அருளாளன்
கி. வா. ஜகந்நாதன்
சொல்லாய்க் கழிகின்றது
ஒரு கனவான்; அவர் பலகாலம் தமக்குச் சொந்தமாக ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்; கட்டத் தொடங்கினார். அந்த வீட்டில் எல்லா விதமான வசதிகளையும் அமைக்க முயன்றார். அதன் முகப்பு மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். முகப்பைப் பார்த்த மாத்திரத்தில் யாவரும் வியந்து பாராட்ட வேண்டும் என்பது அவருடைய அவா. அப்படியே நல்ல வாசலாகச் செய்து அற்புதமான சிங்காரங்களை அமைத்துத் தோரணங்களைக் கட்டினார். வீடு கட்டி நிறைவேறியது. நல்ல நாளில் வீட்டுக் குள்ளே புகுந்தார்; அதிலே வாழத் தொடங்கினார்.
அவர் நல்ல ஆடை ஆபரணங்களைப் புனைந்தார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நித்தம் ஓர் உடை உடுத்து எல்லா மக்களுக்கும் தம்முடைய வள வாழ்வின் பெருமையைக் காட்டிக் கொண்டிருந்தார். அவருடைய உடம்பு வரவரப் பருத்தது.
சில காலம் கழித்து அவருடைய இளமை மாறியது. கரு மயிர் நரைத்தது. உடம்பு மெலிவடைந்தது. யார் யாரோ மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள்; மருத்துவத்தினாலே தீராத நோய் என்று சொன்னார்கள். கடைசியில் அவர் இறந்து போனார்.
அந்த வீட்டில் அவர் நிரந்தரமாக இருக்கவில்லை. ‘நல்ல மாளிகையை அமைத்து அலங்காரமான வாசலைக் கட்டி உள்ளே போய் வந்து நடந்தார். அழகான உடைகளை உடுத்தார். பின்பு இளமை மாறி நரைத்தார். இப்பொழுது இறந்து போனார்’ என்று அவருடைய சரித்திரத்தை எல்லாரும் சொல்லிக் கொண்டார்கள்.
அவர் இருந்த காலத்திலே யாவரும் கண்ணாரக் காணும் படியாக நடந்தார்; உடுத்தார்; நரைத்தார். இறந்தபிறகு அவர் செய்தவற்றையெல்லாம் செய்திகளாகப் பேசிக் கொண்டார்கள் மக்கள். இப்பொழுது அவரைப் பற்றியவை எல்லாம் வெறும் வார்த்தைகளாகக் கழிகின்றன. உண்மையான நிகழ்ச்சிகளாக முன்பு இருந்தவை கண்ணிலே காண முடியாமல் இறந்த காலத்துச் செய்திகளாகி, இப்பொழுது வெறும் சொல்லாகி நிற்கின்றன. அந்தச் சொல்லாவது நிலைத்து நிற்கிறதா? அதுவும் இல்லை. இறந்த புதிதில் சில காலம் இறந்தவரைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ‘அடடா! என்ன உயர்ந்த மாளிகை கட்டினார்! அந்த அலங்காரமான வாசலைத்தான் எவ்வளவு ஆசையோடு அமைத்தார்! அதற்கு எத்தனை பணம் செலவழித்தார்!” என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பின்பு சில காலம் கழிந்தால் அவருடைய நினைப்பும் மறந்து போகிறது. அவரைப்பற்றிப் பேசுவதும் நின்றுவிடுகிறது. மறுபடியம் புதிதாக இறந்தவர்களைப் பற்றிப் பேசுகிறோம்.
இப்படி அவர் கழிய, அவரைப்பற்றிய செய்திகள் சொல்லாய்க் கழிகின்றன. உலகத்தில் உள்ள எல்லா மக்களுடைய திறத்திலும் இதே நிலையைப் பார்க்கிறோம். இதுதான் வாழ்வு.
நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்
நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க்கழி கின்றது.
சுந்தரமூர்த்தி நாயனார் இப்படி ஒரு பாட்டில் சொல்கிறார். ‘இதனை நான் அறிந்தேன். உலக வாழ்க்கைச் செய்திகளெல்லாம் இறந்த காலத்தில் சொல்லும் படியாக அமைகின்றனவே ஒழிய, எதுவும் நிலையாகச் சொல்லும்படி இருப்பதில்லை. அவ்வாறு இறந்த காலத்தோடு சொல்லும் சொல்லாவது நிற்கிறதா என்றால், அந்தச் சொல்லும் கழிந்துவிடுகின்றது’ என்று சொல்கிறார்.
