அருளாளன்
கி. வா. ஜகந்நாதன்
இம்மை மறுமைப் பயன்
சுந்தரமூர்த்தி நாயனார் தமக்கு ஏதாவது பொருள் வேண்டுமானால் உலகத்திலுள்ள மக்களிடத்திலே போய் இரக்கும் வழக்கம் இல்லை. அவருக்கு இறைவன் மிகவும் உரியவனாகி விட்டான்; தோழனானான். இடுக்கண் வரும் போதெல்லாம் உதவுவதுதானே தோழனுடைய இயல்பு? மனிதத் தோழனாக இருந்தால், தனக்கே குறைபாடு இருப்பதனால் வேண்டியதைக் கொடுக்க முடியாது. ஒன்றாலும் குறைவிலா நிறைவையுடைய ஆண்டவன் எல்லாவற்றையும் கொடுக்கும் ஆற்றல் உள்ளவன். அவனைத் தோழனாகப் பெற்ற தம்பிரான் தோழருக்கு எந்தப் பொருளால் குறைவரப் போகின்றது?
அவர் குறையை முன்னாலே குறிப்பாக அறிந்து கொடுப்பதில்லை, ஆண்டவன். குறை நேர்ந்தால் அந்தக் குறையை நீக்கிக்கொள்ளச் சுந்தரமூர்த்தி நாயனார் பாடுவார். அந்தப் பாட்டை எம்பெருமான் கேட்க ஆசைப்பட்டான். அது மாத்திரமா? உலகமெல்லாம் கேட்க வேண்டுமல்லவா? உலகம் அந்தப் பாடல்களை ஓதிப் பயன்பெற வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம்.
அவர் பாடவேண்டும் அல்லவா? அதன் பொருட்டு அவருடைய குறையை வாய்விட்டுச் சொல்லுமளவும் வாளா இருப்பான் ஆண்டவன்.
ஒருமுறை திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார் சுந்தர மூர்த்தி நாயனார். அவருக்குப் பொன் வேண்டியிருந்தது. இறைவனிடத்திலே வந்து, “ஆண்டவனே, எனக்கு இப்பொழுது செலவாக இருக்கிறது; பணம் வேண்டும்” என்று கேட்டார். கிடைக்கவில்லை. சிறிது கோபம் உண்டாயிற்று. சண்டித்தனம் பண்ணும் பிள்ளை வீதியிலே படுத்துக் கொள்வது போல அந்த இடத்திலே படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார். அப்பொழுது கோயிலில் திருப்பணி நடந்துகொண்டிருந்தது. செங்கற்களைக் கொண்டுவந்து அடுக்கியிருந்தார்கள். இரண்டு செங்கல்லை எடுத்தார்; தலைக்கு அணையாக வைத்துக் கொண்டார்; துண்டை விரித்துப் போட்டார்; அப்படியே படுத்தார். அயர்ச்சியினாலே தூங்கிவிட்டார்.
தூக்கத்தினின்று விழித்தார். எழுந்து துண்டை உதறினார். தலை மாட்டில் வைத்திருந்த செங்கல்லைப் பார்த்தால் அது பொன்னாக இருந்தது. அப்பொழுது அவர் உள்ளத்திலே உண்டான உவகைக்கு அளவு உண்டா? உடம்பெல்லாம் புல்லரித்தது. ‘நாம் நம்முடைய ஆண்டவனை கோபித்துக் கொண்டோமே. கல்லைப் பொன்னாக்குகின்ற பெருமான் அல்லவா? நம்முடைய குறிப்பறிந்து வேண்டியதைத் தந்துவிட்டானே! என்று அவர் துள்ளிக் குதித்தார். உடனே, “என்னுடைய பெருமை இது. எனக்காக ஆண்டவன் தந்தான்” என்று சொல்லிக்கொள்ளத் தோன்றவில்லை. “அடடா! உலகில் குறையுடைய மக்களைப் போய், எனக்கு அது வேண்டும், இதுவேண்டும் என்று புலவர்கள் பாடுகிறார்களே; இப்படி ஒரு கற்பகம், காமதேனு, குறிப்பறிந்து தருகின்ற பெருவள்ளல் இருக்கும்போது அவனைப் பாடாமல் யார் யாரையோ பாடுகிறார்களே!” என்று புலவர்களை நினைந்து இரக்கம் உண்டாயிற்று.உடனே ஒரு புலவர் மகாசபைக்கு முன்னாலே பேசுவது போலக் கற்பனை செய்து கொண்டார். பாட ஆரம்பித்தார்.
