அமுதப் பெருங்கடல்

சில புலவர்கள் தம்முடைய புலமைத் திறத்தினாலும் பலவகை அறிவினாலும் அவதானம் செய்வார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களைக் கவனிப்பது அவதானம். அஷ்டாவதானம், தசாவதானம், சதாவதானம், சகஸ்ராவதானம் என்று செய்வார்கள். அவதானம் செய்பவர்கள் பலவகையான கேள்விகளுக்குத் தொடர்ச்சியாகப் பதில் சொல்வது வழக்கம்.

புலமை உடையவர்களும் அறிவிலே சிறந்தவர்களுந்தான் இதைச் செய்ய முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவகையில் அறிவோடு பொருந்திய அவதானங்களை அவர்களே செய்ய முடியும் என்பது உண்மை. ஆனால் ஒவ்வொரு மனிதனும் பலவகையான அவதானங்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறான். ஏதேனும் ஒன்றை நினைப்பானானால் அந்த அளவிலே நிற்பதில்லை. பலவகையான நினைப்புக்கள் அவனுடைய உள்ளத்திலே தோன்றுகின்றன. ஒரு கணத்துக்குள் ஆயிரம் சிந்தனைகள் வந்து தோன்றுகின்றன. அப்படியே, பேசும் பொழுதும் ஏதோ ஒன்றைப் பற்றியே நாம் பேசுவதில்லை. அதுவும் ஊரில் திண்ணையிலே இருந்து கொண்டு வம்பு பேசுபவர்களுக்கு ஐந்து நிமிஷத்துக்குள் எத்தனையோ செய்திகள் வந்துவிடும். ஒன்றோடு ஒன்று தொடர்புடைய செய்திதான் பேச்சில் வரும் என்ற வரையறை இல்லை. பலவகையான செய்திகள் கதம்பமாக வந்துகொண்டே இருக்கும். கண்ணினால் பார்க்கிற பார்வையும் அத்தகையது தான். குறித்த ஒன்றையே பார்ப்பது என்பது பெரும் பாலோருக்கு இல்லை. கண்ணை ஓடவிட்டுப் பல பல பொருள்களைப் பார்த்து அதனாலே மகிழ்ச்சியோ துக்கமோ வேறு சிந்தனையோ எழும்படியாகச் செய்வதுதான் பெரும்பாலான மனிதர்களுக்கு இயல்பு. கண் பார்த்துக் கொண்டே இருக்கும்; மனம் எதையாவது சிந்திக்கும்; வாய் ஏதாவது பேசும்; கை ஏதாவது செய்யும். சிந்தனைக்கும் பார்வைக்கும் பேசுகிற பேச்சுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.

இப்படி அகம் வேறு, புறம்வேறு இருப்புதனால் தான் மனிதன் எப்பொழுதும் பிறவிக்குள்ளே ஆழ்கிறான். மனமும் வாக்கும் செயலும் ஒன்றாகவே இருந்தால் ஆத்ம சக்தி விருத்தியாகும். இறைவனுடைய திருவருள் அங்கே வந்து பதியும். இந்த நிலை நமக்கு இருப்பதில்லை. நம்முடைய எண்ணங்களெல்லாம் சிதறுகின்றன; வார்த்தைகளெல்லாம் சிதறுகின்றன; பார்வைகளெல்லாம் சிதறுகின்றன. ஐந்து இந்திரியங்களாலே நுகருகின்ற அநுபவங்களிலும் ஒருமைப்பாடு இல்லை. நம்முடைய வாழ்நாளே சிதறிப் போகின்றது. நூறு வருஷம் ஒருவன் வாழ்ந்தாலும் உருப்படியாகச் சில காரியங்களைச் செய்தோம் என்று சொல்ல முடியாதபடியே பல மக்கள் வாழ்கிறார்கள். ஒன்றை நன்றாகச் சிந்தித்து, அதைப் பற்றிப் பின்பும் பல காலம் சிந்தித்து, மீட்டும் மீட்டும் சிந்தித்து, அதைப்பற்றியே பலமுறை பேசி, அதனுடைய தொடர்பான காரியங்களையே உடம்பினாலே செய்து நிறை வேற்றுவதற்குத் தனி ஆற்றல் வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது மனந்தான். மனம் என்னும் மூலக் கருவியை இயக்கிவிட்டால் அதனிடத்திலிருந்து தோன்றுகின்ற எல்லா எண்ணங்களும் செயலாகவும் பார்வை யாகவும் மோந்து பார்க்கும் செயலாகவும் வேறு விதமாகவும் விளைகின்றன; ஒவ்வோர் இந்திரியத்தின் வாயிலாகவும் உருவம் பெறுகின்றன.

மனத்தில் ஒருமைப்பாடு இருந்தால் மற்றவற்றிலும் ஒருமைப்பாடு இருக்கும். மனமோ ஒரு கணத்தில் பல்லாயிரங் கோடி சிந்தனைகளைச் செய்து கொண்டே இருக்கிறது. மனத்தைக் காற்றினுடைய தத்துவத்திலிருந்து பிறந்ததாகச் சொல்லுகிறது தத்துவ நூல். காற்று எப்பொழுதும் சலித்துக் கொண்டே இருக்கும்; ஓரிடத்திலே நில்லாது. மனம் என்பதே சலனத்தின் உருவம் என்று சொல்லிவிடலாம். மனம் என்று ஒரு தனிப்பொருள் இந்திரியங்களினாலே தெரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. இயங்கும்பொழுதுதான் அது மனம் என்ற பெயரைப் பெறுகிறது.

