அருளாளன்
கி. வா. ஜகந்நாதன்

வேறாக வந்து அருள்பவன்

எம்பெருமான் நமக்கு வேண்டிய பொருள்களை யெல்லாம் அளித்திருக்கிறான்; உடலையும் உறுப்புக்களையும் வழங்கி யிருக்கிறான். அவனுடைய கருணையை என்ன வென்று சொல்வது! ஆனால் நாம் அந்தக் கருணையைப் பல சமயங்களில் நினைப்பதில்லை. இறைவனை நாம் நினைக்காமல் இருக்கிறோமே என்ற கவலைகூட நம்மிடம் தோன்றுவதில்லை.

சுந்தரமூர்த்தி நாயனார் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கிறவர். ஆனாலும் அவருக்குத் தாம் ஒவ்வொருகால் சரியாக இறைவனைச் சிந்திப்பதில்லை என்ற குறையே இருக்கிறது. அன்புடையவர்கள் இவ்வாறு எண்ணுவது இயல்பு. செல்வ வாழ்வில் உள்ள தாய் தன் குழந்தைக்கு எத்தனை வகையான ஆடை அணிகள் அணிந்தாலும் மன நிறைவு பெறமாட்டாள். சிறந்த அன்புடைய நண்பன் மற்றொருவனுக்கு எத்தனை உதவி புரிந்தாலும், “நான் இன்னும் செய்ய முடியவில்லையே!” என்று வருந்துவான். தம் கடமையில் குறை இருப்பதாக எண்ணுவது அன்பின் விசித்திரப் போக்குகளில் ஒன்று. சுந்தரர் இறைவனிடத்தில் முறுகிய அன்புடையவர். அவருக்குத் தம்முடைய அன்பு குறையுடையதாகத் தோன்றுகிறது. அவர் இறைவனிடம் தம் குறையையும், அதை அவன் சிறிதும் பொருட்படுத்தாமல் அருள்புரிவதையும் எண்ணிப் பாடுகிறார்.

இறைவனே! நான் எப்பொழுதும் உன்னை நினைக்க வேண்டியவன். உன்னுடைய திருவருளினாலே எல்லா இன்பங்களையும் பெறுகின்ற நான் உன்னை நினையாமல் இருப்பது மிகவும் தவறு. எனக்குச் சில சமயங்களில் அகங்காரத்தினாலே மயக்கம் உண்டாகின்றது. தருக்கினால் தலை நிமிர்ந்து போகிறது. அப்படி மோறாந்து ஒவ்வொரு சமயத்தில் உன்னை நினையாமல் இருக்கிறேன். ‘இவன் இப்படி நம்மை நினைக்கவில்லையே’ என்று நீ என்னை மறந்திருக்கவில்லை. எப்படியாவது என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதே உன்னுடைய நினைவு. ‘இவன் மறந்து விட்டாலும் நாம் இவனை நினைத்து வேண்டியவற்றைச் செய்ய வேண்டும்’ என்ற பேரருள் உடையவன் நீ.

அவரவர்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலன்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்ற உனக்கு எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. தேவர்களும் முனிவர்களும் பக்தர்களும் உன்னிடம் வந்து வேண்டிக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்கு வேண்டியவற்றை அருளும் செயலிலே நீ ஈடுபட்டிருக்கிறாய். அவரவர்களுடைய விருப்பங்களைக் கூட்டுவிக்கின்ற பெரிய வேலை உனக்கு உண்டு. அந்த வேலைகளுக்கிடையிலே என்னை நீ தனியாக நினைக்கிறாய். வீட்டிலே பல குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கவனிக்கிறாள் தாய். திடீரென்று மூலையில் கிடக்கின்ற முடக் குழந்தையை நினைத்துக் கொண்டு ஓடி வருகிறாள். மற்றவர்களை விட்டுத் தனியே வந்து எடுத்து உச்சி மோந்து பாலூட்டிச் சீராட்டுகிறாள். அவ்வாறே நீ தனியாக என்னிடத்திலே வருகிறாய். நான் உன்னை நினைப்பதில்லை; உன்னை அழைப்பதில்லை; உன்னைப் பாடுவதில்லை. இருப்பினும், அத்தனை கூட்டத்திலும் நான் இல்லையே என்று நினைந்து தனியாக என்னை நாடி ஓடி வருகிறாய். வந்து என்னுடைய உள்ளத்துக்குள்ளே புகுகின்றாய். உன்னை நினைக்காத உள்ளம் மாசு படிந்திருக்குமே என்று நீ எண்ணவில்லை. எப்படியாவது அந்த உள்ளத்துக்குள்ளே புகுந்து அங்கே உட்கார்ந்துகொண்டு விடுகிறாய். என் உள்ளத்திலே நீ புகுந்த பிறகு நான் உன்னை நினைக்காமல் இருக்க முடியுமா?

