அருளின் விளைவு
சோழ நாட்டில் கஞ்சனூர் என்பது ஒரு தலம். அங்கே அரதத்தசிவாசாரியார் என்ற ஒரு பெரிய பக்தர் வாழ்ந்திருந்தார். அவர் பல நூல்களை எழுதியிருக்கிறார்; சிவபெருமானிடத்தில் ஆராத காதல் உடையவர். அவர் அங்குள்ள அக்கினிபுரீசுவர சுவாமி கோயிலுக்குத் தினந்தோறும் சென்று வருவார். ஒருநாள் தம்முடைய மாணாக்கர்களுடன் கோயிலுக்குப் போனார். அப்பொழுது தர்மகர்த்தா கோயில் தாசியை மரத்தோடு வைத்துக் கட்டி அடித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட அப் பெரியார், “ஏன் இவளை அடிக்கிறார்கள்?” என்று கேட்டார்.
”இவள் தினந்தோறும் இறைவனுக்குச் சேவகம் செய்ய வேண்டியவள். மூன்று நாளாகச் சொல்லிக் கொள்ளாமல் வெளியூருக்குப் போய்விட்டாள். தன்னுடைய கடமை யினின்றும் பிறழ்ந்ததனால் அடிக்கிறார்கள்” என்று ஒருவர் கூறினார்.
அதைக் கேட்டவுடனே அரதத்த சிவாசரியாருடைய கண்ணிலே நீர் மல்கியது; விம்மி விம்மி அழத்தொடங்கினார். அது கண்டு மற்றவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவருடைய மாணாக்கர்களுக்கும் அந்தக் காட்சி வியப்பாக இருந்தது. தாசி அடிபட்டதைக் கண்டு இரங்குவதற்கு என்ன காரணம் என்று அவர்கள் யோசித்தார்க்ள. தங்கள் குருவினுடைய பெருமையை நன்கு உணர்ந்தவர்களாகையினால் அவர்கள் தவறாக ஒன்றும் நினைக்கவில்லை. ஆனாலும் எதற்காக இப்படி அழுகிறார் என்று, அவர்களுக்குத் தெளிவாகத் தோன்றவில்லை.
பிறகு சுவாமி தரிசனம் பண்ணிக்கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார் சிவாசாரியார். அப்பொழுது மாணாக்கர்கள் மெதுவாக அவரைக் கேட்டார்கள்; “எதற்காகச் சுவாமி இப்படி அழுதீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் பதில் சொல்லலானார். “மூன்று நாள் இறைவனுடைய திருத் தொண்டைச் செய்யவில்லை என்று தர்மகர்த்தா அவளை ஒறுத்தார். இப்படி என்னை இளமையிலிருந்து இறைவனுடைய தொண்டு செய்யாததற்காக யாரேனும் ஒறுத்திருந்தால் நான் எப்போதோ உய்ந்திருப்பேனே!” என்று சொல்லி மீட்டும் அழுதாராம். அப்பொழுதுதான் அவருடைய உள்ளக் கிடக்கை மாணாக்கர்களுக்குத் தெரிந்தது; மற்றவர்களுக்கும் தெரிந்து எல்லோரும் வியந்தார்கள்.
இறைவனுக்குத் தொண்டு செய்யும் தாசியைத் தர்மகர்த்தா ஒறுத்ததற்குக் காரணம், அந்தத் தாசியினிடத்திலே உள்ள கோபம்; அதற்கு ஏது இறைவனுடைய தொண்டு முட்டுப்பட்டதே என்பதுதான். செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததற்காக ஒறுத்தார். அது அன்பினாலே பிறந்தது. அரதத்த சிவாசாரியார் அந்த ஒறுத்தலைத் தாமும் வேண்டினார். ஒரு தாய் தன்னுடைய குழந்தை ஏதோ தவறு செய்துவிட்டது என்று தெரிந்து அடிக்கிறாள். தாய்க்குக் குழந்தையினிடத்திலே அன்பு இல்லை என்று சொல்லலாமா? “அணைப்பதும் ஒரு கை, அடிப்பதும் ஒரு கை” என்பது பழமொழி. இரண்டுக்கும் அன்பே காரணம். குழந்தை தவறு செய்யாமல் நல்லபிள்ளை என்று பெயர் வாங்க வேண்டுமே என்பதற்காக அடிக்கிறாள்.
