அருளாளன்
கி. வா. ஜகந்நாதன்
அருளாளன்
கொட்டு மேள ஒலி இனியதாகக் கேட்கிறது. நாயனத்தின் ஒலியும் நெடுந்தூரம் வரைக்கும் கேட்கிறது. பெரிய ஆரவாரம்; ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கிழவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரே ஆரவாரம் செய்கிறார்கள். இது ஏதோ ஒரு கல்யாண ஊர்வலம் போல இருக்கிறது. ஆம்! கல்யாண ஊர்வலந்தான்! பேரழகர், சிறந்த காளை, திருநாவலூரராகிய நம்பியாரூரர் தம் கல்யாணத்தின் பொருட்டு ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறார். அவர் குதிரையின்மேல் செல்கிறார்.
மாப்பிள்ளை அழைப்பு மிகவும் சிறப்பாக நடக்கிறது. ஊர்வலம் புத்தூர் என்ற ஊரை அணுகிவிட்டது.
அப்பொழுதுதான் அந்தக் கிழவர் எதிர்ப்பட்டார். “என்ன கல்யாணம்?” என்று கேட்டார்.
”இந்த ஊர்க் குருக்களையாவின் பிள்ளைக்குக் கல்யாணம்; நம்பி ஆரூரருக்குக் கல்யாணம்” என்று சொன்னார்கள்.
”அப்படியா? நம்முடைய ஆரூரனுக்கா?” என்று கேட்டார்.
.”ஆமாம். அதே பிள்ளைக்குத்தான்” என்று அவர்கள் சொன்னார்கள்.
”எங்கே, எந்த ஊரில் நடக்கிறது கல்யாணம்?”
”இந்த ஊரிலே சடங்கவி சிவாசாரியாருடைய பெண்ணுக்கும் நம்முடைய நாவலூர் நம்பிக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது” என்று அவர்கள் சொன்னார்கள்.
அதைக் கேட்டாரோ இல்லையோ, அந்தக் கிழவனாருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.
“அது எப்படி நடக்கலாம்? அவன் என்னுடைய அடிமை அல்லவா? இதோ நான் போய்க் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன். எனக்குக் கல்யாணப் பத்திரிகை கிடையாது. என்னுடைய வார்த்தையைக் கேட்காமல் என்னுடைய அடிமைக்கு எப்படிக் கல்யாணம் பண்ணலாம்?” என்று அவர் மிகவும் சினந்து கூட்டத்துக்கு நடுவிலே எப்படியோ புகுந்துவிட்டார். புகுந்து நேராக அந்த ஒற்றைப் பிராம்மணர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன்னாலே எதிர்ப்பட்டார். “நில். நமக்கும் உனக்கும் ஒரு வழக்கு இருக்கிறது” என்று சொன்னார். யாரோ ஒரு கிழவர் இப்படிக் கல்யாண ஊர்வலத்தை வந்து கெடுக்கிறாரே என்று நம்பி ஆரூரருக்குக் கோபந்தான் வந்தது.
‘“என்ன வழக்கு? அதைச் சொல்லும். அதைத் தீர்த்துவிட்டு மேலே செல்கிறேன்” என்றார்.
“நீ என்னுடைய அடிமை. என்னுடைய உத்தரவு இல்லாமல் எப்படி நீ மணம் செய்து கொள்ளலாம்?” என்று கிழவர் கேட்டார்.
“இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அந்தணனுக்கு அந்தணன் அடிமையாவது! இந்த உலகத்தில் கேளாத செய்தியாக இருக்கிறதே! நீர் பித்தரோ?” என்று சுந்தரர் சிரித்தார்.
“ஆம். நீ சிரிக்கத்தான் சிரிப்பாய். உன்னுடைய தாத்தா காலம் முதலே அடிமைத்தனம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது” என்றார் கிழவர்.
“அதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டார் ஆரூரர்.
“உன் பாட்டனார் எழுதி அளித்த ஓலை இருக்கிறது. வெறும் பேச்சுப் பேச வேண்டாம். எனக்குப் பணி செய்ய வேண்டும்.”
அவருடைய வடிவத்தைக் கண்டபோது சுந்தரருடைய உள்ளம் உருகியது. ஆனால் அவர் வார்த்தையைக் கேட்ட போது சினம் மூண்டது. “எங்கே, அந்த ஓலையைக் காட்டும்; பார்க்கலாம்” என்றார்.
“உனக்கு நான் ஓலை காட்டவேண்டுமோ? சபையினர் முன் காட்டி உன்னை வேலை செய்யச் செய்கிறேன்” என்று அந்தணர் மிடுக்காகப் பேசினார்.
அப்போது நாவலாரூரர் வெகுண்டு வேகமாக அம் முதியவரைப் பற்றச் சென்றார். அவர் மணப் பந்தலுக்குள்ளே ஓட, சுந்தரர் அவரை விரைந்து சென்று பற்றி அவர் கையில் இருந்த ஓலையைப் பிடுங்கி, “அந்தணர் அடிமை வேலை செய்வதாம்!” என்று அதைக் கிழித்து விட்டார்.
