ஞான நாடகம்

மணிவாசகர் இறைவனுடைய திருவருளைப் பெற்ற வகையை எண்ணி எண்ணி வியந்து உருகுவதைப் போல வேறு யாரும் உருகியது இல்லை. ஏழை ஒருவனுக்குப் பெருஞ் செல்வம் கிடைத்து போலவும், பட்டினி கிடந்தவனுக்கு உணவு கிடைத்ததுபோலவும், இறைவன் அருளைப் பெற்றதனால் உண்டான இன்பத்தில் அவர் களிக்கூத்தாடுகிறார். “என்னை ஆண்டுகொண்டது என்ன ஆச்சரியம்!”என்று வியப் படைகிறார்.

உலகத்தில் உள்ள உயிர்க் கூட்டங்களுக்குள் மனிதன் உயர்ந்தவன். மற்றப் பிராணிகளை யெல்லாம் அவன் அடக்கி ஆள்கிறான். உயர்ந்தவர்களாக இருப்பவர்கள் தம்மினும் தாழ்ந்தவர்களுக்கு உதவி புரிந்து தம்முடைய உயர்வை நாட்டிக் கொள்வதுதான் சிறந்த முறை. அப்படியின்றி அதிகாரத்தாலும் அச்சுறுத்துவதனாலும் தம் தலைமையை நிறுவுவது இழிந்த முறை. தம்முடைய ஆற்றலாலும் பதவியாலும் உலகம் முழுவதுக்கும் நன்மை செய்கிறவர்கள் சுரர்கள்; தம்முடைய ஆற்றல் முதலியவற்றால் பிறருக்கு அச்சத்தை ஊட்டுகிறவர்கள் அசுரர்கள். குணத்தால் உயர்ந்தவர்கள் தேவர்களுக்குச் சமானம்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”

என்று வள்ளுவர் கூறினார் அல்லவா? உயர்ந்தவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பாராட்டுவது உலக இயல்பு. வானவர்கள் தம்மினும் தாழ்ந்த மக்களுக்கும் பிறருக்கும்

உபகாரம் பண்ணுகிறவர்கள். அவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வாழும் உலகம் பதினான்கு உலகங்களின் அடுக்கில் மேலே இருப்பது. வான நாட்டில் வாழ்கிறவர்கள் அவர்கள். அவர்களால் நமக்கு மழை கிடைக்கிறது; தீ கிடைக்கிறது; காற்றைப் பெறுகிறோம். இப்படியிருந்தும் நாம் அவர்களைக் காண முடிவது இல்லை.

இறைவன் தேவலோகத்தையும் விட உயரத்தில் இருப்பவன். இவ்வளவு உபகாரிகளாகிய தேவர்கள் இறைவனுடைய அருளினால்தான் ஏனையவர்களுக்கு நன்மை செய்யும் நிலையில் இருக்கிறார்கள். நாம் வாழும் நாட்டில் போலீஸ் காரன் நம்மைப் பாதுகாக்கிறான்; தண்ணீரைப் பாதுகாக்கும் அதிகாரிகள் தண்ணீர் விடுகிறார்கள்; சாலையை அமைக்கும் வேலைக்காரர்கள் சாலை போடுகிறார்கள். இப்படிப் பல வகையில் தொண்டு செய்கிறவர்களுடைய செயல்களால் மக்கள் நல்வாழ்க்கையைப் பெறுகிறார்கள். போலீஸ்காரர் முதலியவர்கள் தாமாகவே தம் வேலையைச் செய்வதில்லை. அரசாங்கத்தில் ஊதியம் பெற்று அதன் ஆணைக்கடங்கி நடக்கிறார்கள். நல்லவர்களாக இருந்தால் கரும்பு தின்னக் கூலி கிடைத்ததே என்று மகிழ்ச்சியோடு தங்கள் வேலையைச் செய்வார்கள். இல்லையானால் வாங்குகிற சம்பளத்துக்கு எவ்வளவு உழைக்க வேண்டுமோ அப்படி உழைப்பார்கள். பொல்லாதவர்களாக இருந்துவிட்டால் கிடைக்கும் சம்பளம் போதாதென்று லஞ்சம் வாங்கி, மக்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாகத் துன்பம் உண்டாக்குவார்கள். தேவர்கள் தம் கடமையை உணர்ந்து இறைவன் ஆணையின் வழி நடந்து உலகுக்கு உபகாரம் செய்கிறவர்கள். அதிகாரிகள் அரசாங்கத்தை மறந்து தாமே தம் மனம் போனபடி நடந்தால் அராஜகம் உண்டாகும். அப்போது அவர்களை அரசாங்கத்தார் கடுமையாக ஒறுப்பார்கள். அப்படியே தேவர்கள் சில சமயங்களில் செருக்குற்று இறைவன் பெருமையை மறந்து விடுவார்கள். அப்போது இறைவன் அவர்களுக்குத் தண்டனை அளிப்பான். அவர் களுடைய இன்ப வாழ்வுக்கு அசுரர்களால் இன்னல்கள் உண்டாகும்படி செய்து அறிவு புகுத்துவான். இறைவனுடைய பெருமையை நன்கு உணர்ந்து எக் காலத்தும் அவனுக்கு அடிமையாக வாழவேண்டும் என்ற நினைப்பு, அவ்வளவு பெரியவர்களாகிய வான நாடர்களுக்கும் இருப்பது இல்லை. அதனால் இன்னும் இறைவனுடைய ஆற்றல் முழுவதையும் அவர்கள் அறிந்ததில்லை.