மனத்தை ஒருமைப்படுத்தி, அதனிடம் தோன்றுகின்ற எண்ணங்களை ஒருமைப்படுத்தி, அவற்றின் விளைவாகத் தோன்றுகின்ற பார்வை முதலியவற்றையும் வாக்கையும் ஒருமைப்படுத்திவிட்டால் அப்பொழுது நாம் செய்கின்ற செயல்களுக்கெல்லாம் பன்மடங்கு பயன் உண்டாகும். இறைவனுடைய திருவருள் இருந்தால் அன்றி இந்நிலை நமக்கு வருவது இல்லை.

இறைவனுடைய திருவருள் எப்படிக் கிடைக்கும்? இறைவனுடைய திருவருளுக்காக ஏங்கி நின்று அன்பு செய்து பல வகையிலே சாதனை செய்தால் அப்பொழுது அவனுடைய திருவருள் கிடைக்கும். கிடைத்த பிறகு நம்முடைய உள்ளமும் உரையும் ஏனைய இந்திரியங்களும் அடைகின்ற மாற்றம் மிக மிக அற்புதமானது. முன்னாலே எப்படி இருந்தோமோ அதற்கு நேர்மாறாக இருப்போம். அப்பொழுதெல்லாம் இருந்தவாறு என்னே என்று வியப்பு உண்டாகும்.

இறைவனுடைய திருவருளினாலே சிதறுண்ட மனத்தை ஒருமை நெறியில் இயக்கி, சிதறுண்ட வாக்கை ஒருமையாக இயக்கி, சிதறுண்ட பார்வை முதலியவற்றை ஒரே திக்கில் செலுத்தி வாழ்ந்தவர்கள் நம்முடைய நாட்டில் பலர் இருந்தார்கள். அவர்களுக்குள் மணிவாசகப் பெருமான் ஒருவர். அவர் இறைவனுடைய திருவளைப் பெறுவதற்காக ஏங்கி நின்றார்; பெற்றார். அந்தப் பெருமானுடைய திருவருளினாலே தாம் பெற்ற இன்பத்தைப் பற்றிப் பெருமிதத்தோடு பேசுகிறார். பல சமயங்களில் தாம் அந்த நிலையினின்றும் சற்றுத் தாழ்ந்தது போல அவருக்குத் தோற்றம் உண்டானால், “ஐயோ, நான் இன்னும் உயர்ந்த நிலைக்கு வரவில்லையே!”என்று ஏங்குவார். அவருடைய அன்பின் முறுகலான நிலையே அந்த ஏக்கம் உண்டாவதற்குக் காரணம். வேறு சில இடங்களில் இறைவனுடைய திருவருளினாலே தாம் பெற்ற இன்பத்தால் உண்டான பெருமிதத்தோடு களிக்கூத்தாடுவார். எம் பெருமானுடைய திருவருளை நினைந்து நன்றியறிவோடு பாடுவார்.

மாணிக்கவாசகர் மந்திரி பதவியிலே இருந்தவர். ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்வதே மிகவும் அருமையாக இருக்கின்ற மனித வாழ்வில் ஓர் அரசனுக்கு வேண்டிய ஆலோசனை சொல்லுகின்ற மந்திரியாக இருந்தால் அவர் எத்தனையோ செய்திகளை நினைக்க வேண்டும்; யோசனை சொல்ல வேண்டும்; சூழ்ச்சியிலே வல்லவராக இருக்க வேண்டும். மந்திரிகளுக்கே சூழ்வார் என்ற ஒரு பெயர் உண்டு. எப்பொழுதும் மேல்வரும் காரியத்தைச் சிந்தித்து, முன்னாலே நிகழ்ந்தவற்றின் அநுபவங்களையெல்லாம் சிந்தித்து, இனி எப்படி நடக்க வேண்டும் என்று வரையறை செய்து, அரசனுக்கு அறிவுரை கூற வேண்டியவர்கள் அமைச்சர்கள். நல்ல அமைச்சராக இருந்த மணிவாசகப் பெருமான் தமக்காகச் சிந்தனை செய்ததோடு நில்லாமல் அரசனுக்காவும் சிந்தனை செய்தார். பாண்டிய நாட்டுக்காக பாண்டியன் அரசாட்சிக்காகச் சிந்தனை செய்தார். இறைவனுடைய திருவருளுக்கு ஆளான பிறகு, முன்பு சிதறுண்ட சிந்தனைகளெல்லாம் நின்றன. ஆனால் சிந்தனை முற்றும் அழியவில்லை. இந்த உடம்பு இருக்கும் மட்டும் சிந்தனை ஓயாது; பேச்சு ஓயாது; பார்வை நில்லாது. சிந்தனையைச் சிந்தனையின் போக்கிலேயே விட்டு விட்டால் பிறந்ததனால் ஆகும் பயன் நமக்குக் கிடைக்காது. இறைவனுடைய திருவருள் அந்தச் சிந்தனையை மாற்றியது; வாக்கை மாற்றியது; பார்வையை மாற்றியது. இதைச் சொல்ல வருகிறார் மாணிக்கவாசகர்.