மோறாந்து ஓரோருகால் நினையாது இருந்தாலும்
வேறாவந் தென் உள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே!

(மோறாந்து-தருக்கினால் தலையெடுத்து.)

நீதான் உண்மையான பொருள். மற்றவர்களெல்லாம் அவ்வப்பொழுது என்னிடத்தில் அன்புடையவர்களாகக் காட்டுகிறார்களே ஒழிய அந்த அன்பு மெய்யான அன்பு அல்ல. அவர்கள் பொய்யர்கள். அவர்களுடைய வாழ்க்கை பொய்; அவர்களுடைய செயல்களெல்லாம் பொய், உலகத்திலுள்ள எல்லாருடைய செய்திகளும் அத்தகையனவே. நீ செய்கிற காரியந்தான் உண்மையானது. நீதான் உண்மையான பொருள். உண்மையான பொருளாகிய நீ வந்து, நான் நினைக்கா விட்டாலும் என் உள்ளத்திலே புகுகின்றாய். அதற்குரிய கருணை உனக்குத்தான் இருக்கிறதேயன்றி வேறு யாருக்கும் இல்லை. உனக்கு உள்ள வலிமையே அந்தக் கருணை தானே?

காஞ்சீபுரத்தில் பல கோயில்கள் உண்டு. அவற்றுள் திருமேற்றளி என்பது ஒன்று; பிள்ளையார் பாளையம் என்ற பகுதியில் இருப்பது. அந்தத் தலத்திலேதான் இந்தக் கருத்துக்களையெல்லாம் சுந்தரமூர்த்தி நாயனார் எண்ணுகிறார்.

சுற்றிலும் வயல்கள் நிரம்பிய இடம் அது. தொண்டை நாட்டார் வயல்களைக் கழனி என்று சொல்வார்கள். திருமேற்றளியில் சேறு நிரம்பிய குளிர்ந்த கழனிகள் சுற்றிலும் இருக்கின்றன.

சேறார் தண்கழனித் திருமேற்றளி.

கழனிகளில் சேறு மணக்கிறது. சேற்று வளந்தானே சோற்று வளத்துக்குக் காரணம்?

திருமேற்றளியில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான். எப்படி எழுந்தருளியிருக்கிறான்? தனக்குச் சமானமாக வேறு யாரும் இல்லாமல் ஒரு சிங்கத்தைப் போல இருக்கிறான். சிங்கத்துக்குத் தன் காடு பிறன் காடு என்பது இல்லை. அது எந்த இடத்தில் இருந்தாலும் அதனுடைய முழக்கமே சிறப்பாக இருக்கும். ஆண்டவன் எந்த இடத்தில் திருக்கோயில் கொண்டிருந்தாலும் அவன் தலைமை பெற்று வீற்றிருப்பான். இங்கே எம்பெருமான் சிங்கத்தைப் போல வீற்றிருக்கின்றானாம்.

திருமேற் றளி உறையும் ஏறே!