தழுவி, முத்தமிட்டு, வேண்டிய தின்பண்டங்களைக் கொடுப்பதும் அன்புதான். தவறு செய்தால் அடிப்பதும் அன்புதான். இரண்டு வகையும் அன்பாக இருந்தாலும் தோற்றத்தில் அவை வெவ்வேறாகத் தோன்றுகின்றன. ஒன்று கடுமையாகத் தோன்றுகிறது; மற்றொன்று நயமாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு வகையான அன்பையும் மறக்கருணை, அறக்கருணை என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.
இறைவன் உலகிலுள்ள உயிர்களுக்குத் துன்பத்தைத் தருகிறான்; ஆகையினால் அவன் கடுமையானவன் என்று சொல்லலாமா? இறைவனைக் காட்டிலும் ஆருயிர்களிடத்திலே அன்புடையவர் வேறு யாரும் இல்லை. தாய் நமக்கு ஒரு பிறவியிலேதான் தாயாக இருக்கிறாள். ஒரு பிறவியிலுங்கூட, சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலே தாய்க்கு எத்தனை அன்பு இருக்கிறதோ, அத்தனை அன்பு அந்தக் குழந்தை பெரியவன் ஆன பிறகு இருப்பதில்லை; அன்பு மாறுபடுகிறது. தாய் எப்பொழுதும் நம்மோடு வர முடியாது. எல்லாப் பிறவியிலும் அவள் தாயாக இருப்பதில்லை. இறைவன் ஒருவன்தான் எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கிறான். அவனுடைய அன்பு வேறு யாருக்கும் வராது.
அத்தகைய அன்புடைய பெருமான் ஆருயிர்களுக்குத் துன்பத்தைத் தருகிறான்; அதற்கு ஏது அவனுடைய அருள். எப்படித் தவறு செய்த குழந்தையைத் தாய் அடிக்கிறாளோ, அப்படிப் பாவங்கள் செய்த ஆருயிர்களுக்கு அந்தப் பாவத்தின் பயனாகத் தண்டனையைத் தருகிறான் இறைவன்; துன்பத்தைத் தருகிறான். அழுக்காக இருக்கிற துணியைக் கல்லிலே மோதித் துவைத்து அதைச் சுத்தப்படுத்துவது போல, ஆருயிர்களுடைய மாசுகளைத் துன்பத்தினாலே போக்கிவிடுகிறான்.
“சுடச்சுடப் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு“
என்பது திருக்குறள்.
துன்பத்திலே புடமிட்ட உயிர்கள் பொன் புடமிட்டால் மேலும் மேலும் மெருகு அடைந்து ஒளிவிடுவது போல ஒளியை விடுகின்றன. வாழ்க்கையில் வரும் துன்பங்க ளெல்லாம் ஆருயிர்களுடைய மாசுகளைப் போக்குவதற்குரிய தண்டனை என்று கொள்ளவேண்டும். பக்தர்களுக்கு இறைவன் பல வகையான தண்டனைகளைத் தருகிறான். மற்றவர்களை அடுத்தடுத்து ஒறுக்காமல் இருந்தாலும் பக்தர்களைத்தான் அவன் நிச்சயமாக ஒறுப்பான். தன்னுடைய சொந்தக் குழந்தை தவறு செய்யும்போதுதான் தாய் அடிப்பாள். பக்கத்து வீட்டுக் குழந்தை தவறு செய்தால் அதைப்பற்றி அந்தக் குழந்தையின் தாயினிடம் சொல்வாள்; தான் அடிக்க மாட்டாள். தானாக அடிக்க வேண்டுமானால் தன்னுடைய சொந்தக் குழந்தை என்கிற உரிமை இருக்கவேண்டும். அப்படியே இறைவனுடைய அடியார் களுக்குத்தான் அதிகத் துன்பங்கள் உண்டாகும். உடனுக்குடன் அவர்களுடைய மாசுகளையெல்லாம் போக்கித் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற அருளினாலே இறைவன் அப்படிச் செய்கிறான். இல்லாவிட்டால் அந்த அழுக்கை யெல்லாம் ஒருசேரச் சேர்த்து வைத்து, உரிய தண்டனையை மறுமையிலே அவன் கொடுத்துவிடுவான்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுடைய அருளினால் விளைகின்ற விளைவுகளை நினைத்துப் பார்க்கிறார். அடியார்கள் துன்பப்படுவது எதனாலே என்று யோசிக்கிறார். இறைவன் அடியார்களை ஒறுக்கிறான். அப்படி ஒறுப்பதற்குக் காரணம் அடியார்களிடத்திலே உள்ள கோபம் அன்று; அவர்களிடத்திலே உள்ள மாசைப் போக்குவதற்காகத்தான் ஒறுக்கிறான். அதற்கு ஏதுவாயிருப்பது அவனுடைய திருவருள்தான்.
