அருளாளன்
கி. வா. ஜகந்நாதன்

பாடுதல் ஒழியேன்

இறைவனுடன் தோழமை பூண்ட சுந்தரமூர்த்தி நாயனார் சில சமயங்களில் அவர்பால் சினம் உடையவரைப் போலப் பாடுவதும் உண்டு. திருநாட்டியத்தான் குடி என்ற தலத்திற்கு அவர் சென்றார். அது சோழ நாட்டில் உள்ளது. அங்கே எம்பெருமான் இரத்தினகிரி நாதன் என்ற திருநாமத்தோடு எழுந்தருளி யிருக்கிறான். தேவியாருடைய திருநாமம் மலர் மங்கை யம்மை என்பது. அங்கே போய்ச் சற்றுச் சினங் கொண்டவர் போலப் பாட ஆரம்பிக்கிறார். “நான் தேவரீரை அடிக்கடி நினைந்து கொண்டும் அணுகிக்கொண்டும் பணிந்து கொண்டும் இருக்கிறேன். ஆனால் தேவரீர்தாம் என்னைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறீர்” என்ற கருத்திலே அவர் பாடலானார்.

இறைவனே, கண்டாலே அஞ்சி அகன்று போவதற்குரிய பொருள்கள் உன்னிடம் இருக்கின்றன. அவற்றைக் கண்டு அஞ்சி நான் உன்னை விட்டுச் செல்லமாட்டேன். உன்னுடைய உண்மையான பெருமையை உணர்ந்தவன் நான். புறத் தோற்றத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்ல.

‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள். உன்னுடைய திருமேனியில் பாம்பையே ஆபரணமாக அணிந்து கொண்டிருக்கிறாய். இடையிலே கட்டிய நாணும் பாம்புதான். உன்னுடைய பூணும் நாணும் பாம்பாக இருப்பதைக் கண்டால், “ஐயோ, பாம்புகள் நிரம்ப இருக்கின்றனவே!” என்று உன்னை அணுகுவதற்கே மற்றவர்கள் அஞ்சுவார்கள். அவர்கள் அஞ்சிச் செல்லச் செல்ல நீ அரிய பொருளாக விளங்குகிறாய். மற்றவர்களெல்லாம் அஞ்சும்படியும் அணுக இயலாதபடியும் உன் இயல்புகள் இருக்கின்றன. நான் உன்னுடைய உண்மைப் பெருமையை நன்கு உணர்ந்தவனாகையினால் இவற்றை யெல்லாம் கண்டு அஞ்சுவதில்லை.

பூண் நாண் ஆவதோர் அரவம்கண்டு அஞ்சேன்.

நீ சுடுகாட்டில் நடமாடுகிறாய். சுடுகாட்டுக்குச் சென்றால் வீட்டுக்குள்ளே நுழையும் வழக்கமில்லை; நீராடி விட்டுத்தான் வர வேண்டும். அது தவிர, சுடுகாடு என்று சொன்னாலே மக்களுக்கு அச்சம் உண்டாகிறது. அங்கே பிணம், பேய், பூதம் ஆகியவை இருப்பதாக நினைக்கிறார்கள். நீ அங்கே ஆடல் செய்கின்றாய் என்பதை நன்கு தெரிந்துகொண்டுங்கூட உன்னிடத்தில் எனக்கு இகழ்ச்சியான எண்ணம் உண்டாகவில்லை.

புறங்காட்டு ஆடல்கண்டு இகழேன்.