அவர் சிந்தனை இயங்கிக்கொண்டே தான் இருந்தது. இயங்குகின்ற சிந்தனையைத் திடீரென்று நிறுத்திவிட்டால் இந்த உடம்பே மாய்ந்துவிடும். ஆகவே அந்தச் சிந்தனையை நிறுத்தவில்லை. குழந்தை ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருந்தால் அதைச் செய்யாதே என்று சொன்னால் அது மேலும் செய்துகொண்டுதான் இருக்கும். அப்படி இன்றி அந்தக் குழந்தைக்கு வேறு வேலை கொடுத்து விட்டால் அது முன்னாலே செய்த வேலையைச் செய்யாது. இறைவன் அப்படிச் செய்தானாம்.

மணிவாசகர் தாமாக இறைவனை நினைக்கவில்லையாம். அவனுடைய திருவருள்தான் அவனை நினைக்கப் பண்ணியதாம். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று வேறு ஓரிடத்தில் அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய சிந்தனையை ஆண்டவன் தனக்கென்று ஆக்கிக் கொண்டானாம். இறைவனுடைய திருவருளிலே ஈடு பட்டவர்களுக்கு அவர்கள் நினைப்பது, பேசுவது ஆகிய எல்லாமே அவன் மயமாக இருக்கும். எப்படியாவது அவனோடு தொடர்புடைய பொருளையே சிந்திப்பதும் அதைப்பற்றியே பேசுவதுமாக இருப்பார்கள். “என்னுடைய சிந்தனைகளை யெல்லாம் உனக்காகவே ஆக்கிக்கொண்டாய்”என்று சொல்லுகிறார் மாணிக்கவாசகர்.

சிந்தனை நின் தனக்கு ஆக்கி.

‘பல வகையான பார்வையில் ஈடுபட்ட என்னுடைய இரண்டு கண்களையும் உன்னுடைய பாத இணைகளில் பொருத்திவிட்டாய். பல பல சபலங்களைக் கொண்ட நாய் போன்ற என்னுடைய கண்களை உன்னுடைய திருப்பாத மலருக்கு ஆக்கினாய். அதுவரைக்கும் அந்தப் பாதத்தைப் பற்றி நான் அறியேன். இப்பொழுது அந்தப் பாதங்கள் பார்ப்பதற்கு அழகாக, நன்மையுடையனவாக, தண்மையுடையனவாக, தாமரை மலர்களைப்போல இருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்.’

……….. நாயினேன்றன்
கண் இணை நின் திருப்பாதப் பேர்துக்கு ஆக்கி.

மனிதர்களில் பதவியினாலும், ஆற்றலாலும், பொருள் கல்வி முதலியவற்றிலும் மேல் கீழ் என்ற வேறுபாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆற்றலில் மேலானவர்கள், கீழானவர்கள் என்று சொல்லுகிறோம். எத்தனைதான் சமரசம் பேசினாலும் செல்வத்தினாலும் பதவியினாலும் உயர்ந்தவர்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்; அவர்கள் தம்மை உயர்ந்தவர்கள் என்று நினைப்பது பெரிதல்ல; அவை தமக்கு இல்லாதவர்கள் தம்மைத் தாழ்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் யார் உயர்ந்தவர்களோ அவர் களுக்கு வந்தனை புரிந்து வாழ்வதே மனித சமுதாயத்துக்கு இயல்பாகப் போய்விட்டது. எவ்வளவுதான் வாதமிட்டாலும், அபேதவாதம் பேசினாலும் அவர்களில் பதவியினாலே உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏனையோர்கள் வந்தனை செய்கிறார்கள்.

அப்படி யார் யாருக்கோ வந்தனை செய்துவந்த மணி வாசகருடைய நிலை இப்பொழுது மாறிவிட்டது. எல்லா வந்தனைகளையும் இறைவனுக்கே ஆக்கினார். இதை அவர் எப்படிச் சொல்கிறார் என்பது கவனிப்பதற்குரியது.

“உன்னுடைய திருவடித் தாமரை மலர்களுக்கே என்னுடைய வணக்கங்கள் ஆகும்படி நீ செய்தருளினாய்”என்கிறார்.

வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி.

முதலிலே சிந்தனையைத் திருப்பினான் இறைவன். சிந்தனையிலிருந்து கண் பார்வை மாறியது. கருத்தை அகக் கண் என்று சொல்வது வழக்கம். அகக் கண் மாறியவுடன் புறக்கண் மாறியது. பார்வை மாறினவுடன் பணிய வேண்டும் என்ற நினைவு வந்தது. அதனாலே உடம்பு வளைந்து கொடுத்தது. தலை வணங்கியது. உள்ளம் உணர்ச்சி வசப்பட்டபொழுது முதலிலே பேச்சு வராது. செயல்தான் வரும். செயலுக்கு முன்னாலே மெய்ப்பாடு வரும். அந்தற்குப் பின்பு உணர்ச்சி அமைதி பெற்று விட்டால் அதற்கு ஓர் உருவம் உண்டாகும். வாக்கிலிருந்து உணர்ச்சி மயமான வார்த்தைகள் வெளிவரும்.

எம்பெருமானைத் தம்முடைய உள்ளத்திலே ஏற்றுக் கொண்ட மணிவாசகப்பெருமான் கண்ணாலே அவனுடைய திருவடி மலர்களைக் கண்டார். அந்த மலர்களையே கும்பிட்டார். வணங்கினார். கீழ் விழுந்து நமஸ்காரஞ் செய்தார். உள்ளத்தில் உள்ள பக்தி உணர்ச்சி பொங்கியது. அதனுடைய விளைவாக வாக்கு எழுந்தது. அந்த வாக்கை ஆண்டவனுக்கே அர்ப்பணமாக்கினார். இறைவன் அவருடைய வாக்கை யெல்லாம் தனக்காகவே ஆக்கிக் கொண்டான்.

