அருளாளன்
கி. வா. ஜகந்நாதன்
எல்லாம் இனிமை
இயற்கை அழகைக் காணும்பொழுது மனத்தில் உண்டாகும் இன்பம் அளப்பரியது. கவியுள்ளம் படைத்தவர்களுக்கு அந்த அழகு பலபல கற்பனைகளை உண்டாக்குகின்றது. கலைஞருடைய கண்களுக்குத்தான் இயற்கையின் எழில் மிகமிக இனிதாகத் தோற்றும். சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு பெரிய கலைஞர். தம்முடைய உள்ளத்தில் தோன்றுகின்ற உணர்ச்சிகளை யெல்லாம் அழகிய சொற்களாலே கோலம் செய்து கவியாகப் பாடும் ஆற்றல் உடையவர்.
இறைவன் படைத்த பொருள்கள் எல்லாவற்றிலுமே அழகு நிரம்பி இருக்கிறது. ஆனால் அதைக் காணும் ஆற்றல் பெற்ற கண்தான் எல்லாருக்கும் இருப்பதில்லை. கண் இருந்தும் காணாத குருடர்களாக மற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். கலைஞனோ இயற்கையின் எழில் நலங்களையெல்லாம் காணும் கண் படைத்தவனாக இருக்கிறான். அவனுடைய காட்சியில் எல்லாம் அழகாகவே தோற்றுகின்றன. நல்ல நிலாவிலே கருவேல மரத்துக்குக்கூட ஒரு சோபை உண்டாகும். கவிஞனுடைய காட்சியிலே இப்படித்தான், உலகம் முழுவதும் அழகே உருவாகத் தோன்றும்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கருப்பறியலூருக்குச் சென்றார். சோழ நாட்டில் வளம் பொருந்திய ஊர் அது; வாழையும் நெல்லும் கரும்பும் சிறந்து வளரும் ஊர். நடந்து போகும்பொழுதே ஒரு பக்கத்தில் வாழைகள் நெருங்கி அடர்ந்து வளர்ந்திருப்பதைக் கண்டார். வேலிக்காலிலே வாழைகளை நட்டிருக்கிறார்கள். வேலிதோறும் வாழைகள் நன்றாக வளர்ந்து குலையீன்று நிற் கின்றன. குலைகளில் இயற்கையாகவே கனிகள் குலுங்குகின்றன. வாழையின் அடிமரத்தில் கொஞ்சம் கருமை படர்ந்திருக்கிறது. மேலே செக்கச்செவேலென்று குலைகள் தள்ளியிருக்கின்றன. நன்றாகக் கனிந்திருப்பதனாலே கனிகளெல்லாம் சிவந்திருக்கின்றன. அந்தப் பழங்களிலிருந்து தேன் சொரிகிறது. இவற்றைக் கண்ணாலே கண்டால் கற்பனை நெஞ்சம் படைத்தவர்களுக்கு எத்தனை அழகாகத் தோன்றும்! வேறு யாராக இருந்தாலும் அந்தச் செங்கனிகள் சொரிகின்ற தேனைக் கண்டால் அவர்கள் நாவிலிருந்து நீர் சொரியுமே. சுந்தரமூர்த்தி நாயனார் அவற்றையெல்லாம் கண்ணாலே கண்டார். கண்ட மாத்திரத்தில் றைவனுடைய நினைவுதான் வந்தது. ‘”என்ன அழகு! இவற்றையெல்லாம் படைத்த ஆண்டவன் பேரழகனல்லவா?” என்று அவருடைய உள்ளத்திலே இனிமை பொங்கியது.
பின்பு அந்த ஊர்த் திருக்கோயிலுக்குச் சென்றார். அந்தக் கோயிலில் முல்லைக் கொடி படர்ந்திருக்கிறது. முல்லையில் பல சாதிகள் உண்டு. கொகுடி முல்லை என்பது ஒரு சாதி. அதுதான் அந்தத் தலத்துக்குரிய விருட்சம், அதனால் அந்தக் கோயிலுக்குக் கொகுடிக் கோயில் என்று ஒரு பெயர்.