பாம்பைக் கண்டு அஞ்சாமல் உன்னைக் குறுகினாலும், புறங்காட்டிலே எல்லாரும் இகழும்படியாக ஆடல் செய்கின்றாய் என்பதை நினையாமல் உன்னை அணுகினாலும் நீ என்னிடத்திலே அன்போடு இருப்பதில்லை. ‘மற்றவர்கள் இவற்றைக் கண்டு இகழ்ந்து போய்விடுகிறார்கள். இவன் நம்மிடம் அன்போடு அணுகுகிறானே!’ என்று எனக்குச் சற்றே கருணை செய்கிறாயா? இல்லை. பராமுகமாக இருக்கிறாய். அப்படிப் பேணாமல் இருந்தாலும்கூட மறுபடியும் நான் உன்னை விடாமல் அணுகுகிறேன். உன்னுடைய உண்மையான பெருமையை நான் உணர்வேன். நான் உன்னை விட்டுவிட்டால் அதனாலே உனக்கு யாதொரு குறையும் இல்லை; எனக்குத்தான் நஷ்டம். உன் பெருமையையும் என் சிறுமையையும் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். அது காரணமாகவே உன்னை எப்போதும் நினைக்கிறேன். நீ என்னைப் பேணாமல் புறக்கணித்தாலும் நின் பெருமையை நினைக்கிறேன்; நின்னைக் குறை கூறுவது இல்லை. தமக்கு ஒருவர் நன்மை செய்தால் அவரைப் பெருமையை உடையவராக நினைப்பதும், தம்மைக் கவனிக்காமல் பராமுகமாக இருந்தால் அவர் பெருமையை மறந்து இழிவாக நினைப்பதும் உலகில் சிலருடைய இயல்புகள். உன் பெருமையை, அவ்வாறு இன்றி நீ என்னைக் கவனிக்காவிட்டாலும், நான் மறக்க மாட்டேன்; அதை நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்.

பக்தர்கள் தாம் மீட்டும் இந்த உலகில் பிறக்கும் பிறவி வராமல் இருப்பதற்காக உன்னைப் பணிகிறார்கள்; தியானிக்கிறார்கள். பிறவாமையாகிய பயனை அடைய அவர்களுடைய தியானம் பயன்படுகிறது. நான் உன் அருளால் பிறக்க மாட்டேன். இந்த உறுதி எனக்கு இருக்கிறது. பிறவாமைக்கு உரிய துணையாக இருப்பது உன் தியானம். ‘அது கிடைத்த பிறகு இந்தத் துணை எதற்கு?’ என்று நான் எண்ணவில்லை. நான் இனிப் பிறக்க மாட்டேன் என்று தெரிந்தும் உன்னை மறக்கமாட்டேன். ஒரு பயனைக் கருதி நினைக்கும் நினைப்பு அல்ல இது.

பிறவேன் ஆகிலும் மறவேன்.

நான் எந்த எந்தத் தலங்களுக்கோ வந்து உன்னைக் காண்கிறேன்; எங்கே எங்கே எப்படிக் காண வேண்டுமோ அப்படிக் காண முந்துகிறேன். ஆனால் நீயோ என்னைக் கண் எடுத்தும் பார்க்கவில்லை. நீ பார்க்கவில்லை என்பதனால் நான் உன்னைக் காணாமல் இருப்பதில்லை. மீண்டும் மீண்டும் உன் தரிசனத்தை அவாவிச் செல்கிறேன்.

காணீ ராகிலும் காண்பன்.

என்னுடைய மனத்தில் பிற பொருள்களிலே பற்று உண்டானால் உன்னை நினைக்க முடியாது. நானோ மற்றப் பற்று ஒன்றும் இல்லாமல் உன்னையே நினைத்துக்கொண்டிருக் கிறேன். இப்படி நான் இருப்பினும் உன்னுடைய திருவுள்ளத்திலே எளியேனுடைய நினைவு இருப்பதாகத் தோன்றவில்லை. அப்படி அதனை உணர்ந்தும் நான் உன்னை மறப்பதில்லை; என் மனத்தால் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். பிறிதொன்றை நினைப்பதில்லை; நினைத்தாலும் அது உன்னோடு தொடர் புடையதாகவே இருக்கும்.

என் மனத்தால், கருதீராகிலும் கருதி.

(கருதீராகிலும் என் மனத்தால் கருதி என்று கூட்ட வேண்டும்.)

நீ என்னைக் காண்பதில்லை; என்னை நினைப்பதில்லை; நான் காணும்படியான அழகான கோலத்தில் இருப்பதில்லை. ஆனாலும் நான் உன்னைக் காணுகிறேன்; கருதுகிறேன். அது மாத்திரமா? உன்னை நினைப்பதனாலும் காண்பதனாலும் என்பால் உண்டாகும் உணர்ச்சியை வடித்துப் பாட்டாகப் பாடிக்கொண்டே இருக்கிறேன். உன்னைக் கண்டால் உன்னுடைய கோலத்தைப் பற்றிப் பாடுகிறேன். உன்னை நினைத்தால் உன்னுடைய பெருமையைப் பற்றிப் பாடுகிறேன். பாடுவதே என்னுடைய வேலையாக இருக்கிறது. அந்த வேலையைத்தானே செய்யச் சொன்னாய்? நீ அப்படிக் கட்டளையிட்டமையினாலே, அந்தக் கட்டளைக்கு இணங்கி, உன்னுடைய அடியைப் பாடுதலை நான் ஒருநாளும் ஒழிய வில்லை.