அதற்கு முன்னாலே வந்த வாக்கெல்லாம் உலக வாழ்க்கை யோடு ஒட்டியனவாக இருந்தன. பல காலம் பிறந்து பிறந்து வாழ்ந்ததனால் படிந்த வாசனை அது.

இறைவனுடைய திருவருளுக்குள் ஒன்றிய பிறகு, சிந்தனை அவனுக்கென்று ஆன பிறகு, கண்ணிணை அவன் திருப்பாதப் போதுக்கு ஆக்கிய பிறகு, வந்தனையும் அத்திருவடி மலருக்கென்று ஆனபிறகு, வாக்கு இறைவனுடைய புகழைப் பேசும் வாக்காகிவிட்டது. அப்பொழுது வருகிற வார்த்தைகளெல்லாம் மணி வார்த்தை என்று சொல்கிறார். அவர் மாணிக்கம் போன்ற வார்த்தைகளைப் பேசினவர். அதனால்தான் மாணிக்கவாசகர் என்ற திருநாமம் உண்டாயிற்று. இறைவனே மணிவாசகன் என்று திருநாமம் அளித்ததாகச் சொல்லுவார்கள். எப்படியோ இறைவனுடைய திருவுள்ளக் கிடக்கையாக இருந்தாலும் சரி, மணிவாசகப் பெருமானுடைய உள்ளக்கிடக்கையாக இருந்தாலும் சரி, திருவாசகத்தைப் படிக்கிறவர்களுடைய கிடக்கையாக இருந்தாலும் சரி, அந்த வார்த்தைகளெல்லாம் இறைவனுடைய வார்த்தைகள்; ஆகையினால் வெறுங்கல்லைப் போல் இல்லாமல் மாணிக்கக் கல்லைப் போலாயின.

வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி.

‘தாம் பாடுகிற பாட்டை மணி வார்த்தை என்று தாமே சொல்லிக்கொள்ளலாமா? அது அகங்காரத்தின் விளைவு அல்லவா?’என்ற ஐயம் இங்கே எழலாம். “ஆண்டவனே. நீ எனக்குத் திருவருள் தந்து என்னுடைய வாக்கையெல்லாம் உனக்காக ஆக்கிக்கொண்டாய். உன்னைப் பற்றிய வார்த்தைகளாதலின், மணிவார்த்தைகளாயின”என்ற பொருளோடு அவர் சொல்லுகிறார். அவர் பாடுவதனாலே அது மணிவார்த்தை ஆகவில்லை. அப்படி இருந்தால் அது முன்பும் அப்படி இருக்கவேண்டுமே. இறைவனைப்பற்றிப் பாடுவதனாலே அது மணிவாக்கு ஆயிற்று. வேறோர் இடத்திலும்,

மாசில் மணியின் வார்த்தை

என்று பாடுகிறார்.

இறைவன் மாசில்லாத மணி போன்றவன். அந்த மணியைப் பற்றிய வார்த்தையும் மணியைப்போல இருக்கிறது. மாணிக்கம் பிறிதொன்றனாலே ஒளிவிடாமல் இயற்கையாகவே ஒளி தருவது. அழுக்குச் சாராமல், பக்கத்தில் உள்ள பொருள்களையெல்லாம் காட்டுவதோடு பிறருடைய உள்ளத்தை ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்ததாக மணி இருக்கும். இந்த மணி வார்த்தையும் ஒளிவிடுவது. உள்ளத்துள் உண்டான ஒளி வாக்கிலே வருகிறது.

“உள்ளத்துள் உண்மைஒளி உண்டாயின் வாக்கினிலே
ஒளிஉண் டாகும்”

என்று புதுமைக் கவி பாரதியார் பாடியிருக்கிறார். சிந்தனை இறைவனுடைய நினைவாக ஆகிவிட்டால் உள்ளத்தில் உள்ள இருள் நீங்கிவிடுகிறது. அக இருள் நீங்குவது மாத்திரம் அன்று; அங்கே ஆண்டவனுடைய ஞான ஒளி விளங்குகிறது. அந்த ஒளி உள்ளத்துள்ளே விளங்கும் பொழுது புறத்திலே தோன்றுகின்ற அத்தனையும் அந்த ஒளியின் விளளைவாகத்தானே இருக்கும்?

ஒரு வீட்டுக்குள்ளே விளக்கை வைத்துவிட்டு வெளியில் நின்று பார்க்கிறவர்களுக்கு ஜன்னல் வழியாக வீசுகின்ற ஒளி வேறாகவா இருக்கும்? உள்ளே உள்ள ஒளியின் நிறம் சிவப்பாக இருந்தால் சிவப்பாகவும், பச்சையாக இருந்தால் பச்சையாகவும் வெளியிலே தோற்றும். அதுகாறும் மாயாமலத்தில் அழுந்தி வாழ்கின்ற வாழ்க்கையிலே என்ன என்ன சிந்தனைகள் தோன்றுமோ அவற்றையே உள்ளம் கொண்டிருந்தது. அதனாலே எழுந்த எழுச்சிகள் எல்லாம் அந்த மயல் அளற்றிலிருந்து வருகின்ற காரியங்களாகவே அமைந்தன. அப்பொழுது எழுந்த வாக்கிலே ஒளி இல்லை; இருள் இருந்தது. இருள் தருமா ஞால வாழ்வில் இருள் தரும் சிந்தனைகளால் சிதறிய மனமுடையவனாக வாழ்ந்த மனிதனுக்கு வாக்கிலே இருள் தான் உண்டாகும். செயல்களிலே மேலும் மேலும் இருளே பொங்கிவரும். ஆனால் சிந்தனை ஆண்டவனுடைய திருவருள் நினைவினாலே உயர்ந்துவிடுமானால் அங்கே ஒளி தோன்று கின்றது. மூலக்கருவாகிய சிந்தனையிலே ஒளி தோன்றி விட்டால் அதன் விளைவாக விளைகின்ற செயல்களிலே ஒளிதான் நிலவும்; அந்த ஒளியின் கதிரே வார்த்தை.