அது கண்டு அருகில் உள்ளவர்களைப் பார்த்து அந்தணர் முறையிட்டார். அப்போது அயலில் நின்றவர்கள் சுந்தரரை விலக்கி, “புதியதாக உலகில் இல்லாத செய்தியைச் சொல்லும் அந்தணரே, நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “நான் இதோ அணிமையில்தான் இருக்கிறேன். வெண்ணெய் நல்லூர்தான் என் இருப்பிடம். அது கிடக்கட்டும் ஐயா; இவன் அக்கிரமமாக என் கையில் இருந்த ஓலையை வாங்கிக் கிழித்துவிட்டான். இதுவே இவன் எனக்கு அடிமை என்பதைக் காட்டவில்லையா? ஓலை இருந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று அதைக் கிழித்து விட்டான்” என்றார்.
அப்போது ஆரூரர், “உமக்கு வெண்யெய் நல்லூர் சொந்த ஊரானால், அந்த ஊரிலுள்ள சபையினரிடம் போய் இந்த வழக்கைப் பேசலாம், வாரும்” என்றார்.
‘நல்ல காரியம்! வெண்ணெய் நல்லூருக்கு வா. அங்குள்ள வேதியர்களின் முன் மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதைச் சாதிக்கிறேன். நல்ல வேளை! நீ கிழித்தது படி ஓலைதான்” என்று தம் கைத் தடியைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார் வேதியர்.
அவரைத் தொடர்ந்து சுந்தரரும் அவருடைய சுற்றத்தாரும் ஏனையோரும் சென்றார்கள். திருவெண்ணெய் நல்லூர்ச் சபைக்குச் சென்று அவையிலிருந்த அந்தணர்களிடம் தம் வழக்கை முறையிட்டார் முதிய வேதியர்.
சுந்தரரோ, “எல்லாச் சாத்திரங்களையும் தேர்ந்த பெரியவர்கள் நீங்கள். நான் ஆதி சைவ அந்தணன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த அந்தணர் என்னைத் தம் அடிமை என்று சொல்கிறார். இது முறையாகுமா?” என்று கேட்டார்.
“இவர் உமக்கு அடிமை என்று வல்வழக்கு இடுகிறீரே! அதற்கு ஏதேனும் அநுபோக பாத்தியம் உண்டா? ஆவண ஓலை உண்டா? அல்லது வேறு சாட்சி உண்டா? இந்த மூன்றில் ஒன்றேனும் காட்ட முடியுமா?” என்று அவையோர்கள் வேதியரைக் கேட்டார்கள்.
“இதோ மூல ஓலை வைத்திருக்கிறேன்.”
“எங்கே காட்டும்.”
“இவன் அதையும் கிழித்துவிட்டால்-?”
“நீர் அஞ்ச வேண்டாம். உமக்கும் உம்முடைய ஓலைக்கும் ஒரு தீங்கும் வரவொட்டோம்.”
அதன் பின், அடிமை கொண்ட ஐயர் ஓலையை எடுத்துக் கொடுக்க ஊர்க்கரணத்தான் வாங்கிப் படிக்கத் தொடங்கினான்.
”திருநாவலூர் ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதியது. திருவெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்னுடைய பரம்பரையில் வருகிறவர்களும் அடிமை. இதற்கு இவ்வோலை எழுதினேன். இது என் எழுத்து.”
ஓலையிலுள்ள வாசகத்தைக் கேட்டு, அதில் சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் பெயர்களையும் யாவரும் கேட்டனர். அப்பால் அந்த எழுத்து, சுந்தரருடைய பாட்டனாருடையது தானா என்ற ஆராய்ச்சி பிறந்தது. ஆவணக்களரியிலிருந்து அவர் எழுதிய பழைய ஓலை ஒன்றை வருவித்து ஒப்பு நோக்கினார்கள். எழுத்து இரண்டும் ஒத்திருந்தன.
வெண்ணெய்நல்லூர்க் கிழவர் கூறுவது உண்மையே என்று தீர்ப்புச் செய்தனர் அவையிலுள்ள பெரியோர். இந்த நிகழ்ச்சியைக் கண்டு அங்கிருந்த யாவரும் வியப்படைந்தனர். அந்தணர்கள் அவரை நோக்கி, “நீர் இவ்வூர் என்று சொல்கிறீர். இங்கே நீர் இருக்கும் வீடு எது? எப்படி வாழ்க்கை நடத்துகிறீர்?” என்று கேட்டார்கள்.
“என்னை உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால் வாருங்கள்; என் இருப்பிடத்தைக் காட்டுகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டார் அந்தணர். அவரைத் தொடர்ந்து நம்பி ஆரூரரும் மற்றவர்களும் சென்றார்கள். அவர் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தார்.
ஆரூரர் கோயிலுக்குள் புகுந்து, ‘எம்பிரான் கோயிலுக்குள் இவர் வந்தது எதற்காக?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது, இறைவன் உமாதேவியாரோடு விடையின்மேல் அமர்ந்த திருக்கோலத்தைக் காட்டியருளினான். “முன்பு நீ நமக்குத் தொண்டன். பின்பு நம்முடைய ஏவலால் பூவுலகில் பிறந்தாய். நாம் தடுத்தாட்கொள்வதாகச் சொன்னபடி இப்போது ஆட்கொண்டோம்'” என்று ஒரு தெய்வக் குரல் கேட்டது.
அந்த வாக்கைக் கேட்ட ஆரூரருக்கு உடம்பெல்லாம் புளகம் போர்த்தது. கீழே விழுந்து பணிந்து எழுந்து நின்றார். கண்ணீர் ஆறாய்ப் பெருகிறது. “எளியேனை ஆட்கொள்ளும் பொருட்டுத் தேவரீரோ எழுந்தருளியது? இதனை அறியாத அசடனாகி விட்டேனே!” என்று ஆராமை மீதூரக் கதறினார்.