வான நாடரும் அறியொணாத நீ.

வான நாடருக்கே அறியும் ஆற்றல் இல்லையென்றால் மற்றவர்களைப்பற்றி என்ன சொல்வது! மிகமிக உயரமாக இருக்கிறவனே ஒரு மரத்தின் கனியை எட்டிப் பறிக்க இயலவில்லை; அவனினும் குறைந்த உயரம் உள்ளவன் எப்படிப் பறிக்கப் போகிறான்?

தேவர்கள் கிடக்கட்டும். கடவுளைப் பற்றிய செய்தி களைப் பெரியவர்கள் நமக்குச் சொல்கிறார்கள். தம்முடைய அநுபவத்தால் உணர்ந்தவற்றைச் சொல்கிறார்கள். “வேதத்தின் முடிவாகிய உபநிஷத் இப்படிச் சொல்கிறது”என்று அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்கள். எந்தப் பெரியவர் இறைவனைப் பற்றிப் பேசினாலும், அவருடைய அநுபவம் மற்றவர்களி னின்றும் வேறுபட்டாலும், ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒன்றாகப் பேசுகிறார்கள்.

“உபநிஷத் இப்படிச் சொல்கிறது”என்றே ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். ‘அவர்கள் வெவ்வேறு வகையாகச் சொல்கிறார்களே; அவர்கள் யாவரும் மேற்கோளாகக் காட்டும் உபநிடதத்தையே அணுகிக் கேட்கலாம்’என்று எண்ணி அதனை அணுகினாலோ, அது ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது. எப்படி இறைவனுடைய திருவருள் பெற்றவர்கள் வேறு வேறாகத் தம் அநுபவங்களை விரித்து உரைக் கிறார்களோ, அப்படியே உபநிஷத்தின் பகுதி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இறைவனைப்பற்றி பேசுகிறது. இப்படிப் பேசிவிட்டு, “அவன் அறியொணாதவன்”என்றும் முறையிடுகிறது. “இது அன்று; அது அன்று”என்று சொல்லத் தெரிகிறதே ஒழிய, “இதுதான்!”என்று சுட்டிச் சொல்வதற்கு அதனாலும் முடிவதில்லை.

“அல்லை யீதல்லை யீ தென மறைகளும் அன்மைச்
சொல்லி னால்துதித் திளைக்கும்இச் சுந்தரன்”

என்று பரஞ்சோதி முனிவர் சொல்கிறார்.