ஒறுத்தாய் நின்அருளில்.
அரசியலில் இன்ன குற்றத்துக்கு இன்ன தண்டனை என்று சட்டம் இருக்கிறது. ஆனால் நாம் செய்கிற குற்றங்களுக்குத் தண்டனை இன்னது என்று எல்லை கிடையாது. காரணம் நாம் செய்யும் குற்றங்களுக்கே எல்லை இல்லை. ஏதோ ஓர் அளவாகக் குற்றம் செய்திருந்தால் அதற்குரிய தண்டனையையும் அளவாகக் கொடுக்கலாம். நாம் செய்கிற குற்றங்களோ மேலும் மேலும் எல்லையற்று வளர்கின்றன. அப்படி வளர்கின்ற குற்றத்துக் கெல்லாம் தண்டனை அளிக்கவேண்டுமானால் நம்முடைய வாழ்வு முழுவதுமே துன்பப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இறைவன் மக்களுடைய வாழ்வு முழுமையும் துன்ப மயமாக வைப்பதில்லை. துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்வு. அடியார்களுக்குத் துன்பத்தையும் தருகிறான்; இன்பத்தையும் தருகிறான். அவர்கள் இன்பம் வந்தாலும் ஆண்டவனுடைடய அருள் என்று நினைக்கிறார்கள்; துன்பம் வந்தாலும் அருள் என்றே நினைக்கிறார்கள்.
மக்கள் செய்த அளவு கடந்த குற்றத்துக்காக அளவு கடந்து இறைவன் ஒறுக்கிறதில்லை. குற்றம் செய்ததற்காக ஓரளவு ஒறுக்கிறான்; அவ்வளவுதான். அவன் ஒறுக்கும் அளவைவிட ஒறுக்காது விட்ட அளவே அதிகம். ஒறுப்பதைவிடப் பொறுப்பதே மிகுதி. பல குற்றங்களை அவன் கவனிப்பதில்லை. அதனால் நாம் உய்கிறோம். நாம் செய்கிற குற்றங்களுக்கெல்லாம் சரியானபடி அளவிட்டு, இன்ன குற்றத்திற்கு இன்ன தண்டனை என்று இறைவன் கொடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு எல்லையே இராது. நாம் அத்தனை குற்றம் செய்துகொண்டிருக்கிறோம். ஆனாலும் குற்றம் செய்து கொண்டே போனால் அதற்கு ஒரு விளைவும் இல்லாமல் இருக்குமாயின் நமக்கு அறிவு வராது. அதனால் ஓரளவு ஒறுத்து அறிவூட்டுகிறான். பெரும்பாலும் நம் குற்றங்களை அவன் மறந்து மன்னித்துவிடுகிறான்.
அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய்.
நமக்கு இறைவன் கொடுக்கிற துன்பம் ஓரளவுக்குள்ளேதான் இருக்கிறது. நம்மிடத்திலே காட்டுகின்ற கருணைக்கு அளவே இல்லை. அவனாலே பொறுக்கப்பெற்ற குற்றங்களுக்கும் அளவில்லை. அவை எத்தனையோ உண்டு; அனைத்தையும் பொறுத்தருள்கிறான்.
பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தனையும்,
துன்பங்கள் அடுத்தடுத்து வருகின்றன. அவற்றை அநுபவிக்கையில் அப்பொழுதப்பொழுது இறைவன் நம்மைச் சீறுகிறான் என்று தோன்றுகிறது. நம்மிடத்தில் இத்தனை சிரத்தை கொண்டு அவ்வப்பொழுது திருத்துகிறானே என்று நினைப்பது தான் முறை. அன்பர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள்.
ஒரு பெண் தன்னுடைய கணவனாலே புறக்கணிக்கப் பட்டிருக்கிறாள். மாமனார் மாமியார் முதலியவர்களோடு அவள் இருக்கிறாள். அவன் வருகிறான்; சாப்பிடுகிறான்; போய் விடுகிறான். அந்தப் பெண்ணோடு பேசுவது இல்லை. இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் ஏதோ ஒருசிறு குற்றம் செய்ததற்காக அவனுக்குக் கோபம் வந்துவிடுகிறது. அவளை அடித்து விடுகிறான்; அடித்துவிட்டுப் போய்விடுகிறான். மற்ற நாளெல்லம் வாட்டத்துடன் இருக்கிற அந்தப் பெண்மணி அன்று முக மலர்ச்சியோடு இருக்கிறாள். பக்கத்து வீட்டில் உள்ள தோழி மாலை வேளையில் வந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவளுடைய முக மலர்ச்சியைக் காண்கிறாள். ”இது என்ன! என்றும் இல்லாத காட்சியாக இருக்கிறதே!” என்று கேட்கிறாள். “இன்றைக்கு அவருடைய திருவருள் எனக்கும் கிடைத்து” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறாள். “என்ன செய்தார்?” என்று தோழி கேட்கிறாள். “அவருடைய திருக்கரம் என்மேல் பட்டது” என்று சொல்லி உவகை அடைகிறாள். “அது என்ன?” என்று தோழி விவரத்தை விசாரிக்கிறாள், “இன்றைக்கு என்னைத் தொட்டு அடித்தார். என்னையும் ஒரு பொருளாக எண்ணி என்னைத் தம் திருக்கரத்தால் தீண்டினார்” என்று உவகை கொண்டாள். அவளுடைய அன்பின் உயர்வு அது.
அப்படியே அன்பர்களும் தமக்கு ஏதேனும் துன்பம் உண்டானால் இறைவனுடைய திருவருளினால் வந்தது என்று நினைக்கிறார்கள்; “இறைவன் நம்மையும் பொருட் படுத்தி அவ்வப்போது திருத்துகிறான்” என்று நினைத்து மகிழ்கிறார்கள்.
தங்களை அவர்கள் மிகவும் இழிவாகச் சொல்லிக் கொள்வது வழக்கம். செருக்கு உடையவர்கள் சிறிய காரியம் செய்தாலும்கூட, “நான் அது செய்தேன்; இது செய்தேன்” என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இறைவனுடைய அருளைப் பெற்ற வர்களோ எப்பொழுதும் தம்மைக் குறைத்துக்கொண்டே பேசுவார்கள்; நாயென்றும் பேயென்றும் சொல்லிக்கொள்வார்கள். “நாயேன் நாயேன்” என்று சொல்வது அவர்கள் வழக்கம். அதன் கருத்தைச் சிறிது பார்க்கலாம்.
