இனி என் செய்வது!
இறைவனிடம் இடையறாத அன்பர்கள் அவர்கள். எப்போதும் இறைவனையே நினைந்து வாழ்கிறார்கள். இறைவனைப் பற்றி யார் பேசினாலும் அவர்களுடைய கண்களில் நீர் துளும்பும். அவர்கள் உள்ளம் எவ்வளவு மெல்லியது! எவ்வளவு நெகிழ்ச்சியை உடையது! இறைவனுடைய புகழை நினைக்கும்பொழுதெல்லாம் கனலிலே பட்ட மெழுகைப்போல அவர்களுடைய உள்ளம் கரைகிறது.
எத்தனை பிறவி எடுத்தாலும் உலக இன்பத்தில் ஈடுபடுபவர்களுடைய மனம் அப்படி இருப்பதில்லை. படலம் படலமாகப் பற்றும் ஆசையும் கோபமும் பிற தீய குணங்களும் செறிந்து செறிந்து மனம் பாறையாகிப் போய்விடுகிறது. அது நாளாக ஆக இறுகுகிறதே ஒழிய நெகிழ்வதில்லை. ஆனால் இறைவனிடம் அன்பு ஏற்பட்டுவிட்டால் பெரிய ஆச்சரியம் நிகழ்கிறது. அந்தக் கருங்கல் நெகிழ்கிறது; அழல் சேர்ந்த மெழுகுபோல நெகிழ்கிறது.
மனம் நெகிழ்வதை எப்படி அறிவது? ஒருவருடைய துன்பத்தைக் கண்டால் இரக்கம் உண்டாகும். அவர்களுடைய பேச்சில் ஒரு குறைவு தோன்றும். செயலில் மென்மையும் பணிவும் அமையும். அவர்கள் அன்பினால் குழைந்து நெகிழ்வதை அவர்களுடைய உடம்பு, வாக்கு, உள்ளம் எல்லாமே காட்டும்.
மனிதர் கூட்டத்தில் இப்படி இறைவனிடம் அன்பான மனம் கொண்டு அழல் சேர்ந்த மெழுகு போல இருக்கிறவர்களை மற்றவர்கள் பார்க்கிறார்கள்; பழகுகிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பு நிலையை உணர்ந்து கொள்வதில்லை. ஒருகால் அது அவர்கள் உள்ளத்தில் எப்போதாவது உறைத்தாலும், மறுகணத்திலே விலகிய பாசி மறுபடியும் மூடிக்கொள்வதுபோல, பழைய கடுமையே வந்துவிடுகிறது.
நாமாக உருகாவிட்டாலும் பிறர் உருகுவதைக் கண்டாவது உருகலாம். எவ்வளவுதான் கல்மனம் படைத்தவராக இருந்தாலும் ஒரு வீட்டில் யாராவது இறந்ததற்கு அழுதால், அங்கே செல்லும்போது தம்மையும் அறியாமல் கண்ணில் நீர் வருகிறது. சூழ்நிலையின் வசப்பட்டுச் செயல் செய்வது மனிதனுக்கு உரிய குணம்.
ஆனால், அன்பர்களின் நெகிழ்ச்சியைக் கண்டு நெகிழாத வர்கள் இருக்கிறார்கள். பக்திச் சூழ்நிலை அவர்களுக்கு உறைப்பதில்லை. இரும்புப் பொடியிலே கட்டையை வைத்தால் அப்பொடி அதில் ஒட்டுமா? ஆயிரம் ஆண்டுகள் நீரிலே கிடந்தாலும் இரும்புக்குள் தண்மை ஏறுமா? அப்படியே கல் நெஞ்சர்களுக்குப் பக்தர்களின் அருகில் வாழ்ந்தும் அவர்கள் உள்ளம் நெகிழ்வதில்லை. அது மாத்திரமா? சில சமயங்களில் அந்த அன்பர்களின் செயலைக் கண்டு பரிகாசம் கூடச் செய்கிறார்கள்.
அன்பினால் அகம் கரையும் அன்பர்கள் எப்போதும் இறைவனுடைய திருவடியே இலக்காக இருப்பார்கள். மற்றவர்கள் மின்னுகிற பொன்னைக் கண்டு களித்து அதன் பின்னே சென்று அலைவார்கள். ஆனால் அடியார்களோ மின்னுதலையுடைய பொற்கழலை அணிந்திருக்கும் இறைவன் திருவடியைக் காண்பதே தொழிலாக, அதுவே விளையாட்டாக, அதுவே இன்ப நுகர்ச்சியாக இருப்பார்கள்; அவனடியையே தொழுது வாழ்வார்கள்.