உலக வாழ்வின் நிலையாமையைத் தெரிந்துகொண்ட போது, நிலைத்த விலாசத்தோடு நிலையாக வாழ்கிறவன் யார் என்று ஆராய்ச்சி பண்ணத் தோன்றுகிறது. அந்த ஆராய்ச்சியிலே, யாரும் எளிதில் தட்டுப்படுவதில்லை. எல்லோரும் இப்படியே, ‘நல்வாயில் செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார், இறந்தார்’ என்று சொல்லும்படியாகவே, பிறப்பதும் வளர்வதும் வாழ்வதும் இறந்து படுவதுமாகவே இருக்கிறார்கள். ஒருவரும் நிலையானவர் இல்லையா? இறைவனுடைய அருள் துணை செய்யும்பொழுது, நீடு வாழ்வார் இன்னாரென்ற தெளிவு பிறக்கிறது.
சில காலம் ஓரிடத்தில் வாழ்ந்து பின்பு மறைகின்றவர்கள் மக்கள். அவர்கள் மலத்தோடு சம்பந்தம் உடையவர்கள். அதனால்தான் பிறக்கிறார்கள்; இறக்கிறார்கள். அப்படி இன்றி நீடு உறையும் நின்மலன் ஒருவன் இருக்கிறான். அந்த நின்மலனைத் தெரிந்து கொள்ளும்படி அவனுக்கு ஓர் அடையாளம் இருக்கிறது. அவன் தன் தலையிலே நிலாவைத் தரும் வெண்மதியைச் சூடியிருக்கிறான். மதியை அறிவுக்கு அடையாளமாகச் சொல்வது வழக்கம். இறைவனுடைய திருமுடியிலே சந்திரன் ஒளிர்கின்றான் என்பது, அவன் எப்பொழுதும் ஞானம் நிறைந்தவன் என்பதைக் காட்டுகின்றது. அவன் சூடிய மதியே தேய்வதும் வளர்வதும் இன்றி எப்போதும் இளம் பிறையாக இருக்கிறது. நிலாவை வீசும் வெள்ளை மதியைச் சூடிய நின்மலனாகிய இறைவன் நீடு உறைகின்றான்; தன்னுடைய விலாசத்திலே நெடுங்காலமாக வாழ்கின்றான். ‘நல்வாயில் செய்தார், நடந்தார், உடுத்தார், இறந்தார்’ என்று சொல்வது போலன்றி, எப்பொழுதும் இருக்கிறான் என்று சொல்லும்படியாக உறைகிறான். அப்படி உறைகிறவனுக்கு, கைலாசம் என்று குறிப்பிட்டுச் சொல்லும் விலாசம் ஒன்று மாத்திரமல்ல; மதுரை, சிதம்பரம் என்று சில விலாசங்கள் மாத்திரமும் அல்ல; அவன் எத்தனையோ இடங்களில் ஒரே சமயத்தில் உறைகிறான். ஒரே இடத்தில் சில காலமே மக்கள் வாழ்கிறார்கள். உயிர்கள் பல பல இடங்களில் மாறி மாறிப் பிறக்கின்றன; பின்பு இறக்கின்றன. இறைவனோ எல்லா இடத்தையும் தன்னுடைய விலாசமாகக் கொண்டு எல்லாக் காலத்திலும் இருக்கிறான்.
எல்லா இடங்களிலும் இருந்தாலும் அவன் மக்களுக்கு அருள் செய்கின்ற சில இடங்களைப் பெரியோர்கள் நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அவற்றைத்தான் தலங்கள் என்று சொல்லுகிறோம். ஒரு விலாசத்தை மிகப் பெரியவர்கள் சொன்னால் அது நாலு பேருக்குத் தெரிகிற ஊர் ஆகிவிடுகிறது. எல்லாக் கோயில்களிலும் இறைவன் எழுந்தருளியிருந்தாலும், பெரியோர்களாகிய சமயாசாரியர்கள் தங்களுடைய திருவாக்காகிய தேவாரம் முதலியவற்றாலே இறைவன் வாழும் இடம் இது என்று ஒன்றைச் சுட்டிக் காட்டும்பொழுது, அந்த இடத்துக்குப் பெருமை அதிகம் ஆகின்றது. பெரியவர்கள் எந்த இடத்தில் அதிகமாகப் பழகுகிறார்களோ அந்த இடத்துக்கு மகிமை மிகுதியாக இருப்பதை உலகில் பார்க்கிறோம்.
சுந்தரமூர்த்தி நாயனாரைப் போன்ற பெரியவர்கள் ஏதேனும் ஒரு தலத்துக்குச் சென்று அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பணிந்து வழிபட்டுத் தம்முடைய திருவாக்காலே மங்களாசாசனம் செய்துவிட்ட பிறகு அது பலருக்குத் தெரிகின்ற சிறப்பான இடம் ஆகிவிடுகிறது; பாடல் பெற்ற தலம் என்ற முத்திரையைப் பெறுகிறது.