இழிந்தவர்களை நாய் என்று சொல்வது தமிழர் வழக்கம். நம்முடைய வசவுத் தமிழிலே சேர்ந்தவை ‘நாயே, பேயே’ என்ப. நாயை இழிவாகச் சொல்வதற்குக் காரணம் மற்றவர்கள் கழித்த பொருளை அது உண்ணுகின்றமையே என்று சொல்லலாம். ஆனால் மற்றவர்கள் கழித்த பொருளை உண்ணுகின்ற மற்றொரு விலங்கும் இருக்கிறது. அது பன்றி. பன்றி என்று சொல்லாமல் நாயைச் சொல்வதிலே ஒரு சிறப்பு இருக்கிறது. நாய் மலத்தை உண்ணுவது இழிவுதான். ஆனால் அதைக் காட்டிலும் இழிந்த செயலை அது செய்கிறது. எந்தப் பிராணியும் தான் ஒரு முறை உண்டு வாந்தி எடுத்தால் மீட்டும் அதை உண்ணாது. நாயோ ஒரு முறை உண்டதை வாந்தி எடுத்துவிட்டால் மீட்டும் அதை உண்ணும். அது எவ்வளவு இழிவான இயல்பு! மக்கள் பிறவிதோறும் எத்தனையோ துன்பங்களை அநுபவித்தாலுங்கூட அவற்றை மறந்து அந்தத் துன்பங்களுக்குக் காரணமான செயல்களிலே மீட்டும் ஈடுபடுகிறார்கள். ஒரு பிறவியிலேயே அநுபவத்தில் இது தவறு என்று அறிந்ததை, மீட்டும் செய்கிறார்கள். இது வாந்தியெடுத்த பொருளை மீட்டும் உண்ணும் நாயின் செயலைப் போன்ற தல்லவா? “நான் எத்தனையோ துன்பத்தை அடைந்திருக்கிறேன். அதற்குக் காரணமாக நான் செய்த தவறு தெரிகிறது. ஆனாலும் மீட்டும் மீட்டும் அந்தத் தவறுகளைச் செய்கிறேன்” என்று சொல்வதற்குப் பதிலாக, நான் நாய் போன்றவன் என்று சொல்வது பெரியவர்களுடைய வழக்கம்.
சுந்தரமூர்த்தி நாயனார் அப்படிச் சொல்கிறார். “ஆண்டவனே, என்னை ஒறுத்தாய்; பொறுத்தாய். அவ்வப்போது நான் செய்கிற தீங்குகளையெல்லாம் மறந்து என்னைத் திருத்த வேண்டும் என்று துன்பங்களைத் தந்தாய். நாய் போன்ற என்னையும் பொருட்படுத்தினாய். கண்டால் அணுகாமல் விலகுவதற்குரியது நாய். நாயைப் போல இருக்கிற என்னைக் கண்டு நீ விலக வேண்டி இருக்க, என்னையும் உன் அருளுக்கு உரிய பொருளாக நினைத்து என்னைத் திருத்த வேண்டும் என்று எண்ணினாய். அதனால் அவ்வப்பொழுது என்னைச் செறுத்தாய்; என்னிடத்திலே கோபங் கொண்டாய். உன்னுடைய கோபம் என்னுடைய லாபம்.”
நாயினேனைப் பொருட்படுத்திச் செறுத்தாய்.
நல்ல பொருளிடத்திலே உறவாடுவது மக்களுக்கு இயல்பு. நல்லது அல்லாததானால் அதனிடத்தில் உள்ள தீங்கும் தம்மிடத்தில் ஒட்டிக்கொள்ளுமே என்று அஞ்சுவார்கள். இறைவனோ எந்த விதமான தீங்கினாலும் துன்புறாதவன்; மிக மிக இழிந்த அழுக்குகளையும் மாற்றுகின்ற தூய உருவமாக இருக்கிறவன். பெரு நெருப்புக்கு ஈரம் இல்லை. ஆதலினால் அவன் குற்றம் உள்ள ஆருயிர்களைத் திருத்துவதற்காக அவற்றை அணுகுகிறான். எவை எவை மற்றவர்கள் அஞ்சி விலகுவதற்குரியன என்று நினைக்கிறார்களோ அவைக ளெல்லாம் இறைவனுக்கு அணுகுவதற்குரிய பொருள்களாகின்றன.
தேவர்கள் தங்களுடைய வாழ்வு நீடிக்க வேண்டும் என்று கருதியும், மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டுமென்று கருதியும் அமுதத்தை உண்டார்கள். அவர்கள் வேண்டி உண்ட உணவு அது. ஆனால் இறைவனோ நஞ்சை உண்டான். அந்த நஞ்சினாலே தனக்குத் துன்பம் வரும் என்ற நினைப்பே அவனுக்கு இல்லை.