“நீ நம்மை வன்மையாகப் பேசினாய்; ஆதலால் உனக்கு வன்றொண்டன் என்னும் பெயர் வழங்குவதாகுக! நீ மலரால் நம்முடைய திருமேனி தீண்டி அருச்சிக்கும் குலத்திற் பிறந்தாய். ஆயினும் நமக்கு மிக்க விருப்பமான அருச்சனை பாட்டேயாகும். ஆதலால் நம்மை நீ செந்தமிழ்ப் பாடலால் பாடுவாயாக” என்று இறைவன் திருவாய் மலர்ந்தருளினான்.
“அந்தணத் திருக்கோலம் பூண்டு வழக்குப் பேசி வந்து உண்மையறியாத இந்தப் பேதையை ஆட்கொண்ட பெருமானே, தேவரீருடைய பெருங் கருணையை அறியாமல் நான் முரடனாக இருந்தேனே! தேவரீர் பெருமையை உணராத இந்த ஏழை எப்படிப் பாடுவேன்! தேவரீருடைய குணம் கடலைப் போன்றது. அதை எப்படி அறிந்து பாடப் போகிறேன்!”
”அப்பா, நீ என்னைப் பித்தன் என்று சொன்னாய் அல்லவா? அந்தச் சொல்லையே வைத்துப் பாடு. நீ என்னை முதல்முதலாக அறிந்த வகை அதுதானே? அப்படியே பாடு.”
இவ்வாறு இறைவன் கட்டளையிடவே, வன்றொண்டர் பாடலானார்.
பித்தாபிறை சூடிபெருமானே அரு ளாளா!
என்று பாடத் தொடங்கிவிட்டார். அதுமுதல் அவர் செந்தமிழ்த் தேவாரத் திருப் பாடல்களைப் பாடி இறைவனுக்குச் சொல் மலரால் அருச்சனை புரிந்து இன்புற்றார். இறைவனுடைய திருவருள் வழிகாட்ட, தமக்குள்ள இயற்கையான புலமையும் துணை செய்ய அழகிய தேவாரப் பதிகங்களைப் பாடலானார்.
இறைவனுடைய திருமுன்னர் நின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள், கன்றை இழந்த பசுவானது மீட்டும் கன்றை அடைந்தால் அக்கன்றுக்கு எப்படியிருக்குமோ அந்த உணர்ச்சி நிலையில் இருந்தார். இறைவன் தாய் போன்றவன். ஆருயிர்களெல்லாம் குழந்தைகள் போன்றவை. குழந்தைகள் தாயை மறந்துவிடுகின்றன. ஆனால் தாயோ குழந்தைகளை மறப்பதே இல்லை. தமக்குத் தாய் ஒருத்தி இருக்க வேண்டும் என்கிற தத்துவம்கூடக் குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்கிறது.
தாய் தன் குழந்தையை என்றும் மறப்பதே இல்லை. மறக்காமல் இருப்பதோடுகூட அந்தக் குழந்தையுடன் என்று கூடப் போகின்றோம் என்று பித்துப் பிடித்து அலைகிறாள். அவளுக்கு எத்தனை பித்துப் பிடித்தாலும் குழந்தைக்கு அவளைச் சென்று சாரவேண்டும் என்னும் நினைவே இருப்பதில்லை. ‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்’ என்று ஒரு பழமொழி வழங்குகிறது அல்லவா? எத்தனைதான் தாய் அருகிலே வந்தாலும் அவளுடைய அருமைப்பாட்டை அறியாத பிள்ளை அவளைப் புறக்கணித்து உதறிவிடுகிறான். அப்பொழுதெல்லாம் தாய் வருந்து கிறாள்.மீட்டும் மீட்டும் அவனை எந்த வழியிலாவது தன்னோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நினைவோடு அவள் முயற்சி செய்கிறாள். அவ்வாறே, இறைவன் ஆருயிர்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிறான்; தன்னுடைய கருணைக் கரத்தினாலே அணைக்க வேண்டுமென்று முயல்கிறான். நாம் செய்கிற பக்தியிலேதான் அதிக ஆற்றல் இருக்கிறதென்று நாம் நினைக்கிறோம். அப்படி அன்று. நாம் செய்கிற பக்தியெல்லாம் வெறும் வியாஜ மாத்திரம். ‘எப்படியாவது இவன் நம்மை அண்டவேண்டும். இவன் நம் பக்கம் திரும்புகிறானா?’என்று ஆண்டவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான். அவனை நோக்கி நாம் ஓர் அடி எடுத்து வைத்தால் அவன் நூறடி, ஆயிரம் அடி எடுத்து வைத்து வேகமாக வருகிறான்; “அப்பா, வந்தாயா?” என்று மிக்க ஆர்வத்தோடு நம்மை அணைந்துகொள்ள வருகிறான். நம்முடைய பக்தியின் வேகத்தைக் காட்டிலும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்று எம்பெருமானுக்கு உள்ள கருணையின் வேகம் மிகுதியானது. அவனுடைய திரு அவதாரங் களுக்கும், அவன் செய்கின்ற பல திருவிளையாடல்களுக்கும், அவன் எடுத்துக் கொள்கின்ற உருவங்களுக்கும், முக்கியமான காரணம், ஆருயிர்களெல்லாம் உய்யவேண்டும் என்ற கருணைதான். அது ஒரு பித்து அல்லவா? குணம் குறி ஒன்றும் இல்லாத பரப்பிரம்மமாகிய கடவுள், எல்லாவிதமான காரியங்களையும், பராக்கிரமங்களையும், அவதூறுகளையும், புகழ்களையும் ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் ஆருயிர்களை மீட்டும் அருளினால் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஞாபகந்தான். அதையன்றி வேறு எதையும் நினையாமல் இருக்கிறான். அந்தக் கருணையினாலே பித்தாகித் திரிகிறான்.