“பைத்தியக்காரப் புலவர்களே! யார் யாரையோ போய்ப் பாடுகிறீர்களே! எங்களுடைய ஆண்டவனைப் பாடுங்கள்; எல்லாம் கிடைக்கும்” என்று பாடலானார்.
ஒரு புலவன் செல்வர் ஒருவரிடம் சென்றான். கற்பகமே, காமதேனுவே என்று புகழ்ந்தான். “உங்களுடைய குடும்பமே உயர்ந்த குடும்பம்; உங்களுடைய தந்தையார் முதலியவர் களெல்லாம் உங்களுக்கு ஆசி கூற, அவர்களுடைய முயற்சி யினாலும் உங்கள் முயற்சியினாலும் சிறந்த நிலைக்கு வந்தீர்கள்” என்று புகழ்ந்தான். சட்டென்று அந்தச் செல்வர் அவன் பேச்சை நிறுத்தினார்.
“ஓய்! நீர் என்னுடைய தகப்பனாரைக் கண்டீரா? அவர் பரம ஏழையல்லவா? என்னுடைய சொந்த முயற்சியினால் அல்லவா நான் முன்னுக்கு வந்தேன்? எதற்கு மற்றவர்களை யெல்லாம் சொல்கிறீர்?” என்று கோபத்தோடு கேட்டார். அப்பொழுதுதான் புலவனுக்கு உண்மை விளங்கியது. தாமாகவே எல்லாவற்றையும் ஈட்டியதாகச் சொல்லவேண்டும் என்பது அவர் நினைப்பு என்று தெரியவந்தது. புலவன் பாடும் புகழில், இம்மியும் பிறரைச் சாரக்கூடாதாம்! அத்தனை புகழுக்கும் தனியுரிமை படைத்தவராக வேண்டும் என்று அந்தச் செல்வர் நினைத்தார். அதனைத் தெரிந்துகொண்டு மறுபடியும் இச்சகம் பேசி, “அடடா! நீங்கள் அசகாய சூரர் அல்லவா? நீங்களாகச் சம்பாதித்துக் கொண்ட செல்வம், நீங்களாகப் பெற்றுக்கொண்ட புகழ்” என்று பாடினான் புலவன். கடைசியில், “பாட்டு நன்றாயிருக்கிறது; போய்விட்டு வாரும்” என்று அந்தச் செல்வர் சொல்லி அனுப்பிவிட்டார்.
இது புலவர்களுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சி. செல்வர்களைக் கண்டு வேறு யாரையும் புகழாமல் அவர் களையே புகழ்ந்து, எல்லாப் புகழையும் அவர்களுக்கே உரியது ஆக்கிவிட்டு இச்சகம் பேசினாலும்கூட ஏழைத் தொண்டர்களுக்குத் தரமாட்டார்கள் அவர்கள். அவர்களைப் போய் எதற்காகப் பாடவேண்டும்?
தம்மை யேபுகழ்ந்து இச்சை பேசினும்
சார்வி னும்தொண்டர்த் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே.
[வேறு யாரையும் புகழாமல் தம்மையே புகழ்ந்து தமக்கு விருப்பமான படியெல்லாம் சொன்னாலும், அண்டி நின்றாலும் தொண்டர்களுக்கு எதையும் வழங்காத பொய்யர்களைப் பாடாமல்.]