இப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்வாயில் அரத்துறை என்ற இறைவன் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கே இறைவன் நீடு உறைகின்றான் என்பதை அறிந்தார். அதற்கு முன்னாலே அவர் அறிந்தது என்ன? ‘நல்வாயில் செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார், இறந்தார்’ என்று பிற மக்களைப்பற்றி நானிலத்தில் உள்ள எல்லோரும் சொல்லிச் சொல்லி, அந்தச் சொல்லும் அப்பால் கழிந்துவிடுகிறதை அறிந்தார். அதற்கு மேலே நெல்வாயில் அரத்துறையில் நீடு உறைகின்ற நிலா வெண்மதி சூடிய நின்மலன் ஒருவன் இருக்கின்றான் என்பதையும் நன்றாக அறிந்தார். அந்த விலாசத்தைத் தெரிந்து கொண்டாயிற்று; அந்த இடம் எத்தகையது என்று பார்க்க வேண்டாமா?
வீட்டின் விலாசம் தெரிந்துவிடுகின்றது.
வீட்டை விசாரித்துக் கொண்டு வீதியிலே செல்கிறோம். அது வரைக்கும் அதனுடைய எண்ணை மாத்திரம் தேடிக் கொண்டு வந்த நாம், வீடு தெரிந்த பிறகு உள்ளே புகுந்து அங்கே இருக்கிற அழகான அறைகளையெல்லாம் பார்க்கிறோம். ‘எவ்வளவு விசாலமான கூடம்! எத்தனை அறைகள்! அவற்றில் உள்ள அலங்காரங்கள் என்ன!’ என்று எல்லாவற்றையும் பார்த்து மாளிகையின் அழகைக் கண்டுகளிக்கின்றோம். அப்படியே சுந்தரமூர்த்தி நாயனார் நெல்வாயில் அரத்துறை என்னும் இடத்துக்கு வந்து ஆண்டவன் நீடு உறைகின்ற தலமென்று அறிந்து, பார்க்கிறார். நெல்வாயில் என்பது தலத்தின் பெயர்; அரத்துறை என்பது கோயிலின் பெயர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அந்தத் தலத்தின் அழகையெல்லாம் பார்க்கிறார்.
“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்”
என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். இந்தத் தலம் அழகுடைய ஊர்; ஆறு உள்ள ஊர்.
இங்கே வெள்ளாறு என்ற ஆறு ஓடுகிறது. அதை நிவா என்றும் சொல்லுவார்கள். அந்த வெள்ளாற்றின் கரையின்மேல் நெல்வாயில் அரத்துறை அமைந்திருக்கிறது.
வெள்ளாறு அந்த ஊரிலே தோன்றி நின்றுவிடுவதா? இல்லை. அது மலையிலே பிறந்து இடையிலே பல காடுகளை யெல்லாம் கடந்து நெல்வாயிலையுந் தாண்டிச் செல்கிறது. மலையிலிருந்து வருவதற்கு அடையாளமாக அதில் உள்ள பண்டங்களை அது அடித்து வருகிறது; மலையிலே வளர்கிற பொருள்கள் பல; அவற்றில் அகில் ஒன்று. இயற்கையிலே மலையில் இருக்கின்ற பொருள்கள் பல; மணிகள், வைரங்கள் அங்கே நிறைந்திருக்கின்றன. கல்லுக்கு இடையிலே வளர்ந்திருக்கின்ற அகிலை அரித்துக் கொண்டு நிவா என்ற வெள்ளாறு வருகிறது. அது மாத்திரமா? ஒளி வீசக்கூடிய மணிகளையுங் கொண்டு வேகமாக வருகிறது.
கல்வாய் அகிலும் கதிர்மா மணியும் கலந்து உந்தி,
அத்தகைய நிவாவின் கரையின்மேல், நெல்வாயில் அரத்துறையிலே நெடுங்காலமாக உறைகின்ற நின்மலனாகிய நிலா வெண்மதி சூடியைப் பார்த்துச் சுந்தரர் பேசுகிறார். பிறைசூடியைப் பார்த்துப் பேசுவதிலே அவருக்கு எப்பொழுதும் விருப்பந்தானே? அவனிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளுகிறார். ‘உலகத்தில் யார் யாரையோ போய்க் கண்டேன். அவர்களுடைய செய்தியைக் கேட்டேன். அவர்களெல்லாம் வாழ்ந்தார்கள்; செத்தார்கள் என்று கேட்கிறேனே ஒழிய, வாழ்ந்து நிலையாக உறைகிறார்கள் என்று கேட்கவில்லை. நிலையாக உறையும் நின்மலன் நீ என்று அறிந்தேன். உன்னிடத்தில் இப்பொழுது வந்தேன். உன்பால் ஒரு விண்ணப்பம் செய்துகொள்ளுகிறேன். அடியேன் உன்னைத் தொடர்ந்தேன். நான் மற்றவர்களைப்போல் வாழ்ந்து இறந்து படாதவாறு உய்வதற்குரிய வழியை நீ சொல்லவேண்டும்’ என்று கேட்கிறார்.