வெளியிலே வாழையின் வளத்தைக் கண்டு, அந்த வாழையில் உள்ள செங்கனிகளின் அழகையும் கண்டு, அந்தக் கனிகளிலிருந்து சொரிந்து வழியும் தேனையும் கண்டு கோயிலுக்கு உள்ளே புகுந்தவர், அங்கும் ஓர் அழகான காட்சியைக் கண்டார். மணம் பரப்பும் முல்லைக் கொடி படர்ந்த பந்தல் அந்தக் கொகுடிக் கோயிலில் இருப்பதைப் பார்த்தார். ”என்ன அழகு! இறைவனுடைய படைப்பிலே உள்ள அழகுதான் என்னே!” – அவருடைய உள்ளம் துள்ளிக் குதித்தது.
பின்பு கோயிலுக்குள்ளே சென்றார். இறைவனைத் தரிசித்தார். அவனைப் பார்ப்பதற்கு முன்னாலே எம்பெரு மாட்டியினுடைய நினைப்பு வந்தது. எம்பெருமாட்டிக்கு அங்கே கோல் வளையாள் என்று பெயர். அம்பிகையினுடைய அழகிய திருவுருவத்திலே உள்ளத்தைப் பறிகொடுத்தார். அம்மையின் புன்முறுவல் பூத்த திருக்கோலம் அவருக்குத் தோற்றியது.
பெண்களின் அழகைச் சிறப்பிக்கும் போது அவர்களுடைய பற்களின் கூர்மையையும் செறிவையும் ஒளியையும் எடுத்துச் சொல்வது புலவர்களின் மரபு. உடம்பு முழுவதும் அழகு பரவியிருந்தாலும் முகம் ஒளியுடனும் எழிலுடனும் விளங்கினால்தான் அழகியென்று சொல்லுவார்கள். முகத்திற்கு ஒளி தருவது புன்னகை. பற்கள் அழகாக இருந்தாலன்றிப் புன்னகையில் எவ்வாறு அழகு அமையும்?
இங்கே அம்பிகையின் முறுவல் பூத்த முகத்தின் அழகை அப்பெருமாட்டியின் பற்கள் மிகுதியாக்குகின்றன. வெளுப் பாகவும் சிறியனவாகவும் அவை இருக்கின்றன; கூர்மை யாகவும் உள்ளன. மயிலிறகின் அடிக் குருத்தைப் போன்ற வடிவமும் வெண்மையும் பெற்றவை அவை.
குருந்து (குருத்து) ஆய முள் எயிற்றுக் கோல் வளையாளைத் தரிசித்தார் சுந்தரர். கையில் திரண்ட வளையை அணிந்திருக்கிறாள் பிராட்டி.
அழகான காட்சிகள் உள்ள ஊரில் அழகிய முல்லைக் கொடி படர்ந்த கோயிலில் கோல் வளையாள் வீற்றிருந்தாள். அந்தப் பெருமாட்டியோடு எம்பெருமான் வீற்றிருந்தான்.
வேலி தோறும்
கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியும்
கருப்ப றியலூர்க்
குருந்தாய முள் எயிற்றுக் கோல்வளையா ளவளோடும்
கொகுடிக் கோயில்
இருந்தானை.
[கருந்தாள-கரிய அடி மரத்தையுடைய. குருந்து-மயிலிறகின் அடிக்குருத்து. முள்-முள்ளைப் போன்ற கூர்மை. கோல்வளை-திரட்சி பெற்ற வளை. கொகுடி-ஒரு வகை முல்லை.]
கொகுடிக் கோயிலில் இருந்த பெருமானைத் தரிசித்தால் வினைகளெல்லாம் போய்விடுகின்றன. எம்பெருமானுடைய தரிசனம் அன்பர்களுடைய உள்ளத்து மாசையெல்லாம் கழுவிவிடும். சுந்தரர் வினை போக எம்பெருமானைத் தரிசித்தார்.