நின்பால் அன்பாம் மனமாய்
அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்ஆர்
பொன் ஆர் கழல்கண்டு
தொழுதே.
இப்படித் தொழுகிறவர்களுக்கு இறைவன் தரிசனம் தந்தான். அவர்கள் அவனுடைய உபதேசம் பெற்றார்கள். அவனை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் அவனையே தொடர்ந்தார்கள்; தம்முடைய வீட்டையும் சுற்றத்தாரையும் விட்டுப் புறப்பட்டுவிட்டார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் மற்றவர்கள். ஏதோ பைத்தியக்காரக் கூட்டம் போகிறதென்றே நினைத்தார்கள். ஆனால் அவர்கள் போன பிறகு நின்றிருந்த இவர்கள் கண்ட சுகம் என்ன? தினமும் ஒன்றுபோனால் ஒன்றாகக் கவலை வந்து அவர்களைப பிய்த்துத் தின்கிறது. “இந்த வாழ்வு இவ்வளவுதானா?”என்று அவர்களிற் சிலருக்கு உணர்வு பிறக்கிறது. ‘முன்பே இறைவனைத் தொடர்ந்து போனார்களே, அவர்களோடு சென்றிருக்கலாமே; அவர்களைப் பரிகாசம் செய்தோமே. இங்கே இருந்து ஏதோ சாதிக்கப் போவதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்? இப்போது அவர்கள் போனதை எண்ணி வருந்துகிறோமே’என்று நைகிறார்கள்.
இனிமேல் அந்த வழி தெரியுமா? தாமாக முயன்று போகத்தான் முடியும்? பல பிறவிகளில் இறைவனிடம் அன்பு செய்து அவனைத் தரிசனம் செய்த பெரியவர்கள் அவர்கள். அவர்கள் அடியைப் பின்பற்றிச் சென்றிருந்தால் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறட்டுமென்ற கருணையினால் அவர்கள் அழைத்துக் கொண்டு சென்றிருப்பார்கள். அவர்கள் போன வழியை அறிவதே அருமை; அறிந்து அந்த வழி செல்வது அதைவிட அருமை; சென்றாலும் பல தடைகள் இடையிலே உண்டாகும்; அவற்றை வென்று மேற்போவது மிக அருமை.
பல அன்பர்கள் பிறந்த நிலத்தில் இவர்கள் பிறந்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் நாளாக ஆக அன்பிலே பழுத்தார்கள். இவர்கள் நெகிழாமல் நின்றார்கள். நெற்பயிர் வளர்ந்து கதிர் முற்றிச் சாய்வது போல அவர்கள் பயன் பெற்றார்கள். இவர்கள் நெருஞ்சிப் பூ முள்ளாகப் பழுத்தது போலத் தமக்கு ஒரு பயனுமின்றி வளர்ந்து பிறருக்குத் துன்பம் விளைத்தார்கள்.
இப்போது அந்த அன்பர்கள் போனபிறகு, “நாம் ஏமாந்து போய்விட்டோமே!”என்று எண்ணி அழுகிறார்கள்.
அழுதேன், நின்பால் அன்பாம் மனமாய்
அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார்
கழல்கண்டு
தொழுதே உன்னைத்தொடர்ந்தா ரோடும்
தொடராதே.
இப்படி அவர்களுள் ஒருவர் கூறுவதுபோல மணிவாசகர் சொல்கிறார்.
இப்போது நினைத்துப் பார்த்தால், ‘நாம் ஏன் பிறந்தோம்?’என்று தோன்றுகிறது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் அவர்கள். ‘பயன் பெற வேண்டிய காலத்தில் பிறந்தும், பயன் பெற்றவர்களைப் பார்த்தும், அறிவு பெறாமல் வீணாகப் பொழுதைப் பழுதாக்கிவிட்டாயே!’என்று அவர்கள் உள்ளம் அவர்களைக் குத்திக் காட்டுகிறது.
பழுதே பிறந்தேன்.