இச்சை பேசினாலும் எப்போதும் அடுத்தடுத்துப் பயின்றாலும் கொடுக்காதவர்கள் பொய்யர்கள். இறைவனுடைய திருவருளினாலே தமக்குக் கிடைத்த பொருளைப் பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற நினைவே இல்லாமல், ‘இது நமக்கே உரியது’ என்று நினைக்கிறவர்கள் அவர்கள். அந்தப் பணமும் நிலையாதது; அவர்களும் நிலையாதவர்கள். அவர்கள் பொய்ம்மையாளர். அவர்களைப் புகழலாமா?
உண்மையாக ஒரு காரியத்தைச் செய்கிறவர்களைப் புகழ்கின்ற புகழ்தான் உண்மையானது; பொருளுடையது. புகழுக்கு உரியவன் யார்? உண்மையான வேலை செய்கிறவன் எவனோ அவன்தான் புகழுக்கு உரியவன். யாரோ ஒருவன் வெளியூரிலிருந்து நமக்கு உதவி செய்யவேண்டும் என்ற நினைவினால் பணம் அனுப்புகிறான். அதைக் கொண்டு வந்து தபால்காரன் தருகிறான். தரும்பொழுது, “என்னுடைய குறையைப் போக்குவதற்குப் பெருவள்ளலாக நீ வந்து உதவுகிறாய்” என்று அந்தத் தபால்காரன் காலையா பிடித்துக் கொள்வது ? யார் நமக்குப் பணம் அனுப்புகிறானே அவனையல்லவா நினைக்கவேண்டும்? உலகிலுள்ள மக்கள் பிறருக்கு உபகாரஞ் செய்தால், தம்முடைய முயற்சியினாலே ஈட்டிய பொருளைக் கொடுப்பதாகத் தருகிறார்கள். உண்மை அதுவா? அவர்களா கொடை தருகிறார்கள்? இறைவன் அவர்களிடத்திலே கொடுத்து, “இதைக் கொடு அப்பா” என்று சொல்லியிருக்கிறான். பாங்கிலே பணத்தைக் கொடுக்கின்ற ‘காஷியரைப்’ போலத்தான் அவர்கள் இருக்கிறார்கள். அதை உணராமல் தாம் தருவதாகத் தருக்கிக் கொள்கிறார்கள். அது வெறும் பொய். உண்மையாகக் கொடுக்கிறவன் ஆண்டவன்; அவர்களைக் கருவியாகக் கொண்டு கொடுக்கிறான். நமக்கு உதவி செய்கிறவர்களை நன்றியறிவினாலே பாராட்ட வேண்டும். அதோடு நில்லாமல் அவர்கள் மூலமாகக் கொடுக்கின்ற ஆண்டவனை நிரம்பப் பாராட்டுவதுதான் முறை.
கொடை மாத்திரமல்ல. எல்லாவிதமான செயல்களும் இறைவனுடைய திருவருளினாலே நிகழ்கின்றன. அவனன்றி ஓரணுவும் அசையாது. நல்ல செயலைச் செய்தான் என்று ஒருவனைப் பாராட்டுகிறோம். அந்தச் செயலுக்கு மூல காரணனாயிருக்கிற ஆண்டவனையும் பாராட்டுவதுதானே முறை? இவனை ஓர் அளவு பாராட்டிவிட்டு, அதற்கு மேலே பல அளவு இறைவனைப் பாராட்ட வேண்டும். இவன் செய்பவனைப் போலத் தோற்றுகிறான்; இவன் பொம்மை; இறைவன்தான் பின்னாலே இருக்கின்ற சூத்திரதாரி.
பிறருக்குக் கொடுக்கும் செல்வர்களைப் புகழ்வதற்கே அளவு உண்டு என்றால், கொடுக்காமல் இருக்கிற செல்வர் களைப்பற்றி என்ன சொல்வது? அவர்களைக் காட்டிலும் பொய்ம்மையாளர் வேறு இல்லை. மெய்ம்மையாளனாகிய ஆண்டவனைப் பாடவேண்டும்.
