அருளாளன்
கி. வா. ஜகந்நாதன்

மாரன் அழிவும் குமாரன் அவதாரமும்

இறைவனைப்பற்றிய வரலாறுகள் பல புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றைப் படிக்கும்பொழுது கதைச் சுவை ஓரளவு இருந்தாலும் சில இடங்களில் உள்ளவை ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகத் தோன்றும். புராணங்களை வெறுங் கதைகளாக மாத்திரம் படித்தால் அதில் நமக்குச் சுவை இராது. அவற்றின் ஊடே உள்ள தத்துவங்களைத் தெரிந்து கொண்டால் அப்பொழுதுதான் அவற்றின் பெருமை நன்கு விளங்கும்.

ஒரு தத்துவத்தை அப்படியே எடுத்துச் சொன்னால் அதில் சுவை தோன்றாது. அதைக் காவியமாகவோ கதையாகவோ புனைந்து சொன்னால் அதில் மனம் செல்லும்; ஆர்வம் உண்டாகும். புராணங்கள் சிறு குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளைப் போன்ற அமைப்பை உடையன; அதனால் அவற்றைச் சிசு சம்ஹிதை என்று வடமொழியில் சொல்வார்கள். “சத்தியம் பேசு” என்று மாத்திரம் சொன்னால் அது கேட்கப் பிடிப்பதில்லை. அதை ஒரு கதையில் வைத்துச் சொன்னால் சுவை பிறக்கிறது. சத்தியத்துக்காகவே ஒருவன் வாழ்ந்து, எத்தனை தடை வந்தும் சத்தியத்தையே பேசினான் என்று அரிச்சந்திரன் கதையைச் சொன்னால் காது கொடுத்துக் கேட்போம். சத்தியம் பேசு என்பது சாத்திரம் வேதமும் அப்படியே சொல்கிறது. அதையே அரிச்சந்திரன் கதையாகப் புராணம் சொல்கிறது. முதலிலே சொன்னது வெறும் தத்துவம்; பின்னாலே சொன்னது அந்தத் தத்துவத்தை உள்ளடக்கிய கதை. குழந்தைகளுக்குக் கதை சொல்லுவது போலப் புராணங்களை நம்முடைய பெரியவர்கள் ‘சொல்லியிருக்கிறார்கள்; திருவருளைத் துணையாகக் கொண்டு சொல்லியிருக்கிறார்கள்.

இறைவன் செய்தருளிய திருவிளையாடல்களைப் புராணங்கள் சொல்லுகின்றன. சில இடங்களில் முரண்பாடு இருப்பது போலத் தோன்றும். சிவபெருமானைப் பற்றிய கதைகள் பல. அவற்றுள் சிவபெருமான் காம சங்காரம் பண்ணினான் என்று ஒரு கதை வருகிறது. இறைவனுடைய மனத்தைக் கலைப்பதற்காகத் தன்னுடைய மலர் அம்புகளுடனும் கரும்பு வில்லுடனும் காமன் வந்தான். வந்தவுடன் தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து சிவ பெருமான் பார்த்தான். அதனால் காமன் எரிந்தான் என்பது கந்த புராணத் தில் வரும் கதை. அதற்குப் பின்பு இறைவன் தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்க, அந்த ஆறு பொறிகளும் சேர்ந்து சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகள் ஆயின. அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து முருகன் என்ற ஒரு மூர்த்தியாக ஆயின. இதுவும் கந்த புராணத்தில் உள்ள வரலாறே.

காமனை எரித்தான் சிவபெருமான் என்பதும், அவன் ஒரு குழந்தையைப் பெற்றான் என்ற செய்தியும் ஒன்றுக்கொன்று முரண்பாடுபோலத் தோன்றுகின்றன. முருகன் சிவபெருமானுக்குக் குழந்தை. உலகில் ஆணும் பெண்ணும் கலந்து இல்வாழ்க்கை நடத்தும்பொழுது அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்னாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உண்டாகிறது; காம நுகர்சியை அடைகிறார்கள். அதன் பயனாகக் குழந்தை பிறக்கிறது. ஆனால் இறைவனோ காமத்தைக் கடந்தவன். காம நுகர்ச்சியினாலே அவனுக்குப் பிள்ளை பிறந்தது என்று சொல்வது பொருந்தாது. அதைத்தான் புராணம் நுட்பமாகத் தெரிவிக்கிறது.