தேவர்களுக்குத் தெரிய அரிய பொருளாக இருக்கும் ஆண்டவன் எல்லோருக்கும் அறிவு தரும் மூல பண்டாரமாகிய மறையின் ஈறாகிய உபநிடத்தங்களுக்கும் அறிவரியவனாக இருக்கிறான். உபநிடதங்கள் அவனைப் பற்றியே பேசுகின்றன.

அவனுடைய சூழ்நிலையையெல்லாம் சொல்கின்றன. ஆனால் அவனைத் தொடர்ந்து சென்று சுட்ட இயலாமல் நின்று விடுகின்றன.

மறையில் ஈறும்முன் தொடரொணாத நீ.

நெட்டையாக இருக்கிறவன் மரத்தில் உள்ள கனியை எட்ட முடியாமல் நின்றாலும் குட்டையாக இருக்கிறவன் அறிவாளியாக இருந்து, மரத்தில் ஏறிப் பழத்தைப் பறிக்கலாம் அல்லவா? வான நாடருக்கு அரியவனாகிய இறைவனைத் தம்முடைய அறிவைக்கொண்டு கண்டு பிடிக்கிறவர்கள் யாரேனும் இருக்கலாமோ? அப்படியும் யாரும் இல்லை. எந்த நாட்டில் எவ்வளவு அறிவோடு இருந்தாலும், யட்சர், கின்னரர், கந்தருவர் என்று பல பல பேரோடு பல இடங்களில் இருக்கும் யாரும் அவனை அறிய முடியாது.

ஏனை நாடரும் தொடரொணாத நீ

இவ்வளவு உயரத்தில் யாரும் அறிய ஒண்ணாத நிலையில் இருக்கிறான் என்றால் யாருக்கு என்ன பயன்? மரத்தின் உச்சிக் கொம்பில் ஒரு பழம் பழுத்திருக்கிறது. அதை யாரும் எட்டிப் பறிக்க முடியாது. மரத்தின் மேல் ஏறியும் பறிக்க முடியாது. அப்படியானால் அந்தப் பழத்தை உண்ணுவது எப்படி? பழம் தானே கனிந்து உதிர்ந்தால் அதை உண்ணலாம். கீழே நிற்பவன் முயற்சி ஒன்றும் இல்லாமல் கனி தன் இயல்பினாலே முதிர்ச்சி பெற்று அவன் கைக்குக் கிடைக்கும் படி கீழே விழுகிறது. இறைவனும் கருணை முதிர்ச்சியினால் அடியவர்களை ஆண்டுகொள்ள இறங்கி வருகிறான்.

மாணிக்கவாசகர் தம்மை இறைவன் ஆண்டுகொண்ட பெருங்கருணையை நினைத்து வியக்கிறார். ‘இறைவனுடைய அருளைப் பெறவேண்டுமானால் என்ன என்னவோ செய்ய வேண்டும் என்றல்லவா சொல்கிறார்கள்? “புலன்களை அடக்கி, உண்ணாமல் உறங்காமல் வெப்பத்தையும் குளிரையும் பொறுத்துத் தவம் செய்யவேண்டும். குளங்களில் நீராடிக் கோயிலை வலம்வந்து விரதம் இருந்து ஜபம்செய்து தியானம் புரிந்து அவன் அருளைப் பெறவேண்டும்”என்று சொல்கிறார்களே! இறைவன் என்னை ஆண்டு கொண்டான். அதற்காக நான் ஒன்றும் செய்யவில்லை. என்னைப் பல வகையான இடையூறுகளுக்கு உள்ளாக்கிப் பிறகு எனக்கு அறிவை உண்டாக்கி அவன் என்னை ஆட்கொள்ளவில்லை. இனிதாக ஆண்டுகொண்டான். காய்கறிகளைக் காம்பு நீக்கித் தோல் நீக்கிச் சமைத்து உண்பது போல அவன் செய்யவில்லை. பழுக்காத மாங்காயானாலும் அதன்மேல் ஆசையுள்ள பையன் அப்படியே அதைக் கடித்தாற் போல இறைவன் செய்தான். அவனுடைய அடியானாகும் முறை எனக்கு இனிதாக இருந்தது. என்னை ஆட்கொண்டதனால் அவனுக்குத் தான் இன்னாமை உண்டாகியிருக்க வேண்டும். எனக்கோ இனிமையை அன்றி வேறு ஒன்றும் இல்லை. அவன் எவ்வளவு இனிமையாக ஆண்டுகொண்டான்! அதை நினைக்கும்போதே எனக்கு வியப்பு மீதூர்கிறது.’இப்படியெல்லாம் சொல்வதற்குப் பதிலாகச் சுருக்கமாக, “ஆ ஆ! என்ன வியப்பு! என்னை எம்பெருமான் இனிதாக ஆண்டுகொண்ட விதத்தை எவ்வாறு சொல்வேன்!”என்கிறார். ‘என்னை ஆண்டு கொண்டவாறு”என்று ஆச்சரியத்தில் மூழ்கி வாக்கியத்தை முடிக்காமலே நிறுத்துகிறார்.