மூன்று கரணங்களையும் எம்பெருமானுடைய திருத் தொண்டிலே ஈடுபடுத்தியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இறைவனாலே படைக்கப் பெற்ற இயற்கை எழிலையெல்லாம் கண்டார். அந்த ஊருக்குள்ளே புகுந்தது முதற்கொண்டே அந்த அழகு அவர் கண்ணைக் கவர்ந்தது; கருத்தையும் கவர்ந்தது. உள்ளத்தில் இனிமை நிறைந்தது. வாழைப் பழத்திலே ஒழுகுகின்ற தேனைச் சுவைத்தால் நமக்கு எத்தனை இனிமை இருக்குமோ அதற்கு மேற்பட்ட இனிமை சுந்தரமூர்த்தி நாயனாருடைய உள்ளத்தில் நிரம்பிக் கிடந்தது.
அந்த அழகுக் காட்சிகளைக் கண்டு பின் அம்பிகையோடுள்ள இறைவனைப் பார்த்தார். அவர் கையெடுத்துக் கும்பிட்டார்; கீழே விழுந்து வணங்கினார். அவர் உள்ளத்தில் இனிய உணர்ச்சி அப்பொழுது பொங்கியது. அழகான பாமாலை பாட ஆரம்பித்தார். நாமும் பாமாலை பாடுவோம்; வேறு யாரேனும் புலவர் பாடிவைத்ததைப் பாடுவோம். சுந்தரர் அப்படிக் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லையே! இறைவனுடைய ஆணையினால் பாமாலை பாடுவதற்காகவே தம்முடைய வாழ்வை ஈடுபடுத்தியவர் அவர்; சொன்மாலை பாடுக என்று இறைவனே விரும்பிப் பணித்த பெருமையை உடையவர்.
அவர் பாடுகிறார். பாடும்பொழுது புதிய புதிய மாலைகளைப் பாடுகிறார். வேறு ஒரு தலத்திலே பாடிய பாடலை இங்கே பாடித் தலத்தின் பேரை மாத்திரம் மாற்றுகிறாரா? இல்லை. அவருக்குப் புதிய புதிய கற்பனைகள் தோன்றுகின்றன. புதிய புதிய சிந்தனைகள் எழுகின்றன. புதிய புதிய பாடல்கள் மலர்கின்றன. எம்பெருமானுடைய பெருமையைப் புதிய புதிய முறையிலே அமைத்துப் பாடுகிறார்.
வெறும் சொற்களின் கூட்டமே கவிதை ஆக இருந்தால் புதுமை இராது. எல்லாச் சொற்களும் முன்புள்ள புலவர்களால் ஆளப் பெற்றவையே. வெறும் சொல்லிலே மாத்திரம் கவிதை இல்லை. சொற் கூட்டத்தினூடே உள்ள உயிராகிய உணர்ச்சியிலேதான் கவிப் பண்பு இருக்கிறது. வெறும் சொற் கூட்டத்திலே கவி இருக்குமானால் அகராதி ஒன்றே போதுமே! சொற்களையெல்லாம் கோவைப்படுத்தி உணர்ச்சி துள்ளும் படியாக ஆக்குவது கவிதை. ஒவ்வொரு முறையும் அது புதிதாக இருக்கும்.
தொழிலாளி ஒரு பொருளை இயற்றினால் மீட்டும் மீட்டும் ஒரே மாதிரி செய்வான். குயவன் ஒருவன் மண்பாண்டத்தை வனைகிறான். அவன் வனைகிற பாண்டம் ஒரே மாதிரி இருக்கும். லட்சக்கணக்கான பாண்டங்களை அவன் படைத்தாலுங்கூட எல்லாப் பாண்டங்களும் ஒரு மாதிரியே இருக்கும். ஆனால் கலைஞனுடைய படைப்பே வேறு. அவன் ஒரு கணம் செய்த படைப்பை மீட்டும் செய்யமாட்டான். ஒவ்வொரு கணமும் அவன் படைப்பில் புதுமை தோன்றும். நான்முகன் ஒரு பெரும் கலைஞன். எவ்வளவோ காலமாக மனிதர்களைச் சிருஷ்டித்து வருகிறான். பல இடங்களிலே மக்கள் வாழ்கிறார்கள். இருந்தாலும் ஒருவருடைய முகத்தைப்போல வேறு ஒருவருடைய முகம் இருப்பதில்லை. ஒவ்வொன்றிலும் ஒரு புதுமை. கலைஞனிடத்தில்தான் இந்தப் புதுமையைக் காணமுடியும். கவிதை யிலுள்ள சொற்கள் முன்னாலே பல கவிஞர்கள் எடுத்தாண்ட சொற்களாக இருந்தாலும் அவற்றின் கோவையில், புதிதாகப் புகுத்திய உணர்ச்சியில் புதுமை தோன்றுகிறது. அதனால் அப்பொழுது பாடுகிற பாட்டு அன்றலர்ந்த நாண் மலர்போல விளங்குகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகிற ஒவ்வொரு பாட்டும் புதுமைச் சுவையோடு இருக்கிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் அழகான வாழைக் கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூரில் கொகுடிக் கோயிலில் கோல் வளையாளோடும் இருப்பானாகிய எம்பெருமானைத் தரிசித்துப் பாட ஆரம்பிக்கிறார். பாட்டைப் பாடுபவர் பழைய சுந்தரமூர்த்தி நாயனார்; பழைய பரமசிவனையே பாடுகிறார். ஆனால் பாட்டுப் புதியதாக வருகிறது; விருந்தாக வருகிறது (விருந்து புதுமை). சொற்களாகிய மலர்களைத் தொடுத்த புதிய மாலை அது.