நானேல் உன்அடி பாடுதல் ஒழியேன்.

உலகத்தில் உள்ள பொருள்கள் நம்முடைய பொறிகளை ஈர்க்கின்றன. அழகிய பொருள்கள் பல நம் கண்களைக் கவர்கின்றன. உலகத்துப் பொருள்களின் அழகிலே மயங்கின நமக்கு இறைவன் அழகனாக வந்தாலே கவர்ச்சி தோன்றாது. பாம்பை அணிந்துகொண்டு வந்தால் நாம் எங்கே காணப் போகிறோம்? அவனுடைய உண்மையான பெருமையை நன்கு உணர்ந்தவர்கள் அவனிடம் அன்பு கொள்வார்கள். அந்த அன்பினால், அவன் எப்படி இருந்தாலும் அவனைச் சார வேண்டும் என்று நினைப்பார்கள். இதுதான் உண்மையான பக்தர்களுடைய இயல்பு. அழகான பொருளைக் கண்டு அதனிடம் செல்வது குழந்தைகளின் இயல்பு. உலகிலுள்ள எல்லோரும் கண்ணுக்கு அழகான பொருளைக் காதலிப்பார்கள்.

இறைவன் நல்ல பக்குவம் உடையவர்களுக்கு அருள் செய்யவேண்டும் என்ற நினைப்பினால் மக்களுடைய மனத்தைக் கவராத வகையில் கோலம் கொள்கிறான். தன் திருமேனியிலே பாம்பை அணிந்திருக்கிறான். அதைக் கண்டு ஏமாந்து போகிறவர்கள் பலர். பாம்பு பூண்ட திருமேனியை நத்திச் செல்பவர் யார்?

எல்லாருக்கும் வாழ அழகான இடங்களைக் கொடுத்துத் தான் மாத்திரம் எல்லாரும் பயப்படுகின்ற இடத்திலே குடி இருக்கிறான், இறைவன். யாவருக்கும் அழகான அணிகளை யெல்லாம் கொடுத்துவிட்டுத் தான் மட்டும் நஞ்சுடைய நாகத்தைப் புனைந்திருக்கிறான். மிகப் பெரியவர்கள் பலருக்குப் பயன்படுகிற பொருள்களைத் தாம் பயன்படுத்திக் கொள்ளாமல் பிறருக்கே பயன் படும்படியாகச் செய்வார்கள்; மற்றவர்கள் பயன்படுத்தியது போக எஞ்சியதை உபயோகப்படுத்துவார்கள். ஒரு வீட்டிலே இருக்கிற தாய் தன்னுடைய கணவனுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உணவுப் பொருளைக் கொடுத்து விட்டு எஞ்சியிருப்பது வண்டலாக இருந்தாலும் கருகலாக இருந்தாலும் உண்ணுவது இயல்பு. அது அவளுடைய உண்மை அன்பினால் விளையும் செயல். அவ்வாறே எல்லாப் பொருள்களையும் உலகத்தில் உள்ள ஆருயிர்கள் நுகரும்படி படைத்தான் இறைவன். அழகான பொருள்களை அந்த மக்களும் தேவர்களும் அணிந்து கொள்ளச் செய்தான். தான் மாத்திரம் நஞ்சுடைய நாகத்தை அணிகிறான். பெரிய பெரிய இடங்களை, அழகான இடங்களை, அவர்களுக்குக் கொடுத்து விட்டுத் தான் மாத்திரம் சுடுகாட்டில் இருக்கிறான்; அங்கே ஆடுகிறான்.