வான நாடரும் அறியொ ணாதநீ
மறையில் ஈறும்முன் தொடரொ ணாதநீ
ஏனை நாடரும் தெரியொ ணாதநீ
என்னை இன்னிதா ஆண்டு கொண்டவா!

(வான நாடர் – தேவர். மறையில் ஈறு – வேதாந்தம்; உபநிடதங்கள். ஏனை மற்ற. இன்னிதா – இனிதாக; செய்யுள் விகாரம்; ஓசையின் பொருட்டு இனிதா என்பது இன்னிதா என்று வந்தது. ஆண்டு கொண்டவா; ஆண்டு கொண்டவாறு என்னே என்று விரிப்பதற்குரியது.)

இறைவனுடைய திருவருளால் அவனுக்கு ஆளாகிய பிறகு, சற்றே பழைய நிலையை நினைத்துப் பார்க்கிறார் மாணிக்கவாசகர். நெடுந்தூரம் கடந்து வந்தவன் எங்கெங்கே தங்கினோம் என்று எண்ணிப் பார்க்கிறது போலப் பார்க்கிறார். ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அப்போது இறைவனை உணராமல் வீணே பொழுது போக்கியதும், இப்போது அவனருளிலே கரைந்து இன்புறுவதுமாகிய இரண்டுமே இறைவன் அருளாணையின் வழியே நடந்தவை என்பதை இப்போது உணர்ந்திருக்கிறார். பழைய நிலை ஒன்று; இப்போதுள்ள நிலை ஒன்று ; அந்த நிலையினின்று இந்த நிலைக்கு வந்தபோது இருந்த நிலை ஒன்று. துன்பம் நிறைந்த தென்கரையில் இருந்தார். பிறகு ஓரிடத்தில் ஏறி ஆற்றைக் கடந்தார். இப்போது இன்பம் நிறைந்த வடகரையில் நிற்கிறார். இந்த மூன்று நிலைகளையும் பற்றி இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமாக இருக்கிறது.

முதலில் இருந்த நிலை என்ன? அதை ஊனின் நாடகம் என்று சொல்கிறார். இந்த உடம்பு எப்படி எல்லாமோ கூத்தாடியது. அக்காலத்தில் செய்த காரியங்கள் யாவும் ஊனை வளர்க்கச் செய்தவையே. சோற்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்வதுதான் ஊனை வளர்க்கச் செய்யும் செயல் என்று நாம் நினைக்கிறோம். அந்தச் சோற்றைச் சமைக்க அரிசி வாங்கி வருகிறோம்; அதுவும் உடம்பை வளர்க்கச் செய்வதுதான். அரிசி வாங்குவதற்காகப் பணம் சம்பாதிக்கிறோம்; அதுவும் ஊனுக்காக ஆடும் நாடகந்தான். பணம் சம்பாதிப்பதற்காகப் பலரிடம் போய் அவர்கள் புகழைப் பாடுகிறோம்; அதுவும் ஊன் நாடகந்தான். பின்னாலே நமக்கு நிறையப் பணம் வருமென்று இப்போது பணத்தைச் செலவழிக்கிறோம்; அந்தச் செயலும் உடம்புக்காக ஆடும் கூத்துத்தான்.