சிந்தனையைச் சொல்லி, கண்ணைச் சொல்லி, உடம்பைச் சொல்லி, வாழ்க்கையையும் சொன்னார். அவை மாத்திரம் போதுமா? இவைகளெல்லாம் நாம் செய்கின்ற செயல்கள். நாம் செயலைச் செய்கிறோம். இன்ப துன்பங்களை நுகர்கிறோம். ஒரு மனிதன் வேலை செய்யும் கர்த்தாவாக இருக்கிறான்; போகத்தை அநுபவிக்கின்ற போக்தாவாகவும் இருக்கிறான். இந்த இரண்டு வகையான நிலையும் மனிதனிடம் இருக்கின்றன. இறைவனுடைய திருவருளுக்குள்ளே புதைந்து விட்டால் நம்முடைய செயல்களும் நம்முடைய அனுபவங்களும் மாறிவிடுகின்றன. செயல்களெல்லாம் இறைவனுடைய சார்பிலே செல்லுகின்றன. அப்படியே நாம் அனுபவிக்கின்ற போகங்களெல்லாம் இறைவனோடு தொடர்புடையன ஆகின்றன. சிந்தனையும் பார்வையும் வந்தனையும் வாக்கும் ஆகிய செயல்களெல்லாம் இறைவனுடைய திருவருளினாலே மாற்றம் அடைந்து எல்லாம் அவனைச் சார்ந்தே விளங்கின, மணிவாசகப் பெருமானுக்கு. அவருக்குக் கிடைத்த அனுபவம் எப்படி இருந்தது?

ஐம்புலன்கள் ஆர வந்தனை.

அதுகாறும் புலன்களெல்லாம் வெவ்வேறு வகையான அனுபவங்களைக் கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது ஆண்டவனுடைய திருவருள் பெற்ற பிறகு அவருடைய ஐம்புலன்களும் இறைவன் மயமாக ஆகிவிட்டன. முன்பு அனுபவித்த அநுபவங்களெல்லாம் வெவ்வேறாக இருந்தது மாத்திரமல்ல; புலனுகர்ச்சியால் நிறைவு ஏற்படவில்லை; அந்த அநுபவங்கள் பூரணமாக இல்லை. இப்பொழுது ஐம்புலன்களும் ஆர்ந்திருந்தன; அநுபவ நிறைவினாலே இன்புற்றன. அந்த இன்ப அநுபவம் உலகத்தோடு பொருந்திய அநுபவம் அன்று.

ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே
புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே!

ஐம்புலன்களும் நிறைவு பெற வேண்டுமானால் எல்லையில்லாத ஓர் அநுபவம் கிடைத்தால்தான் நிறைவு பெறும்.

உலகிலுள்ள பொருள்கள் யாவும் காலத்துக்கும் இடத்துக்கும் அகப்பட்டன. கால எல்லை, இட எல்லை ஆகிய இரண்டும் உயிர்களுக்கு உண்டு; உயிர் வாழ்க்கைக்கு உண்டு. கால தேச பரிச்சின்னம் என்று அவற்றைச் சொல்வார்கள். இந்த இரண்டுக்குள்ளே அகப்பட்ட அநுபவம் எல்லைக்குள்ளே தான் நின்றுவிடும். மனிதனுக்கு நூறு வயசு என்று எல்லை இருந்தாலும், எல்லா மக்களும் நூறு வயசு வாழ்ந்திருந்து அநுபவத்தைப் பெறுவதில்லை. அப்படிப் பெற்றாலுங்கூட நூறு என்ற எல்லையிலே நின்று விடுகிறது. எல்லையில்லாத அனுபவம் பெறவேண்டுமானால் எல்லையில்லாத பொருளோடு சார்ந்திருந்தாலன்றி அந்த அனுபவம் வராது.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வாங்கி ஒருவன் உண்ணுகிறான். அந்தக் கிண்ண நீரை உண்ட பிறகு அவனுக்குத் தண்ணீர் இல்லையாகின்றது.இப்படியே தண்ணீரை நிரப்பிய எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதற்கு எல்லை உண்டு. பெரு வயிறன் ஒருவன் எத்தனை தண்ணீரைக் குடித்தாலும் நிறைவு பெறாத தாகம் கொண்டவனாக இருக்கிறான். அப்பொழுது உலகிலுள்ள எல்லைக்கு அகப்பட்ட நீர்நிலை எதனாலும் அவனுடைய வேட்கையைப் போக்க முடியாது. அதைத் தீர்க்க வேண்டுமானால் கடல் ஒன்றினால் தான் முடியும். காரணம்; அவனுடைய தாகம் எல்லையற்றது; கடலும் எல்லையற்றது.