….அடியேன் தொடர்ந்தேன்
உய்யப் போவதோர் சூழல் சொல்லே.
இறைவன் ஒருவன்தான் நிலையாக இருப்பவன் என்பது முதலில் அவ்வளவு சிறப்பாகத் தெரியாது. உலகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையாதது என்பதே முதலில் கண்கூடாகத் தெரியும். அதன் பிறகே இறைவனைத் தொடரும் முயற்சி எழும். அவனைத் தொடர்ந்து உய்யவேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகும்.
கல்வாய்அகி லும்கதிர் மாமணியும் கலந்துந்தி
வரும்நிவ வின்கரைமேல் நெல்வாயில் அரத்துறை
நீடுறையும் நிலவெண்மதி சூடிய நின்மலனே!
நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார் நரைத்தார்
இறந் தாரென்று நானிலத்தில் சொல்லாய்க்கழி
கின்றது அறிந்தடியேன் தொடர்ந்தேன்உய்யப்
போவதோர் சூழல்சொல்லே.
[கல்லினிடையிலே வளர்ந்த அகிலையும் ஒளியை வீசும் பெரிய வைரம் முதலிய மணிகளையும் கலந்து தள்ளிக்கொண்டு வரும் வெள்ளாற்றின் கரைமேல் திருநெல்வாயில் அரத்துறையில் நெடுங்காலமாக எழுந்தருளியிருக்கும், நிலாவை வீசும் வெள்ளைச் சந்திரனைத் திருமுடியில் வைத்திருக்கும் தூய பெருமானே! ‘நல்ல வாயிலை அமைத்தார்; வீட்டுக்குள் நடந்தார்; வேண்டிய உடைவகைகளை உடுத்தார்; பிறகு மயிர் நரைக்கலானார்; முடிவில் இறந்தார்’ என்று உலகத்தில் வாழ்வானது வெறும் சொல்லாகிப் பின்பு அச் சொல்லும் கழிவதை அடியேன் அறிந்து நின்னைத் தொடர்ந்து புகலாகப் புகுந்தேன். நான் உறுதி பெற்று உய்யப் போவதற் குரியதாகிய ஓரிடத்தைச் சொல்.
கல்-பாறை. மா-பெரிய, நிவா என்றது நிவவு என்று வந்தது, நிலா நிலவு என்று வந்தது போல. நீடு-நெடுங்காலம். நிலா என்பது நில என்று செய்யுளிற் குறைந்து வந்தது. நின்மலன்-மலம் அற்றவன்; இறைவனாகிய பதி இயல்பாகவே மலங்களினின்றும் நீங்கினவன். வாயில்-வீட்டு வாயில்; வாயில் செய்தார் என்றாரேனும் வீட்டைக் கட்டியதையே கருதினார். நானிலம்-உலகம்; நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரித்துச் சொல்வது தமிழ் மரபு. பாலை என ஒன்று இருப்பினும் அது இயற்கையான நிலப் பகுதி அன்று; சில காலத்தில் சில இடங்களில் பாலைத் தன்மை உண்டாகும். இயற்கையாக இருப்பவை பாலையைத் தவிர மற்ற நான்குமேயாகும். அதனால் நிலத்தை நானிலம் என்று சொல்வது தமிழில் ஒரு மரபாகிவிட்டது. சொல்லாய்க் கழிகின்றது. சொல்லாகி வீணாகின்றது. கழிகின்றது என்பதற்கு வாழ்க்கை என்ற எழுவாயை வருவித்துக்கொள்ளவேண்டும். சூழல்-இடம். இடம் என்றது நிலப் பகுதியை அன்று; ‘யாரிடம் போவேன்?” என்று கேட்பதுபோல, ‘எவ்விடம் செல்வேன்’ என்று கேட்கிறார்.]
‘நான் உய்வதற்குரிய இடம் வேறு இல்லை’ என்பது குறிப்பு.
திருநெல்வாயில் என்பது நடுநாட்டில் உள்ள தலம். இது ஏழாந் திருமுறையில் மூன்றாம் திருப்பதிகத்தில் உள்ள முதற்பாட்டு.