“போற்றியோ போற்றியோ என்று புதுச்செல்வம்
தோற்றியார் கண்எல்லாம் தொண்டேபோல்
ஆற்றப் பயிற்றிப் பயிற்றிப் பல உரைப்ப தெல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு”

என்பது ஒரு பழம்பாட்டு. இறைவன் திருவருளை நினையாமல் உலகியலிலே எத்தனை வகை முயற்சிகள் செய்தாலும் அவை யனைத்தும் இந்த உடம்புக்கு இன்பம் தரச் செய்வனவாகவே முடியும்.

உடம்புக்காகக் கூத்தாடியதையெல்லாம் இப்போது எண்ணினால் சிரிப்பாக வருகிறது; என்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறது. இறைவன்தான் அந்த நாடகம் நடக்கும்படி செய்தான் என்ற உணர்வு இப்போது உண்டாகி விட்டது. அவன் திருவருள் ஆணை இப்படி ஆட்டுகிறது என்று அப்போதே தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அது தெரியாமல் ஆண்டவன் ஆட்டினான். அவனுடைய மாயையை என்னவென்று சொல்வது!

ஊனை நாடகம் ஆடுவித்தவா!

(ஊனை – உடம்பை. ஆடுவித்தவா – ஆடும்படி செய்தவாறு என்ன ஆச்சரியம்.)

ஊனின் நாடகம் ஒருவிதமாக ஓயத் தொடங்கியது. உள்ளம் உருகியது. இறைவன்பால் காதல் ஏற ஏற இந்த உருக்கம் மிகுதியாயிற்று. எவற்றை இன்பம் என்று எண்ணி ஓடி நாடி நின்றாரோ அவற்றை இப்போது நாடுவதில்லை. இப்போது அவற்றின் நினைவே தோன்றுவதில்லை. எப்போதும் இறைவனுடைய நினைவுதான். தம் சிறுமையை எண்ணி நெகிழ்ந்தார்; இறைவனது கருணையை எண்ணி உள்ளம் உருகினார். உடம்பு என்ற ஒன்று இருப்பதே இப்போது தோன்றவில்லை. ஊன் உருகி உள்ளொளி பெருகியது. எல்லாம் இறைவன் மயமாகக் கண்டார். அநுபவிக்கும் பொருளை எல்லாம் இறைவனாகவே உணர்ந்தார். இறைவனையே நுகர்ந்தார். முன்பு இருந்த நிலை என்ன! இப்போது இருக்கும் நிலை என்ன! என்ன வியப்பு இது!

உருகி நான்உனைப் பருக வைத்தவா!

(பருக வைத்தவா – பருகவைத்தவாறு என்னே!)

ஊன் நாடகம் ஆடியது ஒரு நிலை. பிறகு உருகி இறைவனைப் பருகும் நிலை அடுத்தது. இப்போது அப்படிப் பருகி அமைதி பெற்று நிற்கிறார். இப்போதும் அவர் பேசுகிறார், நினைக்கிறார், செயல் செய்கிறார். இவை யாவும் ஞானமணம் வீசுகின்றன. உண்மையான இன்பத்தில் அமைந் தனவாக இருக்கின்றன. இப்போது உடம்புக்குத் தலைமை போயிற்று; உள்ளத்துக்குத் தலைமை போயிற்று; உயிருக்கும் தலைமை போயிற்று. உயிர் இத்தகையது, அதனை ஆட் கொண்ட தலைவன் இத்தகையவன் என்ற ஞானம் வந்தபிறகு, அந்தத் தெளிவிலே பிறந்த செயல்களில் நான் என்பது இல்லை; எனது என்பதும் இல்லை; ஞானத் தெளிவில் பிறக்கும் உரையும் நினைப்பும் செயல்களுமாக வாழ்க்கை அமைந்து விட்டது. அன்றும் உலகில் வாழ்ந்தார்; இன்றும் உலகில் வாழ்ந்தார். ஆனால் அன்று உலகத்தில் அவர் கரைந்து நின்றார்; இன்றோ அவருக்குள் உலகம் கரைந்துவிட்டது. அன்று அஞ்ஞானத்தால் ஊன் கூத்தாடியது; இன்று ஞானந்தான் நின்று நிலவுகிறது. அன்று நடந்தது ஊனின் நாடகம்; அல்லது அஞ்ஞான நாடகம்; இன்று நடப்பது ஞான நாடகம். ஞானம் தலைப்பட்டவுடன் உலகத்தில் இருந்த இச்சைகளெல்லாம் நைந்து ஒழிந்தன. ஊனின் நாடகத்தில் இச்சையே சூத்திரமாக இருந்தது. இன்று அது அறுந்துவிட்டது. ஞான நாடகத்தில் அதற்கு வேலை இல்லை.