இனிமேல் இறைவனை அடைந்து பணிந்து பேறு பெறலாம் என்றால் அதற்கு என்ன உரிமை இருக்கிறது? ”இறைவா! அவர்கள் நின்கழல் கண்டு தொழுதார்கள். அவர்களை ஆட்கொள்ள நீ எழுந்தருளினாய்; அதுபோல் இப்போதும் வரவேண்டும்”என்று சொல்லலாமா? நேரத்தில் செல்லாமல் வண்டியைத் தவறவிட்ட புத்திசாலிகளல்லவா இவர்கள்? இவர்களுக்கே குற்றம் தெரிகிறது. ‘கடவுளிடத்திலே சென்று என்ன உரிமை கொண்டாடிப் பணிவது? கூட்டத்தோடு கூட்டமாக எளிதிலே போகும் வாய்ப்புக் கிடைத்தும் கைவிட்ட பாவியர் என்று சொல்லிப் புகுவதா?’என்று எண்ணும்போது இவர்களுக்கு மேலும் மேலும் அழுகைதான் வருகிறது. அன்று இறைவனை நினைத்து நெஞ்சு நெகிழ்ந்து அழ வகையில்லாதவர்கள், இன்று, ”உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடர்ந்து வரவில்லையே!”என்று அழுகிறார்கள். “பழுதே பிறந்தேன்”என்று அரற்றுகிறார்கள். “என் கொண்டு உன்னைப் பணிகேனே!”என்று புலம்புகிறார்கள்.
அவருள் ஒருவராகத் தம்மை வைத்துப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.
அழுதேன் நின்பால் அன்பாம் மனமாய்
அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்ஆர் பொன்னார்
கழல்கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடும்
தொடராதே
பழுதே பிறந்தேன்; என்கொண்டு
உன்னைப் பணிகேனே?
[இறைவனே! நின்னிடம் அன்பாக உள்ள மனம் உடையவராகி, நெருப்பைச் சேர்ந்த மெழுகைப் போல உருகுகிறவர்களாகி, மின்னுதலையுடைய பொன்னாலான கழலை அணிந்த நின் திருவடியைத் தரிசித்துத் தொழுது நின்னைத் தொடர்ந்தவர்களோடும் தொடர்ந்து செல்லாமல் (நான் தனித்திருந்து) அழுதேன்; குற்றம் உண்டாகவே பிறந்தேன். (இனிமேல் உன்னைப் பணிந்து உய்யலாம் என்றால்) என்ன உரிமையைக் கொண்டு உன்னைப் பணிவேன்?
அழல் – நெருப்பு. மின் ஆர் – மின்னுதல் பொருந்திய. பொன்னார் கழல்; அன்மொழித் தொகை. அன்னாராகித் தொடர்ந்தா ரோடும் தொடராதே அழுதேன். பழுதே – குற்றம் உண்டாகும் வண்ணம்; வீணாக எனலும் ஆம். என் கொண்டு என்ன உரிமையை மேற்கொண்டு; என்ன தகுதியைக் கொண்டு என்பதும் பொருந்தும். பணிகேன் – வணங்குவேன்.]
மாணிக்க வாசகர் இறைவன் குருநாதனாக வர, அவனிடம் உபதேசம் பெற்ற பிறகு, அவன் உடன்வந்த பக்தர் கணங்களோடு மறைய, அதனை ஆற்றாமல் பாடியது இது என்றும் சொல்வது உண்டு.
இறை நெறியில் வாழ்நாளை அமைத்துக் கொண்டு விருப்பு வெறுப்பின்றி இன்னலாலும் சுகத்தாலும் வேறுபாடடையாமல் வாழும் அன்பர்கள் இந்த உலகிலேயே இறைவனுடைய அணிமையில் இருக்கும் இன்பத்தை நுகர்கிறார்கள். அத்தகையவர்கள் எக்காலத்தும் இருக்கிறார்கள். அவர்கள் செய்வன செய்து இந்த உடலைப் போட்டுச் சென்றபிறகு அவர்கள் புகழுடம்பு இவ்வுலகில் வாழ்கிறது. உடலத்தை நீத்த பிறகு அவர்கள் புகழ் மிகமிகப் பரவுகிறது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் அருமையை அறியாமல் இருந்துவிட்டு அவர்கள் மறைந்த பிறகு அவர்களுடைய உண்மை நிலையை உணர்ந்து, ”ஐயோ! அப்போது அவர்கள் போன வழியில் நாமும் செல்லவில்லையே!”என்று இரங்குபவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் சொல்வதற்குரிய பாட்டு இது என்று கொண்டாலும் பிழை இல்லை.