அதைப் பாடும்பொழுது அவருக்கு அலுப்பு உண்டாக வில்லை. எத்தனையோ தலங்களுக்குச் சென்று எவ்வளவோ காலமாகப் பாடி வருகிறவர் அவர். ஆயினும் இப்போது பாடும் அந்தப் பாட்டில் ஒரு புதுமைச் சுவை இருக்கிறது. பாடுகிற வருக்கும் சுவை பிறக்கிறது; பாட்டைக் கேட்கிறவருக்கும் சுவை பிறக்கிறது; கேட்கின்ற சிவபெருமானுக்கு மாத்திரமல்ல; இன்றளவும் அந்தப் பாட்டை எத்தனையோ மக்கள் கேட்டு அறிந்து உணர்ந்து இன்புற்றிருக்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் அது புதியதாக இருக்கிறது. ஒரு பாட்டு மற்றொரு பாட்டிலும் புதியது என்பது மாத்திரமல்ல; ஒரு பாட்டையே பல முறை படித்தாலும் புதுமை தோற்றிக் கொண்டே இருக்கிறது. அதை ஒருமுறை படிப்பதோடு நிறுத்திவிடுவது கூடாது. சிறந்த கவி எத்தனை முறை படித்தாலும் புது விருந்தாகவே தோற்றும்.
“ஆயுந் தொறுந்தொறும் இன்பம், தருந்தமிழ்“.
என்று ஒரு புலவர் சொல்கிறார்.
கவிதையைப் படிப்பவனுக்கே புதிய புதிய இன்பம் சுரக்குமானால் படைப்பவனுக்கு எத்தனை இன்பம் இருக்கும்! மேலும் மேலும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு உண்டாகிறது. “இத்தனை காலம் நாம் படைத்து விட்டோமே; இத்தனை காலம் ஓவியம் எழுதி விட்டோமே; இனி எதற்கு?” என்ற சலிப்புக் கலைஞனுக்கு வருவது இல்லை. தொழிலாளிக்குத்தான் அத்தகைய சலிப்பு உண்டாகும். வேலை செய்யும் காலத்தையும் கிடைக்கிற ஊதியத்தையும் நினைத்துக் கொண்டிருப்பவன் தொழிலாளி. அவற்றை மறந்து தன் கலைப் படைப்பிலே ஈடுபட்டுக் கிடக்கிறவன் கலைஞன். புதியது ஒன்றைப் படைக்கும்போது அவன் உள்ளத்திலே முகிழ்க்கும் இன்பந்தான் அந்த நிலைக்குக் காரணம்.
கலைஞன் படைக்கப் படைக்கப் புதுமை ஊறும். அந்தப் படைப்பைக் கலையார்வத்தோடு காணும் இயல்புடைய வர்களுக்குப் பார்க்கப் பார்க்க இன்பம் ஊறும். கலைஞனுடைய படைப்பு யாவும் புதிய புதிய பொருள்களே. கலைஞர்களுக்குள் சிறந்தவன் கவி. அவன் படைத்த கலைப்பொருளாகிய கவி படிக்குந்தோறும் இன்பத்தைத் தருவது.