இந்த ஞான நாடகம் ஆடும்படி பண்ணியதும் இறைவன் திருவருள்தான். இதற்கு முன் நிகழ்ந்தவற்றைவிட இதுதான் பெரிய ஆச்சரியம்.

ஞான நாடகம் ஆடு வித்தவா,
நைய வையகத் துடைய இச்சையே!

(ஆடுவித்தவா – ஆடச்செய்தவாறு என்னே! வையகத்துடைய இச்சை நைய ஞான நாடகம் ஆடுவித்தவாறு என்னே!)

‘இறைவன் வானவர்க்கும் மாமறைக்கும் ஏனை யோருக்கும் காண்பதற்கு அரியன். அவன் காண்பதற்கு எளியனாக வந்து ஆண்டுகொண்டான். அதற்குரிய தகுதி இல்லாததனால் ஒறுத்துப் பணி கொள்ளாமல் இனிதாகவே ஆண்டு கொண்டான். இது ஆச்சரியம்! முதலில் உடம்பைத் தலைமையாகக் கொண்டு கூத்தாடினேன்; அப்படி ஆடச் செய்தவன் அவன். அப்படி ஆட்டினது வியப்பு! பிறகு தன்னை நினைந்து உருகச்செய்து படிப்படியாக ஆட்கொண்டு தன்னைப் பருகச்செய்வித்தான். இது அதைவிட வியப்பானது! முடிவாக எல்லா போக இச்சைகளும் நான் ஞான மயமாக நின்று செயல்புரியம் ஞானக் கூத்தனாகும்படி அவன் செய்தான். அதுதான் வியப்புக்கெல்லாம் பெருவியப்பு! என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.

வான நாடரும் அறியொ ணாதநீ
மறையில் ஈறுமுன் தொடரொ ணாதநீ
ஏனை நாடரும் தெரியொ ணாதநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா!
ஊனை நாடகம் ஆடு வித்தவா!
உருகி நான்உனைப் பருக வைத்தவா!
ஞான நாடகம் ஆடு வித்தவா,
நைய வையகத் துடைய இச்சையே!

[வானில் உள்ள தேவர்களும் அறியமுடியாத அரிய பொருளாக உள்ள நீ, வேதத்தில் ஈறாக உள்ள உபநிடதங்களும் தொடர இயலாத நீ, மற்ற எந்த இடத்தில் உள்ளவரும் அறிய ஒண்ணாத நீ, எளியேனை இனிதாக வந்து ஆண்டு கொண்டவாறு என்ன வியப்பு! நின் அருள் பெறாததற்கு முன் உடம்பைக் கூத்தாடும்படி செய்தவாறு என்னே! பிறகு உன்னை எண்ணி உருகி உன்னை இன்பப் பொருளாக அநுபவிக்க வைத்தவாறு என்னே! முடிவில் வையகத்தில் எனக்கிருந்த இச்சை அனைத்தும் மங்க ஞானக் கூத்தை ஆடும்படி செய்த வண்ணம் என்ன ஆச்சரியம்!

அறிய ஓணாத என்பவை அறியொணாத என வந்தன; தொகுத்தல் விகாரம்; தொடரொணாத, தெரியொணாத என்பவையும் அத்தகையனவே. ஊன் -உடம்பு. பருக – அநுபவிக்க.  வையகத்துடைய – வையகத்தினது. இச்சை – ஆசை.)