சுடுகாட்டிலே ஏன் ஆடவேண்டும் இறைவன்? அங்கேதான் மக்களுக்கு நிலையாமை புலப்படும். எங்கே அவர்கள் நிலையாமையை உணருகிறார்களோ அந்த இடத்திலே ஆண்டவனுடைய அருள் தோன்றும். அதனால்தான் புறங் காடாகிய சுடுகாடு இறைவனுக்கு ஏற்ற கோயிலாகிறது. எத்தனையோ வகையான நிலையில் இருக்கிற மக்கள் நன்றாக வாழும்போது இறைவனை நினைக்கமாட்டார்கள்; தம்முடைய வாழ்வு நிலையாதது என்றும் நினைப்பதில்லை. ஆனால் யாரேனும் ஒருவர் இறக்கும்போது பிணத்தோடு சுடுகாட்டுக்குப் போனால், “நாளைக்கு நாமும் இப்படித்தான் இறப்போம்” என்ற நினைப்பு வருகிறது. யாராக இருந்தாலும் புறங்காட்டில் உலகம் நிலையாது, உடம்பு நிலையாது என்று தெரிந்து கொள்கிறார்கள். அது ஒருவகை ஞானந்தானே?

புறங்காட்டில் முதலில் உடம்பின் நிலையாமை தோன்றுகின்றது; இந்த உயிர் உடம்பிலிருந்து போய்விடும் என்ற பயம் உண்டாகிறது. அதன் பின்பு நமக்குத் துணையாக இருப்பவன் ஆண்டவன் என்ற பக்தி எழுகிறது. பயத்துக்குப் பின் உண்டாகும் பக்திதான் சிறப்பாக நிற்கும். பயபக்தி சுடுகாட்டில் எழுகிறது. எங்கே இறைவனிடம் பக்தி உண்டாகிறதோ அந்த இடம் கோயிலுக்குச் சமமானது.

இறைவனிடம் எவை இகழ்ச்சிக்கு உரியனவாக மற்றவர்களுக்குத் தோன்றுகின்றனவோ, அவை உண்மையை உணர்ந்து அன்பு செய்கிறவர்களுக்கு வேறு விதமாகத் தோன்றும்; இறைவனுடைய உண்மை இயல்புகளை அவை உணர்த்துகின்றன என்று தெரியும். அப்படித் தெரிந்து கொண்டவர் சுந்தரர்.

பூண்நாண் ஆவதோர் அரவம்கண்டு அஞ்சேன்;
புறங்காட்டு ஆடல்கண்டு இகழேன்;
பேணீர் ஆகிலும்பெருமையை உணர்வேன்;
பிறவேன் ஆகிலும் மறவேன்;
காணீர் ஆகிலும் காண்பன்; என்
மனத்தால் கருதீர் ஆகிலும் கருதி,
நானேல் உம்அடி பாடுதல் ஒழியேன்;
நாட்டியத் தான்குடி நம்பீ!

[திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! தேவரீருக்கு மேலே அணியும் அணிகளும் இடையில் அணியும் அரைநாணும் ஆக உள்ளவையாகிய பாம்பைக் கண்டு அஞ்சமாட்டேன்; சுடுகாட்டில் நீர் ஆடுவதைக் கண்டு இகழ மாட்டேன்; அடியேனைப் பாதுகாவாவிட்டாலும் உம்முடைய பெருமையை நன்கு உணர்வேன்; இனிப் பிறக்கமாட்டேனாயினும் உம்மை மறக்கமாட்டேன்; அடியேனைக் கண்ணெடுத்துப் பாராவிட்டாலும் அடியேன் உம்மைத் தரிசனம் செய்து கொண்டிருப்பேன்; தேவரீர் அடியேனைத் திருவுள்ளத்தில் கொள்ளீரானாலும் என் மனத்தில் தேவரீரை நினைத்து உம்முடைய திருவடியைப் பாடுதலை என்றும் ஒழிந்திருக்க மாட்டேன்.

பூண் – அணி, நாண்-அரை நாண். பாம்புகள் பலவானாலும் எல்லாவற்றையும் தொகுதியாக்கி, ஆவது என்று ஒருமையால் சொன்னார்; தொகுதி யொருமை. புறங்காடு-சுடுகாடு. என் மனத்தாற் கருதிப் பாடுதல் ஒழியேன் என்று கூட்டுக. நானேல்- நானோ. நானேல் உணர்வேன், மறவேன், காண்பன், பாடுதல் ஒழியேன் என்று கூட்டுக. நம்பி; விளி; நம்பி;தலைவன்; ஆணிற் சிறந்தான்.]