சுந்தரமூர்த்தி நாயனார் கொகுடிக் கோயிலுக்கு வந்து பாடிய பாட்டு முதற்பாட்டு அல்ல. அவர் பித்தா என்று ஆரம்பித்தது முதற்பாட்டு. அதற்குப் பின் பல பதிகங்களைப் பாடினார். ஆயினும் அவருக்குப் புதுமை மணம் மாறவில்லை. பாட்டைப் பாடும்போதெல்லாம் புதுமை மணம் நெஞ்சத்திலே ஊறுகிறது. அவர் பாடும் பாமாலை விருந்தாக இருக்கிறது.
விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி.
இறைவனைத் தம்முடைய கண்ணாலே கண்டு சரணாதி அவயவங்களினாலே பணிந்தார். அது உடம்பால் ஆகிய செயல். அடுத்து கரணமாகிய வாக்கினால் செய்யும் செயல், சொல் மாலை சூடுவது. ‘விருந்தாய சொன் மாலை’ கொண்டு ஏத்தினார். இவ்வளவு பணிகள் செய்தும், இத்தனை விருந்தாகிய சொல் மாலைகளைச் சூட்டியும் அவருக்கு மனநிறைவு உண்டாகவில்லை. தம்முடைய உள்ளத்தில் இறைவனை நினைத்துப் பார்க்கிறார். அப்பொழுதுதான் இனிமை பரிபூரணத்தை அடைகிறது. பாட்டைக் காதிலே கேட்கும்போது ஓரளவு இனிக்கும். அதன் கருத்து உள்ளத்துக்குள்ளே புகும்பொழுதுதான் மிக மிக இனிக்கும்.
இறைவனைக் கண்டு பணிந்து ஏத்திய சுந்தரர் அவனை நெஞ்சிலே நினைக்கிறார். உணர்ச்சிகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து அவனுடைய அருளை நினைக்கிறார். அவ்வாறு நினைக்கும்பொழுது எத்தனை இன்பமாக இருக்கிறது!
நினைத்தபோது அவர் நமக்கு இனியவாறே!
அந்த இனிமை இப்படியிருந்தது என்று அளவிட்டுச் சொல்ல முடியவில்லை. “அவர் நமக்கு இனியவராக இருக்கும் திறம் என்னே!” என்னே!” என்று அநுபவாதிசயப் பெருக்கிலே பாடுகிறார்.
கண்ணினாலே கண்ட இயற்கை அழகிலே இனிமை, தரிசித்த மூர்த்தியினுடைய காட்சியில் இனிமை, அவனைப் பாடிய தேவாரப் பாட்டில் இனிமை. அவனைப்பற்றிய நினைப்பில் இனிமை, ஆக எல்லாவற்றிலும் இனிமையைக் கண்டார் சுந்தரர். எல்லாம் இனிமை மயமாக இருக்கின்றன.
விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி வினைபோக
வேலி தோறும்
கருத்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியும்
கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்எயிற்றுக் கோல்வளையா ளவளோடும்
கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு இனிய வாறே!
[கரிய அடிமரத்தையுடைய வாழையின் மேல் கனிந்த சிவந்த பழங்கள் முதிர்ந்து தேனைச் சொரிகின்ற திருக்கருப்பறியலூரில், மயிலிறகின் அடிக் குருத்தைப் போன்ற கூர்மையான பற்களை உடைய கோல் வளையம்மையுடன் கொகுடிக் கோயிலில் எழுந்தருளி யிருந்தவனை, புதுமையையுடைய சொல்மாலைகளைக் கொண்டு துதித்து, பாவங்கள் எல்லாம் போகாநிற்க, மனத்தினால் இப் பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனித்த இனிமை இருந்தவாறு என்னே!
விருந்து – புதுமை. ஏத்தி – துதித்து. வினை – தீவினை. வேலி தோட்ட வேலி. இருந்தானை – வீற்றிருந்தவனை. இனியவாறே – இனியவாறு என்னே! இனிமையை நினைக்கையில் மதிப்பு உயர்ந்து அவர் என்று பன்மையில் சொல்கிறார்.]