மற்றவர்கள் மாரனுடைய ஏவலினாலே காம நுகர்ச்சி பெற்றுக் குமாரர்களை அடைவார்கள். சிவபெருமானோ மாரனுடைய ஏவல் பலிக்காமல் அவனை அழித்தான்; அதற்கு அப்பால் குமாரன் பிறந்தான். குமாரனுடைய ஜனனம் மாரனுடைய முயற்சியினாலே வந்த ஜனனம் அன்று; ஞானத்தின் விளைவாக வந்த ஜனனம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தில் இந்த இரண்டு செய்திகளையும் ஒரு சேர வைக்கிறார்.

சோழ நாட்டில் உள்ள கலயநல்லூர் என்ற ஊருக்கு அவர் போனார். வழக்கம்போல அங்கே இருக்கின்ற இறைவனைத் தரிசித்தார்; தரிசித்துப் பதிகம் பாடினார். அதில் ஒரு பாட்டில் இந்த இரண்டு செய்திகளையும் ஒருங்கே வைத்திருக்கிறார். முருகனை இறைவன் அவதரிக்கச் செய்தான். அப்பெருமான் அவதாரம் செய்வதற்குக் காரணம் என்ன? தேவர்களுக்குரிய பொருள்களையெல்லாம் அசுரர்கள் வவ்விக் கொண்டு அவர்களை அடிமைப்படுத்தி விட்டார்கள். இந்திரன் கற்பகத்தோடும் காமதேனுவோடும் வாழ்ந்திருந்த வளவாழ்வை இழந்தான். அவன் எங்கோ போய் மறைந்து கொண்டான். அவனுடைய பிள்ளையாகிய சயந்தனை அசுரர்கள் சிறை வைத்துவிட்டார்கள். இந்திராணியும் எங்கோ ஒடுங்கிக் கிடந்தாள். தேவர்களின் வாழ்வு குலைந்து போயிற்று.

இந்த நிலையில் தேவர்கள் யாவரும் சென்று இறைவனிடம் முறையிட்டுக் கொண்டார்கள். இறைவன் பார்த்தான். ‘நாம் எத்தனையோ திருவிளையாடல்களைச் செய்திருக்கிறோம். இப்பொழுது நாமே முருகனாக அவதாரம் செய்வோம்’ என்று நினைத்தான். தன்னுடைய ஐந்து முகத்தோடு அதோ முகமாகிய ஒன்றையும் சேர்த்து ஆறுமுக நாதனாக எழுந்தருளினான்.

தானே தந்தையாகவும் தானே பிள்ளையாகவும் இருக்கும் நிலை இறைவனுக்கு உண்டு. நம் இயல்புக்கும் இறைவனுடைய இயல்புக்கும் வேறுபாடு உண்டு. தந்தை, பிள்ளை, மனைவி என்று இறைவனோடு சார்த்திச் சொல்லுகின்ற உறவு முறை உலகிலுள்ள மக்களின் உறவு முறையைப் போன்றது அல்ல. அது தத்துவத்தோடு சார்ந்த கருத்தையுடையது.

தானே தந்தையாகவும் தானே குழந்தையாகவும் இறைவன் தோன்றினான். குழந்தையாகத் தோன்றின போது முருகன் ஆனான். எதற்காக அவ்வாறு தோன்றினான்? தேவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ள, அவர்களுடைய இடுக்கண்களைத் தீர்த்து அசுரர்களைக் கொன்று மீண்டும் அவர்களுக்குரிய பதவியைத் தருவதற்காகத்தான் முருகன் திரு அவதாரம் செய்தான். அந்த அசுரர்களில் தாருகன் என்பவன் ஒருவன். அவன் ஆனைமுகம் உடையவன். அவனை முருகன் திரு அவதாரஞ்செய்து கொன்ற செய்தியைச் சுந்தரமூர்த்தி நாயனார் முதலிலே நினைக்கிறார். பல வகையான பலத்தை உடைய அசுரன் அவன். அவனைப் பொருது கொன்று உலகத்துக்கு இன்பத்தைத் தந்த பெருமான் முருகன். அந்த முருகனைத் திரு அவதாரஞ் செய்யும்படி செய்தவன் சிவபெருமான்.