சுந்தரமூர்த்தி நாயனார் முன்பு ஆண்டவனுடைய திருவருளை நிரம்பப் பெற்றவரானாலும், தடுத்தாட் கொள்ளுவேன் என்று அவன் சொன்னமையினாலே, இப் பிறவியில் சில காலம் அவனை மறந்திருந்தார். உலக கருதித் வாழ்விலே இன்பம் பெறவேண்டும் என்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தத் திருமணம் ஆகியிருந்தால், நாவல் ஆரூரர் ஆண்டவனுடைய அடிமையாக இல்லாமல் உலகத்தின் அடிமையாகியிருப்பார். மாற்றுவதற்காகப் பித்தேறி நின்றான் எம்பெருமான்; நாவல் ஆரூரரை ஆண்டு அவர் மூலமாக உலகத்துக்கெல்லாம் நல்லருளைக் காட்டவேண்டும் என்று கருதினான்.
இவற்றையெல்லாம் நினைத்தால், நாவலாரூரர் தம் சொல் அருச்சனையை, ‘பித்தா’ என்று ஆரம்பித்தது எவ்வளவு பொருத்தமாகத் தோன்றுகிறது! பித்தன் என்பதை இறைவன் சொன்னது மாத்திரம் அல்ல; நம்பி ஆரூரரே அவன் பித்தன் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார். அந்த உணர்ச்சியும் ஆண்டவனுடைய கட்டளையும் ஒன்று கூடவே, பாட்டு இயற்கையாக எழுந்தது.
பித்தன் என்பதைப் பிறரும் உணர்ந்துகொள்ளும்படி ஒன்றைச் சொல்கிறார் சுந்தரர். மற்றவர்களுக்கும் பித்தனுக்கும் என்ன வித்தியாசம்? எது நலலது, எது பொல்லாதது என்று பித்தனுக்குத் தெரியாது. சாப்பாட்டைக் கொடுத்தால் நாம் வாயிலே போட்டுக் கொள்கிறோம். பித்தனும் சில சமயங்களிலே போட்டுக் கொள்வான். இன்னும் சில சமயங்களிலே காலிலே போட்டுக் துகைப்பான்; அல்லது தலையிலே போட்டுத் தீற்றிக் கொள்வான். எந்தப் பொருளை எந்த இடத்திலே வைக்க வேண்டுமோ அந்த முறை தெரியாமல் பல பல வேடிக்கையான காரியங்களைச் செய்வான் பித்தன். இங்கே சிவபெருமான் அப்படிச் செய்கிறானாம். என்ன செய்கிறான்?
காலிலே போட்டு மிதித்த ஒரு பொருளைத் தலையிலே தூக்கிவைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு சமயம் இறைவன் தன்னை அழைக்காமலே யாகம் செய்த தக்கனைத் தண்டித்தான். யாகத்துக்கு வந்திருந்த தேவர்களுக்கெல்லாம் தண்டனை அளித்தான். அப்படி வந்த தேவர்களுக்குள்ளே சந்திரன் ஒருவன். அவனைக் காலாலே தேய்த்தான். அது அவனுக்குரிய தண்டனையானாலும், திருவடியின் சம்பந்தம் பெற்றமையினாலே இறைவன் தலைமேலே அவன் ஏறிக் கொண்டான். அவனைத் தலையிலே தூக்கி வைத்துக் கொண்டான் இறைவன். ‘காலிலே மிதிபட்ட ஒன்றைத் தலையிலே தூக்கி வைத்துக்கொண்டான் ஒருவன்’ என்று சொன்னால் அவனைப் பித்தன் என்று சொல்வதிலே என்ன தவறு?
ஒரு வகையில் பைத்தியக்காரனுடைய செயலாகத் தோன்றும். அதுவே, கருணையாகிய பித்துப் பிடித்தவன் இறைவன் என்பதையும் காட்டுகிறது. எப்படி? ஆண்டவன் தன் காலடியிலே யாரேனும் வந்து விழுந்தால், முன்னாலே எத்தகைய அபராதத்தை அவன் செய்திருந்த போதிலும், அதை எண்ணாமல் உடனே அவனுக்கு உயர்ந்த நிலையைத் தந்துவிடுவான். இதனைத்தான் அந்தப் பிறை காட்டுகிறது. மற்றத் தேவர்களெல்லாம் தாங்கள் தாங்கள் செய்த காரியங்களுக்குத் தண்டனை பெற்றார்கள்; மிக்க துன்பத்தை அடைந்தார்கள். ஆனால் தண்டனையாக இருந்தாலும் இறைவனுடைய காலடியிலே புகுந்தமையினாலே பிறைக்கு நல்ல பயன் கிடைத்தது. தெரியாமல் நாக்கிலே தேன் துளி சொட்டிவிட்டாலும் இனிக்கிறது. தெரிந்து சாப்பிட்ட பொழுதுதான் இன்பம், மற்றச் சமயங்களில் இன்பம் இல்லை என்று சொல்ல முடியுமா? அதுபோலச் சந்திரன் தான் நினைக்காமலே ஆண்டவனுடைய திருவடி சம்பந்தம் பெற்றான். இறைவன் கோபத்தினாலேதான் தேய்த்தான். ஆனால் பெற்றது திருவடி சம்பந்தம். ஆகையினால் உடனே இறைவனுடைய தலையின்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
அது மாத்திரம் அல்ல. இறைவனுடைய திருவடி சம்பந்தம் பெறுவதற்கு முன்னாலே அந்தப் பிறை வளர்ந்தது; மீட்டும் தேய்ந்தது. இறைவனுடைய திருமுடியிலே புகுந்த பிறகு அது தேய்வதும் இல்லை; வளர்வதும் இல்லை. உயர்ந்த இடம், நிலையான இருப்பு ஆகியவைக ளெல்லாம் இறைவனுடைய திருவடித் தொடர்பினால் உண்டாயின.
