி பேசியது.

நந்த கோபனுக்கு நீண்ட காலமாகக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதுவே அவனுக்குக் கவலையாகவும் இருந்தது; மகள் பிறப்பாள் என்று சோதிடர்கள் ஓதிக் கொண்டு இருந்தனர். அந்த நம்பிக்கை தவறு என்று சுட்டிக் காட்டுவது போல யசோதை பக்கத்தில் நீல நிறத்தவன் கோல அழகில் ஞாலம் விளங்க அங்கு அவள் அணைப்பிற்குக் காத்து இருந்தான். யசோதை எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தாள். அவள் மார்பு தவம் செய்தது அவனுக்கு முலைப்பால் தருவதற்கு.

கோகுலம் என்பது ஆயர் வாழ்ந்த சிற்றூர். பசு மேய்த்தலைத் தொழிலாகக் கொண்டு வளம் மிக்க வாழ்வை நடத்தினர். ஆயர் குலம் என்று அவர்கள் இன முத்திரை குத்திக்கொண்டு இருந்தனர். பாலும், தயிரும், நெய்யும் அவர்கள் பண்டப் பொருள்கள். நகர் வாசம் அறியாத நன்மக்களாக வாழ்ந்து வந்தனர். கோகுலத்திலேயே நந்தனின் வீடு நலம் மிக்கதாய் விளங்கியது.அவன் மீது நட்பும் நயமும் மதிப்பும் மற்றவர் காட்டினர். கண்ணன் பிறந்தான் என்பதில் அந்த ஊரே மகிழ்ச்சி கொண்டது. கலகலப்பும், ஆரவாரமும் விஞ்சின. நந்தகோபன் சுறுசுறுப்பாய் இயங்கத் தொடங்கினான். அவன் வீட்டுக்கு வருவாரும் போவாரும் மிகுதியாயினர்.