ஐம்பொறிகளின் நுகர்ச்சிகளால் பூரணத் திருப்தி அடையாமல் நாம் வாழ்கிறோம். ஐந்து புலன்களினாலே உண்டான அநுபவங்களுக்கு நிறைவு ஏற்பட்டுவிட்டால் மனிதனுக்கு ஆசை அற்றுவிடும். அந்த அனுபவம் குறைவாக இருப்பதனால் ஆசை மேலும் வளர்கிறது. அது வளரவளரப் பிறவி மேலும் தொடர்கிறது. ஐம்புலன்களாலும் முற்ற முற்ற அனுபவிக்கின்ற ஆற்றல் யாருக்காவது இருக்குமானால் அப்பொழுது அவனுக்கு ஞானம் வந்து விடும். ஆனால் யாருக்கும் புல அநுபவங்களிலே திருப்தி உண்டாவதே இல்லை. முழு நிறைவு உண்டாக வேண்டுமானால் அது உலகத்தோடு பொருந்திய அநுபவமாக இராமல் இறைவனோடு பொருந்திய அநுபவமாக இருக்க வேண்டும். ஆண்டவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவன், அவன் இந்த உலகத்துக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லுகிறோம். ஆனால் ஆண்டவனுடைய திருவருள் பெற்றவர்களுக்கு அவன் ஐம்புலன்களும் நிரம்பும்படியான அநுபவத்தைத் தருகிறான். ஐம்புலன்களின் நிறைவு அப்புலன்களை அமைதி பெறச் செய்துவிடும். வயிறு நிரம்ப உண்ட குழந்தை தூங்கிவிடுவதுபோல அவை அப்போது அடங்கிவிடும்.

ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே
புகுந்த விச்சை
மாலமுதப் பெருங் கடலே!

ஒரு பெரிய கடல் உள்ளத்துக்குள்ளே புகுந்து விட்டது. உயிர்க்குள்ளே புகுந்துவிட்டது. உயிரையெல்லாம் நிரப்பி விட்டது. உயிரையே நிரப்பும்பொழுது உயிருக்கு அடங்கிய புலன்களை நிரப்பாதா? ஐம்புலன்களும் நிரம்பிவிட்டன. அப்படி இறைவன் வந்தான். மணிவாசகரை ஆட்கொண்டான்.

உலகில் இன்ப அநுபவப் பொருள் தருவார் என்று யார் யாரை நாம் நினைக்கிறோமோ அவர்களாலே நமக்கு முழு நிறைவாக அநுபவத்தைக் கொடுக்கும் ஆற்றல் இருப்பதில்லை. இறைவன் அருள் ஒன்றுதான் நிறைந்த அனுபவத்தைக் கொடுக்கும். இது பெரிய வித்தை.

கடல் என்றால் நமக்கு உப்புக் கடல்தான் நினைவுக்கு வருகிறது. பாற்கடல், தேன் கடல், தயிர்க் கடல் என்று வெவ்வேறு கடல்கள் உண்டென்று புராணங்கள் சொல்கின்றன. பாற்கடலில் அமுதம் பிறந்தது. ஆனால் அது முழுமையும் அமுதமாக இருக்கவில்லை. அக்கடலில் பால்தான் இருந்தது. பாலைக் கடைந்து மிக வருந்தித் தேவர்களெல்லாம் ஏதோ ஓர் அளவு அமுதத்தைப் பெற்றார்கள். அந்த அமுதத்தை எதற் கெடுத்தாலும் உவமையாக எடுத்துச் சொல்கிறோம். இறைவனோ அமுதம் நிரம்பின பெருங்கடலாக இருக்கிறான். அது பெரிய கடலானாலும் அடியவர்களுடைய சிறிய உயிருக்குள் புகுகின்றது.

உள்ளே புகுந்த விச்சை
மாலமுதப்பெருங் கடலே!

தம் அநுபவ நிலையை நினைத்துப் பேசுகிறார், மணிவாசகர். அந்த அநுபவம் எல்லையற்றதாக இருப்பதால் கடல் என்றார். மிகமிக இன்பமாக இருக்கிறது; ஆதலின் அமுதக்கடல் என்றார். அதன் பெருமை எண்ண எண்ணத் தொலையாததாக இருத்தலின் மாலமுதப் பெருங்கடல் என்றார். அந்தக் கடலைத் தம் அளவில் நின்று அநுபவிக்கும் பொருளாக்கியது அருமையிலும் அரிய செயலாதலின் விச்சை என்று சொன்னார்.

வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே!

கொஞ்சம் அந்த அநுபவ நிலையை மறந்து பார்க்கிறார். ‘ஆகா! ஆண்டவனுடைய பெருமை என்னே! அவன் மலைபோல் இருக்கிறான் அல்லவா? இந்த நாயேனிடத்திலே அருள்பூண்டு வந்து ஆண்டு கொண்டானே’என்று நினைக்கிற பொழுது இறைவனுடைய பெருமை தெரிகிறது. பெருமை நிரம்பிய பொருளுக்கு மலையைச் சொல்வது வழக்கம். மலைக்கு முன்னாலே மனிதன் நின்றால் தன்னுடைய சிறுமையை நன்றாகத் தெரிந்துகொள்ளுகிறான். உலகிலுள்ள மரம் மட்டை எல்லாப் பொருள்களும் மலைக்கு முன்னாலே மிகமிகச் சிறியவை ஆகின்றன. கண்டாருக்கு மயக்கத்தை, பிரமிப்பை உண்டாக்கக் கூடிய பொருள் மலை. அளக்கலாகா அளவும் துளக்கலாகா நிலையும் உடையது மலை. இறைவன் நமக்கு இன்ப அநுபவம் அருளினான், எளியனாக வந்தான் என்ற நினைவை ஒரு சிறிது மறந்து நினைத்துப் பார்க்கும் போது, ‘ஆகா! பெரிய மலை போன்றவன் அல்லவா? எவ்வளவு பெரியவன்!’என்று தோன்றுகிறது. அமுதப் பெருங்கடலே என்று சொன்ன வாக்கினால் உடனே மலையே என்று சொல்கிறார்.