நான் மறந்திருந்தாலும் என்னை மறவாமல் தான் வந்து என்னுடைய உள்ளத்திலே புகவல்ல கருணைப் பெருமானாகிய ஆண்டவன் தான் உண்மையான பொருள். எது உண்மையான பொருளோ அதைத்தான் நாம் நினைக்க வேண்டும். பொய்யான பொருளையெல்லாம் நினைத்துப் போற்றினால் அதனாலே நமக்கு யாதொரு பயனும் உண்டாவதில்லை. ஏதேனும் உண்டானாலும் நிலைப்பதில்லை. இவற்றையெல்லாம் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். நீ என்னிடத்திலே மிக்க கருணை உடையான் என்பதையும் தெரிந்துகொண்டேன். அப்படி இருக்க, நான் அடுத்தடுத்து நச்சினாலுங்கூட இன்பந்தராத மக்களிடம் சென்று முயன்று ஒன்றைப் பெறுவதற்காகப் பாடுபடுவது எதற்கு? நான் நினையாமல் இருக்கும்பொழுது என்னை நினைந்து வந்து அருள் செய்யவல்ல பிரானாகிய உன்னைத்தான் நான் நினைக்க வேண்டும். உன்னையன்றி மற்ற யாரையும் நினைக்கமாட்டேன்; புகழமாட்டேன்.

ஏறே! உன்னை அல்லால் இனிஏத்த மாட்டேனே.

இதுவரைக்கும் யார் யாரையோ ஏத்தியிருக்கலாம். அது என்னுடைய அறியாமை. மெய்ப்பொருள் இன்னதென்று அறிகிற வரைக்கும் பொய்ப்பொருளை ஏத்திக் கொண்டிருந் தேன். ஆனால் இப்பொழுது மெய்ப்பொருள் இன்னது என்று அறிந்து கொண்டேன். அந்த மெய்ப் பொருளாகிய நீ என்னிடத்திலே மிக்க கருணை உடையாய் என்பதையும் அறிந்துகொண்டேன். என்னுடைய உள்ளம் முழுவதும் நீ இடமாகப் பெற்றுக்கொண்ட பிறகு நான் வேறு யாரை நினைக்க முடியும்? நீயே உன்னை நினைக்கும் படியாகச் செய்துவிட்டாய். ஆகையினால் இனி வேறு யாரையும் புகழமாட்டேன்.

மோறாந்து ஓரொருகால் நினையாது இருந்தாலும்
வேறாவந்து என்உள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே!
சேறு ஆர் தண்கழனித்திருமேற் றளிஉறையும் ஏறே!
உன்னை அல்லால் இனிஏத்தமாட்டேனே.

[தலையெடுப்பினால் ஒவ்வொரு சமயம் அடியேன் உன்னை நினைக்காமல் இருந்தாலும், எனக்கு அருள் செய்யத்திருவுள்ளம் கொண்டு தனியே என்பால் வந்து என் உள்ளத்தில் புகுவதற்கு வல்ல மெய்யான பொருளே! சேறு நிரம்பிய குளிர்ந்த வயல்களைப் பெற்ற திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கும் சிங்கம் போன்றவனே! இனிமேல் உன்னை அல்லாமல் வேறு யாரையும் நினைந்து புகழமாட்டேன்.

மோறாந்து-தருக்கினால் தலையெடுத்து, வேறா-வேறாக; தனியாக, ஏறு-சிங்கம். இனி-இப்போது.]

காஞ்சீபுரத்தின் மேற்குப் பகுதியில் இருப்பதால் இதற்கு மேற்றளி என்ற பெயர் வந்தது; மேல்பால் உள்ள தளி என்று கொள்ள வேண்டும்; தளி-கோயில். திருமால் சிவ சொரூபம் பெற்ற தலம் என்பது தல வரலாறு. திருமேற்றளியீசர் சந்நிதி ஒன்றும், திருமால் சிவலிங்க உருவான சந்நிதி ஒன்றும் இங்கே இருக்கின்றன. திருஞானசம்பந்தப் பெருமான் பாடலைக் கேட்டுத் திருமால் உருகிச் சிவலிங்க உருவடைந்தார் என்று தல வரலாறு கூறுகிறது.