“செல்வரைப் பாடினால் எனக்கு வேண்டிய பொரு ளெல்லாம் கிடைக்குமே” என்று கேட்டால், “எம்பெருமானும் வேண்டியதைக் கொடுப்பான்” என்று சுந்தரர் சொல்கிறார்.
எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்!
இம்மை யேதரும் சோறும் கூறையும்.
“என் தகப்பன், எனக்கு வேண்டிய செல்வத்தையெல்லாம் தான் சம்பாதித்து எனக்கு அளிக்கின்ற பேரருளாளன், புகலூரில் இருக்கிறான். அந்தப் புகலூருக்குச் சென்று பாடுங்கள்.”
“நான் இப்பொழுது ஒரு செல்வனைப் பாடிக் கொண்டிருக்கிறேன். அவன் எனக்கு எல்லாவற்றையும் தருகிறான். இறைவனைப் போய்ப் பாடினால் என்ன கிடைக்கும்?” என்ற கேள்வி எழுகிறது.
“இந்த உலகில் நமக்கு வேண்டுவன சோறும் கூறையும்; சாப்பாடும் உடையும். ஆண்டவன் நல்ல உணவும் நல்ல உடையும் கொடுப்பான்.”
ஆண்டவனை நினைந்தால் மறுமையிலேதான் சொர்க்கம் என்றும், இம்மையிலே சோற்றுக்குத் தாளம் போட வேண்டும் என்றும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இறைவனிடத்தில் உண்மையான நம்பிக்கை உடையவனுக்கு மனம் தூயதாக இருக்கும். அவனுடைய செயல்களும் உரைகளும் எண்ணங்களும் அன்பின் விளைவாக இருக்கும். அன்புடையவர்களை எல்லாரும் தமக்கு அன்பராகப் பாவிப்பார்கள். பகைஞன் கூட அவனைச் சார்வான். அதனால் பல நன்மைகள் உண்டாகும். ஆகையினால் இறைவனிடத்தில் அன்புடையவனுக்கு இந்த உலகத்திலேயே வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கும்.
இம்மை யேதரும் சோறும் கூறையும்.
“நான் பாடுகிற செல்வனிடத்திலிருந்தே அவை கிடைக்கின்றனவே. அதை ஏன் மாற்றவேண்டும்? இருக்கிற படியே இருந்து நான் அவனையே பாடுகிறேன்.”
“இந்த உலகத்தில் நல்ல வசதிகள் கிடைக்கும்; வருகிற துன்பங்கள் விலகும். அடுத்த உலகத்திலே யாரும் கொடுக்க முடியாத ஓர் இன்பத்தை இறைவன் தருவான்.”
இடர் கெடலும்ஆம்;
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே.
இப் பிறவிக்குப் பின் இறைவனுடைய அணுக்கத் தொண்டராக இருந்து பேரின்பத்தை அடையலாம். இறைவனை வணங்குவதனாலே இம்மைப் பயனும் மறுமைப் பயனும் வரும்.
“அது எப்படி வரும்? ஆண்டவனை நம்பினால் குடும்பம் முதலியவற்றைக் கவனிக்க முடியுமா?” என்ற ஐயப்பாடு எழலாம். ஆண்டவனை நம்பினவர்களெல்லாம் குடும்பம் இல்லாமலா இருக்கிறார்கள்? சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய வரலாற்றையே பார்க்கலாமே. அவர் ஒரு மனைவிக்கு இரண்டு மனைவிகளை மணம் செய்துகொண்டார். அடியார்களுக்கெல்லாம் விருந்து அருத்தி இன்பத்தை அடைந்தார். அவர் துறவியாகப் போகவில்லை. அவருடைய வாழ்க்கையிலே மிக்க இன்பம் உண்டாயிற்று. மனம் தூய்மையாக இருந்தால் எல்லாரிடத்திலும் அன்பாகப் பழகத் தோன்றும். அதனால் உலகமே நமக்குப் பலமாக இருக்கும். இறைவனுடைய நினைவு, பக்தி அந்தத் தூய்மையை உள்ளத்தில் உண்டாக்கும்.