மால்அமுதப் பெருங்கடலே! மலையே!

இவ்வளவு பெரிய மலை போன்ற நீ நாயினேனுக்கு அநுபவத்தைத் தந்து எனக்குள்ளே புகுந்து உன்னையே தந்துவிட்டாயே. இந்த இன்ப அநுபவம் வேறு, நீ வேறு என்பது அல்ல. நீ கொடுத்த கொடைக்கு எல்லையே இல்லை. உன்னைக்காட்டிலும் சிறந்த பொருள் இல்லை. உன்னையே கொடுத்துவிட்டாய்’என்கிறார்.

நின்னைத் தந்தனை

பின்பு, இறைவனுடைய அழகான திருமேனியை நினைக்கிறார். அவன் பாதப்போதுக்கு ஆக்கின கண்ணை உடையவர் அல்லவா? அவன் பாதம் மாத்திரமா போது? அவனுடைய இரண்டு பாதத் தாமரைகளைப் பற்றிக் கொண்ட பிறகு கொஞ்சம் ஏறிட்டு நோக்கினால், அவனுடைய திருமேனி முழுதும் எத்தனை தாமரை! அவனுடைய கை தாமரை; அவனுடைய நாபிக்கமலம் தாமரை; அவனுடைய முழங்கால் தாமரை; அவனுடைய கைகள் தாமரை; அவனுடைய முகம் தாமரை; கண்கள் தாமரை; வாய் தாமரை இதழ். இப்படி அவனுடைய திருமேனி முழுவதும் பல பல தாமரைகள் பூத்த தாமரைக் காடு போல இருந்ததாம். எம்பெருமானுடைய திருமேனி செம்மேனி.

“சிவனெனும்நாமம் தனக்கே உடையசெம் மேனியம்மான்”

என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார். சில சில இடங்களிலே தாமரை இருந்து மற்ற இடங்களிலே கருமை நிறம் இருந்தால் சில தாமரைகள்தாம் இருப்பன போல் தோன்றும். சிவபெருமானுடைய திருமேனியில் பல இடங்களில் தாமரை போன்ற உறுப்புகள் தோன்ற, மற்ற இடங்கள் செக்கச் செவேலென்று இருப்பதனால் எங்கும் மலர் நிரம்பின தாமரைக் காடு பூத்தது போல இருக்கிறதாம். ஆகையினால்,

செந்தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே!

என்று சொல்கிறார் மணிவாசகர். தாமரையிலே வண்ணம் இருக்கும். ஆனால் ஒளி மிகுதியாக இராது. இறைவனுடைய திருமேனியில் அழகு, தண்மை, வண்ணம் எல்லாம் தாமரையைப்போல இருப்பதோடு அது சுடரையும் வீசுகிறது.

அவன் அவருடைய உள்ளத்திலே புகுந்தமையினால் அவருடைய வாக்கிலே ஒளி உண்டாயிற்று; செயலிலே ஒளி உண்டாயிற்று. அவன் பெருஞ்சுடராக விளங்குகிறான். அந்தச் சுடரின் தன்மை உலகத்தில் வேறு எந்தச் சுடருக்கும் இல்லை. அது தனியான சுடர். அதில் உண்டாகின்ற ஒளி தனியான ஒளி. அந்த ஒளியினாலே உண்டாகின்ற இன்ப அநுபவம் சிறப்புடையது.

தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே!

ஒரு பொருளினுடைய பெருமையை மாத்திரம் சொல்லிக் கொண்டிருந்தால் மனத்தில் ஓரளவுதான் பதியும். ஆனால் அதன் அருகிலே சிறுமையையும் வைத்துச் சொன்னால் அழகாக இருக்கும்; நன்றாகப் பதியும். பெரிய பொருளுக்குப் பக்கத்தில் சிறிய பொருளை வைத்துப் பார்த்தால்தான் பெரிய பொருளின் பெருமை நன்றாக விட்டு விளங்கும். பெரிய திரு உருவத்தைப் படம் பிடிப்பவர்களெல்லாம் அதை அப்படியே பிடிக்க மாட்டார்கள். சிரவண வெண்குளம் என்ற இடத்தில் கோமடேசுவரருடைய பெரிய சிலை இருக்கிறது. அதைப் படம் பிடிப்பவர்கள் அதனுடைய பரிமாணத்தைக் காட்டுவதற்காக அருகிலே ஓர் ஆளை நிறுத்தி எடுப்பார்கள். ஆளையும் அந்தத் திரு உருவத்தையும் ஒருங்கே பார்க்கும் பொழுதுதான் அந்த உருவத்தின் பரிமாணம் தெரியும். அதை மாத்திரம் காட்டினால் ஏதோ படத்தில் பெரிதாகத் தோன்றுகிறது என்று நினைப்பார்கள். அதனுடைய அளவு தெளிவாகத் தெரியாது. பக்கத்தில் ஒப்பு நோக்கிப் பார்த்தால்தான் அந்த பெருமை நன்றாகத் தெரிகிறது.