பொரும்பலம துடை அசுரன் தாருகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துஉகந்த புனிதன்.

முருகனைப் படைத்து உகந்த புனிதன் இறைவன். முருகனுடைய திருவவதாரத்தால் யாவருக்கும் இன்பம் உண்டாவதனால், திரு உள்ளங்களித்தான் ஆண்டவன்.

இறைவன் குழந்தையைப் பெற்றது காம உணர்ச்சி யினாலே விளைந்த செயலா? அவன் காமனையே வென்ற பெருமான் அல்லவா?

கரும்புவிலின் மலர்வாளிக் காமன் உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன்.

கரும்பை வில்லாகவும் ஐந்து மலர்களை வாளியாகவும் கொண்டு, தன்னுடைய ஆணையை உலகத்தில் எங்கும் செலுத்தி வெற்றி பெறுகின்ற காமனுடைய உடலம் வெந்து பொடியாகும்படியாக, தன்னுடைய கனல் விழியைத் திறந்தவன்; நெற்றிக் கண்ணை உடையவன் ஆண்டவன்; காமனை எரித்தவன். அவனுக்குக் குமாரன் பிறந்தான்; அது காமத்தின் விளைவினாலே வந்தது அல்ல. மாரன் அழிந்த பிறகு குமாரன் தோன்றினான். மாரனுடைய மரணமும் குமாரனுடைய ஜனனமும் அடுத்தடுத்து நிசழ்ந்தன. காமத்தை அழித்து வீழ்த்து கின்ற ஞானமே திரு உருவாக முருகன் எழுந்தருளினான்.

அசுரர் என்றும் சுரர் என்றும் வேறு பிரித்துச் சொல்கின்ற இரண்டு சாதிகளும் இரண்டு வகையான குணங்களைக் காட்டுகின்றன. மனிதர்களுடைய உள்ளத்தில் தேவ சம்பத்து, அசுரசம்பத்து என்ற இரண்டு வகையான குணங்கள் இருக்கின்றன. அந்த இரண்டு குணங்களுக்கும் எப்பொழுதும் போர் நடந்து கொண்டே இருக்கிறது.

எப்பொழுது தீய சக்திகளுக்கும் நல்ல சக்திகளுக்கும் போர் உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் தேவாசுரயுத்தம் நடப்பதாகத்தான் கொள்ளவேண்டும். ஒவ்வொருவனுடைய மனமும் போர்க்களமாக இருக்கிறது. அந்த மனத்தில் தோன்றுகிற தீய எண்ணங்கள் நல்ல எண்ணங்களை அழிப்பதற்கு முயலுகின்றன. இறைவனுடைய திருவருள் இருந்தால் நல்ல எண்ணங்கள் வெல்லுகின்றன. இல்லாவிட்டால் தீய எண்ணங்கள் மேல் ஓங்கி நிற்கின்றன. புராணத்தில் வரும் போர்கள் இதைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன.

ஞானமே உருவானவனாகிய முருகன் அவதாரம் செய்தான். அஞ்ஞானத்தின் மயமாயிருந்த தாருகன், சூரன் முதலிய அசுரர்கள் இறந்து ஒழிந்தார்கள். முருகன் ஞான வடிவினன் என்பதை,

நீயான ஞான விநோதந் தனைஎன்று நீயருள்வாய்

என்று அருணகிரிநாதர் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சிவகுமாரனுடைய ஜனனம் மனித குமாரர்களுடைய ஜனனத்தைப் போன்றது அன்று. ஞானத்தின் விளைவாக வந்த திரு அவதாரம் அது. ஞானத்துக்குத் தடையாக இருக்கிற காமன் அழிந்த பிறகே குமாரன் எழுந்தருளினான்; அவதாரம் செய்தான். அவதாரம் செய்து அஞ்ஞானத்தின் உருவங்களாக இருந்த தாருகன் முதலியவர்களைப் பொருதான். மார தகனமும் குமார ஜனனமும் ஆருயிர்களுக்கு அஞ்ஞானம், காமம் முதலியவற்றைப் போக்கும் ஞானத்தையும், இன்பத்தையும் தருகிறவன் இறைவன் என்ற கருத்தையே புலப்படுத்துகின்றன.