வருகின்ற துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிப் பாதுகாக்கின்ற ஆற்றல் இறைவன் ஒருவனுக்குத்தான் உண்டு. மற்ற யாரை நம்பினாலும் அவரவர்கள் தங்களிடத்திலே உள்ள குறைகளைச் சொல்லிக் கொள்வார்கள். அவர்களுடைய வாழ்விலே இடர்கள் உண்டு. அவற்றையே போக்கமாட்டாதவர்கள் தம்மை அண்டுவாருடைய இடரை எப்படிப் போக்கு வார்கள்? இடரிலாப் பெருமானாகிய ஆண்டவன் ஒருவன்தான் எல்லாவிதமான குறையையும் இடர்களையும் போக்க வல்லவன். அவனை ஏத்திக் கொண்டே இருந்தால் நமக்கு உள்ள இடர் கெளெல்லாம் கெடும். இந்தப் பிறவி மாறினால் இறைவனுடைய அணுக்கத் தொண்டராகிச் சிவலோக வாழ்வைப் பெறலாம்.
ஒருகால் இம்மையே தரும் சோறும் கூறையும் என்பதில் ஐயப்பாடு இருந்தாலும் இருக்கலாம்; அம்மையில் சிவலோகப் பதவி கிடைக்கும், இறைவனோடு ஒன்றுபட்டு வாழும் இன்பம் கிடைக்கும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை.
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே!
இவ்வாறு புலவர்களை நோக்கிச் சுந்தரமூர்த்தி நாயனார் கூறுகிறார். அவர் பெரிய புலவர்; இறைவனையன்றி வேறு ஒன்றையும் எண்ணாத புலவர்; இறைவனைக் காட்டிலும் பெருவள்ளல் இல்லை என்ற நிச்சயத்தோடு வாழ்ந்த புலவர்.
தம்மை யேபுகழ்ந்து இச்சை பேசினும்
சார்வி னுந்தொண்டர்த் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்கள்!
இம்மை யேதரும் சோறும் கூறையும்;
ஏத்த லாம்;இடர் கெடலும்ஆம்;
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
[தம்மையே புகழ்ந்து தமக்கு விருப்பமான சொற்களைச் சொன்னாலும் சார்வு இருந்தாலும் தொண்டர்களுக்குத் தராத பொய்யான செல்வர்களைப் பாடாமல், எம் தந்தையாகிய இறைவனது புகலூரைப் பாடுங்கள், புலவர்களே! இப்பிறவியிலேயே உணவையும் உடையையும் இறைவன் தருவான்; அவனை மேலும் மேலும் துதித்துக் கொண்டிருக்கலாம்; நமக்கு வரும் துன்பங்கள் அழிந்து போகும்; மறு பிறவியிலே சிவலோக வாழ்வு பெறுவதற்குச் சிறிதும் சந்தேகமே இல்லை.
இச்சை – விருப்பமானவை. சார்வு – அண்டி நிற்றல். சார்வினும் – அண்டி நிற்றலாலும். தொண்டர் – அன்பர்களுக்கு. பாடாதே பாடாமல். புகலூர் – சோழ நாட்டில் உள்ள தலம். இத்தலத்தில் பூதேசுவரம், வர்த்தமானேசுவரம், பவிஷ்யேசுவரம் என்ற மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கூறை – ஆடை. அம்மை இப் பிறவிக்கு அடுத்த பிறவி யாதும் – சிறிதும். ஐயுறவு – சந்தேகம்.]
முற்றும்.
★ ★ ★