மாலமுதப் பெருங்கடல் தம்முடைய உள்ளத்திலே புகுந்தது என்று மணிவாசகர் பாடினார். செந்தாமரைக் காடு அனைய மேனித் தனிச் சுடர் என்று அதைச் சொன்னார். அதோடு நில்லாமல் தம்மையும் நினைத்துப் பார்க்கிறார். ‘நான் இத்தனை கோடி கோடியாக வியாபாரத்தில் குவித்திருக் கிறேனே. நான் வைத்த முதல் என்ன?’என்று ஒருவன் பார்ப்பது போல இருக்கிறது, அந்த நினைவு. ஒன்றும் இல்லாமல் ஏதோ பிச்சைக் காசு வாங்கி ஒரு வியாபாரம் ஒருவன் செய்தான். கோடி கோடியாகச் சம்பாதித்துவிட்டான்.

சம்பாதித்த பிறகு அவன் நினைத்துப் பார்க்கிறான். ‘நான் என்ன வைத்திருந்தேன்? ஒரு வெள்ளிக் காசுகூட இல்லையே!’என்று நினைந்து பெருமிதம் அடைகிறான். மாணிக்கவாசகர் அத்தகைய நிலையில் நின்று பேசுகிறார்.

‘நான் இம்மைக்கு வேண்டியதையும் செய்யவில்லை; மறுமைக்கு வேண்டியதையும் செய்யவில்லை. ஒன்று இங்காவது சுகமாக வாழவேண்டும்; அல்லது இங்கே உடம்பை வருத்தி விரதமிருந்து தவம் புரிந்து மறுமையிலாவது நன்கு வாழவேண்டும். இரண்டு வகையான முயற்சியும் என்னிடம் இல்லை. நான் இரண்டும் இல்லாதவன்; இரண்டும் கெட்டான். எனக்குத் துணையும் இல்லை. என்னுடைய கரசரணாதி அவயவங்களும் மனமும் நான் மேலும் துன்பப் பிறவியை அடைவதற்குரிய செயல்களையே செய்தன. நின் அருளானந்தத்தைப் பெறுவதற்கு அவை துணையாக நிற்கவில்லை. நான் துணையின்றித் தனியே நின்றேன். நற்செயலுமின்றித் துணையும் இன்றி இரண்டும் கெட்டானாகத் தனியாக வாழும் எனக்கு நீ உன்னைத் தந்தாயே!’என்று அவர் மனமுருகிப் பாடுகிறார்.

இரண்டு இலித் தனியனேற்கே.

‘இரண்டு கெட்டான்’என்று உலக வழக்கில் ஒரு தொடர் வழங்குகிறது. தக்கது இன்னது, தகாதது இன்னது என்று அறியும் அறிவில்லாதவன் என்று சொல்வது உண்டு. இம்மை வாழ்வும், மறுமை வாழ்வும் கெட்டவன் என்று சொல்வதே சிறப்பாகும்.

மாணிக்கவாசகரே தம்மை இரண்டும் கெட்டான் என்று சொல்லிக்கொள்ளும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்!

சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண் இணைநின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும்அம்மலர்க்கே ஆக்கி வாக்குஉன்
மணிவார்த்தைக்கு ஆக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டுஉள்ளே புகுந்த விச்சை
மால் அமுதப் பெருங்கடலே! மலையே! நின்னைத்
தந்தனை, செந் தாமரைக்காடு அனைய மேனித்
தனிச்சுடரே! இரண்டுமிலித் தனிய னேற்கே.


[என் எண்ணங்களையெல்லாம் உனக்காக ஆக்கிக்கொண்டு, நாய் போன்ற என் இரண்டு கண்களையும் உன் அழகிய பாதமாகிய மலர்களுக்கு அர்ப்பணம் செய்யச் செய்து, என் வணக்கங்களையும் அந்த அடி மலர்க்கே ஆகும்படி செய்து, என்வாக்கை உன் மாணிக்கம் போன்ற ஒளி நிரம்பிய வார்த்தைகளுக்கு ஆக்கி, என் ஐம்புலன்களும் நிரம்பும்படியாக வந்து அடியேனை அடிமையாகக் கொண்டு என் உள்ளே புகுந்த வித்தையில் வல்லமிகப் பெரிய அமுதக் கடலே! மலை போன்றவனே! செந்தாமரைக் காடுபோல உள்ள திருமேனியையுடைய ஒப்பற்ற சுடரே! இரண்டுங்கெட்டானும் துணை இல்லாதவனுமாகிய இந்தத் தனியவனுக்கு நீ உன்னையே தந்துவிட்டாய்.

சிந்தனை-எண்ணம். இணை-இரண்டு. போது-மலர். வந்தனை-வணக்கம். ஆர-நிரம்பும்படி. விச்சை-வித்தை. மால்-பெருமை. தனி-ஒப்பற்ற. இரண்டு மிலியாகிய தனியனேனே. இரண்டும் இல் இத்தனியனேன் என்றும் பிரித்துப் பொருள் செய்யலாம். தனியனேன் – துணையின்றித் தனியாக நிற்கும் அடியேன்.]