பொரும்பலம துடை அசுரன் தாருகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்.

கம்புவிலின் மலர்வாளிக் காமன் உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன்.

[போரிடுகின்ற வலிமையை உடைய அசுரனாகிய தாருகனை எதிர்த்து அவனை அழியச் செய்த மகனாகிய முருகனை முன்பு தோற்றுவித்து மகிழ்ந்த தூய பெருமான், கரும்பு வில்லையும் மலரம்புகளையும் உடைய காமனது உடம்பு வேகும்படியாகத் தீயாக விழித்த நெற்றிக் கண்ணை உடையவன்.

பொரும்-போரிடும். பொன்றுவித்த-இறக்கச் செய்த. பொருள்- பிள்ளை. புனிதன்-தூயவன். விலின்-வில்லின்; விகாரம். வாளி-அம்பு. கனல் விழித்த-நெருப்புத் தோன்ற விழித்த. கண் நுதலோன்-கண்ணை நெற்றியில் உடையவன்.]

தலத்தைப் பற்றிய வருணனை பின்பு வருகிறது.

எம்பெருமான் உலகிலுள்ள மக்களையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று கருதி, சர்வாந்தர்யாமியாக இருந்தாலும் மூர்த்தியாகப் பல தலங்களிலே எழுந்தருளியிருக்கிறான். உலகிலுள்ள ஆருயிர்களைக் காக்கவேண்டும் என்று தானே திருவுள்ளத்தில் கொண்டு விரும்பி எழுந்தருளியிருக்கிறான். அவ்வாறு எழுந்தருளியுள்ள ஊர்கள் பல. ‘அவற்றில் இப்போது கூறப்புகும் ஊர் யாது?’ என்று கேட்டால் சுந்தரர் விடை கூறுகிறார்.

கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்

என்று ஆரம்பிக்கிறார்.

கலயநல்லூர் சோற்று வளம் நிரம்பிய சோழ நாட்டில் இருப்பது. நீர் வளமும் நில வளமும் நிறைந்தது சோழ நாடு; எங்கே பார்த்தாலும் காவிரியின் நீர் பரவி வளம்படுத்தும் நாடு. காவிரியிலிருந்து பிரிந்த பல ஆறுகள் அங்கங்கே பாய்ந்து வயல்களை ஊட்டுகின்றன. அத்தகைய ஆறுகளில் அரிசில் ஆறு என்பது ஒன்று. அந்த ஆற்றின் தென்கரையில் கலயநல்லூர் இருக்கிறது. அவ்வாற்றின் நீர்வளம் எத்தகையது? வெண்மையான அலைகளை வீசிக் கரைகளை மோதிக்கொண்டு வருகிறது ஆறு. குடகு மலையிலிருந்து வருகிற காவிரியின் கிளை அது. மலைகளையும் காடுகளையும் கடந்து வரும்பொழுது இடையிலே விளையும் பொருள்களைத் தன்னுடைய திரைக் கைகளாலே ஏந்திக் கொண்டு வருகிறது, காவிரி நதி; ஏலம் இலவங்கம் முதலியவற்றைத் தாங்கி வருகிறது. அவை அரிசிலாற்றிலும் நீரோடு வருகின்றன. இரண்டு கரைகளிலும் அவற்றை வீசுகின்றது.

இரும்புனல்வெண் திரைபெருகி ஏலம்இல வங்கம்
இருகரையும் பொருது அலைக்கும் அரிசில்

(மிக்க வெள்ளத்தின் வெண்மையான அலைகள் பெருகி, ஏலத்தையும் இலவங்கத்தையும் இரண்டு கரைகளிலும் மோதி அலையச் செய்யும் அரிசிலாறு.)

