அருமையும் எளிமையும்

ஒரு பெண்ணுக்குக் கல்யாணமான கதையைச் சொல்கிறார் ஒரு மனிதர்; அழகும் அறிவும் பொருளும் மிகப் பெற்ற ஒரு மாப்பிள்ளை கிடைத்ததைச் சொல்கிறார்.

“அந்த மாப்பிள்ளை கிடைத்தது பெண்ணினுடைய அதிருஷ்டந்தான். ஊரில் எத்தனையோ பேர் பெண்களை வைத்துக்கொண்டு மாப்பிள்ளை எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். பணத்தாலோ பதவியாலோ குறைவின்றி மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் அவர்கள். அவர்கள் இந்த மாப்பிள்ளையைப் பற்றிக் கேட்டிருக்க மாட்டார்கள். ஒருகால் கேட்டிருந்தாலும் பார்த்திருக்க மாட்டார்கள்.”

“என்ன அப்படி உயர்ந்த மாப்பிள்ளை?”

“உயர்ந்தவன் என்று ஒருமுறை சொன்னால் போதாது; ஆயிரந்தடவை சொல்ல வேண்டும். அந்தப் பிள்ளை, யாருடைய கண்ணிலும் தென்படுவதில்லை. பார்க்க வருகிறவர்களுக் கெல்லாம் போக்குக் காட்டி மறைந்து விடுவான்.”

“பின் இவளுக்கு எப்படிக் கிடைத்தான்?”

“அதுதானே சொல்ல வருகிறேன்? அவர்களால் அணுகுவதற்கரிய அவன் இவளைத் தானே வந்து கேட்டு மணந்து கொண்டான். உலகமே அப்போது பிரமித்தது, அவனை எளிதில் காணவே முடியாமல் இருக்கும்போது, அவனே வலிய வந்து மனம் புரிந்தான் என்பதை மற்றவர்கள் எப்படி நம்புவார்கள்?”

“இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்.”

“அவரவர்கள் இடத்தில் இருக்கிறார்கள். இன்னும் பெண்ணை அழைத்துக்கொண்டு போகவில்லை. கழுத்தில் தாலி கட்டியதோடு சரி. எப்போது அழைத்துக்கொண்டு போவானோ தெரியவில்லை.”

“பெண் பாவம் பொல்லாது. அவள் எப்படித் துடிக்கிறாளோ?”

“அவர் எப்போது வருவார், நான் அவரை எப்போது பார்ப்பேன் என்று ஏங்கியபடியே கிடக்கிறாள் அவள்.”

அந்தப் பெண்மணியின் நிலையில் இருந்தார் மணிவாசகர். இறைவன் அவரை ஆட்கொண்டான். அப்பால் அவனுடன் ஒன்றுபடவேண்டும் என்ற ஆசை மீதூர்ந்தது அவருக்கு. அவனைப் பிரிந்து உலக வாழ்வில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை. அவனுடைய அருமைப் பாட்டையும், தம்மைக் கருணையினால் ஆட்கொண்ட எளிமையையும் நினைத்துப் பார்க்கிறார். அவ்வாறு எளிவந்து ஆட்கொண்ட பெருமான் இப்போது அரியனாக இருக்கிறானே என்று எண்ணி ஏங்குகிறார்.

அவன் அரியவன். மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்களாகிய வானவர்களும் அறியாத கோலம் படைத்தவன். அத்தகையவன் கண் காண வந்து ஆட்கொண்டான். திருத்தில்லையில் யாவரும் காணக் கூத்தனாக விளங்குகிறான். ஆயினும் அவனை எளிதில் அணுக முடியாது. அத்தகையவன் வந்து ஆட்கொண்டான் என்றால் எத்தனை சிறப்பு!

மேலை வானவரும் அறியாததோர்
கோலமே! எனை ஆட்கொண்ட கூத்தனே!