பித்தா பிறை சூடீ!
இப்படிப் பித்தன் என்றும், பிறை சூடீ என்றும் சொன்னதால் இறைவனுடைய தன்மை குறைந்துவிடவில்லை. அவன் எப்பொழுதும் தன்னுடைய பெருமையினின்று சிறிதும் குறைவை அடைவதில்லை. அவன் பித்தனாக இருந்தாலும் பிறைசூடியாக இருந்தாலும், ஏனையோருடைய பித்துக்கும் ஏனையோருடைய செயலுக்கும் அவனுடைய இயல்புக்கும் வேறுபாடு உண்டு. பித்தன் காலிலே பட்ட பொருளைத் தலையிலே வைத்துக் கொண்டால் அதிலே ஒரு பயனும் இல்லை. ஆனால் இங்கே காலிலே வைத்த பிறையைத் தலையிலே சூடிக்கொண்டதனால் இறைவனுடைய பெருமையையே உலகம் நன்கு உணர்கிறது.
மனிதனது அடிப்படையான பண்பு அவன் எந்த நிலையில் இருந்தாலும் தோன்றும். ஒரு தையல்காரன் பைத்தியக்காரன் ஆகிவிட்டான். அவன் என்ன செய்வான்? கத்தரிக்கோலால் கத்தரிக்கிற மாதிரியே கையைக் காட்டிக் கொண்டிருப்பான். எழுத்தாளனாக இருந்தால் சதா பேனாவைக் கையில் வைத்துக் கொண்டு ஏதோ எழுதுகிற மாதிரி இருப்பான். சொற் பொழிவாளனாக இருந்தால் எதையாவது உளறிக் கொண்டிருப்பான். பித்து நிலையிலும் அவரவர்களுடைய பழைய இயல்பு நன்றாகத் தெரியும். அதுபோல, இறைவன் பித்தனாகவும் பிறை சூடியாகவும் இருந்தாலும், அவ்வளலிலும் அவனுடைய பெருந் தன்மையே பின்பும் விட்டு ஒளிர்கின்றதே தவிர, அவற்றில் மற்றவர்களுக்குள்ள சிறுமை இல்லை. எப்போதும் பெருமானாகவே இருக்கிறான். இதை நினைத்தார் சுந்தரமூர்த்தி நாயனார். ‘பித்தா பிறைசூடீ பெருமானே’ என்று பாடினார்.
அவன் பித்தனாக வந்தாலும் பிறைசூடியாக வந்தாலும் உலகத்தார் போற்றும்படி இருக்கின்ற பெருமை எதனாலே உண்டாகின்றது? இத்தனை செயல்களுக்கும் மூல காரணமாக இருப்பது அவனுடைய அருள். அவன் பித்தனாகத் தோன்றினாலும் மணவாளப் பிரானாகத் தோற்றினாலும் கோவணாண்டியாகத் தோற்றினாலும் விடையில் ஏறினாலும் பூதங்களோடு சேர்ந்து கை தட்டிப் பாடினாலும் இன்னும் என்ன என்ன விதமான கோலங்களையோ திருவிளையாடல்களையோ உடையவனாக இருந்தாலும் அத்தனைக்கும் மூல காரணமா யிருப்பது அவனுடைய அருள். ஆதலின், “பித்தா பிறைசூடீ பெருமானே” என்று மாத்திரம் சொல்லி நிறுத்தவில்லை. அதற்கு மேலே, இவ்வளவுக்கும் மூலப்பொருளாக உள்ள அருளைக் குறித்தார். ஆண்டவன் அருளை உடையவன்; அருளாளன். அவனுடைய திருவுள்ளத்திலே அருள் கொப்புளிப் பதனாலே அவன் பித்தனாகிறான்; பிறைசூடியாகிறான்; பெருமானாகிறான்.
பித்தாபிறை சூடீ பெருமானே அருளாளா!
என்று விளிக்கின்ற விளியிலே எத்தனையோ சாஸ்திரங்களின் உண்மைகளும், அவனுடைய திருவிளையாடல்களின் தத்துவங்களும் பொதிந்து கிடக்கின்றன.