அரிசிலின் நீராலே வளம் பெறுகின்ற ஊரின் இயல்பு எப்படி இருக்கிறது?

அவ்வூரில் எங்கே பார்த்தாலும் பொழில்கள் நிரம்பி இருக்கின்றன. பொழில்களில் பலவகை மரங்கள் வானளவும் உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன. வேறு நிலங்களில் வளரும் மரங்களும் இங்கே வளர்கின்றன. நெய்தல் நிலத்தில் வளரும் புன்னை மரங்களையும் இங்கே காணலாம். அந்தப் புன்னையின் அடி மரம் கன்னங்கரேலென்று இருக்கிறது. அதன் பூவில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களும் உள்ளன. அதன் இதழ்களெல்லாம் வெள்ளையாக இருக்கும். கேசரங்கள் பொன்னிறம் பெற்றிருக்கும். அந்தக் கேசரங்களுக்கு நடுவில் முட்டை வடிவம் போன்ற ஓர் உறுப்புச் சிவப்பாக இருக்கும். இதழ்களெல்லாம் மூடிக்கொண்டு அரும்பாக இருக்கும்பொழுது பார்த்தால் புன்னையின் மொட்டு முகத்தைப் போலத் தோன்றும். கரும் புன்னை வெண்முத்து அரும்புகிறது. பின்பு மலர்கிறது. அப்போது அதனுடைய கேசரங்களெல்லாம் தோன்றுகின்றன.; அவை பொன்னிறம் பெற்றிருக்கின்றன.

முத்தாக அரும்பிப் பொன்னாக மலர்கிறது கரும்புன்னை.

கேசரங்களுக்கு நடுவிலே உருண்டையாகவும் சிவப்பாகவும் ஓர் உறுப்பு இருக்கிறது. பொன்னுக்கு நடுவில் பவளத்தைப் பதித்தது போன்ற காட்சியைத் தருகிறது அது. கரும்புன்னை வெண் முத்தை அரும்பிப் பொன்னை மலர்ந்து பவளத்தின் அழகைக் காட்டுகிறது. புன்னையின் மலர் நல்ல மணத்தை உடையது. வேறு மண மலர்களும் பொழிலில் இருக்கின்றன. எல்லாம் சேர்ந்து கம்மென்று மணக்கும் கடி பொழில்கள் கலயநல்லூரில் மிகுதியாக உள்ளன.

கரும்புனைவெண் முத்து அரும்பிப்
பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டும் கடிபொழில்சூழ்
கலயநல்லூர் காணே.

[கரிய புன்னை மரம் வெண்முத்தைப்போல அரும்புகளை விட்டுப் பொன்னைப்போல மலர்ந்து பவளத்தின் அழகைக் காட்டும் மணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கலயநல்லூர்.

புனை-புன்னை. கவின்- அழகு. கடி-நறுமணம். காண்-ஏ; அசை. வினவில், காணே என்றும் கூட்டிப் பொருள் கொள்ளலாம்.]

காமத்தைப் போக்குகின்ற பெருமான், அஞ்ஞான உருவமாகிய தாருகனை அழிக்க ஞான உருவாகிய முருகனைத் தோற்றுவித்த புனிதன், நீர்வளமும் நிலவளமும் பொருந்திய திருக்கலயநல்லூரில் எழுந்தருளியிருக்கிறான்.

பொரும்பலம் துடைஅசுரன் தாருகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த
புனிதன் கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல்
வேவக் கனல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்,
இரும்புனல்வெண் திரைபெருகி ஏலம்இல வங்கம்

இருகரையும் பொருது அலைக்கும் அரிசிலின்தென்
கரைமேல் கரும்புனைவெண் முத்து அரும்பிப்
பொன்மலர்ந்து பவளக் கவின் காட்டும்
கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.

கலயநல்லூர் என்பது கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறது. இப்போது சாக்கோட்டை என்று வழங்குகிறது.