ஒரு பொருள் கிடைக்குமட்டும் அது அரியதாகவும் மதிப்புடையதாகவும் இருக்கும்; அது கிடைத்துவிட்டால் அதன்பால் உள்ள ஆர்வமும் மதிப்பும் குறைந்துவிடும். இது உலகியற் பொருளுக்குரிய நிலை. ஆனால் இறைவன் வந்து ஆட்கொண்டான். அதன் பின்னும் அவன் அரியவனாகவும், பெரியவனாகவுமே தோற்றுகிறான். பெரியவர்களோடு பழகுகிறவர்களுக்கு நாளுக்கு நாள் அவர்களுடைய பண்பு தெரிந்து கொண்டே இருக்கும்; அவர்களிடம் மதிப்பு உயரும். இழி குணத்தோர்களிடம் பழகப் பழக வெறுப்பு உண்டாகும். இறைவன் ஆட்கொண்டான். அதனால் அவன் எளிய பொருளாகி விடவில்லை; சிறிய பொருளாகி விடவில்லை. நாம் அறிந்த பொருள்களுக்குள் நம்மால் எல்லை காண முடியாதவை இரண்டு. ஒன்று இடம்; மற்றொன்று காலம். இடத்தின் எல்லையை எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை. காலம் என்று தொடங்கியது, என்று முடிகிறது என்பதை நினைத்தாலே தலை சுற்றும்.

இறைவன் எல்லையற்ற பொருள்; பெரிய பொருள். எல்லையற்ற பொருளாக உள்ள இரண்டை நாம் அறிவோம். அந்தப் பொருள்களைப் போல அவன் இருக்கிறான் என்று சொல்லலாம். அவை இரண்டுமாகவும் இருக்கிறான். இடத்திற் பெரியது நாம் வாழும் பூமி; இதனையும் உள்ளடக்கிய விசும்பு அதைவிடப் பெரியது. இரண்டும் இறைவனுடைய கோலந்தான்.

ஞாலமே! விசும்பே!

ஞாலமும் விசும்புமாகியவற்றுக்குள்ளே எல்லாம் அடங்கிவிடும். ஞாலம் பிருதுவி தத்துவம்; விசும்பு என்றது ஆகாசம். ஐம்பெரும் பூதங்களில் முதலில் தோற்றுவது விசும்பு; இறுதியில் தோற்றுவது ஞாலம். இவை ஒடுங்கும்போது முதலில் ஞாலமும் இறுதியில் விசும்பும் அடங்கும். பிருதுவி இல்லாத ஒரு காலத்தில் விசும்பு இருக்கும். விசும்பு இல்லாத காலத்தில் எந்தப் பூதமும் இருப்பதில்லை. இறைவனுக்குரிய அட்ட மூர்த்தங்களில் ஐம்பெரும் பூதங்களும் சேரும். முதலையும் முடிவையும் சொன்னதனால் இடையில் உள்ளவற்றையும் சேர்த்து ஐம்பெரும் பூதங்களாக நிற்பவனே என்று கொள்ளலாம். இந்தப் பூதங்களுக்குத் தோற்றம் உண்டு; ஒடுக்கம் உண்டு. இவை வந்து போகின்ற காலம் என்னும் தத்துவம் இன்னும் பெரியது. அந்தக் காலமாகவும் இறைவன் இருக்கிறான்.

இவை வந்து போம், காலமே!

‘தேவர்களும் அறிய வொண்ணாத கோலமாக இருப்பவன் என்னை ஆட்கொண்டான். அப்படி ஆட்கொண்ட போது எனக்கு எளியவனாக இருந்தான். மீண்டும் அரியவனாகவே நிற்கிறான். ஆவனைக் காணாமல் தவிக்கிறேன்’என்று எண்ணுகிறார் மணிவாசகர்; முறையிடுகிறார்.

மேலை வானவ ரும்அறி யாததோர்
கோல மே!எனை ஆட்கொண்ட கூத்தனே!
ஞாலமே! விசும் பே!இவை வந்துபோம்
கால மே!உனை என்றுகொல் காண்பதே?

(மேலிடத்தில் உள்ள தேவர்களும் அறியாத ஒரு கோலமே! எனக்கு எளியனாக வந்து என்னை ஆளாகக் கொண்ட கூத்தப் பிரானே! ஞாலமாகவும் விசும்பாகவும் இருப்பவனே! இந்தப் பூதங்களெல்லாம் தோன்றி ஒடுங்க நின்ற காலமே! உன்னை அடியேன் மீட்டும் காண்பது எந்த நாளோ?

மேலை: ஐ, சாரியை. கோலம்-உருவம். ஞாலம்-பூமி. விசும்பு -ஆகாயம்.)