அது மாத்திரம் அல்ல; அருளாளன் என்ற திருநாமம் திருவெண்ணெய்நல்லூரில் இருக்கின்ற எம்பெருமானுடைய பெயர். அங்கே உள்ள கோயிலுக்கு அருள்துறை என்று பெயர். சில இடங்களிலே ஊரின் பெயர் வேறாகவும், ஆலயத்தின் பெயர் வேறாகவும் இருக்கும். வெண்ணெய்நல்லூர் என்பது ஊரின் பெயர். அங்கே உள்ள திருக்கோயிலுக்கு அருள் துறை என்று பழைய காலம் முதற்கொண்டே ஒரு பெயர் வழங்குகிறது. அதனை வடமொழியில் கிருபாசிரமம் என்பர். அருளாளப் பெருமான் அங்கே அருள் துறையிலே இருக்கிறான்.
‘பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா’ என்று முதல் அடி நிற்கிறது. அப்படி இறைவனை விளித்த பிறகு தம்மைப் பற்றிப் பேச வருகிறார் ஆரூரர். இறைவனைப் பார்த்த கண்ணைக்கொண்டு பிறகு தம்மைப் பார்த்துக் கொள்கிறார். பெரிய இன்ப அநுபவத்திலே இருப்பவருக்குத் தம்மை மறந்த நிலைதான் தோன்றும். இறைவனுடைய அருள் வெள்ளத்துக் குள்ளே புகுந்த சுந்தரமூர்த்தி நாயனார் ஒரே வியப்பில் மூழ்கினார். ஆண்டவனையன்றி வேறொன்றையும் பாராமல், ‘பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா!’ என்று சொல்லி உருகினார். பிறகு தம்முடைய நினைவு அவருக்குத் தோன்றுகிறது. ”எத்தால் மறவாதே நினைக்கின்றேன்” ‘எதனாலும் உன்னை மறக்காமல் நினைக்கிறேன்” என்கிறார். ‘இறைவனே, இவ்வளவு சிறந்த கருணை உடைய உன்னை நான் எந்தக் காரணத்தினாலும் மறப்பதில்லை. துன்பம் உண்டானாலும் சரி; இன்பம் உண்டானாலும் சரி. உன்னை மறக்கிறது என்பது என்னிடம் இல்லை. வேகமாக ஓடினாலும் சும்மா நடந்தாலும் படுத்துக் கொண்டிருந்தாலும் பேசினாலும் ஒரு மனிதன் மூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறான். இருதயம் துடித்துக் கொண்டே இருக்கிறது. அந்த இருதயத் துடிப்பை அவனுடைய துக்கமோ சுகமோ நிறுத்தாது. அது மாதிரி உலக வாழ்க்கையில் நான் எந்தவிதமான செயல்களைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் உன்னை நினைக்கிறதாகிற செயல் எந்தக் காலத்திலும் நிற்பதில்லை என்று சொல்கிறார். ‘மற்றச் செயல்கள் கூடுதலும் ஈன்ற மாக நடத்தலும், அடியோடு நிற்றலும் ஆகிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. அப்படி இல்லாமல் எந்தத் தடை வந்தாலும், எது முன்னே நின்றாலும் எதனாலும் உன்னை மறப்பதில்லை; மறக்காமல் நினைக் கிறேன்’ என்றார்.
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்.
இறைவனுடைய திருவருளை முதலிலே நினைவு படுத்திக் கொண்டார் சுந்தரர். பின்னாலே தம்முடைய பக்தியைச் சொன்னார். அதற்கு மேலே இன்னும் பக்குவம் எழுகிறது. சொல்லிக்கொண்டு வரும்பொழுதே அவருக்குப் பக்குவம் உயர்ந்துகொண்டு வருகிறது. ‘அடடா! நான் நினைப்பதாவது? நான் நினைப்பதாயிருந்தால் முன்னாலே நினைத்திருக்க வேண்டுமே. நீயல்லவா என்னை நினைக்கச் செய்தாய்?’ என்று எண்ணுகிறார்; “நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய்’ என்று முடிக்கிறார்.
“நான் நினைக்கவில்லை; நீ நினைக்கச் செய்கிறாய்” என்று சொல்கிறார்.
பித்தாபிறை சூடீபெரு மானே அரு ளாளா!
எத்தால்மற வாதேநினைக் கின்றேன்மனத்து உன்னை
வைத்தாய்.
இறைவன் நம்மை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறானோ அந்தப்படிதான் நாம் ஆடுகிறோம். அவனை நினைக்கும் திறத்தில்கூட, நாமாக முயன்று அவனை நினைப்பதாக எண்ணுகிறோம். உண்மை அது அன்று. இறைவன் தான் தன்னை நினைக்கும்படியாகச் செய்கிறான். “அவனருளாலே அவன்தாள் வணங்கி” என்பது மாணிக்கவாசகர் வாக்கு. ஒருவன் தன்னை நினைக்க வேண்டும் என்று இறைவன் திருவுள்ளத்தில் அருள் தோன்றினால் அப்பொழுது அந்த மனிதனிடத்தில் அவனைப் பற்றிய நினைப்புத் தோன்றுகிறது. இதை நம்பியாண்டார் நம்பி ஓர் இடத்தில் சொல்லுகிறார்:
“என்னை நினைந்தடிமை கொண்டுஎன்
இடர்கெடுத்துத் தன்னை நினைக்கத் தருகின்றான்.”