ஆலகால விடத்தின் காற்றுத் தம்மேல் பட்டாலும் இறந்துபடக் கூடியவர்கள் தேவர்கள். பாற் கடலில் விடம் தோன்றியபொழுது அவர்கள் ஆண்டவனிடத்திலே வந்து முறையிட்டுக் கொண்டார்கள். உடனே அதைக் கையிலே எடுத்துக்கொண்டு, “இதை நாம் உண்ணுகிறோம்; இதனால் நமக்குத் துன்பம் இருக்குமா, இராதா?” என்றெல்லாம் யோசிக்காமலே உண்டுவிட்டான். நல்ல பொருளை மாத்திரம் கொள்ளுவது பிறருடைய இயல்பு. அல்லாத பொருளானாலும் அது அல்லாதது என்ற நினைவுகூட இல்லாமல் ஆண்டவன் ஏற்றுக்கொள்ளவான்.
பாற் கடலிலே தோன்றிய ஆலகால விடத்தை, அது தனக்குத் துன்பம் தரும் என்பதைச் சிறிதேனும் அறியாமல் இறைவன் நுகர்ந்தான் என்பதை இன்றைக்கும் காட்டிக்கொண்டு நிற்கிறது இறைவனுடைய நீல கண்டம்.
வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம்
கறுத்தாய்.
இறைவனுடைய கருணையை என்னவென்று சொல்வது! எல்லாரும் அஞ்சக்கூடிய ஆலகால விடத்தையே எடுத்து உண்டான் என்றால், குற்றங்கள் செய்கின்ற ஆருயிர்களை அணுகி அவர்களைக் காப்பாற்றுவது பெரிய காரியமா? ‘என்னைப் போன்ற குற்றம் உடையவர்களைக் காப்பாற்று வதற்காக முன்பே நீ நஞ்சை உண்டு பயிற்சி பண்ணிக் கொண்டாய் போலத் தோன்றுகிறது’ என்ற கருத்தும் இங்கே புலப்படுகிறது. தன் கண்டம் கறுத்தாலும் நஞ்சை அங்கே வைத்திருக்கிறான் இறைவன். அவனைச் சார்ந்தவர்கள் முன்னை நிலை எப்படி இருப்பினும் உயர்வை அடைவார்கள் என்பதைக் காட்டுவது அது.
இந்த எண்ணங்களெல்லாம் சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் திருக்கழிப்பாலை என்ற தலத்திலே தோன்றின. திருக்கழிப் பாலை வளப்பமான வயல்கள் நிரம்பிய தலம்; தண்ணீர் சூழ்ந்த வயல்கள் பரவியிருக்கின்ற இடம்.
தண்கழனிக் கழிப்பாலை மேயானே!
கழிப்பாலை மேயானைத் தரிசித்து அவனுடைய அருளின் விளைவைச் சொல்லுகிறார். ஒறுப்பதும், பல குற்றங்களை நினையாது அவற்றையெல்லாம் பொறுப்பதும், தம்மையும் பொருட்படுத்தி அவ்வப்பொழுது திருத்திக்கொள்வதும் ஆகிய காரியங்கள் யாவும் அந்த அருளின் விளைவே என்று நினைந்து பாடி இன்புறுகிறார்.
ஒறுத்தாய் நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய்
எத்தனையும்; நாயேனைப் பொருட்படுத்திச் செறுத்தாய்;
வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம் கறுத்தாய்;
தண்கழனிக் கழிப்பாலை மேயானே!
[குளிர்ந்த வயல்கள் நிறைந்த திருக்கழிப்பாலை என்னும் திருத்தலத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கும் இறைவனே! நின்னுடைய திருவருளினால் என்னை ஒறுத்தாய். அடியேன் பிழைத்தவை எவ்வளவானாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டாய்; கடலில் தோன்றிய நஞ்சை அதன் தீமை நன்மையை அறியாமல் உண்டு திருக்கழுத்தில் கறுப்பு நிறத்தைக் கொண்டாய்.
நின் அருளில் என்பதை எல்லாவற்றோடும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். நின் அருளில் ஒறுத்தாய், நின் அருளில் பொறுத்தாய், நின் அருளில் செறுத்தாய் என்று பொருத்துவது சிறப்பு. பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாய் என்று இயைக்கவேண்டும். செறுத்தாய்- கோபித்தாய். வேலை-கடல். கண்டம்-கழுத்து. மேயான்-விரும்பி வாழ்பவன்.]