அவன் தன்னை நினைக்க அருள் தராவிட்டால் நாம் அவனை நினைக்க இயலாது. சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைத் தாம் நினைத்ததாக முன்னாலே சொல்ல ஆரம்பித்தார், அதை மாற்றிக்கொண்டு, ‘நினைத்தேன் மனத்து உன்னை வைத்தாய்’ என்கிறார். ‘எந்த வகையினாலும் உன்னை மறவாமல் நினைக்கிறேன்’ என்று சொல்ல வந்தவர், அப்படி நினைப்பதற்கு மூலகாரணமாயிருப்பது தம்முடைய முயற்சி அல்ல என்று தெரிந்து கொண்டார். ஆதலால் அதோடு நிறுத்தாமல், ‘உன்னை நினைக்கும்படியாக என்னுடைய மனத்திலே நீ வந்து அமர்ந்தாய்’ என்று சொல்கிறார்.
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்
மனத்து உன்னை வைத்தாய்.
இப்படியெல்லாம் பாடுவதற்கு இடமாக இருந்தது திருவெண்ணெய்நல்லூர் என்னும் தலத்தில் அருள் துறை என்ற தனிப் பெயருள்ள ஆலயம். இன்றைக்கும் அந்த ஆலயத்தில் சந்நிதிக்கு நேரே வெளியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நின்ற திருக்கோலத்தோடு எழுந்தருளியிருக்கிறார். கோயிலின் மேல் தளத்தில் ஒரு சிறிய சந்நிதி இருக்கிறது. அதை, ‘தடுத்தாட் கொண்டவர் கோயில்’ என்று சொல்கிறார்கள். மேல் ஏறிப் போய்ப் பார்க்க முடியாது; படிக்கட்டு இல்லை. இறைவன், அங்கே தோன்றி மறைந்தான் என்ற ஒரு செய்தியை இப் பொழுதும் அங்குள்ள மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தென்பெண்ணையாற்றின் தென்கரையிலே திருவெண்ணெய் நல்லூர் இருக்கிறது.
“தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் அத்தா“ என்று அங்குள்ள பெருமானை விளித்துச் சொல்லுகிறார். அத்தன் என்றால் தகப்பனார் என்று பெயர். இறைவன் தம்மிடத்திலே தந்தையைப் போன்ற அன்பு கொண்டு, உரிமையோடு வந்து காத்தருளினான் என்ற நினைப்பினாலே, ”வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் அத்தா” என்கிறார்.
”உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே?” என்று பாட்டு முடிகிறது. இறைவன் எப்பொழுதும் ஆண்டானாக இருக்கிறான். அதனாலே ஆண்டவன் என்ற பெயர் அவனுக்கு உரியதாக இருக்கிறது. உலகில் எத்தனையோ ஆண்டவர்களும் எஜமானர்களும் இருந்தாலும் அவர்களெல்லாம் வேஷ தாரிகளாகிய ஆண்டவர்களே ஒழிய, உண்மையாக உயிர்களுக் கெல்லாம் உரிமையுடைய ஆண்டவர்கள் ஆகமாட்டார்கள். இறைவன் ஒருவன்தான் ஆண்டான் அல்லது எஜமானன். உயிர்கள் அத்தனையும் ஆட்கள்; அவனுக்கு அடிமை. “என்று நீ அன்று நான் உன் அடிமை யல்லவோ?” என்று தாயுமானவர் பேசுகிறார்.
உலகிலுள்ள எல்லா அடிமைகளும் தம்முடைய தலைவன் இன்னான் என்பதை உணரும்பொழுது அவன்பால் பக்தி உண்டாகிறது. இறைவனுக்குத் தாம் அடிமை என்ற நினைவு உள்ளத்திலே முறுகி எழுந்தவுடன் அதற்கு ஏற்ற உணர்ச்சியும் அநுபவமும் உண்டாகின்றன. அந்த அநுபவந்தான் இறைவனுடைய அருளிலே புகும் அநுபவம் என்று பெரி யோர்கள் சொல்கிறார்கள். என்றைக்கு அவனை நன்கு தெரிந்து கொள்கிறோமோ, நம்முடைய நிலை எப்பொழுது நமக்குத் தெளிவாகப் புலனாகிறதோ அப்பொழுது தோன்றுவதுதான் சிவஞானம்.
இறைவனுடைய திருவருளினாலே ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இப்பொழுது சிவஞானம் தோன்றி விட்டது. அப்படிச் சொல்வதைக் காட்டிலும், ‘சிவஞானியாக இருந்த அவர் இறைவனுடைய திருவருளினாலே உலகத்தில் பிறந்தார்; நாம் தடுத்து ஆட்கொள்வோம் என்று அவன் சொல்ல, அதன்படியே இப்பொழுது ஆட்கொள்ளப் பெற்றார்; அப்படிப் பெற்ற சமயத்திலே சிவஞானம் தோன்றியது போன்ற ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது’ என்று சொல்வது பொருந்தும்.
அந்த ஞானம் எத்தகையது? ‘நீ எனக்குத் தலைவன் அல்லது ஆண்டான்; நான் உனக்கு ஆள். எனக்கும் உனக்கும் உள்ள தொடர்பு அநாதி காலமாக வந்து கொண்டிருக்கின்றது; நான் அறியாவிட்டாலுங்கூட இந்தத் தொடர்பு மாறாது. இந்தத் தொடர்பை நான் உணராவிட்டாலும் நீ உணர்ந்து கொள்வாய். இந்தத் தொடர்பை நான் உணரவேண்டும் என்று எப்பொழுது உன் திருவுள்ளத்தில் தோன்றுகின்றதோ அப்பொழுது வந்து உணர்த்துவாய். அப்படி உணர்கின்ற காலம் எளியேனுக்கு இப்பொழுது கிடைத்தது. நீ என்னை ஆட்கொண்டாய். நான் உனக்கு ஆள் அல்ல என்று சொல்லிப் பார்த்தேன்; ஆனாலும் நமக்கிடையே உள்ள தொடர்பானது ஒருவரால் புதியதாக உண்டாக்கப்பட்டது அன்று; என்னுடைய முயற்சியினாலே உண்டானதும் அன்று. அப்படி இருந்தால் பிறராலேயோ என்னுடைய முயற்சியினாலேயோ மாற்றிக் கொள்ள முடியும். இந்தத் தொடர்பு உன்னாலே அமைந்தது. ஆதலால் நான் இப்பொழுது ஆள் அல்லேன் என்று சொன்னால் அந்தத் தொடர்பு முறிந்துவிடாது. உனக்கு ஆளாகிவிட்டு, இப்பொழுது அல்லேன் என்று சொல்லலாமா?”
பொருளைக் கடன் கொடுத்தான் ஒருவன், அந்தப் பொருளை மீட்டுக்கொள்ளும் வரைக்கும் எப்போதும் அதே நினைவாக இருப்பான். கடன் பெற்றுக்கொண்டவர்கள் அத்தனை நினைவோடு இருப்பதில்லை. தங்களுடைய வறுமையினாலோ, பொல்லாத தன்மையினாலோ தாம் கடன் வாங்கினதை மறந்துவிடுவதும் உண்டு. மறவாமல் இருந்தாலும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. கடன் கொடுத்தவனோ ஒவ்வொரு கணமும் அது எப்பொழுது திரும்பிவரும், திரும்பிவரும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறான். கடன் வாங்கினவன் இல்லை என்று சொல்லி விட்டாலும் கடன் கொடுத்தவன் தன்னுடைய உரிமையை வற்புறுத்துவான். இறைவனிடத்திலே அடிமை பூண்ட உயிர்கள் எல்லாம் அவனை மறந்துவிட்டாலும் இறைவன் அதை வற்புறுத்தும் சந்தர்ப்பம் சிலருக்கு நேர்கிறது. இறைவன் உன்னைத் தடுத்தாட்கொள்ளுவேன் என்று சுந்தரருக்கு முன்பு வாக்குறுதி அளித்திருக்கிறான். நாயனார் அதை மறந்து விட்டாலும், கடன் கொடுத்தவன் தன்னுடைய பொருளைக் கைப்பற்றுவதற்கு நினைந்து முயற்சி செய்வதுபோல இறைவன் முயற்சி செய்தான்; வலியத் தடுத்து ஆட்கொண்டான். “நான் உனக்கு முன்பே ஆளாகிவிட்டேன். அந்தப்படி ஆளான திறத்தை நான் மறந்தேனே ஒழிய, அதை விட்டு ஒழிந்தேன் அல்லன். ஆட்கொண்டவனாகிய நீதான் வந்து எனக்கு நினைவுறுத்தினாய். நான் மாட்டேன் என்று சொன்னாலும் நமக்குள் உள்ள உறவு அற்றுப்போகுமா?” என்று கேட்கிறார் சுந்தரர்.
‘வெண்ணெய் நல்லூரில் உள்ள அத்தனே, என்னுடைய அப்பனே, என்னை ஆட்கொண்டவனே, நான் உனக்கு அநாதி காலமாக ஆளாக அமைந்திருக்கிறேன். அப்படி இருக்கையில் இப்பொழுது எதையோ நினைத்துக் கொண்டு அல்லது அதை மறந்துவிட்டு, நான் உனக்கு ஆள் அல்லேன் என்று சொன்னால் அது முறையாகுமா? அது நடக்கக்கூடிய காரியமா? அதைக்’ காட்டிலும் பேதைமை ஒன்று உண்டா?. என்றெல்லாம் நினைந்து பாடினார் ஆளுடைய நம்பிகள்.
பித்தா!பிறை சூடி!பெரு மானே!அரு ளாளா!
எத்தால்மற வாதேநினைக் கின்றேன்மனத்து உன்னை வைத்தாய்;
பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட் டுறையுள்
அத்தா! உனக்கு ஆளாய்இனி அல்லேன்எனல் ஆமே?
[பித்தனே, பிறையைச் சூடுபவனே, பெருமானே, அருளுடையனே, இப்போது எதனாலும் உன்னை மறவாமல் நினைக்கின்ற அடியேனுடைய மனத்தில் உன்னை வைத்தாய்; பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள வெண்ணெய் நல்லூரில் அருட்டுறை என்னும் ஆலயத்தில் எழுந்தளியிருக்கும் அப்பனே, உனக்கு அடிமையாகிவிட்டு, இப்போது நான் அடிமையல்லேன் என்று சொல்லலாகுமா?
எத்தால்: எஃதால் என்பதன் திரிபு; எத்தாலும் என்பதில் உள்ள உம்மை செய்யுள் விகாரத்தால் மறைந்து நின்றது. நினைக்கின்றேன் நினைக்கின்றவனாகிய என்னுடைய. இனி – இப்பொழுது. அல்லேன் ஆள் அல்லேன். ஆமே – ஆகுமா; ஏகார் வினாப் பொருளில் வந்தது.]